அமரலோகம்
தமிழ்ச்செல்வத்தின் குமாரன்

காரிருளில் ஒளிந்திருந்த செங்கற் கட்டடத்தைப் பிய்த்துக் கொண்டு போகும் அளவிற்கு கொடுங்காற்று பேரிரைச்சலுடன் வீசியது. அதன் அருகாமையிலிருந்த புளிய மரங்கள் ஒவ்வொன்றாகப் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தன. அம்மரங்களிலிருந்து உதிர்ந்த இலைகள் புழுதியில் கலந்து, அந்தக் கட்டடத்தின் ஒதுக்குப் புறத்திலிருந்த சிவப்பு நீர் கலந்த கால்வாயில் விழுந்தன. பத்தடிக்கு ஒன்றாக மாட்டியிருந்த மஞ்சள் விளக்குகள் மின்னி மின்னி இப்பவோ அப்பவோ என எரிந்து கொண்டிருந்தன. இன்றைக்குப் புதியதாக விழுந்த பிணத்தை இழுத்துச் செல்லும் வண்டிச் சக்கரங்களின் கீச்சொலிகள், அந்தப்பிணவறைக் கதவை மெதுவாகத் திறந்தன. பிணத்தின் மீது போர்த்தியிருந்த ஆடை, ஆணோ பெண்ணோ எனத் தெரியாதபடி, வெகுநேரமாய்க் காத்துக்கிடந்த பிணங்களுக்குப் பின்னால் வரிசையில் நின்றது.
“பீட்டரு… பீட்டரு… எங்க போயித் தொலஞ்சான் இவன். இந்தத் தோமசையும் ஆளக் காணோம்… இந்தப் பொணங்களோட சொந்த பந்தமெல்லாம் இதுங்களக் கொண்டு போயி காரியம் பண்ணனும்னு வெளிய காத்துக் கெடக்குதுங்க” பீட்டரையும், தோமசையும் அட்டெண்டர் அழகுசாமி பீடி இழுத்து இழுத்துக் கரகரத்துப் போன குரலில் அழைத்துக் கொண்டே அந்த அறையின் பின்பக்கமாக நுழைந்தான்.
“ஏய்யா… இந்நேரத்துலையுமாயா ஏலம் போட்டுட்டே வருவ. உசுரோட மருத்துவம் பாக்க வரவங்களையும் வெரட்டுற, வெட்டுன கட்டையாட்டம் உசுரு இல்லாம எங்கட்ட வந்தவங்களையும் வெரட்டுற… என்னதாய்யா உம் பிரச்சின. யோவ் அழகுசாமி… யோவ்… இங்க பாருயா… மொதனாலும் வாரத்துக்கு ரெண்டு, மூணு பேரக் கொண்டு வருவ, இப்போ என்னடான்னா ஒரு நாளைக்கு பத்து பதினஞ்சு பேர கொண்டு வர்ர, நாங்க என்னதாயா செய்யுறது”
“பீட்டரு… மொதயெல்லாம் ரத்தமுமில்லாம சதையுமில்லாம வயசான நாலஞ்சு கெழடு கெட்டைக வரும். வந்த ஒடனே, அப்புடியே ரெண்டு கோடப்போட்டு ஓலைல சுருட்டிக் குடுக்க வேண்டியதாத்தான இருந்துச்சு. இப்ப அப்புடியா பீட்டரு நடக்குது. ஏமாத்திட்டான், ஏமாத்திட்டான்னு ஒருபக்கம், கொல… கொள்ள… தற்கொலன்னு முக்காவாசி வருது. இதுல பாதி சீக்கிரத்துல போயிச் சேரணும்னு ஆக்சிடெண்டு கேசால வருது. விடு பீட்டரு… இப்ப எதுக்கு அதெல்லாம். இப்ப வந்த கேசு எளவயசுப் பொண்ணு… சீக்கிரமா கேக்குறாங்க. இப்புடி ஒரு கோடு, அப்புடி ஒரு கோடு. ஒரு ஓலப்பாயில ஒரு உருட்டு உருட்டி, ஒரு சுருக்குக் கயிறு போட்டா போஸ்ட்மாட்டம் முடிஞ்சுது அவ்ளோதான்… இதுக்குப் போயி இவ்ளோ அலட்டிக்கிறியே. நீ தான் இவ்ளோ சலிச்சுக்கிற, தோமசப் பாரு கொஞ்சமா குடிச்சமா, வேலையக் கச்சிதமா முடிச்சமான்னு இருக்கான்.”
“யோவ் அழகு… கவிச்சியாத் திங்கிறதுக்கு கோழி, ஆடு, மாடுன்னு கசாப்புக் கடையில போயி நிக்கும் போது தெரியாதுயா… ஆனா மனுச ஒடம்ப வெட்டும் போது இருக்குற சங்கடமிருக்கே… உனக்கு அதெல்லாம் சொன்னாப் புரியாது… எனக்கென்னமோ இப்போ கொண்டு வந்த பாடிய சீக்கிரம் தரேன்னு சொல்லி நீ காசு வாங்கிட்டனு தோணுது அப்புடித்தான… நீ சரியான பொணந்தின்னியா”
“அப்புடி எல்லாம் சொல்லாத பீட்டரு, யாரையும் ஏமாத்தி காசு வாங்கல. இந்தப் பய புள்ளைக நம்ம டவுசருக்குள்ள காச விட்டுத் திணிக்குறாங்க. வாங்க மாட்டேன்னு சொன்னாலும் கேக்க மாட்டுகாங்க. சரி விடு… இந்தக் காச வாங்கி வீட்டுக்கா கொண்டு போறேன். நீ ஒண்டிக்கட்ட… அனாதப் பொணங்க வந்தா உன் சம்பளத்துல காரியம் பண்ற. நானும், தோமசும் இப்புடிஎ் கெடைக்குறத வச்சுத்தான் நம்மள மாதிரி ஏழைங்க சாவுக்குக் கொஞ்சமாவது ஒதவ முடியுது. ஏதாவது மிச்சமிருந்தா… தோமசுக்கும் எனக்கும் ஒரே ஒரு கோட்டரு, அவ்ளோதான்.”
“இங்க பாரு அழகு… இன்னைக்கு நம்ம டாக்டரு ஏகப்பட்ட பேர அறுத்துட்டாப்ள… மனுசன் இப்போதான் கொஞ்ச நேரம் கண்ண மூடிக்கிறேனு, பொணவாடனு கூடப் பாக்காம, உள்ள போயி படுத்துருக்காரு. எல்லாம் சரின்னு கையெழுத்துப் போட மட்டும் தான் அவர நான் எழுப்புவேன்… உன்னோட கேச காலைல குடுக்குறோம்னு சொல்லு. இப்ப அறுத்துக் குடுத்தாலும், இந்த நடுச்சாமத்துல யாருயா காரியம் பண்ணுவா… நம்ம கத்தி வச்சா… எப்படியும் பாடிய வீட்டுக்குள்ள கூட கொண்டு போக மாட்டாங்கயா… முச்சந்தியில பாடிய வச்சு கடமைக்குக் காரியத்தப் பண்ணி அடுத்த நிமிசம் சுடுகாட்டுக்குக் கொண்டு போயி அடக்கிறுவாங்க… சொன்னா புரிஞ்சுக்கோயா” இருவரும் பேசிமுடிக்கும் போது அவசர ஊர்தியொன்று அந்த மருத்துவமனைக்குள் பாய்ந்து வந்தது.
“சரி… பீட்டரு… ஆம்புலன்சு சத்தம் கேக்குது. நா என்னான்னு பாத்துட்டு வாரேன்” அழகு அரக்கப்பரக்க ஓட, பீட்டரும் தோமசும் அழகுசாமியை நினைத்துச் சிரித்துக் கொண்டே ஒவ்வொரு பிணமாக எடுத்து அறுக்க ஆரம்பித்தார்கள்.
தோமசுக்கு, பீட்டர் கூடப் பொறந்த பொறப்பு மாதிரி. யாருமே இல்லாம வெறுமைல வாழுற பீட்டருக்கு தோமசு மட்டுந்தான் பெரிய ஆறுதல். பீட்டரு என்ன சொன்னாலும் தோமசு அதத் தட்டவே மாட்டான், அவங்களுக்குள்ள அப்புடி ஒரு அண்ணந்தம்பி ஒறவு.
அரை மயக்கக் கலக்கத்திலிருந்த டாக்டர் ஆவுடையப்பன் கண்களை வெளிச்சம் வரும் வரைக்கும் தேய்த்து விட்டு, “என்ன பீட்டர் எல்லாம் முடிஞ்சுதா? இன்னும் எத்தன பாடி இருக்கும்? காலைல எட்டு மணிக்குள்ள எல்லாத்தையும் ஹேண்டோவர் பண்ணனும்… நம்ம அழகுசாமியையும் கூப்பிடுங்க. நாலு பேருமா சேந்து சீக்கிரமா வேலைய முடிச்சிட்டு செத்த நேரம் கண்ண மூடுனா நமக்கு நல்லது. இல்லனா நம்ம கண்ண இவங்க சொந்தக்காரங்க மூடிருவாங்க” சிரித்துக் கொண்டே பேசிய ஆவுடையப்பனைப் பார்த்து பதிலுக்கு சிரித்துக் கொண்டிருந்த பீட்டரும், தோமசும் வேலையைத் தொடங்கிய சற்று நேரத்தில், அழகு ஆல மரத்தை வேரோடு சாய்க்கும் புயல் காற்றைப் போல ஓடிவந்தான்.
“டாக்டர்… டாக்டர்… ஒரு சின்னப் பையன் வீட்டு மாடியில இருந்து கீழ விழுந்துட்டானாம் டாக்டர்… அவசரப் பிரிவுல யாரும் இல்ல… கொஞ்சம் சீக்கிரமா வாங்க டாக்டர். அந்தச் சின்னப் பையனுக்கு நெறையா ரத்தம் போயிருக்கு… கண்ணுமுழி எல்லாம் மேலாக்கப் பாக்குது டாக்டர்.”
“என்ன அழகு, என்ன சொல்றீங்க… பையனுக்கு என்ன ஆச்சு? வயசு என்ன? எப்படி விழுந்தானாம்? ஏன் எமர்ஜென்சில டாக்டர் இல்ல? பையன் விழுந்து எவ்ளோ நேரம் ஆச்சு” ஆவுடையப்பனின் கேள்விகள் அழகுசாமியைப் பதில் பேச விடாமல் வாயைக் கட்டிக் கொண்டன.
“பையனுக்கு பத்துப் பன்னண்டு வயசு இருக்கும் டாக்டர்… இன்னைக்கு அந்தப் பையனுக்குப் பொறந்த நாளாம்… பன்னண்டு மணிக்கு கேக்கு வெட்டி கொண்டாடுனப்ப, பொம்ம கீழ விழுந்துருச்சுன்னு அதக் காப்பாத்தப் போறேன்னு மேல இருந்து கீழ குதிச்சுட்டானாம், டாக்டர். கதிரேசன் டாக்டருக்கு வேற ஒடம்பு சரில்ல. நர்சுகளும் ஒண்ணுரெண்டு பேரு மட்டும் தான் இருக்காங்க டாக்டர்” உறக்கத்திலிருந்தும், உள்ளத்திலிருந்தும் விழித்துக் கொண்ட ஆவுடையப்பன் ஓடிச்சென்று பார்த்த பொழுது,
“அழகுசாமி… பையனோட அப்பா, அம்மாவக் கூப்பிடுங்க. பையனுக்கு பல்ஸ் ரேட் இல்ல… ஹார்ட் பீட் நின்னு அம்பத்தஞ்சு நிமிசத்துக்கு மேல இருக்கும்.” ஈரக்குலை வெளியில் வந்து விழும் அளவிற்கு ஆவுடையப்பனுக்கு நொடிப்பொழுது கடந்தகாலம் கண்முன்பாக வந்து சென்றது.
அந்தப் பையனின் பெற்றோரிடம், “உங்க பையனுக்கு… நெறையா ரெத்தம் போயிருக்குங்க… வர்ற வழியிலேயே” எதையும் பேசும் மனநிலையில் இல்லாத ஆவுடையப்பன் அவர்களின் கதறலைத் தாங்க முடியாமல் பிணவறைக்கு தழும்பித் ததும்பி நடக்கலானார். கொஞ்ச நேரத்தில் கொட்டாவி விட்டபடியே காவலர் ஒருவர் வந்து விசாரணை நடத்தி நாளைக்கு வருவதாகச் சொல்லி அவரது பார்மாலிட்டியை, பார்மாலிட்டியாக முடித்துச் சென்றார்.
அந்தப் பையனை வண்டியில் வைத்துப் பிணவறைக்குக் கொண்டு சென்ற அழகுசாமிக்கு வாசல் வரைக்கும் மட்டுமே தள்ளிக் கொண்டு போகும் தைரியம் இருந்தது. பீட்டரும், தோமசும் தங்களின் மனங்களைக் கல்லாக்கிக் கொண்டு, கத்திகளை அவர்களின் கண்ணீரில் கழுவி அந்தச் சிறுவனின் தலையிலும், மார்பிலும் அழுந்த வைத்தார்கள். அவனது உடம்பில் மிச்சமிருந்த மழலைக் குருதி மேசையிலிருந்து வழிந்து துள்ளிக்குதித்துச் சொட்டுச் சொட்டாய்ச் சொட்டிக் கொண்டிருந்தது. ஆவுடையப்பன் தன்னுடைய களங்கமில்லா வெள்ளைக் கோட்டிலிருந்து சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கையில், அவரின் கண்ணீர் அந்தச் சிகரெட்டின் நெருப்பை அணைத்துவிட்டிருந்தது .
“யோவ்… பீட்டரு… டாக்டரு அழுதுட்டே போறாருயா… சீக்கிரமா வாயா… எத்தனையோ பேர அறுத்துருக்காரு. அவரு கண்ணு கலங்கி நாம பாத்ததே இல்லயா… டாக்டரு இந்தப் பையனப் பாத்த ஒடனே ஒடஞ்சு போய்ட்டாரு… நீங்களும் உம்முன்னு இருக்கீங்க. என்னையா ஆச்சு? ஏதாவது சொல்லுங்கையா… எதுக்குயா இப்புடி பேயறஞ்ச மாதிரி இருக்கீங்க?” யாராலும் அணைகட்டித் தடுக்க முடியாத அழுகையை அடக்கிக் கொண்ட பீட்டர், “அழகு… நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி… அதாவது இன்னும் கொஞ்சம் சரியா சொல்லப்போனா… நீ இங்க வேலைக்கு வரதுக்கு முன்னாடி… அவரோட பையன் ஆசப்பட்டுக் கேட்டானு நம்ம ஆவுடையப்பன் டாக்டரு சைக்கிளொன்னு வாங்கிக் கொடுத்தாரு… குடிச்சிட்டு கண்ணுமண்ணு தெரியாம வண்டியோட்டிட்டு வந்த கபோதி நாயி ஒருத்தன், பையன் மேலேயே மோதிட்டான். அஞ்சு வயசுப் பையன் அவரு கூட ஆயிசுக்கும் இல்லாமப் போய்ட்டான். போஸ்ட்மாட்டம் பண்ணனும்னு போலிசுக்காரங்க ஒருபக்கம் பயங்கரக் கெடுபுடி. அன்னைக்கு, அந்த ஆஸ்பத்திரில டாக்டருங்கவேற இல்ல. பெத்த பையன் ஒடம்ப வேறவழியே இல்லாம அந்த மனுஷன்… மனசக் கல்லாக்கிட்டு அறுத்தாரு. அன்னைல இருந்து இப்புடி ஆயிட்டாரு. டாக்டரோட பையன் பொறக்கும் போதே டாக்டரம்மாவும் பிட்ஸ் வந்து ஆப்பரேசன் தேட்டருலேயே எறந்துட்டாங்க. அன்னைல இருந்து டாக்டரும், ஏன் நாங்களும் கூட அந்தப் பையன ஒரு நாளு ஒரு பொழுதுகூட பாக்காம இருந்ததில்ல… மாமா மாமான்னு சுத்திச் சுத்தி வருவான்.”
கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்து நெடுநேரமாய் ஓய்வெடுத்து விழித்துக் கொண்ட இரவோடு சேர்ந்து ஆவுடையப்பனும் மற்றவர்களும் கண்விழித்தார்கள்.
“ஆவுடையப்பன் சார்… ஆவுடையப்பன் சார்” உடம்பு முழுவதும் திராவகத்தை ஊற்றிக்கொண்டபடி டாக்டர் கதிரேசன் வியர்த்து விருவிருக்க பிணவறைக் கதவை உடைக்கப் போவதைப் போலத் தள்ளினார். அந்த மருத்துவ மனைக்குள் ஏராளமான வாகனங்கள் சூழ, அவசர ஊர்தியொன்று படைபலத்துடன் பிணவறைக்கு வருவதற்காக நுழைந்து கொண்டிருந்தது.
“கதிரேசன் சார்… ஏன் இவ்ளோ பதட்டமா வர்ரீங்க… என்ன பிராப்ளம்… எதாவது அவசரமா” ஆவுடையப்பன் கேட்டதற்கு கதிரேசன் மூச்சை மட்டும் வாங்கினார்.
“பொண்ணும் பையனும், சாதி விட்டு சாதி மாறி கல்யாணம் பண்ணதுனால, பெத்தவங்களே புள்ளைகள கூலிப்படைய வச்சு வெட்டிக் கொன்னுட்டாங்க சார்… இந்தப் பாவிங்களால நம்ம தலதான் ரோடுரோலர் மாதிரி உருளுது ஆவுடையப்பன் சார்”
“உயிர் பிரிஞ்சு போனதுக்கப்றம் வெறும் கட்டதான். இந்த மனுசங்கதான் சாதி, மதம், மொழின்னு அடிச்சுக்கிட்டு சாவுறாங்க. சாகக் கெடக்குறவங்களுக்கு ரெத்தம் குடுக்குறப்போ சாதி கிடையாது. ஏதோ ஒரு வகைல வரக் கூடிய துன்பத்துல இருந்து காப்பத்துறவங்கள என்ன சாதின்னு யாரும் பாக்குறதில்ல. வாழ்றதுக்காக கல்யாணம் பண்ணா இந்தப் பாவிங்க சாகடிக்குறாங்க. என்னத்தச் சொல்றது கதிரேசன் சார். மனிதாபிமானம் இப்பல்லாம் வார்த்தைல கூட இல்ல. சரி விடுங்க கதிரேசன் சார், இப்போ என்ன பிரச்சின.”
“சார்… போஸ்ட்மார்ட்டம் செய்யணும், கோர்ட் உத்தரவு. ஆனா… அதுல ஒரு பெரிய சிக்கல் இருக்கு. ரெண்டு பக்கத்துல இருந்தும் பயங்கரமா அச்சுறுத்தல் வருது. அதான் உங்ககிட்ட கேக்கலாம்னு வந்தேன் சார்”
“கதிரேசன் சார். போஸ்ட்மார்ட்டம் பண்றத வீடியோப் பதிவு செய்திடலாம். ஜட்ஜு, கலெக்டர், போலீஸ், அப்பறம்… ரெண்டு சமூகத்தச் சேர்ந்தவங்க அவங்க முன்னாடி வச்சுப் பண்ணிடலாம். தகுந்த அளவு பாதுகாப்பு இருக்கும். கவலை வேண்டாம் கதிரேசன் சார், பாத்துக்கலாம்… என்னைக்காவது ஒருநாள் கத்தியப் பிடிக்கிறவங்களுக்கும், எப்பவுமே கத்தியப் பிடிக்கிற நமக்கும் நெறையா வித்தியாசம் இருக்கு. இன்னைக்குத் தவறான வழியில கத்தியப் பிடிக்கிறவன் என்னைக்காவது ஒருநாள் நம்ம கத்திகிட்ட நிச்சயம் மன்னிப்பு கேப்பான்”
“ஐயோ அது இல்ல, ஆவுடையப்பன் சார், அது வந்து, செத்துப் போன பொண்ணு உயர்ந்த சாதியாம். அவங்க ஆளுங்கள்ல யாரு டாக்டரோ அவங்கதான் போஸ்ட்மார்ட்டம் பண்ணனுமாம். அதான் எப்படி சமாளிக்குறதுன்னு தெரியல சார்”
“ஓகோ… இதான் விஷயமா… கதிரேசன் சார்… அவங்களுக்குத் தேவ பையனோ? பொண்ணோ இல்ல அவங்க சாதின்ற சாணியோட சாயம். அது ஒண்ணும் பிரச்சின இல்ல பாத்துக்கலாம்.”
தினமும் ஏதோ ஒரு வகையில், அந்தப் பிணவறைக்கு வெளியில் தினம் தினம் புதுப்புதுப் பிணங்கள் ஆட்டம் போட்டுக் கொண்டே இருந்தன.
“தோமசு தோமசு பசி வேற உசுரு போகுது. அடுத்த பாடி வரதுக்குள்ள சாப்புடலாம்னு பாத்தா… இவன் சாப்பாடு வாங்கப் போனானா? இல்ல சாப்பாடு ஆக்கப் போனானானு தெரியல” பீட்டர் புலம்பித் தீர்ப்பதற்குள் தோமசு சாப்பாட்டுக் கூடையுடன் இரண்டு கால் பாய்ச்சலில் ஓடி வந்தான்.
“பீட்டரண்ணே… பீட்டரண்ணே… கடைல நல்ல கூட்டம். பார்சல் கட்ட கொஞ்சம் லேட் ஆயுடுச்சு.” ஆறிப்போன சோறும், நமத்துப் போன பப்படமும், தாளிப்பில்லாத சாம்பாரும் அந்தப் பிணவறையை ஒரு நிமிடம் சமையலறையாக மாற்றியிருந்தன. வாசனையை முகர்ந்து கொண்டே வந்த ஆவுடையப்பன், “என்ன… பீட்டரு இன்னைக்கும் சாம்பாருதானா? தோமசு.. ம்…கும்… நீ மட்டும் விதிவெலக்கா… கறிக்கொழம்பா கொண்டு வந்துரப்போற.. சரி… தோமசு, அழகு சாப்புட்டானா? நம்ம எல்லாருக்கும் சிக்கனு மட்டனு ஏதாவது வாங்கச் சொல்லலாம்னு பாத்தேன்”
“சார்… அழகுசாமி சாப்பாட்டுப் பொதிய பிரிச்சு ரெண்டு வாயி தான் எடுத்து வச்சான்… அதுக்குள்ள ஏதோ கேசு வந்துருச்சு, ஓடிட்டான்” தோமசின் பதில் இப்படியாகத்தான் இருக்கும் என்பது ஆவுடையப்பனுக்குத் தெரிந்திருந்தது.
“மருத்துவத் தொழில்ல இது ஒன்னு பீட்டரு, நேரா நேரத்துக்கு சாப்புட முடியாது. சாப்பாட்ட நெனச்சா பல உசுருகளக் காப்பாத்த முடியாமப் போயிடும்… சரி பீட்டர் சாம்பார் சூடா இருந்தா கொஞ்சம் ஊத்து” ஆவுடையப்பன் சோற்றுப் பாத்திரத்தைத் திறந்து சாம்பாரைப் பிசைகையில், அழகுசாமி சுடச்சுட இறந்த புதுப் பிணத்தை தள்ளிக்கொண்டு வந்தான்.
“என்ன அழகு? என்ன கேஸ்… இறந்துட்டாங்களா… ஐயையோ. உள்ள கொண்டு போங்க சாப்டுட்டுப் பாத்துக்கலாம்” அந்த ஒரு நொடிப் பொழுதில் நால்வரும் வருத்தப்பட்டு முடித்தார்கள்.
“சார்… எறந்து போனவங்க வண்டி ஓட்டிட்டு சரியான பாதையிலதான் வந்துருக்காங்க சார்… தலைவரு பேனரு, தலைவி பேனருன்னு இருவது இருவத்தஞ்சடிக்கு ரோட்டோரமா பாதுகாப்பில்லாம கட்சிக்காரங்க வச்சுருக்காங்க, கயிறு வச்சுக் கட்டாததுனால காத்தடிச்சப்போ பேனரு இந்தப் பொண்ணு மேல விழ… பின்னாடி வந்த லாரி எதிர்பாராத விதமா இந்தப் பொண்ணு மேலேயே ஏறிடுச்சாம் சார். இதுல கொடும என்னான்னா… ஒரு சம்மந்தமும் இல்லாத லாரிக்காரன அரஸ்ட் பண்ணிருக்காங்க.”
“உயிர் போறது நம்ம கைல இல்ல அழகு. எப்படி, எங்க, எப்போன்னுதான் யாருக்கும் தெரியாது. போகப் போற உயிர யாராலையும் புடிச்சு வச்சுக்கவும் முடியாது… இன்னும் கொஞ்சம் சத்தமாப் பேசுனா, இந்தப் பொண்ண நம்மதான் கொன்னோம்னு சொல்லுவாங்க… அதான் அரசியல்.” அழகுசாமி குருதி படிந்த தன்னுடைய கைகளைக் கழுவ முற்பட்ட போது, புதிதாக வந்த பிணத்தின் தலை உடலிலிருந்து கழண்டு கீழே விழுந்து அழகுசாமியை நோக்கி உருண்டது.
“அழகு… எப்புடியும் கை கழுவத்தான போற, அந்தத் தலைய எடுத்து வச்சிட்டு, நேத்தைக்கு போஸ்ட்மார்ட்டம் பண்ணுன பாடிகளோட உறுப்பெல்லாம் கவர்ல இருக்கு. அத எடுத்து மேச மேல வச்சிறேன். எல்லா உறுப்பும் செயலிழக்குறதுக்கு முன்னாடி பாதிக்கப்பட்ட யாருக்காவது குடுத்தா அவங்களுக்காவது பயன்படும்.” என ஆவுடையப்பன் நொந்து கொண்டார்.
அழகு வரும் வரை காத்திருந்து உணவு உண்ட பின் அவர்களின் வேலையைத் திரும்பவும் தொடங்கினார்கள். அப்போதுதான் ஆவேசமான பேச்சுச் சத்தமும், ஆரவாரமும் பொங்க அநேக நபர்கள் பிணவறையின் முன் திரண்டார்கள். ஐந்தாறு பெண்களை இரண்டு மூன்று பேர் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தனர். அதிகாரிகளும், அதிகாரம் படைத்தவர்களும், பத்திரிக்கையாளர்கள் முன் வழக்காடிக் கொண்டிருந்தனர்.
“ஏதும் பெரிய விபத்தா… கலவரமா? இல்ல புது நோய் எதாவது பரவிடுச்சா? என்னான்னு தெரியலையே… பீட்டரு, என்ன விசயம்னு கேளு… ஏன் இவ்ளோ கூட்டம்னு பாரு” ஆவுடையப்பனுக்குப் பதில் சொல்ல அந்தப் பெருங்கூட்டத்தினுள் புகுந்த பீட்டர் முட்டி மோதிச் செய்தியைக் கொண்டு வந்தான்.
“சார் அந்த தனியார் ஆஸ்பத்திரில… சிகிச்சைல இருந்த பதிமூணு குழந்தைங்க ஆக்சிஜன் இல்லாம எறந்துருக்குங்க சார்… ஆனா எல்லாக் குழந்தைகளும் உடம்பு சரியில்லாமதான் எறந்தாங்கன்னு அந்த ஆஸ்பத்திரியில சொல்லிருக்காங்க. எல்லாக் குழந்தைகளையும் அர மணிநேரம் ஒரு மணிநேரம்னு கழிச்சு எறந்துட்டதா அவங்க வீட்டுக்காரங்கட்ட சொல்லிருக்காங்க. யாரோ ஒரு ஆளு, இந்த விசயத்த எல்லாருக்கும் போனு மூலமா தெரியப்படுத்திருக்காரு சார்… இந்த சம்பவம் நடந்து முடிஞ்ச கொஞ்ச நேரத்துல அவசர அவசரமா ஆக்சிஜன் சிலிண்டர மாட்டிருக்காங்களாம். அரசாங்கம்… அரசாங்க ஆஸ்பத்திரிய மேம்படுத்த மாட்டுக்குது. தனியார் ஆஸ்பத்திரிக்காரங்க செய்யுறத கண்டுக்கவும் மாட்டுக்காங்க… என்னத்தச் சொல்ல சார்… எம் பொண்டாட்டியோட தலப்பிரசவத்துக்கு எங்க ஊரு ஆஸ்பத்திரியில சேத்தேன் சார்… …அப்ப அங்க பிரசவம் பாக்கிற டாக்டரில்ல. அந்த ஆஸ்பத்திரியில இருந்த நர்சு யார்ட்டையும் கேக்காம பிரசவம் பாக்கத் தெரியாம பிரசவம் பாத்து, என்னோட ரெண்டு உசுரும் போயி நான் மட்டும் அனாதையா மிச்சமாயிட்டேன் சார்” தோமசு ஜடமாக வந்த குழந்தைகளைப் பார்த்துப் புலம்பி அழ ஆரம்பித்ததும், அந்தப் பிணவறையும் தன் பங்கிற்குத் தேம்பித் தேம்பி ஆற்றாமல் அழத் தொடங்கியது.
“தோமசு… இங்க உடம்பு சரியில்லாமப் போச்சுன்னா… பணம் வச்சிருக்கவங்க மட்டுந்தான் வைத்தியம் பாக்க முடியும். பணமில்லாதவங்க சாகவேண்டியதுதான். அதான் நம்ம நாட்டோட, நம்மளோட தல எழுத்து தோமசு. இந்தப் பச்ச மண்ணெல்லாம் அறுக்க வேண்டாம்ப்பா… இந்தப் பாவம் நம்மளச் சும்மா விடாது. கொஞ்ச நேரம் கழிச்சு துணியச் சுத்திக் குடுத்துரலாம்” அந்த நால்வரின் இரக்க குணம் அவர்களுக்கு மட்டும் தான் தெரிந்திருந்தது.
பீட்டரும், தோமசும் ஒவ்வொரு பூக்களாக எடுத்து அலங்காரம் செய்து கட்டிக் கொடுத்து கலங்கிப் போனார்கள்.
சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாத பீட்டர், திடீரென ஒருநாள்… ஒரு கொடூரனின் தீண்டலுக்கு ஆளான வயதுக்கு வராத பிணத்தை அறுக்கும் போது குழைந்து விழுந்தான்.
“அய்யோ… பீட்டரண்ணா என்ன ஆச்சு… அழகு தண்ணிய எடு… தோமசு காலப்பிடி” பீட்டரை அவசர அவசரமாக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு செல்லும் போதே பீட்டரின் கையிலிருந்த கத்தி குருதி வழியக் கீழே விழுந்து தெறித்து மரத்தடியில் ஊமையாய் இருந்த கடவுள்களின் முன்னாள் போய் விழுந்தது. மூவரின் கூக்குரலுக்குப் பின் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து உறைந்த நிலையில் வந்த பீட்டரின் மார்பில், ஆவுடையப்பனும், தோமசும் மெழுகாய்க் கரைந்து கொண்டே கத்தியை வைத்தார்கள்.
இப்படியாக… கொடுமையான ஆட்சிக்கு எதிராகப் போராடிச் சுட்டுக் கொல்லப்பட்ட பிணங்களும், பள்ளிக் கூடத்தில் பாலியல் தீண்டலுக்கு ஆளாகிச் செத்துப் போன பெண்ணோட பிணமும் விவசாயம் செய்ய பேங்க்கில் லோன் வாங்கிக் கட்ட முடியாததால் கொல்லப்பட்ட பிணமும், பசிக்காகத் திருடியபோது அடித்தே கொல்லப்பட்ட பிணமும் அந்தப் பிணவறைக்குப் புதிது புதிதாக வருகை தந்தன.
இன்னும் பெயரிடப்படாத, எவராலும் அறியப்படாத புதுப்பிணங்களின் வருகைக்காகவும், எல்லோருக்குமான அவ்வமரலோகம் எப்போதைக்குமாகத் தன்னைத் திறந்து வைத்து இன்னும் காத்துக் கிடக்கின்றது.

Leave a comment