காடரினக்கதையும் பாட்டும் சேகரிப்பு அறிமுகம்
நெடுங்குன்றுச்சேரிப் பயணத்தில்
முனைவர் ப. குணசுந்தரி
அனைவருக்கும் வணக்கம்.
எழுதிய கவிதைகளோ, கட்டுரைகளோ செய்யப்பட்ட ஆய்வுகளோ இதுவரை நூலாக வெளியிடப்படாதபோது, இது என் முதல் தொகுப்பு நூல். இத்தொகுப்பின் வெளியீட்டு முயற்சியில் எழும் நெகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நினைவறிந்து படிக்கும் காலத்தில் என்ன படித்தாலும் படிப்பு தொடர்பாக எங்குச் செல்ல நினைத்தாலும் என் நினைப்பிற்கும் விருப்பத்திற்கும் உறுதுணையாய் இருக்கும் என் தந்தையை, இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். திருமணத்திற்குப் பிறகு தந்தையிடத்தில் என் கணவர் குழந்தைகள். என்னிடம் அவர்கள் வேண்டுவது ஒன்றை மட்டும்தான். படிப்பும் தேடலும் உங்களுக்கு முக்கியம் என்றால் எங்களுக்கு நீங்கள் முக்கியம் ஆரோக்கியமாய் இருந்து கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்பதுதான்.

தாத்தா ஆறுமுகம்
ஆய்வின் இடையிடையே, கல்வெட்டுப்பயிற்சி, தொல்லியல் எனச் சுற்றி அலைந்து, அறிந்த புதிய தகவல்களை ஆர்வத்துடன் பகிர்ந்துகொண்டபோது தேடலை ஊக்குவித்தவர் என் நெறியாளர் பேரா.வீ.அரசு ஐயா அவர்கள். இவர் எம்துறை அல்லவே என்று பேதம் காட்டாது அன்புடன் கல்வெட்டில் ஆற்றுப்படுத்தியவர்கள் முனைவர் சு. இராசகோபால் ஐயா அவர்களும் முனைவர் பத்மாவதி அம்மையார் அவர்களும்தான். சிகரம் வைத்தது போன்று கற்றலின் எத்துறையானாலும் ஐயம் எழுந்தபோது சென்றால் பேசினால் மலர்ந்த முகத்துடன் வரவேற்று, உணவிட்டு தேடலின் நுட்பம் சொல்லி முறைப்படுத்தியவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன் ஐயா அவர்கள். இவர்கள் எல்லாம், என்றும், என் நன்றிக்கு உரியவர்கள்.
என் கற்றல் அனுபவத்தில் எந்த இடத்திலும் தட்டப்படாது வந்ததாலேயே செய்ய நினைத்ததை வீட்டில், பள்ளியில், கல்லூரியில் பல்கலைக்கழகத்தில் என எல்லா இடங்களிலும் துணிந்து செயல்பட முடிந்தது. முனைவர் தகுதி பெற்றதும் ஒரு பருவம் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பணிசெய்தேன். பின்னர் பராதியார் பல்கலைக்கழகத்தில் பணி ஆணைபெற்று 03.08.2007 அன்று வால்பாறை கல்லூரிக்கு வந்து பணியேற்றபோது முதல் முறையாகக் குடும்பத்தைப் பிரிந்த சூழல் மருட்டினாலும் இயற்கையழகு என்னைப் பெரிதும் கவர்ந்தது.
அதுமட்டுமல்ல இங்குள்ளவர்களில் பெரும்பான்மையோர், என்போன்றே பிழைப்புக்காக வந்து குடியேறி தலைமுறைகள் பல கடந்து வாழ்கிறார்கள் என்றும் இவர்களல்லாது இம்மண்ணையே பிறப்பிடமாகக் கொண்டு இன்றும் அடர்ந்த வனங்களுக்கள் வாழும் பழங்குடியினத்தவர்களும் இருக்கிறார்கள் என்றறிந்தபோது இயல்பாக என்னுள் இருந்த தேடல் எழ, தொடக்கத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தவர் என் மாணவர் தோழி கிருஷ்ணவேணி. அவளுக்குத் தெரியாதவர் என்று வால்பாறையில் ஒருவரும் இல்லையோ என்று நினைக்கத் தோன்றுமளவுக்கு எல்லோருக்கும் இவளைத் தெரிந்திருந்தது. பார்ப்பவரையெல்லாம் அவள்பாணியில் விவரணை செய்துகொண்டே வருவாள். பலநேரங்களில் சிரித்தாலும் சிலபோது கண்டித்தபடியும் நடப்பேன்.
இவள்தான் இங்குள்ள பழங்குடியின மக்களைப் பற்றி எனக்குத் தெரிவித்த முதல் தகவலாளி. நானும் அவளும் அரசால் இடையில் விடப்படும் விடுமுறை நாட்களில் மட்டுமல்லாது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வால்பாறையின் பல பகுதிகளுக்கும் சென்றிருக்கிறோம்.
என்னுடையதும் கிராமம் என்றாலும் எனக்குப் புதிதாய்த் தெரிந்த ஒன்று இங்குள்ள மக்களின் வழிபாட்டுக் கடவுளர்கள் பெரும்பாலும் கருப்பராயனாகவோ முனீஸ்வரர்களாகவோ இருந்தது.
இச்சூழலில் ஒருமுறை நடுமலைப் பகுதிக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள, பூசாரி வைத்திருந்த, விழாமலரின் படங்களைப் பார்க்க நேர்ந்தது. அதிலிருந்த மனிதர்களின் உடை மற்றும். முகஅமைப்பைக் கண்டு விசாரித்தபோது அவர்கள் மலைமலசர் என்ற பழங்குடியினர் என்றும் தற்பொழுது அவர்கள் இங்கு இல்லை என்ற தகவலும் கிடைத்தது.

வனங்களுக்குள் அல்லாது பழங்குடியினருள் சிலர் இப்படி மக்களுடன் இணைந்தும் வாழ்ந்திருக்கிறார்கள் என்றறிந்தபோது வனங்களுக்குள் வாழும் மனிதர்கள் எப்படி இருப்பார்கள் அவர்கள், வாழ்க்கைமுறை எப்படி இருக்கும் அவர்கள் என்னமொழி பேசுகிறார்கள் என்று அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் பெரிதாக எழுந்தது. ஆறுமாதங்கள் அடைமழை பெய்யும் பகுதியாதலால் பொறுத்திருந்து, வானம் வெறித்த ஒருஞாயிற்றுக் கிழமையில் பலநாள் நச்சரிப்புக்கிடையே கிருஷ்ணவேணியுடன் என் புகைப்படக் கருவியையும் ஒலிப்பதிவுக் கருவியையும் எடுத்துக்கொண்டு தோள்பையுடன் கிளம்பிவிட்டேன் நெடுங்குன்று நோக்கி.
நெடுங்குன்றில் காடர் என்று சொல்லக்கூடிய பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள் என்றும் அவர்களுக்குள் பேசும் மொழி புரியாது என்றும் தமிழும் அவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் அப்பழங்குடியினருள் ஒருவர் தன் அண்ணனுக்குத் தோழர் என்றும் வால்பாறையிலிருந்து வில்லோனிக்கு முதலில் பேருந்தில் செல்லவேண்டும் என்றும் அதன்பிறகு காட்டுக்குள் நடந்து செல்லவேண்டும் என்றும் வழி தனக்கு நன்றாகத்தெரியும் என்றும் பேருந்துப் பயணத்தில் வழிநெடுக விடாது பேசிக்கொண்டு வந்தாள் கிருஷ்ணவேணி.
நேரத்திற்கு மட்டுமே வரும் பேருந்தானதால் நெரிசலுக்கிடையே ஒருவழியாய் வில்லோனி வந்துவிட்டோம். இறங்கியதும் நெடுங்குன்று செல்வதற்கான வழியை அங்குள்ள பெரியவர்களிடத்துக் கேட்டுக்கொண்டு இப்பாதைதான் என நடக்கத் தொடங்கியபோது ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. எங்களோடு வந்தவர்கள் எல்லாம் இனி காட்டுப்பாதை என்று கைகாட்டிவிட்டு அவரவர்களின் எஸ்டேட் வீட்டிற்குச் சென்றுவிட்டபோது தான் நானும் கிருஷ்ணவேணியும் தனித்தே செல்லவேண்டும் என்று தோன்றியபோது பயமேற்பட்டது.
வழக்கம்போல கிருஷ்ணவேணிக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் தோன்ற நம்பிக்கையுடன் நடந்தோம். திடீரென தோட்டப்பகுதி முடிந்து குன்றின் சரிவு தென்பட்டது. சரிவு என்றால் பெரும்பள்ளத்தாக்கு போன்றது. உருண்டுவிட்டால் ஒருவருக்கும் தெரியாது. சரிவு முழுவதும் மரங்கள். அதனைச் சோலை என்றும் குறிப்பிடுகின்றனர். சோலைகளுக்கு ஊடாகவே சரிவில் நடந்தபடி வழிமாறிவிட்டோமோ என்ற எண்ணத்தில் இருவரும் கவனமாகக் கீழே இறங்கியபடியே பேசிக்கொண்டுவர சற்றுத்தொலைவில் சட்டென பின்னால், திரும்பிப்பார்க்கையில் எங்களுக்குப் பின்னால் ஒருவர் மெல்ல மெல்ல பதுங்கியபடி வந்ததைக் கவனித்துவிட்டு அலறாத குறைதான்.
என்நிலை அறிந்த கிருஷ்ணவேணி, “என்னங்க நீங்க, நல்லவேளை அவரும் காடரினப் பழங்குடியினருள் ஒருவர்தான். இவர்களைப் பார்த்து பயப்படத்தேவையில்லை. நம்பிக்கையானவர்கள். அவர்களை ஏமாற்றாதவரை ஒன்றும் செய்யமாட்டார்கள். குடில்வரை செல்வதற்கு அவர் நமக்கு உதவியாக இருப்பார். நல்லவேளை”என்றபோதுதான் கவனித்தேன், சரிவைக்கடந்து வந்துவிட்டோம் என்று.
சரிவின் முடிவில் பெரும் ஓடை ஒன்று இருந்தது. நல்லவிதமாக நம்பிக்கையுடன் பேசும் கிருஷ்ணா திடீரென பயமுறுத்தவும் செய்வாள். அவள்பாணியில், “இந்த ஓடையில்தான் மிருகங்களெல்லாம் வந்து தண்ணி குடிக்குங்க, கொஞ்சம் சுத்திமுத்தி பார்த்துக் கொள்வோம்” என்றாள்.
ஒருமுறை கரடி ஒன்று எஸ்டேட்டுக்குள் வந்து குழந்தை ஒன்றைத் தூத்திச் சென்றுவிட்டதாகவும் பலநாள் சென்று அந்தக் குழந்தையை மீட்டபோது, குழந்தையின் உடல்முழுக்க புண்ணாக இருந்ததாகவும் குறிப்பிட்டாள். கிருஷ்ணாவை நான் ஏறெடுத்துப் பார்த்தபோது, தொடர்ந்து “கரடி குழந்தையை நக்கிக் கொண்டே இருந்திருக்கும்போல. அதனாலதான் குழந்தைக்குப் புண் வந்துவிட்டதாம். ஐயோ.. அம்மா” என்று அவள்பாணியில் கூறிவிட்டு என்னையும் பார்ப்பாள். அந்த நேரம் காட்டில் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். உடனே எனக்குக் காடரினப் பெரியோர் பதுங்கியபடி வந்தது மிருகத்தைப் பார்த்துத்தானோ என்று நினைத்தபோதே வியர்த்துவிட்டது.
அவளை ஓர் அடி போட்டுவிட்டு நாங்கள் நின்றபடியே அவரைத் திரும்பிப்பார்த்தால் அவர் ஒற்றைவிரலை வாயில் சுட்டியபடி மெல்லவந்ததில் இருவருமே பயந்துதான்போனோம். கிருஷ்ணவேணி காடர்களைப்பற்றிக் கூறிய நம்பிக்கையில் அவர்பார்வை சென்றவழியே பார்த்தால் அங்கு அழகிய சிறிய அளவிலான மான் ஒன்று காதுகளைத் தூக்கியபடி ஓடத்தயாராக இருந்தது. கணநேரத்தில் ஓடியும் போனது. அதில் காடரினப் பெரியோருக்கு வருத்தம்தான். ஆனாலும் சட்டென மாறிவிட்ட தோற்றத்தில் அவர் விரைந்து நடக்கத்தொடங்க கிருஷ்ணா அவரிடம் பேச்சுக் கொடுத்து நாங்கள் அவருடைய குடிலுக்குத்தான் வருகிறோம் மூப்பர் கணேசரைப் பார்ப்பதற்கு என்றதும் அவரின் வேகம் சற்றுக் குறைந்தாலும் அவர் நின்று அதிகம் பேசவில்லை. ஆனாலும் எங்களைவிட்டுவிட்டும் செல்லவில்லை. அவர்போக்கில் அவர் நடக்க, நாங்கள் எங்கள் போக்கில் அவர்பின்னால் பேசியபடியே வந்தோம்.

கிருஷ்ணாவைப்பற்றி உங்களுக்கு, நான் சொல்ல வேண்டியிருக்கிறது. எனக்காக அவள் எதையும் செய்வாள். அப்படி ஒரு அன்பு. என் இயல்பு, தவறு எனத் தெரிந்தால் யாராக இருந்தாலும் இடம் காலம் பாராமல் அவர்களைக் காய்ந்துவிடுவேன். அதனாலேயே என்னுடன் ஒட்டுதலாக இருப்பவர்கள் குறைவுதான் என்று சொல்லவேண்டும். எல்லோரிடமும் பேசுவேன் என்பதாலேயே அனைவரும் நெருக்கமானவர்களாக என்றும் இருந்ததில்லை. நானும் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் இவள் வேறுவிதம். “தவறா இருந்தா நீங்க சொல்லுங்க. நான் திருத்திக் கொள்கிறேன்” என்பாள் தலைசாய்த்தபடி. ‘உங்கள் மகளாக இருந்தாள் செய்யமாட்டீர்களா’ என்பாள். கோபத்தில் பேசாதிருந்தாலும் எப்படியோ போவென்று விட்டுச் செல்லமாட்டாள். அதுநாள்வரை என்னோடு தேவை கருதி பேசுபவர்கள் நான் கடிந்துகொள்கிறபோது பல்லைக்கடித்துக் கொண்டிருப்பார்கள்போலும். தேவை முடிந்தவுடன் சொல்லாது நகர்ந்துவிடுவதையே பார்த்த எனக்கு, போ என்றாலும் போகாது என்னுடனேயே இருக்கும் இவள் பிடிவாதம் புதிது.
அவளுடைய அம்மாவிடம் கூறினால் அவர்கள் “இவள் அப்படித்தான் அம்மா என்ன ஜிக்கி அவங்கள தொந்தரவுபண்ணாம இருக்கமாட்டியா. சொன்னா கேட்டுக்க” என்று கூறும்போது “சரிசரி நான் பார்த்துக் கொள்கிறேன்” என்பாள். அவளை நான் பார்த்துக் கொண்டதைவிட அவள் என்னைப் பார்த்துக் கொண்டதுதான் அதிகம்.
குடில் நெருங்கியதும் பெரியவர் அவர்வழியே வீட்டிற்குச் சென்றுவிட நானும் கிருஷ்ணாவும் மூப்பர் வீடு எதுவென்று தெரியாமல் மெல்ல குடில்கள் நிறைந்த அப்பகுதிக்குள் முன்னேறியபோது, எங்களைப் பார்த்த பெண்களெல்லாம் வீட்டிற்குள் சென்றுவிட்டனர். ஒல்லியாக நடுத்தர உயரத்தில் ஒருவர் எங்கள் முன்னே வந்தார். அவரிடம் நான் எதற்காக, வந்திருக்கிறேன் என்று கூறி மூப்பர் கணேசரைப் பார்க்க வேண்டும் என்றதும் தான்தான் மூப்பர் என்று அறிமுகம் செய்துகொண்டதோடு அவர் குடிலுக்கும் அழைத்துச்சென்றார்.
சிறிய குடில் அவர்மனைவியை அழைத்து எங்களுக்குத் தேநீர் போடச் சொன்னார். ஒரு தட்டில் மாங்காயும் தேனும் இருக்க எங்கள் முன் வைத்தார்கள். அப்பொழுதுதான் தெரிந்தது எங்களோடு வந்த பெரியவர் அவர்போக்கில் எங்களை விட்டுவிட்டுச் சென்றுவிடவில்லை. எங்கள் வருகையை மூப்பருக்கு அறிமுகம் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்பது.
தெரியாத, அறிமுகமில்லாத இடத்தில் எப்பொழுதுமே நான் எதையும் சாப்பிட்டதில்லை. களஆய்வின்போது எனக்கான உணவுப் பொருட்களை உடனேயே என்தோள் பையில் எடுத்துச் செல்வதுதான் என் வழக்கம். அன்றும் அப்படி என் பையில் பழங்களும் பிஸ்கட்டுகளும் ரொட்டியும் ஜாமும் இருந்தன. எங்குச் சென்றாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக அவர்தரும் உணவுப்பொருட்களை, மனங்கோணாத வகையில் மறுத்துவிடுவேன். அதுமட்டுமல்ல நான் செல்லும் இடங்களில் என் தந்தையின் அறிமுகம் இருக்கும் அது எனக்குப் பெரும் பாதுகாப்பும் கூட. “இன்னார் மகள்” என்று அறிமுகம் தந்த பாதுகாப்பில் களப்பணி செய்வதும் இதுவும் ஒன்றல்ல.
அப்பாவின் அறிமுகம் இல்லாத இடங்களுக்குக் களப்பணி சென்றாலும் சுற்றியுள்ள பகுதிகளில் என் நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் துணையில்லாமல் தனித்து எங்கும் சென்றதில்லை. பழகியபிறகு நான் தனித்துச் சென்றதுண்டு. கீழுள்ள சூழ்நிலையே வேறு. ஆனால் இந்த இடம் எனக்கு முற்றிலும் புதிது. கிருஷ்ணா வேறு அவர்களைப் பற்றி அதிகம் சொல்லிக் கொண்டே வந்ததால் அவர்கள் நம்பிக்கையைப் பெறுவது எனக்கு முதலில் தேவையாக இருந்தது.
புளிப்புச் சுவையை நான் விரும்புவதில்லை. முதன்முறையாக அன்புடன் என்முன் வைக்கப்பட்டிருக்கும் மாங்காய்த் துண்டங்களைப் பார்த்தபடியே ஆங்காங்கே குடில்களில் இருந்துகொண்டு எங்களை ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கும் பெண்களையும் குழந்தைகளையும் பார்க்க, எனக்குப் புதிய அனுபவமாகவும் இருந்தது. கைகள் தானாக, மாங்காய்த் துண்டங்களை எடுத்து வாயில் வைத்துக் கடித்தபோது ஆ..வென என்னை அறியாமலேயே துள்ளி பெரியவரிடம், “இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை. இதுவரை நான் சாப்பிட்டதில்லை. நன்றாக இருக்கிறது. மாங்காய் எனக்குப் பிடிக்காது. நீங்கள் கொடுத்துவிட்டீர்களே மறுக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஒருதுண்டம் எடுத்துச் சாப்பிட்டேன்.” என்று மளமளவென்று அவரிடம் மறைக்காது உண்மையைக் கூற, என்னையே, பார்த்துக்கொண்டிருப்பரர்கள் போல பக்கெனச் சிரித்துவிட்டு, “எங்களுக்குத் தெரியும் அம்மா உங்களுக்குப் பிடிக்கவில்லையோ என்று முதலில் நினைத்தாலும் அதன் சுவை, எங்களுக்குத் தெரிந்திருந்ததால் சாப்பிட்டால் உங்களுக்குப் பிடித்துப்போகும்.” என்று மலையாளம் கலந்த தமிழில் அவர்கள் மலர்ந்த முகத்துடன் கூறியதும் எவ்வளவு துல்லியமாக ஆட்களைக் கணிக்கிறார்கள். இவர்களுடன் சற்றுக் கவனமாகத்தான் இருக்கவேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
சற்று நேரத்திற்கெல்லாம் தேநீரும் வந்துவிட்டது. மாங்காயைப்போலவே தேநீரும் எனக்குப் பிடிக்காது. நாங்கள் வந்திருந்தபோது இருந்த ஒருவித இறுக்கம் அவர்களின் மலர்ச்சியில் தளர்ந்திருந்தது. முதல் கருத்தில் மாங்காயின் சுவை என்னை மாற்றியதால் தேநீரும் அப்படித்தான் இருக்குமென்று வாயில் வைத்தால் எனக்கு உமட்டிவிட்டது. வெளிக்காட்டவில்லை. என்றாலும் அதையும் கவனித்துவிட்டு அந்த அம்மா சிரித்துக்கொண்டே “எனக்கு இப்படித்தான் போடத்தெரியும் (குளிருக்கு ஏதோ சூடாக இருந்தால் நன்றாக இருக்கும். அதற்காகத்தான் போட்டுக் குடிப்போம்” என்றார்கள். “பிடிக்கவில்லை என்றால் வைத்துவிடுங்கள்” என்றபோது வைத்துவிடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். அவர்களின் இயல்பான பேச்சில், “அன்பாகக் கொடுத்திருக்கிறீர்கள் குடித்துவிடுகிறேன்” என்று குடித்தது எனக்கே வியப்பாக இருந்தது.
கிருஷ்ணா அருகில் இருந்துகொண்டு “அதுதான் வேண்டாம் என்கிறார்களே ஏன் குடித்தீர்கள் நான் சற்றுத் தொலைவு சென்று அவர்களுக்குத் தெரியாமல் ஊற்றிவிட்டு வந்திருப்பேனே” என்று கிசுகிசுக்க அவளைக் கண்ணால் அடக்கியடி, பையில் துழாவி பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து அருகில் அமர்ந்து கொண்டிருந்த குழந்தையிடம் கொடுத்தேன். எங்குச் சென்றாலும் புகைப்படம் எடுக்கும் எனக்கு, அன்றைக்கு அதைத் தொடவே இல்லை என்பதும் ஆச்சர்யம்தான்.
சற்றுப் பொறுத்து மூப்பர் “நான் யார்? எங்குப் பணியாற்றுகிறேன்” என்றெல்லாம் விசாரித்துவிட்டு என்னிடம் நேரிடையாகவே கூறினார். “இனி இதுபோன்று தனித்து வரக்கூடாதம்மா. உங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எங்களால் எந்தத் தொந்தரவும் இல்லை. ஆனால் வழியில் விலங்குகளின் அச்சுறுத்தல் இருக்கிறது. நாங்கள் அதிகாரிகளுக்குப் பதில்சொல்ல வேண்டியிருக்கும். வீணான பிரச்சனை. எப்படியோ வந்துவிட்டீர்கள் எங்களைப்பற்றி நீங்கள் அறிந்துகொள்ள விரும்பியது சந்தோசம்” என்றும் “இங்கு எங்கள் குழந்தைகள் படிப்பதற்காக ஓராசிரியர் பள்ளி ஒன்று இருக்கிறது. அதில் இளங்கோ என்பவர் ஆசிரியராக இருக்கின்றார். அவரிடம் பேசினால் எங்களின் தேவை என்ன என்பது உங்களுக்குத் தெரியும். எங்கள் குழந்தைகளுக்கு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்” என்றபோதுதான் எனக்குப் புரிந்தது.
“எனக்கு முன்னால் வந்தவர்கள், இவர்களுக்கு இதைச் செய்கிறோம். அதைச் செய்கிறோம் என்று கூறி அவர்களுக்கு என்ன தேவையோ அந்தத் தகவல்களைப் பெற்றுச் சென்றிருக்கிறார்கள் என்பதும் இவர்கள் தேவைகள் என்றும்போல் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கின்றன என்பதும்”. இப்பொழுது என்ன கூறினாலும் அவர்களுக்குப் புரியவைக்க முடியாது என்று கருதி மூப்பர் குறிப்பிட்ட ஆசிரியர் அண்ணன் இளங்கோவின் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு என்னுடைய எண்ணைத் தவறாமல் அவரிடம் கொடுத்துவிட்டு சிறிதுநேரம் அவர்களோடு பொதுப்படையாகப் பேசிக்கொண்டிருந்தேன்.
முதல் நாளிலேயே என் ஆய்வுப் பணிகளைத் தொடங்குவது சரியாக இருக்காது என்ற கருத்தில் என்னை முதலில் புரியவைத்துவிட்டு பிறகு பணிகளைத் தொடர்வதே பொருத்தமாக இருக்குமென்று தோன்றியது.
நாங்கள் கிளம்பத் தயாராகும்வரை ஒருசிலரைத் தவிர வேறு எவரும் என்னிடம் வந்து பேசவில்லை. அப்படி என்னிடம் இயல்பாகப் பேசியவருள் ஒருவர் து. இராதா. அன்றைக்கு அவர்கள் பேச்சில் நான் தெரிந்துகொண்டது கணவனை இழந்த பெண்கள் இந்நெடுங்குன்றில் அதிகம் என்பது. ஆண்கள் நன்றாகத்தான் இருப்பார்கள் திடீரென இறந்துவிடுவார்கள். ஒன்றும் செய்வதற்கில்லை. என்ற போது இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய இருப்பதை உணரமுடிந்தது. என்னிடம் பேசியபோது, மலையாளம் கலந்த தமிழில் பேசினாலும் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறபோது வேறுமொழியில் பேசிக்கொண்டதைக் கவனித்தேன். அப்படியானால், இவர்களிடமிருந்து முழுமையாகத் தகவல்களைப் பெறவேண்டுமானால் இவர்கள் பேசும் மொழியையும் அறிந்துகொள்ள வேண்டும் அல்லது இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மறைக்காது முழுமையாக எடுத்துச் சொல்லும் ஆள் நம்முடன் இருக்கவேண்டும் என்று தோன்றியது
மூன்று மணியானது. எங்களிடம் இருந்த உணவுப்பொருட்களுள் சிலவற்றை அங்குள்ள குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு நானும் கிருஷ்ணாவும் புறப்படத் தயாரான போது “சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்றார் மூப்பர் மனைவி. எவ்விதத் தயக்கமும் இன்றி நான் வழக்கம்போல் பின்பற்றும் என்பாணியில் மறுத்துவிட்டுக் கிளம்பினோம்.
எங்களைத் தனித்துச் செல்லவிடாது எங்கள் பாதுகாப்பிற்கு ஒருவரை மூப்பர் அனுப்பினார். அங்கிருந்து கிளம்பும்வரை ஒளிப்பதிவுக் கருவியையும் புகைப்படக் கருவியையும் எடுக்கவே இல்லை நான். குடிலைவிட்டு காடர் பெரியோருடன் நிதானமாக நடக்கத் தொடங்கியதும்தான் எவ்வளவு தூரம் ஆர்வத்தில் எதையும் யோசிக்காது நடந்து வந்திருக்கிறோம் என்பது தெரிந்தது.
காடர் பெரியோர் என்னிடம் நீங்கள் எப்பொழுதாவது வரவேண்டும் என்று விரும்பினால் இன்று போல் தனித்து வரவேண்டாம் என்றும் ஆசிரியரிடம் தெரியப்படுத்தினால் எங்களில் ஒருவர் வந்து அழைத்துச் செல்வோம் என்றும் கூற, அப்பெரியவருக்கு நன்றிசொல்லி வில்லோனி பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகக் காத்திருந்தபோதுதான் மூப்பர் அறிவறுத்தியதைப்போன்று இனி தனித்து வருவது ஆபத்து என்பதும் இவர்களுக்கு அறிமுகமானவர்களின் துணையுடன் வந்தால்தான் நான், நினைத்தபடி இவர்களைப் பற்றி அறிந்துகொள்ளமுடியும் என்பதும் புரிந்தது.
பேருந்துவர, ஒருவழியாய் கூட்டநெரிசலில் பயணித்து வால்பாறை வந்தபோது என் அலைபேசியைத் தவறவிட்டதை அறிந்தேன். கிருஷ்ணாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு யோசனையுடன் நடக்கத் தொடங்கினேன். என்னசெய்வது குடும்பத்தினரைப் பிரிந்து தனித்திருக்கும் எனக்கு அவர்களோடு பேசமுடியாமல் போகும். பேசவில்லை என்றாலோ வீட்டிலிருப்பவர்கள் பேசும்போது எடுக்கவில்லை என்றாலோ பயந்துபோவார்கள். அலைபேசி தொலைந்துவிட்டது என்று முதலில் நான் வீட்டினருக்குத் தெரிவிக்கவேண்டும். அதுமட்டுமல்ல. இந்த எண்ணைத்தான் மூப்பரிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். அவர்கள் பேசுகிறபோது, எடுக்கவில்லை என்றால் அங்குப்பேசியதெல்லாம் பொய்த்துப்போகும். ஆகையினால், உடனடியாக ஒரு அலைபேசியை வாங்க வேண்டும் காசில்லாத நிலையில் ஊதியம் வரும்வரை அலைபேசிக்காகக் காத்திருப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டே வந்தபோது கே.டி.ஜே ஸ்டோரைப் பார்த்ததும் யோசியாமல் அதற்குள் நுழைந்து நான் கல்லூரியில் பணியாற்றுகிறேன் பயணத்தில் அலைபேசி தொலைந்து விட்டது. தற்பொழுது மொத்தப்பணமும் என்னிடம் இல்லை. ஊதியம் வந்ததும் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்க, கடையினுள் இருந்த ஒருவர் திடீரென அருகே வந்து கடையில் இருப்பவரிடம் “ஆமாம் இவர்கள் நிரந்தரப்பணியிடத்தில் பணிபுரிகிறார்கள்” என்றதும் எந்தக்கேள்வியுமின்றி அவர் எனக்கு அலைபேசியைக் கொடுத்தார். எனக்காகப் பேசியவரைக் கவனித்தபோது அவர் எங்கள் கல்லூரியின் கணினி ஆய்வக நிர்வாகி தோழர் சேகர் என்பது தெரிந்தது.
அப்பொழுது ஒன்றும் புரியவில்லை எனக்கு. அலைபேசி வாங்கிவிட வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்ததில் மனம் கனத்துப்போனது. நன்றியுடன் பார்க்க, “இதெல்லாம் ஒன்றுமில்லை சகோதரி” என்றார். களப்பணிபற்றி தோழர் சேகர் அவர்களிடம் கூறியபோது தொழில்நுட்பம் சார்ந்து நான் உங்களுக்கு என்னால் என்ன உதவி செய்து தர முடியுமோ செய்து தருகிறேன் என்று கூற, அவரிடம் விடைபெற்று கனத்த நெஞ்சத்துடன் வீடுவந்து சேர்ந்தேன். என்னுடன் என் அறையைப் பகிர்ந்துகொள்ளும் தோழிகளுக்கு என்செயல் கேலியாகத் தெரிந்தது. “வேலைதான் கிடைத்துவிட்டதே பிறகேன் வேலைமெனக்கெட்டு இந்த ஆபத்தான செயல்களில் எல்லாம் ஈடுபடுகிறீர்கள்” என்று அறிவுரை சொல்வார்கள். பொருட்படுத்துவதில்லை நான்.
ஓரிரு நாட்களுக்குள் அலைபேசி சரியானதும் ஆசிரியர் அண்ணன் இளங்கோ அவர்களுடன் தொடர்பு கொண்டு என்னை அறிமுகம் செய்து கொண்டேன் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அங்குள்ள குழந்தைகளுக்கு என்னால் இயன்ற உதவிகளைப் பெரிதாக இல்லாவிட்டாலும் செய்கிறேன் என்றபோது அவர் அக்குழந்தைகளுக்குச் சீருடை இல்லை. பள்ளிக்கு வருகிறார்கள். வழக்கம்போல அவர்கள் உடையிலேயே இருப்பதால் அவர்களுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை. சீருடை இருந்தால் பள்ளிக்கு வருகிறோம் என்ற உணர்வு இருக்கும் என்றார். அடுத்தகணமே சீருடைக்குரிய பணத்தை அவர்களிடம் கொடுத்தேன்.
சீருடை தைத்தாகிவிட்டது என்று அண்ணன் தெரிவித்தபோது நீங்களே கொடுத்துவிடுங்கள் அண்ணா. கல்லூரிப் பணிகள் இருக்கின்றன என்றேன். இடையிடையே சந்திக்கும்போது மாணவர்கள் பற்றியும் அம்மக்களைப்பற்றியும் விசாரிப்பேன். குழந்தைகளுக்குச் சீருடை தந்து உதவியதால் பழங்குடியின மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றார். பள்ளியில் கிராமக் கல்விக் குழுநாள் விழா வைத்திருக்கிறோம் தாங்கள் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அழைப்பு எனக்கு மட்டுமல்லாது அன்றைக்குக் கல்லூரியின் முதல்வராக இருந்த முனைவர் இரா.மதிவாணன் ஐயா அவர்களுக்கும் என்பதால் சும்மா செல்லவேண்டாம் என்று விழா நாளன்று குழந்தைகளுக்குக் குறிப்பேடுகள், பென்சில்கள் வாங்கிக்கொண்டு சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக மீண்டும் நெடுங்குன்றம் குடிலுக்குச் சென்றேன்.

மக்கள் எங்களை வரவேற்க குழந்தைகளுடன் குடிலின் தொடக்கத்திலேயே காத்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஜீப்பைவிட்டு நாங்கள் இறங்கியதும் குழந்தைகள் பள்ளிக்குள் அழைத்துச் சென்றார்கள். அப்பொழுது அங்கு என்னைப் பார்த்த மக்களுக்கு அடையாளம் தெரிந்தது. சிலர் அருகேவந்து அன்றைக்குத் தனித்து வந்தது நீங்கள்தானே என்று விசாரிக்கவும் செய்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.

குழந்தைகள் நடனம்
குழந்தைகளுக்கு வாங்கிச் சென்ற பொருட்களைக் கொடுத்தோம். எங்கள் முன் குழந்தைகளில் சிலர் பாடினர். சிலர் ஆடினர். மூன்றாம் வகுப்பு படிக்கும் பெண்ணொருத்தி அன்று ஆங்கிலத்தில் பேசியதுடன் செய்தித்தாள் வாசித்தாள். வந்தவர்களை வரவேற்றுப் பேசிய அண்ணன் இளங்கோ அவர்கள் குழந்தைகளுக்காக நான் சீருடைகள் வாங்கிக் கொடுத்து உதவியதையும் சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்து பேசினார். அதுகேட்ட முதல்வரும் தன் பேச்சில் என்னைப் பாராட்டிப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. நானும் குழந்தைகளை ஊக்கப்படுத்த ஓரிரு வார்த்தைகள் பேசினேன். புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. நிகழ்ச்சி முடிய மக்கள் பெரும்பாலானோர் தானாக வந்து பேசினர். அவர்களின் இந்த மாற்றத்திற்குக் காரணம் ஆசிரியர் அண்ணன் இளங்கோ என்றால் அது மிகையாகாது.
அன்றுதான் தெரிந்தது நெடுங்குன்றம் குடிலுக்கு வண்டியிலும் வரலாம் என்று. வண்டியில் மும்முறை சென்றிருக்கிறேன். மற்ற நேரங்களில் எல்லாம் நடந்துதான். நெடுங்குன்றுப் பயணத்தால் எனக்கு வால்பாறையில் கிடைத்த, ஒரு சகோதர உறவு ஆசிரியர் அண்ணன் இளங்கோ அவர்கள். அதற்குப்பிறகு அம்மக்களுடனான என் உறவு என்பது அவர்கள் குடிலில் நடக்கும் திருமணத்திற்கு என்னை அழைக்கவேண்டும் என்ற அளவிற்கு மாறியிருந்தது.
இயல்பாகப் பேசத் தொடங்கிவிட்டதால் ராஜேஷ், சீதா திருமணத்திற்கு பிரியாவுடன் சென்றேன். கிருஷ்ணா நிறைவாண்டு என்பதால் அவளை அழைத்துச் செல்லவில்லை. பிரியாவும் என் மாணவர். அப்போது என் முந்தைய வழக்கப்படி புகைப்படக்கருவியையும் ஒலிப்பதிவுக் கருவியையும் உடன் எடுத்துச் சென்றிருந்தேன். புகைப்படம் எடுப்பதற்கோ பாடல்களைப் பதிவுசெய்வதற்கோ அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லாது போயிற்று. து. இராதா அவர்கள், என்னுடன் இருந்தார்.

திருமணத்தின்போது பாடல்கள் எல்லாம் பாட மாட்டீர்களா என்று நான் கேட்டபோது இரவில்தான் அதிக ஆட்டமும் பாட்டமும் இருக்கும். நீங்கள்தான் வரவில்லையே என்றதுடன் உங்களுக்காக வேண்டுமானால் இப்பொழுது ஆடிக்காட்டுகிறோம் என்று மக்களை அழைத்து, ஆடியும் பாடியும் காட்டினார். அவற்றையும் திருமணத்தையும் முழுமையாகப் புகைப்படம் எடுத்தேன். பல்வேறு கேளிக்கைகளோடு திருமணம் நிறைவுற்றது.

திருமண முடிவில் அனைவரும் உண்டுவிட்டு ஓரிடத்தில் அமர்ந்திருக்க து.இராதா அவர்களிடம் நான் எதற்காகவெல்லாம் பாடுவீர்கள். கதைகள் இருக்கின்றனவா? பிறப்பு முதல் இறப்புவரையிலான நிகழ்வில் என்னென்ன செய்வீர்கள் என்று விசாரித்தபோது நாங்கள் எல்லா நிகழ்வுகளுக்கும் ஆடுவோம் பாடுவோம். எல்லாமே பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் இருக்கும் என்றதுடன் அங்கு அமர்ந்திருந்த பெண்களை ஒன்று சேர்த்து நடுநாயகமாகத் தான் இருந்து அவர்களைப் பற்றிய பாடலையும் பாடிக் காட்டினார். “ஆனமல அடவிக்கிருக்கும் ஆதிவாசி நாங்களய்யா” என்ற, இப்பாடல்தான் நான் அவர்களிடம் கேட்டுப் பதிவு செய்த முதல் பாடல். பிறகு வால்பாறையில் உள்ள பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ந்து ஆய்வுத்திட்டம் ஒன்றை உருவாக்க எண்ணி முன்வரைவுக்கு உதவியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதி அவர்களிடமிருந்து, வால்பாறையைச் சுற்றிலும் வாழும் பழங்குடியின மக்கள் பற்றிய தகவல்களைப் பெற்றேன். அதோடு வால்பாறையில் பழங்குடியின மக்கள் தங்கிப் பயிலும் உண்டு உறைவிடப்பள்ளி இருக்கிறதென்று அறிந்தபோது கல்லூரி முடிந்ததும் மாலையில் நானும் கிருஷ்ணாவும் சிலபோது, பிரியாவும் அங்குச் சென்று முதுவன் குடியினைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவதோடு அவர்களைப் பாட வைத்து அப்பாடல்களையும் ஒருபக்கம் பதிவு செய்து வந்தேன். எப்போதும் கிருஷ்ணா என்னுடன் இருப்பார்.

எனக்கு, அடிக்கடி நெடுங்குன்றக் குடிலுக்குச் செல்ல முடியா விட்டாலும் ஞாயிறு வாரச்சந்தை நாட்களில் நெடுங்குன்றுப் பழங்குடி மக்கள் வால்பாறைக்கு வரும்போது பார்த்துப் பேச முடிந்தது. வாய்ப்பு கிடைத்துச் செல்லும் போதெல்லாம் பதிவு செய்த கருத்துக்களைத் தோழர் சேகர் அவர்களிடம் கொடுக்க அவர் ஒலிப்பதிவுக் கருவியிலிருந்து தகவல்களைப் பதிவிறக்கம் செய்து அவற்றை ஒன்று சேர்த்து ஒரு கோப்பாக மாற்றி எனக்குக் கொடுத்தார். தொகுப்பூதியத்தில் பணியாற்றிவந்த தோழர் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் பணி கிடைத்ததும் தன்குடும்பத்துடன் கோவைக்கு இடம்பெயர்ந்தார். பதிமூன்று ஆண்டுகாலம் கழித்தும் இன்றைக்கு நான் அப்பதிவுகளை எடுத்து பயன்படுத்துவதற்குக் காரணம் தோழர்தான் என்றால் அது மிகையாகாது.
இதற்கிடையே எனக்கு ஏப்ரல். 25 அன்று சென்னையில் திருமணம் நடந்தது. என் துணைவர் என் பொருட்டு பணிமாறுதல் பெற்று வால்பாறை வந்ததும் என் ஆய்வுப் பணிக்குள் அவரையும் சேர்த்துக் கொண்டேன். ஆனால் முன்போல நெடுங்குன்றுக்கு நடந்து செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது. அடுத்தடுத்து, இரு குழந்தைகளின் வரவால் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் பத்திரப்படுத்தி வைத்தேன். 2013-இல் ஈரோட்டிற்குப் பணிமாறுதல் கிடைக்க குடும்பத்துடன் இடம்பெயர வேண்டியதாயிற்று. நான்காண்டுகளுக்குப் பிறகு 2017-இல் மீண்டும் வால்பாறைக்கு வந்தபோது மொழிப்பாடம் மட்டுமாக இருந்த எங்கள் தமிழ்த்துறையில் முதன்மைப் பாடமான தமிழ் இலக்கியம் கொண்டுவரப்பட்டிருந்தது.

து.சரண்யா
இரண்டாமாண்டிற்கு வகுப்பெடுக்கச் சென்றபோது தான். நெடுங்குன்றிலிருந்து பழங்குடியினப்பெண் ஒருவர் படிக்க வருகிறாள். அவள் பெயர் து.சரண்யா என்று தெரிய வந்தது. இருந்தாலும் என் பணி சார்ந்து கல்லூரியில் வழங்கப்பட்ட பொறுப்புகளில் உடனடியாக அவளுடன் நெருங்கிப்பேசும் வாய்ப்பை நான் முதலில் உருவாக்கிக் கொள்ளவில்லை.
ஓராண்டு கழிந்த நிலையில், சரண்யா வகுப்பில் முதல்மதிப்பெண் பெரும் மாணவி. அவள் சரிவர கல்லூரிக்கு வருவதில்லை. படிப்பும் குறைந்துவிட்டது என்று வகுப்பாசிரியர் தமிழ்க்கனி என்னிடம் புகார் தெரிவித்தபோது துறைப்பொறுப்பில் இருந்த காரணத்தால் சரண்யாவை அழைத்துப் பேசினேன். படிக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துவிட்டு வால்பாறைக்கு வந்த புதிதில் உங்களைத் தெரிந்து கொள்வதற்காக நெடுங்குன்றிற்குத் தான் வந்திருப்பதையும் பாடல் ஆடல்களைப் பதிவு செய்திருப்பதையும் தெரிவித்ததோடு என்னிடமிருந்த புகைப்படங்களையும் காட்டிப் பேசிக்கொண்டிருந்துபோதுதான் எனக்குத் தெரிந்தது. நான் அவர்கள், பள்ளிக்குச் சென்றபோது விழாவில் செய்தித்தாள் வாசித்துக் காட்டிய மூன்றாம் வகுப்பு மாணவிதான் சரண்யா என்பது. இருவருக்குமே மகிழ்ச்சி.
என்னிடம் இருந்த அவளுடைய சிறுவயது புகைப்படத்தைக் காட்டியதுடன் அவளுக்கும் அதனைக் கொடுத்தேன். அப்போதுதான் என் ஆய்வு தொடர்பாகவும் அது தொடராமல் விட்டுப்போனதையும் மனந்திறந்து பேசமுடிந்தது. ஆயினும் அவளது படிப்பு குறைந்துவிட்டதைச் சுட்டிக்காட்டி அம்மாவை கல்லூரிக்கு அழைத்துவரும்படி கூறி அனுப்பினேன். சொன்னபடியே சரண்யாவின் அம்மா வந்தபோது என்னை அறிமுகம் செய்யவேண்டியதாக இருந்தது. பத்தாண்டுகளுக்குள். அத்தனை மாற்றம் தோற்றத்தில் எனக்கு.
சரண்யாவின் அம்மாவிற்கோ வயதாகியிருந்ததே தவிர தோற்றத்தில் மாற்றம் இல்லை. அப்படியே இருந்தார். நான் பேசியதில் அவருக்கு என்னை அடையாளம் தெரிந்தது. எப்படியாவது மகள் படித்து நல்லபடியாக இருக்கவேண்டும் என்ற ஆர்வமும் படிக்கக்கூடியவள்தான் ஆனால் படிக்க மறுக்கிறாள் என்று ஆதங்கப்பட்டபோது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தேன். அன்றுமுதல் சரண்யா பொறுப்பு என்னுடையதானது.
முன்பை விட வனவிலங்குகளின் பெருக்கம், அச்சுறுத்தல் ஒருபக்கம் என்றால் விடாது பெய்யும் மழையினால் என் வீட்டிலிருந்தபடியே, கல்லூரிக்கு வர ஏற்பாடு செய்தேன். ஞாயிற்றுக் கிழமைகளில் குடிலிலிருந்து அவர்களுடைய அம்மா வருவார் அல்லது இவள் குடிலுக்குச் செல்வாள். மழையில்லாத போது, குடிலில் இருந்தும் கல்லூரிக்கு வருவாள். இப்படித்தான் என் குடும்பத்தாருக்கும் சரண்யாவின் குடும்பத்தாருக்கும் இடையே நல்ல நட்பறவு ஏற்பட்டது. இந்த நட்புறவுதான் இத்தொகுப்பு வெளிவருவதற்கும் காரணமாக இருந்தது. அவர்கள் மொழியில் சொல்லப்பட்ட கதைகளைச் சரண்யா தமிழில் எழுதித் தந்தார். கதைகளின் ஊடாக வரும் பாடல்களில் இடம்பெறும் சொற்களுக்குப் பொருள் தெரியாத போது புரிந்து கொள்வதற்கு ஏதுவாக சொற்பொருள் கேட்க, அதையும் எழுதினார். பாடல்கள் பெரும்பாலும் தமிழிலேயே இருக்க, கதை அவர்கள், மொழியில் சொல்லப்பட்டது. என்னால் எழுத முடிந்த பாடல்களை நானே எழுதினாலும் சரிபார்ப்பதற்குச் சரண்யாவிடம் காட்டுவேன். சிலபோது, அவள் எனக்குச் சொற்களை உச்சரித்துக் காட்டி திருத்தம் செய்வாள். இப்படியாகக் கதைகளைத் தொகுத்தோம்.

நெடுங்குன்று மட்டுமல்லாது, தாய்முடியில் உள்ள கல்லார் குடில் மக்களிடமும் சென்று களஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது. களஆய்வின்போது சரண்யா இல்லாவிட்டால் அவர்களிடம் தகவல் பெறுவதே பெரும் சிராமம்தான். ஏனென்றால் தங்களுக்குத் தெரிந்தாலும் அவ்வளவு எளிதில் அவர்கள் அவற்றைச் சொல்வதற்கு விரும்புவதில்லை. தானாக முன்வந்து, தகவல் சொல்பவர்களும் இருக்கிறார்கள். இதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர் கல்லார் குடிலைச் சேர்ந்த மாலதி. அவர் மகள் வீரலட்சுமி. அவர்களுடைய பாட்டி சுந்தரி என்கிற சூரி. இவர்கள் அனைவரும் சரண்யாவின் உறவினர்கள். நான் அவர்களிடம் கதை கேட்கும்போது, அவர்கள் மொழி எனக்குத் தெரியாது என்பதனால் சில நேரங்களில் தமிழில் சொல்வார்கள். அல்லது தமிழில் சொல்லட்டுமா எங்கள் பாஷையில் சொல்லட்டுமா என்று கேட்பார்கள்.
நான் அவர்களிடம் எந்த மொழியில் உங்களுக்குக் கதைசொல்ல வருமோ அந்த மொழியிலேயே சொல்லுங்கள் எனக்குப் பிரச்சனை இல்லை என்பேன். தமிழில் சொல்லும்போது அவர்களுக்குச் சிரமம் ஏற்படுவதை அறிந்திருப்பதால் அவர்கள் மொழியிலேயே சொல்லவைத்தும் பதிவு செய்திருக்கிறேன். சரண்யா உடனிருப்பதால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைதானே.
இதுவரை நெடுங்குன்று மற்றும் தாய்முடியில் உள்ள பழங்குடியின மக்களிடம் களஆய்வு செய்யப்பட்டுள்ளது. கள ஆய்வில் நான் தெரிந்து கொண்டது, இளைய தலைமுறையினர் தகவல்களைத் தெரிந்து வைத்திருந்தாலும் சொல்வதற்குத் தயாராக இல்லை ஒன்று. இரண்டாவது பெரும்பாலானவர்களுக்குத் தகவல் தெரியவில்லை. தெரிந்த பெரியோர்களில் மங்கம்மா பாட்டியைத் தவிர்த்து யாரும் தங்கள் குடிலிலேயே இருப்பதுமில்லை. இருப்பவர்களுள் சிலர் தங்கள் பணிகளை ஒதுக்கிவிட்டு எங்களோடு அமர்ந்து பேசுவதற்கும் விரும்புவதில்லை. வரும்போதும் போகும்போதும் நான் பாட்டியோடு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அருகில் வந்து பேசுவதற்குத் தயாராக இருப்பதில்லை. இப்படித்தான் கதைகளைத் தொகுத்து வருகிறோம்
பெரும்பான்மையான கதைகளைக் கூறியவர் சரண்யாவின் பாட்டி மங்கம்மா அவர்கள்தான். அவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் மறைந்தது பெருஞ்சோகம். சரண்யாவின் அம்மா தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவதோடு களப்பணியின்போது எங்களோடு சில நேரங்களில் உடன்வருவார்.
இச்சூழலில் ஒரு நாள் சகோதரி முனைவர் வி. பவித்ரா அவர்கள் “உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்த்தாய் – 71, தமிழாய்வுப் பெருவிழாவின் 28-ஆவது நாள் விழாவில் அம்மாவின் ஆட்சியில் அருந்தமிழ் வளர்ச்சி மற்றும் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா அறக்கட்டளைகளின் சார்பாக சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்று நூல்களும் வெளியிடப்பட உள்ளன. அதனால், உங்கள் கதைத் தொகுப்பை நீங்கள் நிறுவனத்திலேயே வெளியிடலாம்” என்று சொல்லவும் பெரிய நிறுவனத்தில் எங்கள் தொகுப்பு வெளிவரப் போகிறது என்பதால் நானும் சரண்யாவும் கல்லூரி முடித்து வந்ததும் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எல்லாம் கதையைப் புரிந்து கொள்வதற்கு ஏற்றவாறு காட்சிப்படுத்த வரையத் தொடங்கினோம். சரண்யா நன்றாக வரைவார். பாடவும் செய்வார். அவர் கதையின் தொடக்கத்திலிருந்து வரைய, நான் இறுதிக் கதையிலிருந்து வரைந்தேன்.
சகோதரி முனைவர் வி. பவித்ரா அவர்கள் நிறுவனத்தில் பேச வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தார். 28.02.2019 அன்று காடரின் கதையும் அறமும் எனும் தலைப்பில் நிறுவனத்தில் சொற்பொழிவாற்றினேன். சொற்பொழிவின் முடிவில் காடரின் கதைகள் (வில்லோனி நெடுங்குன்ற காடர் இன மக்களின் கதைகள்) எனும் தலைப்பில் 21 கதைகள் அடங்கிய இத்தொகுப்பு நூல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டது. ஆனால் நாளதுவரை அச்சிடப்படாத காரணத்தினால் தமிழ் உலகம் பயன்பெறாமலேயே இருக்கின்றது. இதனால் இயக்குநரிடம் பேசவும் இயக்குநர் அவர்கள் நிறுவன முகவரி மாற்றாது வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறவும் கடிதம் ஒன்றை நிறுவன மின்னஞ்சலுக்கு அனுப்பி தனியாக இந்நூலை நான் வெளியிட்டுக் கொள்கிறேன் என்று தகவல் அனுப்பி வைத்தேன். பின்னர் தமிழாய்வு அறக்கட்டளையின் நிறுவனர் சூளுர் திரு சிவக்குமார் அவர்கள் இக்கதைத் தொகுப்பை வெளியிட இசைவு தெரிவித்தார். நூல் வெளிவரவில்லை.
கல்லூரியிருந்து பல்கலைக்கழகத்திற்குப் பணிமாறுதல் பெற்று 18.02.2022 அன்று முதல் பல்கலைக்கழகத்தின் தொலைமுறைக் கல்விக்கூடத்தில் பணிசெய்து வருகிறேன். இச்சூழலில் மீண்டும் ஒருமுறை சிவக்குமார் அவர்களிடம் நினைவுபடுத்தியபோது அவர் வெளியிடுவதாக உறுதியளித்து கடிதம் ஒன்றை அனுப்பினார். நான் அதை முன்னெடுக்காது விட்டுவிட்டேன். இச்சூழலில்தான் இத்தொகுப்பிலிருக்கும் கதைகளை ஒவ்வொன்றாகப் பொற்றாமரை இதழில் வெளியிட தோழர் கவிதா மணாளனிடம் கேட்டபோது அவர் அனுமதி அளித்தார். பொற்றாமரை பதிப்பாசிரியருக்கும் தோழர் கவிதா மணாளனுக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.
காடரினக் கதைகள் எனும் தொகுப்பில் இடம்பெற்ற இப்பகுதி சில மாற்றங்களுடன் இங்கு வெளியிடப்படுகின்றது. அதுபோல கதைகள் தொகுப்பில் உள்ளபடி அல்லாமல் கதை சொல்வது போல மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் பார்வைக்குக் கதை தொடரும்…
…………………

Leave a comment