சங்க காலச் சமூகத்தில் நீதியியல் நடைமுறைகள்

முனைவர் ப. குணசுந்தரி,
உதவிப்பேராசிரியர், தமிழ்,
தொலைமுறைக் கல்விக்கூடம்,
பாரதியார் பல்கலைக்கழகம். கோயம்புத்தூர்-641 046.

அறிமுகம்

என்றைக்கு மனிதன் தனக்கென்று பொருளை எடுத்து வைக்கத் தொடங்கினானோ அன்றே சுயநலம் அவனுள் வேர்விடத் தொடங்கி விட்டது. அதன் விளைவு பொய், களவு, வஞ்சனை, சூது, கொலை போன்ற அனைத்து விதமான தீமைகளும் அவனிடத்து வந்து ஒட்டிக் கொண்டன. விரும்பினும் விரும்பாவிடினும் ஒவ்வொருவரும் தான் சார்ந்திருக்கிற மனிதர்களோடும் சமூகத்தோடும் உயிர்களோடும் உலகத்தோடும் ஏதாவதொரு உறவில் இணைந்திருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதனால்தான் தனி மனித நடத்தையில் ஏற்படும் மாற்றம் அவன் சார்ந்திருக்கின்ற சமூகத்தையும் பாதிப்பதாக இருக்கின்றது.

இது கருதியே முன்னோர்கள் அன்பின் வழியது உயிர் நிலை என்று அறிவுறுத்தியதோடு மட்டுமல்லாமல் மனிதன் தம் வாழ்வில் கடைபிடித்து ஒழுக வேண்டிய நியதிகளையும் வகுத்தனர். இந்நியதிகள் சமூக வளர்ச்சிப் போக்கில் பல மாற்றங்களைப் பெற்றன. காரணம் ஒரு காலத்தில் ஒரு சமூகத்தில் ஒழுக்கமாகக் கருதப்பட்ட மனித நடத்தை பின்வந்த கால கட்டங்களில் ஒழுக்கத்திற்கு மாறானதாகத் தண்டனைக்குரிய குற்றமாக அல்லது தண்டிப்பதற்கு ஏதுவான குற்றம் நிகழ்வதற்கான காரணியாக இனங் காணப்பட்டது. தண்டனைகளும் வழங்கப்பட்டன.

மேற்குறித்த சூழல் உலகம் முழுமையிலும் வாழும் மனிதச் சமுகத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்தது. என்றாலும் உலகநாகரீகத்தில் பண்பாட்டில் மொழிக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்து முறை பிறழாமை பெரியதோர் பண்பாடாகப் போற்றப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் மக்களால் விரும்பத்தகாததாக இருந்த நடத்தைகள் எவை? எவ்வெவ் நடத்தைகள் குற்றமாகக் கருதப்பட்டன. அவற்றிற்குத் தண்டனை வழங்கப்பட்டதா? இல்லையா? வழங்கப்பட்ட தண்டனைகள் குறித்த பதிவுகள் ஏதேனும் உள்ளனவா? என்பன போன்று நீதி வழங்கப்பட்டதில் எழும் வினாக்களுக்கான விளக்கம் தேடுகிற முயற்சியாக இக்கட்டுரை அமைகிறது.

பரத்தமை கடிதல்

தலைவனுடன் தலைவி ஊடுதலுக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் பரத்தமையும் ஒன்று நீதி இலக்கியங்கள் கடிந்து கூறும் ஒழுக்கக் கேட்டினுள் ஒன்றாக இருக்கும் இப்பரத்தமையால் தான் இற்றைச் சமூகமும் சீர்குலைந்து வருகின்றது. சமூகப் பாதுகாப்பிற்கு இறையாண்மைக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது. இத்தன்மை உடைய ஒழுக்கம் சங்கச் சமூகத்திலும் இழிவானதாகவே கருதப்பட்டிருந்தது என்பதைச் சோழன் நலங்கிள்ளி கூற்றிலிருந்து அறியலாம்.

தம்மை இகழ்ந்த பகையரசரைப் போரில் வென்று தம் வெஞ்சினத்தை நிறைவேற்ற முடியாமல் போனால் தாம் எத்தகைய இழிநிலையை அடைவேன் என்பதைக் கூறவரும் இம்மன்னன்

…………………..பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே
(புறநானூறு பாடல்.73 11-14)

என்கிறான். அதாவது, எந்த ஓர் ஆடவன்மீதும் உண்மையான அன்புடன் காதல் கொள்ளாமல் அவனிடம் இருக்கும்  பொருளையே பெரிதாகக் கருதுகின்ற பொது மகளிரிடையே என் மார்பில் அணிந்துள்ள மாலை குழைவதாகுக என்று வஞ்சினம் கூறுவதிலிருந்து  பரத்தையரைச் சேர்வது இழிவானது எனும் கருத்து உணர்த்தப்படுவதை அறியமுடிகிறது. அப்படி இருந்தும் ஒப்பமுடிந்த மனை வாழ்க்கை என்று பெருமை பேசப்படும் இல்லறத்தில் தலைவன் வேறு பெண்ணைத் தேடிச் செல்வதைச் சங்கச் சமூகம் ஏன் அனுமதித்தது. பரத்தை தானே உருவாகிறாளா? அல்லது உருவாக்கப்படுகிறாளா? அவ்வொழுக்கமுடையாரைச் சமூகம் எவ்வாறு மதித்தது?

பரத்தமை இழிவு என்று இழிநிலை குறித்திருக்கிறார்களே தவிர அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டதா? நீதியுரைத்த ஆன்றோரின் கருத்து என்னவாக இருந்தது என்பதெல்லாம் தொடர் ஆய்விற்கு உரியன காரணம் எதுவாக இருப்பினும் இவ்வொழுக்கத்தைப் பெண்கள் அக்காலத்தில் போற்றவில்லை என்பதைப் பாடல்கள் உணர்த்துகின்றன.

பரத்தையர் சேரிக்குச் சென்று இல்லம் திரும்பும் தலைவன், தலைவியை நோக்கி குறையில்லாத கற்புடையவளே என் மகனின் தாயே என்று புகழ்ந்து கூறும் போது தலைவிக்குக் கோபம் வருகிறது. ஏனென்றால் தலைவன் வேறு பெண்ணைத் தேடிச் சென்றதற்குக் குழந்தை பிறந்த காலமும் காரணம் என்று குறிக்கும் பாடல் பதிவுகள் இருக்கின்றன. அதனால் தலைவன் அதைக்குறித்து பேசுகிறபோது குழந்தை பிறந்து விட்டதாலேயே தான் வயதில் மூத்துவிட்டதாகக் கருதி என்னைப் புகழ்வதாக நினைத்து இகழாதே. அம்முதுமைக்கு நாங்கள் பொருந்துவோம் என்கிறாள் நீர் கூறும் இந்தப் பொய்ம்மொழிகளால் எந்தப் பயனும் இல்லை என்றும் கூறுகிறாள். அப்பாடல்.

மாஅசு இல் கற்பின் புதல்வன் தாய் – என மாயப்பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
முதுமை எள்ளல் அஃது அமையும்தில்ல
…………………………………|
…………………………….. எம்
இளமை சென்று தவத் தொல்லஃதே
இனிமை எவன் செய்வது, பொய்மடமொழிக்கே, எமக்கே?(அகம்.மருதம்.6. 13 – 15, 20 – 22)

வேறொரு பாடலில், உயர்குடியில் பிறந்து கற்பு நிலையில் நிற்கின்ற தலைவி, தலைவன் எவ்வளவு தவறு செய்தாலும் அதனைப் பொறுத்துப் போகும் தன்மையுடையவளாக இருக்க

வேண்டும் அதுதான் கற்புக்குச் சிறப்பு

மறுவரும் சிறுவன் தாயே
தெறுவது அம்ம இத்திணைப் பிறத்தல்லே
(குறுந்.மருதம் 45: 4-5)

இது மற்று எவனோ – தோழி துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி
…………………………………………………………
……………………………………………. ஊரன்
திருமனைப் பல்கடம் பூண்ட
பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே (குறுந். 181 :1-2 & 5-7)

என்று கூறப்பட்டிருந்தாலும் பரத்தையிடம் சென்று வந்தபின் வாயில் வேண்டும் தலைவன் தோழியிடம் பரத்தையை நான் அறியேன் என்று கூறுகிறான். அதற்குத் தோழி

தொண்டி அன்ன என்நலம் தந்து
கொண்டனை சென்மோ மகிழ்ன நின்சூளே (குறுந் 238:4-5)

என்று கூறுவதாக வருகின்றது. அதாவது, நீ கூறியது பொய் என்பது எங்களுக்குத் தெரியும். ஆதலால் தொண்டியின் தன்மையை ஒத்த என் பெண்மையின் நலத்தினை எனக்குத் தந்துவிட்டு நீ கூறிய பொய்ம்மொழிகளைப் பெற்றுச் செல்வாயாக என்ற தலைவியின் கருத்தினைத் தோழி தலைவனிடம் குறிப்பிடுகிறாள். ஏனென்றால் தலைவனுக்குக் காமம் அறிவை மறைத்ததனால் பரத்தையிற் பிரிந்த போது

ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்
ஏதிலார் சுடலை பொலக்
காணாக் கழிப மன்னே…     (குறுந். மருதம் 231: 1-4)

என்று பரத்தையுடன் ஓர் ஊரில் வாழ்ந்த போதும் தன்னைச் சுடலை போல் கருதி பாராதிருந்தவன் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டுமோ? என்கிறாள். மற்றொரு பாடலில் தன் மீது ஊடல் கொண்டிருக்கும் தலைவியிடம் தலைவன் யான் பரத்தையர் யாரையும் அறியேன் என்று கூறுகிறான். அதற்குத் தலைவி உன்னுடன் உறவு கொண்டிருப்பவளைப் பற்றி எனக்குத் தெரியும். எப்படியென்றால் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த மகனிடம் உன் சாயலைக் கண்டு அருகில் யாரும் இல்லை என்று கருதி குழந்தையை அனைத்து மகிழ்ந்தாள். அதைக் கண்ட நான் அவளைச் சென்று அனைத்துக் கொண்டேன் அதோடு நீயும் அவனுக்குத்தாய்தான் என்றும் கூறினேன். நான் அவளை உணர்ந்து கொண்டதை அறிந்து தாம் செய்த களவுக் குற்றத்தை அறிந்தவர் முன்னிலையில் குற்றம் செய்தவர் தலைகுனிந்து நிற்பவரைப்போல நாணி முகம் கவிழ்ந்து நின்றாள் நீயோ அறியேன் என்கிறாயே என்பதாக இப்பாடல் வருகின்றது.

நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்
மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய்
நாவொடு நவிலா நகைபடுதீம் சொல்
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை,
தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே
கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவரும்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணி
பொலங்கலம் சுமந்த பூண்தாங்கு இளமுலை
வருக மாள என்உயிர் எனப்பெரிது உவந்து
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச்செல்லேன்
மாசுஇல் குறுமகள் எவன்பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு என யான் தற்
கரைய வந்து விரைவனென் கவைஇ
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா
நாணி நின்றோள் நிலைகண்டு யானும்
பேணினன் அல்லனோ – மகிழ்ந
(அகம்- மருதம் 16 : 1-17)

இன்னொரு பாடலில், மேற்குறித்த பாடல்களிலிருந்து பரத்தமை இழிவானது. அது தொடர்பாகப் பொய் கூறுவது குற்றம் என்ற கருத்து பெறப்பட்டாலும் தலைவன் சொல்வது பொய் என்று அறிந்தபின் அதனை உறுதிப்படுத்த தலைவி, தலைவியின்வழி தோழி என இருவரும் சரியான விளக்கம் கொடுப்பதாகப் பாடல்கள் உள்ளனவே அன்றி அவ்வொழுக்கம் கடியப்பட்டு ஒறுக்கப்பட்டதான கருத்துப் பதிவு இல்லை. ஆனால் மறைமுகமான கடிதல் மட்டும் இருப்பதை உணரமுடிகிறது. குற்றத்தை அறிந்தவர் முன் குற்றம் செய்தவர் தலைதாழ்ந்து நிற்பது இயல்பு என்பதனைப் பரத்தையின் நிலைவழி மட்டும் காட்டப்படுகிறது. தலைவன் தன் நிலைக்குத் தலைகுனிந்ததாக வரும் பதிவுகள் உண்டா? என்பதை அறிதல் வேண்டும்.

இப்பாடல்களின் மூலம் அக்காலத்தில் பரத்தமை இழிவு என்பதை நேரடியாக அன்றி சரியான விளக்கங்களுடன் மறைமுகமாகக் கடிந்து கூறப்பட்டதனை அறியமுடிகிறது.

தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்து பரத்தையிடம் சென்றதனால் வருத்தமுற்ற தலைவி தான் கிடைப்பதற்கு அரியளாக இருந்த காலத்தில் தேனாக இனித்தேன். இன்று புளிப்புச் சுவையுடையவளாக ஆனேன். இந்நிலையில் உன்னுடன் மகிழ்ச்சியாய் வாழ்வது எங்ஙனம் சாத்தியம் எனும் பொருளில் என்னை என் பிறந்த வீட்டிற்கே கொண்டுவிடு என்று கூறுகிறாள். இது தலைவியின் கருத்தாக தோழி மூலம் கூறப்படுகிறது.

நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
துணிந்தனை ஆயின் எம்இல் உய்த்தக் கொடுமோ
அம்தண் பொய்கை எந்தை எம்ஊர்க்
கடும்பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே?
(குறுந். மருதம்பாடல் 354)

இதிலிருந்து இத்தகையவனோடு வாழ்வதைக் காட்டிலும் தந்தை இல்லத்திற்குச் சென்று விடுவதுமேல் என்று கருதுகிறாள். இப்படிக் கூறிய தலைவியைத் தலைவன் அவள் வீட்டிற்கே அனுப்பினானா? இல்லையா? என்ன நடந்தது? என்பது பற்றிய பதிவுகள் எல்லாம் இல்லை.

பொய்ச்சூள் கடிதல்

எண்ணமும் சொல்லும் நேராய் இருப்பது வாக்கு என்று சொல்லப்படுகிறது. இவ்வாக்கினைச் சங்க இலக்கியப் பாடல்கள் சூள் என்று பதிவு செய்துள்ளன. சூள் அல்லது சூளுரைத்தல் அகப்பாடல்களில் பெரும்பாலும் தலைவன் தலைவியிடம் கொடுத்த உறுதியினைச் சுட்டிக்காட்ட வருகின்றது. இச்சொல் கட்டுரையில் வாக்கு, உறுதி, சூள் என மூன்று நிலையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொய் மனிதனிடம் தோன்றிய முதல் வித்து இதிலிருந்து குற்றம் தழைத்து ஊன்றி ஆலமரமாய் இன்று கிளைபரப்பிக் கொண்டிருக்கிறது. களவுக்காலத்தில் தலைவன், தலைவிக்குத் தன் அன்பில் நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காக உன்னை என்றும் பிரியமாட்டேன் என்று உறுதி கூறுகிறான். ஆனால் அவன் கூறியது போன்று வாக்கினைக் காக்கத் தவறும் நிலையில் வாக்குப் பொய்த்துப் போகிற சூழலில் தலைவி பாதிக்கப்படுவதைப் பாடல்கள் பதிவு செய்துள்ளன. தான் துன்பத்திற்கு ஆளாகிற சூழலிலும் தலைவன் மீது நம்பிக்கையை இழக்காமல் தலைவனின் வரவை எதிர்நோக்கும் பாடல்களும் உள்ளன.

குறுந்தொகையில் தலைவி ஒருத்தியிடம் தலைவன், அவள் தோள்களைத் தழுவி தன் நெஞ்சைச் சாட்சியாக வைத்து நின்னைப் பிரியமாட்டேன். விரைவில் வரைந்து கொள்வேன் என்று கூறிச் சென்றவன் வரக் காலமாகிறது. தலைவி உடல் மெலிந்து வருந்துகிறாள் தலைவியின் வருத்தம் கண்டு தோழி கலங்க தோழியிடம் தலைவி தலைவன் வாக்கு மாற மாட்டான் எனக்கு ஒன்றும் ஆகாது என்று கூறுகிறாள்.

………………………………………………………………………குன்ற நாடன்
நெஞ்சு களனாக நீயலென் யான் என
நற்றோள் மணந்த ஞான்றை மற்று – அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது
நோயோ தோழி நின்வயினானே  
(குறுந். குறிஞ்சி பாடல் 36 26)

இப்பாடல் தலைவிக்குத் தலைவன் மீதுள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. தலைவி நம்பிக்கையழிந்து வருந்துவதோடு சூளுரை பொய்த்ததனால் தலைவனுக்கு துன்பம் வருமோ என அஞ்சுகிற பாடல்களும் உள்ளன.

மருத நிலத்தலைவன் ஒருவன் களவில் தலைவியின் ஊரிலுள்ள வெறியாட்டுக் களத்தினை ஒத்த மணற்பரப்பினை உடைய நீர்த்துறையில் சந்திக்கும் போது அங்குள்ள கடவுளை சாட்சியாக்கி தலைவியின் கைகளைப் பற்றி விரைவில் மணந்து கொள்வேன் என்று சூளுரைக்கிறான். சென்றவன் காலம் நீட்டிக்கிற சூழலில் வருந்தும் தலைவி இறைவன் முன் சூளுரைத்ததால் அவனுக்கு இறைவனால் ஏதேனும் துன்பம் நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுகிறாள்.

எம் அணங்கினவே – மகிழ்ந
. . . . . எம் ஊர் வியன் துறை
நேர் இறை முன்கை பற்றி
சூரர மகளிரோடு உற்ற சூளே     
(குறுந் மருதம் பாடல் 53:1 & 5-7)

சங்கப்பாடல்களில் தலைவன் வாக்கு பொய்த்தால் தனக்கு ஏதேனும் துன்பம் நேருமோ என்று அஞ்சியது போன்ற பாடல்கள் உள்ளனவா என ஆராய்தல் வேண்டும்.

குறிஞ்சி நிலத்தலைவி ஒருத்தி சூளுரைத்துச் சென்ற தலைவன் வரக் காலம் நீட்டிக்கும் சூழலில் மேனி பசந்து தோள் மெலிகிறாள் தன் மெலிவிற்குக் காரணம் தலைவன் என்பதை அறிந்திருந்தும் அவன் அல்ல அவ்வுறுப்புகள் தானாகவே மெலிந்தன. ஆகையினால் தலைவனுக்கு எவ்விதத் துன்பத்தையுமே ஏற்படுத்தி விடாதே எனக் கடவுளை வேண்டுவதாக இப்பாடல் வருகின்றது.

மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே
(குறுந். 87)

இப்பாடலில் ஊர் மன்றத்தில் உள்ள கடம்ப மரத்தில் உறைகின்ற அச்சம் தரக்கூடிய பழமையான கடவுள் கொடுமை செய்வாரைத் துன்புறுத்தும் தன்மை உடையது என்று கூறுவதனை நம்புவதால் அவ்இறைவன் முன்பு சூளுரைத்துச் சென்ற தலைவனுக்குத் தீங்கு வரக்கூடாது என்று வேண்டுகிறாள். இதிலிருந்து நீதி வழங்கும் அல்லது தண்டிக்கும் தன்மையுடைய கடவுள் ஊர் மன்றத்தில் இருந்ததாகச் சொல்லப்படுவதில் இருந்து நீதி வழங்கியோரும் ஊர் மன்றத்தில் இருந்தே நீதி வழங்கினர் என்பதும் அறியத்தக்கது சங்கப்பாடல்களில் தீங்கு நேர்ந்ததைக் குறிக்கும் அல்லது தண்டனை வழங்கப்பட்டது போன்ற பதிவுகள் உள்ளனவா என்பது ஆய்விற்குரியது வேறொரு பாடலில் தலைவன் வரைவு நீட்டிக்க தலைவியின் உடல் அச்சத்தால் நடுங்குகிறது. அந்நிலை இது போன்று இருக்கிறது என்றால்

புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
(குறுந். 105: 1-4)

அதாவது தலைவன் மலை நாட்டிலுள்ள குறவர்கள் கதிர் விளைச்சல் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மலைகளில் தங்கியிருக்கின்ற கடவுளர்களுக்கென சில கதிர்களை விட்டு வைப்பர். தெய்வத்திற்குப் படைக்கப்பட்ட தினைக் கதிரை தான் உண்ணுதல் தகாது குற்றம் என்ற அறிவின்றி கண்ணுக்கு இனிய அதன் செழுமை கண்டு மயில் உண்டது. பின்னர் உண்மை அறிந்ததும் வெறியுற்ற மகள் ஆடுவது போல மயில் நடுங்குவதைப் போன்றிருந்தது என்றும் தொடர்ந்து

சூர் மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணோட நினைப்பு ஆகின்றே (குறுந். 105: 5-6)

என்பதிலிருந்து இத்தகைய தெய்வங்கள் உறையும் மலை நாட்டை உடையவனது நட்பு நீர் மிக்க கண்களால் அயலவர் பலராலும் நினைப்பதற்குக் காரணமாயிற்று என்கிறாள்.

ஆடு. மாடு கோழி முதலிய உயிரினங்களிலும் அதன் பெருக்கம் வேண்டியும் வளர்ப்போர் குடும்பத்தின் நன்மை கருதியும் உயிர்களை நேர்ந்துவிடுகிற மரபு இன்றும் நம்மிடையே உள்ளது. அப்படி இறைவனுக்கென நேர்ந்துவிடப்பட்ட பொருட்களுக்கு அல்லது உயிர்களுக்குத் துன்பம் செய்தால் இறைவன் தண்டனை கொடுப்பார் என்ற அச்சமும் மக்களிடையே அன்று தொட்டே நிலவி வருகிறது. இதன் அடிப்படையில்தான் தினைப்புனத்தில் இறைவனுக்கென நேர்ந்து விடப்பட்ட கதிர்களை மயில் தெரியாமல் உண்டதாக இருந்தாலும் அது களவு, குற்றம் என்பதுடன் தொடர்புப்படுத்தியதனாலேயே மயிலின் உடல் நடுங்கிற்று எனத் தலைவி கூறுவதாக வருகின்றது. இதன் மூலம் தலைவி மயிலாகவும் தலைவன் உயர்ந்திருக்கிற கடவுளாகவும் காட்டப்படுவதை அறியலாம். இங்குத் தலைவி அவனுக்கும் தனக்கும் உள்ள நட்பில் தலைவன் பொருளாதார அடிப்படையில் மேலோங்கியவனாக இருப்பதையும் தன்நிலை அப்படி இல்லாமல் தாழ்ந்தும் இருப்பது போன்ற கருத்தையும் கோடிட்டுக் காட்டுகிறாள்.

தலைவனும் தலைவியும் ஒருவரோடு ஒருவர் நட்பு கொள்ளும்போது ஒத்த அன்புடையவராக இருக்கின்றனர். அந்நிலையில் கருத்தில்படாத பொருளாதாரம் தலைவன் திருமணத்தை நீட்டிக்கும்போது தெரிகிறது. இந்த அவநம்பிக்கை ஒரு வகையில் தலைவன் மீது சார்த்திச் சொல்லாமல் அவனுடைய வளமையின் மீது சார்த்தி சொல்லப்பட்டிருப்பதால் பொருளாதார ஏற்றத்தாழ்வு அன்றைய வாழ்வில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியதோ என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் சங்கப்பாடல்களில் பரதவப் பெண்ணொருத்தி தலைவனிடம் உன்னைப் போலவே என்னைச் சார்ந்தவர்களும் வளமை உடையவர்கள் என்று பொருளாதாரம் பற்றி பேசுவதிலிருந்தும் அறியலாம்.

செவ்விலக்கியம் முழுமையையும் நுட்பமாக ஆராய்ந்தால் பொருளாதார ஏற்றத்தாழ்வு சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றத்தையும் பண்டைய சமூகத்தில் நிலவிய நீதியியல் நடைமுறையின் அடிப்படையையும் புரிந்துகொள்ளலாம். ஏனென்றால் குற்றம் நடை பெறுவதற்கான காரணங்களுள் முதன்மையாக இருப்பவை உளவியல் காரணங்களும் பொருளாதாரக் காரணங்களும் ஆகும். இவ்விரு காரணிகளையும் உணர்ந்து குற்றம் நடவாத சூழலை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? என்பதைச் செவ்விலக்கியம் முழுமையையும் ஆராய்ந்தால் வெளிப்படும்.

குற்றமும் தண்டனையும்

குற்றம் என்ற ஒன்றைப் பற்றி மட்டும் விவாதிக்க ஆரம்பித்தால் போதும் மனித குலத்தின் பரிணாமத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம் என்பார் ஜெயமோகன். (குற்றமும் தண்டனையும், ஜூலை.17, 2008) ஏனென்றால் ஒரு தனிமனித மனசாட்சியில் பிரச்சனையாக தொடங்கி சமூகத்தினரை உணர்வைப் பாதிக்கும் மிகப் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வல்ல ஆற்றல் வாய்ந்ததாக குற்றம் இருக்கிறது. அதனால்தான் மகாபாரதம் தர்மத்தை நன்றாக நிலை நிறுத்துவதே தண்டனையின் நோக்கம் என்கின்றது.

இவ்வுலகில் குற்றத்திற்குத் தண்டனை உண்டு என்ற நியதி இல்லாவிட்டால் ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொள்வர் தண்டனையானது குற்றத்திற்கு ஏற்றவாறு அமைய வேண்டும் என்பார் டி.ஆர். குப்புசாமி (ammandharsanam.com, magazine, deepawali 2013,page.022) திணை மரபு சார்ந்த தமிழ்ச் சமூக வரலாற்றில் நிகழ்ந்த குற்றங்கள் எவ்வகையின என்றும் அவற்றுக்கு அளிக்கப்பட்ட எடுத்துக்காட்டுகிறது. தண்டனைகள் குறித்த விளக்கத்தையும் இப்பகுதி

அச்சுறுத்துதல் குற்றம்

ஒரு பெண்ணின் தன்மைக்குச் சிதைவை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டுச் செயல்படும் எந்த ஒரு செயலும் அச்சுறுத்தலாகும். இது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 354-இன் படி அபராதம் மற்றும் சிறை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.

சங்கச் சமூகத்தில் தலையை விரும்பும் குறிஞ்சி நிலத்தலைவன் அவள் மீதான அன்பு மேலீட்டினால் சந்திக்க தவி செய்யுமாறு தோழியிடம் வேண்டுகிறான். தோழியோ மறுக்கிறாள். இச்சூழலில் இழிவைத் தரக்கூடிய மடல் ஏறி மடலேறி தலைவியைப் பெறுவேன். இல்லை என்றால் இறப்பேன் என்று தலைவன் கூறுகிறான்.

மாவென மடலும் ஊர்ப, பூ எனக்
குவி முகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமம் காழ்க் கொளினே. (குறுந். 17)

இதில் காமம் பெருமை பாராது என்பது போல தலைவன் காமம் என்ற நோய் மரத்தின் விதையை உட் கொண்டுள்ளேன். இதற்கு மருந்து நின் தோழியின் தோள் நலன் உண்டலே. அது கிடைத்திலது ஆயின் சாவேன் என்று கூறுகிறான். வேறொரு பாடலில் தலைவன் தோழியிடம் தலைவியைப் பெறுவதற்கு உதவாவிடில் தலைவிக்கும் அவள் குடும்பத்திற்கும் இழிவை உண்டாக்கும் மடலினை ஏறுவேன். இது எனக்கும் பழியை ஏற்படுத்தும். என்றாலும் நாணமற்ற செயலைச் செய்தேன் என்று கூறுகிறான்.

பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பல் நூல் மாலைப் பனைப் படு கலி மாப்
பூண் மணி கறங்க ஏறி, நாண் அட்டு,
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப
‘இன்னள் செய்தது இது’ என, முன் நின்று
அவள் பழி நுவலும், இவ் ஊர்;
ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளேனே.
(குறுந்: 173)

என்றும்

மாஎன மடலொடுமறுகில்தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே   
(குறுந் பாடல் 32 – 4-6)

மேற்குறித்த பாடல்களில் தலைவன் அச்சுறுத்துவதோடு அல்லாமல் மடல் ஏறி தான் விரும்பியது போலவே தலைவியைப் பெற்றான் என்று வருகிறது. ஏனென்றால் அப்படி பலரும் அறிய அவன் மடலூர்ந்து வருவதனால் ஏற்பட்ட பழியைப் போக்க தலைவியின் பெற்றோர்கள் தலைவியை அவனுக்கே மணமுடித்து வைத்ததாகவும் திருமணத்திற்குப் பிறகு தலைவன் மடலூர்ந்ததால் முன்பு ஊரில் ஏற்பட்ட பழி மறைந்துபோனதாகவும் பதிவு இருக்கின்றது. மாறாக அவனின் இந்த இழிசெயலுக்குத் தண்டனை அளிக்கப்பட்டதாகவோ எண்ணம் நிறைவேறாமல் உயிர் போக்கிக்கொண்டதாகவோ அல்லது பழியினால் தலைவி உயிர்துறந்ததாகவோ பதிவுகள் இல்லை. ஆனால் பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகப் பதிவுகள் உள்ளன.

வஞ்சித்தல் குற்றம்

நம்பும் ஒருவருக்கு அறிந்தே செய்யப்படும் துன்பம் வஞ்சனையாகும். களவொழுக்கத்தில் ஈடுபடும் தலைவன் உன்னை ஒருபோதும் பிரியமாட்டேன் விரைவில் திருமணம் செய்வேன் என்று கூறியே தலைவியின் நலன்களைக் கவருகிறான். அவன் தான் கூறியதனைப் போற்றாது காலம் தாழ்த்துகிற நிலையில் பெண்ணிடம் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளைக் கொண்டு ஊரவர் இழிவாகப் பேசுகிறபாடல்கள் உள்ளன. இதில் தலைவன் காலம் நீட்டித்தாலும் இருவருக்குமிடையே உள்ள அனடபு உண்மையானதாக இருப்பதனால் தலைவனுக்கு என்ன நேர்ந்ததோ என்று தலைவி வருந்தும் வருத்தமே இப்பாடல்களில் தொனிக்கும். இதுவல்லாது அன்பே பொய்த்துப்போனதோ என்ற வருந்தும் பாடல்களும் உள்ளன. இத்தகைய பாடல்கள் ஒருசிலவே ஆயினும் அக்காலத்தில் நிலவிய சமூக ஒழுங்கை அறிவதற்கு இவை உதவியாக இருக்கின்றன என்பது உண்மையே.

குறிஞ்சித்திணையில் தலைவி ஒருத்தி நீர்ர்துறையில் தலைவனோடு களவொழுக்கத்தில் ஈடுபடுகிறாள். தலைவியின் நலத்தைப் பிறர் அறியாமல் கவர்ந்த தலைவன் வரையாது காலம் தாழ்த்த, தலைவி வருந்துகிறாள் அவளின் வேறுபாடு கண்டு வினவும் தோழிக்குத் தலைவி எங்கள் உறவினை அறிந்தவர்கள் யாருமில்லை. பிறர் அறியாதவாறு என் நலத்தினைக் கவர்ந்த அக்கள்வனே அறிவான். ஒருவேளை அவன் அறியேன் என்று கூறினால் நான் என்ன செய்வேன். அவன் என்னோடு நட்பு கொண்டமையை அறிந்த சாட்சியாக மனிதர்கள் ஒருவரும் இல்லை. ஆரலைப் பார்த்துக் கொண்டிருந்த குருகு ஒன்று இருந்தது. ஆனால் அது சாட்சிக்கு வராது அதனால் அவன் என் உறவை மறுத்தால் நான் இறந்து போவேன் என்று கூறுவதாகப் பாடல் உள்ளது.

‘யாரும் இல்லை; தானே கள்வன்;
தானது பொய்ப்பின், யானெவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!” (குறுந் பாடல் 25)

மற்றொரு பாடலில் தலைவியின் வேறுபாடு கண்டு தாய் காரணத்தைக் கட்டுவிச்சியிடம் கேட்கிறாள். கட்டுவிச்சி தலைவிக்கு இந்நோய் தெய்வத்தால் வந்தது என்று கூற தொழி அவ்விடத்தில் இதற்குக் காரணமானவனைக் குட்டியோடு இருந்த கடுவன் மட்டுமல்ல நானும் அறிவேன் அறியேன் என்று உரைக்க இயலாது என்று கூறுவதாக இப்பாடல் வருகின்றது.

அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்
தகாஅன் போலத் தான்றீது மொழியினும்
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்
வரையாடு வன்பறழ்த் தந்தைக்
கடுவனு மறியுமக் கொடியோ னையே.    (குறுந். பாடல் 26)

முதல் பாடலில் தலைவனுடனான தன்னுடைய நட்பை அறிந்ததில் சாட்சியாக இருப்பது குருகு என்றும் அடுத்த பாடலில் குட்டிகளையுடைய கடுவன் மட்டுமல்ல நானும் அறிந்திருக்கிறேன் என்ற கருத்துப்பட தோழி கூறுவதாக வருகின்றது.

மேற்குறித்த பாடல்களிலிருந்து தலைவன் தலைவியரிடையே ஏற்படும் உறவில் அன்பில் பொய்மை புகத் தொடங்கியதனை அறியமுடிகிறது இப்பொய்மை கலப்பு அன்பில் எப்பொழுது கலந்தது என்பதை அறியமுடியவில்லை. செவ்விலக்கியப் பதிவுகள் அனைத்தையும் ஆராய்ந்தால் விடை கிடைக்கக்கூடும். மேலும் இப்பொய்மை தலைவனிடத்து ஏற்பட்டிருந்தமையையே இப்பாடல்கள் காட்டுகின்றன. உறவில் ஏற்படும் இப்பொய்யின் முடிவு இறப்பு என்பதாகக் காட்டப்படுகிறது. மேலும் பொய் என்பதனை உறுதி செய்ய சாட்சிகள், ஆதாரங்கள் தேவைப்படுகின்றன எனும் அளவில் இவ்வழக்கம் நடைமுறையில் புதிதாக இல்லை, பழக்கப்பட்டு விட்டிருந்தமையை அறிந்து கொள்ள முடிகிறது.

தொடர்ந்து, தன்னை ஏமாற்றிய தலைவனை தலைவி ஊர்ப்பொதுமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்ததாக அகநானூற்றில் வரும் பாடல் இக்கருத்தை மேலும் உறுதி செய்கிறது.

தலைவியைப் பிரிந்து தலைவன் பரத்தையை நாடிச் சென்றதை அறிந்து தலைவி ஊடல் கொள்கிறாள். தலைவியின் ஊடலைத் தீர்க்குமாறு தலைவன் தோழியிடம் வேண்டுகிறான். அப்பொழுது தோழி நீ பரத்தையரோடு புனலாடியபோது எழுந்த ஒலி கள்ளூரின் அவையில் கயவனை ஒறுத்ததினால் எழுந்த ஒலியைக் காட்டிலும் பெரிதாக இருந்தது என்று காரணம் காட்டி மறுக்கிறாள். கள்ளூரில் கயவனை ஒறுக்கக் காரணம் என்ன என்பதை இப்பாடல் சுட்டிக்காட்டுகிறது.

தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்
கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனி லாளன் அறியேன் என்ற
திறனில் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை
வீறுசால் அவையத்(து) ஆர்ப்பினும் பெரிதே
(அகம். 256:14-21)

அதாவது தலைவியிடம் உறுதி பல கூறி அவள் நலத்தைக் கவர்ந்த கயவன் ஒருவன் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதோடு அவளை அறியேன் என்றும் பொய் கூறினான். அதனை அப்பெண் ஆன்றோர் அவையில் முறையிட அவர்கள் சாட்சிகளின் துணைகொண்டு ஆராய்ந்ததில் கயவன் பொய் கூறியது கண்டறியப்பட்டது. அதனால் அவனை மூன்று கவர்த்த கிளைகளின் நடுவே கட்டி வைத்து நீற்றினைத் தலையில் கொட்ட அங்குக் குழுமியிருந்த மக்கள் அனைவரும் தண்டனை தக்கதே என்று ஆரவாரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

தன்னை ஏமாற்றி விடுவானோ என்று பயந்து புலம்பிக் கொண்டிருந்த சூழல் மாறி தவறு செய்தவனைத் தண்டிக்கும் நிலைக்கு சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்ததையே இப்பாடல் உணர்த்துகிறது.

சாபமிடுதலும் தண்டனையும்

ஆற்றாமல் அழுது பதறுகிற நெஞ்சிலிருந்து வரும் வார்த்தைகளே சாபங்களாகின்றன. இச்சாபங்கள் பல வகையானவை. அவற்றுள் பெண் அளிக்கும் சாபம் குலநாசத்திற்கு வழிவகுக்கும் என்பார்கள் சங்கச் சமூகத்தின் அகவாழ்க்கையில் பெண் தன் மகிழ்ச்சிக்கு இடையூறாக இருக்கின்றவர்களுக்குத் தண்டனையாகச் சாபம் கொடுக்கும் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்பதை அறியும் தாய் தலைவியை எங்கும் வெளியேறாவண்ணம் தடுக்கிறாள். தாய் ஏற்படுத்திய காவல் மிகுதியினால் தலைவன் இனிய முறுவலுடன் பகற்பொழுதில் விருந்தினன்போல் வந்த போது பகைப்புலத்திலுள்ள ஊரின் தன்மையினைப் போன்று இரவுப்பொழுதிலும் தூங்காது காத்துக் கொண்டிருக்கின்ற தாய், தன்னுள் புகுந்த பாவியரை எக்காலமும் நீக்காத நரகத்தினை அடைந்த பெண்கொலை புரிந்த நன்னனைப் போல நரகம் அடைவாளாக என்று

சாபம் கொடுக்கிறாள்.


பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தென
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே     
(குறுந். குறிஞ்சி, பாடல் 292: 5- 8)

ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறிச் செல்லமுடியாதபடி ஒரு நபரை முறையற்றுத் தடுப்பதை இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 340-இல் முறையற்றுச் சிறையிடுதல் (Wrongful Confinement) என்று குறிக்கிறது. அதற்குத் தண்டனையாக ஒருமாதம் வரை வெறுங்காவல் அல்லது ஐநூறு ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என்று குறிப்பிடுகிறது.
(இந்தியத் தண்டனைச் சட்டத் தொகுப்பு பக். 39)

தலைவனைத் தலைவி சந்திக்காவண்ணம் சங்கச் சமூகத்தில் தாய் ஏற்படுத்திய காவல் முறையற்றது என்று கூற இயலாது. ஆனால் பெண்ணாகப் பிறந்தவள் தனக்குரிய கணவனைத் தேர்ந்தெடுப்பது என்பது முறையற்ற செயலாகாது என்பதனைக் கலித்தொகையில் உடன்போக்கின்போது வரும் கண்டோர் கூற்றுவழி அறியலாம். ஆகையினால்தான் தாயின் செயல் முறையற்றது என்று கருதிய தலைவி தாய்க்கு நரகம் புகச் சாபம் கொடுக்கிறாள். இது களவுக்காலத்தில் நிகழும் செயலாகும்.

மற்றொரு பாடலில், கற்புக் காலத்தில் பொருள் முற்றி இல்லம் வந்த தலைவனுடன் தலைவி மகிழ்ந்து தூங்குகிறாள். சேவலின் கூக்குரல் விடியலை அறிவிக்கிறது. இரவு புலர்ந்தது கண்டு வருந்தும் தலைவி அதை அறிவித்து எழுப்பிய சேவலின் மீது கோபம் கொண்டு அதற்குச் சாபம் கொடுக்கிறாள்.

குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி,
கடு நவைப் படீஇயரோ, நீயே-நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே!          (குறுந். மருதம் :107)

இப்பாடலில் தலைவி, சேவலானது பெடையை ஒத்த அன்பாலன்றி வலிந்து கொள்ளும் இயல்புடையதாகையால் ஒத்த அன்புடைய எங்களின் மகிழ்ச்சி இதற்குத் தெரியவில்லை. அதனால்தான் கூக்குரல் எழுப்பி மகிழ்ச்சிக்கு இடையூறை ஏற்படுத்தியது. ஆகையினால் தன் குட்டிகளுக்கு உணவாக வீட்டின் எலியைப் பிடிக்கக் காத்துக் கொண்டிருக்கும் வெருகிடம் அகப்பட்டு அதன் குட்டிகளுக்கு நெடுநாள் உணவாக ஆவாய். அதுவே உனக்குக் கிடைக்கக்கூடிய கடுமையான தண்டனை என்கிறாள்.

இருள் புலர்ந்ததை உணர்த்தும் சேவலின் கூக்குரல் அன்றாடம் நடக்கும் இயற்கையின் இயல்பான வழக்கம். இதைத்தலைவி உணராதவள் அல்ல. ஆயினும் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபப்படுவதற்குக் காரணம் தலைவனின் பொருள்வயிற் பிரிவு ஓரிரு நாட்களில் நிகழ்ந்து முடியக் கூடியது அல்ல. ஒருவருட காலம் கணக்குடையது. மேலும் தலைவனின் எண்ணத்திற்கு ஏற்ப நீளக்கூடியதும்தான் எனவேதான் தலைவி நீண்ட நாட்களுக்குப் பிறகு தான் பெற்ற மகிழ்ச்சிக்கு இடையூறாகக் கருதியதால்தான் கடுமையான துன்பத்திற்கு ஆளாவாய் என்று சேவலுக்குச் சாபம் இடுகிறாள்.

மேற்குறித்த பாடல் விளக்கங்களிலிருந்து களவு வாழ்க்கை. கற்பு வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய இன்பத்திற்கு இடையூறு செய்யக்கூடியவர்கள் தாயாக இருந்தாலும் சேவலாக இருந்தாலும் தண்டனை பொதுவாகவே வழங்கப்பட்டிருப்பதனை அறிய முடிகிறது.

கொள்ளையடித்தல் குற்றம்
ஐந்து பேர் அல்லது அதற்குமேற்பட்டவர்கள் ஒன்று கூடிக் கொள்ளையடிக்கும் போது அந்தக் கொள்ளையைக் கூட்டுக் கொள்ளை என்று இந்திய தண்டனைச் சட்டத் தொகுப்புப் பிரிவு – 391 குறிப்பிடுகிறது. இச்செயலைச் செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களுக்குப் பத்தாண்டுகள் வரையில் கடுங்காவலும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் சூரிய உதயத்திற்கு முன்னும் கொள்ளை நடைபெற்றிருந்தால் 14 ஆண்டுகள் வரையில் தண்டனை நீட்டிக்கப்படலாம் (இந்திய தண்டனைச் சட்டத் தொகுப்பு பிரிவு 391, பக். 52) என்றும் வரையறுக்கப் பட்டுள்ளது.

பண்டைத் தமிழ்ச்சமூகத்திலும் பிறர் பொருளைக் கவர்ந்து வாழும் இயல்பினை உடைய எயினர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் பாலை நிலத்துவழிச் செல்லும் வழிப்போக்கரிடத்தே பொருள் இல்லையென்றாலும் தங்கள் அம்பு பட்டு பதைப்பதைக் கண்டு மனமகிழ்ச்சியடையும் இயல்பினர். பொருளுடையவராயின் அவர்களின் உயிரைக் கவர்ந்து பொருளைப் பறித்துச் செல்லும் இயல்பினர் என்று எயினர் சமூகத்து வாழ்வை பாலைக்கலி குறிப்பிடுகின்றது.

இவர்களின் இச்செயல் குற்றமுடையதாக இருப்பினும் சங்க இலக்கியத்தில் அவர்தம் வாழ்க்கைக்காகச் செய்யும் வழிப்பறி தொழிலின் இயல்பு எனும் அளவிலேயே விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இது தவறு என்று சுட்டிக் காட்டி தண்டனை அளிக்கப்பட்டதா? என்பது ஆய்விற்குரியது. ஆனால் எயினர்கள் தங்கள் தொழில்முறை சார்ந்து இவர்களின் செயல் குற்றமுடையதாக இருப்பினும் சங்க இலக்கியத்தில் அவர்தம் வாழ்க்கைக்காகச் செய்யும் வழிப்பறி தொழிலின் இயல்பு எனும் அளவிலேயே விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இது தவறு என்று சுட்டிக் காட்டி தண்டணை அளிக்கப்பட்டதா? என்பது ஆய்விற்குரியது. ஆனால் எயினர்கள் தங்கள் தொழில்முறை சார்ந்து தங்களுக்குள் வகுத்துக் கொண்ட முறைகளிலிருந்து தவறியவர்களுக்குத் தண்டனை வழங்கியுள்ளனர். என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது.

வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்
கைப்பொருள் இல்லை ஆயினும் மெய்க்கொண்டு
இன்உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப்
பெருங்களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன்இல் வேந்தன் ஆளும்
வறன்உறு குன்றம் பல விளங்கினவே   
(அகம். பாலை. 109.10-15)

வழிச் செல்வாரிடத்துப் பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உயிரைப் போக்கும் இயல்புடைய எயினர்கள் யாரேனும் வழிப்போக்கரிடம் கருணை காட்டி உயிரைக் கொல்லாதுவிட்டால் அங்கனம் விட்டவர் யாரோ அவர் அத்தவற்றுக்குத் தண்டனையாகப் பெரிய களிற்றின் கொம்போடு புலியின் வரிபொருந்திய தோளையும் அவர்களின் தலைவன் கொடுக்கச் செய்வான் என்று கூறப்படுகிறது. மற்றொரு பாடல்,

கடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்த
கைவிரல் கவ்வும் கல்லாக்காட்சி
கொடுமரம் கவ்வும் கல்லாக் காட்சி
வடிநவில் அம்பின் ஏவல் ஆடவர் (அகம். பாலை. 215.7-10)

இதில் ஏவின தொழிலைச் செய்யும் எயினரின ஆடவர்கள் அம்பு தொடுக்கும்போது குறித்த இலக்கு தவறுமானால் அதற்குத் தண்டனையாக அம்பு தொடுத்த தம் கைவிரலைக் கடித்துக் கொள்ளும் அறியாமை உடையவர்கள் எனக் கூறப்படுகிறது.

மன்னன் முறை பிறழ்தல் குற்றம்

குறுந்தொகை, அகநானூறு பாடல்களிலிருந்து மன்னன் முறை பிறழ்ச்சியைக் கூறும் இரு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. அவை 1. நன்னன் முறை பிறழ்தல் 2. கோசர் முறை பிறழ்தல் என்பன.

நன்னன் முறை பிறழ்தல்
நன்னன் ஏன் கொலை புரிந்தானென்றால் நீராடுவதற்குச் சென்ற கோசர் இனத்துப் பெண் நீரில் அடித்துவரப்பட்ட மாம்பிஞ்சு ஒன்றினைத் தின்கிறாள். அது அரசனுக்குரியது. அதனை அரசனறியாது உண்டது குற்றம். இதை அப்பெண் தெரிந்து செய்யவில்லை. அதனால் அப்பெண்ணை மன்னித்திருக்கலாம். மன்னித்து அவளது பெற்றோர் அப்பெண்ணின் உயிருக்கு ஈடாக அவள் நிறையளவு பொன்னால் செய்யப்பட்ட எண்பத்தொரு களிறுகளைக் கொடுக்க முன்வந்த போது அதனை ஏற்க மறுத்து, நன்னன் அந்தப் பெண்ணைக் கொலை செய்தான். அது அறத்திற்குப் புறம்பான செயலாகக் கருதப்பட்டதனால்தான் வரலாற்றில் பெண்கொலை புரிந்த மன்னன் என்று நன்னன் அழைக்கப்படுகின்றான். அப்பதிவுடைய பாடல் இது.

மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை
புனல்தர பசுங்காய் தின்றதன் தப்பிற்கு
ஒன்பதிற்று – ஒன்பது -களிற்றொடு அவள்நிறை பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல          
(குறுந். குறிஞ்சி, 292.1-5)

இன்னொரு பாடலில்

……………………………………………………………………………………நன்னன்
நறுமா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழி கோசர்போல               (குறுந். குறிஞ்சி, 73.2-4)

என்று வருகிறது. இப்பாடலில் அரச மாவினைக் காரணம் காட்டி நன்னன் தன் இனத்துப் பெண்ணைக் கொன்றதனால், கோசர்கள் சூழ்ச்சி செய்து போரில் அரசமாவினை அழித்ததோடு நன்னனையும் கொல்கின்றனர். இங்கு அரச நீதி உயிருக்கு உயிர் எனும் அளவில் சூழ்ச்சியினால் பிறழ்ந்தது.

கோசர் முறை பிறழ்தல்
வரலாற்றில் கோசர்கள் ‘ஒன்றுமொழி கோசர்’ எனச் சிறப்பிக்கப்படுகிறார்கள். தன் இனத்துப் பெண்ணிற்காக நன்னனைப் பழிவாங்கிய இவர்கள் தம் ஆட்சிக் காலத்தில் அருளின்றி அன்னை மிஞிலி என்பவளின் தந்தையின் கண்களைக் களைந்து ஊனமாக்கினர். தவறை ஒத்துக் கொண்ட போதும் தீங்கிழைத்த கோசர்களைத் திதியன் துணையுடன் அழுந்தூர் எனும் இடத்தில் நடந்த போரில் கொன்று தன் சினத்தை ஆற்றிக் கொண்டாள் என்று அகநானூறு கூறுகின்றது. அறியாது செய்த தவறுக்காக பெண்ணைக் கொன்றதனால் நன்னன் அழிந்தான் கோசர்கள் மிஞிலியின் தந்தைக்கு அறிந்தே செய்த பிழையால் அழிந்தார்கள் என்பது உணர்த்தப்படுகிறது.

மதிப்பீடு

மேற்குறித்த பாடல் விளக்கங்களிலிருந்து சங்கச் சமூகத்தில் மக்களிடையே இருந்த நீதியியல் நடைமுறைகளாக அறியப்பட்டவை,

நடைமுறையில் பரத்தமை போற்றா ஒழுக்கமாக, இழிவானதாகக் கருதப்பட்டாலும் மறைமுகமாகக் கடிந்து கூறப்பட்டுள்ளதே அன்றி ஒறுக்கப்பட்டதாக இல்லை.

பரத்தமை இழிவு என்பதை நேரடியாக அன்றி சரியான விளக்கங்களுடன் மறைமுகமாகக் கடிந்து கூறப்பட்டதனை அறியமுடிகிறது.

இவ்வொழுக்கம் குறித்த பெண்ணின் அதிகபட்ச கோபம் என்பது தன்னை தன் பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிடு என்பதாக இருக்கின்றது.

குற்றத்தை அறிந்தவர் முன் குற்றம் செய்தவர் தலைதாழ்ந்து நிற்பது இயல்பு என்பதனைப் பரத்தையின் நிலைவழி மட்டும் காட்டப்படுகிறது.

சூளுரைத்தல் அகப்பாடல்களில் பெரும்பாலும் தலைவன் தலைவியிடம் கொடுத்த உறுதியினைச் சுட்டிக்காட்ட வருகின்றது.

தலைவன் காலம் நீட்டிக்கும்போது சூள் பொய்த்த காரணத்திற்காக தலைவனுக்குத் துன்பம் வந்துவிடுமோ என்று தலைவி அஞ்சுவதாகப் பாடல்கள் இருக்கின்றன. தலைவன் அஞ்சுவதாகப் பாடல்கள் இருக்கின்றதா? என்பதைத் தேடிப்பார்க்க  வேண்டும்.

சங்கப்பாடல்களில் தீங்கு நேர்ந்ததைக் குறிக்கும் அல்லது தண்டனை வழங்கப்பட்டது போன்ற பதிவுகள் உள்ளனவா என்பதும் ஆய்விற்குரியது.

தலைவன் மடலூர்ந்து விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்த தகவல் உள்ளது. மடலூர்ந்ததனால் தலைவன் தண்டிக்கப்பட்டதாகப் பதிவுகள் இல்லை. பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதும் மன்னன் முறை பிறழ்தல் குற்றம் எனும் தகவலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

துணைநூற்பட்டியல்

  1. புறநானூறு (மூலமும் உரையும்), புத்தகம் – 1, உரை கு.வெ. பாலசுப்பிரமணியன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், ஏப்ரல் – 2004.
  2. குறுந்தொகை (மூலமும் உரையும்), உரை முனைவர் வி. சாகராசன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், ஏப்ரல் – 2004.
  3. ammandharsanam.com, magazine, deepawali 2013
  4. இந்தியத் தண்டனைச் சட்டத் தொகுப்பு, https://police.py.gov.in
  5. குற்றமும் தண்டனையும், ஜூலை.17, 2008, https://www.jeyamohan.in 
  6. அகநானூறு புத்தகம் – 1, உரை முனைவர் இரா.செயபால், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், ஏப்ரல் – 2004.

(சென்னை, குருநானக் கல்லூரியின் தமிழ்த்துறை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தேசிய அளவிலான கருத்தரங்கில் இக்கட்டுரை  வாசிக்கப்பட்டது. நாள் மார்ச் 21,22,23, 2014)

Leave a comment

Trending