பாட்டொன்று கேட்டேன் : தொடர்

1. ஈரம் கசியும் உறவுகள்

ஜி. சிவக்குமார்

சின்னஞ் சிறு கண் மலர் பாடலை தொட்டிலில் படுத்துக் கொண்டு பாடச் சொல்லி அடம் பிடிப்பேன் என்று அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். அறம் காத்த தேவியே பாடலை அப்பா அடிக்கடி பாடுவார் எங்களையும் பாடச் சொல்லிக் கேட்பார் தியாகராஜ பாகவதரை அறிமுகப்படுத்தியதும் அப்பாதான்.தீனகருணாகரணே நடராஜா நீலகண்டனே பாடலைத்தான் ஏய்ச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க என்று மாற்றியதாக சொன்னதும் அப்பாதான்.வீட்டில் ஏதாவதொரு பாடலை பாடிக் கொண்டிருக்கும் பழக்கம் அவர் தந்ததுதான்.ஆசையே அலைபோலே பாடலை பவுன்தாஸ் சித்தப்பா எத்தனை அழகாக பாடுவார்.ஆயர்பாடி மாளிகையில் பாடலை கேட்கும் போதெல்லாம் பழனி வாசவி மகாலில் பானுக்கா அற்புதமாக பாடியது நினைவில் வரும்.அது ஒரு முப்பது முப்பத்தைந்து வருஷம் இருக்குமா? தாலாட்டில் துவங்கி ஒப்பாரியில் முடியும் பாடல்களால் ஆன பெரு வாழ்வல்லவா நம்முடையது.

இப்படி திரைப்படப் பாடல்களைக் கேட்டபடிதான் உறங்கினோம். காதலித்தோம்.பிரிவின் துக்கத்தை ஆற்றிக் கொண்டோம்.

பழைய திரைப்படப் பாடல்களில் பல பாடல்கள்,நாள்பட்ட ஒயினைப் போல காலம் செல்லச் செல்ல சுவையேறுபவை.

இன்று 50களில் இருப்பவர்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்த பழைய திரைப்படப் பாடல்கள் ஆகச் சிறந்த பொக்கிஷங்கள்.அவற்றை இந்தத் தலைமுறைக்கு கடத்துகிற ஒரு சிறிய முயற்சியாகத்தான், பழைய திரைப்படப் பாடல்கள் குறித்த எனது அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

திரைப்பாடல் : மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
திரைப்படம்  : பாச மலர்
பாடல்     : கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

மனித உறவுகளைப் பாடுகிற திரைப்பாடல்களில்,மழை நேரத்து மலைச்சாலையோரப் பாறைகள் மாதிரி ஒரு ஈரம் கசிந்து கொண்டேயிருக்கும்.அதிலும்,அண்ணன்,தங்கை அன்பு குறித்த பாடல்கள் என்றால் ஈரத்தின் அடர்த்தி இன்னும் அதிகமாகவே இருக்கும்.

நமது வாழ்வில் அண்ணன் தங்கை உறவுக்கு எப்போதுமே ஒரு சிறப்பிடம் உண்டு. அதனால்தான்,அறிமுகமில்லாத ஆணைக் கூட,தன் குழந்தையிடம் மாமாவப் பாரு என்று சொல்லி அவர் கைகளில் ஒரு வார்த்தை ராக்கியைக் கட்டி விடுவார்கள்.

காலம் பிரித்த அண்ணனும்,தங்கையும் தங்கள் குழந்தைகளிடம் தங்கள் வாழ்வின் சாரத்தை,தங்கள் உறவின் பெருமையைப் பாடுவதாக அமைந்த பாடல்.

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல 
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக 
விளைந்த கலை அன்னமே

கண்கள் பாதி மூடியபடி குழந்தை தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கிறது.அதை இதை விட அழகாகச் சொல்லி விட முடியுமா?

அடுத்த இரு வரிகளைக் கேளுங்கள்.

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி 
நடந்த இளந் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு 
பொலிந்த தமிழ் மன்றமே

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி….அடடா,எத்தனை அழகான கற்பனை.

குழந்தையைக் கொஞ்சும் போது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த தமிழ் மொழியையும் சேர்த்துக் கொஞ்ச என்ன ஒரு அற்புதமான மன நிலை வேண்டும்.

கையில் ஏந்தியிருக்கும் தன் மகனிடம் அண்ணன் பாடுகிற இந்த வரிகளைக் கேளுங்கள்.

யானை படை கொண்டு 
சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா 
புவி ஆளப் பிறந்தாயடா

வாழ்வில் இந்தச் சிகரங்களையெல்லாம் தொடுவதற்காகப் பிறந்தவன் நீ என்று பாடுவதோடு,ஒரு பெண்ணை மணந்து இல்வாழ்வில் ஈடுபட்டு நல்வாழ்வு வாழவும் போகிறாய் என்பதை என்கிற விஷயத்தை எவ்வளவு எளிதாக இந்த வரிகளில் சொல்கிறார்.

அத்தை மகளை மணம் கொண்டு 
இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா 
வாழப் பிறந்தாயடா.

அத்தை மகளை மணம் கொண்டு…  முறைப் பெண் என்பதால் தங்கையுடைய பெண்,மகனுக்கு உரிமையானவள்தானே? இளமை வழி கண்டு…. மூன்றே வார்த்தைகளில் மண வாழ்வின் அழகை எத்தனை நுட்பமாகச் சொல்கிறார்.

பிறந்த வீடு குறித்த பெருமிதமும்,புகுந்த வீடு குறித்த ஒரு எள்ளலும் திருமணமான பெண்களுக்கு இயல்பாகவே இருக்கும்.

அழுகிற குழந்தையிடம் ஒரு பெண்,காரணம் கேட்கிற அழகைப் பாருங்கள்.


கண்ணே கண் உறங்கு
பொன்னே நீ உறங்கு

மாமன் அடிச்சாரோ
மல்லிப் பூச் செண்டால

அத்தை அடிச்சாரோ
அரளிப் பூ செண்டால

கண்ணே நீ உறங்கு
பொன்னே கண் உறங்கு

கவனித்தீர்களா?அத்தை வலிக்க வலிக்க அரளிப் பூச் செண்டால அடிப்பாராம்.ஆனால்,மாமா வலிக்காமல் மல்லிப் பூச் செண்டால அடிப்பாராம்.

அண்ணன்கள் மீது தங்கைகள் கொண்டுள்ள நம்பிக்கையின் ஆழத்தை உணர்த்தும் இந்த வரிகளைப் கேளுங்கள்.

தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து 
மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்

கவனியுங்கள்.மணம் பேசும் போது வழக்கம் போல,பெண்ணைப் பெற்ற தங்கை பொருள் தர வேண்டியதில்லை.அண்ணனே பொருள் தந்து மணம் பேசுவார்.அதுவும் தங்கக் கடிகாரம், வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்.இந்த வரிகளில்,காரைக்குடி செட்டிநாட்டுப் பாரம்பரியத்தின் அழகு மிளிர்கிறதல்லவா?

மாமன்,தங்கை மகளான
மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

அன்பில் விளைந்த நம்பிக்கையின் உச்சமல்லவா இந்த வரிகள்

அப்பாவும்,அம்மாவுமாக இருந்து தங்கையை வளர்த்த அண்ணனை,தங்கையிடமிருந்து காலம் பிரிக்கிறது.அந்தப் பெருந் துயரை மகளிடம் இப்படிச் சொல்கிறாள்

சிறகில் எனை மூடி அருமை மகள் போல 
வளர்த்த கதை சொல்லவா?
கனவில் நினையாத காலம் இடை வந்து 
பிரித்த கதை சொல்லவா?

அதையே மகனிடம் அண்ணன் இப்படிச் சொல்கிறான்.

கண்ணில் மணி போல மணியின் நிழல் போல 
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் 
மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா 
உறவை பிரிக்க முடியாதடா

இரண்டே வரிகளில் திரைப்படத்தின் மொத்தக் கதையையும் சொல்லி விடுகிற திறமை கவியரசரைத் தவிர வேறு யாருக்கு உண்டு?

ம்ம்… அன்பே ஆரிராராரோ 
ஆரிராராரோ ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ 
அன்பே ஆரிராராரிரோ

என்று இருவரும் பாடுக் கொண்டிருக்கும் போதே,குழந்தைகளோடு சேர்ந்து விழிகளை இறுக மூடியபடி நாமும் உறங்கி விடுகிறோம்.

இனி,பாடலைப் பார்ப்போமா?

குழந்தைகளின் தொட்டிலில்,மல்லாந்து படுத்திருக்கும் குழந்தை பார்த்து மகிழ்வதற்காக சாவியால் முறுக்கப்பட்டு,தளர்கையில் விரிகிற மலரை நினைவிருக்கிறதா? இந்தப் பாடல் காட்சியை மீளப் பார்த்த பின்தான்,இந்த வரிகளை எழுதினேன்.

மரப்பட்டையொன்றின் நடுவில்
தலைகீழாய்த் தொங்குகிறது
ஒரு மொட்டு
உலோகச் சாவியின் திருகலில் இறுகிய முறுக்கு
மெல்ல மெல்லத் தளர
வர்ண வர்ண இதழ்கள் விரித்து
பேரழகுடன்
சுழல்கிறதொரு மலர்
அம்மாவின் புடவையில் படுத்தபடி
கை கால்கள் உதைத்து
கொலுசுகள் ஒலிக்க சிரிக்கிறேன்

அது மலர்ந்து விரிந்து அசைகையில் பாடல் மலர்கிறது.தங்கை.தன் பெண்ணை கைகளில் எடுத்து சாவித்திரி முதலில்  பாட,அதே வரிகளை,தன் மகனைக் கையில் எடுத்து சிவாஜி பாடுகிறார்.

யானை படை கொண்டு 
சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா 
புவி ஆளப் பிறந்தாயடா

இந்த வரிகளைப் பாடுகையில்,கட்டிலின் மேல் பல்வேறு அளவுகளில் துதிக்கையையை உயர்த்தியபடி யானைக் கூட்டமொன்று போய்க் கொண்டிருக்கிறது.அதைப் பார்க்கையில்,ஆர்ட் டைரக்டரின் கைகளைப் பற்றிக் குலுக்க வேண்டும் போலிருக்கிறதல்லவா?

அத்தை மகளை மணம் கொண்டு 
இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா 

இந்த வரிகளைத் தளுதளுக்க திரும்பப் பாடும் போது சிவாஜியின் கண்களில் கண்ணீர் வழிகிறது.

காட்சி அப்படியே மாறி சாவித்திரியிடம் போகிறது.

தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து 
மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்

மாமன்,தங்கை மகளான
மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

இந்த வரிகளை சாவித்திரி பாடுகையில் சுவற்றில் மிகப் பிரமாண்டமான சிவாஜியின் படம் மாட்டப்பட்டிருக்கிறது.அது சிவாஜியின் வீடு.தங்கைக்காக அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார்.சிவாஜியின் செல்வச் செழிப்பை அந்த ஒரு புகைப்படம் எத்தனை அழகாகக் காட்டி விடுகிறது.

மாமன்,தங்கை மகளான

என்று ஒரு இடைவெளி விட்டு சுசீலாம்மா விசும்புவதை, கவிஞர் வைரமுத்து ஒரு பேட்டியல் சிலாகித்திருப்பார்.

குழந்தையை தொட்டிலில் இட்டபடி,

சிறகில் எனை மூடி அருமை மகள் போல 
வளர்த்த கதை சொல்லவா?

என்று பெருமிதமும்,மகிழ்வுமாகப் பாடுகிற சாவித்திரியின் முகத்தில்,


கனவில் நினையாத காலம் இடை வந்து 
பிரித்த கதை சொல்லவா?

என்ற வரிகளைப் பாடுகையில் பெருந் துயரத்தின் கொடும் நிழல் படிகிறது.

கண்ணில் மணி போல மணியின் நிழல் போல 
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் 
மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா 
உறவை பிரிக்க முடியாதடா

என்று பாடியபடி குழந்தையை கையில் எடுக்கிற சிவாஜி எத்தனை அழகு.

ம்ம்… அன்பே ஆரிராராரோ 
ஆரிராராரோ ஆரிராராரிரோ

அன்பே ஆரிராராரிரோ 
அன்பே ஆரிராராரிரோ

என்று இருவரும் முடிக்கையில் உணர்வுகளின் பெருஞ் சுழலில் நாம் சுழன்று கொண்டிருக்கிறோம்.

சாவித்திரியின்,சிவாஜியின் கைகளில் இருக்கும் குழந்தைகளெல்லாம் இப்போது எங்கே,எப்படியிருப்பார்கள்?

சாவித்திரியின் முகத்தில்,உடல் அசைவுகளில்,மகிழ்வும்,துக்கமும் மாறி மாறி அலையடித்துக் கொண்டேயிருக்கும்.ஆனால்,சிவாஜியின் முகமோ,உடல் அசைவுகளோ,துக்கத்தால் இறுகியிருக்கும்.

அண்ணனும்,தங்கையும் தங்கள் வாழ்வைப் பாடுகிற இந்தப் பாடலைப்
பார்க்கிற, கேட்கிற யாரும், தங்கள் தங்கையை,அண்ணனை நினைத்து, மகிழ்விலோ,துயரிலோ ஒரு துளிக் கண்ணீர் சிந்தாமல் இருக்க மாட்டார்கள்.
******

Leave a comment

Trending