சுதந்திரா கவிதைகள்

ஓவியம் : தாரணி

வாழ்வு!


முள் வேலிகளிலும் நகங்களிலும் சிக்கிய நூல்கள்
ஒவ்வொன்றாய்ச் சேலையிலிருந்து விலகுகின்றன..
சிலநேரங்களில் தைக்கும்படியாகவும். . .
பலநேரங்களில் முந்தானையில் மறைக்கும்படியாகவும். . .
இருந்தும், உடுத்துகிறேன்
சமயங்களில் பீரோவில் வைத்துவிடுகிறேன்.
யாரோ கொடுத்தது
எறியும் உரிமை எனக்கில்லை . . .
உங்களுக்கும்!
*****

அந்த ஈர நினைவிலே!!!


கார்கோள் சமுத்திரம் ஊர்பார்க்க வருகையில்
நிழற்குடையின் கீழே நின்று
மழைக்கவிதையை இரசிக்கிறேன்
என்ன நினைத்ததோ
முகத்தோடு உமிழ்ந்துவிட்டுச் செல்கிறது..
நீரோ
அதைச் சாரலென்று சமாளிக்கிறீர்.
****

ஓவியம்: தாரணி

Leave a comment

Trending