சிறுகதை
பீவண்டி
தமிழ்ச் செல்வத்தின் குமாரன்

தமிழ்ச் செல்வத்தின் குமாரன்
“பீ வண்டி”
பயணிகளின்கனிவானகவனத்திற்கு, வண்டி எண், பூஜியம் ஐந்து பூஜியம் ஒன்று, சென்னையிலிருந்து டெல்லி நோக்கிச் செல்லும் விரைவு ரயில் இன்னும் சற்று நேரத்தில், இரண்டாம் நடைமேடையை வந்தடையும் என எதிர் பார்க்கப்படுகிறது. இரயில் நிலைய ஒலிப்பெருக்கிச் செய்தியைக் கேட்ட எழுபது பேர்களில் ஒருவனாக இந்திரனும் இருந்தான். மேனேஜர் சுந்தரம் அங்கிருந்த தூய்மைப்பணியாளர்களை எப்போதும் போல விரட்டிக் கொண்டிருந்தார். அந்த அர்த்த சாமத்தில், மேனேஜரின் கெடுபிடியில் விளக்குமாறுகளும், இரும்பு வாளிகளும் அவர்களின் கைகளில் கெஞ்சிக் கெஞ்சிக் கொஞ்சத் தொடங்கின.
“டேய்… இந்திரா… இந்திரா… செத்த நாயி காதெழவும் கேக்காது…” மேனேஜரின் அதிகாரக் குரலைக் கேட்ட இந்திரன், இரும்பு வாளி உருண்டோடி விழுவதைப் போல், மேனேஜரின் முன் வந்து விழுந்தான்.
“எல்லா மயிறுகளும் ஏண்டா என் உசுர வாங்குறீங்க… உங்க மேல ஒரே கம்ளைண்டு… ஒவ்வொரு பெட்டியில இருக்குற கக்கூசையும் ஒழுங்கா கழுவ மாட்டீங்களாடா… மேல இருந்து கத்துறவனுக்கு நானில்லடா பதில் சொல்லணும், இந்த மாசம் எல்லாத் தாயோலிகளும் எப்புடி சம்பளம் வாங்குரீங்கனு பாக்குறேன்” இத்தனை வசைகளையும் கேட்ட இந்திரன்,
“சாமி… நாங்க சுத்தமாத்தான் கழுவுறோமுங்க… போனமொற கழிவெடுக்குற லாரியோட பைப்பு ஒடஞ்சு போச்சுங்க… ஒழுகிக் கெடந்த மலத்த நாங்க எல்லாரும் வாளியில அள்ளிக் கொண்டு போயிதான் கொட்டுனோம்… அதாங்கயா ரெண்டு மூணு பெட்டியில கக்கூசக் கழுவ முடியல…”
“இந்தக் காரண மயித்துக்கு மட்டும் கொறச்சலில்ல. அடுத்து வர வண்டியில எல்லாக் கக்கூசையும் சுத்தமா கழுவச் சொல்லு. அப்பறம்… தண்ணி லாரி ரெண்டு நாலு ஸ்ட்ரைக்கு, எல்லா பெட்டியிலையும் வாளியில கொண்டு போயி தண்ணிய நெறைக்கச் சொல்லு. இனிமேல் உங்க மேல கம்ப்ளைன்ட் வந்துச்சு அத்தன பேரையும் தொலைச்சுப் புடுவேன்” என்ற மேனேஜரின் நடைக்குப் பின்னால் “சாமி” என அழைத்துக் கொண்டே இந்திரன் ஓடினான்.
“சாமி… புது வெளக்குமாறு, இரும்பு வாளிக, மொகக் கவசம், கைக்குலோசு, முட்டி வரைக்குள்ள பூட்ஸ், இதெல்லாம் கெடைக்கும்னு சொன்னீங்க.”
“ம்ம்ம்… இந்திரா… நீ போயி நாராயணன கூட்டிட்டு வா” நாராயணன் சுந்தரத்தின் எடுபுடி. இரயில் நிலைய ஊழியர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் கணக்குப் போட்டுக் கொள்ளையடித்து பங்கிடுவதில் கில்லாடி.
“சுந்தரம் சார்… கூப்டீங்களா…? என்ன விஷயம் சார்..?”
“யோவ் நாராயணா… இந்த கழுதைகளுக்குள்ள உபகரணங்களோட காரியம் என்ன ஆச்சுயா. இவனுங்க எல்லாம் எந்தாலியப் போட்டு அறுக்குறானுங்க” களவாண்ட ரகசியம் யாருக்கும் தெரியக் கூடாதென இந்திரனை வெளியில் நிற்கச் செய்திருந்தான் நாராயணன்.
“சுந்தரம் சார்… உங்க அக்கவுண்டுல நாப்பத்தஞ்சு, காண்டிராக்டருக்கு முப்பத்தியேழு, அப்புறம் சில்லற உருப்படிகளுக்கு கொஞ்சம், எனக்கு இருபத்தஞ்சுன்னு… அன்னைக்கே உங்ககிட்ட சொன்னனே மறந்துட்டேளா சார்…”
“சரியா… சரி… நாராயணா… சென்னைக்கு அருகாமையில்… விளம்பரம் பாத்தியா? ஒரு கோடியே நாப்பது லட்சமாம். உன்ன நம்பி நான் புக் பண்ணிட்டேன். எல்லாம் உன்னோட கைலதான்யா இருக்கு”
“சுந்தரம் சார்… கவலைய விடுங்கோ. இந்த ஷ்டேசனோட மொத்த மெய்ண்டனன்சுக்கும் பத்து கோடிக்கு ரிக்வெஸ்ட் குடுத்துருக்கு. அதுவும் கிடைக்கும். அப்புறம்… அதுவும் பத்தலனா… கழுவுற நாய்களுக்கு ஏற்கனவே பாதிய புடிச்சிட்டுத் தான் மீதிய கூலியா குடுக்குறோம். அதனால கவலைய விடுங்கோ சார். அந்த இந்திரனக் கூப்டுறேன் நீங்களே எதையாவது சொல்லி அனுப்பிடுங்கோ”
“இந்திரா… உங்களுக்கு என்னென்ன வேணுமோ எல்லாத்தையும். நாராயணன்ட சொல்லுங்க, அவரு பாத்து பண்ணித் தருவாரு சரியா”
“சாமி… நாங்க கேட்டே ரெண்டு மூணு வருசமாச்சு. நீங்க குடுத்த பணம் வெளக்குமாறு வாங்குறதுக்கு மட்டும்தான் ஆச்சு”
“சரி… இந்திரா… இருக்குறத வச்சு சமாளிங்க… அடுத்து வர பணத்துல எல்லாம்ம்ம் வாங்கித் தரேன். நான் எல்லா நடைமேடைக்கும் போயி சுத்தமா இருக்கானு பாத்துட்டு வரேன், நீ போயி வேலையப் பாரு. ஆ… அப்பறம் இந்திரா… நாளைக்கு பாதி பேர ஸ்டேஷன்ல இருந்து மேலையும் கீழையும், பத்துகிலோ மீட்டர் காஞ்ச பியப் பொறுக்கப் போகச் சொல்லு”
“சரிங்க சாமி”ன்னு இந்திரன் அவனுடைய கடமையைச் செய்யப் புறப்பட்டான்.
“என்ன இந்திரா… மேனேஜர் என்ன சொன்னாரு… இந்த வருசமாவது போனஸ் கிடைக்குமுள்ள. அத வாங்கித் தான் பசங்கள ஸ்கூல்ல சேக்கணும். உன்னோட புள்ளைங்கள எப்படியோ கார்பரேசன் ஸ்கூல்ல சேத்துட்ட” சுகுமாரின் கேள்விகளுக்கு இந்திரனுக்கும் பதில் தெரியாது, இந்திர லோகத்துக்கும் தெரியாது.
“சுகுமாரா… நம்ம பொழப்பு இதுதான், இப்புடித்தானு நமக்குத் தெரியும். நம்ம புள்ளைங்களாவது நல்லா இருக்கணும்னா நாம பீயள்ளத்தான் செய்யணும்”
“என்ன இந்திரா… தத்துவமா? காஞ்ச பீய்ய அள்ளப் போறவனுக்கு கனவெல்லாம் இருக்கக் கூடாதுயா” இந்திரனும், சுகுமாரனும், ஒவ்வொரு பெட்டிகளையும் சுத்தம் செய்தனர். ஒரு மங்கிய இருளைக்கடந்து செல்கையில், “காப்பாத்துங்க… காப்பாத்துங்க…” ஒரு இளம் பெண்ணின் குரல் இந்திரனின் செவிகளைப் பிய்த்தது. ரயில் பெட்டிக்குள் ஏறிய இந்திரனும், சுகுமாரனும் பெண்ணைப் பலவந்தப்படுத்திய இருவரை இரயில்வே போலீசிடம் பிடித்துக் கொடுக்க, துப்பாக்கி விளக்குமாறை புறந்தள்ளி பேரும் புகழையும், வாங்கிக்கொண்டது. அந்த ரயில் நிலையத்தில் நடந்த எத்தனையோ சம்பவங்களில் இதுவும் ஒன்று. சுந்தரம், பணியாட்கள் அனைவரையும் அலுவலகத்திற்கு அழைத்தான்.
“இன்னும் ரெண்டு நாள்ல ‘மக்கள் முன்னேற்றப் பாதையில்’ திட்டத்த துவக்கி வைக்க பிரதமர் நம்ம ஊருக்கு வராராம்பா. இதுல என்ன கஷ்டம்னா இந்த மொற ரயில்ல தான் வறாராம். இங்க தான் வந்து எறங்கப் போறாரு. இன்னும் பத்து நாள் தான் இருக்கு. ஒரு வாரத்துக்கு எல்லா ரயிலும் வேற வழியாப் போகுது, நீங்க மொத்தம் நூத்தி எழுவத்தஞ்சி பேரு, இந்த நிலையத்த சுத்தம் பண்ண அம்பது பேரு, பின்ன இந்த நெலையத்த சுத்தி சேரிங்க நெறையா இருக்கு அதெல்லாம் மறையுற அளவுக்கு சொவரு கட்டுறாங்க மீதமிருக்குறவங்க அங்க போயி வேலையைப் பாருங்க. மதியம் மட்டும் சாப்பாடு வரும். காலைக்கும், ராத்திரிக்கும் நீங்க தான் பாத்துக்கணும். இப்போ எல்லாரும் போலாம்”
“இந்திரா… இந்திரா… நீதான அவர்ட்ட பேசுவ, வூட்டுக்கு எப்ப உடுவாங்கனு கேளு. அப்புடியே சனங்க குத்தவக்கிற பெஞ்சுல படுத்துக்கலாமானு கேட்டு வையி” கூட்டத்தில் இருந்தவர்கள் இந்திரனிடம் குசு குசுத்தனர்.
“பிரதமரு வந்து போற வரைக்கும் யாரும் வீடுக்குப் போகக்கூடாது. நாராயணன், உங்க எல்லாத்துக்கும் யூனிபாம் தருவாரு பிரதமரு போனதுக்கப்பறம் நல்லா தொவச்சு இஸ்த்திரி போட்டு ஆபீஸ்ல குடுத்துறனும் புரிஞ்சுதா?” இனி எதையும் கேட்டுப் பிரயோஜனம் இல்லை என்பதைப் புரிந்தவர்கள் கலைந்து சென்றார்கள். டெல்லி நோக்கிச் செல்லும் விரைவு ரயில் நடைமேடையில் வந்து கொண்டிருந்தது.
“இந்திரா… நீ தண்ணிய நெரப்பு. நான் போயி கக்கூசுக்குள்ள பைப்ப மாட்டிவிட்டுட்டு, கழுவிட்டு வந்துறேன்” பெட்டியில் தண்ணீரை நிரப்பிவிட்டு திரும்பிய இந்திரனின் மீது பாதி சூட்டில் நீர் விழுந்தது, கூடவே வெற்றிலை பாக்கின் எச்சிலும்,
“அய்யா… சாமி… ஆளு நிக்குறது தெரியாம மேல மூத்திரம் அடிக்கீங்க, துப்புரீங்க உள்ள கக்கூசு எல்லாம் இருக்குள்ள சாமி”
“யோவ்… உள்ள அவன் கழுவுறான்… வெளிய நீ… மனுஷன் எங்கதாயா பேயுறது” கழுவப் போன சுகுமாரனும் கழுவிவிட்டு வந்திருந்தான். இந்திரன் வாளியில் மிச்சமிருந்த தண்ணீரை எடுத்துத் துப்பியவனின் பாவத்தைக் கழுவிக் கொண்டான். அடுத்த நாளிளிருந்து தண்டவாளங்களின் இருபக்கமும் கட்டிட வேலை. முப்பது, நாப்பது அடியில் பத்து கிலோமீட்டருக்கு சரூராக நடந்தது. பிரதமரின் காலடியில் முதலமைச்சரும், முதலமைச்சரின் காலடியில் மந்திரிகளும், அதிகாரிகளும் பெரிய பெரிய ஓவியங்களாக வரையப்பட்டனர். வேலைப்பளு காரணமாக சுகுமாரனும் அவனுடனிருந்த மூவரும் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்திருந்த போது அறிவிப்பு இல்லாமல் மெய்ண்டனன்சுக்கு வந்த ரயிலொன்று அவர்களை உருக்குலைத்துப் போட்டது. அனைத்து அதிகாரிகளும் அந்தச் செய்தியை வாய்க்கரிசி போட்டு மறைத்து வைத்தார்கள் மேலிருப்பவர்களுக்காக. சுந்தரத்தையும், நாராயணனையும் அழைத்த மக்கள் பிரதிநிதி.
“மிஸ்டர் சுந்தரம், இந்த நிலையத்தோட எல்லா வேலையும் முடிஞ்சது. மேல இருக்குறவங்களுக்கும் எல்லாம் திருப்தி தான். கவல என்னான்னா இந்த… நாலு பேரு இறந்துட்டாங்க, அரசாங்கத்துல இருந்து அவங்க குடும்பத்துக்கு தலா மூனு லட்சம் குடுக்குறாங்க. அவங்களுக்கு… அதக் குடுத்து சரி செஞ்சுடுங்க. ம்… அப்பறம் இந்த விஷயம் வெளியில யாருக்கும் தெரியக் கூடாது. பாத்துக்கோங்க…”
“சார்… அது ஒன்னும் பிராப்ளம் இல்லங்க சார். சரி செஞ்சுடலாம். இந்தக் கூட்டத்துல இருக்குற எந்த நாயும் பசிக்குக் கூட குறைக்காது. நில்லுன்னு சொன்னாவே ஓடிப் போய்டும் சார். நாங்க சேரிக்குப் போயி காம்பரமைஸ் பண்ணிக்கறோம். நீங்க ஒன்னும் ஒரி பண்ணாதீங்க. இந்த மாதிரி வருசத்துக்கு நூத்தியெட்டு நடக்குது, அதுல இதுவும் ஒன்னு சார். நாங்க பாத்துக்கறோம். நீங்க கவலப்படாம போங்க”
“என்ன சுந்தரம்… நாயினா சொன்னீங்க… ம்… மேல இருக்குறவங்களுக்கு நாங்க நாயிங்க, எங்களுக்கு நீங்க, உங்களுக்கு அவங்களா? இல்லாதவங்கள இல்லாதவங்களாகவே வச்சிக்குறதுக்கு அரசாங்கத்தாலையும், உங்கள மாதிரி ஆளுங்களால மட்டும் தான் முடியும்”
“அப்புடி சொல்லலைங்க சார்… மன்னிச்சிருங்க… அவங்களுக்கு என்ன தேவையோ அத நாங்க செய்திடுறோம் சார்…” சுந்தரும், நாராயணனும் பணத்தை எடுத்துக் கொண்டு இறந்தவர்களின் சேரிக்குச் சென்றார்கள்.

“யோவ் நாராயணா… தலைக்கு மூனு லட்சம்னு பேப்பெர்ல கையெழுத்து வாங்கிட்டு, அம்பதாயிரம் மட்டும் குடுத்துரு”
“சுந்தரம் சார்… இதுங்களுக்கு இருபதே அதிகம்… நீங்க என்னடான்னா அம்பது குடுக்கச் சொல்லுறீங்க”
“யோவ் நாராயணா… இவங்க வாழ்க்கைல இவ்ளோ பணத்த மொத்தமா பாத்துருக்க மாட்டானுங்கையா. அதனால ஒரு பிரச்சினையும் இல்ல” எப்படியோ ஒருவழியா இறந்தவங்க குடும்பத்துக்கு நஷ்ட்ட ஈடு கெடச்சிருச்சு அது போதும் என எண்ணிக் கொண்டிருந்த இந்திரன்,
“சாமி… நாலு உசுரு போச்சுங்கய்யா… அவங்க பொண்டாட்டி புள்ளைங்க எல்லாரும் வீதிக்கு வந்துட்டாங்க… இறந்து போனவங்க வேலைய, அவங்க குடும்பத்துல யாருக்காவது குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் சாமி…” “பாக்கலாம்… பாக்கலாம்…” என்ற சுந்தரமும், நாராயணனும் சாலையில் தேங்கி நின்ற சேறு காலில் படாமல் காரில் ஏறிச் சென்றனர்.
“நாராயணா… பத்து லட்சம்… என்னோட பங்க என்னோட அக்கோண்டுல போட்டுருயா. மறந்து போயி உன் அக்கோண்டுல போட்டுறாத. நாலு பேரு சம்பளக் கமிசன் போச்சுன்னு நெனச்சேன் நல்லவேள இந்திரன் அவங்க குடும்பத்துக்காரங்களுக்கு வேல குடுக்கனும்னு சொன்னது நல்லதா போச்சு” பிதாமகனாக வந்த பிரதமர் சிறந்த ரயில் நிலையம் எனப் பாராட்டவும் செய்தார். மழை பெய்ததில் அந்த ரயில் நிலையச் சாக்கடைகள் எல்லாம் நடைபாதையில் சிதறத் தொடங்கின.
“நாராயணா… நாராயணா… எல்லா வேலையாட்களையும் உடனே வரச் சொல்லு… சாயங்காலம் பிரதமரு கெளம்புறாருயா… சாக்கட அடைச்சுக்கிச்சு போல, நேரம் வேற போய்ட்டு இருக்கு” செய்தியை அறிந்த இந்திரனும், மற்றவர்களும் ஓடி வந்தார்கள்.
“ஏண்டா… உங்களுக்கெல்லாம் புத்தியே கெடையாதாடா… பழைய சோத்த திங்கறதுக்கு அவ்ளோ அவசரமா. எல்லாரும் சீக்கிரம் எறங்கி சுத்தம் பண்ணுங்க” கைகளில் ஒட்டியிருந்த சோற்றுப்பருக்கைகள் சிதறி விழுந்து தற்கொலை செய்து கொள்ள, சுத்தம் செய்ய ஓட்டம் பிடித்தார்கள். எல்லாவற்றையும் சுத்தம் செய்து முடியப் போகும் தருணத்தில் பிரதமரும் அதிகாரிகளும் நிலையத்தை அடைத்தார்கள். எல்லோருக்கும் கையசைத்து பிரதமர் கிளம்ப அந்த ரயில் கொஞ்ச தூரம் சென்று நின்றது. பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஒருவர்,
“பிரதமறோட கூபேயில உள்ள டாய்லெட்ட கிளீன் பண்ண ஆளு வேணும். சீக்கிரமா பண்ணனும். பத்து நிமிஷம் தான் டைம்” பாதுகாப்பு காரணமா வண்டிய ரொம்ப நேரம் நிறுத்த முடியாது. இந்திரனை அழைத்துக் கொண்டே தலை தெறிக்க ஓடினான் சுந்தரம், பிரதமரோட கக்கூசக் கழுவ இந்திரனுக்கு மட்டும் தான் அழைப்பு வந்துருக்கு. துப்பாக்கி எந்துன ரெண்டு பேரு இந்திரன அழைச்சிட்டுப் போறதப் பாத்த மத்தவங்க.
“யோவ்… நம்ம பொழப்பு அவ்ளோ கேவலம் ஒன்னுமில்லையா, பிஞ்சு போன வெளக்குமாருக்கும், இத்துப் போன இரும்பு வாளிக்கும், நஞ்சு போன இந்திரனுக்கும் துப்பாக்கி எந்துன பாதுகாப்ப பாத்தல்ல” மீண்டும் அந்த ரயில் நிலையத்திற்கு அனைத்து ரயில்களும் வரத் தொடங்கின. இந்திரனும் கொஞ்சம் வேலையாட்களும் காஞ்ச பீயை பொறுக்கச் சென்றார்கள்.
“என்ன தண்டவாளத்துக்கு ஒரே நடுவுல கூட்டமா இருக்கு?” இந்திரனும் மற்றவர்களும் ஓடிச்சென்று பார்த்த போது காதல் மோதலில் இருவரின் உடல்கள் அங்குமிங்குமாகச் சிதறிக் கிடந்தது. ஒன்றிரண்டு ரயில்கள் அந்த உடல்களின் மீது சவாரி செய்து கொண்டே போயிருந்தன. அங்கிருந்த காக்கிச் சட்டையில் ஒருவர். “யோவ் நீங்க நாலு பேரும் இங்க வாங்க… இந்த ரெண்டு பொணங்களோட கை, காலு, தல எல்லாம் எடுத்து தனித்தனிச் சாக்குல போடுங்க” இந்திரனும் மற்றவர்களும் திகைத்துப் போய் நின்றார்கள்.
“என்னையா அப்புடியே நிக்குறீங்க… ஆஸ்பத்திரில இருந்து ஆள் வரதுக்குள்ள இங்க ஒன்னுமிருக்காதுயா… யோவ் நீங்க சும்மா ஒன்னும் செய்ய வேண்டாம்யா, இந்தாங்க இந்தப் பணத்த வச்சுக்கோங்க” பொணத்தைக் கூட பகச்சுக்கலாம், உசுரோடயும், அதிகாரத்துலையும் இருக்குறவங்கள நாம நிமுந்து கூடப் பாக்க முடியாது என்பது இந்திரனுக்கு மட்டுமில்ல அங்க இருந்த எல்லாருக்கும் தெரியும். உருக்குலைந்த பிணங்களை படம்புடிக்க வந்த பத்திரிக்கையாளர்,
“தோழர்… தோழர்… நில்லுங்க தோழர்…” இந்திரனையும் மற்றவர்களையும் நிற்க வைத்த அவர்,
“என்ன தோழர் கையுறை இல்ல, முகக் கவசம் இல்ல… மனித உடல சும்மா தூக்கிப் போடுறீங்க. உங்க உடம்பெல்லாம் ரத்தமா இருக்கு பாருங்க”
“சாமி… எங்க பொழப்பே இதுதாங்க… எல்லாம் செஞ்சுதறேன்னு அதிகாரிங்க சொல்லிருக்காங்க. சீக்கிரமா கிடைச்சிரும்”
“உங்க பேரென்ன தோழர்? உங்க வீடெல்லாம் எங்க இருக்கு? உங்க கொழந்தைங்க எல்லாம் பள்ளிக்கூடம் போறாங்களா?”
“சாமி… எங்க பேரச் சொன்னா எங்க கஷ்ட்ட காலம் மாறவா போகுது. புள்ளைங்க படிக்குதுங்க, பள்ளிக் கூடம் போனா வெளக்குமாறு மாதிரி ஓரத்துல ஒக்கார வச்சிராங்களாம். எம்புள்ளைங்களும் சாகுற வர பீய அள்ளுனாதான் ஒருவா கஞ்சி குடிக்க முடியும் சாமி. பாதி சனத்தொகையோட பீய நாங்க அள்ளிட்டோம், மீதி சனத்தொகையோட பீய்ய எங்க புள்ளைங்க அள்ளும்”
“சாமி… சாமின்னு… கூப்பிடுறது உங்க ரத்ததுலையே ஊரிப் போச்சுன்னு நெனைக்குறேன் தோழர். தோழர்னு கூப்புடுங்க சாமி… நீங்க இப்புடியே இருக்குறதுனாலதான் எல்லாரும் உங்க மேல குதுர ஏறுறாங்க”
“எத்தனையோ ஆட்சி மாறிடுச்சு… அட அது போகட்டுமுங்க கரண்டு ரயிலே வந்துருச்சு, ஆனா நாங்க ரயில்ல இருக்குற கக்கூஸ மட்டும் தான் பாத்துருக்கோம். இங்க இருந்து டெல்லி போற பீயையும் நாங்க தான் அள்ளுறோம், டெல்லியில இருந்து இங்க வர பீயையும் நாங்க தான் அள்ளுறோம்”
பேசிக்கொண்டே நடந்ததில் இந்திரனுடைய கண்களில் தண்ணீர் பாட்டில் தென்பட்டது. அதை எடுத்துக் குடித்த போது, “தோழர் அதுல அசிங்கம் ஒட்டியிருக்கு தோழர்… இந்தாங்க தோழர் தண்ணி எங்கிட்ட இருக்கு இதக்குடிங்க”
“பரவாலங்க சார்… என்னைக்கு இங்க ரயில் நிலையம் வந்துச்சோ அன்னைல இருந்து எங்க சேரிக்கு குடி தண்ணி வரதே இல்ல… வருஷம் இருவத்திரண்டு ஆச்சு…” மனத்தைக் கல்லாக்கிக் கொண்ட பத்திரிக்கையாளர் அவரது பத்திரிகையில் இந்திரனைப் போன்றோரின் கொடுமைகளை எழுதியிருந்தார். அந்தப் பத்திரிக்கைச் செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் போதே,
பயணிகளின்கனிவானகவனத்திற்கு, வண்டி எண், பூஜ்யம்… பூஜ்யம்… பூஜ்யம்… பூஜ்யம், டெல்லியிலிருந்து, கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் விரைவு ரயில் இன்னும் சற்று நேரத்தில், இரண்டாம் நடைமேடையை வந்தடையும் என எதிர் பார்க்கப்படுகிறது. அழைப்பொலியைக் கேட்ட இந்திரனும் மற்றவர்களும் விளக்குமாற்றையும், வாளிகளையும் தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.

Leave a comment