பாலைவனச்சாலை
க.அம்சப்ரியா
இனி மதிய சமையலுக்கான வேலையைத் துவங்கினால், வேணு வருவதற்குள் முடித்துவிடலாம். காலையில் செய்த இட்லி இன்று சரியாக அமையவில்லை. மாவிற்குத் தண்ணீர் போதவில்லை என நினைத்துக் கொண்டாள். நல்ல வேலையாகக் கணவன் வேணு குறையாக எதையும் கூறவில்லை. சமையலில் சந்தேகம் இருந்தால் உன் அம்மாவிடம் கேட்டுக்கொள் என்று கூறியதில் மட்டும் மனதிற்குள் சிறியதாக நெருடல்.
இப்போதுதான் விருப்பமே இல்லாமல் தனிக்குடித்தனம் வந்து ஒரு வாரமாகிறது. வேணுவின் வேலையை அனுசரித்துத்தான் நகரத்திற்கு வந்திருந்தார்கள். மற்றபடி இப்படித் தனியாக வருவதில் தனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகவே குடும்பத்தில் எல்லோரிடமும் கூறிவிட்டாள். அத்தைக்கு அதில் பெரிய மகிழ்ச்சிதான். வருகிற போகிற அனைவரிடமும் இதையே சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
அவரும் ஒன்றிரண்டு அறிவுரைகளில் வேணுவிற்கு என்ன வகையான சமையல் பிடிக்கும், என்ன சமையலைச் செய்தால் கோபம் வரும், ஓட்டலுக்குப் போனால் கூட எதைச் சாப்பிட விரும்புவான் என்றெல்லாம் வரிசையாக ஒரு பிசிறில்லாமல், ஏதோ தேர்விற்குத் தயார்படுத்துவது போலவே கூறினார்.
கல்யாணம் இன்னும் சில வருடங்கள் தள்ளிப் போயிருந்தால் வருகிற ஏதேனும் ஓர் அரசுத் தேர்விற்குத் தயார் ஆகிக் கொண்டிருக்கக்கூடும்.
முதுகலை வணிகவியல் படித்ததோடு, இந்த இடம் நல்ல இடமென்று, மாமா கொண்டு வந்த சாதகக் கட்டங்கள் இங்கே சிறை வைத்துவிட்டது. திருமணத்திற்குப் பிறகு வங்கி வேலைக்கான பயிற்சிக்குச் சேர நகரத்தில் வாய்ப்புகள் அதிகம் என்றும், அப்படிப் பயிற்சி எடுத்தவர்கள் பலரும் அரசு வேலையில் இருப்பதாகவும் கூறினார்கள். செடி, கொடி, கிணறு, மடை என்ற சொற்களை உச்சரிக்காமல் வரவு, செலவு என்று காதில் கேட்க விருப்பமே இல்லை.
ஒரு மாதம் கூட முடியவில்லை. அதற்குள் இப்படி வந்ததும் பிடிக்கவே இல்லை.
என்னதான் தினமும் அரைமணி நேரம் அலைபேசியில் அம்மாவிடம் பேசினாலும் திருப்தியாய் இருப்பதில்லை. அம்மாவிடம் பேச ஆயிரம் சொற்கள் காத்திருக்கும்.
“நேத்துதானே சொன்னேன்… அடுத்த வாரம் அறுவடைன்னு… அதுக்குள்ளே என்ன மாறிடும்?”
அம்மா செல்லமாக அதட்டுவார்.
சிலவற்றைத் திரும்பத் திரும்பக் கேட்பதில் மகிழ்ச்சி. அதுவும் தன் தோட்டத்துச் செய்திகளைக் கேட்டுக்கொண்டே இருப்பதில் அம்மாவுடன் இருக்கிற திருப்தி
இங்கு ஓரிரு வீடுகளில் ஆச்சரியமாக சில மரங்களை மொட்டை மாடியிலிருந்து பார்த்திருந்தாள். பெரும்பாலும் பப்பாளி மரங்கள்.

தெருவில் யாராவது கீரையோ, காய்கறிகளோ விற்றுக்கொண்டு போகும்போது ஊர் நினைவு வராமல் இருப்பதில்லை
படித்துக் கொண்டிருக்கிற பாடத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு, ஓடிவந்து அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொள்வாள். இப்படிச் செய்தால், “சாப்பிட ஏதாவது கொண்டு வருகிறேன்… போய்ப்படி” என்பார்.
அம்மாவைப் பார்க்கவேண்டும் போலிருந்தது. அம்மா இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்? வயல்காட்டில்தான் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பார். நேற்று பேசும்போது நிலக்கடலைச் செடிகளுக்கு மண் அணைக்கிற வேலை நடந்தபடி இருப்பதாகக் கூறினார். கூலியாட்கள் நான்கு பேர் வேண்டும் என்ற நிலையெனில் மூன்று பேரைத்தான் அம்மா வரச்சொல்லியிருப்பார். இன்னொருவர் வேலையை அம்மாவே செய்துவிடுவார்.
“சின்ன வயசிலிருந்தே விவசாயம்தான் எனக்குப் பிடிச்சிருந்தது…. நம்ம வேலையை நாம செய்றதில என்ன கௌரவம் வேண்டிக் கிடக்கு… கல்யாணம் ஆன புதுசில இது கொரங்காடா இருந்துச்சு… இதை எப்படியாவது பொன்னு வெளையற பூமியா மாத்தோணும்னு நெனச்சு ரவ்வும் பகலுமா வேல செஞ்சோம்….”
அம்மாவின் பாட்டு இதுதான். வெளியிடங்களுக்குப் போகிறபோதுகூட ஏதாவதொரு வயல்வெளியைப் பார்த்துவிட்டால் அதைப்பற்றி ஏதாவது கூறாமல் இருக்கமாட்டார். உண்மையில் அப்பா, அம்மா இருவரின் உழைப்பும் அவளை ஆச்சரியப்படுத்தும். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ, படிப்பை நல்ல படியாக முடிக்க வேண்டும் என்பதே விசாலாட்சியின் இலக்காக மாறிவிட்டது.
அம்மாவின் ஆர்வத்தால்தான் தனக்கும் விவசாயத்தின் மீது பிடிப்பு வந்திருக்க வேண்டும்
பள்ளி முடிந்ததும், நேரே வயல்காட்டிற்குள்தான் நுழைவாள். பருத்தி எடுப்பது, அப்பாவோடு சேர்ந்து வயலுக்குத் தண்ணீர் பாய்ப்பது என்று எல்லா வேலைகளையும் அம்மா சொல்லாமலே செய்யத் துவங்கிவிடுவாள்
வரப்போரம் கொத்தமல்லி, வெங்காயம், பீர்க்கங்காய் என ஊடுபயிராக இவள் ஊன்றுகிறவை தப்பாமல் முளைத்து வளர்ந்தது. அவை மலர்ந்து மலர்ச்சியாகிறபோது ஏற்படுகிற மகிழ்ச்சி தனித்துவமானது.
விசாலாட்சியின் ஆசைகளில் ஒன்றாக கலப்பை பிடிக்க வேண்டும் என்பதாக இருந்தது. இடைவிடாத சிந்தனையாகவும் இருந்தது.
அழைப்பு மணி விடாமல் ஒலிக்கிற சப்தம் …
திடுக்கிட்டு எழுந்தாள். பழைய நினைவில் மூழ்கிவிடுகிறபோது எதுவும் உறைப்பதில்லை.
கதவைத் திறந்தாள்.
சிலிண்டரோடு ஒருவர் நின்றிருந்தார்.
“விசாலாட்சிங்கிறது……..’
‘இந்த வீடுதான்…. உள்ளே வாங்க…..”
சிலிண்டரை வைத்துவிட்டுப் போனபின் கதவைத் தாளிட்டாள்.
வேணு சிலிண்டருக்குத் தன் பெயரைக் கொடுத்திருந்தது பிடித்திருந்தது. தன் மீதான பேரன்புதான் என்பதில் பெருமிதமாக இருந்தது.
அம்மாவிற்கு சிலிண்டர் என்றாலே பயம். விறகு அடுப்பில்தான் சமைக்கப் பிடிவாதம். அப்பாவிற்கு ஏற்றவள் அம்மா. அப்பாவும் பயிர்களுக்கு இயற்கையாக உரங்கள் தயாரித்து இடுவதில்தான் பெரிய விருப்பம்.
எப்போதும் அதற்கான வேலைகளில் தீவிரமாகவே இருப்பார். பஞ்சகவ்யம் தயாரிப்பதில் அப்பா எப்போதும் முன்னோடி விவசாயி. அக்கம் பக்கமெல்லாம் யூரியா, பொட்டாசியம் என்று உரமிட்டுக் கொண்டிருக்க, அப்பா கூடுதல் நேர உழைப்பில் இயற்கை மருந்து தயாரித்துக் கொண்டிருப்பார். கேலிகள், உதாசீனம் யாவற்றையும் ஒதுக்கித்தான் அதைச் செய்தபடி இருந்தார்.
முதலில் அப்பாவிடமிருந்து அதைத்தான் கற்றுக்கொண்டாள். எதை, எவ்வாறு கலக்க வேண்டும் என்பதில் நிபுணரென்றும் கூறலாம்.
அப்பாவை விட உனக்குத்தான் கைப்பக்குவம் கூடி விட்டதென்று சித்தப்பா கூடக் சொல்லிக் கொண்டிருப்பார். இப்போது அப்பா தனியே சிரமப்படுவார் என்பதை நினைக்கும் போது கவலை நெஞ்சைப் பிசைந்தது.
செழித்த பசுமையான சோளப்பயிர்கள், சும்மாதானே இருக்கிறது என கிணற்று மேட்டில் பயிரிட்டுள்ள செவ்வந்திப் பூச்செடிகள், பந்தலில் படர்ந்து அழகாய் பூத்திருக்கிற அவரைக் கொடியென்று ஒவ்வொன்றும் நினைவிற்கு வந்து எப்போது என்னைப் பார்க்க வரப் போகிறாயென விசாரிப்பதாக இருந்தது.
நேற்று கூட இவள் டிராக்டர் ஓட்டுவது போல கனவு. திடுக்கிட்டு விழித்து உட்கார்ந்து கொண்டாள்.
முதலில் அப்பாவிடம் ஏர்க்கலப்பை பிடித்து உழவோட்டவே கெஞ்சினாள்.
“படிக்கிற புள்ளைக்கு அதெல்லாம் வேண்டாம்…. நம்ப ஊர்ல எந்தப் புள்ள கலப்பை புடிக்குது… சும்மா ஒழவோட்ரேன்னு….”
அப்பா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
“பைக் ஓட்றாங்க…. கார் ஓட்றாங்க… கலப்பை புடிச்சு ஒழவோட்றதில என்ன கௌரவம் வேண்டியிருக்கு…நீ அப்பாகிட்டே சொல்லும்மா….நானும் கலப்பை புடிக்கணும்…”
“அதெல்லாம் வேண்டாம்….உன்ன படிக்க வைக்கிறதுதான் எங்க வேல….ஒரு நாள் கூலி மிச்சமாகுதுன்னு பொம்பளைப் புள்ளய ஏர்க்கால்ல போட்ருக்கான் பாருன்னு சொல்லுவாங்க…. அதிலயும் உங்க பெரியப்பா இருக்காரே…. நாலு பேரு இருக்கிற இடத்திலதான் பெரிய யோக்கியகாரன் மாதிரி பேசுவாரு…. ஒண்ணு தெரியுமா ?…. நான் கல்யாணமாகி வந்த புதுசுல என்னையவே அப்படித்தான் சாடை பேசுனாரு….”.
“அப்படியென்னம்மா பேசினாரு…. இத்தனை வருசம் மறக்காம இருக்கே….”
“நான் படிச்ச முட்டாளாம்…. டிகிரி படிச்சிட்டு, அதுக்கேத்த மாதிரி வேலைக்குப் போகாம காடு கரைன்னு இருந்திட்டேனாம்…. உங்கப்பா எனக்குச் சுதந்திரம் கொடுக்கலயாம்…”
” ம்…அப்புறம்…’
“அப்புறமென்ன அப்புறம்… நானென்ன கதையா சொல்றேன்… தனியா ஒரு நாள் சிக்கினாரு…. நாலு வார்த்தை நறுக்குன்னு போட்டேன்…. அதோட என்கூட அளவாத்தான் பேசுவாரு…. படிச்சிட்டு எல்லாரும் அலுவலக வேலைக்குப் போயிட்டா இந்த வேலய யாரு பாக்கறது….?
அம்மா இப்போது தன் கண்முன்னால் நின்று பேசுவது போலவே இருந்தது.
அம்மாதான் அப்பாவிடம் ஏதேதோ பேசி சம்மதம் வாங்கினார்.
ஆடி மாதம் நல்ல மழை.
அப்பா முதன் முதலில் கலப்பை பிடித்து உழவைக் கற்றுக் கொடுத்த முதல் நிமிடம் பரபரப்பும் கொண்டாட்டமாக இருந்தது. அப்பாதான் காரோட்டக் கற்றுக் கொடுத்தார். அந்த மகிழ்ச்சியை விட இது பல மடங்கு உயர்வாக இருந்தது.
கலப்பையை முதன் முதலாக பிடிக்கும் போது அழுத்தமாகப் பதியாமல் மேலோட்டமாக நகர்ந்தது. “மேழியை நல்லா அழுத்தமா புடிக்கணும்மா…. இதென்ன நீ எழுதுற பேனாவா?”
முகம் முழுக்க அத்தனை பெருமிதம்.
அப்பாவின் கையும் தன் கையும் அழுத்தமாக்கியதில் நிலம் பிளந்து உழவு நிலமாகிக் கொண்டிருந்தது.
நிலக்கடலை முத்து விதைப்பதை அம்மா செய்யும் போது விசாலாட்சியும் ஆசையோடு கலந்து கொள்வாள். மடியில் முத்தினைக் கட்டிக் கொண்டு சாலோட்டும் போது விரல்களில் சரியான அளவு முத்து பிரியும். முளைத்து வரும் போது மிகவும் நெருக்கமும் இல்லாமல், இடைவெளியும் இல்லாமல் பொருத்தமாக அமையும் போது அப்பாவிற்கு ஆச்சரியம்.
“இத்தன வருச அனுபவத்தில உங்க அம்மா கூட இவ்வளவு நேர்த்தியா வெதச்சதில்ல… பள்ளிக் கூடம் போற புள்ள நூல் புடிச்ச மாதிரி விதைக்கிற….”
அலைபேசி ஒலிக்கும் சத்தம் இரைச்சலாகக் காதில் விழுந்தது.
எடுக்க மனதில்லை. விவசாய நினைவுகளில் மூழ்கி அப்படியே உறைந்து கரைந்துவிட வேண்டும் என்றே நினைத்தாள்
படிக்கும் போது பத்தாம் வகுப்பில் அறிவியலில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விவசாயம் சார்ந்த படிப்பினைப் படிக்க முடியவில்லை. விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத தன் தோழி மணிமேகலை, அறிவியலில் கூடுதல் மதிப்பெண் வாங்கியதால் வேளாண்மை படிக்க தானாகவே வாய்ப்பு அமைந்துவிட்டது.
மாடு எப்போது சினையாகும்? எப்போது கன்று போடும்? என்ன வியாதிகள் வரும்? தனக்குத் தெரிந்த அளவு மணிமேகலைக்குத் தெரியாது. தனக்குத் தெரியும் என்பதில் பெருமிதம். ஊரில் யார் மாட்டிற்காவது ஏதாவது தொந்தரவு என்றால் விசாலாட்சியைக் கூப்பிடுங்கள் என்றுதான் கூறுவார்கள்.
ஒரு முறை மணி ஓய்ந்து மறுபடியும் அதே ஒலி.
அவசரமாக எழுந்து காதில் வைத்தாள்
“என்ன விசா… தூங்கிட்டியா…. இன்னிக்கு மூணு மணி சுமாருக்கு நண்பர்கள் நம்ம வீட்டுக்கு வராங்க…. உனக்குத்தான் நல்லா சமைக்க வருமே…. நான் வேணுங்கிற காய்கறி வாங்கிட்டு வர்றேன்…”
“ம்”.. என்று முடிப்பதற்குள் அலைபேசி எதிர்முனையில் ஓய்ந்துவிட்டது.
என்ன சமையல் செய்வது? வாங்கி வருகிற காய்கறிகளைக் கொண்டு முடிவு செய்ய வேண்டியதுதான்.
எழுந்து அடுப்படிக்குப் போனவள், பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு, மேசையின் மீதிருந்த மாத இதழைக் கையில் எடுத்தாள். ஏனோ படிக்க மனம் ஒட்டவில்லை.
தொலைக்காட்சியைப் போட்டாள்.
இப்போதைக்குப் படம் வேண்டாம்… நல்ல படமாக இருந்தால் பாதியில் சமைக்கப் போகும் போது மனம் சமையலில் ஒட்டாது.
ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிக் கொண்டே வந்தாள்.
சட்டென்று துணுக்குற்று, மறுபடியும் பின்னோக்கிச் சேனலுக்கு வந்தாள்.
செய்தியில் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். அவ்வளவு ஆவேசம்.
பெண்கள் தலையில் அடித்தும் கொண்டும், பெரும் கூட்டமும், கலவரச் சூழலுமாக காட்சியளித்தது.
நகர்ந்த காட்சியில் பதற்றம் தானாக ஓடி வந்து ஒட்டிக் கொண்டது. கால்கள் நடுங்குவது போல உணர்ந்தாள். நாக்கு உலர்ந்து வறண்டது.
தண்ணீரை எடுத்து மடக்மடக்கென்று குடித்தாள். தண்ணீர் சேலையெல்லாம் சிந்தி ஈரம் பரவியது.
கதவு தட்டப்படும் சப்தம்.
வேணுதான் வந்திருக்கக் கூடும். மறுபடியும் அழைப்பு மணி சத்தம்.
மெதுவாக எழுந்து சுவரைப் பிடித்துக் கொண்டாள்
கதவைத் திறந்ததும், வேணுவை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.
அவளையும், அறியாமல் கேவலாய் வெடித்த அழுகையில், பயந்த வேணு, பதறினான்
தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது.
“அறுவடை செய்ய இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் விவசாய நிலங்கள் கையகப்படுத்துதலில் நிறுவனம்….”
பச்சைப் பயிர்களின் மீது இராட்சச இயந்திரம் நகர்ந்தபடி இருந்தது. அது குழந்தைகளின் மீது நசுக்கிக் கொண்டு போவதாகவே விசாலாட்சிக்கு காட்சி விரிந்தது.
**
க.அம்சப்ரியா
பில்சின்னாம்பாளையம்
சமத்தூர் 642123
பொள்ளாச்சி

Leave a comment