குணா கவிதைகள் ஐந்து

1. உண்மை

இப்படி இருந்து பார்த்ததில்லை
அடுத்தவர்
நினைப்புக்குள் வெந்து போகிறவள்.

என்ன நடக்கிறது
மனதோட்டத்திற்கு ஈடுதராத
சுற்றத்திற்குள் மடியாயிருந்தாயே
இன்று அதைவிடவும் 
மோசமானதாய் இருப்பு.

எப்பொழுதும் மூலையில் 
அடித்துக் கொண்டிருப்பவள்
இறந்தால்
மொழி மட்டுமல்ல
இயக்கமும் மௌனமாகும்.

எதிலேயும் அறை
அதிலேயும் குறையாகவா?

ஏன் இப்படி
தானாக ஓயும்வரை அன்றி
நீயாக நிறுத்தாதே எதையும்.

2.மரணம்

பல நாள்கள் சென்றிருக்கும்
என்ன செய்து கொண்டிருந்தேன்
என்னில் விழித்திருந்ததை
உணர முயல்கிறேன்

நிகழ்வை மறந்த நினைவுகள்
நெஞ்சை அழுத்துகின்றன.

நீட்டி மகிழ்ந்த கைகள்
புறம்பேசின எதிரில்

என்ன கம்பீரம் என்ன கர்வம்
தேய்ந்து போனது தேகம் மட்டுமே

நினைப்பதை
இறக்கும்வரை செய்தாய்

எங்களைத்தேடி
அலுத்து நிலைத்துவிட்ட கண்கள்

என்கையில் நெகிழ்ந்தபோது
நீதான் பார்த்துக் கொள்ளவேண்டும்
தொடரொலிகளில்
நின்று பார்க்க மட்டுமே முடிந்தது

பாதங்களின் பதிவுகள் மறைந்தாலும்
தடங்களில் இன்றும் நான்.

3. எதுவரை

எனக்கும் அவளுக்கும்
பிடித்தமே இல்லை.

புரிந்து கொள்ளாததும்
பொறுத்துப் போகாததுமே
காரணங்களா

சாயலில் என்ன இருக்கிறது
என் செயல்கள்
மறுக்கப்படுவதால்
விலகிச் செல்கிறேன்.

ஓர் அறைதான்
என் பொருள்கள் தனித்திருக்கும்
அவற்றுடனேயே உலவுகிறேன்.

உறவுகளின் மத்தியில்
நான் உயிருள்ளவை
கவலைப்படுவதில்லை.

என்னையும் அவற்றையும் பிரிக்கும்
எவர் பதிவையும்
அனுமதிப்பதில்லை.

அய்ந்தையும் ஒடுக்கி
ஆறாவதில் சிறக்க
அவர்களால் எப்படி முடிகிறது
என்னின் இச்சுருக்கம்
அவமானமாக இருக்கின்றது
எதுவரை….

குறுங்கவிதை 1.

மஞ்சள் மலர்கள்
இழந்துவிட்ட காய்களுக்காய்
அஞ்சலி செலுத்துகின்றன
மரங்களின் அடியில்.

குறுங்கவிதை 2

மூச்சுத் திணறுகின்றன
சாலையோர மரங்கள்
வாகன நெரிசல்

குணா

Leave a comment

Trending