பிரபஞ்சன் எனும் கலகக் குரல்
ம.வீ. ரமேஷ்குமார்
முனைவர்பட்ட ஆய்வாளர்
பாலக்காடு, கேரளா.
vmmramesh@potraamarai
பேச: 93844 39983

“தமிழ்ச் சிறுகதையின் நூற்றாண்டு மரபு வாசகனிடம் சில எதிர்பார்ப்புகளைக் கொண்டுவந்து சேர்த்துள்ளது. படைப்பாளியிடம் குறிப்புணர்த்தும் பண்பினை அவன் எதிர்பார்க்கிறான். வாசகன் மீது, அவன் வாசகத்தன்மை மீது, படைப்பாளி நம்பிக்கை கொள்ள வேண்டும். கதை முடிந்த பின்னும் வாசக மனதில் விரிவினை அடைந்தாக வேண்டும். இன்றைய வாசகனின் எதிர்பார்ப்புகள் இவை” என்று நவீன இலக்கிய வாசிப்பு குறித்து கவனப்படுத்துகிறார் எம்.வேதசகாயகுமார்.
இலக்கிய விமர்சன மதிப்பீட்டு அளவைகளாக வடிவம், நோக்கு, கரு ஆகியவற்றோடு கதைகளுக்குள் புனையப்படும் மௌனம் முக்கிய அலகாவது போல, பிரதிக்கு வெளியே உள்ள வாசகத் தன்மை குறித்த கவனம் தேவை. ஒவ்வொரு படைப்புக்கும் வாசகன் உண்டு. படைப்பின் முதல் வாசகன் படைப்பாளி. வாசகன் பல்வேறு தன்மையுடையவன். பல்வேறு துறை சார்ந்த அறிவு கொண்டவன். எனவே தம் படைப்பு யாருக்கானது, எதற்கானது என்பது உட்பட இன்னபிறவற்றையும் படைப்பதற்கு முன் தேர்ந்து தெளிந்து தீர்மானித்துக் கொள்வது படைப்பாளிக்கு அசாத்தியமான காரியம். ஒரு நல்ல படைப்பு தன்னைத்தானே எழுதிக் கொள்கிறது. படைப்பாளி அதன் புறக் காரணி மட்டுமே.
“ஆசிரியரின் மரணத்தை முன்னிட்டு வாசகனின் பிறப்பு நிகழ்கிறது. ஒரு பிரதி என்பது எண்ணற்ற கலாச்சார மையங்களின் சிந்தனைகளிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள் என்ற திசுக்களால் உருவாக்கப்பட்டது. மொழிதான் பேசுகிறது; ஆசிரியன் அல்ல”
என்று சொல்லி, இலக்கியத் திறனாய்வை அறிவியல் தன்மை கொண்டதாக மாற்றினார் ரோலாண் பார்த். மேற்கத்திய அறிவு பரவலாக்கம் மனிதகுலச் சிந்தனையில் புத்துயிர் பாய்ச்சியக் காலத்தில் இக்கருத்து திறனாய்வு, படைப்பு ஆகியவற்றில் புதிய தரிசனங்களை (vision) உருவாக்கின. இதனை உள்வாங்கிக் கொண்டதுபோல, தமிழ் இலக்கியப் படைப்பு வெளியில் ஒரு புதிய குரல் ஒலிக்கத் தொடங்கியது.
மரபின் புறக்கணிப்புகள் மீதான கவனம் 1930-களில் தொடங்கி, அறுபதுகளில் வீரியம் அடைந்தது. இந்தக் கவனத்திற்கு ‘நவீனம்’ என்று பெயர். நவீனத் தமிழ் இலக்கியத்தில் பிரபஞ்சன் வருகை அறுபதுகளை ஒட்டியது.
“வார்த்தைகள் எல்லோரிடமும் இருக்கின்றன. வார்த்தைகள் மூலமாகத்தான் நம்மை விளங்கிக் கொள்ள விதிக்கப்பட்டிருக்கிறோம் அல்லது சபிக்கப்பட்டிருக்கிறோம். நான் வார்த்தைகளால் நிரம்பியிருக்கிறேன். ஆகவே நான் பேச விரும்புகிறேன்”
என்று அறிவித்த பிரபஞ்சன், படைப்பு செயல்பாட்டில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கியவர். புதுச்சேரி தந்த பல முக்கிய ஆளுமைகளில் கவிதைக்குப் பாரதிதாசன் என்றால் புனைகதைக்குப் பிரபஞ்சன் என்று சொல்வதில் மிகையேதும் இல்லை. பாரதிதாசனைக் கொண்டாடத் தவறாத தமிழ்ச் சமூகம் பிரபஞ்சனையும் கொண்டாடத் தவறாது என்பது என் நம்பிக்கை. இலக்கியம் வளர்ப்பவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் கொண்டாட மறந்ததில்லை. என்ன காலம்தான் சின்னம் சிறிதாகத் தாமதமாகிவிடும். அதற்குப் படைப்பாளி ஒரே ஒரு முறையேனும் இறந்திருக்க வேண்டும். அவ்வளவுதான்.
பிரபஞ்சன் என்ற புனைபெயரில் அறியப்பட்ட வைத்தியலிங்கம் புதுச்சேரியில் பிறந்தவர். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்து, கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவர். 1995-ல் இவர் எழுதிய வரலாற்றுப் புதினமான ‘வானம் வசப்படும்’ தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இப்புதினம்.
இவருக்குப் ‘பிரபஞ்ச கானகன்’ என்ற பெயரை, கோவையில் இயங்கிய ‘வானம்பாடி’ கவிதை இயக்கம் சூட்டியது. கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து 2010-ஆம் ஆண்டில் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் ‘பிரும்மம்’ கதையை ‘இலக்கியச் சிந்தனை’ மாதாந்திரப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்தார். அதே கதையை 1982-ஆம் ஆண்டின் ‘இலக்கியச் சிந்தனை’ விருதுக்கு உரிய கதையாக அறிவித்தவர் கரிச்சான் குஞ்சு. தமிழ் இலக்கிய உலகில் பிரபஞ்சனின் வருகையை வாசகப் பரப்பிற்கு அறிவித்த நிகழ்வு இது.
நற்றிணையில்(172), தலைவி – தலைவன் சந்தித்துப் பேசும் இடத்தில் தலைவியின் சகோதரியாக ‘புன்னை மரம்’ இருப்பதாகத் தோழி குறிப்பிடுகிறார். இந்தப் பாடலில் மரம் சகோதிரியாகச் சித்தரிக்கப்பட்ட தொன்மம் பிரும்மம் கதையில் நவீனமாகி நிற்கிறது.
பிரபஞ்சனின் முதல் சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகியன மூன்றும் ஒருங்கே 1961-ஆம் ஆண்டில் பிரசுரமாகின. எனினும் “1968 தொடங்கி பிரக்ஞையோடும் படைப்பு மனோபாவத்தோடும் எழுதத் தொடங்கினேன்” என்கிறார் பிரபஞ்சன். ‘பிரக்ஞை’ என்றால் என்ன? ‘படைப்பு மனோபாவம்’ என்பது யாது? இவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
உணர்வு, மனம், நினைவு, தெளிவு, விழிப்புணர்வு உள்ளிட்ட பொருண்மைகள் பிரக்ஞை என்பதற்கு அகராதிகள் தரும் விளக்கங்கள். ஆன்மீகச் சொற்களில் சொல்வதானால் உள்ஒளி எனலாம். இவை எல்லாம் ‘தன்னை அறிதல்’ என்பதாக பிரக்ஞை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
“சுயம் என்பது மற்றமையால் கட்டமைக்கப்படுகிறது” என்கிறார் மிஷல் ஃபூக்கோ. மற்றமை என்பது, தான் புழங்கும் சமூக வெளி, குடும்பம், உறவு, நண்பர்கள், மொழி, பண்பாடு எனச் சகலமும் சேர்ந்தது.
படைப்பு மனோபாவம் வெறுமனே Creative mind, Creativity எனும் ஆங்கில சொற்களோடு சுருங்கிவிடுவதில்லை. மொழியின் மரபார்ந்த சிந்தனையின் தொடர்ச்சிக்கு இதில் முக்கிய இடம் உண்டு. அதோடு பண்பாட்டு விழுமியமாக அடையாளப்படும் அந்தந்த மொழிசார்ந்த தனித்தப் பண்புகளை உட்கொண்டதாகவும் அவற்றைக் கண்டடைந்து வெளிப்படுத்துவதாகவும் அதனைப் பேணிக் காப்பதாகவும் படைப்பு மனோபாவம் அமையவேண்டும்.
என்றால் பிரபஞ்சனின் பிரக்ஞை யாது? அவர் கண்டடைந்த அல்லது மரபில் இருந்து பெற்றுக்கொண்ட தனித்துவமான படைப்பு மனோநிலை எது?
தமிழின் மிகச் சிறந்த பண்புகளில் ஒன்று உயிர்நேயம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றுதான் வள்ளுவர் பாடினார். ‘காக்கை குருவி எங்கள் ஜாதி; நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்றார் பாரதியார். இந்தப் பண்பு தமிழின் அடையாளங்களுள் மிக முக்கியமானது. இந்தப் பண்புதான் ‘நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’.
பிரபஞ்சன் படைப்புகளில் இந்தப் பண்பு மேலோங்கி நிற்கிறது. ‘பிரும்மம்’ என்ற கதை அதற்கு ஒரு சிறந்த உதாரணம். வீட்டில் நட்டு வளர்த்த முருங்கை ஒரு மழைநாளில் சாய்ந்து, மீண்டும் துளிர்க்கிறது. அந்தக் கதையைப் பிரபஞ்சன் இப்படி முடிக்கிறார்;
“துண்டாகி நின்றிருந்த மரத்திலிருந்து ஓர் இடத்தில் சின்னதாய்க் கிளைத்திருந்தது…
உயிர்தான்”.
மற்றொரு கதையாக ‘குழந்தை அழுதுகொண்டே இருந்தது’ கதையைச் சொல்லலாம். கதைச்சுருக்கம் இதுதான்: பூனை குழந்தைமாதிரி அழுவதை எண்ணி துயருற்று அலைவுறும் ஒரு தூய மனதை உடைய எ.வி.எஸ்.பெருமாள் எனும் மருத்துவரைப் பற்றியது. மது போதையில் பூனையின் சத்தத்தைக் குழந்தையின் அழுகுரல் என்றெண்ணி அவர் இறந்தும் போகிறார். அப்படியொரு தூய மனது யாருக்கு வாய்க்கும். போதையில் தடுமாறிய மனது என்று பலரும் இதனை விமர்சிக்கலாம். பூனை சத்தத்தைக் குழந்தையின் அழுகுரலாக நினைக்காதவர் தான் எவரேனும் உண்டா? பூனையின் சத்தத்தைக் குழந்தை என்றெண்ணி அழும் எ.வி.எஸ்.பெருமாள் வேறு யாருமல்ல படைப்பாளி தான். இது ஒருவகையான படைப்பு மனோநிலை.
அந்தக் கதையில் பிரக்ஞை உண்டா என்றால்? உண்டு.
“பாவப்பட்ட குழந்தை” என்றாள் நர்ஸ்.
பெருமாள் “என்ன?” என்றார்.
“இந்தப் பொம்பிளை, குழந்தையை வாடகைக்கு விடறவ டாக்டர். வாடகைக்கு எடுக்கிற பெண்கள், குழந்தையைக் காட்டிப் பிச்சை எடுப்பாங்க. சும்மா இல்லை. துடையில் ரகசியமா கிள்ளி குழந்தையை அழ வைப்பாங்க. ….”
என்று எழுதுகிறார். சமூக நடத்தை குறித்த ஓர்மையும் ‘பிரக்ஞை’ தானே?
உண்மையில் பிரபஞ்சன் ஆசிரியர் ஆவதற்கே விருப்புற்றிருந்தார். அவர் அளவுக்குப் படைப்புக்களில் கல்விநிலையச் செயல்பாடுகளை விமர்சித்தவர் வேறுயாருமில்லை என்றே சொல்லலாம். தான் நேசிக்கும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் வாய்ப்பைப் பறிக்கும் திருமணத்தைப் புறக்கணித்து வாழ்நாள் முழுவதும் டீச்சராக வாழ்ந்து தன் சொத்துக்களைப் பள்ளி விடுதிக்குத் தானமாகக் கொடுக்கும் ஆசிரியரைக் “கமலா டீச்சர்” கதையில் படைத்துள்ளார்.
புதுச்சேரியில் பாரதி டுடோரியல் சிறப்புத் தமிழ் ஆசிரியராக இருக்கும் காலத்தில் அவருக்கு ஒரு தந்தி வருகிறது. தந்திப்படி சென்னை வந்துசேர்கிறார். வந்தது ஆசிரியர் பணிக்கோ, படைப்பாளி ஆவதற்கோ அல்ல. திரைத்துறையில் கிடைத்த வாய்ப்புக்காக. வந்தவர் சந்தித்த இன்னல்களை ‘மாநகரத் தெருக்களில்’ என்ற கட்டுரையிலும் ‘தலை சாய்க்க’ என்ற சிறுகதையிலும் எழுதியுள்ளார்.
‘கூட்டுப்புழுக்கள்’ கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் கங்கைகொண்டான் இயக்கும் தமிழ் படத்தின் துணை இயக்குநர் வாய்ப்புதான் பிரபஞ்சனுக்கு வந்த தந்தி. அந்தப் படத்தில் இரண்டாம் நாயகி வேடத்தில் நடித்த பெண் பற்றிய கதை தான் ‘ஒரு மனுஷி’.
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் முகநூலில் பிரபஞ்சன் பற்றி எழுதியதன் ஒரு பகுதியை அந்திமழை (செப்.2023) இதழ் செய்திச் சாரலில் வெளியிட்டிருந்தார்கள்.
‘எனக்கு பதினாறு வயதானபோது அப்பா ஒரு நல்ல நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுத்தார். அதன் பளபளப்பான ஒற்றைகளைக் கிழித்து காதல் கடிதங்கள் எழுதத் தொடங்கினேன். அப்படி காதல் கடிதங்கள் எழுதியே அரைவாசி நோட்டுப் புத்தகம் முடிந்து போனது. காரணம் நான் அப்போதெல்லாம் ஒரு கொள்கை வைத்திருந்தேன். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஒரு காதல் கடிதம் கொடுக்க வேண்டும் என்று”
அதில் இருந்தது. இதனை வாசித்துகொண்டிருந்த வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு. 72வயது இளைஞர் செல்லத்துரை (முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஓய்வு), கவிஞர் இளையவன் சிவா ஆகியோரால் முன்னெடுக்கப்படும் “உடுமலை இலக்கியக் களம்” கூட்டத்தில் பிரபஞ்சனை நினைவுகூரும் வாய்ப்பு. நேர மேலாண்மை, மதிப்புரைக்குத் தேர்ந்தெடுக்கும் நூல்கள் எனப் புதுமை காட்டி, இலக்கிய வட்டச் செயல்பாடுகளின் பொதுபுத்தியைத் தகர்த்து இயங்கும் இலக்கிய அமைப்பு அது என்பதை, ‘வெயில் மேயும் நீர்ப்புலி’ கவிதைத் தொகுப்பின் ஆசியர் கவிஞர் சோலைமாயவன் வழி அறிமுகமானது.
காதல் கடிதம் எழுதிய பிரபஞ்சன் படைத்துக் காட்டிய பெண்கள் யதார்த்த வாழ்க்கையின் சகல இன்னல்களுக்கு ஆட்பட்டவர்கள். எனினும் அவர்களின் மனக் குமுறலை வாசகனை உணரச் செய்யும் செய்நேர்த்தி பிரபஞ்சன் படைப்புகளுக்கு உண்டு.
‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’ கதையின் ஒரு காட்சியில் பேன்ட் போட்ட அந்தப் பத்தாம் வகுப்பு மாணவி, சிரமப்பட்டு சம்மணம் போட்டு உட்கார்ந்து வெங்காயம் நறுக்கும்போது அவருடைய பள்ளி தமிழ் ஆசிரியர்; நீ வெங்காயம் நறுக்கித் தர்றியே? வேடிக்கையா இருக்கு என்கிறார். அதற்கு அந்தப் பெண் சொல்கிறார்:
“இதுதான் சார் த்ரில்லிங்கா இருக்கு. கண்ணிலே நீர் சுரக்கச் சுரக்க வெங்காயம் நறுக்குவது பயங்கரமான எக்ஸ்பீரியன்ஸ்”
என்று.
“உங்கள் விருப்பம், உங்கள் ஈடுபாடு, உங்கள் சுதந்திரம் சார்ந்து வாழ ஆசைப்படுவீர்கள் எனில், நீங்கள் மந்தையில் இருந்து தனித்துப்போன ‘கறுப்பு ஆடு’ ஆகிறீர்கள்”
என்று மரி ‘ஆட்டுக்குட்டியாக’ படைக்கப்பட்டதை ‘வன்முறையைப் பயிற்றுவிக்கும் வகுப்பறைகள்’ கட்டுரையில் விளக்குகிறார். இதே கதையில் மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியரைத் தோலுரித்துக் காட்டி, பள்ளி நிர்வாகத்தை விமர்சிக்கவும் செய்கிறார்.
‘ஆண்களும் பெண்களும்’ நாவலில், ஒரு பெண் தேவாலயம் சென்று கர்த்தர் முன் மண்டியிட்டு வேண்டுகிறாள்:
“குளிப்பதற்கு ஒரு மறைவான இடம் தாரும் ஏசுவே”
இந்த வரிகளை ‘எழுத்துலகில் பிரபஞ்சன் ’55’ நிகழ்வில் ச.தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டிருப்பார். பிரபஞ்சனின் பெண் பற்றிய தனித்தச் சிந்தனை முக்கியத்துவம் வாய்ந்தது.
குடும்பம், குறிப்பாகப் பெண்களின் படைப்புத் திறனையே அழித்து விடுகிறது. இருட்டறையில் புசிக்கப்பட்டு உமிழப் படுகிறார்கள். எத்தனை பெரிய மானுட நஷ்டம் இது. என் ஆசை, குமாரசாமிக்கு மட்டும் அல்ல குமாரிகளுக்கும் இது நேர வேண்டும். (‘பறவைகள் பாடாத பகல்பொழுது’)’
என்று எழுதுகிறார். பெண்கள் கவனித்து படிக்க வேண்டியது பெண்ணியம் பேசும் பெண் படைப்பாளிகளின் படைப்புகளை மட்டுமா?
புதுமைப்பித்தன் ‘பால்வண்ணம் பிள்ளை’ என்று ஒரு கதை எழுதியுள்ளார். குழந்தைகளின் பால் தேவைக்காக மாடு வாங்கி வளர்க்கும் பெண்ணுக்கு இல்லறம், குறிப்பாக ஆண் அதிகாரத்தால் ஏற்படும் நெருக்கடியை அக்கதை பேசுகிறது. அந்தக் கதையின் இறுதியில் மாடு விற்கப்படும். “சும்மாக்கெட சவமே” என்று கதை முடிகிறது. பெண் விருப்பத்திற்கும் அவள் இருப்புக்கான சமூக மதிப்பை வெளிச்சம்போட்டுக் காட்டும் கதை பால்வண்ணம் பிள்ளை.
இதனைப் பிரபஞ்சன் வேறுமாதிரி எழுதிப் பார்த்த கதைதான், ‘மனுஷி’ என்று குறிப்பிடுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். அந்தக் கதை, ‘அவளும் மனுஷி தானே’ என்று முடிகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் இவ்விரு கதைகளுக்கு இப்படியொரு வாசிப்பைத் தருகிறார். மேலும் புதுமைப்பித்தனின் பகடி, எள்ளல், தனித்துவமும் தி.ஜானகிராமனின் இசை, கலை, நுண்மை, காமமும் சேர்ந்தது பிரபஞ்சனின் எழுத்துப்பாணி என்று அவர் குறிப்பிடுகிறார்.
உயிர்கள் மீது அன்பும் கருணையும் நியாய உணர்வும் மிக்க மனிதர்களை தன் எழுத்தில் படைக்க முற்பட்ட பிரபஞ்சன், தனது வாசிப்பிற்குக் கிடைத்த சமகால படைப்புகள் குறித்து பேசியும், எழுதியும் பாராட்டி வந்தவர்.
“ஆக பெரிய பத்திரிகைகளின் குரல்களுக்கு எதிராக ஒரு கலகக் குரலின் அவசியம் உருவாகிறது. ஆலைச்சங்கின் வேகத்தோடு ஒரு குரல் இருந்தாலும், சிட்டுக்குருவியின் அளவுக்காவது ஒரு எதிர்ப்புக்குரலின் அவசியம் உணரப்படுகிறது. உருவ அமைப்பும், குரலின் பலமும் முக்கியமன்று. இக்கட்டத்தில் ஒரு குரல் எதிராக எழுந்தது என்று பதிவாவது முக்கியம். இலக்கியத்தின் காத்திரத்தன்மையைப் பழுதுபடாமல் காக்கவும், முன்னெடுத்துச் செல்லவும் இவை கூக்குரலிட்டு உழைத்தன என்று உணரப்படுவது முக்கியம். இவ்வகையில் சிறுபத்திரிகைகளைக் கலகப் பத்திரிகைகள் என்று அழைப்பதில் தவறில்லை. (பாவண்ணன்- ‘மேலும்’ இதழ் கட்டுரை)
‘எண்பதுகளின் சிறுபத்திரிகைகளும் சிறுகதைகளும்’ எனும் இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் சிறுபத்திரிகைகளின் பங்களிப்பு குறித்த தெளிவைத் தரும். வணிக நோக்கோடு வெளிவரும் இதழ்களில் காத்திரமான படைப்புகள் சமீப காலமாகக் குறைந்துகொண்டே வருகிறது. இந்தக் குறிப்பின் வழியாக வேறொன்றைச் சிந்திக்கலாம். அதற்குப் பிரபஞ்சன் எழுதிய சில கதைகளைக் குறிப்பிடவேண்டும்.
‘பாதுகை’ என்ற கதை, வக்கீல் பொன்னுத்தம்பிப்பிள்ளை நீதிமன்றத்திற்கு சப்பாத்துகள் அணிந்துவர நீதிபதியால் தடை விதிக்கப்படுகிறது. அதனை எதிர்த்து வழக்குத் தொடுக்கிறார் பொன்னுத்தம்பி. இறுதியில் வழக்கில் வென்று, வழக்காடு மன்றத்திற்கு சப்பாத்துகள் அணிந்து வருகிறார். அவருடைய வெற்றி ஒட்டுமொத்த வக்கீல்களின் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி கதையின் களம். இது உண்மையில் நடந்த வரலாற்று நிகழ்வு. பிரபஞ்சன் அதை சிறுகதையாகப் படைத்துள்ளார்.
நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் கிரேசியா டெலடாவின் ‘செருப்பு’ என்ற கதை குறித்தும் செம்மார் எனும் காலணி செய்யும் தொழிலாளர்கள் குறித்தும் இராமனின் செருப்பு நாடு ஆண்டதையும் தனக்கே உரிய எள்ளல் நடையில் ‘ஒரு செருப்பின் கதை’ எனும் கட்டுரையில் எழுதும் பிரபஞ்சன் தான் வாங்கிய புதுசெருப்பு திருட்டுப் போன கதையையும் குறிப்பிடுகிறார்.
மற்றொரு கதை, ‘வெளியேற்றம்’. சாதியத்திடம் தோற்று ஓடிய இந்து சாமியாராக ஆத்மானந்தாவைப் படைத்துள்ளார். மடத்தின் முக்கிய நிர்வாகியான நரசிம்மனின் மகளும் சேரியைச் சேர்ந்த சோமுவும் காதலிக்கிறார்கள். மடத்தின் சொத்து நிர்வாகிகளின் குடும்பத்தினருக்குப் பங்குபோடப்படுகிறது. மகளின் காதல் தந்தைக்குத் தெரியவர, சேரி கொளுத்தப்படுகிறது. உடன்போக்குக்குத் தயாரான சோமுவையும் அவன் காதலியையும் தன் காரில் தப்பிச்செல்ல ஆத்மானந்தா உதவுகிறார். அவர்களை மடக்கிப் பிடித்த கும்பல் சோமுவை அடித்து தீயில் வீசி கொலை செய்கிறது. இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாத ஆத்மானந்தா மடத்தை விட்டும் அது சார்ந்திருந்த மதத்தை விட்டும் வெளியேறுகிறார். இருட்டு என்று தொடங்கும் இக்கதை, இருட்டு சுத்தமாக அகன்றிருந்தது என்று முடிகிறது. கவிஞர் தேவதேவனின்;
“இரண்டு மாபெரும் உண்மைகள்.
நான்தான் கடவுள் என்று உணர்ந்த
ஒரு தருணமும்
நான் முழுமையாய் அழிந்தபோது இவ்வுலகம்
பேரமைதியில் ஜொலித்ததும்”.
என்ற கவிதை நினைவுக்கு வரக்கூடும்.
கிறிஸ்தவ சாதி முறையை விமர்சிக்கும் ‘சகோதரர் அன்றோ’ இஸ்லாமிய பிற்போக்குத்தனம் குறித்து ‘இப்ராஹிம் எனும் வள்ளல்’, கருப்பனை ஏமாற்றும் பூசாரி முத்துப்பாண்டியை ‘அமானுடன்’ எனும் கதையிலும், கோவிலை விற்பதும் வாங்குவதும் குறித்து ‘ஓடாத பிள்ளையாரும் ஓடிய காவேரியும்’ உள்ளிட்ட பல கதைகளில் பிரபஞ்சனின் குரல் கலகக் குரலாக ஒலிக்கிறார்.
கடையினும் கடைக்கோடியில் நசுக்கப்பட்டு அதிகாரக் கோலோச்சலால் சுயம் அற்றுக்கிடந்த சகலத்தின் மீதான உரையாடல்களை நவீனர்கள் முன்னெடுத்தனர். கலை, இலக்கியம், வரலாறு, தத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இப்படியான புதுப்பார்வைகள் உருவாகின.
“பிரதிகளில் இயங்கும் மரபார்ந்த இலக்கியப் பிரதிகள் கோரும் அர்த்தம், ஒழுங்கு ஆகியவற்றிற்கு எதிராகப் போராடும் குணம் முக்கியமானது; ஒரு தீவிர இலக்கியம் தன்னைத்தானே கேள்விக்குட்படுத்திக்கொள்ள வேண்டும்; அதேபோல் தன்னை ஒழுங்குபடுத்தும் மரபுகளையும், கலாச்சாரத்தையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பிரதியில் புரட்சியின் வீரியம் இருக்க முடியும்”.
என்கிறார் ரோலான் பார்த். அப்படி தன் படைப்புகளில் வீரியம் மிக்க செயல்பாடுகள் கொண்டதாகப் படைத்தவர் பிரபஞ்சன். பிரபஞ்சன் இறந்த சமயத்தில் யாரோ அவரைச் சாதாரண கதைகள் எழுதியவர் என்று குறிப்பிட்டதாக நினைவு.
வீட்டுக் கூரைகளின் தாழ்வாரங்களை விட்டு விலகி நின்றால் வானத்தையும் வானில் உள்ள நிலா, நட்சத்திரங்களையும் பார்ப்பது எளிமை. சாதாரணம். அதேசமயம் வானத்தின் கீழ் நின்று எல்லா வீட்டுக் கூரைகளிலும் உள்ள கிழிசல்களையும் ஒட்டடைகளையும் பார்த்துவிடுவது கடினம். பிரபஞ்சனின் பார்வை கிழிசல்களின் மீதும் ஒட்டடைகளின் மீதும் படிந்த பார்வை.
பறக்கும் கம்பளங்களை எவரும் எழுதிட முடியும். மனித வாழ்க்கையை அகழ்ந்து பார்க்க கொஞ்சம் மனித நேயமும் நிறைய அன்பும் தேவை. அப்படி வாழ்க்கையை அதன் போக்கில் அகழ்ந்தகழ்ந்து பார்த்து, பாமரனுக்கும் புரியும் மொழியில் எழுதியவர் பிரபஞ்சன். எழுத்து வேறு வாழ்க்கை வேறாக என்றில்லாமல் இரண்டும் ஒன்றாக வாழ்ந்து காட்டியவர்.
“கலையின் பணி உலகத்தைப் பற்றி விவரித்துக் கூறுவதல்ல. மாறாக, உலகை விமர்சிப்பதும், கேள்விக்குள்ளாக்குவதும் மட்டுமே கலையின் பணியாக இருக்க முடியும்”.
என்கிறார் ரோலாண் பார்த். கலையைப் பிரபஞ்சன் இப்படித்தான் பார்த்தார் என்பதை அவர் படைப்புகளை வாசிக்கும் எவரும் உணரலாம். சிறுபத்திரிகைகள் குறித்த மேற்கோளில் குறிப்பிடப்படும் எதிர்ப்புக் குரலின் அவசியம் உணர்ந்த கதைகளாக பிரபஞ்சன் படைப்புகள் உள்ளன.
பிரபஞ்சனைத் தொடக்கநிலை வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய அவருடைய இறுதிக் காலத்தில் உடன் இருந்து கவனித்துக் கொண்ட பி.என்.எஸ்.பாண்டியன் தேர்வில் தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு நூலையும், ந.முருகேசபாண்டியன் தேர்வில் தொகுக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பு நூலையும் பரிந்துரைக்கலாம். இந்நூல்களை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது. இவ்விரு நூல்கள் தொடக்கநிலை வாசகனுக்கு பிரபஞ்சனை உணர சிறந்த வாயில்களாக அமையும். 260 சிறுகதைகள் அடங்கிய மூன்று தொகுப்புகளை இந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பிரபஞ்சனின் ‘இடம்’ என்ற கதையில்:
“எந்த மண் மனிதர்க்குச் சொந்த மண்? பிறந்த மண்ணா? வளர்ந்த மண்ணா?
என்ற உரையாடல் பகுதி வரும். புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சென்னை மற்றும் தஞ்சாவூரில் கழித்தார். பிரபஞ்சன் 2018 டிசம்பர் மாதம் 21-ஆம் நாளில் காலமானார். அவர் மறைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவாகிறது.
எந்த மண் பிரபஞ்சனுக்குச் சொந்த மண் பிறந்து வளர்ந்த புதுச்சேரியா? வாழ்ந்த தஞ்சாவூர், சென்னையா? எந்த மண் சொந்த மண்? அவரே பதில் சொல்கிறார்:
“எங்கே நேசிக்கும் நெஞ்சங்கள் இருக்கின்றனவோ அதுவே சொந்த மண்”
இப்படியாக பிரபஞ்சனை நேசிக்கும் நெஞ்சங்கள் உலகெங்கிலும் உண்டு. அவர்களை எல்லாம் சந்தித்திட முடியுமா என்று தெரியாது. இந்தக் கட்டுரை வழியாக அவரை நேசிக்கும் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
(உடுமலை இலக்கியக்களத்தில் நிகழ்த்தப்பட்ட பொழிவின் எழுத்துவடிவம்)

Leave a comment