கட்டுரைத்தொடர்

சொல்லில் சுடரும் காட்சி
ஜி. சிவக்குமார்
கவிஞர் கண்ணதாசன் போன்றவர்கள் எப்போதாவது அரிதாக, மிக அரிதாக நிகழ்கின்ற ஒரு அதிசயம்.

அவரது வாழ்வனுபவங்களும், இலக்கியச் செறிவும் திரைக் கதைக்குள் நுழைந்து வெளி வருகையில் ஓராயிரம் பாடல்களாகப் பிரிகின்ற அழகை எவ்வளவு பேசினாலும் தீராது.
திரைப்படங்களின் காட்சியை அப்படியே பாடல் வரிகளில் கொண்டு வருவதில் கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன்தான்.
- நாளை என்ன திதி? என்று கேட்ட முதலாம் சரபோஜி மன்னனிடம், அபிராமி பட்டர், பக்திப் பரவசத்தில் பௌர்ணமி என்று சொல்கிறார். தனது கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக் கொண்டு அபிராமி சந்நிதி முன் ஆழமான ஒரு குழியை வெட்டி, அதில் விறகை அடுக்கி தீ மூட்டி, அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாடினார் என்பதை நாம் அறிவோம். ஆதிபராசக்தி திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தக் காட்சிக்கான பாடலில் இப்படி எழுதுகிறார்.
வானில் சுடர் வருமோ?
எனக்கு இடர் வருமோ?
நில்லடி முன்னாலே,
முழு நிலவினைக் காட்டு
உன் கண்ணாலே
என்று கவியரசர் சொன்ன பிறகும் ஆதிபராசக்தி தன் காதணியைக் கழற்றி நிலவென ஒளி வீசச் செய்யாமல் இருக்க முடியுமா?
- அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததற்காக விற்கப்பட்ட ஒரு மருத்துவனை, அடிமையாக வாங்குகிறான் தீவின் அதிபதி. விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமையின் நல்ல குணங்களால் கவரப்பட்டு அவன் மீது மையல் கொள்கிறாள் இளவரசி. அடிமையாக உள்ள தனது தோழர்களோடு எந்த நேரமும் தப்பிச் செல்வதற்காகக் காத்திருக்கும் அவனோ அவளைத் தவிர்க்கிறான். கண்ணீர் விட்டு கசிந்துருகும் அவளை மறுதலித்து இப்படிப் பாடுகிறான் அந்த அடிமை.
நாடாளும் வண்ண மயில்
காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில்
ஆயிரத்தில் நான் ஒருவன்
கடைசி வரி, அந்தத் திரைப்படத்தின் தலைப்பு என்பது கூடுதல் சிறப்பு.
- திருமணப் பந்தத்தில், கணவன் மனைவி உறவு மட்டுமே இறுதி வரை நிலைத்திருக்கக் கூடியது. பிள்ளைகள் இடையில் வருவார்கள். இடையில் விலகிப் போய் விடுவார்கள். வியட்நாம் வீடு திரைப்படத்தில், பிரஸ்டீஜ் பத்மநாதனுக்கும் அவர் மனைவிக்கும் அதுதான் நேர்கிறது. தனித்து விடப்பட்ட கணவன், இதுவரையிலான தங்கள் குடும்ப வாழ்வினை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து, தன் மனைவியைப் பார்த்துப் பாடுகிற உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலில், இந்த வரிகளைப் பாருங்கள்.
வேரென நீயிருந்தாய் அதில் நான்
வீழ்ந்து விடாதிருந்தேன்.
- ஒரு நற்காலம் இருந்தது. ஒரு குடும்பத்தின் அத்தனை சகோதரர்களும் ஒரே குடும்பமாக இன்ப துன்பங்களைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டு வாழ்ந்த பொற்காலம். ஆயிரம் குறைகளும், மனக் கசப்புகளும் இருக்கும்தான். ஆனால் ஒருவரையொருவர் அனுசரித்து மகிழ்வோடு வாழ்ந்த காலம். அப்படியொரு காலத்தின் அழகிய அடையாளமாக, நான்கு சகோதரர்களின் அன்பை, பாசப் பிணைப்பைப் பேசுகிற அன்புச் சகோதரர்கள் படத்தில், ‘முத்துக்கு முத்தாக’ பாடலில் இந்த வரிகள் எத்தனை அழகு.
ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம் போல் நாங்கள் கொண்ட சொந்தமடா
- வெல்ல முடியாத வழக்குரைஞராகப் பெரும் புகழோடிருக்கும் தனக்கு எதிராக, தான் வளர்த்து ஆளாக்கிய தம்பி மகன், நீதிமன்றத்தில் வழக்காட வரும் வேதனையை, இருதலைக் கொள்ளி எறும்பாக இருவருக்குமிடையே பாசப் போராட்டத்தில் தத்தளிக்கும் தன் மனைவியுடன் பகிர்ந்து கொள்ளும் பாலூட்டி வளர்த்த கிளி பாடலில் இப்படி எழுதுகிறார்
நான் வளர்த்த பச்சைக்கிளி
நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா
கச்சேரி என்கிற வார்த்தைக்கு நீதிமன்றம் என்று ஒரு பொருள் வழக்கில் இருந்ததையும் அறிந்து கொள்கிறோம் அல்லவா?
- பிழைக்க வழியற்ற கொடும் நோயால் உயிருக்குப் போராடும் கணவன். கணவனுக்கு, அந்த மருத்துவமனையில் சிகிட்சையளிக்கும், மருத்துவனோ, அவனது மனைவியின் முன்னாள் காதலன். இவர்களின் நிறைவேறாத காதலை அறிந்த கணவன், தான் மரணமடையும் முன் இருவரையும் சேர்த்து வைக்க விரும்பி, அதை மனைவியிடமும் சொல்கிறான். அதைக் கேட்டு அதிர்ந்த அவள் பாடும், சொன்னது நீதானா? சொல், சொல், சொல் என்னுயிரே பாடலில் இந்த வரிகளில் தனது மனதை அப்படியே உருக்கி வார்த்தைகளில் வார்க்கிறாள்.
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா?
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா?
- அண்ணன், தங்கை பாசத்தைப் பேசிய திரைப்படங்களின் உச்சமல்லவா பாசமலர். மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே பாடலில், அண்ணனைப் பிரிந்த பெருந்துயரில் துடிக்கும் தங்கை தன் சின்னஞ் சிறு மகளிடம் கேட்கிறாள்.
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா?
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா?
- ராஜபார்ட்டாக நாடகங்களில் நடித்துப் பெரும் புகழ்பெற்ற அண்ணன், . தனது ஏழ்மையான குடும்பச் சூழலை மறைத்து வசதியானவனாகத் தன்னைக் காட்டிக் கொண்டு, ஒரு பணக்கார வீட்டில், அந்தக் குடும்பத்துப் பெண்ணைக் காதலித்துத் திருமணத்திற்குக் காத்திருக்கும் தம்பி. இருவரும் சந்திக்கும் போது, அண்ணனின் மீது அவனது திறமைக்காகப் பெருமதிப்பு வைத்திருக்கும் அந்தப் பணக்காரத் தந்தையின் வற்புறுத்தலுக்காகப் பாடலொன்றைப் பாடியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில், தம்பியை நினைத்து கசந்த மனதுடன், அம்மம்மா, தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான் எனத் தொடங்கிய அண்ணன் இப்படிப் பாடுகிறான்.
அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளையல்லவோ
இந்த ராஜபார்ட்டு ரங்கதுரை ஏழையல்லவா
- தனது திறமையால், முயற்சியால், கண் முன்னே மனைவி வாழ்வில் முன்னேறிக் கொண்டேயிருக்கிறாள். அதைக் கண்டு பூரிக்க வேண்டிய கணவனோ, தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிக்கிறான். அது இருவருக்குமிடையேயான உறவிலும் விரிசலை உண்டாக்கி குடும்பத்தின் நிம்மதியை சீர்குலைக்கிறது. சூரியகாந்தி திரைப்படத்தில், பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது. கருடா சவுக்யமா?பாடலில் இந்த வரிகளை எழுதிய கண்ணதாசனே, திரைப்படத்திலும் பாடுவதாக நடித்திருப்பது எத்தனை பொருத்தம்.
நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவும் வானும் போலே
நான் நிலவு போலத் தேய்ந்து வந்தேன்
நீ வளர்ந்ததாலே - கொலை செய்து விட்டு ஊரை விட்டு ஓடி, அடையாளங்களை மறைத்து வாழ்ந்தவன், எளிதில் அடையாளம் காண முடியாதபடி செல்வச் சீமானாக, திரும்பத் தன் ஊருக்கு வருகிறான். தன் மகளையும் சந்திக்கிறான். அவனின் அடையாளத்தை உறுதி செய்யத் துடிக்கும், அவனது முன்னாள் நண்பனான காவல் அதிகாரியின் முன்னால் தன் சொந்த மகளிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத துயரை இப்படிப் பதிவு செய்கிறான் ஞான ஒளி திரைப்படத்தில் தேவனே என்னைப் பாருங்கள் பாடலில்.
உங்கள் மந்தையிலிருந்து
இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன.
இரண்டும் சந்தித்த போது
பேச முடியவில்லையே
- ராஜா என்றொரு திரைப்படம். காவல் துறையினரின் துரத்தலில் தப்பிப்பதற்காக, கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை நாயகி, நாயகனிடம் தருகிறாள். சுற்றிலும் காவல்துறையினர் நின்றிருக்க, மறுநாள் வந்து அதைப் பெற்றுக் கொள்வதாகக் கூறுவதாகக் காட்சி. காதலனும் காதலியுமாய்ப் பாடுவதைப் போல அமைக்கப்பட்டுள்ள பாடலில் கொள்ளையடிக்கப்பட்ட வைரங்கள் கைமாறும் செய்தி புதைக்கப்பட்டுள்ள பாடல் வரிகளைக் கவனியுங்கள்.
இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்
கொள்ளையில் இருவரும் பங்கு பெறுவோம்.
இந்த வரிகளையும் பாருங்கள்.
பெண் : வைரமென்றே என்னை நீ பாடு
ஆண் : வாங்கிக் கொள்வேன் அதைக் கையோடு
பெண் : தந்தது பிறருக்குத் தெரியாது
ஆண் : சந்தித்த ரகசியம் புரியாது
பெண் : நாளையும் மனம் உன்னைத் தேடி வரும்
நான் தரும் ஆனந்தம் கோடி பெறும்
- பாகப்பிரிவினை படத்தில், உடல் ஊனமுற்ற நாயகன், தாழையாம் பூ முடிச்சு என்ற அற்புதமான பாடலில், தன்னை மணந்த நாயகியைப் பார்த்துக் கேட்கிறான்.
அங்கம் குறைந்தவனை, அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா
வீட்டில் மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
அதுவரை மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டிருந்த நாயகியின் முகம் இந்த வரிகளைக் கேட்டதும் சட்டென்று மாறி விடுகிறது. பின், நாயகி இப்படிச் சொல்கிறாள்
மண் பார்த்து விளைவதில்லை
மரம் பார்த்துப் படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
என்ன அழகான, அர்த்தம் பொதிந்த பதில்.
- நேர்மையான காவல்துறை அதிகாரியின் மகன், துயர் முரணாக ஒரு சமூக விரோதியாகிறான். அவரைத் திட்டமிட்டு அவமானப்படுத்துவதே தன் வாழ்வின் லட்சியமென்று சூளுரைக்கிறான். தன் மருமகளிடம் காவல் துறை அதிகாரி பாடுவதாக அமைந்த தங்கப் பதக்கம் திரைப்படப் பாடலான, சோதனை மேல் சோதனை பாடலின் இந்த வரிகளில் எத்தனை துயர்.
தானாடவில்லையம்மா சதையாடுது – அது
தந்தையென்றும் பிள்ளையென்றும் உறவாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது – அதில்
பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது.
அடி தாங்கும் உள்ளமிது இடி தாங்குமா?
இடி போல பிள்ளை வந்தால்
மடி தாங்குமா?
பாடல் காட்சிகளைத் தவிர ஒரு திரைப்படத்தின் எந்த இடத்திலும் நம்மைப் பொருத்திக் கொள்ள முடிந்த, நம் வாழ்வைப் பேசிய அழகான கதைகள் இருந்தன. அந்தக் கதைகளை மிகவும் நேர்த்தியாகத் திரைப்படமாக்கினார்கள். அந்தத் திரைப்படங்களில் கதைகளை அர்த்தப்படுத்தும் காட்சிகள் இருந்தன. அந்தக் காட்சிகளை அற்புதமான வார்த்தைகளில் திரைப்படப் பாடலாக்கினார்கள். அதில் கண்ணதாசனுக்கு மிக மிக முக்கியமான இடம் இருக்கிறது.
இந்த அற்புதங்களையெல்லாம் அறிந்திராமல், எந்தப் பாடலையும், எந்தத் திரைப்படத்திலும் வைக்கலாம் என்கிற அளவு திரைப்படப் பாடல்களும், திரைப்படங்களும் மாறிப் போன அவலத்திற்குப் பழகிவிட்ட இந்தத் தலைமுறையை நினைத்தால், ஒரு பெருமூச்சு வழிகிறது.
தொடரும்…
*******

Leave a comment