மதிப்புரை : நாடகக் காட்சியனுபவம்
நான் ஓய்வை விரும்புகிறேன் ‘I DESIRE REST’
இ. கலைக்கோவன், ஈரோடு

கீழே வரப்போகிற நான் கண்ட நாடகத்தின் காட்சியனுபவத்தில் தொடக்கத்திலேயே சில பொறுப்பும் அதைத் தொடர்ந்து என்னுடைய துறப்புகளையும் கூறிக்கொள்கிறேன்.
பொறுப்பு:
- ஒரு நவீன நாடகத்திற்குப் பொழிப்புரையோ விளக்கவுரையோ கொடுப்பது தவறு.
- நவீன நாடகத்தின் அனுபவத்தை உள்வாங்கிக்கொண்டு அனுபவிக்க வேண்டுமேயொழிய ஆராயக்கூடாது.
- நவீன நாடகத்தை ஒலி – ஒளிப் படம் எடுத்து வெளியே கொடுப்பதும் – பார்த்து விட்டுக் கதைவசனம் பேசுவதும் நாடகத்தின் உயிர்ப்பைக் கெடுத்துவிடும்.
- நவீன நாடகத்தை நேரில் கண்டுகளிப்பதே அந்த நாடகத்திற்கு நீங்கள் செய்யும் நியாயம்.
- நவீன நாடகத்தைப் பொருத்தளவில் இன்று பார்த்த காட்சியழகு நாளை மெருகேறியிருக்கலாம் அல்லது குறைந்திருக்கலாம். அது களமும் சூழலும் சார்ந்தது. ஒரு நாள் அனுபவத்தை வைத்து முடிவடுக்கக் கூடாது.
- முக்கியமான ஒன்று நவீன இலக்கியம் போல நவீன நாடகமும் பார்ப்பவர்களின் அகவெளிக்குள் இருக்கும் முதிர்ச்சியைப் பொறுத்து புரிதல் வேறுபாடடையும்.
துறப்பு :
- மேலே சொன்ன இவையனைத்திற்கும் மாறாக நான் சமீபத்தில் கண்ட நவீன நாடகம் குறிந்த என் காட்சியனுபவத்தைக் கூற விழைகிறேன்.
- என் அனுபவத்திற்கும் கள எதார்த்தத்திற்கும் இடையேயான வேறுபாட்டை அவரவர் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.
- இந்தக் காட்சியனுபவம் என்பது என் அக ஒளியே. அல்லாமல் மற்றவர்கள் தங்கள் அக ஒளியோடு ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். ஒப்பிட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.
சரி செய்திக்கு வருவோம். ஈரோடு நாடகக் கொட்டகையில் 21.1.24 அன்று இரவு மிகச்சரியாக ஏழு மணிக்கு நாடகத்திற்கான மணியடிக்கப்பட்டது.
நாடகக் களம் முழுவதும் பூக்களும் புதர் செடிகளும் குச்சிகளும் விரவிக்கிடந்தன. மேடையின் பின்புறமிருந்து நடிகர் (யுகேஷ் பாபு) வெள்ளை நிற கால் சட்டை மற்றும் பனியனுடன் கையில் மெழுகுவர்த்தி ஏற்றி்க்கொண்டு “ ம்ம்ம்….” “ம்ம்ம்….” என்ற சத்தத்துடன் நாடகக் களத்திற்கு வந்து அதே சத்தத்துடன் பார்வையாளர் மாடம் வழியாக வெளியே சென்றுவிட்டார்.
இந்தக் காட்சியின் போது மொத்தக் களமும் மெல்லிய வெளிச்சம் மட்டும் பாய்ச்சப்பட்டு இருள் அடர்ந்த பின்னணியில் மேடை நிரம்பியிருந்தது.

வெளியே சென்ற நடிகர் உடல் முழுவதும் பின்னலாகச் சுற்றப்பட்ட கயிறுகளுடன் மீண்டும் களத்திற்குள் துன்பியல் உடல் மொழியோடு வந்து களத்தின் நடுவே நின்று மொத்த ரசிகர்களையும் நடிப்பால் கட்டிப் போட்டார். இந்தக் காட்சியின் போது மொத்த களத்திலும் ஒளியூட்டப்பட்ட விளக்குகள் களத்தைக் கொஞ்சம் திகிலூட்டச் செய்தது.
நவீன நாடகத்தின் பேச்சு மொழியில் இவை இரண்டும் மிக மிக்கியமான காட்சியாகப் பார்க்கப்படுகிறது. இது போன்ற குறியீட்டுக் காட்சி தான் அடிப்படையில் இவ்வகை நாடகத்தினை புரிந்து கொள்வதில் ரசனை முதிர்ச்சியைக் கோருவது. மெழுகுவர்த்தியும், பின்னப்பட்ட கயிறுகளும் குறியீடு. நீங்கள் மெழுகுவர்த்தியை வெறும் மெழுகுவர்த்தியாகப் பார்ப்பது என்பது உங்களின் கலை சார்ந்த புற ஒளி. அதே சமயம் மெழுகுவர்த்தியை தியாகத்தின் வடிவமாகவோ, இரங்கலின் வடிவமாகவோ, இருள் நீக்கியாகவோ, வழிபாட்டின் வடிவமாகவோ என்று பலவாறாக மாற்றிக் கலைப்படைப்பிற்கு எந்த வடிவம் பொருந்தி வருகிறதோ அந்த வடிவத்தை உங்கள் மனம் கண்டடைந்தால் அது உங்களின் கலை சார்ந்த அக ஒளி. உடல் முழுவதும் பின்னப்பட்ட கயிறும் அப்படியே, களத்தில் இரைந்து இடந்த பூக்களும் அப்படியே. நடிகர் அணிந்திருந்த வெள்ளை நிற ஆடையும் அப்படியே. களத்தில் பாய்ச்சப்பட்ட ஒளிகளும் (light) அப்படியே. இசையும் அப்படியே.

இப்படியான நம் அக ஒளியை நாடகம் நமக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது நடிகர் அடுத்தடுத்த காட்சியை நகர்த்திக் கொண்டிருந்தார். அத்தனையும் குறியீடாக நகரத் தொடங்கியது. அப்போது தான் நடிகர் பேசத்தொடங்கினார்.
“நான் தூங்கி நாள் ஆசு தெரியுமா? யாராவது எனக்கொரு கதை சொல்லுங்களேன். தயவு செஞ்சு கதை சொல்லுங்களேன். நான் தூங்கணும் கதை சொல்லுங்களேன்…. கதை சொல்லுங்களேன்…”
என்று கொஞ்சம் கொஞ்சமாகக் குரல் உயர்த்தி,
“ம்ம்ம்…. தெரியும் நீங்க சொல்ல மாட்டீங்க. நான் சொல்றேன் கேக்குறீங்களா?” என்று பேசத்தொடங்கியதும் களம் சூடேறத் தொடங்கியது.

இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிக் கொண்டே தான் முன்னர் கொண்டுவந்து வைத்திருந்த மூட்டைக்குள் இருந்து கயிற்றால் கட்டப்பட்ட இரண்டு உருவங்களை எடுத்து வெளியில் போட்டு திகிலூட்டிக் கதையைச் சொல்லத் தொடங்கினார். இப்போது கயிறு கட்டப்பட்ட உருவத்திற்கும் முதலில் கயிறு சுற்றிக்கொண்டு வந்த நடிகனுக்குமான தொடர்பும், அப்போது அவர் ஆடிய ஆட்டமும் பார்க்கும் போது உங்களுக்குள் பொருந்திப் போனால், உங்கள் அக ஒளியை நீங்கள் கண்டடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்ட ஆஷிபா, ஜெயப்பிரியா, ஒன்பது மாதமே ஆகியிருந்த ஆந்திர மாநிலம் வாரங்கல்லைச் சேர்ந்த பச்சிளங்குழந்தையின் கதைகள்தான் அவை. சமூகத்தில் நடந்த இந்தக் கொடுமையைச் செய்தியாகப் படிக்கும் போது அது அந்த நேரத்துக் கோபத்தை நமக்குள் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அச்சம்பவத்தைக் கலைவடிவத்திற்குள் அதன் கொடூரத்தன்மையை அப்படியே பதிவு செய்வதென்பது காலத்திற்கும் நமக்குள் ஆறாத கோவத்தை ஏற்படுத்தும். அந்தப் பாதிப்பு ஒவ்வொருவருக்குள்ளும் பாரதி சொன்ன ரௌத்திரமாக மாறும். அதற்கான எதிர்வினையைச் சரியான நேரத்தில் ஒவ்வொருவரும் வெளிப்படுத்துவர். சமூகத்தின் அநீதியைப் பதிவு செய்வதும் அதன் மூலம் சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்புவதும் இவ்வகைக் கலையின் அடிப்படை நோக்கம். அதனை யுகேஷ்பாபு நடித்து, தயாரித்து, இயக்கிய இந்நாடகம் செவ்வனே செய்துள்ளது.

யுகேஷ் பாபு ஈரோடு நாடகக் கொட்டகையில் அடிப்படை நடிப்புப் பயிற்சியினை மூன்றாண்டுகள் பெற்று, பின்பு புதுச்சேரியில் ‘இந்தியன் ஆஷ்ரம்’ நாடகக் குழுவில் இணைந்து பிரான்ஸ் வரை சென்று, அங்கே தொடர்ச்சியாக நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் கலைஞன். விடுமுறைக்கு, பிரான்ஸிலிருந்து வந்திருந்த இடைவெளியில் ‘I DESIRE REST‘ (நான் ஓய்வை விரும்புகிறேன்) என்ற மேற்சொன்ன தனிநபர் நாடகத்தினை நிகழ்த்தினார். நாடக மேடையின் ஒளி மற்றும் ஒலி அமைப்பினை முறையே ஈரோடு நாடகக் கொட்டகையைச் சார்ந்த பிரபாகரன் மற்றும் சந்ரு இருவரும் மேற்கொண்டனர்.
நாடகக் களத்தில் சிதறிக்கிடந்த பூக்கள் முதலில் மணமேடையின் வாசத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தன. நாடகம் முடியும் போது அப்பூக்கள் பிணவாடையைக் கொடுக்கத் தொடங்கின. சமூகத்தின் கொடூரத்தால் சீரழிக்கப்பட்ட பச்சிளங்குழந்தைகளின் அவலத்தை யுகேஷ் பாபு அவ்வளவு அழுத்தமாகத் தன் நடிப்பால் பதிவு செய்திருந்தார். தமிழ் நவீன நாடக மேடைகளில் தவிர்க்க முடியாத கலைப்படைப்பு ‘ I DESIRE REST ‘

Leave a comment