விதை 25ஆம் நடவு

அறவி (தமிழ்ப்புதினம்) & அனாமிகா (மலையாளப்புதினம்) கலந்துரையாடற் பதிவு

அகமது கனி & சுஜானா அசீஸ்

விதை – நடவு-25 

  • விதை பாலக்காடு தமிழ் இலக்கியச் சோலையின்  – 25ஆம் நடவு  (கலந்துரையாடல் நிகழ்வு) கடந்த 11.2.2024 ஞாயிறு அன்று தத்தமங்கலம் கவின்மணிச்சுடர் கூடத்தில் — ஏறத்தாழ ஐந்து மாத இடைவெளிக்குப்பின்  — தமிழ் மாணவர்கள், ஆர்வலர்களின் பெருத்த எதிர்பார்ப்போடு  இனிதே நடந்தேறியது.
  • இதுவரை தமிழ் இலக்கியக் கூடலாகவே அமைந்துவந்த இந்த நடவு முதன்முறையாக தமிழ், மலையாள இலக்கியக் கூடலாக நடத்தப்பெற்றது குறிப்பிடத்தக்கது.  
  • நடவு சரியாக காலை 10.15 மணிக்கு  சித்தூர் அரசுக் கல்லூரி முதுகலை முதலாமாண்டு மாணவர் அஸ்வதி தலைமையில் தொடங்கியது.
  • சிறப்பு விருந்தினர்களாக “அறவி” நாவல் எழுதிய தமிழ் எழுத்தாளர் அகிலா, ”அனாமிகா” நாவல் எழுதிய மலையாள அறிமுக எழுத்தாளர் சீமா ராஜ் சங்கர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
  • அஸ்வதி சி. விருந்தினர்களையும் பிற பங்கேற்பாளர்களையும் வரவேற்றுப் பேசினார்.
  • நடவு வழக்கம்போல யான்பெற்ற இன்பம், பனுவல்நயம், கவிப்பட்டறை என்னும் மூன்று பாத்திகளாக அமைக்கப்பட்டிருந்தது. அனைத்துப் பாத்திகளும் இருமொழிப் பங்களிப்போடு நடத்தப்பெற்றன.

”யான் பெற்ற இன்பம்” பகுதியில்………………

  • இளங்கலை மூன்றாமாண்டு மாணவர் பாவனா சு. தாம் படித்த மனுஷ்ய புத்திரனின் கவிதைகளின் இனிமையையும் ஆழத்தையும் வெளிப்படுத்திப் பேசினார்.
  • இளங்கலை இரண்டாமாண்டு மாணவர் பாவனா ப., கல்யாண்ஜியின் கவிதைகளை வாசித்து நயந்துரைத்தார்.
  • கல்வியியல் மாணவர் இரா. கீர்த்தி தாம் இணையத்தில் கண்ட – தேர்ந்தெடுத்த கவிதைகளை வாசித்துப் பகிர்ந்தார்.
  • இன்னும் வெளிவராத – ஆனால், சித்தூர் பாஞ்சஜன்யம் திரைப்படவிழாவில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்ட ”குரங்கு பெடல்” திரைப்படம் பார்த்ததையும் அதன் கதைச்சுருக்கத்தையும் பத்தாம் வகுப்பு மாணவர் கன்னல் இளம்பரிதி பகிர்ந்துகொண்டார்.
  • மேலும், திரைப்பட எழுத்தாளர் கமலபாலா தான் கண்டுகளித்த 12th Fail எனும் இந்திப் படத்தைக் குறித்து பகிர்ந்துகொண்டார். அந்தப் படம் நேர்மையாகத் தேர்வெழுதித் தவறிய ஒரு மாணவன் எவ்வாறு ஐ.பி.எஸ். அதிகாரியாகிறான் என்பதை விளக்குவதாக கூறினார். அத்துடன், அப்படம் எப்படி மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் செயலூக்கியாகவும் இருக்க முடியுமென எடுத்துரைத்தார்.
  • அகமது கனி, தாம் படித்த “கானகத்தின் குரல்” (Voice Of Forest) எனும் மொழிபெயர்ப்பு நாவல் குறித்தும், அதில் அஃறிணையாகிய ஒரு நாய்தான் முதன்மைக் கதாபாத்திரம் என்பதையும் அதன் வாழ்க்கைப் போக்கு சித்தரிக்கப்பட்டிருக்கும் விதத்தையும் எடுத்தியம்பினார்.
  • மலையாள எழுத்தாளர் சீமா ராஜ் சங்கர், முகநூல் கவிதைகளை இனிமைபட எடுத்துரைத்தார்.
  • ஜானகிப்பிரியா மகுடபதியின் கவிதைகளில் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார்.

”பனுவல் நயம்” பகுதியில் ”அறவி” நாவல்…….

  • முனைவர்ப் பட்ட ஆய்வாளர் க. ரஞ்சினி திறனாய்வுரை வழங்குகையில்……                          

இந்நாவல், ”வாசித்த உணர்வு இல்லாமல் அனைத்தையும் ஒரு காட்சியாக கண்டது போல  உணர்வை தந்தது” என்றும்,  ”தேவகியின் வாழ்க்கையில் அவள் எதிர்கொண்ட சிக்கலான பல சூழ்நிலைகள் அவளின் ஆழ்மனதைப் பயமுறுத்தி கனவில் மிருகங்களாக வந்து மனதை நிலைகுலையச்  செய்தன” என்றும் ”தேவகியின் பாட்டி செல்லம்மா, அங்கிருக்கும்  தம் பாரம்பரிய வீட்டின் ஒற்றை கதவில்  எப்பொழுதும் ஒரு ஈரம் இருப்பது போலவும் தனக்கு மனத்தாக்கல் வரும்போது  அதன் மீது தன் தலையை சாய்த்துக் கொண்டு இருப்பது தன் தாயே தனக்கு ஆறுதல் சொல்வது போலவும் விவரிக்கப்பட்டிருப்பது அருமையான வரிகள்” என்றும்  குறிப்பிட்டார்…….

தேவகியின் நண்பர் ராய்ஸ், வசுவின் மகன் சரவணன் இவர்களைப் பற்றியும், இவர்கள் பெண்களின் வலிகளை, வேதனைகளை உள்ளார எப்படி உணர்ந்து செயல்படுகின்றனர் ,என்பதனையும் இந்நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பென சுட்டிக்காட்டினார்………..

மேலும்,  இந்நாவலில், ஓரிடத்தில் வீட்டு வேலை – கட்டட வேலை – சிறிதேனும் பாதுகாப்பு பிற வேலைகள் என ஆண்களால் கைவிடப்பட்ட பெண்களுக்குரிய வேலைகளை சமூகம் பட்டியலிட்டுள்ளதை குறிப்பிட்டுப் பேசியுள்ளர்.

இறுதியில், ”பெற்றோர்கள் இருக்கும்போதே அவர்களுக்கு அனுசரணையாகவும், அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் அவர்கள் போன பின்பு என்ன செய்தும் பயனில்லை என்பதை  இக்கதையின் மூலம் உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்ள முடிகிறது” என அவர் கூறியிருப்பது வளரும் தலைமுறையினர் தவிர்க்கக்கூடாத ஒரு கருத்தாகும்..

  • பாவனா ப., தம் நயவுரையில்………….

“அறவி எனும் சொல்லுக்கு பெண் துறவி எனப் பொருள். ஒரு பெண் திருமணத்திற்கு பின்  தன்னை ஒரு தாயாக, மருமகளாக, துணைவியாக உருமாற்றிக் கொண்டு தன் ஆசைகளையும் கனவுகளையும் துறக்கிறாள்” என்று நூற்பெயர் காரணத்துடன் தொடங்கி, தேவகி வீட்டு வேலைக்காரனான வேலுச்சாமி  ”ஏழையாயிருப்பினும் ஒழுக்கத்தில் உயர்ந்தோனாவான். தவறு செய்ய பல சந்தர்ப்பங்களிருந்தும் அவர் அதைச் செய்வதில்லை” என்கிற வகையில் விசுவாசமும் தனிமனித ஒழுக்கமும் கொண்ட கதாபாத்திரத்தை விதந்துரைத்தார்.

மேலும், ”தேவகி  வாழ்வின் சூழலால் இங்கிலாந்திற்கு குடி பெயர்கிறாள்.அங்கு ராய்ஸ் எனும் இராணுவ அதிகாரியின்  நட்புக் கிடைக்கிறது .அவர் திருமணமாகாதவர். அதன் காரணத்தைக் கேட்கும் தேவகியிடம்  போர்க்காலத்தில்  பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்களின் நிலையை தான் அனுபவித்தது போல் வர்ணிக்கிறார். சில காட்சிகளைக்  காணும்  போது  குமட்டல் வருகிறது என்கிறார். இது ஒரு அவலக் காட்சியாகவுள்ளது” என நாடு கடந்த – பரிவுணர்வும் கழிவிரக்கமும் கொண்ட கதாபாத்திரத்தின் பண்புடைமையைப் போற்றிப் பேசினார்.

  • அகமது கனி தாம் வாசித்து உணர்ந்ததில்……………

நாவலாசிரியர் ஒரு மனநல மருத்துவ ஆலோசகராக இருப்பதால்தான் இந்த நாவலை உயிரோட்டத்துடன் நாவ்லைப் படைக்க முடிந்தது என்பதைத் தொடக்கத்திலேயே குறிப்பிட்டார்..

தேவகியின் தாத்தாவின் பூர்வீக பண்ணை வீடு குறித்து — நுழைவாயில் தொடங்கி பின்கட்டு வரை – அங்குலம் விடாமல் விவரிக்கப்பட்டது — தாம் இதுவரை படித்தறியாத — சரியாக 6½ பக்கங்கள் வரை நீளும் வருணனை எனக் குறிப்பிட்டார். இது தமக்கு ஏற்புடையதே எனினும் பொது வாசகருக்கு அலுப்பூட்டலாம் என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.

மேலும், நாவலில் பயின்றுவரும் — செத்தி விளையாடு – மனத்துக்குள் தாக்கல் – கூட்டறை – முழுக்காட்டுவாள் – மதினிகாரி – அங்கணங்குழி உள்ளிட்ட வட்டாரச் சொற்களுக்கு, நூலின் இறுதியில் சொற்பொருள் (அகராதி) கொடுத்திருந்தால், அச்சொற்களை அன்னியமாக உணரும் வாசகர்கள், அந்நாவலை மேலும் ஒன்றிப் படிக்க ஏதுவாக இருந்திருக்கும் என்பதையும் குறிப்பிட்டார்.

  • அமர்வுக்கு வர இயலாத ஜோதிலட்சுமியின், “அறவி” நாவல் குறித்த விமர்சனக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் அவர் தெரிவித்த தனித்துவமான கருத்துகள் கீழ்வருமாறு:

“இந்த நூலை வாசிப்பதற்கு முன்பாக இந்நூல் பற்றிய அறிமுக உரைகளை நான் கேட்டேன் என்று கூறியவுடன் எனது ஆசிரியர் ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கு முன்பாக ஒருவர் கூறிய அறிமுகத்தைப் படிக்கக் கூடாது என்றார். ஏனென்றால்,  விமர்சனத்தைக் கேட்டபின் வாசித்தால் அவர்களுடைய கண்ணோட்டத்தில்தான் புத்தகத்தை வாசிப்போம் என்றார்” — ( இக்கூற்று நம்மை சற்று யோசிக்க வைக்கிறது எனலாம்)

”எந்த ஒரு சூழ்நிலையிலும்  தனக்கான வாழ்வை வாழ வேண்டும் என்று யமுனா உறுதியாக இருக்கிறார்.  அவருடைய கல்வி அவளுக்கு துணை நிற்கிறது. மேலும், பெண்கள் எப்பொழுதும் அனுசரித்துத்தான் செல்ல வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்பதை யமுனா மூலம் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்”

”நூலாசிரியர், வசுமதிக்கு இந்த குடும்பம் தான் உலகம். ஆனால், கணவர் அவரிடம் எந்த ஒரு விஷயத்தையும் பற்றியும் ஆலோசிப்பது கிடையாது.  அம்மா என்பதற்கான மரியாதை இல்லாமல் நடத்துகிறார்கள். எனவே, வசுமதிக்கு இந்த வீடு மட்டும் தான் உலகம் என்றாகிப் போனது”

“கணவனின் தொடர்பால் வேறு பெண்ணிற்கு பிறந்த குழந்தை கூட தன் குழந்தையாக பார்த்த பேருள்ளம் படைத்தவள் செல்லம்மா பாட்டி…”

”இந்நாவலில் நூலாசிரியர் பட்டாம்பூச்சியை ஒரு குறியீடாக வைத்துள்ளார். தேவகிக்கு பட்டாம்பூச்சி இட்ட பாவாடையை கண்டதும் குழந்தை பருவம் நினைவுக்கு வருகிறது. மேலும், கதை முடிவிலும் மனதில் பட்டாம்பூச்சி பறக்கும் விதத்தில் சந்தோஷமாக உள்ளது என பதிவு செய்கிறார்”

”பனுவல் நயம்” தலைப்பில் ”அனமிகா” மலையாள நாவல்…….

தத்தமங்கலம் குட்டேட்டன் நூலக புரவலர்கள் சிவதாசன் மடத்தில்., வினோத்குமார் மற்றும் இலக்கிய ஆர்வலர் சுஜானா அசீஸ் ஆகியோர் “அனாமிகா” மலையாள நாவல் குறித்து தம் வாசிப்பனுவங்களை – மலையாள உரையாக – இனிதே வழங்கினர்.

  • சிவதாசன் மடத்தில், தன்னுடைய உரையில்,

“ஒரு பெண்ணுடைய வாழ்க்கையையும் அவள் தொடக்கம் முதல் இறுதி வரை எதிர்கொள்ளவேண்டிவருகின்ற அனுபவங்களையும் குறித்த கதையைத்தான் இந்த புதினம் கூறுகிறது.

அழகியான மகள், தன்னைப்போல தவறுகளில் வீழுமோ என்ற தாயின் சிந்தனையோடுதான் முதன்மைப்பாத்திரமான அம்மூட்டி என்கிற அனாமிகாவின் பிறப்பு.

பால்யகாலத்தில் ஒரு இஸ்லாமியப் பையனோடு நெருங்கிப் பழகியபோது தொடங்கிய விலக்குகளும் நிபந்தனைகளும் மிகுந்த வாஞ்சையோடு அவளைத் தாலாட்டி வளர்த்த தந்தையின் மீதும் நம்பிக்கையில்லாத தாயின் வீட்டிற்கு அவளைக் கொண்டுபோகச் செய்கின்றன.

அப்பா, அம்மாவின் மறைவுக்குப் பிறகு, வேறொரு குடும்ப வீட்டில் அவளைச் சந்திக்கும் முறைப்பையனுடனான இசையும் காதலுமான அழகிய கரையோரமாக அமைந்த அவளது பயணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அனாமிகா தனது அடக்குமுறை மனநோயாளி கணவனிடமிருந்தும் அவனது சகோதரனிடமிருந்தும் தப்பித்து, மன உடல் காயங்களுடன் தனிமை வாழ்க்கை வாழ்ந்து இறுதியாக இமயமலைச் சிகரங்களில் இரட்சிப்பைத் தேடும் பயணத்துடன் நாவல் முடிகிறது.

அனாமிகா என்னும் வலிமையான கதாபாத்திரமன்றியும்

தான் மேலாளராகப் பணியாற்றும் வீட்டின் பெருமையைக் காக்க வேண்டி அந்த வீட்டின் பெண்பிள்ளையை மனைவியாய் ஏற்றுக்கொள்கிற, அன்பால் நிறைந்தவனும் தீரனும் ஊர்க்காரர்களின் மனங்கவர்ந்தவனுமாகிய கோபாலன் …

பற்பலரின் வாழ்வையும் உயிரையும் காத்து ஊர்மக்களின் கண்மணியாய் மாறிப்போன டாக்டர் பி.ஆர்.பி என்னும் மகானான மனித நேயக்காரர்..

லாபநோக்கமின்றி எல்லோர்க்கும் மருத்துவ உதவி நல்குகின்ற மதமாறிய பீலிப்பறையனும் ராக்கியக்காவும் . . .

மணம்கொண்டு மட்டுமே ஆளை அறிந்துகொள்ளும் ஆற்றல்கொண்ட நட்புச்செல்வான மம்மினிச்சிட்ட,…

கிழவனோடு நடக்கவிருந்த திருமணத்திலிருந்தும் காப்பாற்றி, தன்னைவிட மூத்த வயதுள்ள இளைஞியை மனைவியாக்கிப் புரட்சிசெய்த, தொடக்கத்தில் காங்கிரசுக்காரனும் பின்னாளில் கம்யூனிஸ்டுமான கருணாகரன் நாயர் . . .

இசையையும் முறைப்பெண்ணையும் மிகமிகக் காதலித்த அப்புண்ணியென்னும் நிராகரிக்கப்பட்ட காதலன் . .

எனப் பல சிறந்த கதாபாத்திரங்களை இந்த நாவலில் காணலாம்…

கிராமச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட நாவலில் சகாப்தத்தையும் சமூக அமைப்பையும் நாவலாசிரியர் தெளிவாக விவரிக்க முடிந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இடையறாது வாசிக்கவேண்டும் என்னும் நோக்கமே, அத்தியாயங்களாகப் பிரித்தமைக்கும் வழமையான முறையிலிருந்து மாற்றி அத்தியாயப்பிரிப்பில்லாத நாவலாய் அமைக்கத் தூண்டியது போல் தெரிகிறது. சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்கிய அனாமிகா மேலும் பல வாசகர்களின் கைகளில் சேரவும், நாவலாசிரியரிடமிருந்து இன்னும் பல சிறந்த எழுத்துக்கள் கிடைக்கவும் வாழ்த்துகிறோம்”

என வாழ்த்தினார்.

  • “அனாமிகா” என்ற மலையாள நாவல் பற்றி ப.பாவனா …………………….

இந்த நாவல் கேரள பாரம்பரியத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தாழம்புவின் மணம், வெள்ளி மாம்பழப் பறவைகளின் சத்தம், சேவல் கூவுதல் (விடியலைக் குறிக்க), கிருஷ்ணரை வழிபடுவது போன்ற இயற்கை மற்றும் செயற்கைக் காட்சிகள் சிறப்பானவை.

கோபாலன்-பாமாவின் மகள்தான் அருந்ததி, அம்மூட்டி மற்றும் அனாமிகா. அருந்ததி பெயர் உச்சரிக்க கடினமாக இருந்ததால் அம்மூட்டி ஆனார். அவள் அப்பாவுக்கு மட்டும் அருந்ததி. தந்தையின் மரணத்திற்குப் பிறகு, அவள் பெயர் இல்லாதவள். அனாமிகா என்றால் பெயரிலாதவள்.

கோபாலன் தேசத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கிறார். ஒரு நாள் டீக்கடையில் பி.ஆர்.பி. டாக்டர் அறிமுகப்படுத்தப்படும்போது தங்கள் ஊருக்கு ஒரு நல்ல மருத்துவர் தேவை என்று எண்ணி, கோபாலன் தங்கள் ஊருக்கு அழைத்து வருகிறார்.

அதன்படி பாமாவின் அண்ணன் வல்யேட்டன் வீட்டிற்கு வந்து தன் நிலையை தெரிவிக்க, சம்மதித்து வீட்டை வாடகைக்கு விடுகிறார். அங்கிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

வல்யேதன் – கார்த்து போன்ற பல தம்பதிகளை மலட்டுத்தன்மையிலிருந்து விடுவிக்கிறார். டாக்டர் பி.ஆர்.பி. பரிந்துரைக்கும் மருந்துகள் பற்றிய அறிவையும் பெறுகிறோம். கடைசியில் அந்த துரோகம் செய்த டாக்டருக்குத் தான் கொண்டு வந்த இரும்பு பெட்டி மட்டும் மிச்சம். சிறிதுநாளில் அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.

அருந்ததி சிறுவயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சூழலிலிருந்து பாமா காப்பாற்றுகிறார். அம்முட்டி வளரும்போது, அவளது மாமாவின் மகன் அசோகா (அபுதன்) இளையவனாக இருந்தாலும், அவளை மணக்க விரும்புகிறான்.

இந்தப் புதினத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துக்கள் ஒவ்வொன்றும் உள்ளூர்ப் பெயர்கள். எனவே இது எழுத்தாளருக்கு ஏற்கனவே தெரிந்த நபர்களைப் பற்றிய கதை எனலாம். மொத்தத்தில் இந்தப் புதினவாசிப்பு நல்ல வாசிப்பாக இருந்தது.

இவர்கள் இருவருக்குப் பின் பேசவந்த சுஜனா அஜீஸ் …….

திரு சிவதாசனும் குமாரி பாவனாவும் நாவலை விவரித்தனர். இருப்பினும், எனக்கு தனித்துத் தோன்றும் அம்சங்களை நான் குறிப்பிடுகிறேன் என்று கூறி

நாவலாசிரியர் ஒவ்வொரு பாத்திரத்தையும் வெவ்வேறு குணாதிசயங்களுடன் படைத்துள்ளார். தர்ம சிந்தனையுள்ள மருத்துவர்கள் தங்கள் தொழிலை அதிகம் எதிர்பார்க்கக் கூடாது என்பது நடைமுறை உண்மை. இந்த நாவலாசிரியர் அதை டாக்டர் பி.ஆர்.பி என்ற பாத்திரத்தின் மூலம் வலியுறுத்துகிறார்.பொதுவாக, இந்த நாவல் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

என்று குறிப்பிட்டார்.

  • இந்நிகழ்வின் பங்கேற்றமை குறித்து முகநூலில் நாவலாசிரியர் சீமா ராஜ் சங்கர் கீழ்க்காணுமாறு பதிவிட்டிருந்தார். .

“இந்த நிகழ்வில் பங்கேற்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட கவிஞரும் நாவலாசிரியரும் உளவியலாளருமான ஸ்ரீமதி. அகிலா புகழ், குட்டேட்டன் நினைவு நூலகப் பொறுப்பாளர்கள், சித்தூர் கல்லூரி தமிழ் இலக்கியத் துறை மாணவர்கள், திரைப்படம் மற்றும் இலக்கியத் துறையில் பணியாற்றும் முக்கியப் பிரமுகர்கள் விதை நடவு நிகழ்வில் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களை மேம்படுத்தினர்.

இந்த மனதைக் கவரும் மிகவும் நட்புரீதியான கூட்டத்தில், திருமதி அகிலா புகழ் எழுதிய “அறவி” நாவலையும் நான் எழுதிய “அனாமிகா” நாவலையும் படித்துவிட்டு. நன்றாக மதிப்பாய்வு செய்தனர்..

திரு. சிவதாசன் மடத்தில், திருமதி சுஜனா அஜீஸ், குமாரி பாவனாவுக்கு ஆகியோர் அனாமிகா குறித்து உரையாற்றினர். அவர்களுக்கு என் அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகத்தில் புன்னகையுடனும், புதிய அறிவுச் சேகரிப்புடனும் இதயத்தில் வைத்துப் போற்றுவதற்கு பல நல்ல தருணங்களுடனும் ஆடம்பரமான மதிய உணவுக்குப் பிறகு விடைபெற்றேன்.

நடவினை ஒருங்கிணைக்கும் கவிதா மணாளனுக்கும் அவரது அன்பு மனைவி. ஜானகிப்ரியாவுக்கும் அருமைமகன் கன்னல் இளம்பரிதிக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரு திசைகளிலிருந்தும் ஓடிய மலையாளம், தமிழ் நதிகள் ஒன்றாகக் கலந்து பாய்வதைப் போல…நடந்தேறிய இந்த நிகழ்வை எண்ணி மகிழ்ந்தபடி அடுத்த விதை நடவுக்காகக் காத்திருக்கிறேன்”.

இந்த கலந்துரையாடல் அமர்வில் மேலே குறிப்பிடப்பட்ட தலைவர், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள்… இவர்களுடன், தத்தமங்கலம் குட்டேட்டன் நூலகத் தலைவரும் வணிகவியல் பேராசிரியருமான சசிக்குமார், இளங்கலை தமிழ் மூன்றாமாண்டு மாணவர்களான ஆருத்ரா மோ., நாகராஜ் ப., முதலாமாண்டு மாணவர் கார்திக்கேயன் மு. ஆகியோரும் பங்கேற்றனர். முடிவில், எழுத்தாளர்கள் அகிலா மற்றும் சீமா ராஜ் சங்கர் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர். நிறைவாய் கவிப்பட்டறைப் பாத்தியில் இரா.கீர்த்தி, சு.பாவனா, அகமது கனி, சீமா ராஜ்சங்கர் ஆகியோர் தாம் இயற்றிய கவிதைகளை வாசித்தனர்.

  இந்த 25ஆம் நடவு, வழக்கமான “தமிழ் இலக்கிய சங்கமம்” என்பதைத் தாண்டி, தமிழ் இலக்கியத்தோடு மலையாள இலக்கிய வாசிப்பும் அவை குறித்த கலந்துரையாடலும் சேர்ந்து முதன்முதலாக ஒரு இருமொழி இலக்கிய சங்கமம் என அரங்கேறியது என்றால் அது மிகையாகாது.

Leave a comment

Trending