நண்பர்களுடன் பறம்பிக்குளம்
க. கன்னல் இளம்பரிதி
நான் எங்கள் பள்ளியின் மாணவக் காவல் பயிற்சிப் படையில் (SPC : Students Police Cadet) ஓர் உறுப்பினன். எங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக இப்படையிலுள்ள மாணவர்களுடனும் ஆசிரியப் பொறுப்பாளர்களுடனும் காவல் பொறுப்பாளருடனும் பறம்பிக்குளத்தில் ஓர் இரவு முகாமிட முடிவுசெய்தனர்.
பறம்பிக்குளம் செல்ல, நாங்கள் காலை உணவு சாப்பிட்டுவிட்டு ஒரு 8 மணி அளவில் தத்தமங்கலத்திலிருந்து ஒரு பேருந்தில் கிளம்பினோம். முற்பகல் 11.15 மணிக்கு பறம்பிக்குளம் நுழைவாயிலுக்கு வந்தோம்.

அங்குச் சில புகைப்படம் எடுத்தபின்பு நாங்கள் தங்கவேண்டிய இடத்திற்கு 11.30 மணியளவில் சென்றோம்.
அங்குப் போய் நாங்கள் காக்கிச் சீருடை அணிந்து 11.45 மணியளவில் தயாரானோம். தங்குமிடத்திற்கு அருகில் சில செடிகளைப் புதிதாகத் தெரிந்து கொண்டோம் அங்குள்ள அரசு உணவகத்தில் மதிய உணவு 12.30 மணியளவில் சாப்பிட்டோம்.
சாப்பிட்ட பிறகு நாங்கள் அந்தக் காட்டைப் பற்றி அங்குப் பணிபுரியும் ஓர் உயரதிகாரியான திருமிகு சவ்யா (SAVYA)அவர்களிடமிருந்து தெரிந்து கொண்டோம்.

பறம்பிக்குளம் குறித்த நூலொன்றை அவர் எங்களுக்குக் கொடுத்தார்.
இந்தியாவில் உள்ள வனப்பகுதியில் நூற்றில் ஒன்றுதான் பறம்பிக்குளம். பறம்பிக்குளத்தில் மூங்கில் காடு, பசுமைமாறாக்காடு, அரைப்பசுமைக்காடு, ஈரப்பத இலையுதிர்காடு, உலர்இலையுதிர்காடு எனப் பலவகையான காடுகள் இருக்கின்றனவாம். இந்த வனப்பகுதி கேரள மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. எங்கள் பள்ளியிலிருந்து இந்தக் காட்டுக்குச் செல்ல கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி வழியாகச் செல்லவேண்டும்.
பறம்பிக்குளம் வனப்பகுதி புலிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. இங்கு முப்பதிலிருந்து நாப்பது புலிகள் வரை இருப்பதாகச் சொன்னார்கள்.

இந்த வனப்பகுதியில் எழுபதிலிருந்து எண்பது வரை சிறுத்தைகளும் இருநூறு முந்நூறு யானைகளும் இரண்டாயிரம் மான்களும் முப்பது நாப்பது கரடிகளும் நூற்றுக்கணக்கான குரங்குகளும் காட்டுமாடுகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பச்சைப்பாம்பு முதல் கருநாகம் வரை பலவகைப் பாம்புகள் இங்கு உள்ளன. பலவகைப் பறவைகள் இருக்கின்றன. மயில்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

இங்குள்ள செடிகள், கொடிகள், மரங்கள் எல்லாமும் மூலிகை அம்சங்கள் கொண்டவையாக இருக்கின்றன. காட்டுத்துளசி இருமலுக்கும் தொண்டை வலிக்கும் மருந்தாகப் பயன்படுமாம்.

குரோக்கடைல் பார்க் ட்ரீ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் முதலைத்தோல் மரத்தின் பட்டையை முடியின் பொடுகு போவதற்கும் வெள்ளைமுடி கருப்பாகவும் பயன்படுத்துவார்களாம்.
சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் செடியும் கண்மை தயாரிப்பதற்கான செடியும் இங்கு இருக்கிறதாம். தேக்குமரத்தில் பெரியதும் வயதானதுமான கன்னிமாரி தேக்குமரம் இங்குதான் உள்ளது. இங்கிருந்த தேக்குமரங்களை எல்லாம் வெட்டி எடுத்துச் சென்றுவிட்டனர். இந்தத் தேக்குமரத்தை வெட்டும்போது மட்டும் வெள்ளைநிறத்தில் பால் வந்ததாம். அதை மரத்தின் இரத்தமாகக் கருதி இந்த மரத்தை வெட்டாமல் விட்டுவிட்டார்களாம்.
பறம்பிக்குளத்தில் முதுவர், காடர், மலசர், மலைமலசர் ஆகிய நான்குவகைப் பழங்குடியினர் வாழ்கிறார்கள். பறம்பிக்குளம் அணை, தூணக்கடவு அணை, பெருவாரிப்பள்ளம் அணை, சோலையாறு அணை, ஆகிய அணைகள் இந்தப் பகுதியில் உள்ளன.
பின்பு காட்டைச் சுற்றிப் பார்க்க எங்கள் பேருந்தில் பயணத்தைத் தொடங்கினோம். அப்படிப் போகும் போது சில புகைப்படம் எடுத்தோம். வழியில் இரண்டு அணைகளையும், மான்களையும், காட்டு மாடுகளையும், மயில்களையும், காட்டுக்கோழிகளையும், குரங்குகளின் வகைகளையும் பார்த்தோம். போகும் போது அப்படியே அங்கு உள்ள காவல் நிலையத்தை எட்டிப் பார்தோம். அங்கு உள்ள உயரதிகாரி எங்களுக்குச் சில துப்பாக்கிகளைப் பற்றி அறிமுகம் செய்தார்.

அங்கு ஒரு 30 நிமிடம் செலவு செய்தோம்.
நாங்கள் இந்தப் பயணத்தைத் தொடங்கும்போது 3.15 மணி. மீண்டும் வந்த நேரம் 7.10. பின்பு தேநீரும் ரொட்டியும் அருந்திவிட்டு நாங்கள் எங்கள் தங்கும் இடத்திற்குச் சென்று இரவாடை அணிந்து இரவுணவைச் சுமார் 8.00 மணியளவில் சாப்பிட்டோம்.
பின்பு நானும் என் நண்பர்களான அநிருத்தன், பூபதி, பிரணவ், அனஸ், அஜீஸ், அக்ஷய், தீட்சண்யா, சைதன்யா ஆகியோருடனும் மற்றவர்களுடனும் பாட்டுப்பாடி விளையாடினோம். ஒரு 10.30 மணியளவில் எங்கள் தங்குமிடத்திற்கு அருகில் கூட்டமாக வந்த புள்ளிமான்களைப் பார்த்தோம். பின்பு சிறிது நேரம் கண்ணாமூச்சி விளையாடிவிட்டு உறங்கினோம்.
அடுத்தநாள் காலை ஒரு 4.30 மணியளவில் விழித்தோம். ஐந்தரை மணியளவில் குளித்துக் கிளம்பினோம். 6.10 அளவில் தேநீர் அருந்திவிட்டு சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு ஆறரை மணியளவில் நடைப்பயணம் தொடங்கினோம். போகும்வழியில் மீண்டும் புள்ளிமான் கூட்டத்தைப் பார்த்தோம்.

அங்கு ஒரு பாறைக்குச் சென்று மூச்சுப்பயிற்சி செய்தோம். அங்குப் பணியாற்றும் நண்பரான பாபு என்பவர் எங்களுக்கு இந்தக் காட்டினைப் பற்றி நன்றாக விளக்கிக் கூறினார்.

அப்படிக் கூறிக்கொண்டிருக்கும்போது என் நண்பன் என்னைக் கையால் மெதுவாகத் தட்டி ஓரிடத்தைக் காண்பித்தான். அதை நான் பார்க்காமல் அவனிடம் திரும்பி என்ன என்று சைகையால் கேட்டேன். அவன் மெதுவாகத் தொலைவில் சிறுத்தை இருப்பதைச் சுட்டிக்காட்டினான். அங்கிருந்த மான்கூட்டத்தில் ஒரு மான்மீது அச்சிறுத்தை பாயத்தயாராக இருந்தது. எங்கள் மாணவர்கள் சிறுத்தையைக் கவனிக்காமல் மான்களைக் கண்டு கூச்சலிட்டார்கள். அவர்கள் எழுப்பிய கூச்சலால் சிறுத்தை சட்டென்று திரும்பி ஓடிவிட்டது. அதன் பின்தான் சிறுத்தையும் அங்கிருந்தது அவர்களுக்குத் தெரிந்தது. அன்றைக்கு எங்களை அறியாமலேயே ஓர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறோம்.
மகிழ்ச்சியுடன் கிளம்பி அங்கிருந்த மலைமீது ஏறி இயற்கைக்காட்சிகளைப் பார்த்துவிட்டு காலை உணவருந்த அரசு உணவகத்துக்கு 9.15 மணியளவில் வந்தோம். சாப்பிட்ட பின்னர் அரசதிகாரி சவ்யா எங்களனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கினார்.
அங்கிருந்து 11.15 மணியளவில் சில பறம்பிக்குளத்துக்குரிய சிறப்புப் பொருள்களை வாங்கிக் கொண்டு பேருந்தில் கிளம்பி மலையிறங்கினோம். பின்னர் பேருந்தில் நல்ல குத்துப்பாடல்கள் வைத்து ஆடினோம். மலையிறங்கியதும் பொள்ளாச்சியில் மதிய உணவாக எங்களுக்கு அசைவ உணவு கிடைத்தது. சிலருக்குச் சிக்கன் பிரியாணி, சிலருக்கு புரோட்டாவும் கோழிக்குழம்பும். உணவருந்திய பின் பேருந்தில் ஏறி, பாட்டும் ஆட்டமுமாக கிளம்பிய இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.


Leave a comment