தெருவில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. அவர்களின் கூச்சல் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. குழந்தைகள் வேறு எங்கும் சென்றுவிடுவார்களோ என்ற பயத்தில் வெளியே வந்துவந்து பார்த்துப்போக வேண்டிய தேவையில்லை.

வீட்டிற்கு வந்திருக்கும் தனது அண்ணனைக் கவனிப்பதில் ஆர்வம் காட்டிக்கொண்டிருந்தாள் கலைவாணி.

“வூர்ல எல்லா நல்லாயிருக்காங்களா?”

“ஏதோ இருக்காங்க அம்மணி”

“ஏங்கண்ணா இப்படி சொல்றீங்க”

“ஆமா, அதவுடு, மாப்பிள எங்க போனாரு”

“இதோ வந்துருவாருங்ணே”

“பசங்க எங்க படிக்கிறாங்க.”

“இங்க பக்கத்து பள்ளிக்கூடத்துலதா” என்று விசாரிப்புகள் விரிச்சமாகிக் கொண்டே போனது.

“சரிங்கண்ணா கையக் கழுவுங்க,  சாப்பிடலாம்” என்றாள் கலைவாணி.

வெளியே புல்லட் வரும் சத்தம் கேட்டு, “இதோ அவரு வந்துட்டாருணா” என்று உடலைப் பின்னோக்கி வளைத்து கண்களை வாசலை நோக்கி நகர்த்தினான்.

“இந்தா கலைவாணி” என்று பிளாஸ்ட்டிக் பை வீங்கியபடி வாங்கி வந்ததனை  மேசையின்மீது வைத்தான் மாரிமுத்து.

“வாங்க மச்சா, எப்ப வந்தீங்க” என்று புன்முறுவலுடன் ஹான்ஸை வாயிலிருந்து கையால் எடுத்து வெளியே எறிந்தான்.

“இப்பதானுங்க மாப்பிள்ளை” என்று தனக்கும் கொஞ்சம் கேட்டு வாங்கி கையில் நசுக்கி உதட்டினுள் நுழைத்துக் கொண்டான் ஈஸ்வரன்.

“கட்சி வேலையெல்லா எப்டி போகுது. நம்ம இளவட்டங்கல்லா வர்றானுகளா”

“ம்ம்ம்……. இப்பதா பேசிப்பேசி கொண்டாந்திட்டிருக்கோ.., எல்லா காலேஜ் போயிக்கிறானுங்க. அங்க நண்பன், தோழன்னு ஒன்னாச் சேந்துக்கிட்டு நம்ம பக்கம் வர மாட்டீங்கிறானுக. அவனுக மண்டையக் கழுவறதுக்குள்ள போதும் போதுணு ஆகுது.”

“குலப்பெரும, ஆண்ட பரம்பர, மன்னர் வம்சம் பத்தியெல்லா கொஞ்சம் சேத்துப் போட்டு வுடுங்க.”

“எங்க அதசொன்னா நம்மளெயே பூமர் மாமானு ஓட்டறாணுக.”

“எல்லா நேந்து கலந்து பழகிட்டாணுக. அவனுகளுக்கு வேணுங்கறத செஞ்சா அத பாத்து நம்மகிட்ட வந்துட போறாணுக.”

“அட ஏங்க மச்சா, அம்பேத்காருங்கறானுக, பெரியாருனுங்கறானுக, பத்தாததுக்கு காட்டுக்கு வேலைக்கு வர்றவங்ககிட்ட வேலைக்குத் தகுந்த கூலி குடுன்னு நம்மளையே மெரட்டுராணுக. காட்டு வேலைக்கு வர்றவங்க பசங்களு, நம்ம பசங்களு ஒரே காலேஜ்லதா படிக்கிறாங்க. இவ அவங்கள அம்மா, அப்பானு கூப்புடுறா. மானங்கெட்ட பொழப்பு”

“காலம் மாறுது மாப்பிள, அதுக்குத் தகுந்த மாதிரிதா சங்கத்த வளக்கணும்.”

“அதுக்காக அதுங்கல வூட்டுக்குள்ளாறயா விட முடியும். நமக்குன்னு இருக்கிறத விட்டுக்குடுத்துட்டா நம்மள மதிக்க மாட்டாணுக.” என்றான் மாரிமுத்து.

“பேசிக்கலாம் மாப்ள,  சாப்டீங்களா,” என்று வாயிலிருந்து ஹான்ஸை வெளியே துப்பினான்.

“இல்ல மச்சா”

சாப்பாடு ஆவி பறக்க மேசையின் மீது வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து எழும்பிய ஆவி ஒரு சிறிய வெண்மேகம் போல உருவாகி அலைந்துகொண்டிருந்தது.

‘இவர்கள் ஏன் மனிதர்களைப் பிரித்து வைத்திருப்பதில் இவ்வளவு மும்முரமாக இருக்கிறார்கள். இவர்கள் ஆதாயத்திற்காக அடுத்த தலைமுறையை சிதைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது’ என்று மனதிற்குள் ஆதங்கப்பட்டுக்கொண்டாள் கலைவாணி. தன் மகன் சாதிய ஆணவவாதியாக மாறிவிடக்கூடாது என்பதில் தீவிரக் கவனத்துடன் வளர்த்து வருகிறாள்.  அதன்படி  மகன் சரியான பாதையில் வளர்ந்து வருவது சந்தோஷத்தைக் கொடுத்தாலும் சாதிச் சங்கம் கட்டி சாதியை வளர்க்கும் தனது கணவரை அவ்வப்போது கடிந்துகொள்வாள். அதைத் தவறென்று உணர்த்த தன் மகன் உள்ளான் என்று நம்பிக்கொண்டிருக்கிறாள்.

வெளியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் விளையாட்டை விட்டுவிட்டு யாருடனோ பேசிக்கொண்டிந்தனர். சத்தம் வீட்டிற்குள் கேட்டதால் அதுவும் வேறு யாரோ ஒரு சிறுவனுடன் பேசுகிற மாதிரி கேட்டதால் இவர்கள் வெளியே போய்ப் பார்க்க அவசியமில்லை என்று சாப்பாட்டை ஊதும் பணியில் இறங்கிவிட்டனர்.

“டேய் வாடா, விளையாடலாம்.”

அந்தச் சிறுவன் தயங்கிபடி அப்பாவை ஒட்டி நின்றான்.

“ஏன்டா சாமி” என்று மகனின் தலையை வருடினார் அச்சிறுவனின் அப்பா.

சிறுவன் சின்னமலையும், கலைவாணி மகன் ஜித்தேஷூம் ஒன்றாகப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கின்றனர். இருவரும் ஒரே பெஞ்சில் அமர்ந்திருப்பவர்கள். சின்னமலை இந்தப் பகுதிக்கு வருவது இதுதான் முதன்முறை. பள்ளியில் எப்போதும்  ஒன்றாக விளையாடும் அவனைப் பார்த்ததும் ஜித்தேசுக்கு பெருமகிழ்ச்சி. வீட்டிற்குள் சோற்றிலிருந்து வெளியேறிய ஆவி கருமேகமாகி அவன் மீது மழையாகப் பொழிவதுபோல துள்ளிக்குதித்தான்.

“வாடா. இதுதா எங்கவீடு” என்றான் ஜித்தேஷ்.

தன்னை இங்கேயே நிற்கச் சொல்லிவிட்டுச் சென்ற தன் தந்தையைத் தலையை மட்டும் வலது இடதுபுறமாகத் திருப்பித் தேடினான் சின்னமலை. சின்னமலைக்கும் ஜித்தேசுடன் விளையாட ஆசைதான். இதுவரை இப்பகுதியில் தான் விளையாடாததால் சிறு தயக்கம்.

ஜித்தேஷின் துள்ளல் சின்னமலையை விளையாட்டிற்குள் இழுத்துவிட்டது. விளையாட்டு மும்முரமாக நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் கலைவாணி வீட்டிற்குள் இருந்துகொண்டே ஜித்தேஷை சாப்பிட அழைத்தாள்.

“டேய் வாடா, போய் சாப்புட்டு வந்து விளையாடலாம்” என்று சின்னமலையைக் கூப்பிட்டான் ஜித்தேஷ்.

“இல்ல அப்பா வந்துருட்டும்டா, ஒன்னா சாப்டுக்கலாம்” என்றான் சின்னமலை.

“அப்பா அப்பறம் சாப்பிடட்டு, நாம சாப்டலாம் வா….” என்று வீட்டுற்குள் இழுத்துச் சென்றான்  ஜித்தேஷ்.

சின்னமலை உள்ள வந்ததும், “யாருடா இந்தப் பைய” என்று கலைவாணி கேட்டாள்.

“எம் ஃப்ரண்டுமா” என்று இருவரும் மேசையில் அமர வந்தனர். மாரிமுத்துவுக்குப் பேரதிர்ச்சி. “டேய்….. டேய்….. அங்கயே நில்லுடா ஈனச் சாதி பயலே…. தா…”  என்று இழிவார்த்தையால் வீட்டை அதிரச்செய்தான்.

சின்னமலையும் ஜித்தேசும் அப்படியே நின்று விட்டனர். ‘கெட்டவார்த்தை பேசுவது தவறு’ என்று தனக்குச் சொல்லிக்கொடுத்த அப்பா, யாரிடமும் கெட்டவார்த்தை பேசியதைப் பார்த்திராத அவனுக்கு தன் நண்பனை எளிமையாக அப்படிச் சொன்னது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜித்தேஷ் சுறுசுறுப்பான பையன், சின்னமலையும் ஜித்தேசும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படிக்கிறார்கள். ஒரே பெஞ்ச். இருவரும் முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண். இதில் மாற்றம் இருந்தாலும் இது இருவருக்குள் மட்டுமே என்பதாக இருக்கும். ஜித்தேஷ் இந்த வயதிலேயே நல்ல புத்திசாலித்தனமாகப் பேசுபவன். சின்னமலையும் அப்படித்தான். அதனால்தான் இருவருக்கும் பொருந்திப்போகிறது என்று அவர்கள் வகுப்பாசிரியர் சக ஆசிரியர்களிடம் கூறிக்கொள்வார்.

“ஏம்பா, கெட்டவார்த்த பேசுறீங்க. அம்மா, அப்பாவப் பாரு அசிங்கமா பேசுறாரு.” என்று கோபக் குரலில் விம்மினான் ஜித்தேஷ்.

“வீடே அசிங்கமாயிருச்சு. நீ எப்பிடிடா உள்ள வந்த.”

“நாந்தா கூட்டீட்டு வந்தப்பா. அவ ஏம் ஃப்ரெண்டு”

“ஜித்தேஷ் உனக்கு ஒன்னுந் தெரியாது. இந்த சைடு வா. டேய் வெளியே போடா தா….”

அப்பாவின் வாயிலிருந்து மறுபடியும் கெட்டவார்த்தை. ‘எப்படி தன் நண்பனை அப்பா இப்படிப் பேசலாம் ‘என்று அவன் கண்களில் கண்ணீர் ததும்ப ஆரம்பித்தது.

“சின்னமல!.. சின்னமல!..” என்று வெளியில் சத்தம் கேட்பதைக் கேட்ட சின்னமலை வேகமாக வெளியேறினான். ஜித்தேசும் ஓட முயல்கையில் அம்மா கையை இறுகப் பிடித்துக்கொண்டாள்.

மாரிமுத்துவும், ஈஸ்வரனும் வேகமாக வாசலை அடைந்தனர். “டேய் ஈன சாதி மயிருகளா…” என்று ஈஸ்வரன் கொந்தளித்தான்.

            “என்ன நடந்துச்சுங்க. ஏந் திட்றீங்க.”

            “ஏண்டா உம் பையன உன்னோட வச்சுக்கமாட்டியா. இப்புடிதா அவுத்துடுவியா” என்று சீறினான் மாரிமுத்து.

            “இதா பாருங்க. பைய முன்னாடி திட்டுற வேல வேண்டா.” என்று குனிந்து “என்ன நடந்துச்சு சாமி” சின்னமலையைக் கேட்டார்.

            “நம்மள சாமினு சொல்லிங்கிட்டிருந்தானுக, பேரக் கண்டாலே பயப்பானுக. இப்ப நம்ம பேரையே வெச்சுட்டு திரியுறானுக”

            “பேருல என்ன இருக்குதுங்க. பேருங்கறது யாருக்கும் பட்டா போட்டது இல்லையே.”

            “என்னடா எல்லா எகத்தாளம் ஆகிப்போச்சா…” என்று சலசலப்பு அதிகரிக்கத் தொடங்கியதும் ஜித்தேஷ் வேகமாக வந்து “வாடா போலா” என்று சின்னமலையை இழுத்தான்.

            “டேய், ஜித்தேஷ், எங்கடா போற” என்று ஓடிவந்தாள் கலைவாணி.

            “எனக்குப் பசிக்குதுமா, நா இவ வீட்டுக்குப் போற” என்று சின்னமலையின் தோள்மீது கைபோட்டுத் திரும்பினான்.

            “டேய் வாடா நா உனக்குப் போட்டுத்தர”.

            “போமா…”

            “ஜித்தேசு வந்துரு, இல்லைனா அம்மா ஊருக்குப் போயிருவ..”

            “வர, இவனுக்கும் சேத்து போட்டுத்தா”

            “சரி அவனுக்கு  இலையில இங்க போட்டுக்கலா, நீ உள்ள வா”

            “முடியாது, அவனுக்கு உள்ளதா சாப்பாடு போடணும்”

            “டேய் சாமி, அவங்க வேற ஆளுகளாம். நம்ம வீட்டுக்குள்ள வந்தா தீட்டாயிடுமாம், நீ வா.” என்று கெஞ்சினாள் கலைவாணி,

            “வேற ஆளுகன்னா? தீட்டுன்னா?”

            அவளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

            “திமிராயிப்போச்சுடா உனக்கு” என்று மாரிமுத்து ஜித்தேஷை ஓங்கி அடித்தான். “கெட்ட வார்த்தை பேசினியல்ல, எங்கூட ஒட்டாத போ, நீ அசிங்கம்” என்று அவனைத் தள்ள முயற்சித்தான் ஜித்தேஷ்.

            மாரிமுத்துவிற்கு முகம் சுருங்கிப்போனது. இவனுக்கு “எப்படிடி சொல்லி புரியவச்சு மனச மாத்துறது” என்று கலைவாணியிடம் மன்றாடினான்.  

            “அவன் சரியாகத்தான் இருக்கிறான். மாறவேண்டியது நீங்கதான்” என்று கலைவாணி கூட்டத்தின் நடுவே கத்தினாள். மகனை அடித்ததற்காகவா? இல்லை அவள் மனதிற்குள் படிந்து கிடந்த சிந்தனை வெளிப்பட்டதாலா? தெரியவில்லை.  

            “சரி வாங்க மூணு பேருக்கும் சோறு போடுற.”

            மாரிமுத்துவும், ஈஸ்வரனும் திகைத்துப்போய் நின்றனர். “எங்களுக்கெதிராவே நடக்கிறியா” என்று கலைவாணியிடம் சீறினான் மாரிமுத்து.

            “நா உங்களுக்கெதிரா நடக்கல, இந்த சாதி மசுருக்கெதிராத்தான் நடக்குற” என்று மூவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள் கலைவாணி. மூவரையும் அமர வைத்து சாப்பாடு பரிமாறினாள்.

            “நீ சாப்டியா அம்மா”

            “நீங்க சாப்புடுங்க, அப்புறம் நா சாப்டுக்குற.”

            “ம்ஹூம் முடியாது, நீயு உக்காரு” என்றான் ஜித்தேஷ்.

            நால்வரும் உணவைப் பரிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்.

Leave a comment

Trending