மதிப்புரை

நீர்வழிப்படூஉம் : நூல் மதிப்புரை

இ. கலைக்கோவன்

 “உன்னுடைய தாத்தாக்கு தம்பி, அதான் என் சித்தப்பா, ஒருநாள் என் அப்பா குடிபோதைல இருக்கும்போது அவர் கிட்ட வெத்து பத்திரத்துல எல்லாங் கையெழுத்து வாங்கிட்டு நமக்குன்னு இருந்த எல்லா சொத்தையும் சித்தப்பா பெயருக்கு மாத்திக்கிட்டாரு. இந்த விஷயமே உன்  தாத்தா எறந்தப்புறம் ஆச்சி சொல்லித்தான் எனக்குத் தெரியும். இந்த ஒரு வீடுதான் தப்பிச்சது. இது ஆச்சி பேருல இருந்தது. அப்போல்லாம் ஆச்சி இத சொல்லிச் சொல்லிதான் என்ன படிக்க சொல்லுவாங்க. படிப்பு ஒண்ணுதான்டா நம்மள காப்பாத்தும். படிச்சு கவர்மெண்ட் வேலைக்கு போயிருடான்னு சொல்லிட்டே இருப்பாங்க.” என்று சொல்லிக் கொண்டே ஒட்டடையும் புளுதியும் படிந்து கிடந்த எங்கள் பூர்வீக வீட்டிற்குள் என்னை அழைத்துச் சென்றார் என் அப்பா. அப்போது எனக்கு பதிமூன்று வயது இருக்கும். அது ஒரு அழகான மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மலை கிராமம். அந்த வீடு மூன்று அறைகள் கொண்டது. அந்த வீட்டின் அட்டாலியில் தூசி படிந்து குப்பை போல் கிடந்த பொருட்களையெல்லாம் ஒவ்வொன்றாய் ஒதுக்கி அடியிலிருந்து கனமான மரப்பெட்டி ஒன்றினை இழுத்தார் அப்பா. கீழே நின்ற என்னுடைய உதவியோடு அந்தப்பெட்டியை இறக்கி வைத்தார். தூசி துடைத்து அந்தப் பெட்டியை திறந்தார் அப்பா. உள்ளே ஆச்சி தாத்தாவின் பழைய புகைப்படங்கள், சிறு வயதிலேயே இறந்துபோன என் தந்தையின் தம்பியும் என் தந்தையும் இருவரும் நிலாவில் அமர்ந்திருக்கும் சிறுவயது புகைப்படம், பழுப்பேறியிருந்த சில காகிதங்கள், வெண்கல சாமி சிலை ஒன்று என்று இருந்த பொருட்கள் ஒவ்வொன்றாய் எடுத்தார் அப்பா. அதற்குப் பின்னால் இருக்கும் ஒரு தலைமுறை கதைகளை அப்போது கூறத் தொடங்கினார். ஆச்சியின் இறப்பிற்குப் பிறகு அப்பா ஏன் அந்த ஊருக்குப் போகவில்லை. அரசு வேலை கிடைத்த பிறகும் திருமணம் முடிந்த பின்பும் நான் பிறந்த பிறகும் கூட அந்த ஊருக்கோ அதைப்பற்றிய தன் நினைவுகளையோ அதுவரை பெரிதாக பகிர்ந்து கொள்ளாத அப்பா அன்றிலிருந்து நிறைய நினைவுகளை பகிரிந்து கொண்டார். அந்த நினைவுகளில் சொந்தங்களின் ஏமாற்றங்கள், ஊர் சார்ந்த அப்பாவின் ஏக்கம், பழைய நினைவுகள் என்று அத்தனையும் இருந்தன. அதுவரை அப்பாவுக்கும் அந்த ஊருக்குமான தொடர்பு அந்த ஊரில் அப்பாவுடன் படித்து அதே ஊரில் ஆசிரியராக இருக்கும் அப்பாவின் நண்பருக்கும் இடையேயான கடிதப்போக்குவரத்தால்  சாத்தியப்பட்டிருக்கிறது என்பதும் பின்னர் தெரிந்து கொண்டேன். பூர்வீக வீட்டின் சாவி கூட நண்பரிடம் தான் அப்பா கொடுத்து வைத்திருந்தார்.. சிறு வயதில் பல தடவை மண்ணில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அந்த மண்ணை அள்ளி வாயில் போட்டு மெல்லுவேன் என்றும் அது தெரிந்து ஆச்சி என்னை பல தடவை அடித்துள்ளார்கள் என்றும் பழைய நினைவுகளைப் பற்றி பேசும்போது என் தந்தை கூறியதுண்டு. அப்பாவின் மறைவிற்குப் பிறகு அவரின் சாம்பலை நானும் தம்பியும் அவர் சுற்றித்திரிந்த நினைவுகளில் கூறிக்கொண்டிருந்த மணற்பரப்புகளில் தூவி நிறைத்தோம்.

இப்படியான சொந்த ஊரைவிட்டு வெளியேறிய ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை இருக்கும். அது தலைமுறைக்கதை. கதை என்பதை விடவும் தனிமனித வரலாறு என்று கூறுவதே சரி. பஞ்சத்தால், சாதியத்தால், வன்மத்தால், வாழ்வின் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்காக, காதலுக்காக, என்று வாழ்வை சொந்த நிலத்திலிருந்து கொண்டு சென்றவர்களுக்குள் வாழ்நாள் முழுவதும் விட்டு வந்த நிலத்தின் சுமை கனத்துக் கொண்டேதான் இருக்கும்.

இறந்துபோன காருமாமா; செட்டியுடன் ஓடிப்போன அவரது மனைவி ராசம்மா அத்தை. உடையாம்பாளையத்தில் வயதாகி இறந்து கிடக்கிறார் காருமாமா. அவரின் இறப்பிற்கு அந்த கிராமத்தைவிட்டு பல ஊர்களுக்கும் சிதறிப்போன உறவினர்கள் பலரும் வந்துள்ளனர். அப்படி தன் மாமா சாவிற்கு வந்த இளைஞன் ஒருவன் ஒவ்வொரு உறவுகளைப் பற்றியும் அவர்களுடனான நினைவுகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளும் நினைவலைகள்தான் எழுத்தாளர் தேவிபாரதி எழுதிய ‘ நீர்வழிப்படூஉம் ‘ நாவல். வெறும் ஒரு தலைமுறை கதை என்று ஒற்றை வரியில் இதைக் கடந்துவிட முடியாது. இது தலைமுறை வரலாறு. இந்த நாவலில் ஆசிரியர் கதை சொன்ன விதமே புதிது. காருமாமா இறப்பை மையமாக வைத்து கதை முன்னும் பின்னுமாக ஊசல் ஆட்டம் போடுவதுபோல கதையைக் கூறுகிறார். நாவலைப் படிக்கிறபோது நமக்கும் அந்த துக்க வீட்டில் அமர்ந்து கொண்டு இந்த நினைவுகளோடு பயணப்படுகிற உணர்வு ஏற்படுத்துகிறது. இது நாவலுடனான நம் பயணத்தை சுவாரசியமாக்குகிறது.

கதையினை கிராமத்திலுள்ள நாவிதர் சமூகத்தில் நடக்கும் கதையாக நகர்த்துகிறார். ஐம்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து அறுவதுகளின் மையத்தில் கதை அழுந்தி நிற்கும் போது அக்காலகட்டத்தில் பழமையில் ஊறித்திழைக்கும் கொங்குப் பகுதியின் கிராமத்தில் ஒரு நாவித குடும்பம் எப்படிப்பட்ட உறவினை அக்கிராமத்தின் மற்ற சமூகத்தோடு கொண்டிருக்கும் என்பதனை கண்முன்னே விரித்துக் காட்டுகிறார். குறிப்பாக கொங்கு நாவிதர் சமூகம் அக்கிராமத்தின் ஆதிக்கச் சமூகமான கவுண்டர் சமூகத்துடன் எப்படிப்பட்ட உறவினை மேற்கொண்டிருந்தது என்பதை வாசகனுக்கு வெகு எளிதாகக் கடத்துகிறார். ஒவ்வொரு கிராமத்திற்குமான குடிநாவிதர் என்பவர் அந்தக் கிராமத்தில் தன் தொழில் சார்ந்து மட்டுமல்லாது வாழ்வியல் சடங்குகள் சார்ந்தும் அக்கிராமத்தில் எப்படியான உறவுகளை மேற்கொண்டிருந்தனர் என்பதனை நாம் கதையின் வழியாக உணர முடிகிறது. இடைசாதியைச் சேர்ந்த சம்பவங்களைக் கூறும் போது அதிலும் ஆதிக்க சாதியுடன் கூடிய உறவுகளைப் பற்றி பேசுகிற போது சில நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும்.  ஆனால் ஆசிரியர் கதையை நகர்த்திச் செல்லும் தன்மை எந்தவித நெருடலையும் எந்தச் சமூகத்திற்கும் ஏற்படுத்திவிடாதபடி கொண்டு செல்கிறார். இது வலிந்து செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. எதார்த்தத்தைப் படம்பிடித்து காட்டியிருக்கிறார். அந்தக் கிராமதிலிருந்து குடிநாவிதர் குடும்பம் எப்படி தன் உறவை துண்டித்துக் கொண்டது என்பதையும் போகிற போக்கில் சொல்லுகிறது போல கொண்டு செல்கிறார். .

இந்தக் கதையிலிருந்து மூன்று பிரிவாக கருப்பொருளை நாம் உணர முடிகிறது. 1. உறவுகளுடனான நகர்வு 2. கால மாற்றமும் பாத்திரப் பயன்பாடும் 3. சாதிச் சமூக எதார்த்தம்

மாமன், மச்சினன், அத்தை, அண்ணன், தங்கை என்று ஒவ்வொரு உறவையும் அதனதன் இயல்பிற்கு ஏற்ப மிக நேர்த்தியாக பாத்திரங்களைப் படைத்துள்ளார். இதை உறவுகளுடனான கதை நகர்வு என நாம் உணர முடியும். கதைப்படி அண்ணன் மேல் தீராத அன்பு கொண்ட தங்கை கதாப்பாத்திரத்தை ஆசிரியர் பிணைத்திருக்கும் தன்மையிலிருந்து நாம் இதை உணரலாம். பாசமலர் படத்தினைப் பார்த்த தங்கை தன்னை அப்படத்துடன் இணைத்துக் கொண்டு தன் அன்பை வெளிப்படுத்த நினைப்பதாக கொடுத்துள்ள இடம் சுவையானது. “சிவாஜியைப் போல குடும்பத்துக்காகச் சகல தியாகங்களையும் செய்ய நாங்கள் தயாராகிவிடுவோம் என்பது அம்மாவின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை சார்ந்தே எங்களைத் திரைப்படங்களுக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார் அம்மா. அவளது அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அப்போது உறுதுணையாக இருந்தவர்கள் பீம்சிங்கும் சிவாஜியும் … “  

அதேபோல கதை நகர்வில் காலமாற்றத்தை முன்வைத்து பாத்திரங்களின் உணர்வுகளை மிக இயல்பாக நகர்த்துகிறார். காதலிக்க நேரமில்லை என்ற படத்தின் ஒலிச் சித்திரம் கேட்க மாமா படும் பாட்டை எழுதுகிற இடம் கதை நகரும் காலத்தையும் அதனோடு ஒட்டிய மனிதர்களின் மனத்துடிப்பையும் பதிவு செய்கிறது.

மூன்றாவதாக உள்ளார்ந்து நோக்கிய இடம். நாவலில் ஆசிரியர் சாதியச் சமூகத்தினை எப்படி கையாள்கிறார் என்பது. இதற்கான இரண்டு இடங்களைச் சுட்டலாம். குடிநாவிதர் இல்லாத கிராமத்தின் பண்ணையக்காரர்கள் மிகவும் சிரமப்பட்டுப் போனார்கள். எங்காவது இருந்து ஒரு நாவிதரை கூட்டி வந்து தங்க வைக்கலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தனர் என்று ஒரு இடத்தில் பதிவு செய்கிறார். இந்திய கிராம சாதிய அமைப்பானது உள்முகமான பிணை முடிச்சாக அமைந்திருப்பதை இந்த இடம் உணர்த்தும். சாதியத்துக்குத் தொழில் என்று வகுக்கப்பட்டதை இறுக்கமான பிடிப்பாக கிராமங்கள் பிடித்து நிற்பதையும் அதை இழக்கவோ விட்டுக் கொடுக்கவோ இந்தச் சமூகம் தயாராய் இல்லை என்பதையும் உணர்த்த நினைக்கிறார். அதே சமயம் இச்சாதிய அமைப்பு மாற்றம் காண முடியுமா? என்றால் அதற்கான இடத்தையும் பதிவிடுகிறார் ஆசிரியர். ஆனால் அதற்குள்ளும் சமூக எதார்த்தத்தை வைத்துள்ளார்..

குடிநாவிதராய் இருந்தவருடைய குடும்பத்திலிருந்த அடுத்தத் தலைமுறை இளைஞன் பிழைப்பு தேடி நகரம் செல்கிறான். அப்படிச் சென்ற இளைஞன் நகரம் சென்றும் ஒரு கவுண்டர் நடத்துகிற முடிதிருத்தகத்தில்தான் பணியில் சேர்கிறான். இதைச் சொல்கிறபோது “அந்தக் காசுக்காகத்தான் கவுண்டர் வெட்கம், மானம் பார்க்காமல் நாவிதனாக மாறிவிட்டானா?…. “ என்று பதிவு செய்துவிட்டு, தொடர்ச்சியாக “சலூன் வைத்து பிழைத்த போதும் கவுண்டர், கவுண்டராகவே இருந்தார். சலூனில் வேலை செய்த நாவிதர்களை நாவிதர்களாகவே நடத்தினார். என்றும் பதிவு செய்கிறார். முன்சொன்ன உள்முகமான பிணை முடிச்சானது பிரிவதற்கும்  அறுவதற்கும் நடைமுறையில் இன்னும் சில தலைமுறை எடுக்கும் என்பதை நாம் இதிலிருந்து உணர முடிகிறது. படைப்பாளன் தன் படைப்பை ஆக்கிக் கொடுத்த பிறகான படைப்பின் புரிதலை, வாசகன் படைப்பாளனோடு இணைந்தோ மறுதலித்தோ தனதாக்கிக் கொள்ள முழு சுதந்திரம் வாசகனுக்கு இருக்கிறது. அப்படியான சுதந்திர உணர்வோடு நம்மால் மிக இயல்பாக கதைக்குள் பயணப்பட முடிகிறது. கதை தொடங்கிய போது இருந்த உறவுகளோடான பயணம் கதை நிறைவு பெறும் வரையிலும் மனதில் நிறைந்து கிடக்கிறது. நம் வாழ்வு தாயக்கரம் போல முன் தீர்மானங்கள் இன்றி நகரக்கூடியது. எந்தத் திருப்பமும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். முன் தீர்மானமற்ற நகர்வுகளை அதன் போக்கிலேயே ஓடவிட்டு பதிவு செய்துள்ளது ‘நீர்வழிப்படூஉம்’ நாவல்.

Leave a comment

Trending