புதுக்கவிதையில் பின்நவீனத்துவக் கூறுகள்

இ. கலைக்கோவன், ஈரோடு
இலக்கியம் என்பது இலக்கை நோக்கி இட்டுச் செல்வது; இலக்கை இயம்புவது; இலக்கை மையமாகக் கொண்டு படைக்கப்படுவது; என்று இலக்கை மையப்படுத்தி விளக்கம் அளிக்கப்படுகிறது. அப்படியான இலக்கியம் படைப்பாளனின் தனித்தன்மைக்கு ஏற்பவும் நுட்பமானப் வெளிப்பாடுகள் மூலமும் பலவகையான வடிவங்களை பெற்று வெளிவரும் தன்மை பெற்றது. அது பெரும்பாலும் நாடகம், சித்திரம், ஓவியம், நடனம், இசை போன்ற கூறுகளைத் தவிர்த்து எழுத்தாக வெளிவரும் போது பெரும்பாலும் இரண்டு நிலைகளிலேயே வெளிவருகிறது. ஒன்று செய்யுள் வடிவம். மற்றொன்று உரைநடை வடிவம்.
இந்த வடிவங்களைக் காலமாற்றமும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் தீர்மானம் செய்தன என்பது வரலாறு. ஆனால் இந்த வடிவத்திற்குள்ளான மையக் கருவானது ஒற்றைத் தன்மை உடையதாக இருந்தது. அத்தன்மையைச் சமூக மாற்றம் தீர்மானிப்பதாக இருந்தது. அந்த வகையில் புதுக்கவிதை அல்லது நவீன கவிதை என்பது நவீன அறிவியல் கண்டுபிடிப்பால் அமையப்பெற்ற வடிவமாக நமக்குக் கிடைத்த கொடை. மனனம் செய்ய ஏற்ற வகையில் அமையப்பெற்ற கவிதை அச்சு இயந்திரத்தின் உதவியால் கருத்தைத் தாங்கி நிற்கிற எழுத்து வடிவ மாற்றத்தோடு வந்து சேர்ந்ததே அதன் வரலாற்றுக் குறிப்பு. அப்படி வாய்க்கப்பெற்ற நவீன கவிதையும் தன் கருவின் கூறுகளை சமூகப் போக்குகளிலிருந்து பெற்றுக்கொண்டது. அக்கூறுகளில் ஒன்றுதான் ‘பின்நவீனத்துவம்’ என்பது.
தமிழ்ச் சூழலில் பின்நவீனத்துவம் என்ற சொல்லாடல் “பின்னை நவீனத்துவம்“ என்றும் வழங்கப்படுகின்றது. இந்தப் பின்நவீனத்துவம் என்ற இலக்கிய அமைவு மிகவும் பிற்பகுதியில் சேர்ந்த இலக்கியத் தத்துவக் கோட்பாடு. அதே சமயம் இதனை முழுமையாகத் தத்துவக் கோட்பாடு என்று வழங்கவும் முடியாது. இது ஒரு கோட்பாட்டை எதிர்த்தெழுந்த எதிர்வினை. ‘நவீனத்துவம்’ என்ற கோட்பாட்டை எதிர்த்து உருவான எதிர்வினை. எனவே நாம் பின்நவீனத்துவத்தை முழுமையாக அறிய வேண்டுமென்றால் நமக்கு நவீனத்துவம் பற்றிய அறிதல் அவசியமாகிறது. ‘நவீனத்துவம்‘ ஒரு இலக்கியக் கோட்பாடு என்றால் அதற்கு முன்பாகக் கோட்பாடுகள் இருந்துள்ளனவா? ஆம் இருந்தன. அவை பெரிய வரிசைகட்டி நின்றன. செவ்வியல், புனைவியல், இயற்பண்பியல், யதார்த்தவியல், சீர்திருத்தவாதம், பயன்பாட்டுவாதம், இருப்பியல்வாதம், பிராய்டியவாதம், வருங்காலத்துவம், குறியீட்டியல், கருத்துப் பதிவுக்கலைத்திறனியம், படிமவியல்வாதம், சுழற்சி இயக்கக் கோட்பாடு, அகத்திறப் பாங்கியல், டாடாயிசம், அடிமனம் மற்றும் புறயியல்பு சார் கோட்பாடு, கனசதுரக் கோட்பாடு, நவீனத்துவம், அமைப்பியல் பின்னை அமைப்பியல், என்று இத்தனை இத்தனை கோட்பாடுகள் இலக்கியக் கருவினைத் தீர்மானித்தன. நவீனத்துவக் கோட்பாடுகளும் இக்கூறுகளில் அடங்கியுள்ளன. இவை இலக்கியத்தைத் தீர்மானித்தாலும் இக்கோட்பாடுகளைத் தீர்மானித்தது சமூகத்தின் மனிதகுல வரலாறே ஆகும். எனவே பின்நவீனத்துவப் புரிதல்களுக்குள் போவதற்கு முன் மனிதகுல வரலாற்றினை அறிந்து கொண்டு அதன் வழி கோட்பாடுகளைப் பொருத்திப் பின்நவீனத்துவத்தை நாம் கண்டடைவோம்.
மனித குல வரலாறு:
மனித குல வரலாற்றை நான்கு நிலைகளாக உலகம் வெளிப்படுத்துகிறது.
- வரலாற்று அடிப்படை – பழைய கற்காலம், புதிய கற்காலம் தொடங்கிய ஆய்வியல் பார்வை
- உயிரியல் அடிப்படை – டார்வின் முதலான பல்வேறு அறிவியல் அறிஞர்களின் ஆய்வியல் பார்வை.
- சமூகவியல் அடிப்படை – மார்க்ஸ் முன்வைத்த பார்வை.
- பண்பாட்டு அடிப்படை – மானுடவியல் பார்வை
மேற்குறிப்பிட்ட பார்வைகள் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்றுவரையிலுமாக அவன் அடைந்து வந்திருக்கிற வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டவை. இவற்றில் இலக்கியம் மிக நெருக்கமாகப் பொருந்திப் போகிற தன்மையானது மார்க்ஸ் முன்வைத்த சமூகவியல் பார்வையோடு. அதனுடன் மற்ற பார்வைகள் பொருந்தாதா என்றால் பொருந்தும். என்றாலும் படைப்பானது சமூக இயங்கியலுடன் நெருங்கிய தன்மை கொண்டதானால் மார்க்சின் பார்வையிலிருந்து இங்கே பொருத்திப் பார்ப்போம்.
மார்க்சின் மனிதகுல மாற்றம் என்பது, ஆதிப் பொதுவுடைமை சமூகம், அடிமைச்சமூகம், உடைமைச் சமூகம், முதலாளியச் சமூகம், பொதுவுடைமைச் சமூகம் என்று வளர்நிலை மாற்றத்தை உடையது. இதை மார்க்சிய சமூகவியல் கண்டுபிடிப்பாகவே உலகம் ஏற்றுக்கொண்டது. இக்கண்டுபிடிப்பானது மனித குலம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை அடைந்துள்ள மாற்றங்களைக் குறிப்பிடுவனவாகும். இச்சமூகக் கட்டுமானத்தின் அடிப்படையிலேயே மனிதப் படைப்புகளும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. பொதுவாக இப்படிப் படைப்புகள் வெளிவருவது இயல்பானதும் கூட. இதனடிப்படையில் இலக்கியங்களை நோக்கும் போது ஏற்படுகிற தன்மையை அந்தந்த தன்மைக்கேற்ப கோட்பாடாகப் புரிந்து கொள்ள முடியும். அதோடு பின்நவீனத்துவக் கோட்பாடு எச்சமூகக் கட்டமைப்பில் உருவாகியது என்றும் அது இலக்கியங்களில் எப்படி வெளிப்பட்டது என்பதையும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.
மார்க்சின் மனிதகுலச் சமூகத்தில் ஆதிப் பொதுவுடைமை என்பது நாடோடி வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. அக்காலப் படைப்புகள் இயற்கையோடு மனிதனுக்கு உண்டான பிணைப்பு, பயம், தேவை, மகிழ்ச்சி போன்றவற்றை உள்ளடக்கியதாக வெளிப்படும். இரண்டாவதான உடைமைச் சமூகக் காலகட்டப் படைப்பென்பது ஆண்டான் அடிமை மனநிலை, படைப்புகளை உண்டாக்கிய காலகட்டம். தன் வாழ்வின் பாடுகள் அனுபவித்தே கடக்கக் கூடியது. அது விதியின் தன்மையால் நிகழ்வது என்று சமூகம் நம்பியதன் விளைவாக அதனை ஒட்டிய சிந்தனையுடைய படைப்புகளை வழங்கியது. அடுத்ததான முதலாளியச் சமூகம் அடிமைகளைப் பெற்றிருந்தாலும் இது முந்தைய சமூகம் போல முழுமையான அடிமைகளைக் கொண்டிருக்கவில்லை. இது சுதந்திரக்கூலிகள் என்னும் அடிமை முறையினை வரையறுத்த சமூகம். இதில் அடிமைகளின் மொத்த வாழ்வும் முதலாளிகளுக்குத் தேவையாக இல்லை. அது சுமையாகக் கருதப்பட்டது. மாறாக அவர்களின் உழைப்பு மட்டும் தேவையென உணரப்பட்ட காலகட்டம். எனவே மேற்சொன்னவை சார்ந்த கலவையான படைப்புகள் அக்காலகட்டத்தில் வெளிவரத் தொடங்கின. இதைத் தொடர்ந்து அடையப்போகிற சமூகமாக மார்க்ஸ் முன்வைத்தது பொதுவுடைமைச் சமூகம். எனவே அக்காலம் என்பது பொதுவுடைமை பார்வையிலான படைப்பைத் தாங்கி நிற்கும் என்பது திண்ணம். நிற்க.
இந்த இடத்திலிருந்து நாம் பின்நவீனத்துவம் பற்றிப் பேசுவோம். முன்னர்க் கூறியது போல பின்நவீனத்துவம் என்பது நவீனத்துவத்தை எதிர்த்து உருவான கோட்பாடு. நவீனத்துவம் என்பது மரபினைக் கேள்வி கேட்டு உருவானது. இந்த மரமென்பது ஆதிப்பொதுவுடைமைக்கு அடுத்து உருவான அடிமை, மற்றும் உடைமைச் சமூகத்தின் வெளிப்பாடு. மரபினை எதிர்த்துருவானது நவீனத்துவம் என்பதால் இது உடைமைச் சமூகத்திற்கு அடுத்தான பகுத்தறிவும், அறிவியலும், அறவியலும், நவீனமும் இணைந்த முதலாளியச் சமூகத்தின் வெளிப்பாடாகத் தோன்றியது. நவீனத்துவம் என்பது அறிவொளித் தன்மை என்பது மாத்திரமல்ல அது அமைப்பியல் கட்டமைப்பாகவும் மையம் சார்ந்த சிந்தனை உடையதாகவும் இருந்தது. உதாரணமாக அடிமைப்பட்ட தேசத்தின் மக்கள் தாங்கள் அடிமைப்பட்டுக்கிடப்பது விதியால் என்று எண்ணுவது அடிமைச் சிந்தனை. அந்த அடிமைத்தன்மையை ஒன்றுபட்டு எதிர்த்தால் உடைக்கலாம். நமக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து ஒரு மையப்புள்ளியில் நாம் ஒன்றிணைவது விதியை உடைக்க உதவும். அதற்கு நாம் அமைப்பாய்த் திரள்வது அவசியம். விதி மூடநம்பிக்கை; நம் போராட்டம் பகுத்தறிவு; என்று மையத்தை நோக்கி அனைவரையும் ஒன்றிணைத்த சிந்தனை நவீன சிந்தனையாக உணரப்பட்டது. அந்தச் சிந்தனையின் அடிப்படையில் உருவான படைப்புகள் நவீனத்துவப் படைப்புகளாகப் பார்க்கப்பட்டன. அக்காலகட்டமே நவீனத்துவக் காலகட்டமாக உணரப்பட்டது. இது முதலாளியச் சமூகத்தோடும் பொதுவுடைமைச் சமூகத்தோடும் பொருந்தியும் உள்ளமுங்கியும் இருந்தது.
தமிழ்ச் சூழலில் நவீனத்துவத்தைப் பாரதியின் கவிதையோடு பொருத்திப் பார்க்க முடியும். தமிழ்ப்படைப்புலகத்தில் பாரதி நவீனத்தின் அடையாளமாகப் பார்க்கபடுகிறார். எனவேதான் அவருடைய பாடல்களில் நவீனத்தின் கூறுகளான மையப்படுத்தப்படுவது பற்றியும், அமைப்பாய்த் திரள்வது பற்றியும் மிகுதி காண முடியும்.
“பாரதநாடு பழம்பெருநாடு
நீர் அதன் புதல்வர்
இந்நினைவகற்றாதீர்….“
இதுவே நவீனத்துவம். இந்த நவீனத்துவத்தின் நிராகரிப்பு; இந்த நவீனத்துவத்தின் பின் நிகழ்வு; இந்த நவீனத்துவத்தின் மறுபிறப்பு; இந்த நவீனத்துவத்தின் அடுத்தகட்டம்; இந்த நவீனத்துவத்தின் இறப்பே பின்நவீனத்துவத்துவமாக உணரப்படுகிறது.
இதையே ‘டேவிட் ஹார்வி‘, “பின்னை நவீனத்துவத்திற்கு இதுவரை கொடுக்கப்பட்ட விளக்கங்களை யாருமே ஏற்க மறுத்துவிட்டனர். ஆனாலும் பின்னை நவீனத்துவமென்பது நவீனத்துவத்திற்கான எதிர்வினை அல்லது அதன் பண்புநலன்களிலிருந்து வேறுபட்டது என்கிற கருத்துகள் மட்டுமே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நவீனத்துவத்துக்கே ஒரு குழப்பமான விளக்கமானது தற்போது இருக்கும் வேலையில், பின்னை நவீனத்துவத்திற்கு விளக்கமளிக்க முயலும் போது குழப்பமானது மேலும் ரெட்டிப்பாகிறது என்று கூறுவதுடன், ‘டெர்ரி ஈகில்டனின்‘ பின்னை நவீனத்துவமென்பது தன்னைத்தானே விமர்சித்துக்கொள்கிற; அனைத்தையும் கேள்வி கேட்கிற; சந்தேகப்படுகிற; விளையாட்டுக் குணங்கொண்ட கருத்தியல் எனக் கூறலாம்.“ என்கிறார். மிக எளிமையாக நவீனத்துவத்தைக் கேள்வி கேட்கிற எதிர்தத்துவம் ‘பின்நவீனத்துவம்‘ என்று விளங்கிக் கொள்ளலாம். அப்படி என்றால் ‘நவீனத்துவம்‘ மையத்தை நோக்கி அதாவது ‘தேசியத்தை‘ (பாரதி கூறியதுபோல) அனைத்தையும் ஒன்றிணைக்கிறது என்றால், பின்நவீனத்துவமானது மையத்திலிருந்து விலகி விளிம்பை நோக்கி நகர்வதாக அமையும். இரண்டாவது, நவீனத்துவம் அமைப்பாய்த் திரள்வதை உறுதிப்படுத்துகிறது. பின்நவீனத்துவம் அமைப்பைக் கூறுபோடுகிறது. இவற்றின் மூலம் பின்நவீனத்துவம் செய்ய நினைப்பது,
- மக்களுக்கு எல்லாக் காலங்களிலும் பொருந்தி வரக்கூடிய நீதி, உண்மை, பகுத்தறிவு, அறம், தரம் இவையெல்லாம் அடித்தளம் தகர்ந்து ஏதுமின்றித்திரியும் மையமிழந்த மனநிலைமைக்குக் பின்நவீனத்துவம் ஆறுதலாய் இருந்தது. காட்டாக, அறிவினால் ஆக்கம் பெற்றதாய் உலகம் நம்பியபோது அணுக்குண்டால் பேரழிவு ஏற்பட்டது. அப்போது அறிவியலின் மீது நம்பிக்கையிழந்த மனநிலைக்குக் பின்நவீனத்துவம் வடிகாலாய் அமைந்து அறிவியல் என்ற நவீனத்தைக் கேள்வி கேட்டது.
- இதுவரை நவீனத்துவத்தில் நிலவிவந்த, அறிவியல் கோட்பாடுகள், கிறித்துவம், இஸ்லாமியம், இந்துத்துவம், பௌத்தம் போன்ற மதக்கோட்பாடுகள், பிற அறிவியல், அறவியல், மார்க்சியம் போன்ற பிற தத்துவங்களைக் பெருங்கதையாடல் என்று தவிர்த்து, பின்நவீனத்துவம் சிறு கதையாடல்களை முன்வைத்தது. அதற்காக இது கேளிக்கைகள் மற்றும் தற்செயல் நிகழ்வுகளைச் சிறுசிறு கதையாடல்கள் என்ற அடிப்படையில் வெளிப்படுத்தியது. அப்படியானதொரு சிறு கதையாடல் கவிதை பின்வருமாறு,
“ நான் குடிக்கும்போது மட்டும் ரிஸ்க் எடுப்பதில்லை…
அன்று அலுவலகத்திலிருந்து நேராக வீட்டிற்கு வந்தேன்…
மனைவி அடுக்களையில் சமைத்துக் கொண்டிருந்தாள்…
அடுக்களையிலிருந்து உருளும் பாத்திரங்களின்
சத்தம் கேட்டபடியிருந்தன…
நான் சத்தமெழுப்பாமல் வீட்டின் படியேறி வந்தேன்.
கருநிற அலமாரியிலிருந்து பாட்டிலை மெல்ல வெளியே எடுத்தேன்…
தாத்தா மட்டும் ஃபோட்டோ ஃபிரேமிலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால் இப்போது நான் என்ன செய்கிறேனென்று
யாருக்கும் தெரியாது
காரணம் நான் குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை…
பழைய சிங்கின் மேலே
அலமாரியிலிருந்து
கவிழ்த்து வைக்கப்பட்ட டம்ளரை எடுத்து ஒரு பெக் அடித்தேன்.
டம்ளரைக் கழுவி, மீண்டும் அலமாரியின் உள்ளே சரியாக வைத்தேன்…
பாட்டிலை அதே இடத்தில் பத்திரப்படுத்தினேன்.
தாத்தா மட்டும் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.
நான் மெல்ல சமையலறைக்குள்ளே நுழைந்தேன்.
மனைவி உருளைக்கிழங்கை வெட்டிக் கொண்டிருந்தாள்.
இதுவரை நான் என்ன செய்கிறேனென்று
யாருக்கும் தெரியாது,
காரணம்,
நான் குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை…
என் மனைவியிடம் மிக இயல்பாய்க் கேட்டேன்
‘நம்ம நாயர் மக கல்யாணம் என்ன ஆச்சு?’
மனைவி : அது ஒண்ணும் கைகூடி வரல பாவம் அந்தப் பொண்ணு,
ரொம்பப் பரிதாபம் இப்பவும் அவளுக்கு மாப்பிள்ளை
பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்
நான் சட்டென வெளியே வந்தேன்.
கறுத்த அலமாரியிலிருந்து
மெலிதான ஒரு சத்தம் வந்தது.
ஆனால் பாட்டிலை எடுத்தபோது கொஞ்சமும் சத்தம் வராமல் பார்த்துக்கொண்டேன்.
மீண்டும் சிங்கின் மேலிருந்த ரேக்கிலிருந்து டம்ளரை எடுத்தேன்
படபடவென ரெண்டு ரகசிய பெக் அடித்தேன்.
பாட்டிலைக் கழுவி சிங்கிலும் கறுத்த டம்ளரை அலமாரியிலும் வைத்தேன்.
ஆனால் இப்போதும் யாருக்கும் நான் என்ன
செய்கிறேனென்று தெரியாது,
காரணம் நான்… நான்…
குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை.
மீண்டும் நான் மனைவியிடம்
“இல்ல அந்த நாயர் பொண்ணுக்கு இப்ப என்ன வயசிருக்கும்?” என்றேன்.
மனைவி : என்ன மனுஷன் நீ? இதுகூடத் தெரியாம, 28 முடிஞ்சிடுச்சாம்.
இப்ப வயசான எருமையப்போல ஆயிட்டாளாம்…
நான் : ஓ… அப்படியா ம்…
நான் மீண்டுமொரு சந்தர்ப்பத்தை உருவாக்கினேன்.
அலமாரியிலிருந்து
ஓர் உருளைக்கிழங்கை எடுத்தேன்.
இதெப்படியடா கடவுளே!
அலமாரி சத்தமில்லாமல் இருக்கிறது?
நான் ரேக்கிலிருந்து அந்தப் பாட்டிலைக் கவிழ்த்து
சிங்கில் ஒரு பெக் ஊற்றி
ஒரே மூச்சில் அடித்தேன்
தாத்தா இப்போது சத்தமாய்ச் சிரிப்பது எனக்கு மட்டும் கேட்டது
நான் அவசரமாய் ரேக்கை எடுத்து உருளைக்கிழங்கில் வைத்தேன்…
தாத்தாவின் ஃபோட்டோவைக் கழுவி
கறுத்த அலமாரியின் உள்ளே வைத்தேன்…
இவள் என்ன செய்கிறாள்? சிங்கை எடுத்து
அடுப்பின் மேலே வைக்கிறாள்!
ஆனால் இப்போதும் நான் என்ன செய்கிறேனென்று
யாருக்கும் தெரியாது,
காரணம் நான்… நான்… குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை
(இதென்ன கடவுளே விக்கல் வருது!
யார் என்னை நினைக்கிறார்கள்)
நான் கோபமாக மனைவியிடம் : நீ எதுக்காக
அந்த நாயரை எருமைன்னு சொன்னே?
இனி நீ அப்படிப் பேசினா நான் உன் நாக்கை அறுத்துடுவேன்
மனைவி : அய்யோ நான் இப்ப என்ன சொன்னேன்
நீ இப்ப வெளியப்போறதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது.
நான் உருளைக்கிழங்கிலிருந்து பாட்டிலை எடுத்தேன்.
கறுத்த அலமாரிக்குள்ளே போய்
ஒரு பெக் அடித்து
சிங்கைக் கழுவி ரேக்கின் மேலே வைத்தேன்.
இப்போது மனைவி ஃபிரேமிலிருந்து என்னைப் பார்த்து
சிரித்துக் கொண்டிருக்கிறாள்
தாத்தா அடுக்களையில் அவசரமாய்ச் சமைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இப்போதும் நான் என்ன செய்கிறேனென்று
யாருக்கும் தெரியாது
காரணம் நான்… நான்…
குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை.
நான் மனைவியிடம் இயல்பாய் சிரித்தபடி :
இல்ல இந்த நாயர் போயும் போயும் ஏன்
ஒரு எருமையக் கல்யாணம் பண்ணப் போறார்?!!!
மனைவி : அய்யோ என்ன மனுஷன்யா நீ? மொதல்ல மொகம் கழுவிட்டு வா.
நான் மீண்டும் அடுக்களைக்குப் போய்ச் சத்தமெழுப்பாமல்
ரேக்கின் மேலே உட்கார்ந்தேன்
ஆஹா…
ரேக்கின் மேலேயே அடுப்பிருக்கிறதே.
வெளியே அலமாரியிலிருந்து பாட்டில்
அசையும் சத்தம் கேட்கிறது.
நான் எட்டிப் பார்த்தபோது,
அவள் சிங்கின் மேலே உட்கார்ந்து
ஒரு பெக் ஊற்றி
ரசித்துக் குடித்தபடியிருக்கிறாள்!
ஆனால் இதுவரை ஒரு எருமைக்குக் கூட
நான் என்ன செய்தேனெனத் தெரியவில்லை
காரணம், தாத்தா ஒரு போதும் குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை
நாயர் எருமை இப்போது என் வீட்டுச் சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்கிறார்
நான் ஃபோட்டோ ஃபிரேமிலிருந்து என் மனைவியைப் பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
காரணம்…காரணம்…நான் ஒரு போதும்…என்னானாலும்..
ஒரு போதும் உருளைக்கிழங்கை மட்டும் தொட மாட்டேன்”
இக்கவிதையில் பின் நவீனத்துவக்கூறுகளான கேளியும் சிறுகதையாடலும் நிரம்பித் ததும்புவதைக் காணலாம்.
அதே சமயம் நவீனத்தைக் கேள்வி கேட்பதும், அதாவது நவீனம் பெருங்கதையாடலை (தேசியம், மையம்) முன்வைக்கிற போது அந்தப் பெருங்கதையாடலைக் கேள்வி கேட்பதாகவும் பின்நவீனத்துவம் அமைந்தது. யவனிகா ஸ்ரீராமின் ‘ஆறுமுகம் காபி ஓர்க்ஸ் கவிதையை’ அதற்கு உதாரணமாகக் கூறலாம்.
ஆறுமுகம் காபி ஒர்க்ஸ்
எனது தேசம் விடுதலையின் கனவுகளில்
இருந்தபோது பிறந்தவன் நான்
அப்போது ஒரு சந்நியாசி கைத்தடியுடன்
கிழக்கும் மேற்குமாய்ச் சத்தமிட்டபடி அலைந்து கொண்டிருந்தார்
வெகுகாலம் முன்பாகக் கப்பலில் வந்தவர்கள் தங்களால் முடிந்த அளவு
சுருட்டிக் கொண்டதுபோக ஒருநாள் நள்ளிரவில்
நைச்சியமாய்க் கைகுலுக்கி விடைபெற்றுப்போனார்கள்
மக்கள் பெருமூச்சு விட்டபடி தங்களின் விவசாய நிலங்களுக்கும்
நீர்நிலைகளுக்கும் கிராமச் சாலைகளுக்கும் திரும்பினார்கள்.
நான் காப்பிக்
கொட்டைகளைச் சீராக வறுக்கும்
ஒரு இயந்திரத்திற்கு உரிமையாளனானேன்.
எனது நண்பன் உள்ளூர் கைநூற்புகளை நெய்யும்
தறியில் நெசவாளியாக அமர்ந்தான்.
சிலரோ எப்போதும்போல் கழிவறைகளைத் தூய்மை செய்தனர்.
கோவில்களில் மங்கல விளக்குகளும்
ஆலயங்களில் மெழுகின் தீபமும்
மசூதிகளில் பாங்கும் இழைய
எனது தேசம் அணைகளில் பாய்ந்து
ஆலைகளில் உயிர் பெறத் துவங்கியது.
ஒருநாள் வியாபாரி ஒருவன் உரம் கொண்டுவந்தான்
வேறொருவன் புதிய விதையொன்றைக் கண்டுபிடித்தான்.
அதை விற்க ஒருவன் ஆங்காங்கே கடை திறந்தான்
கடைபெருகி வீதியாகி வீடுள்ள தெருவெல்லாம்
விறுவிறுவெனச் சந்தைக் காடானது
இந்த ஏராளச் சந்தைக்கு யார்யாரோ
தாராளமாய்க் கடன் கொடுத்தார்கள்.
இப்படித்தான் நண்பர்களே என் இயந்திரம்
என் கையைவிட்டுப் போனது
என் நெசவாளி நண்பனும் நேற்றுத்தான் செத்தான்.
விடுதலைக்குப் பிறகு இப்போது என்னிடம்
மனைவியோடு ஒரு வாடகை வீடு
காப்பி வறுவலைச் சோதிக்கும் ஒரு மாதிரிக் கரண்டி
பவுடர் நிறைக்கும் பட்டர் பைகள் மற்றும்
கல்லாப்பெட்டியும் புகைபடர்ந்த ஒரு காந்தியின் படத்தோடு கொஞ்சம் கடனும் இருக்கின்றன.”
இக்கவிதையில் பின்நவீனத்துவம் தேசியத்தை உடைத்ததுபோல நவீனத்தின் மற்றொரு கூறான, மையம் நோக்கி நகர்தலை உடைத்து, பின்நவீனத்துவம் அதற்கு நேர் எதிராக, விளிம்பு நோக்கி நகர்ந்தது. கவிஞர் கயல்விழியின் கவிதை அதனைச் சுட்டும்.
“ஒரு மேசையின்
நாள் பட்ட வலியை
என்றாவது ஒருநாள்
அது தன்னை உடைத்துக் கொண்டு
ஓய்வெடுப்பதில்
முடித்துக் கொள்கிறது. “
இது பெண்ணியம் நோக்கி நகரும் கவிதை. ‘மனிதம்‘ மையம் என்றால் பெண்ணியம் விளிம்பு. இதிலிருந்து இன்னும் அதிகமாக விளிம்பை நோக்கிப் பின்நவீனத்துவம் பயணப்பட்டு எதிர்ப்பாலினம் பற்றியும் பேசியது.
‘குடும்பக் கதை’ என்னும் கவிதையின் மூலம் இதனை நாம் உணரலாம்.
“வீட்டைவிட்டு ஓடிப்போனவன் பெண்ணாகத் திரும்பிவந்ததைக் கண்டு அப்பா கண்கலங்கினார்; அம்மா தலைமுடியை இழுத்துப்போட்டு கீழே தள்ளி அடித்து மிதித்தாள். அம்மாவின் கோபத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அப்பாவின் அழுகையை என்னால் தாங்கமுடியவில்லை. அம்மா தங்கையை இழுத்துக்கொண்டு தன் உடன்பிறந்தவன் வீட்டிற்குப் போய்விட்டாள். இரண்டு நாட்கள் அப்பா வீட்டிலேயே அடைந்துக்கிடந்தார். என்னிடம் எதுவும் கேட்கவில்லை. மூன்றாம் நாள் காலையில் அம்மாவை அழைக்க மாமாவீட்டுக்குப் போனார். திரும்பி வந்தபோது அவருடன் மாமன் மகள் வந்தாள். எனது அறைக்குள் நுழைந்தவள் என் முகத்தில் காறித்துப்பிவிட்டு விடுவிடென வெளியேறினாள். அன்றிரவு அப்பா தூக்குப்போட்டுச் செத்தார். காலையில் மின்விசிறியில் தொங்கிய அப்பாவின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு, தெருக்கதவைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு, அடுத்தத் தெருவிலிருந்த மாமா வீட்டுக்குப் போனேன். திண்ணையில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த மாமா, நான் அருகில் நிற்பதை உணர்ந்து எழுந்தார். வாசலிலிட்ட கோலத்தின் நடுவில் சாவியை வைத்துவிட்டு ஊரைக் கடந்தேன்.
தங்கையின் உடம்பில் காலம் வளர்ந்தது. திருமணமான பிறகு அவள் மனத்தில் மாற்றங்கள் உண்டாயின போலும்; ஒருநாள் தொலைப்பேசியில் என்னைத் தொடர்புகொண்டாள். முகநூலில் தொடர்பு எண்ணைக் கண்டெடுத்தாளாம். ஓராண்டிற்குப் பிறகு, தனக்குக் குழந்தை பிறந்திருப்பதாகச் சொன்னாள். அதற்குப் பிறகு எந்தத் தொடர்புமில்லை. ஒரு நடுயிரவில் அழைத்து அம்மா செத்த செய்தியைச் சொல்லி ஊருக்கு அழைத்தாள். ஆண்வேடமிட்டுவந்து சுடுகாட்டில் நின்றேன். பாடை வந்தது. தங்கையின் கணவன் கொள்ளியிட்டார். நடுயிரவைத் தாண்டி பிணம் எரிந்தது. பிணம் எரிப்பவருடன் பேசிக்கொண்டு அங்கேயே விடியும்வரை இருந்தேன். வீட்டுக்குச் சென்றேன். தங்கை கட்டிக்கொண்டு அழுதாள். தங்கையின் கணவர், என்னைச் சுடுகாட்டில் பார்த்ததாகச் சொல்லி கைக்குலுக்கினார். குழந்தை வளர்ந்திருந்தாள். கொண்டுவந்த பொருளைக் குழந்தையிடம் கொடுத்துவிட்டு, அப்பாவின் அறைக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன்; விறைத்த பாதங்கள் அதேயிடத்தில் தொங்கிக்கொண்டிருந்தன.
நான் வாழும் வடக்கிற்கு வந்துசேர்ந்தேன். ஓராண்டிற்குப் பிறகு தங்கை தொலைப்பேசியில் அழைத்துப் பேசினாள். அப்பாவை நான் கொன்றதாக அம்மா இறக்கும்போதும் என்மீது குற்றம் சுமத்தியபடி இருந்தாள் என்றாள். அம்மா சொன்னதிலும் உண்மை இருக்கிறது, அவளைக் கொன்றதும் நான்தானே என நாத் தழுதழுத்தேன். அம்மா என்னைக் கொன்றதை அப்பா மட்டுமே அறிவார் என்பதை நான் அறிவேன் என்று அப்பா அறியார். உறவுகளைக் கடந்த உறவுகள். தம் மேல் ஒட்டப்பட்ட உறவுப் பெயர்களை உரித்துவிட்டால் எல்லாம் வெறும் உடம்புகள்தாம். இறப்பில் மட்டுமே உடம்பைத் தாண்டுகிறோம். இப்பொழுது மாதம் ஒருமுறை தங்கை பேசுகிறாள்; நான் இறக்கும்வரை இது தொடரும்.
●.
இவ்வகையில் பயணப்பட்ட பின்நவீனத்துவம், சாதியத்தின் வலி குறித்துப் பேசுவதற்கான வாய்ப்பை மிகுதி வழங்கியது. இந்தக் கூறு போடலில் கிடைத்த மற்றொரு பயன் இது எனலாம்.
“கத்தரிக்கோலே கத்தரிக்கோலே
நீ ஆண்டைகளின்
முடியை வெட்டுகிறாயே
உனக்குப் பயமாக இல்லையா?
கத்தரிக்கோல் சொன்னது
எனக்கு எல்லா மயிரும்
ஒன்றுதான். “
என்று சாதியத்துடன் மட்டும் நிற்கவில்லை. மனிதத்தைத் தாண்டி இன்னும் அதிகமாக விளிம்பை நோக்கி நகர்ந்து உயிர்கள் அனைத்தின் மீதான பார்வையையும் இது ஏற்படுத்தியது.
“கையேந்தும் யானை
காசா கேட்கிறது ?
காட்டையல்லவா கேட்கிறது.”
இந்தக் கடைக்கோடி நோக்கிய பயணம் பின்நவீனத்துவத்தின் தன்மையாக உணரப்படுகிறது. அதே சமயம் அமைப்பியலை உடைக்கிற இந்தப் பின்நவீனத்துவத்தின் படைப்பியல் தேவையா? என்ற வினாவும் தவிர்க்க ஒண்ணாது. இப்படியான கூறு போடுதல் இலக்கியத்தில் பன்முகத்தன்மைக்கு வழிவகுக்கிறது என்றாலும் சமூகத்தில் துண்டாட்டத்தை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. இது சமூக அரசியலில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதோடு சிதறல்களையும் உண்டு செய்கிறது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இப்படியாகப் பின்நவீனத்துவத்தின் சரி தவறுகளைத் தாண்டி கவிதை வாசிப்பவர்களைக் காட்டிலும் எழுதுபவர்கள் அதிகம் ஆகியுள்ளனர். அதற்குக் காரணம் கவிதை எழுதுவதற்கான களத்தையும், கூறையும் அதிகப்படுத்தியதில் பின்நவீனத்துவத்திற்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதே. இதையே ஞானக்கூத்தன் வேடிக்கையாகச் சொல்லுவார்,
“பாடச் சொன்னால் வெட்கப்படுகிறார்கள்
பேசச் சொன்னால் கூச்சப்படுகிறார்கள்
ஆடச் சொன்னால் கோணுகிறார்கள்
நடிக்கச் சொன்னால் தயங்குகிறார்கள்
வரையச் சொன்னால் வராதென்கிறார்கள்
கவிதை வருமா என்றால் எண்பது பக்க நோட்டுப் புத்தகம் இரண்டை எடுத்து நீட்டுகிறார்கள்.”
கோட்பாடுகளின் சரி தவறுகளைத் தாண்டி வளரட்டும் கவிதை.
(சித்தூர் அரசுக்கல்லூரியில் நடத்தப்பெற்ற கருத்தரங்கத்தில் நிகழ்த்திய உரையின் எழுத்துவடிவம்.)

Leave a comment