இளையவன் சிவா கவிதைகள் மூன்று


1
கண்ணாடியின் பிம்பத்தில்
அழகாய் இருக்கிறது
எதிரொளிக்கும் உலகம்.
உள்ளே பார்க்கிறேன்
ரசிக்கும் உயிர்கள்
அழகாக்குகின்றன என்னை.

2
குஞ்சம் மிதந்த தொப்பியும்
பஞ்சடைத்த தொப்பையும்
வண்ணப்பூச்சுகளுக்குள் மின்னும் கன்னமும்
மூக்கின் நுனிகண்ட உருண்டையும்
ஆளடைத்தாலும் நிரம்பாத ஆடையும்
வானமே தலையில் வீழ்ந்தாலும்
விலகிப் போகாத புன்னகையும்
அணிவகுத்துக் கொண்டு
உங்களை ஆசுவாசப்படுத்தும்
கோமாளியை நீங்கள்
ஓய்வில் சென்று பாருங்கள்

ஒட்டிப் போன வயிறும்
உருண்டு விளையாடும் வறுமையும்
அந்தரத்தில்
அவனைத் தொங்கவிடுவதில்
கைதட்டியா சிரிப்பதெனக்
கவலைப்பட வாய்க்கலாம்
நமக்குள்ளும் ஒரு கோமாளித்தனம்.

3
அசையாப் பிம்பமென
அருகில் உரசிட
குத்தும் ஊசிகளென நிமிரும்
தோல் முடிக்குள்
தேகம் விளையாடிட
அம்பாரியின் இசையில் கால்கள் உயர்ந்திட
ஆசிர்வதிக்க நீளும் தசைக்குழலில்
கரங்கள் பிணைந்திட
வனத்தின் வாசத்தைத் துறந்துவிட்டு
வருவோர் போவோரின் வண்ணப்படங்களுக்குக்
காட்சி கொடுத்தபடி
வாசலில் நிற்கும்
யானையின் கனவில்

அடிக்கடி காட்சி தருகிறாரோ கடவுள்.

Leave a comment

Trending