உன்னில் நானானால் : சகுந்தலாமணி

பெண்ணியம் பிடிக்கும்
உன்னிடம் காட்ட எண்ணுவதில்லை
நான்
உன் பிம்பமாக உணர்வதினாலோ…..
உனக்கு நீ
எனக்கு நான்
அர்த்தம் புரிவதற்குள்
காலம் கடந்து விடுகிறது
என் கவிதை மொழி
புரியாது உனக்கு
புரியவும் வேண்டாம்
என் கண்ணசைவில்
என்னைத் தாண்டிக் கடந்துவிடுபவனே
மொழி ஒரு பிரச்சனையா?
நமக்குள் தலையணைமந்திரம் தேவையா
கிடைத்தது விடை
எனக்குப் பிடித்ததா என்பதை விட
உனக்குப் பிடித்தது போதும்
எனக் கடந்து விடுதல்
நீ எண்ணுவதற்குள்
நான் செய்து முடித்து விடுதல்
நீ சொல்வதற்கெல்லாம்
தலையாட்டிப் பொம்மையாதல்
எதற்குத் தலையணை மந்திரம்
உன்னில் நானானால்
வாழ்க்கை அழகாகத்தான் இருக்கிறது.

Leave a comment