மிகைக்குள்ளும் ஒரு அளவு செயல்படுகிறது
கவிஞர் இசையுடன் ஒரு நேர்காணல்
– நேர் கண்டவர் : இரா. பூபாலன்
உடன்நின்றவர் : கவிஞர் சோலைமாயவன், கவிஞர் சுடர்விழி
கவிஞர் இசை – தமிழ் இலக்கியத்தில் அறிமுகப்படுத்த அவசியமற்ற பெயர். இன்றைக்கு கவிதைக்குள் நுழையும் வாசகன் முதல், ஏற்கனவே நுழைந்து கவிஞனாகிவிட்ட வாசகன் வரை யாவரும் அறிந்து வைத்திருக்கும் ஒரு பெயர் .

காற்றுகோதும் வண்ணத்துப்பூச்சி, உறுமீன்களற்ற நதி, சிவாஜி கணேசனின் முத்தங்கள், அந்தக் காலம் மலையேறிப் போனது, ஆட்டுதி அமுதே, வாழ்க்கைக்கு வெளியே பேசுதல், நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன், உடைந்து எழும் நறுமணம் ஆகிய எட்டு கவிதைத் தொகுப்புகள்
அதனினும் இனிது அறிவினர் சேர்தல், லைட்டா பொறாமைப்படும் கலைஞன், உய்யடா உய்யடா உய், பழைய யானைக் கடை, தேனொடு மீன், மாலை மலரும் நோய், அழகில் கொதிக்கும் அழல் ஆகிய ஏழு கட்டுரைத் தொகுதிகள் என இவரது பங்களிப்பு எழுத்துக்கு மிக முக்கியமானது. 2023 ல் ” இசை கவிதைகள்” என்கிற பெயரில் இவருடைய மொத்தக் கவிதைகளின் தொகை நூல் ஒன்றும் வெளியானது.
இயற்பெயர் ஆ.சத்தியமூர்த்தி. மருந்தாளுநராகப் பணி செய்கிறார். மனைவி சு.அமுதா. பெற்றோர் கேஆர்.ஆறுமுகம், வே. நாகரத்தினம். கோவை மாவட்டம் இருகூரில் வசித்து வருகிறார்.
கனடா இலக்கியத் தோட்ட விருது, ஆனந்தவிகடன் விருது, கோவை விஜயா விருது, என தமிழ்க் கவிதைக்கான முக்கியமான விருதுகளைப் பெற்றவர். இவரது கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. மலையாளத்தின் குறிப்பிடத்தகுந்த கவிகளுள் ஒருவரான பி. ராமன் மொழிபெயர்ப்பில் இசையின் கவிதைகள் இந்த ஆண்டு மலையாளத்திற்குச் செல்ல இருக்கின்றன.
இந்த நேர்காணலை முடித்துவிட்டு ஆசுவாசமாக தேநீர் அருந்திக் கொண்டிருக்கையில் கவிதையில் ‘ மிகை’ குறித்த பேச்சு வந்தது. ” அது மிகைதான் என்றாலும், எங்கு, எப்போது, யாருக்கு, எவ்வளவு என்பதாக மிகைக்குள்ளும் ஒரு அளவு செயல்படுகிறது” என்று சொன்னார் இசை.

- தற்போது இசை கவிதைகள் மொத்தமாக ஒரே தொகுப்பாக வெளிவந்திருப்பது கவிதை வாசகர்களுக்கான ஒரு கொண்டாட்டமாக இருக்கிறது. இதுவரை உங்களுடைய எட்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன . இவ்வளவு சீக்கிரமாக அதாவது நீங்கள் இன்னும் இளமையோடு இருக்கும் காலத்திலேயே முழுத் தொகுப்பு கொண்டு வருவதற்கான முயற்சி எடுக்க வேண்டும் என்று ஏன் தோன்றியது?
உண்மையைச் சொல்லனும்னா ஒரு பயம் இருக்கு என நினைக்கிறேன். சில நண்பர்களின் மரணம் என்னைப் பெரிதும் பாதித்தது. அதனால் எதிர்காலம் குறித்த பயம் என்னுள்ளே வந்துவிட்டது. இப்போதே மரணபயம் என்று சொன்னால் அது நாடகம் போல் இருக்கும். ஆனால் அதுவும் ஓர் உண்மைதான். அப்புறம் நிறைய எழுதிவிட்டது போல் தோன்றிவிட்டது. அதனால் தொகுத்துப் பார்த்துக் கொள்வது எனக்கு அவசியமாக இருந்தது. வாசகர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் அது பயனுள்ளது என்று எண்ணினேன்.
- உங்கள் முதல் தொகுப்பு குறித்து பலரும் அறிந்திருக்கவில்லை. ” காற்றுகோதும் வண்ணத்துப்பூச்சி” எப்படி உருவானது ? அதற்கு முன்பு சில இதழ்களில் உங்கள் கவிதைகள் பிரசுரமாகியிருந்தன அல்லவா ?
அதற்கு முன்னால் சிறு சிறு ஜனரஞ்சக இதழ்களில் நான் கவிதைகள் எழுதி உள்ளேன். “சரவணா ஸ்டோர்ஸ் ” என்றே ஒரு இதழ் வந்தது. அதில் கூட எழுதியுள்ளேன். ‘புன்னகை’ இதழில்தான் அதிகமாக எழுதினேன். க.அம்சப்ரியா, ரமேஷ் போன்ற கவிஞர்களுடன் நானும் எழுதத் தொடங்கினேன். இந்த வட்டாரத்தில் உள்ள இலக்கிய நண்பர்களுக்கான பயனுள்ள இதழாக புன்னகை இருந்தது. அதில் நான் ,இளங்கோ கிருஷ்ணன் போன்றவர்கள் ஒன்றாக இணைந்து எழுதத் தொடங்கினோம். பின் ‘தீம்தரிகிட’ இதழிலும் எழுதத் துவங்கினேன். இதற்கெல்லாம் முன்பாகவே எனது முதல் தொகுப்பு வந்துவிட்டது. காரணம் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டால்தான் நம்மையும் ஒரு கவிஞனாக ஒத்துக் கொள்வார்கள் என்ற எண்ணம். அவை ஆழமான கவிதைகள் இல்லை சிறு பிள்ளைத்தனமான முயற்சி என்றாலும், . முதல் தொகுப்பை நான் ஒளித்துவைக்க விரும்பவில்லை. அதனால் அதுவும் பட்டியலில் இடம் பெறுகிறது.
இருகூரில் இளஞ்சேரல், பொன் இளவேனில் இருவருடனும் விடிய விடியவெல்லாம் இலக்கியம் பேசிய காலம் அது. இளஞ்சேரல் தொகுப்பும் எனது முதல் தொகுப்பும் ஒரே நாளில் வெளியானது.
- உங்களுடைய குறிப்பிடத் தகுந்த தொகுப்புகளில் ஒன்று உங்களுடைய இரண்டாவது தொகுப்பான “உறுமீன்களற்ற நதி”. எல்லா வாசகர்களும் பரவலாக வாசிக்கக்கூடிய ஒரு தொகுப்பு. நிறைய இளைஞர்கள் இன்றும் தேடி வாசிக்கும் தொகுப்பு அது. நிறைய விருதுகள் பெற்ற தொகுப்பும் கூட. “காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி”யிலிருந்து இதற்கான பயணம் எவ்வாறு அமைந்தது?
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இடைவெளி. அந்த இடைவேளைக்காலம்தான் உண்மையாக இலக்கிய வெறியுடன் அலைந்த காலம். அந்த நேரத்தில்தான் நானும் இளங்கோவும் ஒன்றாக இணைந்து காலை பூங்காவுக்குப் போனால் இரவு காவலர் விசில் ஊதி, வெளியே போ என்று கூறும் வரை அங்கேயே அமர்ந்து பேசுவோம். இலக்கியம் நரம்பில் கொதித்து ஓடிய காலம் என்று கூறலாம். கிட்டத்தட்ட ஒரு பைத்திய நிலையில் இருந்தோம். அந்தக் காலந்தான் நிறைய வாசிக்கவும், ஊர் ஊராக இலக்கியக் கூட்டங்களுக்கு சென்றதுமான காலம். கவிதையியல் சார்ந்து நிறைய உரையாடினோம். மனுஷ்யபுத்திரனது ‘நீராலானது’, சுகுமாரனின் ‘சிலைகளின் காலம்’ போன்ற தொகுப்புகள் தனிப்பட்ட முறையில் எனக்குக் கவிதைகளைக் கற்பதற்கான வழியாக அமைந்தன
- இலக்கியத்தில் எவர் முகத்தில் முழிக்கிறோம் என்பதில் இருக்கிறது எல்லாமும் என ஒரு முறை சொல்லி இருக்கிறீர்கள். அது ஒரு சத்திய வாக்குதான். அந்த முழிப்பு உங்களுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வகையாக நடந்திருக்குமல்லவா ?
அது முன்பு சுகுமாரன் சாரைப் பத்தி எழுதிய வரி. இப்போதும் எனது ஆசிரியர் அவர். “காற்றுகோதும் வண்ணத்துப்பூச்சி” தொகுப்பை சிலருக்கு மட்டுமே அனுப்பி இருந்தேன். கல்யாண்ஜிக்கு அவர் ஸ்டைலிலேயே ஒரு கடிதம் எழுதித் தொகுப்பை அனுப்பி வைத்தேன். அது அவருக்குச் சேர்ந்ததா என்று கூடத் தெரியாது. அப்படித்தான் திருவனந்தபுரத்தில் பணியிலிருந்த சுகுமாரனுக்கும் அனுப்பி வைத்தேன் அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார், அதில் அவர்
“எழுத்துக்கு நான் என்றென்றைக்குமாகக்
கைக்கொள்ளும் சூத்திரம் என்பது ஒன்று உண்டு.
அது தெளிவுறவே அறிந்திடுதல்,
தெளிவுதர மொழிந்திடுதல்”
என்று குறிப்பிட்டு இருந்தார். நான் மாஸ்டர் என்று நம்புகிற ஒருவர் எனக்குச் சொன்ன அருள் வாக்கு போல இருந்தது அது
பின்னர் ஆத்மாநாம், மனுஷ்யபுத்திரன், மு.சுயம்புலிங்கம், .ஷங்கர்ராமசுப்ரமணியன் போன்றவர்கள் முகத்திலும் விழித்தேன். இவர்கள் ஏதோ ஒரு விதத்தில் என் எழுத்துள் இருக்கிறார்கள்.
- உங்களைத் தொடர்ந்து வாசித்தும் கவனித்தும் வருபவர் என்ற நிலையில் இந்தக் கேள்வி. நீங்கள் தமிழ் இலக்கியம் பயின்றவர் தானே?
இல்லை, நான் டி.பார்ம். அதற்குப் பிறகு தொலைதூரக் கல்வியாக இளங்கலை, முதுகலை தமிழ் பயின்றேன். ஆனால் அதைத் தீவிரமாகக் கற்றேன் என்று கூற முடியாது. நான் தமிழ் கற்றது வகுப்புகளுக்கு வெளியேதான். ஆனால் பள்ளிக்காலம் முதலே எனக்குத் தமிழ் மீது ஆர்வம் மிகுதிதான். நான் பாடத்திற்கு வெளியே ஆர்வமாக கற்ற அதே அழகான புறநானூற்றுப் பாடலை அண்ணாமலை பல்கலைக் கழகப் பாட நூலுள் வைத்து வாசிக்கையில் அதே பழைய தூக்கம் வந்துவிட்டது. ஆகவே என் தமிழ்க் கல்வி என் இலக்கியக் கல்வியின் ஒரு பகுதிதான்.
- தமிழ்க்கல்விக்கு முன்பான உங்கள் மொழிதலுக்கும் பின்பான மொழிதலுக்கும் வேறுபாடுகளை ஒரு வாசகனாக என்னால் உணர முடிந்தது…
உண்மைதான். நமது பழந்தமிழ் இலக்கியங்களை செல்வங்கள் என்றே இப்போதும் மதிப்பிடுகிறேன். அவை என் எழுத்தில் ஒளி கூட்டவே செய்தன.
” உறுமீன்களற்ற நதி ” அதனினும் இனிது அறிவினர் சேர்தல்” ” உய்யடா உய்யடா உய்” ,” தேனொடு மீன்”, “அழகில் கொதிக்கும் அழல்” ஆகிய என் நூல்களின் தலைப்பிலேயே நீங்கள் அந்த ஒளியை உணரலாம். இதுவன்றி கவிதைக்குள் வரும் பழந்தமிழ்ச் சொற்கட்டுகளும் கவிதையைப் புத்துணர்ச்சி மிக்கதாய் ஆக்குகின்றன என்று நம்புகிறேன்.
கம்பராமாயணத்தில் அயோத்தி நகரத்துப் பெண்களை வர்ணிக்கிறான் கம்பன். வெறும் அழகு வர்ணனை போல் இல்லை அந்த வரி. காதலின் களிப்பையும் வேதனையையும் ஒரு வரியில் கட்டி இழுத்து வந்து விட்டது போல தோன்றியது எனக்கு.
” முளைப்பன முறுவல்; அம்முறுவல் வெந்துயர் விளைப்பன”
நீங்கள் உங்கள் காதலியின் முகத்தை ஒரு முறை ஆழமாக எண்ணிக் கொண்டு “வெந்துயர் முறுவல்” என்று ஒரு முறை சொல்லிப் பாருங்கள். “உடைந்து எழும் நறுமணம்” தொகுப்பில் காதல் கவிதைகளால் ஆன ஒரு பகுதி உண்டு. அதற்கு “வெந்துயர் முறுவல்” என்றே தலைப்பிட்டேன்.
ஆனால் நான் தனித்தமிழ் வெறியன் அல்ல. என் கவிதை கோரினால் நான் “நைஸ்” என்றும் தலைப்பிடுவேன்.
- கவிதை மட்டுமா? என்ற கேள்வியை எத்தனை முறை எதிர்கொண்டீர்கள் என்பது தெரியாது. ஒரு கதாசிரியரிடமோ ஒரு நாவலாசிரியரிடமோ ஏன் இன்னும் கவிதை எழுதவில்லை என்று யாரும் இதுவரை கேட்கவில்லை. ஆனால் ஒரு கவிஞனிடம் ஏன் இன்னும் கதை எழுதவில்லை? நாவல் எழுதவில்லை? என்று கேட்கிறார்கள். இதை நீங்கள் எதிர் கொண்டு உள்ளீர்களா?
ஆம் எதிர்கொண்டுள்ளேன். நானும் ஒன்றிரண்டு சிறுகதைகளை எழுதிப் பார்த்துள்ளேன். அவை சிறுகதை ஆகவில்லை. ஒரு கதை எழுதி சுகுமாரன் சாருக்கு அனுப்பினேன் அவர் படித்துவிட்டு இதைக் கட்டுரையாகப் போட்டுவிடலாம் என்றார். கவிஞர் மோகனரங்கன் படித்துவிட்டு “இதை நீ எதாவது இதழுக்கு அனுப்பினால் சிறுகதை என்று போடத்தான் செய்வார்கள். ஆனால் அனுப்பிவிடாதே” என்றார். இப்படி எனது சிறுகதை முயற்சியை ஆரம்பத்திலேயே இந்த இரண்டுபேரும் கிள்ளி எறிந்துவிட்டார்கள். பிறகு நான் அதற்கு முயற்சி செய்யவில்லை.
எனக்கு விவரணைகள் வரவில்லை அல்லது முயற்சி செய்யவில்லை. உலகின் புறக் காட்சிகளைக் குறித்த அறிவு போதவில்லை. ஒரு கதை எங்காவது நிகழ வேண்டுமல்லா? அது நிகழும் நிலத்தை சொல்வதில் ஏதோ ஒன்று போதவில்லை அல்லது அதில் ஆர்வமில்லை என்று நினைக்கிறேன். இயல்பாகவே எனக்கு “சித்தரிப்பு அலர்ஜி” உண்டு. என் புனைவு முயற்சிகளில் அது ஒரு குறையாகி விட்டது .
“காச்சர் கோச்சர்” நாவலை வாசிக்கையில் நம்மாலும் இது போல் ஒரு நாவல் எழுதி விட முடியும் என்று தோன்றியது. எழுத முடியுமா? எழுதுவேனா? என்று தெரியவில்லை.
- நீங்களே சொன்னது போல உங்கள் கவிதைகளில் சங்க இலக்கியச் சொற்களுடன், சமகாலச் சொற்களும் ஆங்கிலச் சொற்களும் கலந்தே வருகின்றன. இந்த முனைக்கும் அந்த முனைக்கும் எப்படி அல்லாடுகிறீர்கள்? ஒரு கவிதையில் வெற்றிக்கு “success” என்று கத்தியுள்ளீர்கள்.
கவிதைதான் கோருகிறது. “நைஸ்” கவிதை வரும் போதே “உன் கைகள் எவ்வளவு நைஸாக” இருக்கின்றன என்கிற வரியோடுதான் வந்தது. அதனால் நான் அதை முழுவதும் நம்பினேன். சமீபத்தில் அந்தக் கவிதையில் “நைஸ்” என்கிற ஆங்கிலச் சொல்லிற்குப் பதிலாக வேறு என்ன சொற்களை உபயோகித்திருக்க வாய்ப்பு இருந்தது என்று யோசித்துப் பார்த்தேன். “மிருது” என்கிற சொல் நினைவுக்கு வந்தது. மிருது என்கிற சொல்லை காமத்தைப் பேசும் வேறொரு கவிதையில் நானே பயன்படுத்தியும் உள்ளேன். ஆனால் நைஸ் கவிதைக்கு அது போதவில்லை. “நைஸ்” என்கிற சொல்லில்தான் எச்சில் ஊறி ஒழுகுகிறது. அதாவது “ஜொள்ளு” வடிகிறது. அந்தக் கவிதைக்கு அந்த ஜொள்ளு தேவைப்பட்டது.
சமீபத்தில் எழுதிய “பேப்பர்காரராக வந்தவர்” கவிதையில் கூட “அவுட்” என்ற சொல்லைப் பயன்படுத்தினேன், அவுட் என்கிற சொல்லுக்கு இணையான, கச்சிதமான வேறு தமிழ்ச்சொல் அமையவில்லை. “அவுட்” என்கிற சொல்லில் இருக்கும் மகிழ்ச்சியும் , துள்ளலும் அந்தக் கவிதைக்கு தேவைப்பட்டது. ஆகவே அது எடுத்துக் கொண்டது.
பேப்பர்காரராக வந்தவர்
உலகத்தை உருட்டி
உனக்குத்தான் என்பதாக
அந்தரத்தில் எறிந்தார்
எனக்கேதான் என்பது போல்
நானதை எட்டிப் பிடித்தேன்.
அப்போது
உறுதியாக
ஒரு அவுட்.
தவிர ஆங்கிலம் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. கவிதையில் கலக்கக் கூடாது என்றால் எப்படி? ஆனால் அதை ஒரு மோஸ்தர் போல கவன ஈர்ப்பாக செய்வதில் அர்த்தமில்லை.
- ஆரம்ப நாட்களில் நீங்கள் வாழ்வின் சிறந்த தருணங்களையே கவிதையாக்கி வந்தீர்கள் என்றும் சமீப நாட்களாக அன்றாடங்களையும் கவிதையாக்கி வருகிறீர்கள் என்றும் தோன்றுகிறது…
¯ உங்களுக்கு அப்படித் தோன்றினால் அது எனக்கு மகிழ்ச்சியே. சிறந்த தருணம், சாதாரணத் தருணம் என்பதெல்லாம் மனதின் லீலைகள்தான் என்று நினைக்கிறேன். பிறகு சாதாரணத் தருணத்தை நான் வெற்றிகரமாகக் கவிதை ஆக்கிவிட்டால் அது எப்படி சாதாரணத் தருணம்?
ஒரு விபத்தில் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு படுக்கையில் சிகிச்சை பெற்று வரும் என் நண்பனை, தற்போது அடிக்கடி போய்ப் பார்த்து வருகிறேன். அங்கு அவனைப் போலவே வாழ்வு கடித்துக் குதறிய பலரையும் பார்க்கிறேன். நான் உயிர் தரித்திருக்கும் ஒவ்வொரு தருணமும் சிறந்த தருணம்தான் என்று தோன்றி விட்டது. இங்கும் பாட்டி நினைவுக்கு வருகிறாள்..
“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது.”.
வாழ்வு குறித்த புகாரும் அச்சமும் உள்ள கவியாக அறியப்படும் நகுலனின் நேர்காணல் ஒன்றைச் சமீபத்தில் பார்த்தேன். பேட்டி எடுப்பவர் நகுலனிடம் வாழ்வு குறித்து ஏதோ புகார் சொல்கிறார். நகுலன் அவருக்கே உரிய வகையில் அதற்குப் பதில் சொல்கிறார்..
“ஏன்… ஏன் அப்படி சொல்றீங்க.. இப்ப நம்ம ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கமே. ..இது.. இந்த தருணம் எவ்வளவு நல்லாருக்கு…” .
- பகடி உங்கள் கவிதைகளில் மிகவும் நேர்த்தியாக வெளிப்படும் ஒரு அம்சம். அது உங்களுக்கு மிகப்பெரிய பலம் என்று கூட கூறலாம். உங்கள் அளவிற்கு சமகாலத்தில் பகடியை யாரும் எழுதிப் பார்க்கவில்லை. இது திட்டமிட்டுத் தான் நிகழ்கிறதா?
ஆரம்ப காலத்தில் ஒரு சின்னத் திட்டம் இருந்தது என்றே நினைக்கிறேன். ஆனால் இப்போது இல்லை.
கவிதையைப் பற்றிய மேற்கோள்களில் ஒன்றே ஒன்று எனக்கு எப்போதும் உதவுவதாக இருக்கும் அது “கவிதை என்பது பிறிதொன்றில்லாத புதுமை“ என்று ஜெயமோகன் சொன்ன ஒன்று. நான் எழுதத் தொடங்கும்போது எங்கெங்கு பார்க்கினும் ஒரே ஒப்பாரியாக இருந்தது. கண்ணீர் இல்லாமல் கவிதையே இல்லை என்கிற நிலை. கண்ணீரை நான் சந்தேகிக்கவில்லை ஆனால் அப்படி மூக்கைச் சிந்தவும் விரும்பவில்லை. பகடி என்பது கவிதையைப் புதிதாகக் காட்டியது . 100 கவிதைகளுக்கு மத்தியில் தன்னைத் தனித்துக் காட்ட பகடியால் முடிந்தது. பின்னாட்களில் பகடியும் ஒரு மோஸ்தர் ஆனது. அந்தக் கேட்டில் எனக்கும் ஒரு கணிசமான பங்குண்டு.
- சமீபநாட்களில் உங்கள் கவிதைகளில் பகடி குறைந்து வருவதற்கு வயதும் ஒரு காரணம் என்று சொல்லலாமா?
வயது முதிர்ந்தால் அறிவும் முதிர்ந்துவிடும் என்கிற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நானே கூட அதற்கு சாட்சி. என்னால் இன்னும் விடலைப் பருவத்தையே தாண்ட முடியவில்லை. அழுவதுதான் கவிதை என்கிற காலம் போல் பகடிதான் கவிதை என்பது போலவும் பகடி திடீரென பல்கிப் பெருகுவதைப் பார்த்தேன். மெல்ல நான் அதில் இருந்து விலகி நடக்கத் துவங்கினேன். கவிதையின் வெவ்வேறு குணரூபங்களைத் தொட்டுப் பார்க்கவே நான் விரும்பினேன். அதனால் வெற்றிகரமான ஒரு சூத்திரத்தை துணிந்து கைவிட்டேன். ஆனால் என்னுடையது முழுத்துறவு அல்ல. சமீபத்தில் எழுதியவற்றுள் “அலுவலகத்தில் ஒரு பிரச்சனை”, “ரஜினி ரசிகையின் காதலன்” போன்ற கவிதைகளில் பகடி இருந்தது. அவை எனக்கு பிடித்தும் இருந்தன.
தவிர பகடியின் விளையாட்டை நான் என் உரைநடையில் தொடரவே செய்கிறேன். அது சாகும் மட்டும் தொடரும். அந்த விளையாட்டுப் பையனை விட்டால் எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்?

- உங்களுடைய எல்லாக் கவிதைகளும் தலைப்பு உடையவைதாம். கவிதைக்குத் தலைப்பிடுதல் நிறைய கவிஞர்களுக்கு வராத ஒரு நுணுக்கம். அதை எப்படி நீங்கள் சிறப்பாகத் தேர்வு செய்கிறீர்கள்?
தலைப்பு சில சமயம் கவிதையை விளக்கிக் கூறிவிடும். அது கவிதையின் மயக்க அழகுக்கு ஊறு .அதை நான் விரும்புவதில்லை. கவிதையின் வாசகப் பங்களிப்பை இது தடுத்து நிறுத்தி விடுகிறது. வாசகன் ஒரு “ஆஹா!” சொல்ல வேண்டுமல்லவா? அவனுடைய “ஆஹா” வையும் கவிஞனே பறித்துக் கொள்வது அழகல்ல.
சில கவிதைகளின் தலைப்பு கவிதைக்குள் உணர்த்த முடியாத ஒரு விஷயத்தை உணர்த்த உதவுவதும் உண்டு. அப்படியான நேரத்தில் தலைப்பு ஒரு துணை.
தேவதச்சன் அவர்கள் தலைப்பு கிடைக்காதபோது, முதல் வரியையே தலைப்பாக வைத்துவிடுவார். எனக்கும் தலைப்பிடல் ஒரு சிக்கல்தான். உங்களுக்கு அது சிறப்பாக உள்ளதாகத் தோன்றினால் மகிழ்ச்சி. நானும் தலைப்பு கிடைக்காமல் “ஆம்” என்றெல்லாம் தலைப்பிட்ட ஒரு ஏழைதான்.
- இசை ஒரு” தனியன்” என்பதுதான் உங்களைக் குறித்த எனது ஆரம்ப கால மனச்சித்திரம். ஆனால் இன்று ஒரு பரந்துபட்ட இலக்கிய நட்பில் உள்ளீர்கள். உங்கள் இலக்கிய நண்பர்கள் குறித்துச் சொல்லுங்கள்?
“எல்லாம் எழுதுகிற இந்த வெறுங்கையில் இருந்து வந்ததுதானே” என்று சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் தன் 50ஆவது கவிதை நூலின் முன்னுரையில் எழுதி இருந்தார். நானும் அதே உணர்ச்சிப் பெருக்கோடுதான் இதைச் சொல்ல விரும்புகிறேன். என் நண்பர்கள் என் பேறுதான்.
இலக்கிய நண்பர்கள் என்றால் 50 பெயரையாவது பெயர் சொல்லிச் சொல்ல வேண்டும். அதற்கு இந்த இடம் போதாது. அவர்கள் என் மேல் அன்பு செலுத்துபவர்களாகவும், காயம் செய்பவர்களாகவும், மன்னிப்பவர்களாகவும், என்னால் மன்னிக்கப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
இளங்கோவும் நானும் சுயபால் விரும்பிகள் போல ஒன்றாகவே திரிந்த காலம் ஒன்று இருந்தது. நரன் என்னை இணையத்துள் புழங்க அழைத்து வந்தான்.
இப்போது தினமும் பேசிக் கொள்ளும் நண்பர்கள் என்று ஒரு குழு உருவாகி உள்ளது. அவர்கள் என் எழுத்துள்ளும் வினை செய்துள்ளார்கள். கவிதை சாராது நான் எழுதிய முதல் உரைநடை வடிவேலுவைக் குறித்து எழுதிய “லைட்டா பொறாமைப்படும் கலைஞன்” என்கிற கட்டுரை. கட்டுரைக்குப் புதியவன், களமும் புதிது என்கிற நிறைய தயக்கங்கள் இருந்தன. அந்தக் கட்டுரை காலச்சுவடு இதழில் வந்தது. ஒரு நகைச்சுவை நடிகரைக் குறித்து ஒரு தீவிர இலக்கிய இதழில் எழுதும் போது அதற்கு வெறும். “உயர்வு நவிற்சி” உதவவில்லை. அப்போது சாம்ராஜ்தான் ஈழத் தமிழர்களின் படு கொலையைக் கண்டித்து தன்னை தீக்கிரையாக்கி உயிர் நீத்த முத்துக்குமாரின் கடிதத்திலும் வடிவேலுவின் வசனம் உண்டு என்பதை நினைவு படுத்தினார். அதை வெறும் ‘தகவல் உபயம்’ என்று சுருக்கி விட முடியாது. அந்தத் தகவல் கட்டுரையின் செறிவுக்கு பெரிதும் துணை செய்தது. இப்படி நண்பன் விஷால் ராஜா சமயங்களில் என் எழுத்தைச் சீராக்குவதுண்டு. நண்பர் ஏ.வி மணிகண்டன் என் இரண்டு கவிதைகளை எடிட் செய்துள்ளார். இரண்டுமே வரிகளை முன்னும் பின்னும் நகர்த்தி வைத்ததுதான். ஆனால் பிரமாதமானது.
நீ ஏன்
அவ்வளவு தூரத்திலிருக்கிறாய்?
சென்று காணுமளவுக்கு
என்று நான் ஒரு கவிதை எழுதி அனுப்பினேன். மணி அந்தக் கவிதையை இப்படி மாற்றினார்..
நீ ஏன்
அவ்வளவு தூரத்திலிருக்கிறாய்?
சென்று
காணுமளவுக்கு
எனக்கு நிறைந்து விட்டது. “சென்று” என்கிற சொல்லைத் தனி வரியாக்கியதன் மூலம் மணி அந்த வரிக்குள் ஒரு விமானத்தைப் பறக்க வைத்து விட்டார்.
எழுத்து அளித்த ஒரு பரிசு செந்தில்குமார் நடராஜன். அவன் இருக்கும் தைரியத்தில்தான் இந்த வாழ்வை கொஞ்சம் நம்பிக்கையோடு எதிர் கொள்கிறேன். கவின்மலர், சரோ இருவரின் முன் நான் ஒரு ஆண் அல்ல. பால்பேதத்தை அழித்துவிடுவது எவ்வளவு அழகான ஒரு நிலை?
ஷங்கர் முன்னோடிக் கவிஞர் என்பதோடு நண்பராகவும் தொடர்பவர். சாம்சன், வரதன், சரண் ஆகியோர் ஏதோ ஒரு விதத்தில் என்னை பத்திரம் செய்பவர்கள். மிஷ்கினோடு களிக்கும் ஒரு இரவு இரண்டு மாதத்திற்கான சக்தியை சேமித்து வைக்கப் போதுமானது. அவனோடு இருக்கையில் நான் எழுத்தாளன்..எழுத்தாளன்.. எழுத்தாளன் தவிர வேறொன்றுமில்லை. நான் அறிந்து அவன் ஒரு இருபது பேருக்குச் சேர்த்துச் சம்பாதிக்கிறான்.
மனோஜ் பாலசுப்பிரமணியம், வீரபத்திரன் இருவரும் “தம்பியர் இருவராக” துணை செய்கிறார்கள்.
- கவிதை மனநிலையை எப்படித் தக்க வைத்துக் கொள்கிறீர்கள்? உங்கள் எழுத்து ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஒரே நேர்கோட்டில் ஏறுமுகத்தில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. புதிதாக எழுத வருபவர்களுக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது இது. அந்த மனநிலையை எப்படித் தக்கவைத்துக் கொள்கிறீர்கள்?
அது பயிற்சியில்தானா என்று தெரியவில்லை. நாம் தொடர்ந்து வாசிப்பது மூலமாக ஆழமான ஒரு பயிற்சி நடப்பதாகத்தான் தோன்றுகிறது. ஆனால் கவி மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள சிறப்பு தியானம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனக்கான தருணத்தை நான் உருவாக்கவில்லை. அது தானாகவேதான் நிகழ்கிறது. “கவிஞனின் கண்” என்று சொல்கிறார்களே அது என்ன? பதில் இல்லை கேள்வியாகக் கேட்கிறேன்.
கவிஞன் ஓரளவு கலப்படம் இல்லாமல் இருக்க முயலலாம். அல்லது அவன் கலப்படத்தில் சிக்கும் போது இதோ… இதோ… இந்தக் கலப்படம் என்று காணுகிற விழிப்புணர்வு… இப்படி சில அவனுக்கு உதவக் கூடும். எல்லாம் அனுமானங்கள்தாம். உறுதியில்லை. எல்லாம் கலைமகள் கைப்பொருள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அந்த விசயம் அவ்வளவு தெளிவாக இல்லை என்று சொல்கிறேன். கவிதையைப் பூடகப் படுத்துவது என் நோக்கமல்ல. நான் 500 கவிதைகளையும் தாண்டி எழுதி விட்டேன். இதோ நீங்கள் பேட்டியெல்லாம் எடுக்கிறீர்கள். இன்று இரவு ஒரே ஒரு கவிதை எழுதி விட என்னால் முடியுமா? உறுதியில்லை அல்லவா?
- உங்கள் கவிதையில் ஒரு கச்சிதம் இருக்கின்றது. அந்தக் கச்சிதத்தை எது அளிக்கிறது?
கவிதைக்கு கச்சிதத் தன்மை அவசியம் என்றுதான் நினைக்கிறேன். தேவையற்ற ஒரு வரி கவிதைக்குள் வரும்போது கவிதையே நீர்த்துப் போய்விடும். அந்த உணர்வு சிதைந்து விடுகிறது. அந்த வரி இல்லாமலே உணர்வு கடத்தப்பட்டுவிடக்கூடும் என்றால் அந்த வரி தேவை இல்லை தானே. நான் தொகுப்பாக்கும் கடைசி நிமிடம் வரை கவிதைகளைத் திருத்துபவனாகத்தான் இருக்கிறேன்.
- இளையராஜா, எஸ்.பி.பி, சஞ்சய் சுப்பிரமணியன், எம்.கே.டி, சிவாஜி கணேசன், கமலஹாசன், க்ரிஷ் கெயில் போன்ற சமகால ஆளுமைகளை வெற்றிகரமாகக் கவிதைகளுக்குள் அழைத்து வந்திருக்கிறீர்கள். இசை என்னும் ரசிகரைக் குறித்து சொல்லுங்கள்?
ஷகீலாவும், ரஜினியும் கூட உண்டு. ரஜினி நுழைந்தது ஒரு காதல் விபத்து. அவரைத் தவிர ஷகீலா உட்பட எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் என் நன்றிப் பட்டியலில் இருப்பவர்கள். என் நாட்களைப் பரவசத்துள் ஆழ்த்தியவர்கள். அவர்கள் கவிதைக்குள் வரும் போது அவர்களுடைய ஒளியால் எனக்கு உதவியபடியேதான் வருகிறார்கள். அவர்களை எங்கு அமர வைக்க வேண்டும் என்பது மட்டும் எனக்கு தெரிந்திருந்தது என்று நினைக்கிறேன். அவர்கள் என் கவிதைக்குள் ஒரு கவர்ச்சிப் பொருளாக வரவில்லை என்றும் நம்புகிறேன். நான் வெகுவாக ரசிக்கும் வேறு சிலர் இன்னும் என் கவிதையை அலங்கரிக்கவில்லை.
- “காற்று வீசுகிறது” போன்ற சில கவிதைகள் உள்ளீடற்ற, ஏமாற்றம் அளிக்கும் கவிதைகளாக எனக்குத் தோன்றுகிறது. அது போன்ற கவிதைகளை எப்படி நம்புகிறீர்கள்?
நீங்களே சொல்கிறீர்களே ‘நம்புவது’ என்று. நானும் அவற்றை அப்போது கவிதை என்று நம்பித்தான் எழுதுகிறேன். நீங்கள் சொல்லும் கவிதை “காற்று வாங்குதல்”’ என்னும் கவிதை என்று நினைக்கிறேன். “இசை கவிதைகள்” நூலைத் தொகுக்கையில் பழைய தொகுப்புகளிலிருந்தும் சில கவிதைகளை நீக்கினேன். அந்த நீக்கத்திலிருந்தும் அந்தக் கவிதை தப்பித்தான் பிழைத்து விட்டது. எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டுவதன் மூலம் ஒரு தமிழ்க்கவி எந்த ராஜ்ஜியத்தைக் கைப்பற்றப் போகிறான்? கவிதை கைவிடும் தருணங்களும் நிகழவே செய்யும்.
எழுத்தாளர் ஜெயமோகனிடம் நான் பேசியது மிகக்குறைவு. ஆபத்தான அழகிகளிடம் கூட இரண்டு வார்த்தை தனியாகப் பேசிவிடலாம். ஆனால் அவரைச் சுற்றி எப்போதும் அவர் நண்பர்கள் இருப்பதால் அந்த இரண்டு வார்த்தையும் பேச முடிந்ததில்லை.
ஆனால் ஆரம்பத்திலிருந்தே எனது எல்லாப் புத்தகங்களைப் பற்றியும் அவர் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். அதை அவர் செய்ய வேண்டிய ஒரு அவசியமும் இல்லை. அவர் எனக்காக அதைச் செய்தார் என்று கூட நான் நம்பவில்லை. கவிதையில், இலக்கியத்தில் அவரது தரப்பு, அவர் நம்பும் உண்மை என்று ஒன்று இருக்குமல்லவா? அந்த உண்மைக்காகவே அவர் அதைச் செய்தார் என்று நினைக்கிறேன். அந்த உண்மைகளுக்காக அவர் வாதாடி இருக்கிறார். இசை என்கிற தனி ஆள் இதில் இரண்டாம் பட்சம்தான். மொழியில் புதுப்போக்கு ஒன்று தலையெடுக்கும் போது அதை முன் மொழிய சில ஆளுமைகள் அவசியம். அந்த ஆளுமைகளுள் வலுவான ஒருவராக அவர் இருந்தார். மிகவும் மகிழ்வோடும், நன்றியோடும்தான் நான் அந்த சமர்ப்பணத்தை செய்தேன்.
என் கவிதைகள் குறித்து எழுதியதற்காக மட்டுமல்ல. தமிழ்க் கவிதை குறித்து தொடர்ந்து சிந்தித்தும் எழுதியும் வரும் ஒருவர் என்கிற ரீதியிலும் அவருக்கு அந்தப் புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டது
- “பழைய யானைக்கடை” ஓர் ஆய்வு நூல். உழைப்பைக் கோரும் விசயம். அதை எழுதிய அனுபவம்?
நீண்ட நெடிய தமிழ் இலக்கியப் பரப்பில் விளையாட்டு எப்படித் தொழில்பட்டிருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டேன். கவிதையில் விளையாடியவன் என்கிற அடிப்படையில் நமக்கு முன்பு யார் விளையாடியிருக்கிறார்கள் என்பதைப் போய்ப் பார்க்க ஆசைப்பட்டேன். அதை ஒரு சின்னக் கட்டுரையாக எழுதிப்பார்த்தேன். பிறகு அது தனி நூலாக ஆனது. சங்க இலக்கியம் துவங்கி நவீனகவிதை வரை கவிதையின் விளையாட்டைத் தோராயமாகத் தொட்டுப் பார்க்க முடிந்தது. அந்தப் பயணம் இரண்டு ஆண்டுகள் நீடித்தது. அதையொட்டி நிறைய வாசிக்க வாய்த்தது. கலித்தொகையிலும், நந்திக் கலம்பகத்திலும் விளையாட்டைக் கண்டடைந்த கணங்கள் இன்னும் துல்லியமாக நினைவில் இருக்கின்றன. ஆய்வும் கவிதை போல ஒரு போதைதான் என்று அப்போது தோன்றியது.
- அவ்வையைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் அது எந்த அளவில் இருக்கிறது?
ஆய்வுக் கட்டுரைகள் என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. நான் அதற்கு வைத்திருக்கும் பெயர் “அவ்வையார் கவித்துவத் திரட்டு.” அந்த நூல் நிறையும் தருணத்தில் உள்ளது.
நீலி எனும் பெண் எழுத்து சார்ந்த இணைய இதழுக்காக ஒரு கட்டுரை எழுதப் போய் ஒரு நூலாக வளர்ந்து விட்டது. என் பழந்தமிழ் எழுத்துக்களைப் பொறுத்தவரை நான் அறிஞன் அல்ல என்பது எனக்கு ஒரு வசதியாக உள்ளது. நானே தடவித் தடவித்தான் கண்டடைய வேண்டியிருக்கிறது. அந்தத் தடவுதலில் எது சிக்கல் என்பது ஓரளவு விளங்கி விடுகிறது. அந்தச் சிக்கலிலிருந்து என் வாசகனைக் காக்க முடிகிறது.
- ஏதோ ‘காதல் விபத்து’ என்று சொன்னீர்களே? அது குறித்துச் சொல்ல முடியுமா?
உங்கள் கேள்விகள் சிறப்பாக இருந்தன . நன்றி ! வணக்கம்!


Leave a comment