நேர்காணல்
பெண் எழுத்து என்பது தமிழ்மொழியின் பெருவெடிப்பு


‘பாஞ்சஜன்யம் திரைப்படவிழாவிற்குத் தான் இயக்கிய கோடை இருள் படம் திரையிடச் சித்தூர் வருகிறார் குட்டி ரேவதி என்றறிந்ததும் பொற்றாமரை இதழுக்கு நேர்காண வேண்டுமென ஆசிரியர் குழுவில் ஒருமனதாக முடிவெடுத்தோம். கவிஞரைத் தொடர்புகொண்டு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தார் ஜோதிலட்சுமி. ஓ.வி. விஜயன் நினைவகத்தில் நடந்த இந்த நேர்காணலில் பொற்றாமரை வினாக்குழுவினர் தொடுத்த வினாக்களுக்கு கவிஞர் குட்டி ரேவதி பொறுமையாக, விரிவாகப் பதிலளித்தார். கவிஞர் குட்டி ரேவதியுடனான இந்த நேர்காணலைப் படித்து முடிக்கும்போது அவர், கவிஞர் என்னும் நிலையிலிருந்து பன்மடங்குயர்ந்த பேருருவாய்ப் பன்முக ஆளுமையாய்ப் பரிணமித்து நிற்பதனை உணர்வீர். அப்பேருருவின் உள்ளார்ந்த கருவாய் இன்றைக்கும் அவர்தம் கவியுள்ளம் இயங்குதலையும் உணர்வீர். வாருங்கள். குட்டி ரேவதியுடன் உரையாடுவோம்.
*****
ச. ப்ரியா : பெண் எழுத்து என்பது சுயபுலம்பலாக உள்ளது. இன்னும் பெண்ணியம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்றெல்லாம் பெண்ணியம் சார்ந்த கவிதைகள் எழுதப்படுவதை எதிர்த்து பொதுப்புத்தியில் விமர்சனம் வைக்கப்படுகிறதல்லவா. அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
குட்டி ரேவதி : நான் எழுத வந்த பொழுது இவ்வாறு இருந்தது. சுயபுலம்பல் என்ற வார்த்தையைக் கேட்டே 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அது கேட்பதில்லை. நான் எழுத வரும்போது நேரடியான விமர்சனத்தை வைப்பதற்கோ, பெண்ணெழுத்தின் மீது இருந்த ஒவ்வாமையோ அல்லது தொடர்ந்து எழுத விடக்கூடாது என்ற எண்ணத்தில் வைக்கப்பட்ட விமர்சனமாகவோ இதனை நான் இன்று பார்க்கிறேன். ஆனால் அந்த விமர்சனங்கள் எல்லாம் எழுத வந்த பெண்களால் சீர்திருத்தப்பட்டது. சுயபுலம்பல் என்பதைத் தாண்டி, எழுத எழுத்து கிடைத்தவுடனேயே பெண்கள், வெடித்து எழுத ஆரம்பித்தார்கள். அந்த வெடிப்பு என்பது மொழி வெடிப்பு. அது கவிதை வழியாக பெரிய அளவில் நிகழ்ந்தது என்று நினைக்கிறேன். அந்த எழுத்தை ஆண் பார்வையில் பார்த்தவர்கள் அதை அவ்வாறு எடுத்துக் கொண்டார்கள். பெண்கள் எந்தத் தளத்திலிருந்து எழுதுகிறார்கள் என்று ஆய்ந்து அறிவதற்கான பார்வை இல்லாமல் உடனடியாக வைக்கப்பட்ட வார்த்தை இது. பெண்களை அவ்வாறு தானே பார்த்திருக்கிறார்கள். பெண்கள் சும்மா அழுது கொண்டே இருப்பார்கள், பேசிக் கொண்டே இருப்பார்கள் என்று. அப்படி இருக்கும்போது, பெண்கள் எழுத வரும்போது, பொதுவாழ்வில் ஆண்கள் எவ்வாறு பெண்களைப் பார்த்திருக்கிறார்களோ அவ்வாறுதான் எழுத்து வாழ்க்கையிலும் பார்த்திருக்கிறார்கள் அதனால் இப்படி விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன்.
ச. பிரியா : பழங்குடிகளுடன் பயணிக்கும் அனுபவம் உங்களுக்கு நிறைய அமைந்துள்ளது. பழங்குடியினப் பெண்கள் அவர்கள் வாழ்வை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? அவர்களின் தைரியம் எப்படி உள்ளது? அவர்கள் காட்டுக்குள் வாழ்ந்தாலும் அவர்களுக்கான நிலம் மீட்பதற்காகப் போராடுவது போன்ற நிறைய விஷயங்கள் உள்ளன. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை உங்கள் அனுபவத்திலிருந்து சொல்லுங்கள்.
குட்டி ரேவதி: இது ஒரு பெரிய சப்ஜெக்ட். முதல் கேள்விக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இது என் வாழ்வில் தற்செயலாக நிகழ்ந்தது என்று நினைக்கிறேன். 20 ஆண்டுகளாக நான் இருளர்களுடன் பயணம் செய்து வருகிறேன். அவர்களை அரசியல் படுத்துவது அவர்களைப் பார்க்கும் பார்வை எல்லாமே எதிர்மறையாக உள்ளது என்று நினைக்கிறேன். நாம் அவர்களைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் அவர்களை வெகுவாகப் பாதிக்கிறது என்பதை உணர்கிறேன். பொதுவாக இந்திய அளவில் மகாஸ்வேதா தேவி அவர்கள் பழங்குடிகள்பால் மிகுந்த கனிவுடனும் அக்கறையுடனும் அவர்களுடன் இணைந்து பணிகளைச் செய்து எழுதி உள்ளார்கள். முதல்முறையாக அவர்தாம் பழங்குடியினர் வாழ்வை கதைகளாக மாற்றினார். அதில் கடுமையான நேர்மை இருந்தது. முன்பெல்லாம் சமூகக் களப்பணி ஆய்வு செய்து புனைவிற்குக் கொண்டு வரும்போது அதனை இலக்கியமாகப் பார்க்கும் பண்பு தமிழில் இல்லை. என்னையும் அவ்வாறுதான் கூறுகிறார்கள், நான் ஆய்வு செய்து கவிதை எழுதுவதால். இவ்வாறு எழுதுபவர்களை இலக்கியவாதிகளாகப் பார்ப்பதில்லை. கற்பனையில் தானே உதயமாகி எழுதும் சுயதரிசன எழுத்தாளர்களை மட்டுமே இலக்கியவாதிகளாகப் பார்க்கிறோம் என்கிறார்கள். ஆனால் உண்மையில் அவ்வாறு கிடையாது. நமக்கும் இந்தச் சமூக அரசியலுக்கும் தொடர்பும் பின்னல்களும் உள்ளன. அவ்வாறு பார்க்கும் போது பழங்குடியினர் வாழ்வை நான் வெகுவாக அறிந்திருந்தாலும் கருத்து சொல்லும் வாய்ப்பை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நினைக்கிறேன். உண்மையிலேயே இந்த இந்திய மண்ணில் அதிகமாக நம்மாலும், அரசாலும் நசுக்கப்பட்டவர்களும் நசுக்கப்படுபவர்களும் பழங்குடியினர்கள்தாம். உண்மையிலேயே அவர்களைப் பற்றிப் பேசாமல் விட்டாலே போதும் என்று பல நேரங்களில் எனக்குத் தோன்றும். ஏனென்றால் நாம் தவறாக அவர்களைப் பற்றி பொருள் விளக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். அது இன்னும் அவர்களை ஒடுக்குவதற்கான ஒரு முறையாக உள்ளது. குறிப்பாக நான் இருளர், காணி பழங்குடியினர்களுடன் நெருக்கமாகத் தொடர்பு வைத்துள்ளேன். அதை எழுதுவதற்குத்தான் என்று சொல்ல முடியாது. குறிப்பாக சினிமாப் பணியின் காரணமாக நான் அவர்கள் வாழ்வியலை மிகவும் கூர்ந்து நீண்ட காலம் கவனித்தபோது, அவர்களுடைய வாழ்வியல் அறம் சார்ந்த வாழ்வியல். முற்றிலும் புதிதாகவும், எழுச்சியாகவும் இருக்கிறது. அது நமது வாழ்விலேயே இல்லை. நம் பொதுச் சமூகத்தில் அவ்வாறு காண்பது அரிது. நாம் குடும்பத்தில் கணவன் மனைவி, தாய் மகள் போன்று உறவில் இருந்தாலும் அவர்கள் பயில்கிற அறம் அல்லது அவர்கள் பாராட்டுகிற அறம் என்பது நம் வாழ்வில் வைத்துக்கொள்ளவே இல்லை. நம் வாழ்வு என்பது பொருள்மயமானவை, பயன்பாட்டு ரீதியானவை எல்லாவற்றிற்கும் ஒரு விலைமதிப்பு இருந்தால் மட்டும்தான் நாம் உற்று நோக்குவோம். இதனால் இப்ப என்ன பயன்? என்று கூறுங்கள் என்று வினவும் நிலையில்தான் நாம் உள்ளோம். ஆனால் அவர்களுடைய வாழ்வு அவ்வாறு கிடையாது. அவர்களுடைய வாழ்க்கை பெரிய வாழ்வனுபவத்தை பின் வைத்துள்ளது. அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வருவதன் தொடர்ச்சியாகப் பார்க்கிறார்கள். அவர்கள் தங்களைத் தனியாகப் பார்ப்பதே இல்லை. இந்தப் பேரண்டத்துடனான அவர்களுடைய இணக்கம், இந்த வானம், பூமி இவையெல்லாம் அவர்களுக்கு எந்த மாதிரியான அர்த்தத்தை கொடுத்துள்ளது என்பதை வைத்துத்தான் அவர்கள் வாழ்கிறார்கள். அப்படி இருக்கும்போது நாம் அவர்களுடைய வாழ்வைப் பற்றி சொன்னால் அது எவ்வளவு தவறானது, என்று நான் சமீபத்தில் உணர்கிறேன். அவர்களைப் பற்றிய கருத்துக்களை கூறாமலிருந்து அவர்கள் வாழ்வைக் கூர்ந்து கவனித்து அதில் நாம் ஏதாவது புரிந்து கொண்டாலே போதுமானது என்று எனக்குத் தோன்றுகிறது. குறிப்பாகப் பழங்குடிப் பெண்கள் போல நாம் வாழத்துவங்கினால்… இன்று காலை அவ்வையிடம் கூட கூறினேன். அவர்கள் குறுகிய காலத்தில் நீண்டகால வாழ்க்கையை வாழ்கிறார்கள். நாம் 70 வயதோ 90 வயதோ குறுகிய கால வாழ்வை வாழ்கிறோம். ஆனால் அவர்கள் அவ்வாறு கிடையாது. ஏடுகளில் அடக்க முடியாத சொற்களால் விளக்க முடியாத மிக நீண்ட கால வாழ்வை வாழ்கிறார்கள். அதற்கான காரணம் இந்த இயற்கை, வாழ்க்கைப் பற்றிய புரிதல், மனித வாழ்விற்கு என்ன தேவை உள்ளது இந்த பூமியில் என்று பார்த்து, சுற்றி உள்ள உயிரினங்களுடன் தங்களை இணைத்து, அதில் ஒன்றாகத்தான் அவர்கள் வாழ்கிறார்கள். மிருகங்களை விட மனிதர்கள் உயர்ந்தவர்கள் என்று அவர்கள் எண்ணுவதில்லை. அவர்களை ஒரு புகைப்படம் பிடித்தால் கூட அதில் ஆடு, நாய், கோழி, பாம்பு, உடும்பு, குழந்தைகள் போன்றவை இணைந்துதான் இருக்கும். அவர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாததற்கான காரணம் என்னவென்று அவர்கள் கூறுகையில், பிள்ளைகளைப் பிரிந்து அவர்களால் அந்த நேரத்தில் இருக்க முடியாது. ஒரு கல்வி முறையை அவர்களுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் எப்படி இருக்க வேண்டும், பெற்றோர்களுடன் சூழ்ந்த ஒரு பள்ளி என்றுதான் இருக்க வேண்டும். அப்படி இருந்தாத்தான் கல்வியை அவர்களுக்கு கொண்டு சேர்க்க முடியும். இந்த அறிவே நமக்கு வருவதில்லை. நாம் நம்ம குழந்தைகள் மேலேயே ஒரு முழுமையான அன்பு பாராட்டுவதில்லை. ஸ்கூல் போயே ஆக வேண்டும். என்ன மாதிரி டீச்சர் கிட்டனாலும் போய்ப் படிச்சு தொலையனும், அது இவ்வளவு மார்க் வாங்கியே ஆகணும், தன்னோட பண்புகளை எல்லாம் இழக்கணும், முதல் மதிப்பெண் வாங்கணும், இதுல டிகிரி வாங்கணும், ஏதோ ஒன்று ஆகியே ஆகணும். ஆனால் அவர்கள் அப்படி நினைப்பதில்லை.
கவிஞர் ச. ப்ரியா: மிகவும் அற்புதமான பதில். பழங்குடிப் பெண்களிடம் இருந்து நிறைய கத்துக்கணும். என்னுடைய கவிதையில் கூட எழுதி இருப்பேன். ‘வன யட்சி’ என்று. தானியங்களை உலர்த்தும் போது, நாம் மொட்டை மாடியில் உணத்தினால் எல்லா தானியங்களையும் மாலை நேரத்தில் வாரி எடுத்து வந்துவிடுவோம். ஆனால் அவர்கள் பாதி எடுத்துக்கொண்டு பாதி விட்டு விடுவார்கள். அது பறவைகளுக்கானது என்று அவர்கள் சொல்வதை வைத்துத்தான் அந்த வரிகளை எழுதினேன். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.
குட்டிரேவதி: நமது நாகரிகம் என்ன சொல்லிக் கொடுக்கிறது என்றால் நான்தான் நான்தான் அப்படிங்கிறதை எவ்வளவு தூரம் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறோமோ அவர்கள்தான் உயர்ந்தவர்கள். எழுத்தாளர்களைக் கூட நாம் அப்படித்தான் பார்த்திருக்கிறோம். யார் வந்து தன்னைத்தானே உயர்த்தி வைத்துக் கொள்ள முடிகிறதோ, அவர்கள்தான் சிறந்த எழுத்தாளர்னு பார்க்கிறோம்.
வீ. ரமேஷ்குமார் : பெண் எழுத்து, பெண் மொழி, அதனுடைய தொடக்கம் பற்றி தமிழ் இலக்கியப் பரப்பில் பல்வேறு விவாதங்கள் உள்ளன. கவிஞர் ராஜமார்த்தாண்டன் காலச்சுவடு இதழில் எழுதிய கட்டுரையொன்றில், தமிழீழத்தில் விடுதலைப் போர், அதில் பெண் உறுப்பினர்களாக இருந்த சமயத்தில் ஒரு வெடிப்பு ஏற்படுகிறது. அதிலிருந்து எழுத்து பெண்கள் எழுதத் தொடங்குகிறார்கள். குறிப்பாக ‘மரணத்துள் வாழ்வோம் சொல்லாத சேதிகள்’ என்ற தொகுப்பு பெண்ணெழுத்து தமிழகத்தில் உருவாவதற்குத் தொடக்கமாக இருந்தது” என்று அவர் குறிப்பிடுகிறார். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அதைத் தாண்டி பெண் எழுத்து என்பது அப்பொழுதுதான் உருவானதா? இல்லை அதற்கு முன்னாடியே இருக்கா? என்று தெரிஞ்சுக்கணும்.
குட்டிரேவதி: சமீபத்தில், கடந்த 30,40 ஆண்டுகளில் பெண் எழுத்து தமிழீழப் பெண்களால்தான் தொடங்குகிறது. மரணத்துள் வாழ்வோம், சொல்லாத சேதிகள், செல்வி சிவரமணி கவிதைகள், இதைச் சொல்லும்போதே எனக்கு மெய்சிலிர்க்கிறது. அவர்கள் மாதிரி மொழியை உரிமைக்காகப் பயன்படுத்தியவர்கள் இன்றும் தமிழில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களிலும். மொழி நாகரிகத்தின் உச்சத்தை கடுமையாக கவிதைகளில் பயன்படுத்தினார்கள். கண்டிப்பாக அவர்(ராஜமார்த்தாண்டன்) அதைச் சரியாகச் சொல்லியிருக்கிறார். இதற்காக நாங்கள் சாகித்ய அகாதெமியில் கூட ஒரு சிறிய தொகுப்பு பண்ணினோம். பெண் கவிதைகள் அதாவது என்னுடைய தமிழீழக் கவிதைகள் என்று ஒட்டுமொத்தத் தொகுப்பு கூட பண்ணினோம். ஒவ்வொரு கவிதையும் ஒரு பெருவெடிப்பாக இருக்கும். ஒரு கவிதையை நீங்கள் வாசித்து விட்டு வேறு கவிதைக்குப் போகவே முடியாது. அது மனதில் கிளை கிளையாக விரிந்து நமக்கு நிறைய சிந்தனைகளையும் நமக்கு நிறைய தூண்டுதல்களையும் கொடுக்கும். நாம் இன்று ரொம்ப சொகுசாகி விட்டோம். மொழியைக் கூட ஒரு சொகுசான பகுதியில்தான் வைத்துக்கொள்ள விரும்புகிறோம். அதைக்கூட நாம் திருகி அந்த மொழியை ஒரு விடுதலை மொழியாகவோ, உரிமை மொழியாகவோ அப்படியான ஒரு பண்பாட்டு மொழியாக மாற்றிக் கொள்வதில் நமக்கு தயக்கம் இருக்கு, கூச்சமிருக்கு, அச்சம் இருக்கு, அவமானம் கூட இருக்கு. நம்முடைய மொழி இறுகி கரடு தட்டிப் போய் இருந்தால்தான் நாம் சரி என்று நினைக்கிறோம். ஆனால் தமிழீழப் பெண்கள் எப்படி என்றால் அவர்களுடைய நிலம், வாழ்வியல், இன ஒடுக்குமுறைக்கு மொழியை ரொம்ப உச்சபட்சமாக, எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்துகிறார்கள். அது ஒரு வேராக இருந்தது.
நான் எழுத வரும்பொழுது அதை வாசித்ததாக நினைவு இல்லை. எனக்குச் சித்தர் மொழிகள் ரொம்ப பயன்பட்டன. அதாவது நான் சித்த மருத்துவராகப் பயின்று வந்ததினால் அந்தச் சொற்களஞ்சியம் எனக்கு கவிதை எழுத பெருவாரியாக உதவியது. ஆனால் இங்கு பெரிய சர்ச்சையாகி பெண் எழுத்தை எல்லோரும் விமர்சிக்கத் தொடங்கிய பிறகு பரவலாக வாசிக்கும்போது இந்த மரணத்துள் வாழ்வோம் கவிதைகள் எல்லாம் வாசித்துக் கலங்கல் தெளிவாகி விட்டது. சர்ச்சையினால் உண்டான கலங்கல், கலக்கம் எல்லாம் போய்விட்டது. நாம் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. இதற்கே இப்படி துள்ளுகிறார்கள் எல்லாரும். தனது உயிரைப் பணயம் வைத்து மொழியைப் படைத்திருக்கிறார்கள் அந்தக் கவிஞர்கள். அந்த மாதிரி சுய தெளிவிற்குத் தமிழில் பெண் கவிதைகளின் தொகுப்புதான் இருந்தது.
நான் இதை இணையத்தில் தமிழ் ஸ்டூடியோவிற்கு ஒரு தொடராக எழுதினேன். முடிந்தால் எப்போதாவது படியுங்கள். ‘ஆண்குறி மையப்புனைவை சிதைத்த பிரதிகள்’ என்று எழுதியுள்ளேன். மொழியை ஆண்குறி மையமாக வைத்து அல்லது ஆண் சிந்தனை மையமாக வைத்து ஒரு விஷயமாக பார்த்துக் கொண்டிருக்கும்போது எப்படி அந்தக் கவிதையைச் சிதைத்தார்கள், கவிதை வழியாக இந்தப் பெண் கவிஞர்கள் என்று ஒரு தொடர் எழுதினேன். அதில் எல்லா ஈழப் பெண் கவிஞர்களையும் குறிப்பிட்டு நான் எழுதியிருப்பேன். புதிய தலைமுறையும் அதில் உள்ளனர். ஃபஹீமா ஜஹான், அனார் என்ற புதிய கவிஞர்களும் உள்ளனர். அந்தத் தொடருக்கு கடுமையான வரவேற்பும் உற்சாகமும் ஆதரவும் இருந்தது. ஏனென்றால் அது இணையம்.
10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அந்தத் தொடர் வந்து என்று நினைக்கிறேன். ஆண் வாசகர்கள் அப்படியே உற்சாகப்பட்டே எழுதுவார்கள். ஒவ்வொரு தொடராக. தொடரை நான் எனக்கே உரிய மொழியில் எழுதுவேன். ரொம்ப ஒரு கடினமான, கடுமையான மொழியில் எழுதுவேன். இன்றுமே எனக்கு இது உண்டு. கவித்துவ மொழியில் உச்சத்தில் எழுதுவேன் நான். ஒரு மூர்க்கம் இருக்கும். நம்பவே முடியாது அபுதாபி, துபாய் போன்ற இடங்களில் உள்ள தொழிலாளர்கள் அவர்களுக்கு மொழியுடன் இணைந்து கொள்ள ஏதாவது வாய்ப்பு தேவைப்படும். ஆகவே அவர்கள் வாசிப்பார்கள். வேர்வை சிந்தி உழைத்து வந்து ஒரு சிறிய குறுகிய பகுதியில் ஃபோனில் வாசித்து விட்டு பதில் டைப் பண்ணி அனுப்புவார்கள். இதுபோன்று அந்த ஆதரவை நான் வேறு எங்கேயும் எப்போதும் உணர்ந்ததில்லை. இப்பொழுதுமே அந்தத் தொடர் இணையத்தில் உள்ளது.
நான் முதலில் எழுதத்துவங்கும் போது தமிழ் ஸ்டூடியோ அருணுடன் ஓர் உரையாடலாக இருந்தது, எப்படி கொண்டு போகலாம் என்று. பின் எனக்கு அந்த இடம் வெறுமையாக இருந்தது. பெண் கவிஞர்களின் கவித்துவம், அதனுடைய மூலம் என்னவாக இருக்கும் அதனுடைய விதைகள் எவை, எது அவர்களுக்கு கவிதை எழுதுவதற்கான மூலமாக இருக்கும் என்பதை யாருமே புரிந்து கொள்ளவில்லை என்று எனக்கு ஒன்று இருந்தது. அதை மட்டும் ஒட்டுமொத்த கவிதை என்று எல்லா நூலையும் வாசித்திருக்கோம். இப்போ ப்ரியா இருக்காங்கண்ணா அவர்களுடையவையாக10 கவிதைத் தொகுப்பு இருந்தால் அவற்றை முழுமையாக வாசித்து அதில் கவிதைகளை தேர்ந்தெடுத்து அதில் என்னென்ன கூறுகள், மூலம் எது அவர்களுக்கு……. நானும் இவரும் கவிஞர்களாக இருந்தாலும் ஒரே மாதிரியான கவிதைகள் எழுத வேண்டும் என்பது அவசியம் இல்லை. அவர்களுடைய வாழ்வில் இருக்கின்ற விடயங்கள் அவர்களை எழுதத் தூண்டுகிறது. என்னுடைய கவிதை என்னுடையதில் இருக்கிறது அப்போது அவர்களுடைய வாழ்க்கையை அந்தப் பொன் துகள்களைச் சலித்து எடுத்து அதைப் பற்றியெடுத்து முன் வைக்கும் போது அது எல்லாருடைய வாழ்க்கைக்கும் ஒளி வீசுவதாக இருக்கிறது. அப்படித்தான் அவர்களும் பார்க்கிறார்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள். அது ரொம்பவும் பெரிய அனுபவமாக இருந்தது. அப்போது என்னை உயிருடன் வைத்துக் கொள்வதற்கு அது பேருதவியாக இருந்தது.
ஜோதி: நீங்கள் கூறிய பதிலில் இருந்துதான் கேள்வியும். அதாவது உங்களுடைய கவிதைகள் எல்லாமே ரொம்பவும் அடர்த்தியானது, தரமானது ரொம்பவும் கடுமையானதும் கூட, வாசிக்கும் போது கொஞ்சம் கடினமானதாக இருக்கிறது. உங்களுடைய கவிதையைத் தொடர்ந்து படித்து, எழுதி வரும் இளம் கவிஞர்களுக்கு நீங்கள் உங்கள் கவிதைகளை எப்படிப் புரிந்து கொள்ளலாம் என்று சொல்ல விரும்புகிறீர்கள்.
குட்டிரேவதி: நான் இந்தக் காலத்திற்குச் சம்பந்தப்பட்ட ஒரு ஆளே இல்லை என்று தோன்றுகிறது. எனக்கும் இந்தக் காலத்திற்கும் தொடர்பு இல்லை. இதை நான் சில ஆண்டுகளாகவே உணர ஆரம்பித்து விட்டேன். அதனால் நான் கவிதைகளைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டேன். ஆனால் முன்பை விட இப்போது நிறைய கவிதைகள் எழுதுகிறேன். ட்ரெயின்ல வரும்போது இரண்டு கவிதை எழுதுகிறேன். எங்காவது தனியா ஒரு இடத்தில…… யாருக்காவது காத்திருக்கணும், வாகனத்திற்காகக் காத்திருக்கும் நேரத்தில் ஒரு கவிதை எழுதுகிறேன். அப்படியாக, கவிதை முன் எப்போதையும் விட, எனக்குள் இன்னும் அடர்த்தி ஆயிட்டே இருக்கு. இன்னும் ஆழமாகிட்டே இருக்கிறதுன்னு நினைக்கிறேன். ஆனா முன்பிருந்த போல இப்போ இந்த நேர்காணலை வைத்திருக்கிறதே ரொம்ப ஆச்சரியமாக உள்ளது. ஏனென்றால் இந்தக் காலத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதாவது என்னுடைய கவிதைக்கும், எனக்கும் நினைக்கல, என்னோட கவிதைகளுக்கு. நவீன கவிதைக்கும் சரி என்னை விடுங்கள், பெண்கள் எழுதுகிற நவீன கவிதைகளுக்கும் தற்காலச் சமூகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கடுமையாக நீர்த்துப் போய்விட்டது. நான் முதலில் கவிதை வடிவத்தைப் பற்றிச் சொல்லுகிறேன். கவிதை மொழி நீர்த்துப் போன ஒரு வடிவம் ஆகிவிட்டது. அப்புறம் சின்ன சிறுகதை, சம்பவம் அல்லது நிகழ்வை அடுத்தடுத்த வரியில் மடித்து எழுதுவதை கவிதை என்று சொல்கிறார்கள். அந்த லைனை நீங்க நீளமாக எழுதினால் பத்தியாகப் போகிறது அவ்வளவுதான். ஆனால் நாங்கள் எழுந்து வந்த இடம் அந்த மாதிரி கிடையாது. உண்மையிலேயே மொழிநடை நான் இந்த வார்த்தையை இங்கு பயன்படுத்துகிறேன். ஒரு பெருவெடிப்பு, ஒரு எரிமலை மாதிரி வெடிப்பில் அந்தக் குழம்பு எப்படி நெருப்பாகவும் ஒளியாகவும் வெளிவரும். அந்த மாதிரி ஒரு இடத்தில் இருந்து வந்தது கவிதை. அப்ப நிறைய விடயங்களைப் பேசணும் ஒன்று பேராசிரியர்கள். அந்தக் கவிதை என்னவென்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆளுமைகளாக இருக்க வேண்டும். இரண்டாவது இலக்கிய வரலாற்றில் இந்தக் கவிதை வரலாறு என்ன என்று நன்றாக புரிந்து அவதானிக்க கூடிய பெண் பேராசிரியர்களும் வேண்டும், ஆண் பேராசிரியர்களும் வேண்டும். கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழில், வெவ்வேறு மொழி வந்துள்ளது. இன்று சங்க இலக்கியத்தைப் படிக்கும் போது நமக்கு புரியுமா உடனே. அப்படியே நாம விட்டு கிழிச்சி எறிஞ்சிட்டு போறோமா. தொல்காப்பியத்தில். மொழியைப் போய் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நெல்லை அவித்து, இடித்து, பொடித்துச் சலித்து எல்லாம் பண்ணி அப்பறமா நாம அரிசியை எடுக்கிறோம். நம்ம வாழ்க்கையும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். கவிதையும் அதுதான். புனைவு, நாவல் மற்ற விடயங்கள் எல்லாம் பேசச் சொன்னால் அது வேற இன்னொரு இடத்தில் போய் உட்கார்ந்து பேச வேண்டும். கவிதை எனப் பேச வரும்போது அது நேரடியாக மொழியுடன் போய் உரையாடுவது. அப்போது அதை பேசுவதற்கான சமூக அமைப்பு இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் instagram-ல் நான் இப்ப ரொம்ப தீவிரமா இருக்கிறேன். அதுல ஃபுல்லா 20 முதல் 25 வயது உடைய இளைஞர்கள்தான் இருக்கிறார்கள். நண்பர்களே, டெய்லி ஒரு மெசேஜ் ஆவது வந்துவிடும். எங்கள் கல்லூரியில் உங்களுடைய இந்தக் கவிதை இருக்கிறது, இல்லை உங்கள் கவிதையைப் பேசச் சொல்லி இருக்கிறார்கள். இதை எப்படிப் புரிந்து கொள்வது என்று. என்னைக் கேட்கவா வேண்டும். நான் ரொம்ப உற்சாகமாக, எவ்வளவு நீளமா ஒரு மெசேஜ் ஒரு கவிதையைப் புரிந்து கொள்வதற்கு நான் உட்கார்ந்து அனுப்புவேன். அதாவது அப்ப என்னவென்றால் நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், நான் ரொம்ப தனிமைப்பட்டுவிட்டேன். தனிமை என்றால் எதிர்மறையான அர்த்தத்தில் இல்லை. அது இன்னும் கவிதைக்குள் ஆழமாகப் பயணிக்க ரொம்ப உதவியாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான் எழுவது, எண்பது வயதுகள் ஆகும் போது நல்லா இன்னும் கவிதை எழுதுவேன் போல் உள்ளது. அப்படி ஒரு இடத்திற்கு வந்துவிட்டேன். இன்னும் ஒன்று ரொம்ப தனித்துவம் அடைஞ்சிட்டேன்னு நினைக்கிறேன். இது கவிதைக்கு ரொம்ப ரொம்ப அவசியம் என்பது. இல்லை என்றால் இந்த பரபரப்பான விடயங்களுக்குள் போகும்போது.. காலையில் ஒன்று மனதில் அடிபட்ட கரு / கவிச்சொல் ஒன்று, அது காற்றில் போய் விட்டதே என்று மாலை வரை குடைந்து கொண்டே இருக்கும். அதைக் கையில் பிடிக்க முடியாத ஒரு வேதனை தவிப்பு இருந்துட்டே இருக்கும். இப்போ அப்படி இல்லை நல்லா ஒரு மரத்தில் அமர்ந்துவிட்ட இளைப்பாறல் மனநிலை, ஆசுவாசம் இருக்கு. அதனால் யாராவது இந்தக் கவிதை இப்படி இருக்கு, இதுல இந்த வரி புரியவில்லை என்று சொன்னால் போதும், நல்லா அழகா அந்தக் கவிதையைத் திரும்ப வாசித்து அன்றைய மனநிலையில் நான் எப்படி எழுதினேன் என்று. அதைப் பார்க்கும்போது எப்படி உள்ளது, நீங்கள் என்ன பார்க்கிறீர்கள், என்று அதாவது அப்படிக் கேட்பவர்களுக்கும் இருக்கிறார்கள். நான் என்ன புரிந்து கொள்கிறேன் என்றால், எல்லாருமே தனிமைப்பட்டு விட்டோம். தனிமைக்கு ரொம்ப ஊன்று கோலாக இருப்பது கவிதை மட்டுமே. அதிலும் கவிதைகளில் நவீனக் கவிதை, நவீனக்கவிதையிலிருந்து அதிநவீனக் கவிதை என்ற ஒன்று பிறந்திருக்க வேண்டும். அது பிறக்காமல் நாம் பார்த்துக் கொண்டோம் என்று சொல்லலாம்.
ஏனென்றால், நண்பர்களே ரொம்ப வேதனைப் பட்டார் மணிவண்ணன் கூட, பாருங்கள் ஒரு எழுத்தாளரைக் கேரளத்தில் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று. நான் கேரளாவை எப்படிப் பார்க்கிறேன் என்றால் சாதிய அதிகாரப் படிநிலைக்கு உட்படுத்தப்பட்ட சமூகம். அங்கே அப்படித்தான் யாராவது ஒருவரைத்தான் எழுத விடுவார்கள். அவர்களைத்தான் கொண்டாடுவார்கள். புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். இங்கு தமிழ்நாட்டில் அப்படி இல்லை நாம் எல்லோரும் எழுத்தாளர்கள். நம்மிடம் ஒரு மொழி நாகரிகம் இருக்கிறது. நமக்கு எழுத வாசிக்கத் தெரிந்திருந்தால் நம்மால் எழுதாமல் இருக்க முடியாது. யாராக இருந்தாலும் இங்குள்ள ஒரு செக்யூரிட்டியப் போய் பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டில், அவர் எழுத வாசிக்கத் தெரிந்திருந்தால் ஒரு கவிதை எழுதுவார், ஆட்டோவில் நாலு வரி எழுதிப் போடுவார். சோசியல் மீடியாவில் எழுதுவார். இந்த மாதிரி நம்மிடம் தமிழர்களிடம் என்னவென்றால் நமது ரத்தம், சதை, சிந்தனை எல்லாமே நமக்கு மரபு மூதாதையர்கள் என்று நாம் வைத்துள்ளது தமிழ் மொழி தான். அதில் இவருக்கு உயர்ந்த பதவி, இவருக்கு இன்னது என்பதெல்லாம் கிடையாது.
ஓ வி விஜயன் கொண்டாடப்படும் எழுத்தாளராக ஆகிறார் என்றால், அதற்குச் சமூகத்தில் நிறைய நசிவுகள் இருந்திருக்கும். அப்போதுதான் இப்படி வர முடியும். நான் இதை மதிக்கிறேன். ஓர் எழுத்தாளனை இப்படித்தான் கொண்டாட வேண்டும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒருவர் இருக்கிறார். வைக்கம் முகமது பஷீர். அவர் இதெல்லாம் தூக்கி எறிந்து விடுவார். அவரெல்லாம் விருது வாங்கின கேடயத்தையே விட்டு எறிந்தவர் என்றெல்லாம் சொல்வார்கள். அப்படி இருக்க நமக்கு மொழி அப்படி கிடையாது. எல்லோருக்கும் மடைதிறந்த வெள்ளம் போல, எல்லோரும் பீறிட்டு எழுதக்கூடிய விடயங்கள் அவ்வளவு உள்ளன. நான் மட்டும்தான் எழுத்தாளன், நான்தான் உச்சத்தில் இருக்கிறேன், என்னைத்தான் உச்சத்தில் வைத்துக் கொண்டாட வேண்டும் என்று இருக்கவே முடியாது. சமத்துவம் நமது மொழியில் அப்படியே அடிப்படையிலேயே உருவானது. தோற்றுவாயிலிருந்து இருக்கிறது. அதை அப்படியே ஆழமான தீவிரமான கருப்பர்கள் மண்ணில் நிறம் கொண்டாடுவார்கள். நமக்கு மொழியை மொழியால் பாட வேண்டும். மொழியால் எழுத வேண்டும். மொழியால் முழக்கம் போட வேண்டும். மொழியால் எல்லாமே செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் இங்கு வாழ்ந்து விட்டு போவதில் ஒரு நிறைவு இருக்கும் என்று எண்ணுகிற சமூகம். நம்மை நாம் கேரளச் சமூகத்துடன் ஒப்பிட முடியாது என்று நான் நினைக்கிறேன். ஓ.வி விஜயன் கோவித்துக் கொள்ள மாட்டார். ஒருவேளை அவர் எழுந்து வந்தால் அவர் ஒத்துக் கொள்வார். ஆனால் இந்தச் சிந்தனை அளவிற்கு மொழியை புதுப்பித்துக் கொள்ளவில்லை. பயன்படுத்திக் கொள்ளவில்லை.
பல விதமான மொழியை தமிழுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். கவிதைக்குள் அப்படி ஓர் அடர்த்தியான மொழி இருந்திருந்தால் தான் என்ன. இப்போது பொறியியல் இருக்கிறது, அதற்கு ஒரு புத்தகம் இருக்கிறது. அதற்கென்று கலைச்சொற்கள் இருக்கத்தானே செய்கின்றன. இன்றைக்கு எல்லாம் தமிழில் கொண்டு வந்திருக்கிறார்கள். மருத்துவம் இருக்கிறது. எல்லாமே இருக்கிறது. ஒவ்வொன்றிற்கும் வேறு வேறு கலைச் சொற்கள். அப்படி கவிதையில் அதிநவீனக் கவிதைகள் என்று உருவாகி, அதைப் பெண்கள், ஆண்கள் எல்லாம் பயன்படுத்தி, அது நிறைய குறியீடுகள், உவமைகள், உருவகங்கள் இன்றைய நவீன உலகத்தின் சிக்கல்களைத் தீர்த்து வைக்கின்ற குறியீடுகளைப் பயன்படுத்துகின்ற ஒரு ஸ்பேசாக ஏன் கவிதைகள் இருக்கக் கூடாது.
ஏன்னா மொழி நமக்கு ஆயுதம், மொழி தண்ணீர், இரத்தம், மூச்சு. நம்முடைய மூதாதையர்களுக்குக் கிடைக்காமல் வைத்திருந்தார்கள். இன்று நமக்குக் கிடைத்தது, நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் மொழியை வைத்து. நாம் 2000 வருடங்களாக நம்முடைய ஆட்களை நாக்கு இல்லாமல் வைத்து விட்டோம். விரல் இல்லாமல் வைத்திருந்தார்கள். இன்று நமக்கு விரல் இருக்கிறது எழுதுவோம். என்ன வேண்டுமானாலும் எழுதலாம். எப்படி வேண்டுமானாலும் எழுதுவோம். அது நம்முடைய மூதாதையர்கள் எத்தனை நாட்களுக்கு நாக்கை பொத்திப் பொத்தி வைத்திருப்பார்கள் பேசாமல். நீங்கள் நினைத்துப் பாருங்கள் நம் பெற்றோர்கள், மூதாதையர்கள் எவ்வளவு பேரிடம் இப்படி ஒடுங்கிப்போய் நின்றிருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் நாக்கிற்குப் பேச்சுத் திறம்படவில்லை. எழுதுவதற்கு, ஆவணத்திற்கு என்றும் எதுவுமே அவர்களுக்குத் தரப்படவில்லை.
நாம் முதல் தலைமுறையாகப் பெரியாரின் போராட்டத்திற்கு பிறகு, அண்ணல் அம்பேத்கரின் பெரிய declaration-க்கு அப்புறம் இது இந்திய அளவிலான டிக்ளரேஷனுக்கு அப்புறம் இது நமக்கு வந்திருக்கிறது. சாவதிற்குள் மொழியை உச்சப்பட்சமாக ஒவ்வொருவரும் பயன்படுத்திவிட்டுப் போகணுமோ, அதனால் பயனை உண்டாக்கி விட்டு போகணுமோ, அது அவரவர் ஆளுமையைச் சார்ந்தது என்று நினைக்கிறேன். நான் என்னுடைய ஆளுமையை எனது மொழி வாயிலாகதான் உணர்கிறேன். என்னுடைய சொத்து வாயிலாகவோ, என்னுடைய கணவர் வழியாகவோ, என்னுடைய குழந்தைகளின் பெயர் புகழ் வைத்தோ நான் வைத்துக் கொள்ளவில்லை. எனக்கு என்னுடைய மொழியை நான் எவ்வளவு என் வழியாக எடுத்துக் கொள்கிறேனோ நான், எனக்கு மட்டும் இல்லைப். எல்லோருக்கும் நீங்கள் உங்கள் பெற்றோரிடம் போய் கேளுங்கள். உங்கள் பெற்றோர்கள் எத்தனை பேர் படித்தவர்கள் என்று சொல்லுங்கள். அப்போ 2000 வருடங்களுக்கு அப்புறம் நமக்கு அகர முதல எழுத்தெல்லாம் தெரிகிறது என்றால் வெடி போட வேண்டும் நாம். ஏனென்றால் இவர்கள் கூட நீ எப்படி இப்படி எழுதலாம் என்று நமக்கு ஒரு கதை உண்டாக்குகிறார்கள் என்றால் அவர்களுக்கு அந்தத் தயக்கம் இருப்பதால்தான். அவர்களுக்கு அந்த விமர்சனம் ஏன் உருவாகிறது என்றால் அந்தத் தயக்கம், கூச்சம் அது அவர்களுக்கு உள்ளே இருக்கிறது. அவர்களுக்கு நான் தான், நான் தான், நான் தான் அவர்கள். அப்போது என்ன ஆகும் என்றால் அவர்களையும் கன்வின்ஸ் பண்ண வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இந்த மொழி இதுக்குத்தான் என்று.
பல நாள் சொல்லுவார்கள், அப்புறம் ஒரு நாள் அடங்கி விடுவார்கள். நான் பார்த்து விட்டேன். என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார்கள், இன்று அவரவர் மனைவி, மகன்களை எல்லாம் எழுதக் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். புரிகிறதா. என்னை ஒரு பெண் எழுதக்கூடாது என்று சொன்னவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின்பு வீட்டில் வெறுமனே சமையல் செய்து கொண்டு இவர்களை வெறும் எழுத்தாளர்கள் என்று போற்றிக் கொண்டு இருந்த மனைவியையும், மகள்களையும் எழுத கொண்டு வந்து சமூகத்தில் முன்னிறுத்தி இருக்கிறார்கள். இதுதானே இதற்குத்தானே நாம் எல்லோரும் ஆசைப்பட்டோம். இல்லையா. அப்போது நான் என்னவென்றால் 25 ஆண்டுகள் பிடிவாதம் ரொம்ப முக்கியம்.
விழிப்புணர்வு ரொம்ப முக்கியம். இல்லையென்றால் எழுதுவதை நான் அன்றே முடித்து இருப்பேன். ஏன் எழுத வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை என்றால் தவறானதை எழுதுவோம். தவறான இடத்தில் நின்று போய்விடுவோம்.
நண்பர்களே அண்ணல் அம்பேத்கர் இரண்டு விஷயங்களை கூறுகிறார். ரொம்ப கான்ஷியஸ்சா இருக்க வேண்டும் என்கிறார் எப்பவும். ஏன் இதைச் செய்கிறோம் எப்படிச் செய்கிறோம் என்ற கடுமையான விழிப்புணர்வு. இந்த நேர்காணலை நாம் ஏன் செய்கிறோம், எதற்கு நாம் எல்லோரும் உரையாடுகிறோம் என்கிற விழிப்புணர்வு வேண்டும். டிடர்மைண்டாக இருக்க வேண்டும். ஒரு தீர்மானம் இருக்க வேண்டும். மன உறுதியுடன் இருக்க வேண்டும். அந்த மன உறுதியை நீங்கள் எப்போதும் இழக்கக்கூடாது. விழிப்புணர்வால் நமக்கு கிடைத்த தெளிவு, அறிவு, சிந்தனை குறித்துச் சாகும் நொடியில் கூட விடக்கூடாது. அந்தத் தீர்மானம், உறுதியை விடக்கூடாது. இந்த இரண்டு வழியாகத்தான் நம்மை ஒடுக்குபவர்களை, ஒடுக்கும் முறைகளை அல்லது பிறரை ஒடுக்கும் போதும் நாம் எதிர்வினை ஆற்றுவதை நாம் செய்ய முடியும். இல்லையென்றால் மற்றவர்கள் அடி வாங்கும்போது பார்த்துக் கொண்டு இருப்பவர்களாகத்தான் நாம் இருக்க முடியும். ஆனால் நமது மொழி அதைச் சொல்லிக் கொடுக்கவில்லை. நமது மொழிக்கு அந்தப் பண்பு கிடையாது. மற்றவர்களை அடி என்று சொல்வதோ, மற்றவர்களை அடிக்கும் போது நீ பார்த்துக் கொண்டு இரு என்று சொல்வதோ இல்லை. நம்மை அடிப்பதை நாம் தாங்கிக் கொள்வோம் என்றோ நமது மொழியில் இல்லவே இல்லை. எங்கேயுமே இல்லை.
பீட்டர்: இதனுடன் தொடர்புடைய ஒரு கேள்வி. முலைகள் என்ற கவிதை நூலின் அட்டைப்படம் இரு பெண்கள் முத்தமிடுவது போன்று உள்ளது. அந்த நூலுக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தது. உங்கள் கவிதைகளைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை எப்படி பார்க்கிறீர்கள்? அன்றிருந்த மனநிலையும் இன்றைய மன நிலையும் எப்படி இருக்கிறது.
குட்டிரேவதி: இல்லை அட்டைப்படம் அப்படி இல்லை. ஒரு கரிக்கட்டையால் வரைந்த ஓவியம் போல், ஒரு தாயும் குழந்தையும் இருப்பது போல் தான் இருக்கும். கவிதைகள் இரு பெண்கள் முத்தமிட்டு கொள்வதுபோல் எழுதியுள்ளேன். சர்ச்சை என்பது பெருநீண்ட இடைவெளி அல்லது வெறுமை. பெண்கள் எழுதாமல் இருந்து எழுத வருகிறோம் என்று உருவான சர்ச்சை ஒன்று. இரண்டாவது உடல் உறுப்புகளை மையமாக வைத்து எழுதியது என்ற ஒன்று. எனக்கு எழுத வரும் போது சர்ச்சையாகும் என்று நான் உணரவில்லை. ஏனென்றால் நான் ஒரு மருத்துவர். சித்தமருத்துவர் வேற. முலைகளை முலைகள் என்றே சொல்வோம். நமக்கு வேற வார்த்தைகள் எல்லாம் கிடையாது அங்கு. அதனால் அது ஒரு தூண்டுவிக்கப்பட்ட சர்ச்சைதான். இன்றும் அதற்கான நிழல் அடையாளங்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறது சமூகத்தில். இப்போது பாடல் எழுதுகிறோம், சினிமாத் துறையில் இயங்கிக் கொண்டு இருக்கிறோம். பரவலாக இயங்கிக் கொண்டிருக்கும்போது எல்லா இடங்களிலும் நம் மீதான முத்திரையை குத்தி வைத்து இப்போது அப்படி இருக்கிறது என்றால் முன்பெல்லாம் எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் ஒன்னும் ஒன்றுமே இல்லை. நான் கடந்து வர முடிந்தது என்று நினைக்கிறேன். அதற்குரிய நீண்ட நெடிய போராட்டம் என்று பல தளங்களில். நீங்கள் குட்டி ரேவதியாக இருக்கும்போது தெரியும். உங்களுக்கு அந்த இடத்தில் உங்களை எப்படி நடத்துகிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று. நான் ஒரு கவிதை எழுதி உள்ளேன். அவள் ஒரு தாமரைக்குளம் என்று அது பெண்கள் இருவர் முத்தமிடுவதாக உள்ளது. நான் சர்ச்சையைக் கடந்து வருவதற்கு கடுமையான முயற்சி தேவைப்பட்டது.
தற்செயலாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுடைய அறிமுகம் கிடைத்தது. அப்படி ஒரு பெருந்துறையில் போய் இயங்க முடிந்ததால் என்னை குறுக்குவதை முலைகள் என்று அடையாளத்தை மையமிட்டு வைத்து ஒரு சர்ச்சைக்குரிய எழுத்தாளர் என்று குறுக்குவதை நான் கடுமையாக போராடிக் கடந்துவந்துள்ளேன். அது பல இடங்களில் பெரிய சவாலான விடயமாகத்தான் இருந்திருக்கிறது. என் வாழ்க்கையில் இப்பொழுது அதொரு பெரிய விடயமாக இல்லை. ஆனால் கடுமையான சவால்கள். நிறைய இடங்களில் நான் கடந்து வந்துள்ளேன். அதெல்லாம் நினைவு வைத்து ஒரு புத்தகம் எழுதலாம். ஒவ்வொரு எழுத்தாளனும் என்ன பண்ணினார்கள். பேராசிரியர்கள் என்ன செய்தார்கள். சமூகத்தில், குடும்பங்களில், திரைத்துறையில் எவ்வாறு இருந்து என்று ஒரு புத்தகம் எழுதலாம். ஆனால் இப்போது நினைவூட்டிப் பார்த்து எழுத முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் அப்போது எப்படி இருக்கும் என்றால் போர்க்களத்தில் இருக்கும் போது போரை வெல்வதில் மட்டும்தான் கவனம் இருக்கும். அதனால் இன்று அதைப் பார்த்து அதை எழுதி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அது நடக்கும்போது எனக்குத் தோன்றும், நானே சில நேரங்களில் தோள்தட்டிக் கொடுத்துள்ளேன். அது நான், எனக்குத் தட்டிக் கொடுத்துக் கொண்டதில்லை. அப்போது என்னவாகும் என்றால் நீங்கள் அல்லது மகள்கள் எழுத வரும்போது இப்படி எல்லாம் கடந்து வந்துவிட முடியும் என்று என்னைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்.
ஆண்களே இந்தியாவில் எப்படி என்றால் பெண்களைப் போலத்தான் போராடி இருக்கிறார்கள். நீங்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து அல்லது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் ஆண்களை, பெண்களைப் போலத்தான் நடத்தி இருக்கிறார்கள். அவர்களும் பெண்களைப் போலத்தான் போராடி வந்திருக்கிறார்கள். பெண்களுக்காகப் போராடியவர்களும் இந்த ஆண்கள்தான். முதல் பெண் போராட்டத்தை இந்தியாவில் யார் ஒருங்கிணைத்தார். அம்பேத்கர். இங்குள்ள ஆண்களுக்கான புரிதல் இந்த மண்ணில் தோன்றிய ஆண்களுக்கான புரிதல் என்னவாக இருக்க வேண்டும் என்றால், ஆணும் பெண்ணும் வேறில்லை என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணியம் என்பதுகூட நான் எப்படிச் சொல்கிறேன் என்றால், போராட முடியாத ஆண்களுக்காகவும் சேர்த்து முன் வைக்கிற, மனித மாண்புகளை முன் வைக்கிறதுதான் பெண்ணியம். அப்படித்தான் போராட்டம் என்பது மற்ற நாடுகளைப் போல அல்லது மற்ற மேல் சாதியினரைப் போல ஆதிக்கச் சாதியினரைப் போல இங்கும் ஆணும் பெண்ணும் வேறு கிடையாது என்பதைப் புரிந்து கொண்டால் தான் நம்ம தலைவர்களை புரிந்து கொள்ள முடியும். நாம் என்ன எழுத முடியுமோ அதை எழுத முடியும். இல்லை என்றால் நீங்கள் மற்றவர்கள் எழுதுவதை காப்பி அடித்துதான் எழுத வேண்டும். அப்பொழுது நான் என்ன எழுத நினைக்கிறேன் என்பதற்கு இவ்வளவு ஒரு நீண்ட நெடிய பரவலான சிந்தனை தேவைப்படுகிறது. அதனால் சர்ச்சையைச் சர்ச்சையாகப் பார்ப்போம். என்னைச் சர்ச்சை பாதிக்கவில்லை.
ச. ப்ரியா: எழுத்து என்ற ஊடகத்திலிருந்துகொண்டு உங்கள் மன ஓட்டங்களை நீங்கள் எந்த அளவிற்கு கவிதை, சிறுகதை, நாவல் என்று பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அப்படியே நீங்கள் காட்சி ஊடகத்திற்குள் போகும் போது உங்கள் மன ஓட்டங்களை முன்வைத்தல் எப்படி உள்ளது? இரண்டுக்குமான வேறுபாடு என்னவாக உள்ளது?
குட்டிரேவதி: தெரியவில்லை. நாம் ரொம்ப வெர்ஸ்சடைல் ஆக இருக்கிறோம். ரொம்ப முழுமையும் பல பரிமாணங்களாகத்தான் இருக்கிறோம். தெரியவில்லை, இதனை ஒரு தனிப்பட்ட விடயமாகப் பார்க்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் 24 வயதில் திருநெல்வேலியில் நான் சித்த மருத்துவம் படிக்கும்போது காஞ்சனைத் திரைப்பட இயக்கம் என்ற திரைப்பட இயக்கத்தில், ரொம்ப தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தேன். அப்போது இந்த மாதிரியான வசதிகள் கிடையாது. படங்கள் பார்க்க ட்ரெயின்ல அந்த கேன் வரும். அதை எடுத்துக்கொண்டு போய் இருட்டிய பிறகு எங்கேயாவது லோக்கலாக ஸ்கிரீன் பண்ணுவார்கள். நான் ஹாஸ்டலில் இருந்தேன். 7:00மணி வரைதான் ஹாஸ்டலுக்கு வெளியே இருக்கலாம். இதில் ஹாஸ்டல் செயலாளராக வேற இருந்தேன் நான். பொறுப்பில் இருந்தேன். காம்பௌண்ட் வால் எல்லாம் ஏறிக் குதித்துப் போயிருக்கேன். அப்படி நிறைய திருட்டுத்தனம் பண்ணித்தான் என்னோட சர்வைவல் பண்ணி இருக்கேன். அதாவது ஒரு பெண்ணாக இருக்க, ஒரு பெண்ணிற்கு எவ்வளவு சவால்கள் எல்லாம் இருக்கோ அவ்வளவு சவால்களையும் நான் எல்லாத் தளங்களிலும் சந்தித்திருக்கிறேன். சொல்ல நிறைய இருக்கு. வெளியில் சொல்ல முடியாது. அது பெரிய பிழை என்று சொல்ல முடியாது. ஆனால் நிறைய தவறுகள் செய்வேன் நான். அப்போ சண்டை போடுவது. என் மீது மெமோ வரும். எல்லா விஷயத்தையும் நேரடியா மோதுவது. உற்சாகமெல்லாம் கிடையாது, பயமாகத்தான் இருக்கும். ஆனால் அந்தப் படம் பார்ப்பது அதில் ஈடுபடுவது என்பதில் இருக்கும் ஆர்வம் அதை வென்றுவிடும். அதை நோக்கி நாம் போவொம். பிரின்ஸ்பால் முன்னாடி போய் நின்று, மெமோ வாங்கி என்று நிறைய சவால்களைச் சந்தித்தேன்.
ஆனால் என் வாழ்வில் லட்சியம் என்பது இரண்டாக இருந்தது, காலேஜ் படிக்கும் போது. நான் கூட இதையெல்லாம் எழுதனும்னு நினைத்தேன். டீனேஜ் அந்த வயதில் இருக்கும்போது ரொம்ப லட்சியவாதியாக இருப்போம். இப்ப ரொம்ப கூச்சமாக இருக்கு. நம்முடைய லட்சியம் எல்லாம் எங்க இருக்கு இந்த உடம்புல என்று தேடித்தேடிப் பார்ப்பேன்.
நான் ஒரு பெண் சித்தராக வேண்டும் என்று நினைத்தேன். இப்பொழுது திருநீறு கொடுப்பதெல்லாம் ரொம்ப அசிங்கமாகி விட்டது. இப்ப ஒருவருக்கு நோய் இருக்கிறது என்றால் நாம் அவர்களுக்கு அந்த நோயைத் தீர்த்துக் கொடுக்கிற ஆற்றல் எனக்கு வரவேண்டும் என்று. அதற்கு என்னவெல்லாம் தியானம் செய்ய வேண்டும் என்னவெல்லாம் மருந்து வேண்டும். எனக்கு ஒரு நல்ல பெண் பேராசிரியர் இருந்தார்கள் சொர்ண மாரியம்மாள் என்று. கிளம்பிக் கிளம்பி போய்விடுவோம். காலையிலேயே மலைக்கு, வனத்திற்கு மருந்து சேகரிப்பதற்கு. அவர்கள் பின்னாடியே போவேன் நான். அதற்காக, காலேஜிலேயே என்னை பயங்கரமாகக் கிண்டல் அடிப்பார்கள். பயங்கர ஸ்ட்ரிக்ட்டாக இருப்பா, அந்தப் பேராசிரியார். பெரிய பேராசிரியர், தாதுப் பொருட்களிலிருந்து நம்முடைய சித்தர்கள் எப்படி மருந்து செய்து, குறிப்பாக பாதரசத்தை நோய் தீர்க்கும் மருந்துகளில் எப்படிப் பயன்படுத்தினார்கள் என்று பார்ப்பதில் பெரிய வல்லுனர் அவர்கள். அவர்கள் இந்த மாதிரி நிறைய விடயங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். அப்போது எனக்கு ஆசிரியர் மாதிரி, ஒரு பெண் சித்தர் ஆகணும் என்று இருந்தேன். அந்த டீனேஜில் கல்யாணம் எல்லாம் பண்ணிக் கொள்ளக் கூடாது. குறிப்பாக ஆண்களுடன் உறவே வைத்துக்கொள்ளக்கூடாது என்று இருந்தேன்.
பின் காஞ்சனை திரைப்பட இயக்கத்தில் சேரும்போது நல்ல தரமாகச் சினிமாவைப் படித்துக்கொண்டேன் நான். சினிமா என்றால் உலக அளவில் எல்லா மாஸ்டரையும் தெரியும் அப்போ. நான் சொல்வது 1993 முதல் 1998. எல்லா பெரிய உலக அளாவிய இயக்குநர்களை எல்லாம் பார்த்து மொத்த மொத்தமாகப் பார்த்து பாடம் படித்த மாதிரி எல்லாம் ஒரு பிஎச்டி பண்ணின மாதிரி ஆயிட்டேன்.
அப்புறம் சென்னைக்கு வந்து நான் பயிற்சி மருத்துவம் பண்ண வந்தேன். அப்போது நான் சும்மா கவிதை எழுதிக் கொண்டே இருந்தேன் நோட்டில். ஏனென்றால் நண்பர்களே, திருநெல்வேலியில் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில் டெய்லி ஈவினிங் ஏதாவது ஒரு நூல் வெளியீடு, நூல் விமர்சனம், திறனாய்வு என்று டெய்லி ஈவினிங் ஏதாவது ஒன்று நடக்கும். தேவதேவன் கவிதை நூல்கள் எல்லாம் அப்போதுதான் வெளியிடுவார்கள். நான் பெரிய இலக்கிய விடயத்திற்காகப் போகமாட்டேன். நான் மதிக்கவே மாட்டேன் இலக்கியவாதிகளை.
ஆனால் என்னுடைய சிறுவயதில் இருந்து நான் வாசித்த நூலளவு யாரும் வாசித்திருக்க மாட்டார்கள். அப்பா ரொம்ப வறுமையான பின்னணியில் இருந்து வந்தவர். அவருக்குப் படிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அதனால் அவர் என்ன பண்ணுவார் என்றால், மூத்த மகள் நான். ரோட்டில் தெருவில் ஏதாவது 50 பைசா ஒரு ரூபாய்க்கு ஏதாவது ஒரு பழைய நூல் கிடைத்தால் வாங்கிட்டு வந்து கொடுப்பார். எங்க அம்மாவே சொல்லுவார்கள் பொம்பளப் புள்ளைகளைக் கதைப் புத்தகம், கவிதைப் புத்தகம் படிக்க வைத்து கெடுக்கிறார் என்று. அப்போது நூல்களை வாசிப்பதனால் என்னவாகும் என்றால், இன்றைக்குச் சொல்கிறார்கள் நான் ஒரு எழுத்தாளன் ஆவணம்னு நினைக்கிறீர்கள் என்றால், ஒரே வழி தான் இருக்கிறது புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். 100 புத்தகத்தில் நீங்கள் எழுத்தாளர் ஆகிவிடுவீர்கள், 500 புத்தகம் படிக்கும் போது எழுத்தாளர் ஆகிவிடுவீர்கள், அல்லது ஆயிரம் புத்தகங்கள் படிக்கும்போது எழுத்தாளர் ஆகிவிடுவீர்கள். அப்படித்தான் நடந்தது.
நான் நல்ல கவிதை எழுத ஆரம்பிக்கும் போது, நான் டெய்லி டைரி எழுதுவேன். அப்படியே கவிதை எழுதினேன். அப்படித்தான் பூனையைப் போல் அலையும் வெளிச்சம் உருவானது. இப்ப என்னுடைய இணையராக இருக்கிறார், ஆர்.ஆர். சீனிவாசன் என்பவர். அவர்தான் அதை வாசித்து விட்டு அதை நூல் ஆக்கலாம் என்று சொன்னார். அப்பொழுதும் கூட நான் ஒரு எழுத்தாளன் ஆகிறது எல்லாம் சாதாரண விஷயமாகத்தான் நான் நினைத்திருந்தேன்.
சித்த மருத்துவம்தான் எனக்கு எல்லாமாக இருந்தது. அப்புறம் எப்பவாவது ஒரு திரை இயக்குநராக ஆகிவிடலாம் என்று இருந்தது. டக்குனு கவிதை நூல்கள் வெளியில் வந்து, அந்தப் பயணம் எழுத்துப்பயணம் ரொம்ப தீவிரமானது. சினிமாவில் போனேன் அப்புறம் இயக்க முடியாமல் ரொம்ப போராடினேன். என்னுடைய முதல் படம் வெளியில் வரவில்லை. ‘சிறகு’ என்று ஒரு படம் எடுத்திருக்கிறேன். இரண்டாவது படம்தான் ‘கோடை இருள்’. இதைக் காஞ்சனை சீனிவாசன்தான் தயாரித்து உள்ளார். இது இருளர்கள் பற்றிய ஒரு எளிமையான, ரொம்ப கலைபூர்வமான ஒரு படம். இது எல்லாமே சேர்ந்துதான் நான்.
சித்த மருத்துவம் நான், திரை இயக்குநரும் நான், கவிஞரும் நான், ஒரு பெண்ணும் நான், எல்லாம் சேர்ந்துதான். ஒன்றில் வெளிப்படுத்த முடியாததை இன்னொன்றில் செய்கிறேன்.
ஆனால் சமீபத்தில் நல்லா சிறுகதை எழுதுகிற ஆர்வம். நிறைய எழுத வேண்டும் எழுதிக் கொண்டே இருப்பேன். சில பெண்களைப் போய் பார்ப்பேன். வயல்களில் சும்மா போய் உட்கார்ந்து இருப்பேன். அவர்களுடன் சும்மா பேசும் போது வாழ்க்கையில் ஆழமாகப் போய்விடுவார்கள். அவர்கள் வாழ்வில் யாரிடமும் சொல்லாத ஒரு விடயத்தை நம்மிடம் சொல்லி மனம் கரைவார்கள். அது அவர்களுக்கும் தெரியாது. அதை எங்காவது ஒரு சிறுகதையில் வைத்துக்கொள்ள முடியும். அதில் ஒரு பெரிய அரசியல் இருக்கும். உடல் அரசியல், சமூக அரசியல். ஓர் உளவியல் கலந்து இருக்கும். அவர்கள் எப்படிக் காலத்தைக் கடந்து வந்தார்கள் என்று சொல்வார்கள். அதை நேரடியான ஆவணமாக இல்லாமல் எனக்குத் தெரிந்த அரசியல் வரலாறாகக் குழைத்து ஒரு சிறுகதை ஆக்குவது எனக்கு ரொம்ப நல்லா விளையாட்டாக உள்ளது.
கவிதா மணாளன்: நீங்கள் இருளர்களுடன் பழகுகிறீர்கள். ஒரு சித்தமருத்துவர் என்கிற முகத்தோடு இருக்கிறீர்கள். அவர்களுடைய மருத்துவம் பற்றி உங்களுடைய கருத்து என்ன? ஆயுர்வேதத்தையும் சித்த மருத்துவத்தையும் போட்டுக் குழப்பி, சித்த மருத்துவக் கூறுகளை எல்லாம் ஆயுர்வேதக் கூறுகளாக வெளிப்படுத்திக் கொண்டு, ஆயுர்வேதத்தை உயர்த்திப் பிடிக்கின்ற போக்கை நான் பார்க்கிறேன். அவர் சித்த மருத்துவர் என்று சொல்லுவார் ஆனால் கொடுப்பது எல்லாம் ஆயுர்வேத மருந்தாகத்தான் உள்ளது. ஆயுர்வேதத்திற்குள் இருந்துகொண்டு நம்முடைய சித்த மருந்துகளை அவர்கள் பாணியில் மாற்றிக் கொடுக்கிறார்கள். அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
குட்டிரேவதி: இருளர்களை நான் சந்திக்கப் போனதே அவர்களுடைய மருத்துவ முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளத்தான். அப்படித்தான் என்னுடைய பயணம் இருந்தது. அப்புறம்தான் எனக்குத் தெரிய வந்தது மருத்துவத்துறைக்கே அவர்கள் பெரிய சேவையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். என்னவென்றால் பாம்புகளைப் பிடித்து விஷத்தை இறக்கிவிட்டு, பாம்புகளை அப்படியே உயிரோட காட்டுக்குள் விடுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்படுகிறது. அதற்கு ரொம்ப பெரிய பணி தேவையா இருக்கிறது. ரோமலஸ் விட்டேகர்-னு ஒரு ஹெர்பட்டாலஜிஸ்ட் அவர் ஒரு அமெரிக்கர். ஊர்வன பற்றின பெரிய ஆய்வறிஞர் அவர். அவர் உலகம் முழுவதும் பயணம் செய்து விட்டு என்ன சொல்கிறார் என்றால், இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த பழங்குடிகள் இருளர்கள்தான் என்கிறார். அவர்கள் பாம்பை ரொம்ப அனாயசமாகப் பிடிப்பார்கள். அதிலும் பெண்கள். அவர்களுக்குத் தெரியும், கூர்மையான பார்வைத்திறன் கொண்டவர்கள். எந்தத் துளைக்குள் எந்தப் பாம்பு இருக்குன்னு. ரொம்ப வேகமாக இயங்குவார்கள், அவர்களுக்கு என்று ஒரு சொசைட்டி வைத்துக் கொடுத்துள்ளார்கள் முட்டுக்காட்டில் சென்னையில். அதுல அவர்களுக்கு லைசன்ஸ் வைத்து கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் பாம்பு பிடிச்சுட்டு வந்து விஷத்தை இறக்கி கொஞ்ச நாள் பராமரித்து விட்டு திரும்ப எங்க பிடித்தார்களோ அங்க கொண்டு போய் விட்டு விடுவார்கள். அந்த விஷத்தில் இருந்து பாம்பு கடிக்கான மருந்தைத் தயாரிக்கிறார்கள். இன்று உலக அளவில் மருந்து தயாரிப்பதற்கு இவர்கள்தான் எல்லாமே. அவர்களுடைய இந்தத் தொடர்ச்சி மருத்துவத்தின் தொடர்ச்சிதான். அவர்களுடைய கொடை இந்த உலகத்திற்கு பெரிய அளவிலானது. அவர்களுக்கு நாம் எவ்வளவு செய்தாலும் நன்றிக் கடனை தீர்க்க முடியாது. அப்படியான மக்கள் அவர்கள். ஆனால் அவர்களை நாம் ரொம்ப இழிவான நிலையில் வைத்திருக்கிறோம். இந்த படம், கோடை இருளைப் பார்த்துவிட்டு ஒருவர், பயங்கரமாகக் கதறி அழுது விட்டுப் போனார். அவர்களை நாம் எப்படி வைத்திருக்கிறோம், அவர்களுக்கு சாப்பாட்டிற்கு கூட ஒரு வேலை உணவெல்லாம் கிடையாது. ரொம்ப கொடுமையான நிலையில் இருக்கிறார்கள். பேராசிரியர் கல்யாணிதான் ரொம்ப உணர்ச்சிகரமாக அவர்களுக்காகப் போராடி இன்றைக்கு அவர்கள் எல்லாம் ஒரு 200 பேர் படிக்க வந்து விட்டார்கள் . படிக்க வந்துவிட்டாலும் நமக்கென்று ஒரு பொது சமூகம் இருக்கிறதோ, அந்தச் சமூகத்தில் தான் இருளர்களும் போய் கலக்கணும் என்பது தான் வேதனை. அது எவ்வளவு கேடான சமூகம் என்று நமக்குத் தெரியும். அந்த மாதிரி நிறைய விஷயங்கள் உள்ளன. அவர்கள் சமூகத்திலிருந்தே அம்பேத்கர் மாதிரி ஹியூமன் ரைட்ஸ் ஆக்டிவிட்டீஸ் வந்தார்கள் என்றால் தான் அவர்களின் சமூக இழிவை மாற்றுவதற்கு வாய்ப்பு உண்டு.
இரண்டாவது ரொம்ப முக்கியமான கேள்வி ஆயுர்வேதம். ஆயுர்வேதம் ஒரு புரட்டு. சித்த மருத்துவத்தில் இருந்து திருடினது. இன்றைக்கும் நீங்க ஆயுர்வேத மருந்து என்று போய்ப் பார்த்தால் சித்தமருத்துவ செய்முறை எல்லாமே என்னென்ன பொருட்களோ அது எல்லாமே அப்படியே தான் இருக்கும். அப்புறம் ஆயுர்வேதத்திற்கு பெரிய பெரிய மார்க்கெட்டிங் முதலாளிகள், முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். அது எப்போதுமே பார்ப்பனர்கள். நம்முடைய அதாவது நீங்க சிறந்தது ஒன்று செய்தீர்கள் என்றால் அதை அபகரித்து, தன் வயமாக்கிக் கொள்வது என்று சொல்வார்கள். அதைத் தன்னுடையதாக ஆக்கிக் கொள்கிற வல்லமை உண்டு அவர்களுக்கு. அவர்கள் அப்படித்தானே வந்து இங்கே நிலைபெற்றிருக்கிறார்கள். அதனால் நீங்க ஒரு கடவுளை உருவாக்குங்கள், புத்தர் என்ற கடவுளை உருவாக்குங்கள், ஏதோ ஒரு கடவுளை உருவாக்கினீர்கள் என்றால், ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த கடவுளை அவர்களுடைய கடவுளாக மாற்றிக் கொள்கிற எல்லா வலிமையும் அவர்களுக்கு உள்ளது. That is called manipulation. அது அவர்களிடம் இருப்பதால்தான் நாம் எல்லாம் இப்படி இருக்கிறோம். அதை நாம புரிந்து கொள்ளாமல் இருப்பதும் கூட ஒரு காரணம். அந்த விழிப்புணர்வு ரொம்ப அவசியம். அப்படித்தான் அவர்கள் சித்த மருத்துவத்தை தங்களுடையதாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.. எல்லாமே பிலாசபி வாதம், பித்தம், கபம் எனப்படுவது எல்லாமே அவர்கள் வேதம் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆயுர்….வேதம்…. என்று அவர்கள் வேதம் சார்ந்ததாக அதை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் சித்த மருத்துவம் நம்முடைய சொத்து, செல்வம். நம்முடைய பெரிய செல்வம், அரிய செல்வம். நம்முடைய மூதாதையர் நமது உடல் எவ்வளவு முக்கியமானது இதை போற்றுவது, பேணுவது, இதை எப்படி நீண்ட காலத்திற்கு நோய் நொடி இல்லாமல் வைத்துக் கொள்வது என்ற மரபார்ந்த ஒரு தொழில்நுட்ப அறிவை வைத்திருந்தார்கள். இன்று அவ்வளவு பாடத்திட்டம் ககிடைப்பதில்லை. ஆனால் எனக்கு இன்னும் ஒரு நம்பிக்கை உள்ளது. இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், எங்கெல்லாம் ஓலைச்சுவடிகள் கிடைக்கிறதோ அதெல்லாம் எடுத்துப் பிரதிகள் ஆக்குகிறார்கள். அதில் நிறைய மருத்துவச் சுவடிகள் கிடைத்துள்ளதாக சொல்கிறார்கள். ஜோதிடச் சுவடிகள் கிடைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதில் ஒருவேளை சித்த மருத்துவச் சுவடிகள் இருந்தது என்றால், நமக்கு இன்னும் நிறையப் பாட்டுகளைப் புத்தகமாக ஆக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே உள்ள பாடப்புத்தகங்கள் கொஞ்சம் அதில் முக்கியமான விடயங்கள் எல்லாம் உள்ளன. ஆனால் என்னவென்றால் அதிலும் 17, 18 ஆம் நூற்றாண்டில் நிறைய வைதீகக் கலப்பாகி விட்டது. நிறைய சைவம், வைணவம் தொடர்பான பாடல்கள் எல்லாம் கலந்து விட்டார்கள். அப்பப் படிக்கும்போது எனக்கு அது புரியவில்லை. ஆனால் இப்ப நான் வாசித்தால் எனக்கு புரிந்து விடுகிறது. கலப்பு உள்ளதா, கலப்பு அற்றதா அந்தச் செய்யுள். அது உண்மையிலேயே சித்தர்கள் உடையதா என்று. ஆனால் பெரும் கடும் போராட்டத்தையும் உழைப்பையும் சித்தர்கள் முதலீடு ஆக்கி இருக்கிறார்கள். சித்தர்கள் என்பது வேறு யாருமில்லை. நம்மை மாதிரி ஒரு 500, 600 வருடங்களுக்கு முன் வாழ்ந்து, எப்போதெல்லாம் மனிதர்களுக்கு இடையில் பேதம் இருக்கோ, பிரிவுகள் இருக்கோ, ஒடுக்குமுறை இருக்கோ அதையெல்லாம் எதிர்த்துக் கடுமையாகப் போராடியவர்கள்.
கவிதாமணாளன்: உங்களுடைய பார்வை என்பது எப்பொழுதும் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கமாகவே நிற்பதாய் உள்ளது. பெண்ணியம் பேசுவதாகட்டும், இசைக்குள் நீங்கள் போகும் போது, ஆப்ரஹாம் பண்டிதர் மீது கவனம் செலுத்துவதாகட்டும், நீங்கள் சிந்தித்து இப்படித்தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு போகிறீர்களா? இல்லை தன்னியல்பாகவே அந்தப் பக்கம்தான் உங்களால் போக முடிகிறதா?
(கவிஞர் குட்டிரேவதியின் நேர்காணல்
பங்குனி இதழில் தொடரும்.. .)


எழுத்தாக்கம்
ஜோதிலட்சுமி லோ.
உதவி
பீட்டர் பால் லா.
வினாக்குழுவினர்
கவிஞர் ச.ப்ரியா, ஜோதிலட்சுமி லோ., வீ.ரமேஷ்குமார், பீட்டர் பால் லா., மு. சுதா, கவிதா மணாளன்.
படப்பதிவு
கவிஞர் சோலைமாயவன்
உடனிருந்தோர்
பேராசிரியர் போ.மணிவண்ணன்,
பேராசிரியர் வை.தர்மலிங்கம்,
இ. ஜானகிப்பிரியா, கன்னல் இளம்பரிதி
ஓட்டுநர்
கி. மணிகண்டன், தத்தமங்கலம்

Leave a comment