அப்பன் : நூல் வாசிப்பனுபவம்

பரிமித்தா, மலேசியா

அலுவலகத்தில் என்னுடன் வேலைசெய்பவருள் முதியவர் ஒருவர் தனக்கு மூட்டு வலி இருந்ததாகக் கூறினார். அப்போது, எனக்கு எழுத்தாளர் அழகு நிலா எழுதிய ‘குருதி குடித்த குலசாமி’ கட்டுரை ஒன்று நினைவுக்கு வந்தது. அதில், மூட்டுவலியால் அவதியுற்ற அழகப்பாவின் தந்தைக்கு அழகப்பாவின் அத்தை புறா இரத்தத்தைத் தனியாக எடுத்துக் கொடுத்தார். அதை அப்பன் பிராண்டியில் ஊற்றி உடன் புறா கறியுடன் உண்டார். என்னுடன் வேலை செய்பவரிடம் நான் மூட்டு வலிக்கு பிராண்டியில் புறா இரத்தம் கலந்து குடிக்கும் வழக்கம் இருந்தது என்று கூறவும் எனது அலுவலக நண்பர்கள் மட்டுமில்லாமல், அக்கடையில் வேலை செய்துக் கொண்டிருந்தவர்களும் என்னை விநோதமாகப் பார்த்த நினைவுள்ளது.

‘அப்பன்’ எனும் நூல், எழுத்தாளரின் தந்தையை மையப்படுத்தி எழுதிய பதினைந்து நினைவுக்கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்த நூலை 2023ல் நூல்வனம் பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இந்த நூல் அப்பன் மட்டுமல்லாமல், அவரைச் சூழ்ந்திருந்த மனிதர்களின் கதையாகவும் உள்ளது. எழுத்தாளரும் இக்கதைகளில் அழக்கப்பாவெனும் சிறுமியாகவும், விடலையாகவும், மணமாகிய தாயாகவும் முக்கியமாக மகளாகவும் வருகிறார்.

இந்த நினைவுக்கட்டுரைகள் அப்பன் தனக்குரிய ஆளுமையை அவராகவே எடுத்துக் கொண்டு என் நினைவிலும் தங்கியுள்ளார். அதில், மீசைக்கார போலிஸ்காரன் என்பது ஒரு விறுவிறுப்பான கட்டுரை. அழகப்பாவின் அண்டை வீட்டாரான விக்ரம் அம்மாவின் வீட்டில் ஒரு திருட்டு நடக்கிறது. அந்த அம்மாவின் தம்பி ஒருவர் நகைகளைத் திருடிக்கொண்டு போய்விடுவார். அவரைப் பேருந்து நிலையத்திலிருந்து அப்பன் பொறுமையாக அழைத்துக் கொண்டு வரும் காட்சிகள் திகிலுக்குரிய வாசிப்பனுபவமாக இருந்தது. திருடரை மிக மென்மையாக கையாள்வதால், அந்த தம்பி தனது அக்காவைப் பார்த்து (விக்ரம் அம்மா) ”என்னக்கா உன் வீட்டுக்குச் சாப்பிட வந்தா, இப்படிதான் நடத்துவியா” எனக் கேட்பார். அதற்கு அப்பன், ”தம்பி நீங்க அவங்களுக்கு உறவுங்கிறனாலதான் இன்னும் பேசிக்கிட்டு இருக்கிறேன்” என மீசையுடன் மிரட்டவும், அந்த தம்பி களவு நகைகளைத் தனது அக்காவிடம் கொடுத்துவிட்டுச் செல்லும் கதை மிக சுவாரசியம். அப்போது, அழகப்பா வேலை விட்டுத் திரும்பிய அம்மாவிடம் நடந்தவற்றைக் கூறுவாள். அதற்கு அம்மா, தான் திருமணமாகி வந்த பதினாறு பவுன் நகையையும் கைவிட்டவர், ஊர் நகைகளை மீட்டுக் கொடுப்பதை நொந்துக் கொள்வார். திருமணக் கடனை அடைக்க நகைகளைப் பெண் வீட்டார் மீண்டும் கேட்கவும், அப்பன் அதற்கு ஒப்புக்கொண்டதால் போன நகை திரும்பாமலே போய்விட்டது. அப்பனின் மீது பரிதாபம்தான் ஏற்பட்டது. இக்கட்டுரையின் வடிவத்திலும், ஒருவரை பராக்கிரகமாகக் காட்டிவிட்டு, பிறகு தலைகீழாக்குவதால் மேலும் கட்டுரை வாசிக்க சுவாரிசயமாக உள்ளது.

பளிங்கி விழுங்கிய பூதம் எனக்குப் பிடித்த கட்டுரை. அதில் அழகப்பா ஆண் பிள்ளைகளுடன் ‘ரொடித்தனமாக’ விளையாடும் சிறுமியாக வருகிறாள். அதனால், அப்பன் அழகப்பாவைக் கடிந்து காயப்படுத்திய கண்டிப்பான அப்பாவாக உள்ளார்.

பளிங்கி என்றால் செண்டாங்காடு பக்கம் கோலிக்குண்டு என்று சொல்வராம். வீட்டுப்பாடம் செய்யாமல் வீதியில் பளிங்கி விளையாடிக் கொண்டிருந்ததால், அப்பன் அழகப்பாவின் வாகை சூடிய பளிங்கிகளைக் கிணற்றில் வீசுகிறார். இங்கு, அழகப்பா ‘கிணற்றுக்குள் நான் சொரிந்த கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன்றும் பளிங்கியாகமாறி மூழ்கிய பளிங்கிகளை அரவணைத்து ஆறுதல் சொல்லுமென்று திடமாக நம்பினேன்’ என நினைக்கிறாள். இது ஒரு சிறுமியின் கற்பனை. ஆனால், எனது அதிகமான கவனத்தை ஈர்த்தது. இவ்வரியின் நேரடிப் பொருளானது, நான் சிந்தும் கண்ணீர் துளிகள் பளிங்காக உருப்பெற்று அவை நீரில் முழ்கியவற்றை அரவணைக்கும். இன்று முல்லைப்பாடல்கள் படித்து கொண்டிருக்கும் போது, எதர்ச்சியாக இப்படி ஓர் அடி; ‘பூப்போல் உண்கண் புலம்பு முத்து உறைப்பக்’ மிகவும் கலங்கி, தன் பூப்போன்ற மையுண்ட கண்களிலிருந்து முத்துப் போலும் கண்ணீர்த் துளிகளைக் கொட்டினாள்.

இவ்வரி அழகப்பாவின் கற்பனையின் பாதி உவமை அல்லவா? எங்கிருந்து அவளுக்கு அப்படி ஒரு கற்பனை வந்திருக்கக் கூடும். ஏற்கனவே நமது டி.என்.ஏக்களில் இவை ஏற்றப்பட்டுள்ளனவா? எப்படி நம்முடன் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. கர்நாடக இசை இன்றைய இசையின் ஒரு வடிவமாக இருக்கலாம், ஆனால் அதன் வேர் மரபிசையிலிருந்து வந்தது போல இருக்கிறது அவளின் கற்பனை.

இறுதியாக நினைவில் தங்கிய கட்டுரை பிம்பமிழந்த பிதா.  பூஜையறையினுள்கூட மற்றவர்களை விடாத அப்பன் அழகப்பாவின் காதல் திருமணத்திற்கு அமைதியாக முரண்டு பண்ணதும் பிறகு சம்மதித்தற்குமான இடையில் நடந்தவற்றை ஆசிரியர் எழுதியிருப்பார். இதற்கிடையில் வீட்டில் நடக்கும் காட்சிகளைப் படிக்கச் சங்கடமாக இருக்கும். ஆனால், இக்கட்டுரை இரண்டு வகையில் முக்கியமென நினைக்கிறேன். ஒன்று, மகளிடம் தனது வாழ்க்கை முழுவதும் சமூகத்திடம் தன்னை ஆள் என நிமிரச் செய்த கொள்கைகளை, வரட்டு வீராப்புகளைக் கழற்றி கணியும் தந்தையின் பருமாற்றம். இரண்டு, அழகப்பா துணியும் முடிவுகளால், இன்று அவர் விரும்பும் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் சுதந்திரமும் பெற்ற முறையும் இலக்கியத்தில் ஈடுபட முயற்சிக்கும் இளம்பெண்கள் மற்றும் ஆண்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிவை எனத் தனிப்பட்ட முறையில் நான் கருதுகிறேன்.

அதுபோக, துணை காதாமாந்திரர்களாக வந்த சின்ன தாத்தா, பாண்டியன், மஞ்சு, சக்தி இவர்களும் பிரியமானவர்கள். அவ்வகையில் மண்டியிட்ட ஆசான் கட்டுரை அதிகம் பேசப்படாத மாமனார்-மருமகன் உறவை ஒட்டி எழுதப்பட்டது. இக்கட்டுரை தொகுப்பில் அவசியம் வாசிக்க வேன்டிய கட்டுரை மண்டியிட்ட ஆசான். ஒட்டுமொத்தமாக நூலை வாசித்துமுடித்தபின் எங்கள் தலைமுறையின் பிரதிநிதியாக என்னால் ஒன்றை மட்டும் சொல்ல முடியும். உறவுகளுடன் சேர்ந்து வாழ்ந்த மூத்த தலைமுறையினர் திரளுடன் திரளாக வாழ்ந்துள்ளனர். அத்தை, சித்தி, தாத்தா, பக்கத்து வீட்டு ஆண்டிகள் கூட ‘இன்னாரின் அம்மா’, அல்லது ‘மாமா’. அவை எங்கள் தலைமுறையினருக்கு அப்படியே அமைய அன்றாடத்தில் இடமில்லை. எனவே, இக்கட்டுரை, கதை, நாவல்களில் வாழ்ந்து போக முடியும்.

மிக அரிதாக ஒரு மனிதரின் நினைவுக்கட்டுரைகளைப் புத்தகமாக வரும் நிலையில், இதனை முயன்ற எழுத்தாளர் அழகுநிலாவிற்கு நன்றி.
********

Leave a comment

Trending