தக்கன தகாதன

பார்கவி & பரிமித்தா
காப்பியங்களை நுணுக்கமாக வாசிக்க கூட்டுவாசிப்பு மிக உதவியாக உள்ளது. அதிலும், நவீன இலக்கிய அறிமுகமும் பயிற்சியும் கொண்டவர்கள் சேர்ந்து மரபிலக்கியத்தை அணுகும்போது, புதிய வெளிச்சங்கள் தோன்றும் என்பது எங்கள் அனுபவம். மரபிலக்கியம் சுட்டும் நெறியும் சமகால சட்ட முறைமைகளும் எவ்வகையில் பொருந்தி அல்லது விலகிச் செல்கின்றன என்பது மற்றுமொரு வாசிப்பு. அதை ஆராய வாலி வதை படலத்தை விட சிறந்த படலம் கிடையாது. இராமன் செய்தது சரியா எனும் ஜனரஞ்சக பட்டிமன்ற கேள்வி எங்களிடம் இல்லை. அதற்குமாறாக, இராமன் நிலைநிறுத்தும் மனு நெறி, தற்கால சட்ட ஒழுங்குக்கு எப்படி துணைசெல்கிறதென ஆராயும் ஒரு வாசிப்பு.
வாலியின் எதிர்வாதத்திற்கு மறுப்பு சொல்லும் இராமனின் பாடல்களை வாசித்துக்கொண்டிருந்தோம். வாலியினது ஐம்பூதங்களின் வலிமை பொரு மார்பு கனிந்த வாழைப்பழமாகி, அதில் ஊசி ஏற்றியது போல இராம நாமம் எழுதிய வில் துளைத்திருந்தது. அதற்கு மறைகளுக்கு இறுதியாக விளங்கிய இராமனா இதைச் செய்ததென வாலி திகைக்கிறார். சில இடங்களில் இராமனை, கல்வி, குலம், தகவு பண்புகள் கொண்ட ஒருவர் செய்யத் தக்க செயலா இதுவென்று வலியுறுத்திக் கேள்வி கேட்கிறார். அவ்வாறான கேள்விகள், நேரடியாகவும், வஞ்சப் புகழ்ச்சியுடனும் அமைந்து நாடகீயத் தருணங்களாகப் புகழ்பெற்றவை. இதற்கு உரியவாறு இராமன் பதிலளிக்கிறார்.
ராமனின் பதில்மொழிக்கு வாலி, தான் ஒரு விலங்கு எனும் ஒரே எதிர்வாதத்தை மட்டுமே வலியுறுத்துகிறார். இதைச் சில அடுக்குகளாகப் பிரிக்கலாம். ‘விழைத்திறம் தொழில்’ எனச் சொல்லுகையில், குரக்கினமானவர், விரும்பிய செயல்களைச் செய்வது தங்கள் இனத்தின் வழக்கம் என்கிறார். ‘மற்றொருவன் புணர் தாரமான’ ரூமையைக் கவர்ந்து சென்றதற்கு விடையென ‘எய்தின் எய்தியது’ ஆக எனும் வரியைப் பதிலாகக் கொள்ளலாம்.
எமைத் தேமலர் மேலவன்; எய்தின் எய்தியது ஆக, இயற்றினான்
தேன் மலர் பொருந்திய தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மன், குரங்கினமான தங்களைப் படைத்தபோது நுகரும் விலங்காகவே படைத்துள்ளார் என்பதே இப்பாடலின் நேரடிப் பொருள். ஒரு சுவைக்காக, குரக்கினமானது வண்டுகள் போல எய்தின பொழுதெல்லாம் தேன் மலர்களை எய்தும் அஃறிணை எனவும் வாசிக்கலாம்.
அதோடு, ‘மறை நெறி வந்தன குணமும் இல்லை’ எனும் அடியை மேற்சொன்ன பொருளுடன் மானுடர்களைப் போன்ற திருமணம் எனும் கட்டமைப்பு இல்லாததால் இராமன் சொல்லும் நெறிகள் அனைத்தும் கிஷ்கிந்தையில் வாழும் தங்களுக்குச் செல்லுபடியாகது என ஒரு திரைக்குள் ஒளியப்பார்க்கிறார்.
‘உணர்வு சென்றுழியே’ தாங்கள் பெற்றது. தனது பிறப்பின்படி தான் குற்றம் உற்றிலேன் என தனது எதிர்வாதத்தை முடிக்கிறார். வாலியின் எதிர்வாதத்தில் சுக்கிரீவனைப் பற்றி பெரிதும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சுவையுடன் ராமனின் மறுப்பையும் வாசிக்கமுடியும். ஒருவர் தம் சிந்தனை செயலினாலேயே உயர்ந்தவராவார் என்றும் பிறந்த குலத்திற்கும் ஒருவரின் மாண்பிற்கும் தொடர்பில்லை எனும் கருத்தை இராமர் கூறுகிறார். இதையே;
எக் குலத்து யாவர்க்கும், வினையினால் வரும், மேன்மையும் கீழ்மையும்
எனும் அடிகள் உணர்த்தும். அதாவது, வாலி ஒரு வெற்று குரங்கல்ல என்றும் அதற்கு சீதையின் மீட்பில் மாண்ட சடாயுவையும் ஆபத்தில் இறைவனைத் துதித்த கஜேந்திரனையும் சொல்லி வாலியைச் சிந்திக்கத் தூண்டுகிறார்.
எனினும், இராமரின் கருத்தானது எவ்வாறு இன்றைய நடைமுறைக்கு ஒத்துவரும் எனும் கேள்வி எழுந்தது. இராமர், தக்கது இன்னது தகாதது இன்னது என்று உணராமல்; விலங்கு மட்டுமல்ல தேவரும் உணராமலிருப்பின் அவர் அஃறிணையைச் சேர்ந்தவராகிறார். அவ்வாறில்லாமல், சடாயுவைப் போல், கஜேந்திரனைப் போல் நெறி உணர்ந்தனவையும் தேவர்களாவராம் என்று வரையறுக்கிறார்.
அப்போது, நெறிகளைப் பற்றி அறியாதவர்களையோ, அறிய முயலாதவர்களையோ அஃறிணைப் பட்டியலில் சேர்க்க இயலுமா எனும் கேள்வி எழுந்தது.
நடைமுறைக்காக, ஒருவர் மற்றோருவரின் தனிப்பட்ட நிலத்தினுள் அத்துமீறி நுழைவதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். எல்லை மீறி நுழைபவருக்குத் தான் நுழைவது தனி ஒருவரின் நிலமென அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் அவர் குற்றம்புரிந்தவரே. ஆகவே, இராமனின் கருத்தானது ஏற்புடையதில்லையெனும் விவாதம் முதலில் எழுந்தது.
அதன்பின், அறியாமைக்கு இப்பாடலில் இடமில்லை என்றும் அதற்கான விடையையும் கம்பரே எழுதியுள்ளார் என்றும் மற்றொரு விவாதமெழுந்தது.
தக்க இன்ன, தகாதன இன்ன, என்று ஒக்க உன்னலர் ஆயின்
ஆயின்… சரி, தவறு என்று அறியாமையால் இருப்பதல்ல, உன்னலராயின் எண்ணவில்லை எனில், அவர் குற்றம் புரிந்தவரே. இக்கருத்து இன்றைய குற்றவியல் நீதிக்கான ஒரு சரடுடன் ஒன்றி வருவதைப் பார்க்கலாம். குற்றம் சாட்டப்படவரின் குற்றவியல் செய்கையில் அவருக்கு அந்தக் குற்றத்தைப் புரியும் எண்ணமிருந்ததா என்பது அடிப்படை வினாவாகும்.
எனவே, இராமரை எதிர்த்து வாதம் புரியும் தன்மை வாலிக்கு இருந்தது. தன் சகோதரனுக்குச் செய்யக்கூடாதது என்றும் தவறென்று வாலி அறிந்திருந்தார். அதை அறிந்தும் மனையின் மாட்சி அழித்தவன் என்பதாலும், வாலி குற்றம் புரிந்ததற்கு பிறரன்றி அவரே காரணமாகிறார்.
அப்போது வாலி சொல்லும் குல வழக்கத்துக்கு எந்த மதிப்பும் இல்லையா எனும் கேள்வியும் வரலாம். மரபுகளுக்கும், வழக்கங்களுக்கும் சர்வதேச அளவிலும் ஏற்பு உள்ளது. ஆனால், இவ்வாறான வழக்கங்களும், இனப்படுகொலை, அடிமைவாதம், போன்றவை மனித குலத்திற்கு எதிரான வழக்கமாயிருந்தால், அவை நிராகரிக்கப்படும்.
இருப்பினும், ஒரு கேள்வி எஞ்சியுள்ளது. சுக்ரீவன் வாலியைப் போருக்கு அழைத்த போது தாரை வாலியை அனுமதிக்கவில்லை. இணையரின் துன்னிய அன்பினர், சுக்ரீவனுக்கு இராமர் எனும் நெடுந்துணையாக வந்துள்ளதாகவே தாரை வாலியைத் தடுக்க முயல்கிறார். இங்கும், அம்பை எய்திய பின் முன் வந்து நிற்கும் போதும் தனது பிரியத்திற்குரிய இராமர் இதை செய்ததென நம்பமுடியாமல் தவித்த வாலியின் அதிர்ச்சியை நிவர்த்தி செய்யவேண்டும். இராமர் வாலியிடம் சுக்ரீவன் செய்ததில் பிழையில்லை எனும் ஒரு சொல் கூறியிருந்தாலே போதுமே, மறைந்திருந்து அம்பெய்தியிருக்க அவசியமில்லை, ஆயுதத்தை எடுத்திருக்க வேண்டியதே இல்லை என்றும் தோன்றலாம்.
ஆனால், வாலி செய்தது சகோதரச் சண்டையைத் தாண்டியதாலும், குடிமையியல் அல்லாமல் குற்றவியலாவதாலும் இராமர் வாலிக்கு மரணத்தையும் கொடுக்க ஆயத்தமாகிறார். இக்குற்றத்தை அமைதியாக வாலியின் வழி பொறுத்து காத்திருந்தால், ராமாயணமானது இன்றளவும் நம்மிடம் நீடித்திருக்கத்தான் வாய்ப்புள்ளதோ?
பார்கவி; எழுத்தாளர், இலக்கிய செயல் பாட்டாளர், சென்னையில் வசிக்கிறார். https://bhargaviwrites.wordpress.com/
பரிமித்தா; இலக்கிய ஆர்வலர்; மலேசியாவில் வசிக்கிறார். https://parimitaa.blogspot.com/

Leave a comment