காடரினக் கதைகள் – 1
அம்பட்டாஞ்சேயார் மலையாணிப்பிள்ளே!
கதைசொல்லி: மங்கம்மாப் பாட்டி
கதைகேட்டுப் பதிந்தோர் : ப.குணசுந்தரி, து.சரண்யா
ஓவியத் தூரிகை : ப.குணசுந்தரி, து.சரண்யா
அம்பட்டாஞ்சேயார், மலையாணிப்பிள்ளையின் மாமியாள் தீராத நோயால் அவதிப்பட்டு வந்தாள். இதனைக் கண்ட மலையாணிப் பிள்ளையின் மனைவி வருந்துகிறாள். ஒருநாள் காலையில் வெயில்காய வேண்டுமென அந்த மூதாட்டி கூற அனைவரும் மலையாணிப்பிள்ளையின் வீட்டு முற்றத்தில் வந்து அமர்கின்றனர். மூதாட்டி மரவேரின் மேல் ஒருபக்கம் வசதியாக அமர்ந்திருந்தாள். மலையாணிப்பிள்ளை கல்லின் மீது உக்கார்ந்திருக்க அவன் மனைவியோ அவனுக்குத் தலையில் எண்ணைய் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது, மேலே ஓங்கல்* பறந்ததைக் கண்டு அதன் இறைச்சி வேண்டுமென்று மூதாட்டி கேட்கின்றாள்.

உடனே மலையாணிப்பிள்ளை, தன் அம்பை எடுத்து பறந்துகொண்டிருக்கும் ஓங்கலின் மேல் எய்கிறான். ஓங்கல் அந்த அம்பைச் சுமந்தபடியே நெடுந்தொலைவிற்குப் பறந்து செல்கின்றது. அந்த ஓங்கல் பறவை புலிப்பொன்ப கியத்தி என்ற கிழவியின் வீட்டின் முன் விழுகின்றது. வீட்டு முற்றத்தில் விழுந்த ஓங்கல் பறவையை எடுத்து தீயிலிட்டுச் சுட்டு வீட்டுக் கூரையில் அந்த அம்புடன் சொருகி வைக்கிறாள் புலிப்பொன்ப கியத்தியின் மகள்.
புலிப்பொன்ப கியத்தி என்பவள் புலிக்குப்பாயம் (புலிவேடம்) அணிபவள் அந்தக் குப்பாயம் உயிருள்ளதாக இருந்தது. தான் எய்த அம்பைத் தேடி மறுநாள் காலையில் மலையாணிப்பிள்ளை காட்டுக்குள் செல்கின்றான்.
மலையாணிப்பிள்ளை வீட்டிலிருந்து கிளம்பும் நேரத்தில் அவனுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாக அவனிடம் கூறுகின்றாள். இருப்பினும் மலையாணிப்பிள்ளை தன் பயணத்தைத் தொடரவே விரும்புகிறான்.
மலையாணிப்பிள்ளை தன் பயணத்திற்குத் தேவையான பொருள்களாக புறை, ஒரு வில், ஒரு அம்பு இவற்றை மட்டும் கையில் கொண்டு செல்கின்றான்.

மலையாணிப்பிள்ளையின் புறை பேசும் தன்மையுடையது. மலையாணிப்பிள்ளை வழிப்பயணத்திற்குத் தேவையான பொருள் அனைத்தையும் எடுத்துக்கொண்டானா? என்பதை அறிய, புறை அவனை நோக்கி

கூறக் கூறப் பூணி எடுத்தள்ளோ?
குறுமந்தன் கோல்வடி எடுத்தள்ளோ?
பாதிரி அம்பு வலக்கை பிடித்தள்ளோ?
அம்பட்டாஞ்சேயார் மலையாணிப்பிள்ளே! 1
என்று பாடுகின்றது. மலையாணிப்பிள்ளை, தன் அம்பைத் தேடி நெடுந்தூரம் செல்கின்றான். அப்போது மலையாணிப்பிள்ளை, சென்ற பாதையில் ஒரு காட்டுப்பன்றி கிடந்து உறங்குவதைக் கண்ட புறை மலையாணிப்பிள்ளையிடம்

குத்தும் கூர்முக்குப் பன்றி கைத்துமறிய துஞ்சிடா
லதேலெதெடுத்(து) லம்பர பூணியில் இட்டல்லோ
அம்பட்டாஞ்சேயார் மலையாணிப்பிள்ளே! 2
என்று பாடுகின்றது. இதைக்கேட்ட மலையாணிப்பிள்ளை, அந்தப் பன்றியை வேட்டையாடி புறையினுள் இட்டபடியே தன் பயணத்தைத் தொடர்கின்றான்.
மலையாணிப்பிள்ளை தான் சென்ற வழியில் இருந்த விலங்குகளை எல்லாம் வேட்டையாடுவதற்காக புறை ஒவ்வொரு விலங்கைக் காணும்போதும் பாடல் பாடத் தொடங்குகிறது. முன்பு போலவே புறை மானைக் கண்டவுடன்
லதே! கங்ஙன் கலமான் கைத்துமறிய துஞ்சிடா
லதேலெதெடுத்(து) லம்பர பூணியில் இட்டல்லோ
அம்பட்டாஞ்சேயார் மலையாணிப்பிள்ளே! 3
என்று பாடுகிறது. மலையாணிப்பிள்ளை, அந்த மானையும் வேட்டையாடி தன் புறையில் போட்டுக் கொள்கிறான். வழிநெடுகிலும் தான் வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியை ஏழு மாடங்களிலும் உலர வைக்க வேண்டுமென்று நினைக்கின்றான். அதற்காக செல்லும் வழிகளில் எல்லாம் உயர்ந்த மரங்களில் மாடங்கள்* அமைத்துச் செல்கின்றான்.
தொடர்ந்து நடக்கையில் ஓரிடத்தில் இருந்த சலுங்கைப்* பார்த்துப் புறை இப்படி பாடுகிறது.
லதே! ஓடங்ஙி நல்ச்சலுங்கு கைத்துமறியத் துஞ்சிடா
லதேலெதெடுத்(து) தம்பரப் பூணியில் இட்டல்லோ
அம்பட்டாஞ்சேயார் மலையாணிப்பிள்ளே! 4
உடனே மலையாணிப்பிள்ளை அந்த உடும்பையும் கொன்று புறைக்குள் போட்டு தன் பயணத்தைத் தொடர்கின்றான். வழியில் கீரி படுத்திருப்பதைக் கண்டு புறை மலையாணிப்பிள்ளையை நோக்கி அதனை எய்து புறையினுள் இடுமாறு பாடுகின்றது.
குளக்கால் நல்வெருகு கைத்துமறியத் துஞ்சிடா
லதேலெதெடுத்(து) தம்பரப் பூணியில் இட்டள்ளோ
அம்பட்டாஞ்சேயார் மலையாணிப்பிள்ளே! 5
உடனே மலையாணிப்பிள்ளை அந்தக் கீரியையும் கொன்று புறைக்குள் போட்டு தன் பயணத்தைத் தொடர்கின்றான்.
புறை கண்டு சொன்ன எல்லா விலங்கையும் வேட்டையாடி சுத்தம் செய்து ஏழு மாடங்களிலும் உலர்த்திக்கொண்டு வருகின்றான். ஏழாவது மாடத்தின் அடியில் அவன் இளைப்பாறுகின்றான். இரவு நேரம் கழியும்வரை அங்கேயே தங்கலாம் என்று முடிவு செய்கிறான். அதன்படியே, படுத்துறங்குகின்றான்.
மறுநாள் காலையில் ஆழ்ந்த உறக்கத்தில் கிடக்கும் மலையாணிப்பிள்ளையை எழுப்பவதற்காக புறை அவனை நோக்கி

அம்பட்டாஞ்சேயார் மலையாணிப்பிள்ளே
குயவன் திரிச்ச திரிகலயம் எடுத்தல்லோ
நீரா நீர் மணிக்கிணற்றிங்கு திரிக்கால் வச்சு
திரிமதிகொள்ளே அம்பட்டாஞ்சேயார் மலையாணிப்பிள்ளே! 6
என்று பாடியபடி புறை மலையாணிப் பிள்ளையைக் கிணற்றில் சென்று நீர் எடுத்து வருமாறு பணிக்கின்றது. புறையின் பாடலைக் கேட்டும் மலையாணிப்பிள்ளை எழும்பாது படுத்து கிடக்கின்றான். அதனால் மீண்டும் புறை அவனை நோக்கி
அம்பட்டாஞ்சேயார் மலையாணிப்பிள்ளே!
வான் பிறாந்து போரினே வையாமன் கோயிலில்
கொங்ஙப்புள் தட்டி கொல்லன் திரிநாட்டில்
இரிகதிரு பொரிகதிரு பால்கதிரு பைங்கதிரு
செந்தூரடப்பட்டு போரினே!
அம்பட்டாஞ்சேயார் மலையாணிப்பிள்ளே! 7
என்று பாடுகின்றது. இதைக் கேட்ட மலையாணிப்பிள்ளை எழுந்து பொறுமையாகக் கிளம்பவதைக் கண்ட புறை வேகமாகக் கிளம்புமாறு கூறுகிறது. மலையாணிப்பிள்ளையை ஆடையை அணியுமாறு பாடுகின்றது.
வானப் பூந்துருள் கச்சு வாஞ்சிமுருக் கெட்டுட
கிளக்கண்டன் காரடைய மெய்சேர்த்துக் கெட்டுட 8
என்று மலையாணிப்பிள்ளை தலைப்பாகை அணிவதையும் பாடுகின்றது. பின்பு மலையாணிப்பிள்ளை ஏழாவது மாடத்தின் மேலே ஏறுகிறான். அப்போது புலிப்பொன்ப கியத்தியின் வீடு அவன் கண்ணில் தென்படுகிறது. மாடத்தில் இருந்து இறங்கி அவன் அந்த வீட்டை நோக்கி நடந்து செல்கின்றான்.
புலிப்பொன்ப கியத்தியின் வீட்டில் அவளுடைய மகள் மட்டுமே இருக்கின்றாள். புலிப்பொன்ப கியத்தியோ வேட்டைக்குச் சென்றிருந்தாள் மலையாணிப்பிள்ளை புலிப்பொன்ப கியத்தியின் வீட்டின் முன் சென்று நிற்கின்றான். அப்போது அந்தப் பெண் வெளியே வந்து அவனைப் பார்க்கின்றாள். மலையாணிப் பிள்ளையைக் கண்டவுடன் புலிப்பொன்ப கியத்தியின் மகள் அவன்மீது காதல் கொள்கின்றாள்.
மலையாணிப்பிள்ளையைக் கண்டவுடன் எந்தவோரு கேள்வியையும் கேட்காமல் அந்தப்பெண் அவனை உள்ளே அழைத்துச் செல்கின்றாள். அவள் மலையாணிப்பிள்ளையைத் தன் தாய் வருவதற்கு முன் குளித்து மேல் மெத்தைக்குச் சென்றுவிடுமாறு கூறுகின்றாள். மலையாணிப்பிள்ளையும் அவள் கூறியவாறே செய்கிறான். தன்னுடைய அம்பு அந்த வீட்டில் இருப்பதை மலையாணிப்பிள்ளை உணர்கின்றான்.
மாலையில் வேட்டைக்குச் சென்றிருந்த புலிப்பொன்ப கியத்தி வீடு திரும்புகிறாள். புலிக்குப்பாயம் அணிந்திருந்த அவள் ஒரு பெரிய மானை வேட்டையாடி கவ்வியபடி வந்திருந்தாள். வீட்டில் அவள் மகள் ஏற்கனவே சமைத்து வைத்திருந்த உணவை உண்கிறாள். குப்பாயத்தைக் கழற்றி வீட்டில் ஓரமாக வைக்கும் புலிப்பொன்ப கியத்தி தன்னுடைய மகள் தன்னுடன் சேர்ந்து அன்று இரவு உண்ணாதது ஏன் என்று கேட்கின்றாள். அதற்கு அவள் மகள் தான் மேல் மெத்தைக்குச் சென்று உண்பதாகக் கூறவும் காரணம் கேட்காது புலிப்பொன்ப கியத்தியும் சரியெனக் கூறுகின்றாள்.
அன்று இரவு முதல் புலிப்பொன்ப கியத்தியின் மகளும் மலையாணிப்பிள்ளையும் கணவன் மனைவியுமாக வாழ்கின்றனர். மறுநாள் காலையில் தான் வேட்டையாடிக் கொண்டு வந்த மானைத் சுத்தம் செய்யுமாறு புலிப்பொன்ப கியத்தி தன் மகளிடம் கூறுகிறாள். அதற்கு உடனே தன்னால் முடியாது என மறுக்கும் மகள் மான் இறைச்சியைக் சுத்தம் செய்ய மலையாணிப்பிள்ளையை அழைப்பது போல அழைத்து, தன் தாயிடம் அறிமுகம் செய்துவிட வேண்டும் என்று நினைக்கின்றாள். பின்பு புலிப்பொன்ப கியத்தியிடம் அவள், அம்மா ஒரு செய்தி கூறுவன். அந்தச் செய்தி நல்லதாக இருந்தாலும் கேள் பொல்லாத செய்தியாக இருந்தாலும் கேள். இல்லையெனில் நான் விட்டத்தில் இருக்கும் ஆயுதத்தின் மேல் விழுந்து இரண்டு துண்டாகப் போய்விடுவேன் என்று கூறுகின்றாள். அதற்குப் புலிப்பொன்ப கியத்தி பதறி வேண்டாம் நீ அவ்வாறு ஏதும் செய்துவிடாதே என்று கூறி நான் கேட்கிறேன் என்று மகளிடம் தெரிவிக்கின்றாள்.
இம்மொழியைக் கேட்டு ஐயம் தெளிந்த மகள் மலையாணிப்பிள்ளையை பரணை விட்டுக் கீழே வருமாறு அழைக்கின்றாள். மேல் மெத்தையில் இருந்து மலையாணிப்பிள்ளை இறங்கி வருவதைக் கண்ட புலிப்பொன்ப கியத்தி மனம் நெகிழ்கின்றாள்.
உடனே தன் மகளிடம் மலையாணிப்பிள்ளையை நோக்கி குட்டியப்பா குட்டியப்பா (இளைய தந்தை) என்று அழைக்குமாறு கூறுகின்றாள். மகள் உடனே ஐயோ அம்மா அது என்னால் முடியாது. மலையாணிப்பிள்ளை நம் வீட்டுக்கு வந்து மூன்று நான்கு நாட்கள் கழிந்தன. நாங்கள் இருவரும் கணவன் மனைவியாகத்தான் இருக்கிறோம் என்று தாயிடம் கூறுகின்றாள். இதைக் கேட்ட புலிப்பொன்ப கியத்தி கோபம் கொள்கின்றாள்.
பின்பு மலையாணிப்பிள்ளையிடம் தான் வேட்டையாடிக் கொண்டு வந்த மானைச் சுத்தம் செய்யுமாறு புலிப்பொன்ப கியத்தி கூறவும் மலையாணிப்பிள்ளை அந்த மானை வெட்டி எலும்பைத் தனியாகவும் தசையைத் தனியாகவும் பிரித்து எடுத்து வைக்கின்றான். அவன் அந்த மானைச் சுத்தம் செய்வதைக் கண்கொட்டாமல் குப்பாயம் (புலிவேடம்) பார்த்துக் கொண்டிருக்கின்றது. பின்னர், இக்குப்பாயம் மலையாணிப்பிள்ளையின் இரத்தம் முழுவதையும் உரிஞ்சிக் குடிக்கின்றது. அதனால், மலையாணிப்பிள்ளை மயங்கி அவ்விடத்திலேயே விழுகின்றான். அதைக்கண்டதும் புலிப்பொன்ப கியத்தியின் மகள் பதறி அழுகின்றாள்.
அவள் அழுவதைக் கண்ட புலிப்பொன்ப கியத்தி புலிக்குப்பாயத்தின் முன் கிண்ணத் வைத்து அதில் மலையணிப்பிள்ளையின் இரத்தத்தைக் கக்குமாறு கூறுகின்றாள் அதைக்கேட்டதும் புலிக்குப்பாயம் தான் குடித்த இரத்தம் முழுவதையும் கக்குகின்றது. புலிப்பொன்ப கியத்தியின் மகள் அந்த இரத்தத்தை எடுத்து மலையாணிப்பிள்ளையின் வாயிலும் மூக்கின் துளைகளிலும் ஊற்றுகின்றாள். சில கணங்களுக்குள் அவன் தும்மியபடியே எழுகின்றான்.
மறுநாள் காலையில் மலையாணிப்பிள்ளை கிழங்கை அகழ்ந்து ஒரு மூங்கில் துண்டில் போட்டு உடும்பு முட்டையை உடைத்து ஊற்றி தீயில் சுட்டு புலிப்பொன்ப கியத்திக்கும் அவள் மகளுக்கும் கொடுக்கின்றான்.
அந்தக் கிழங்கின் சுவையை உணர்ந்த புலிப்பொன்ப கியத்தி தான் கண்ட கிழங்கையும் எடுத்து அதைப் போன்றே செய்து தருமாறு அவனிடம் கேட்கின்றாள். மலையாணிப் பிள்ளையும் சரியெனக் கூறுகின்றான். தான் கண்ட கிழங்கை அகழ்வதற்காக புலிப்பொன்ப கியத்தி மலையாணிப்பிள்ளையை கிழங்கு இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றாள். அவள் அங்கேயே அவனைக் கொன்றுவிட வேண்டுமென்றும் நினைக்கின்றாள்.
அவளுடைய தந்திர வேலைகளை மலையாணிப்பிள்ளை உணர்கின்றான். அந்தக் கிழங்கு இருக்கும் இடத்தைக் காண்பித்தபடியே வேட்டைக்குச் செல்கின்றாள் புலிப்பொன்ப கியத்தி. மலையாணிப்பிள்ளை அந்தக் கிழங்கு இருந்த இடத்தைச் சுற்றியும் பெரிய பெரிய மரங்களை ஊன்றி தடுப்புச் சுவரை எழுப்பி அதன் உள்ளே அமர்ந்து கிழங்கைத் தோண்டுகின்றான். மலையாணிப்பிள்ளையைக் கொல்லவேண்டுமென்ற வெறியுடன் புலிப்பொன்ப கியத்தி அந்த இடத்திற்குக் காற்று வேகம் கடல்வேகம் கொண்டு வருகின்றாள். அப்போது அவன் கட்டியிருந்த தடுப்புச் சுவரின் மேல் மோதி உள்ளே நுழைய முடியாது திரும்புகின்றாள். உடனே மலையாணிப்பிள்ளை அந்தக் கிழங்கை முழுவதுமாகத் தோண்டி தான் வீட்டிற்குச் செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக அந்தப் பள்ளத்திலேயே இட்டுப் புதைத்து வைக்கின்றான். பின்னர் தான் இருந்த இடத்தைவிட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரத்தின்மீது ஏறிக் கொள்கின்றான்.
வேட்டைக்குச் சென்று திரும்பிய புலிப்பொன்ப கியத்தி அவனைக் கொல்ல வேகமாக மீண்டும் வருகின்றாள். அங்கு தான் சொன்ன இடத்தில் அவனைக் காணாததால் தேடி அலைந்து மலையாணிப்பிள்ளை இருந்த மரத்தின் அடியில் சென்று நிற்கின்றாள். சற்று மேலே நிமிர்ந்து பார்க்கின்றாள். அங்கே மலையாணிப்பிள்ளை மரத்தின் மேல் இருப்பதைக் காணுகின்றாள். புலிப்பொன்ப கியத்தி மலையாணிப்பில்ளையை நோக்கி நீ எப்படி இந்த மரத்தில் ஏறினாய்? எதற்காக ஏறினாய்? என்று அவனிடம் கேட்கின்றாள். அதற்கு மலையாணிப்பிள்ளை அவளிடம் நான் இந்தப் பெரிய மரத்தில் ஒரு உடும்பை ஏற்றினேன். அதைப் பிடித்துத்தான் ஏறினேன். அதுவும் நான் இந்தப் பெரிய மரத்தில் தலைகீழாகத்தான் ஏறி வந்தேன் என்று அவளிடம் கூறுகின்றான்.* அதைக் கேட்ட புலிப்பொன்ப கியத்தி தானும் தலைகீழாக ஏறுவதாகக் கூறி அவ்வாறே செய்கின்றாள். தன்னைக் கொல்ல நெருங்கிய புலிப்பொன்ப கியத்தியைத் தான் முதலில் கொன்றுவிட வேண்டும் என்று நினைத்து மலையாணிப்பிள்ளை அவள்மீது அம்பை ஏவுகின்றான்.
புலிப்பொன்ப கியத்தி தலைகீழாக நடந்து ஏறுவதனால் அம்பு அவளின் ஆசன வாயில் புகுந்து வாய்வழியாக வர அக்கனமே அவள் செத்து மரத்தின் அடியில் பிணமாக விழுகின்றாள். அப்போது அவள் கையில் இருந்த கணையாழி கழன்று கரகரவெனக் காற்றில் சுழன்று சென்று புலிப்பொன்ப கியத்தியின் மகள் கையில் விழுகின்றது. அது மந்திர மோதிரம் ஆனதால் புலிப்பொன்ப கியத்தி இறந்ததும் அவள் மகளிடம் சென்று விடுகிறது. அதைக்கண்டதும் மகள் தன் தாய் இறந்த செய்தியை உணர்கின்றாள்.
தாயைக் கொன்ற மலையாணிப்பிள்ளையைப் பழிவாங்க வேண்டுமென்று நினைத்து புலிப்பொன்ப கியத்தியின் மகளும் அக்கனமே புலியாக மாறுகின்றாள். தன் வாலில் வளையல்களைக் கோர்த்து இருட்டு அறையில் சென்று படுத்துக்கொண்டு தன் வாலை தரையில் தட்டுகின்றாள். அந்தச் சத்தமானது நெல் குத்துவது போன்று இருக்கின்றது. அந்தச் சத்தத்தைக் கேட்டு மலையாணிப்பிள்ளை ஏமாந்து வீட்டிற்கு உள்ளே சென்றால் மலையாணிப்பிள்ளையைக் கடித்துக் கொன்றுவிடலாம் என்று எண்ணுகின்றாள். ஆனால் மலையாணிப்பிள்ளை வீட்டிற்கு உள்ளே செல்லாமல் அவள் படுத்திருந்த கூறையின் மேல் ஏறி ஓடுகளை அகற்றுகிறான். அவள்மீது சூரியனின் வெளிச்சம் பட்டவுடனே கண்ணிமைக்கும் முன் அவள் கண்களில் அம்பு தொடுக்கின்றான். அம்பு பட்டவுடனே புலிப்பொன்ப கியத்தியின் மகளும் இறந்து போகின்றாள்.
இருவரையும் கொன்றுவிட்டு மலையாணிப்பிள்ளை தன்னுடைய அம்பை அவ்வீட்டில் தேடுகின்றான். அவனுடைய அம்பு அவன் எய்த ஓங்கலின் உடம்பிலேயே இருப்பதைப் பார்க்கின்றான். தன்னுடைய அம்பையும் அந்த வீட்டில் இருக்கும் பொருட்களில் தனக்குத் தேவையானப் பொருட்களையும் எடுத்து தன் புறையில் போட்டுக் கொள்கிறான். தான் புதைத்து வைத்த கிழங்கையும் எடுத்துக் கொள்கின்றான். பின்னர் அவன் வந்த வழியில் ஏழு மாடங்களிலும் உலர்த்திய இறைச்சியையும் எடுத்துப் புறையில் போட்டுக் கொண்டு தன் வீட்டிற்குச் செல்கின்றான்.
மலையாணிப்பிள்ளைக்கு ஒரு மகன் பிறந்து அவனும் ஓடிவிளையாடும் பருவமடைந்த போதுதான் மலையாணிப்பிள்ளை தன் வீட்டை அடைகின்றான். மலையாணிப்பிள்ளை அம்பைத் தேடிச் சென்று பல நாட்கள், ஆண்டுகள் கழிந்ததால் அவன் இறந்துவிட்டதாக அனைவரும் நினைக்கின்றனர்.
மலையாணிப்பிள்ளை வீட்டை நோக்கிச் சென்றதைக் கண்ட அனைவரும் வியப்போடு பார்க்கின்றனர். மலையாணிப்பிள்ளை தான் கொண்டு சென்ற ஓங்கல் கறியைத் தன்னுடைய மனைவியின் தாய்க்குத் தானே சமைத்துக் கொடுக்கின்றான். ஓங்கல் கறியை அந்த மூதாட்டி முழுவதும் உண்கிறாள். மறுநாள் காலையில் அந்தக் கிழவி தான் விரும்பிய கறியை உண்ட மன நிறைவோடு இறந்து போகின்றாள்.
*ஓங்கல் – பிணந்திண்ணிக் கழுகு.
பாடல் – 1 : பூணி – புறை,
குறுமந்தன் கோல்வடி – கிழங்கு அகழும் குச்சி மற்றும் கருவி,
பாதிரி – வில்.
பாடல் – 2 துஞ்சிடா – தூங்குதல்.
பாடல் – 3 கங்கன் – கத்துகிற, கலமான் – கொம்புள்ள மான்.
சலுங்கை – அலுங்கு – எறும்புத்திண்ணி
பாடல் – 4 ஓடங்ஙி – செதிள், நல்ச்சலுங்கு – உடும்பின் ஒரு வகை.
பாடல் – 5 குளக்கால் – குறுகிய கால், நல்வெருகு – கீரிப்பிள்ளை.
பாடல் – 6 திரிகலயம் – பானை, திரிக்கால் – கால், திரிமதி கொள்ளே, தூக்கத்திலிருந்து
ஏழுந்தி(ரு).
பாடல் – 7 வான் பிறாந்து – விடிந்ததைக் குறித்தல், கொங்ஙப்புள்தட்டி – பறவை, கொல்லன்
திரி நாட்டில் – கொல்லர் இருக்கும் நாட்டில், வையாமன் – பெண் கடவுள்,
இரிகதிரு, பொரிகதிரு பால்கதிரு பைங்கதிரு – சூரியன் கதிர்கள்,
செந்தூராடப்பட்டு – சிவந்திருத்தல், போரினே – எழுந்திரு.
பாடல் – 8 வானப் பூந்துருள் – வானம் போன்றிருக்கிற மென்மையான ஆடை கச்சு –இடையில் அணியும் ஆடை,
கெட்டுட – உடலில் சேர்த்துக் கட்ட.
* மாடம் என்பது மரத்தின் மீது, மரக்கிளைகளை இணைத்துப் பரண் பின்னி இறைச்சியை உலர வைக்கும் இடம் ஆகும். இதில் மனிதர்களும் தங்குவர்கள்.
* உடும்பின் ஒருவகை
*அவ்வாறு கூறியதற்குக் காரணம் அவள் நேரே வந்தால் எளிதில் கடித்துக் கொன்று விடுவாள். அதனால் அதைத் தடுப்பதற்காக இப்படி மாற்றிக் கூறுகிறான்.
அவள் தலைகீழாக நடந்து ஏறும்போது, இழிவான வார்த்தைகளால் அச்செயல் சுட்டிக்காட்டப்படும். கதை கேட்கும் அனைவரும் சிரிப்பர். அவை வேண்டாம் என்பதால் இங்கு அச்சொற்கள் பயன்படுத்தப்படவில்லை என்று கூறி அந்த வார்த்தைகளை மங்கம்மா பாட்டி சொல்லவில்லை. சரண்யாவிடம் கேட்டதற்கு பாட்டி சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் என்று கூறவும் என்னால் அவற்றை அறிய முடியவில்லை.

Leave a comment