மழைச் செம்புச் சடங்கும் மூதேவி வழிபாடும் (பகுதி 1)

முனைவர் ஆ.திருநீலகண்டன்
வரலாற்றுத்துறைப் பேராசிரியர்,
ம.தி.தா. இந்துக்கல்லூரி, திருநெல்வேலி

தமிழ்நாடு போன்ற வறண்ட வெப்பமண்டல நாடுகளில் உள்ள மக்கள், குறிப்பாக உழவர்கள் மழை வேண்டிப் பல சடங்குகளைச் செய்கின்றனர். மழைச் செம்பு எடுத்தல், மழைக்கஞ்சி காய்ச்சுதல், கொடும்பாவி கட்டி எரித்தல், ஒப்பாரி வைத்தல், கழுதைகளுக்கு மணம் செய்து வைத்தல் போன்றன அவற்றுள் சில.

பொதுவாக மழைச்சடங்குகள் என்பன மந்திரச் சடங்குகள் (Magical Rituals) ஆகும். இங்கே அது ஒத்த மந்திரச் சடங்காக (Imitative Magic) அல்லது பாவனை மந்திரச் சடங்காக நிகழ்த்திக் காட்டப்படுகிறது. ‘ஒத்தது ஒத்ததை உருவாக்கும்’ என்பதே இம்மந்திரச் சடங்கின் அடிப்படையாகும். அதாவது, ஏற்பட வேண்டிய விளைவும் அதனை அடையச் செய்யும் செயலும் ஒத்திருக்கும்.[1]

இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வது நெல்லை மாவட்டம் (சங்கரன் கோவில் புளியங்குடி முதன்மைச் சாலையிலுள்ள) முள்ளிக்குளம் எனும் சிற்றூரில் நடக்கும் மழைச்செம்புச் சடங்கையே. நெல்லை மாவட்டத்தின் வறண்ட பகுதிகளுள் சங்கரன்கோவில் பகுதியும் ஒன்று என்பது நினைவில் கொள்ளத்தக்கது. மழைக்குரிய காலமாகிய ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை பெய்யாத போது இச்சடங்கு நிகழ்த்தப்படுகின்றது. ஏதாவது ஒரு செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் மாலை வேளையில் இது நடைபெறுகின்றது. இச்சடங்கை முன்னின்று செய்பவர்கள் பெண்களே.

பூப்பெய்தாத மூன்று சிறுமிகள் செம்புகளில் தண்ணீர் நிரப்பி அவற்றை எருக்கலங்குழைவால் மூடி எடுத்து வருவர். அச்செம்புகளுக்கு முறையே ‘மழை’ (அ) குளச்செம்பு’, ‘வெள்ளாமைச்செம்பு,  ‘பஞ்சச் செம்பு’ என்று பெயர் கொடுப்பர். பின்னர் அவற்றை ஊர்ப்பொது இடத்தில் வைப்பர். அவற்றின் அருகே நிறைநாழிக்கு மாற்றாக முக்கால்வாசி நெல் நிரப்பிய நாழி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அதில் பெண்கள் தங்கள் தலையில் இருந்து ஒரு பேனை எடுத்துவிடுவர். பின்னர் தாழியை முழுவதும் நெல்லால் நிரப்புவர். அதன்மீது எருத்துண்டு (வறட்டி), மஞ்சள்துண்டு, கரித்துண்டு மூன்றையும் வைப்பர். பின்னர், செம்புகளில் உள்ள தண்ணீரில் விளக்கெண்ணையைச் சொட்டுச் சொட்டாக மூன்று முறை விடுவர். அப்படி ஒவ்வொரு செம்பிலும் விடும்போது, மழை! மழை! (அ) குளம்/ குளம்/ என்று ஒரு சொட்டும். வெள்ளாமை/ வெள்ளாமை! என்று ஒரு சொட்டும். பஞ்சம். பஞ்சம் என்று ஒரு சொட்டும் சொல்லிக்கொண்டே விடுவர். பின்னர், செம்புகளை மீண்டும் எருக்கலங்குழையால் மூடிவிடுவர்.

பிறகு 7 (அ) 9 வீடுகளில் பழஞ்சோறு வாங்கி அதை அவ்வூரைச் சேர்ந்த வண்ணார் சமூகப் பெண்ணிடம் (வண்ணாத்தியிடம்) கொடுப்பர். அதன் பின்பு அந்தப் பெண்ணை எருக்கலங்குச்சி ஒன்றினால் அடித்து விரட்டுவது போன்று பாவனை செய்வர். அந்தப் பெண் மழை! மழை! என்று சத்தமிட்டபடியே ஊரின் வடக்குத் திசையை நோக்கி ஓடிப் போய்விடுவார். (மாறிவரும் சமூகச் சூழ்நிலைகளையொட்டி இவ்வழக்கத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் இங்கு இவ்வழக்கம் அண்மைக் காலங்களில் மாறிவருவதாகவும், மழைச் செம்புச் சடங்கை நடத்தும் பெண்களில் ஒருவர் குறிப்பிட்டார்.)

பின்னர் ‘பஞ்சம்’ என்ற பெயர் கொடுக்கப்பட்ட செம்பை ஊருக்கு வெளியே வடக்கில் உள்ள ஒரு முச்சந்தியில் கொண்டு விட்டுவிட்டுத் திரும்பிப் பாராமல் வந்துவிடுவர். மற்ற இரண்டு செம்புகளில் உள்ள நீரையும் ஊருக்கு நடுவில் அல்லது கிழக்கு, தெற்குத் திசைகளில் விடுவர். மேற்குத் திசையில் விடுவதில்லை. ஊருக்கு மேற்கே மழையைக்  கொண்டுவரும் மேற்கு மலைத்தொடர் இருப்பது குறிக்கத்தக்கது.

பின்னர் சடங்கு நடைபெறும் ஊர்ப் பொது இடத்தில் பொங்கல் வைத்து அனைவரும் பகிர்ந்துண்ணுவர். இச்சடங்கில் நெல்லில் விடப்பட்ட பேன் ஊர்ந்து எருவின் மீது ஏறினால் மிகுந்த செழிப்பு, மஞ்சளின் மீது ஏறினால் ‘விளைச்சல் உறுதி’, கரியி்ன் மீது ஏறினால் ‘நிலமும் கரியாகிவிடும்’ என்பதும், ‘ஒவ்வொரு செம்பிலும் உள்ள பஞ்சச் சொட்டு மற்ற இரண்டுடனும் சேராது தனித்து இருந்தால் மழை பெய்யும். சேர்ந்து விட்டால் மழை பெய்யாது’ என்பதும் இச்சடங்கின் வழி பெறப்படும் நம்பிக்கை ஆகும்.[ii]

இங்கே மழைவேண்டிச் செய்யப்படும் இத்தகைய நிறைநாழிப் பேன் சடங்கு தென் மாவட்டங்களில் வேறு சில இடங்களில் பெண் வீட்டாரால் மாப்பிள்ளையைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படுகிறது எனத் தெரிகிறது. இச்சடங்கில், மழைச் செம்புச் சடங்கில் இடம்பெறும் எருத்துண்டுக்குப் பதிலாக தங்க நகை வைக்கப்படும். நெல்லில் விடப்படும் மணப்பெண்ணின் தலைப்பேன் மஞ்சளில் ஏறினால் அந்தச் சம்பந்தம் மிகச் சிறந்தது. தங்க நகையில் ஏறினால் பெண்ணைக் கொடுக்கலாம். கரித்துண்டில் ஏறினால் மண உறவு நடைபெறாது என்பது இச்சடங்கின் மூலம் பெறப்படும் நம்பிக்கையாகும்.[iii]

மழைச்சடங்கு போன்றதொரு நாட்டார் சடங்கை, சமூக இயல் நோக்கில் ஆராயும்போது, அதில் பங்குபெறும் சாதிகளையே முதலில் கணக்கில் கொள்ள வேண்டும். அவ்வகையில் முள்ளிக்குளம் சிற்றூரில் நடைபெறும் சடங்கில் இரண்டு சாதியினர் பங்கு பெறுகின்றனர். முதலாமவர், அச்சடங்கை நடத்துகின்ற கோனார் சாதியினர். இரண்டாமவர்.அடித்தட்டு மற்றும் சேவைச் சாதியினரான வண்ணார் சாதியினர். சமூக இயல் ஆய்வுகளில் அடித்தட்டு மக்களின் சமூக வரலாற்றுப் பாத்திரத்தை முதன்மைப்படுத்தி ஆராயும் போக்கு தற்போது வளர்ந்து வருகின்றது. இவ்வகையில் இச்சடங்கில் இடம் பெறும் வண்ணார் சாதியினை, அவர்கள் இச்சடங்கில் பெறும் இடத்தின் காரணமாக அச்சாதியினருடைய வழிபாடு மற்றும் தொல்சமயச் சடங்கியல் தொடர்புகள் குறித்து கவனமாக ஆராய்வது. இங்கே அவசியமாகிறது.

வண்ணார் சாதி போன்ற அடித்தட்டு மற்றும் அவைதீகச் சாதிகளிடையே இன்றுள்ள சூழலில் எல்லாத் தெய்வங்களையும் வழிபடும் வழக்கம் உள்ளது. எனினும் சாதிய நிலையில் அவற்றோடு குறிப்பான உறவுடையவை எனக் கற்பிக்கப்பட்ட சில நாட்டார் தெய்வங்களை அல்லது அவைதீகத் தெய்வங்களை நம்மால் பட்டியலிட இயலும். இதை, பறையர்-காத்தவராயன், சக்கிலியர்-மதுரைவீரன், கொல்லாசரிகள்-உலைக்கூடத்தான் (முள்ளிக் குளம்) வேளாளர்-கருப்பசாமி, நாடார்கள்-பத்திரகாளியம்மன் என்கிறவாறு நாம் காணலாம். தெளிவான வரையறை இல்லாத காரணத்தால் வண்ணார் சாதியும் அதற்குரிய தெய்வமும் இப்பட்டியலில் இடம் பெறவில்லை.

ஆனால் நாம் ஏலவே விவரித்த மழைச் செம்புச் சடங்கும், அதில் வண்ணார் சாதி பெறும் இடமும், அச்சாதிக்குரியதாகக் கற்பிக்கப்பட்ட தெய்வம் இன்னது என்பதைக் குறியீட்டு மற்றும் சடங்கு அடிப்படையில் வரையறை செய்ய உதவுகின்றன. இக்குறியீடுகளையும், சடங்குகளையும் ஆராய்வதற்கு ஏதுவாக இச்சடங்கோடு தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட அவைதீகப் பெண் தெய்வத்தைப்பற்றி அறிவது அவசியமாகிறது. அவ்வகையில் மூத்ததேவி எனப்படும் மூதேவி பற்றிச் சில செய்திகளை ஒருங்கு திரட்டிக் காணவேண்டும்.

‘மூத்தவள்’ என்று பொருள்படும் பெயர் கொண்ட மூதேவி, இனக்குழு காலத்திய வளமை மற்றும் தாய்த்தெய்வம் ஆகும். வடமொழியில் ‘ஜேஷ்டா’ என இவளை அழைப்பர். ஜேஷ்டா என்றால் மூத்த என்று பொருள். தமிழ்நாட்டில் குறிப்பாக வடதமிழ்நாட்டில் பல்லவர் காலத்திய மூதேவிச் சிற்பங்கள் தற்போது பெருமளவில் கண்டறியப்பட்டுள்ளன. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் படைப்பான காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள ஐம்பத்தெட்டுச் சுற்றுக் கோவில்களில், ஜேஷ்டாதேவிக்கு மூன்று கோவில்கள் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் ஆய்வாளருக்குத் தெரிந்து ஊர்க்காட்டுச் சிற்றூரில் இத்தெய்வத்துக்குச் சிலை இருக்கிறது.

இதனைக் கண்டறிந்த தொல்லியல் அறிஞர் மா.செந்தில் செல்வக்குமரன், உருவ இயல் அமைதி கொண்டு இதன் காலம் கி.பி.10ஆம் நூற்றாண்டு என வரையறை செய்துள்ளார்.

பெரும் வயிறும், பருத்துச்சரிந்து காணப்படும் மார்பகங்களும் இத்தெய்வச்சிலையின் பொது இயல்பாகும். இது இவள் வளமை காட்டும் தாய்த் தெய்வம் என்பதை உறுதிப்படுத்தும். அமர்ந்த கோலத்தில் வலது கை அபய முத்திரையுடனும், இடது கை தொடை மீது பதிந்தும் காணப்படும். சில இடங்களில் வலது கையில் நீலோற்பல மலரும். இடது கை இருக்கை மீதும் காணப்படும். இவள், ‘கரிய நிறமுடையவள்’. என விஷ்ணு தர்மோத்திர புராணம் குறிப்பிடுகிறது. மாட்டுமுகம் கொண்டு, வலது கையில் தண்டமும், இடது கையில் கயிறும் ஏந்தியவாறு மூதேவியின் வலப்புறம் காணப்படும் ஒரு ஆண் உருவம் இவளது மகனாகக் கருதப்படுகிறது. மாந்திகன் என இவன் அழைக்கப்படுகிறான். இவளின் இடப்புறம் காணப்படும் பெண் உருவம், இவளது மகள் கருதப்படுகிறது. இவள் மாந்தி என அழைக்கப்படுகிறாள். மூதேவியின் கொடி காக்கைக் கொடி. வாகனம் கழுதை, கைக்கருவி விளக்குமாறு. மூதேவியின் தோற்றம் பற்றி விஷ்ணு தர்மோத்திர புராணம் குறிப்பிடும் போது. பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடையும்போது அதிலிருந்து பல பொருட்களும், உயிர்களும் தோன்றின. அவற்றுள் லட்சுமி தேவியும் தோன்றினாள். அவளுக்கு முன்பு தோன்றியவள்தான் மூதேவி என்கிறது. லிங்க புராணம் இவள் தோற்றம் பற்றிக் கூறும்போது, ‘பாற்கடலில் காலகூடம் எனும் உலகையே அழிக்கும் நஞ்சு தோன்றியது அதனைத் தொடர்ந்து மூதேவி தோன்றினாள்’ என்கிறது. மேலும், (வேத மரபுக்கு எதிரான) பவுத்தர்கள் வாழும் இடங்களும், வைதீகமல்லாத சடங்குகள் நடைபெறும் இடங்களும் மூதேவி விரும்பி வாழும் இடங்கள் என்கிறது.[iv]

இவற்றோடு அரசமரத்தின் நிழல், விளாமரத்தின் அடி, விளக்கின் நிழல், மனிதர் நிழல், இருள், சாரமில்லாத அந்தணன் நிழல், உண்ட நீரின் எச்சில், ஆடை துவைத்த நீர், விளக்குமாற்றின் புழுதி, வெந்த சாம்பல், வேகாத கரிப்புழுதி, ஆட்டுத்தூசு ஆகியனவும் மூதேவி வாழிடங்களில் சிலவாக குறிப்பிடப்படுகின்றன.[v]

மேலும், அவள் தனது கணவனான துசாக முனிவரால் கைவிடப்பட்டவளாகவும், உணவு, உறைவிடத்துக்காக அலைந்து திரிபவள் எனவும், விஷ்ணுவின் கருணையைப் பெற்ற பின் விஷ்ணு பக்தர்களாலும், பெண்களாலும் உணவு படைக்கப்படுபவள் எனவும் லிங்க புராணம் விவரிக்கிறது.[vi]

தமிழ் நிகண்டுகள் இவளை தவ்வை, காலடி, மூதேவி, காக்கைக் கொடியாள், கழுதை வாகனத்தாள், முகடி, ஏகவேணி (ஒற்றைச்சடையாள்) எனப் பல பெயர்களால் சுட்டுகின்றன. லிங்கபுராணம் இவளை ‘லட்சுமி அல்லாதவள்’ என்று பொருள்பட அலெட்சுமி’ என்றும் அழைக்கிறது. தமிழ் நிகண்டுகள் இவளைத் திருவின்முன் செழுங்கடற் பிறந்தாள், திருவினுக்கு மூத்தாள் என்றும் அழைக்கின்றன.[vii]

இதே போன்று மூதேவியை லட்சுமிக்கு எதிர்வாகவும். சோம்பலின் வடிவாகவுமே வள்ளுவரும் பார்க்கிறார்.

மடி உளாள் மாமுகடி என்ப மடி இலான்

தாள் உளாள் தாமரையினாள்       (அதி.62, ஆள்வினையுடைமை)

பார்ப்பனர்கள் துஷ்டர்களாக இருந்தாலும் வணங்கத் தக்கவர்களே, மாறாக அடித்தள மக்களான சூத்திரர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கீழ் மக்களே’ என்பதை ஓர் எடுத்துக்காட்டு மூலம் கற்பிக்க முயலும் பராசர ஸ்மிருதி. ‘பசுவொன்று துஷ்டத்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறது. குட்டிபோட்ட கழுதையொன்று சாதுவாகவும் வீட்டிலிருக்கிறது. இவ்விரு மிருகங்களில் அறிஞன் பசுவை விட்டுவிட்டு கழுதையைக் கறந்து பாலைக் கிரகிப்பானா?” என்று கேட்கிறது.[viii]

இங்கே மேட்டிமையின் குறியீடாகக் காட்டப்படும் பசுவுக்கு எதிராக அடித்தள மக்களின் சார்பில் குட்டி போட்ட பெண் கழுதை காட்டப்படுகிறது. மூதேவியின் வாகனம் கழுதை என்பதே இதற்குக் காரணம் ஆகும்.

மேலும் போரில் தோற்ற பகை அரசனை இழிவுபடுத்த வேண்டி அவனது நாட்டைக் கழுதை ஏர் பூட்டி உழுத இலக்கியச் செய்திகளும், குற்றம் செய்தவர்களை இழிவுபடுத்தித் தண்டிப்பதற்காக அவர்களைக் கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து வருவது அண்மைக்காலம் வரை வழக்கமாக இருந்தது என்பதும், அத்தகைய தண்டனை பெற்றவர்கள் ஊர்ச்சபையின் வாரியப் பெருமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள் என்று கூறும் உத்திரமேரூர் கல்வெட்டுச் செய்தியும் இங்கு நினைவுகூரத்தக்கன.[ix]

தமிழ் நிகண்டுகள் மூதேவியை கேட்டை, கெடலணங்கு, கேடி என அழைப்பதால் துன்பத்துக்கும், துரதிருஷ்டத்திற்கும், சோம்பலுக்கும், தீட்டு, கண்ணேறு ஆகியவற்றுக்கும், அழுக்கிற்கும், அழகின்மைக்கும் குறியீடாக இன்றைக்கு ஆக்கப்பட்டிருக்கும் இத்தெய்வம் ஒரு காலத்தில் மக்களால் பரவலாக வழிபடப் பெற்றதாகும்.

பொதுவாக வழிபாட்டுச் சடங்குகளை இருவிதமாகப் பகுக்கின்றனர் மானுடவியல் அறிஞர்கள். ஒன்று ‘வேண்டுதல் வழிபாடு’. மற்றொன்று ‘விலக்குதல் வழிபாடு’. திருமகளை வழிபடும் மக்களே முதேவியையும் வழிபட்டது, எதிர்மறை வழிபாட்டு முறையாகும் (விலக்குதல் வழிபாடு). ‘மூதேவியே எங்களுக்கு தீமை, சோம்பல், வறுமை, நோய் இவைகளை வழங்காதே’ என்று வேண்டிக் கொள்வதற்கே இவ்வழிபாட்டு முறை அமைந்ததாகும்.[x]

மேலும், சிறந்த கடவுளான திருமால் இருக்கையில் மூதேவியை வழிபடும் மக்களின் செய்கையைத் தொண்டரடிப்பொடி ஆழ்வார் கேலி செய்வதிலிருந்து ‘சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே. (தொண்டரடிப்பொடி, திருமாலை 881) இதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

துர்க்கைக்கும் ஜேஷ்டா தேவிக்கும் கிபி 773 அளவில் திருப்பரங்குன்றத்தில் நக்கன் கொற்றி என்ற பெண்ணால் தனித்தனிக் கோயில்கள் எடுக்கப்பட்டன என்ற கல்வெட்டுச் செய்தியும் இங்கு குறிப்பிடத்தகுந்தது. ஆகும்.[xi]

கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரை (கி.பி. 10, 11 ஆம் நூற்றாண்டு வரை; புலவர் தெ. இராசு) மக்களால் வழிபடப்பட்டு வந்தது. சிவாலயங்களில் பரிவார தேவதையாக எங்கு அமைக்க வேண்டும். ஊரில் தனியாக மூதேவி கோயில் எங்கு அமைக்க வேண்டும் எனத் தனியாக சிற்ப சாத்திர நூல்கள் விரிவாகக் கூறுகின்ற அளவுக்கு இத்தெய்வ வழிபாடு கி.பி. 10, 11 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாடெங்கும் பரவலாக இருந்தது. அதன் பின்னர் இத்தெய்வத்தின் நேரடி வழிபாடு பெருமளவு மறைந்தது. தற்போது சில இடங்களில் மூதேவியின் கற்பிக்கப்பட்ட தன்மை தெரியாமல் வழிபடப்படுகிறது.[xii]

சில இடங்களில் இத்தெய்வம் மூதேவியாக அறியப்படாமல் பல்வேறு உள்ளூர்ப் பெயர்களால் வழிபடப்படுகிறது. இன்னும் சில இடங்களில் இது உருமாற்றம் பெற்று கிராமத்துப் பந்தித் தெய்வப்பரிவாரங்களோடு ஒன்றாக ஆக்கப்பட்டு (ஐயனார் பரிவாரம் போன்றன) வழிபடப்படுகிறது.[xiii] இவ்வாறு உருமாற்றம் பெற்ற ஒரு மூதேவி தெய்வம் ‘மாகாணி சேஷ்டா தேவி’ என்ற பெயரில் தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலில்

வழிபடப்படுகிறது.[xiv]

எனினும் துரதிருஷ்டத்திற்கும், தீட்டுக்கும், திருஷ்டிக்கும். சோம்பலுக்கும், அழகின்மைக்கும் குறியீடாகக் கற்பிக்கப்பட்ட இத்தெய்வத்தின் நேரடியான(எதிர்மறை) வழிபாடு தற்போது சமூக உளவியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது என்றே கூற வேண்டும்.

தமிழ்நாட்டிலேயே மிகப்பழைய மூதேவி சிற்பமாகக் கருதப்படுவது செங்கற்பட்டு அருகில் உள்ள வல்லம் ஊரில் காணப்படுகிறது. இங்கு கி.பி. 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகேந்திரவர்ம பல்லவனால் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலில், இச்சிற்பம் காணப்படுகிறது. அங்கு நடுவில் சிவலிங்கமும் அதன் ஒருபுறம் பிள்ளையாரும் மறு புறம் மூதேவியுமாக அச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.[xv]

மூதேவியைப் போலவே விநோதமான உருவமும், கிட்டத்தட்ட ஒத்த தன்மையும் உடைய தெய்வமே ‘விக்கினாசுவரன்” என்ற கணபதி ஆகும்.[xvi] மூதேவிக்கும் கூட ‘விக்கினபார்சாதாr’ (viஎnaparshada) என்ற பெயர் உண்டு.[xvii]

மூதேவியின் வழிபாடு செல்வாக்கிழந்துவிட்ட இன்றைய நிலையில் கணபதி வழிபாடு பெருந்தெய்வ நெறிக்குள் (வைதீக நெறி) புகுந்து, மிகுந்த செல்வாக்குடன் திகழ்வதும், மூதேவி, கணபதி ஆகிய தெய்வங்களின் உறவும் தனி ஆய்வுக்குரியன. வைதீக எழுச்சிக்கு முன் வழிபடப்பட்ட பல வளமைத் தெய்வங்கள், பேரரசுகளின் உருவாக்கத்தின் போது வைதீகம் (அ) சமஸ்கிருத மரபுகளால் அழிக்கப்பட்டன அல்லது தமதாக்கிக் கொள்ளப்பட்டன. இத்தகைய சமஸ்கிருதமயமாதலுக்கு ஆட்படாத தெய்வங்கள் இழிவுபடுத்தப்பட்டன. மூதேவியும் இவ்விதமே இழிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இத்தெய்வத்தின் சிலைகளில் முப்புரிநூல் காணப்படாததும், கச்சை இல்லாத திரண்ட மார்பகங்களும் இவள் சமஸ்கிருத மரபை ஏற்காத திராவிடத் தொல்குடிகளின் வளமைத் தெய்வம் என்பதைத் தெரிவிக்கின்றன. மேலும் இத்தெய்வம் வேதமரபுகளை ஏற்காததால் பௌத்தம் போன்ற அவைதீக மரபுக்குச் சென்றிருக்க வேண்டும். பின்னாளில் அரசுகளின் ஆதரவுடன் வைதீகம் நடத்திய மூர்க்கமான பண்பாட்டுத் தாக்குதலால் அவைதீக மரபுகள் செல்வாக்கிழந்த போது மூதேவி தெய்வமும் இழிவுக்குள்ளாகியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.[xviii]

இத் தெய்வம் வைதீக மரபுகளை ஏற்காது என்ற லிங்கபுராணச் செய்தி போன்றன இதனை உறுதிப்படுத்துகின்றன.

இன்றைய வாழ்வியலில் கழுதை என்பது வண்ணார் சாதியாரின் தொழிலோடு உறவுடைய உயிரினமாக மட்டுமே கருதப்படுகிறது. மேலும், வண்ணார்கள் தங்கள் தொழிற்களமான வெள்ளாவி அடுப்புக்கும் பொங்கல் வைக்கும் பழக்கம் உடையவர்கள். பழைய கற்சிலைகளில் மூதேவியின் உருவத்தோடு மாட்டு முகம் கொண்ட ஆண் உருவம் இருப்பது முன்னரே குறிப்பிடப்பட்டது. இதுவே வண்ணார்கள் வழிபடும் ‘மாடனாக’ இருக்கலாம். மேலும், முள்ளிக்குளத்தில் வண்ணார் சமூகப் பெண்கள் மத்தியில் ‘மாடத்தி’ ‘நல்லமாடத்தி’ என்ற பெயர்கள் இன்றும் பெரு வழக்காக உள்ளன. மேலும் வண்ணார்கள் வழிபடும் மாடனை ‘வண்ணார மாடன்’ எனப் பரவலாக அழைக்கின்றனர். இவ்வாறு வேறு சாதிப்பெயர்கள் மாடன் தெய்வத்துக்கு முன்னொட்டாக வருவது தென்தமிழகத்தில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வழிபடும் மாடனை ‘வண்ணாரமாடன்’ எனச் சாதி முன்னொட்டுச் சொல்லி அழைக்க இக்காலத்தில் விரும்பவில்லை. மற்ற சாதியினரே அவ்வாறு அழைக்கின்றனர். மாடன் (அ) மாடசாமி என அழைப்பதையே வண்ணார்கள் விரும்புகின்றனர்.) சமூக மோதல்களில் கொலையுண்டவர்களையே மாடன் என வழிபடுகின்றனர் என்பது நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் ஆ.சிவசுப்பிரமணியம் போன்றவர்களின் கருத்து ஆகும்.[xix]

மாடன்வகைத் தெய்வங்களே 31க்கும் மேற்பட்டுள்ளன. இவற்றைச் சில பொதுவான காரணங்கள் கொண்டு வகைப்படுத்தலாம்.

1. சுடலைமாடன் வில்லிசைக் கதையில் வருவன.

2. ஊரின் பெயரை வைத்து அழைக்கப்படுவன.

3. கொலை, விபத்து போன்ற காரணங்களால் சுடலை மாடனாக குறிக்கப்படுவன

என்று மூன்றுவகையாகப் பேரா. அ.கா. பெருமாள் இத்தெய்வங்களை வரையறை செய்ய முயல்கிறார்.[xx] மேற்குறிப்பிட்ட வகைப்பாட்டுக்குள் அடங்காத தெய்வமாக வண்ணாரமாடனை இவ்வாய்வு கருதுகிறது. மேலும் வண்ணார்களே ஆதிக்கடவுளான புலைமாடன் தொடங்கி[xxi] தளவாய்மாடன், சுடலைமாடன், சப்பாணிமாடன் போன்ற பல மாடன் தெய்வங்களை வழிபடுகின்றனர்[xxii] என்பதும் கள ஆய்வில் தெரியவந்தது.


[1] ஆ.சிவசுப்பிரமணியன், மந்திரமும் சடங்குகளும்,  மக்கள் வெளியீடு, 1999, சென்னை.பக்.3.

[ii] மழைச் செம்புச் சடங்கு பற்றிய தகவலளித்தவர்கள் வெ.திலகவதி,69, கோனார், முள்ளிக்குளம், சி.திலகவதி, 59, கோனார், முள்ளிக்குளம், லட்சுமி, 63, கோனார், முள்ளிக்குளம், கு.பாண்டியன், 59, கோனார், முள்ளிக்குளம், கோமதி, 65, வண்ணார், முள்ளிக்குளம்.

[iii] பேனும் பெண்ணும், ஆனந்தவிகடன், 15.04.2001

[iv] T.A. Gobinatharao, Elements of Hindu Iconography Vol. I part II. page 390-399

[v] புலவர் செ.இராசு, தமிழர் மறந்த தனித்தெய்வம், ஆய்வுக்கோவை, தொகுதி 3, 1988, பக்.96-99

[vi] T.A.Gobinatharao, Page 390-399

[vii] மு.சண்முகம்பிள்ளை, நிகண்டு சொற்பொருள்கோவை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1982

[viii] கு.நெடுஞ்செழியன், பேராசிரியர் சக்குபாய், 1996, சமூகநீதி, மனிதம் பதிப்பகம், திருச்சி

[ix] இரா.நாகசாமி (பதி.), 1983, மதுரை மாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கத் தொகுதி 3, வரலாற்றுப் பேரவை, சென்னை 18, பக்.29-30

[x] புலவர் செ.இராசு, பக். 96-99

[xi] A.R.37 of 1908, Thirupparankundram S.I. I Vol. XIV

[xii] புலவர் செ. இராசு, பக்.96-99

[xiii] K.G. Krishnan, Jyeshta- A forgotten deity, Studies in south indian history and Geography, New Era Publications, 1981, Madras, Page 15-18

[xiv] மு. இராமசாமி, நன்குமடி நற்குடி வேளாளர் வரலாறு, ம.தி.தா. இந்துக்கல்லூரி ஆண்டுமலர், 1976, பக்.28.

[xv] தி.நா.சுப்பிரமணியன், ஜ்யேஷ்டாதேவி, கலைமகள், 1944 மார்கழி, பக்.290

[xvi] K.Damodaran (Ed.),Jyesta cult -an overview tamilnadu archaelogical perspective, Dept.of Archaelogy, 1999, Govt. of Tamilnnadu, Chennai, Page 110-116

[xvii] K.G.Krishnan, 1981, Page 18

[xviii] சொ.சாந்தலிங்கம், தமிழகத்தில் ஜேஸ்டா தேவி வழிபாடு, ஞானசம்பந்தம், தருமை ஆதீனத் திங்களிதழ், 1.01.03, பக்.62-63

[xix] தகவலாளி பேரா.ஆ.சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி, 4.6.2001

[xx] அ.கா.பெருமாள், 1993, தொல்பழம் சமயக்கூறுகள், பயோனியர் புக் சர்வீஸ், சென்னை 5, பக். 135

[xxi] தகவலாளி சுடலைமுத்து, 45, (வண்ணார்), வண்ணாரமாடன் கோயில் சாமிகொண்டாடி, சின்னச் சங்கரன் கோயில், அம்பாசமுத்திரம் 21.04.2001. கள ஆய்வு உதவி யு.சுப்பிரமணியன், (ஊர்க்காடு), எஸ்.கிருஷ்ணன் (அம்பை), ம.தி.தா. இந்துக்கல்லூரி மாணவர்கள், வண்ணார மாடன் கோயில், சின்ன சங்கரன் கோயில், அம்பை, 21.04.2000.

[xxii] கள ஆய்வு, 02.04.2000 வண்ணார மாடன் கோயில், வேற்றம்பட்டி, புளியங்குடி (கள ஆய்வு உதவி) சு.சக்திவேல் (சிங்கிலிப்பட்டி), ம.தி.தா. இந்துக்கல்லூரி மாணவர். வண்ணார மாடன் கோயில், சின்ன சங்கரன் கோயில், அம்பை 21.04.2000.

Leave a comment

Trending