க. அம்சப்ரியா

பூ -01
*.

முகநூலில் சற்று இளைப்பாறி வருவாள்

யாரோ சிலரோடு
சிரிக்கச் சிரிக்க உரையாடுவாள்

எப்போதும் கோல நோட்டில்
புதிதாக வரையும் கோலத்தை
வாசல் நிறைத்து புன்னகைத்துக் கொள்வாள்

வலிந்து வரவைத்து
பாடம் சொல்லிக் கொடுப்பதாக
யாரோவின் குழந்தைகளோடு மனவோய்வில் மகிழ்ந்திருப்பாள்

அகாலத்தில் மறைந்த மச்சானை நினைத்து
அழும் பொழுதொன்று
விடிய மறுத்து
அடம் பிடிக்கும்

நள்ளிரவில்
பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுபவளின்
கரிசனம் செடிகளின் மீதுமட்டுமல்ல.

*
பூ -02
**
யாரோடு பேசுகிறானோவென்று
ஊரெல்லாம் கேலி பேசும்

இல்லாத அலைபேசியை
விரல்களில் பற்றியிருக்கும் பாவனையை
ஊரறியுமெனினும்
இடைவிடாமல் யாரோடோ பேசும் நேரம் எதுவும் இருக்கும்

வம்புக்கு இழுக்கும் பேச்செனினும்
மௌனமாக கடந்து போவர்
எதிர்வீடு பக்கத்துவீடென யாவரும்

தனியே பேசிக்கொண்டிருக்கும்
ஒருவனோடு வம்புக்கிழுத்து வாயாடிக் கொண்டே இருக்கிறது தெருநாய்

**
பூ -03

*
ஒரு முழப் பூவை
அளந்தளந்து காத்திருக்கிறாள்

மறுபடியும் ஒரு முறை
தண்ணீர் தெளித்து
உறங்கும் பூக்களை விழிப்பாக்குகிறாள்

பூச்சூடும் தலை எதுவென
போவோர் வருவோரையெல்லாம்
உற்றுத் தேடுகிறாள்

பூக்காரி பூக்காரக்கா பூக்காரம்மா
எல்லாச் சொற்களுக்கும்
மீதமுள்ள பூக்களை
ஒவ்வொன்றாக நீட்டுவாள்

இடைவிடாமல் வேண்டுவதெல்லாம்
இறந்த சடலத்திற்கு
தன் பூக்களில் ஒன்றேனும்
சென்று சேர்ந்து விடக்கூடாதென்றுதான்

இறுதியாக
மீதமுள்ள பூக்களை
கீழே கொட்டக் கூடாதென்று
தனித்திருக்கும் அவளை
வேடிக்கை பார்த்தபடி கனகாம்பரம்
**
பூ -04
*
தோசைகளைப் பிரியாதவள்
இட்லிகளோடு உறவாடுபவள்
வடிக்கும் கஞ்சியில்
வாழ்க்கை தொலையாமல் இருக்க
அமைந்தது எரிவாயு அடுப்பு

நாங்கள் அதிகபட்சம் பேசிய சொற்களை
விரல்விட்டு எண்ணிவிடலாம்தான்

கூட்டுக்குடும்பம் என்றுதான் சொல்லிக் கொண்டோம்

அம்மாவோடு எப்போதும்
பேசிக்கொண்டிருப்பவை
சுவரும் பல்லிகளும்தான் என்பது
அவள் மட்டும் அறிந்தவை
*
பூ -05

தூரத்திலா? அருகிலா?
கனவா? உண்மையா?
திடுக்கிடல் மட்டும் தொடர்கிறது
எல்லாம் முடிந்துவிட்டதாக
இரு அரசுகள் அறிவிக்கின்றன

போரின் எச்சத்தில்
தனித்திருக்கும் குழந்தையை
வேடிக்கை பார்க்கிறது
பாதி எரிந்து நிற்கும் மரத்திலிருந்து
சிறகுகள் தீய்ந்த பறவையொன்று.
*
பூ -06

நிலவுக்குளத்தில் நீந்தும்
அம்மீன்கள்
உறக்கத்திற்குள் நுழைகின்றன
யாவற்றையும் சுற்றிக் காட்டுவதாக
ஆசை காட்டுகின்றன

பாதி வழியில்
அவசர வேலை இருப்பதாக விடைபெற்ற மீன்கள்
இன்றைக்கு அளித்தவை
தனிமையின் இன்னொரு நூற்றாண்டை!
*
பூ -07

யுகத்தைச் சுமக்கும் நுகத்தை
பரிசாகப் பெற்றவன்
தன்னை உடைத்து
இரு புரவிகளாக்குகிறான்
புத்திசாலி புரவிகள்
இவனை ஓடவிட்டு
பயணிக்கத் துவங்குகின்றன

இருப்பிடம் அடைந்ததும்
புரவிகள் இறங்கிக் கொள்ள
யுகத்தைச் சுமந்து ஓடிக்கொண்டிருக்கிறான்
பெருகிக் கொண்டே இருக்கிறது
இருள் மண்டிய பாதை
*””

பூ -08

**
எங்கிருந்து பார்த்தாலும் தெரிகிறது
அந்த வீடு
அதனாலேயே அங்கு யாரேனும் இருக்கக் கூடுமென நம்புகிறான் வழிநடைக்காரன்
கதவைத் தட்டி ஓய்ந்தவன்
தனிமையின் கிரீடம் அணிந்த அவ்வீட்டின் வாசலில்
ஒரு மண்டையோட்டை வரைகிறான்

அங்கிருந்து கிளம்பியவன்
சற்று தூரம் சென்று திரும்பிப் பார்க்கிறான்

ஒரே ஒரு பூ உதிர்ந்து கிடந்ததைப் பார்த்திருந்தால்
சற்று நல்லதாக அமைந்திருக்கும்

**
பூ -09

நகரத்தின் எல்லாத் தெருக்களையும் சுற்றி வந்தவன்
துவங்கிய இடத்திற்கே வந்திருந்தான்
அவரவர் உலகைச் சுமந்து அவரவர் மனதை ஒடித்தபடி
நடந்ததைப் பார்த்தபின்தான்
முடிவெடுத்தான்
தன்னைத் தன்னிடமே ஒப்படைப்பதென்று.

*
பூ -10

நள்ளிரவில் கிளையிலிருந்து விடுபட்ட இலை
காற்றின் மீதேறி பயணிக்கத் துவங்கியது
யாரைச் சந்திக்க வேண்டுமென்று தெளிவில்லை
அப்படியெதுவும் இல்லையென்றுமல் தெரியும்
தன் விருப்பம் கிளையெனினும்
ஆட்டி வைக்கும் காற்றை எதுவும் தண்டிக்க வாய்ப்பில்லை

இலை வாழ்வு
திசையற்றது
ஞானம் கிட்டியது
**

Leave a comment

Trending