இளங்கோ குமணன்
முனைவர்ப்பட்ட ஆய்வாளர்

முதல் மணி நாடகம் தொடங்க இருப்பதை அறிவிக்கும் மணி, இரண்டாவது மணி உங்கள் இருக்கையில் அமர்ந்து நாடகம் காணத் தயாராக கூறும் மணி, அந்த மூன்றாவது மணி உங்கள் மொத்த கவனத்தையும் மேடையின் பக்கம் திருப்பும் மணி. அந்த மூன்றாவது மணிக்கு பின்னர் திரை விலகி நாடகம் ஆரம்பமாகும். இருபத்தோராம் நூற்றாண்டினில் சென்னை சபாக்களில் மேடை நாடகங்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறியும் முகமாக, முதல் இரண்டு மணிகளாக நாடகத்திற்கும் தமிழ் உலகிற்கும் உள்ள உறவையும், இருபதாம் நூற்றாண்டு நாடகங்கள் குறித்த ஒரு புரிதலையும், பெற்ற பிறகு அந்த மூன்றாவது மணியில் கவனம் செலுத்துவோம்.
தமிழர் தம் நாடக வரலாற்றின் தொடக்கம் என்பது இறைவனுடன் இணைந்த ஒன்று என்கின்றது நம் தமிழ் இலக்கிய வரலாறு. இறைவன் ஆடிய கூத்தின் ஒரு பகுதியாக நாடக வகைகள் தோன்றின என சங்கக் கால கூத்த நூல் குறிக்கின்றது.‘மோனத்து இருந்த முன்னோன் கூத்தில் உடுக்கையில் பிறந்தது ஓசையின்சுழலே ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே ஆட்டத்தில் பிறந்தது கூத்தினது அமைப்பே கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே நாட்டியம் பிறந்தது நாடக வகையே ‘ தமிழரிடையே நாடகக்கலை தொன்றுத்தொட்டு பரவி வந்துள்ளது மட்டுமின்றி, அக்காலத்திலேயே நாடகத்திற்கான இலக்கணங்களை வரையறுத்ததும் தமிழ் சமுதாயம்தான் என்பதும் நாம் பெருமைக்கொள்ளக்கூடிய உண்மை . இந்த பெருமித உணர்வுடன் இருபத்தோராம் நூற்றாண்டினில் சென்னை சபாக்களில் தமிழ் மேடை நாடகங்களின் நிலையை ஆய்வுக்கண் கொண்டு நோக்குவோம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் , இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், தங்கள் இடைவிடாத நாடகத்தொண்டின் மூலம் தமிழ் மேடை நாடகவடிவத்திற்கு புத்துயிர் ஊட்டிய பெருந்தகைகள் பலர். தமிழ் நாடகத்தந்தை என்றழைக்கப்பட்ட பம்மல் சம்மந்த முதலியார், தமிழ் நாடகத்தலைமையாசிரியர் என்றழைக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள்,காட்சி அமைப்பின் முன்னோடியாக திகழ்ந்த சி.கன்னையா,நாடகங்களை மக்கள் இயக்கமாக மாற்றிய நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, நடிப்புக்கலையை பயிற்றுவிப்பதில் நிபுணராய் திகழ்ந்த கந்தசாமி முதலியார், பெண்களைக் கொண்டே நாடகக்குழுவை நடத்திய பாலாமணி அம்மையார், உலக நாடுகள்
பலவற்றில் நாடகம் நடத்திய, எனக்குத் தொழில்
நாடகம் என வாழ்ந்த டி கே எஸ் சகோதரர்கள், தமிழ் நாடக மேடையில் ஒரு புரட்சியை உண்டாக்கிய எம். ஆர். ராதா, நகைச்சுவையில் அறுசுவை தந்த என். எஸ். கிருஷ்ணன், சமூக புரட்சி கருத்துகளை மேடையேற்றிய சி.என்.அண்ணாதுரை, மு. கருணாநிதி, இளம் வயது முதலே நாடகக் கம்பெனியில் சேர்ந்து கலைத்தொண்டாற்றிய பி.யூ.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், காளி என். ரத்தினம், ராதா கிருஷ்ணன், வி சி கணேசன்(நடிகர் திலகம்), எம்.ஜி.ராமச்சந்திரன்( மக்கள் திலகம்), கே ஆர் ராமசாமி, எஸ். எஸ். ராஜேந்திரன், இவர்கள் வரிசையில் இன்னும் பல கலைஞர்களை நாம் நன்றியுடன் நினைவுகொள்ள வேண்டியது நாடக ரசிகர்களின் கடமை.
இருபதாம் நூற்றாண்டு பிற்பகுதியின் தமிழ் மேடை நாடக வரலாறு, ‘இருபத்தோராம் நூற்றாண்டினில் சென்னை சபாக்களில் தமிழ் மேடை நாடகங்கள்’ என்ற ஆய்வின் ஒரு முன்னோட்டமாக அமைகின்றது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திரைப்படங்களின் பெரு வெற்றியைத் தொடர்ந்து கேளிக்கை என்னும் வரிசையில் நாடகங்களும் ஒரு தனி இடத்தைப் பிடித்திருந்தன. திரைப்படங்களுக்கு இணையாக தமிழ் நாடகங்களும் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தன. பெரும் பெயர் பெற்ற வெற்றிகரமான குழுக்களுடன் பல புதிய குழுக்கள், பல புதிய திறமையாளர்கள் என தமிழ் மேடை நாடகங்கள் பொலிவுடன், வளமுடன் வலம் வந்தன. திரையில் நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருந்த பலர் நடிகர் திலகம் உட்பட நாடக மேடைகளையும் சிறப்பித்துக் கொண்டிருந்தனர்.
இருபதாம் நூற்றாண்டில் 1950களிலிருந்து 1990 வரை நாற்பதாண்டுகள் தமிழ் மேடை நாடகங்களின் பொற்காலம் என்றே குறிக்கலாம். இந்த காலகட்டங் களில் திரைப்படங்களில் வெற்றி உலா வந்த போதும் நாடகத்தை மறவாமல் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்த நடிகர் திலகம் உட்பட்ட கலைஞர்கள், கலாநிலையம் கே.எஸ்.நாகராஜன், ஒய்.ஜி. பார்த்தசாரதி, ஆர்.எஸ்.மனோகர், கே. பாலசந்தர், சோ, காத்தாடி ராமமூர்த்தி, பூர்ணம் விசுவநாதன், குடந்தை மாலி,வி.கோபால க்ருஷ்ணன், லியோ பிரபு, விசு, எஸ்.வி. சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், கிரேசி மோகன், போன்றோரின் குழுக்கள் வெற்றிகரமாக மேடை நாடகங்கள் நடத்தி வந்தன. 1990 வரை இந்நிலை நீடித்தது.
90 க்கு பிறகு தமிழ் மேடைநாடகங்கள் ஒரு இக்கட்டான சூழலைச் சந்திக்க நேர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இருபத்தோராம் நூற்றாண்டினில் சென்னை சபாக்களில் தமிழ் மேடை நாடகங்கள் பெரும் சவால்களை எதிர் கொள்ள நேர்ந்தது. அந்தச் சூழலைக் கடந்து வந்த நாடகங்களின் இன்றைய நிலை என்ன என்பதை ஆய்வுக் கண் வழிக்காண்போம்.
இருபதாம் நூற்றாண்டின் நிறைவுப் பகுதியில் 1993க்குப் பிறகு உருவான தனியார் தொலைக் காட்சிகளின் தாக்கம் சபாக்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த தமிழ் மேடை நாடகங்களை நிலை தடுமாறச் செய்தது என்பதே உண்மை. மாலை வேளைகளில் பொழுதைக் கழிப்பதற்கு வெளியில் சென்று செலவு செய்து நாடகம் பார்ப்பதை விட வீட்டில் இருந்தே தொலைக்காட்சி நாடகங்களை, தொடர்களை பார்க்கும் மனநிலை மக்களிடையே வளரத்தொடங்கியது. இந்த மனநிலை ஒரு கலாச்சார வீழ்ச்சியின் தொடக்கமாக இருந்தது என்று கூடக் கொள்ளலாம். மேடை நாடகம் காண வரும் மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதன் விளைவு, நாடகங்களின் எண்ணிக்கை, நாடகக்குழுக்களின் எண்ணிக்கை, சபாக்களின் எண்ணிக்கை, குறையத் தொடங்கின.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 60- 70 களில் 184 நாடகக்குழுக்கள், 121 சபாக்கள், இருந்தன. (இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாடகங்கள்- ஆய்வேடு – முனைவர் மு. தங்கராசு.)
இருபத்தோராம் நூற்றாண்டினில் 33 நாடகக்குழுக்கள், 12 சபாக்கள் என்ற அளவில் அவை குறைந்துள்ளன.
ஏன் இந்த மலையளவு வேறுபாடு?
இருபத்தோராம் நூற்றாண்டினில் மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் பொழுது போக்கு களங்கள் எண்ணற்றவையாக பெருகிவிட்டன. கைப்பேசியே ஒரு குறு அரங்கமாக மாறி மக்களை மகிழ்விக்கும் சூழல் உருவாகி விட்டதால் எப்படி பொழுதைப் போக்குவது என்ற தேடல் அவர்களுக்கு ஏற்படாமல் போய்விட்டது. இத்தகைய சூழலில் எவ்விதமான பொருளாதார வரவும் தந்துவிடாத தமிழ் மேடை நாடகங்களைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருப்பவர்கள் எதற்காக இதைத் தொடர்ந்து நடத்துகின்றார்கள்? ‘நாடக ஆர்வம்’ என்பதே நேர்மையான பதில். ஆம், நாடகக்கலையின் மேல் கொண்ட தணியாத ஆர்வம் காரணமாகவே பலவித இடர்களுக்கு இடையிலும் விடாது நாடகம் நடத்தி வருகின்றார்கள் பல குழுவினர்.
வாழையடி வாழையாக வந்த குழு, குருநாதர் வழி வந்த குழு, தாய்க் குழுவிலிருந்து வந்த சேய்க் குழு, ஒரு குழுவிலிருந்து பிரிந்து பிறந்த குழு, புதிதாக தொடங்கப்பெற்ற குழு என நாடகக்குழுக்களின் பின்னணி அமைகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் மேடை நாடகங்களின் கலைஞர்கள் அநேகமாக நூறு விழுக்காடு பயில்முறை கலைஞர்கள் (அமெச்சூர் – தொழில் முறை அல்லாத கலைஞர்கள்) தான். வெவ்வேறு துறைகளில் பணியாற்றுகின்றவர்கள், பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள், இல்லத்தரசிகள் என பலரும் நாடகக் கலைஞர்களாக மேடையேறுகின்றார்கள். தொழில் நுட்பப் பிரிவில் சிலரே தொழில் முறைக் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.
ஆண்டு தோறும் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சபா நடத்தும் ‘கோடை நாடக விழா’ இன்றும் சபா மேடை நாடகங்கள் தொடர்ந்து நடப்பதற்கான அடிப்படை ஊக்கி என உறுதியாய்க் கூறலாம்.
ஒரு தொலைநோக்கு பார்வையோடு கோடை நாடக விழா என்ற ஒரு விழாவைச் சிந்தித்து,அதில் போட்டி நாடகங்களை அரங்கேற்ற வைத்து, பரிசுகள் வழங்கி,இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே புதிய நாடகங்களை அரங்கேற்றும் உத்வேகத்தை நாடகக்குழுக்களுக்கு ஏற்படுத்திய வகையில், அமரர் திரு. கார்த்திக் ராஜகோபால் அவர்களுக்கு தமிழ் நாடக உலகம் என்றும் கடமைப்பட்டிருக்கின்றது.
ஆண்டு தோறும் நடைபெறும் கோடை நாடகவிழாவில் குறைந்தது பத்து நாடகங்கள் அரங்கேற்றமாகும். இக்கணக்கில் இருபத்தோராம் நூற்றாண்டினில் முதல் இருபத்தோரு ஆண்டுகளில் கோவிட் பாதித்த ஓராண்டை தவிர்த்து கணக்கிட்டாலும் ஏறத்தாழ இருநூறு நாடகங்களை கோடை நாடக விழா அரங்கேற்றி உள்ளது. இந்நாடகப் போட்டியின் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. சபாக்களில் தமிழ் மேடை நாடகங்கள் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பதில் கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழாவிற்கு பெரும் பங்குண்டு.
இடர்மிகுந்த ஒரு சூழலில், மிகுந்த போட்டிகளுக்கு இடைப்பட்ட ஒரு கட்டத்தில், மக்களைக் கவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும், நாடகக்குழுக்கள் எத்தகைய நாடகங்களைப் படைக்கின்றன என்பதைக் காண்போம்.
குடும்பச் சூழல், நகைச்சுவை, புராணம், பக்தி, வரலாறு, அரிதாக அரசியல், மர்மம், துப்பறிதல், உளவியல், என நாடகப்பின்னணி அமைந்திருக்கின்றன. குடும்பச்சூழலை மையமாக வைத்து, ஒரே அரங்க அமைப்பை வைத்து, ஒரே வகையான பேசு மொழி வைத்து, கதையின் கரு எதுவாக இருந்தாலும் நகைச்சுவையைத் திணித்து, ஒன்றரை மணியிலிருந்து இரண்டு மணி நேரம் நடைபெறும் நாடகவகையாகவே பெரும்பான்மை நாடகங்கள் அமைகின்றன.
உணர்ச்சிப்போராட்டங்களைக் களமாக அமைத்து, புத்திசாலித்தனமான வசனங்களின் மூலம் காண்போரை தம் வசப்படுத்திய நாடகங்களும் உண்டு, டம்மீஸ் குழுவினரின் நாடகங்கள் போல, எனினும் அவை சிலவே.
குறைந்த அளவு வருமானம், அல்லது வருமானமே இல்லை எனினும் மிகுந்த பொருட்செலவில் தங்கள் திருப்திக்காக மட்டுமே நாடகம் நடத்தி தமிழ் நாடக வரலாற்றில் முத்திரை பதித்த நாடகங்களும் உண்டு. ஒன்றரை மணி நேரம் மேடையில் முழுதும் மழை பொழிய வைத்த தனுஷ்கோடி நாடகத்தைச் சான்றாக சொல்லலாம்.

பொன்னியின் செல்வன் நாடகத்தைத் தொடர்ந்து, பல வரலாற்று நாடகங்கள் தொடர்ந்து மேடையேறுகின்றன. புராண பக்தி நாடகங்களும் தொடர்ந்து அரங்கேறுகின்றன. நீண்ட, நெடிய ஆய்விற்கு பின், அரங்கேறும் வரலாற்று, புராண, பக்தி நாடகங்கள் கரையேறிவிடுகின்றன. அவசரத்தில் அரங்கேற்றியேயாக வேண்டும் என அரங்கேறும் படைப்புகள் தொடர்வதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
குறையாத கல்வி ஆர்வம்,ஆழமான படிப்பு, பலமான சிந்தனை, நேர்மையான அணுகுமுறை, சமூகப்பொறுப்புணர்வு, இவைகளுடன் நாடகக் கருக்கள் அணுகப்பட்டால், இருபதாம் நூற்றாண்டில் உருவான பலதரப்பட்ட சிந்தனைகள், உறவுகள், உணர்வுகள், களங்கள், வழி உருவான நாடகங்கள் மீண்டும் பிறக்கலாம்.
இது நடந்தால், ‘மேடை நாடகம் என்பது ஒரு அருமையான கலை, திரைப்படங்களில் பெற முடியாத உணர்வுகளை நாடகத்தில் மட்டுமே பெற முடியும், அத்தகைய நாடகங்கள் மீண்டும் உருவாகத் தொடங்கி விட்டன’ என்று மக்கள் உணர்ந்து விரும்பி நாடகம் காண வரும் சூழலும் உருவாகலாம்.
இவையெல்லாம் நடைபெறுமா என இருபத்தோராம் நூற்றாண்டின் இனி வரும் ஆண்டுகளே சொல்ல வேண்டும் , அதுவரை காத்திருப்போம் அந்த முன்றாவது மணிக்காக.
******

Leave a comment