
இ.கலைக்கோவன், ஈரோடு
– e.kalaikovan@gmail.com
முன்னுரை:
“இவ்வுலகம் இனிது
இதிலுள்ள வான் இனிமையுடைத்து
காற்றும் இனிது தீ இனிது
நீர் இனிது நிலம் இனிது
ஞாயிறு நன்று திங்களும் நன்று
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன
மழை இனிது மின்னல் இனிது இடி இனிது
கடல் இனிது மலை இனிது காடு நன்று
ஆறுகள் இனியன
உலோகமும் மரமும் செடியும் கொடியும்
மலரும் காயும் கனியும் இனியன
பறவைகள் இனியன ஊர்வனவும் நல்லன
விலங்குகளெல்லாம் இனியவை
நீர் வாழ்வனவும் நல்லன
காத்தல் இனிது
காக்கப்படுதலும் இனிது…. “
இப்படித்தான் பாரதி இயற்கையைக் காண்கிறான். உலக உயிர்கள் யாவும் இயற்கையை இப்படியான சொற்களில் கொண்டாடவில்லை எனினும் தன் வாழ்வியல் நெறியில் இயற்கையைக் காப்பதும் இயற்கையால் காக்கப்படுவதும் இனிதென வாழ்கின்றன. ஒரு சிங்கம் பிறக்கிறது; சாப்பிடுகிறது; வளர்கிறது; குட்டி போடுகிறது; சாகிறது. காகம் பிறக்கிறது; சாப்பிடுகிறது; வளர்கிறது; குட்டி போடுகிறது; சாகிறது. இப்படி பல்லாயிரக்கணக்கான உயிர்களும் இவ்வுலகில் தினம்தினம் செய்து கொண்டே இருக்கின்றன. இதற்கு நடுவே அவை தங்கள் இனத்தைத் தக்க வைக்க சூழலுடன் போராடிக் கொண்டிருக்கின்றன. இதைத்தான் வாழ்க்கை என்கிறோம். எந்த உயிரும் பிறந்ததற்கான அர்த்தமாக நாம் என்ன சாதித்து விட்டு சாகிறோம், என்று எண்ணுவதே இல்லை. ஏனென்றால் அவை தன்னை இந்த இயற்கையின் ஒரு அங்கமாக உணர்கின்றன. இயற்கையிலிருந்து மேம்பட்டதாகவோ, இயற்கையைத் தன்னிலிருந்து விலக்கியோ ஒரு நாளும் உணர்வதே இல்லை. அதற்குக் காரணம் ஒன்றே. அவை இந்த இயற்கையிடமிருந்து தனக்குத் தேவையானதை மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. தேவைக்கு மிகுதியை ஒரு நாளும் நாடியது இல்லை. ஆனால் இதையெல்லாம் மீறிய ஒரு உயிரினம் உலகில் உண்டென்றால் அது மனித இனமே.
மனிதனின் அளவில்லாத நுகர்ச்சியும், தேவைக்கு மிஞ்சிய எதிர்பார்ப்பும், அதற்காக அவன் பயன்படுத்தும் தொழில்நுட்பமும், கண்டுபிடிப்பின் நோக்கத்தை மாற்றி பயன்படுத்தும் அறிவியலும் இயற்கையின் மீது மிகப்பெரிய போரினைத் தொடுத்துள்ளது. இந்த போரின் விளைவால் முதலில் மாண்டுபடப்போவதும் தான்தான் என்பதையறியாது போரினை இயற்கையின் மீது மனிதன் நடத்திக் கொண்டிருக்கிறான். இதற்கு மனிதன் வைத்திருக்கும் பெயர் ‘வளர்ச்சி‘.
மனிதன் எதை வளர்ச்சி என்றே அறியாது நடந்து கொள்கிற அறிவிலித்தனமே, இன்றைக்கு உலகை அச்சுறுத்தும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இயற்கையின் அழிவு எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்றே அறியாமல் நடத்தப்பட்ட ‘வளர்ச்சி‘ சித்தாந்தம் இன்றைக்கு ‘காலநிலை மாற்றம்’ என்ற வடிவத்தில் அசுரனாக வந்து நிற்கிறது.
மிகமிகத் தாமதமாகவே மனிதன் இதை உணரத் தொடங்கியுள்ளான். இனியாகிலும் இதை மனிதன் சரி செய்ய நினைக்கவில்லையென்றால் அடுத்த தலைமுறைக்கான பூமி என்பது வெறும் நெருப்புப் பந்தாகத்தான் இருக்கும். இந்தத் தலைமுறை தவறின் விளைவு பூமி சூடேற்றம். அதன் காரணங்களை ஆய்வதும் அதற்கான தீர்வினை முன்வைப்பதும் இக்கட்டுரையின் நோக்கம்.
சூடடையும் பூமி:
பூமியின் வெப்பம் 16 டிகிரி செல்சியசாக இருக்கும் பட்டத்தில் பூமியில் உயிரினத் தோற்றமானது இயல்பாக நடைபெறும். இந்த வெப்பத்தை பூமியில் உள்ள தாவரங்கள் வெளியேற்றும் கார்பன்-டை-ஆக்ஸைட்டின் மூலமும் பத்தாததற்கு சூரியனின் வெப்பத்திலிருந்தும் பெற்றுக்கொள்கிறது. பூமி தக்க வைத்துக் கொண்டது போக அதிகப்படியான வெப்பத்தை இரவில் பூமியிலிருந்து மேல் நோக்கிய வீச்சாக பூமியே வெளியேற்றிவிடுகிறது. இது இயற்கையின் சமன்பாடு. இந்த வெப்பத்தின் அளவு குறையும் போது பூமி மைனஸ் 19 டிகிரி வரையிலும் வெப்பம் குறைந்து உயிரினத் தோற்றத்திற்கு வழியில்லாமல் போகலாம். இந்த வெப்பம் கூடும் பச்சத்தில் 16 டிகிரி செல்சியசிற்கு மேல் சென்று பூமி சூடேறத் தொடங்கலாம். இன்றைக்கு சூடேறும் நிகழ்வே பூமியில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
பூமி இயற்கையாக இரவில் வெளியேற்றும் கார்பன்-டை–ஆக்சைடை விடவும் அதிகப்படியாக மனிதன் செயற்கையான முறையில் தொழிற்சாலை, வாகன, மின்னணு இயந்திரங்களின் மூலம் வெளியேற்றுகிறான். அந்த கார்பன்-டை-ஆக்ஸைடு சூரியனிலிருந்து வரும் வெப்பத்தை இரவில் வெளியேற்ற விடாமல் பூமியிலேயே தக்க வைத்துவிடுகிறது. இப்படி தக்க வைக்கப்பட்ட வெப்பம் பூமியின் இயல்பான சூட்டை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
வேதியிலுக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அர்ரீனிஸ் 1896 ல் கூற்று ஒன்றினைத் தெரிவித்தார். பூமியில் புதைந்து கிடக்கும் தொல் எரிபொருட்களைப் பயன்படுத்துவதால், இன்னும் மூவாயிரம் ஆண்டிற்குள் பூமியின் வெப்பம் 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் உயரும் என கணக்கிட்டு அவர் கூறினார். ஆனால் தற்போதைய பூமி சூடேறும் தன்மையைப் பார்த்தால் 21 ம் நூற்றாண்டிற்குள்ளாகவே பூமி 1 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக தொழிற்புரட்சிக்குப் பின்பாக நிலக்கரி, டீசல், பெட்ரோல் என பூமியின் புதை எரிபொருள்களை அதிகம் பயன்படுத்தியதால் கார்பனை மறுசுழற்சிக்கும் பயன்படுத்த முடியாமல் பூமி மூச்சுத் திணறி வருகிறது என்கின்றனர்.
காரண கர்த்தா:
பூமிப்பந்தின் வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் இந்த கார்பன், செயற்கையாக எப்படியெல்லாம் வெளியேற்றப்படுகிறது என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்திக் கொள்வோம். அதன் மூலம் இதனை வெளியேற்றுபவர்கள் யார்? எதற்காக வெளியேற்றப்படுகிறது ? அதைத் தடுப்பதற்கான தீர்வு என்ன? என்பதை ஆயமுடியும்.
கார்பனை செயற்கையாக வெளியேற்றும் காரணிகள். :
I. நிலத்தில் புதைத்து கிடக்கும் கார்பன் பொருட்களை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துவது.
II. மின்சாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல். (இப்பொருட்களிலிருந்து 85 விழுக்காடு கார்பன் வெளியேற்றப்படுகிறது.)
III. தொழிற்சாலை, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வெளியேற்றும் கார்பன்.
இந்த அடிப்படைக்காரணிகளாலும் இதன் துணைநிலைக் காரணிகளாலும் கார்பன் மிகை அதிகமாக வெளியேற்றப்படுகின்றன. இப்படி உலகம் முழுவதும் பயன்பாட்டால் வெளியேற்றப்படும் கார்பனில் 70 விழுகாடு அளவிற்கு வளர்ந்த நாடுகளே வெளியேற்றுகின்றன. அதிலும் உலக மக்கள் தொகையில் 4 விழுக்காடு மட்டுமே இருக்கும் அமெரிக்கா 25 முதல் 35 விழுக்காடு கார்பன் மாசுவை வெளியேற்றுகிறது. ஆனால் உலக மக்கள்தொகையில் 12 விழுக்காடுள்ள ஆப்பரிக்காவோ 3.2 விழுக்காடே கார்பன் மாசுவை வெளியேற்றுகிறது என்றால் வளர்ந்த நாடுகளின் வாழ்வியல், பொருளியல், சூழலை நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர நாடுகள் இன்று தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை வளர்ந்த நாடுகள் மீது வைப்பதன் விளைவாகவும், இயற்கையாகக் கிடைத்த தொல் எரிபொருட்களின் அளவு குறைந்து வருவதாலும் வளரும் நாடுகள் தனது எரிபொருள் தேவையை விவசாயத்தின் மீது திருப்பியுள்ளது.
இதனை பிடல் காஸ்ட்ரோ, “பணக்கார நாடுகள் எரிபொருள் உற்பத்திக்காக பிரேசில் போன்ற நாடுகளில் விவசாய நிலங்களை வாங்கத் தொடங்கியுள்ளன. சோளக்கதிர், பார்லி மற்றும் சிறு தானியங்களில் பெரும்பகுதி எத்தனால் உற்பத்திக்குத் திருப்பி விடப்பட்டு இருப்பதால் மிகப்பெரிய உணவுப் பஞ்சத்திற்கும் விலையேற்றத்திற்கும் இது வழி வகுக்கும். எனவே உணவுப் பொருட்களை எரிபொருளுக்குத் திருப்பிவிடும் அமெரிக்கக் கொள்கையை எதிர்க்க வேண்டும்.” என்கிறார். இதில் அமெரிக்கக் கொள்கை என்பது என்ன? முதலாளித்துவக் கொள்கையே முதலாளித்துவக் கோட்பாட்டின் அடிப்படைதான் இங்கு அனைத்தின் அழிவிற்கும் குறிப்பாக பூமி வெப்பமடைதலுக்கும் காரணமாக இருக்கிறது.
உணவுப் பொருட்களை எரிபொருள் உற்பத்திக்கு திரும்பிவிட்டால் 80 கோடி பேர் உல்லாசமாகக் காரில் சென்று கொண்டிருப்பர். 200 கோடி பேர் உணவுத்தேவைக்காத அலைந்து கொண்டிருப்பர். உலகம் 80 கோடி பேருக்கானதா? 200 கோடி பேருக்கானதா? அத்தனை உயிரிகளுக்குமானதா? முதலாளித்துவ நாடுகள் தங்கள் கொள்கையையும் தேவையையும் மாற்றிக்கொள்ளாவிட்டால் உலகம் வெப்பமடையும், உணவுப் பஞ்சத்தில் மாண்டும் போகும். முதலாளித்துவத்தின் இந்த இயற்கை அழிப்பிற்கு அவர்கள் சொல்லுகிற நியாயம் ‘வளர்ச்சிவாதம்’. இது உண்மையில் பேரழிப்புக் கோட்பாடு. இது அபரிமிதமான தொழில் வீக்கத்தை ஏற்படுத்தி சுற்றுச்சூழலை பாழ்படுத்துகிறது. இதை மிகத்தாமதமாக உணர்ந்த உலக நாடுகள் ஐ.நா வின் மூலம் 2015 ல் பாரிசில் காலநிலை மாநாட்டினை நடத்தி சில முடிவுகளை மேற்கொண்டனர். “இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவி வெப்பமாதலை 2 டிகிரி செல்சியசிற்குள் குறைக்க வேண்டும் அனைத்து நாடுகளும் இதைக் கட்டாயம் ஏற்க வேண்டும்.” என்ற அம்முடிவு பிரகணப்படுத்தப்பட்டது. இதற்கு “நாடுகள் தீர்மானிக்கும் பங்களிப்பு“ (Nationally Determined Contribution–NDC) எனப் பெயர் சூட்டப்பட்டது.
மேலும் இந்தத் தீர்மானத்தின்படி ஐந்தாண்டுகள் கழித்து உலக வெப்பம் ஆய்வு செய்யப்பட்டு அடைந்திருக்கும் இலக்கு குறித்து கூட்டம் நடத்தப்படும். இதில் உலக நாடுகளின் முழுமையான பங்களிப்பு ஆய்வு செய்யப்பட்டு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் ஐந்து ஆண்டு கழித்து நடைபெற வேண்டிய மாநாடு கொரொனா தொற்றின் காரணமாக 2021 அக்டோபர் 31 முதல் நவம்பர் இறுதி வரை நடைபெற்றது. அம்மாநாட்டில் சில நோக்கங்கள் அறிவிக்கப்பட்டன. அவை,
I. நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவளி, ஆகிய படிம எரிபொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்துவதற்கான கால அட்டவணையை முடிவு செய்வது.
II. ஏற்கனவே 2009 கோபன்ஹேகன் மாநாட்டில் அறிவித்தவாறு புவி வெப்பமாதலுக்குக் கூடுதல் பொறுப்பான வளர்ச்சியடைந்த நாடுகள், இந்தச் சூழலியல் பேரழிவால் பாதிக்கப்படும் பின்தங்கிய நாடுகளுக்கு வழங்குவதற்காக ஆண்டுதோறும் 100 கோடி டாலர் ஒதுக்குவது.
III. புவி வெப்ப உயர்வால் பேரழிவை சந்தித்து வரும் தீவு நாடுகள் உள்ளிட்ட பின்தங்கிய நாடுகளுக்கு இந்த நிதியிலிருந்து இழப்பு மற்றும் சேதங்களுக்கான இழப்பீடு வழங்குவது.
இதில் வேதனையான செய்தி இந்த மாநாட்டுத்தீர்மானம் முற்றிலும் தோல்வியடைந்தது என்பதே. இதனை இம்மாநாட்டில் கலந்து கொண்ட மாலத்தீவின் பிரதிநிதி ஷாகுனா அமீநாத் பின்வருமாறு கூறினார்.
“ 1.5 டிகிரி செல்சியசிற்கும் 2 டிகிரி செல்சியசிற்கும் இடையிலுள்ள வேறுபாடு கூட எங்களுக்கு (தீவு நாடுகளுக்கு) விதிக்கப்பட்ட மரண தண்டனையாகும்.” என்றார்.
இந்த வேதனையானச் சூழலில். “புவி காக்கும் கடமை, மாநாட்டு அரங்கத்தில் அல்ல வீதிகளில் இருக்கிறது.” என்று கூறி மாநாட்டிற்கு வெளியில் திரண்டிருந்த சூழலியலாளர்கள் கலைந்து சென்றனர். இந்த ஒட்டுமொத்த தோல்விக்கும் முதலாளிய நாடுகளின் வளர்ச்சிவாதமே காரணமாக அமைந்தது. இந்த மாநாட்டின் தோல்விக்கு அமெரிகா மட்டுமல்ல இந்தியானம் ஒரு காரணம் என்பது வேதனையிலும் வேதனை.
தீர்வு:
மாநாட்டின் தோல்விக்கு வளர்ச்சிவாதம் காரணம் என்பதால் வளர்ச்சியை முற்றிலும் புறந்தள்ளிவிடலாமா? வளர்ச்சியற்ற பின்நோக்கிய நகர்வை உலகு ஏற்றுக்கொள்ளுமா? அல்லது வளர்ந்தவரை இப்படியே நிலைநிறுத்திக் கொள்ளலாமா? எதுதான் தீர்வாக அமையும் ? வளர்ச்சியற்ற சூழலில், வளர்ந்து வருகிற மக்கள் தொகைக்கேற்ப இயற்கையை எப்படி பகிர்ந்தளிப்பது?
1834 முதல் 1896 -வரை வாழ்ந்த கவிஞரும், மார்க்சிய சிந்தனையாளருமான வில்லியம் மோரிசின் தனது நாவலான, “எங்குமில்லாத இடத்திலிருந்து ஒரு செய்தி” என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார். “உலகச் சந்தையைத் தூக்கியெறிந்தால், அச்சமூகத்தில் செயற்கையான தேவைகளுக்கான இலாப நோக்கத்தில் நடைபெறும் பொருளாதார உற்பத்தியின் வீணடிப்பு வடிவங்கள் மறைந்துவிடுகின்றன. உண்மையான பயன்பாட்டுக்குத் தவிர வேறு எதையும் உற்பத்தி செய்யாத வகையில் உற்பத்தி மறு அமைப்பாக்கம் செய்யப்படுகிறது.” என்கிறார். இந்தக் கூற்றின் அடிப்படை சமூகம் இயற்கையிலிருந்து தேவைக்கு மட்டுமே பெற்றுக்கொள்வது. இலாபத்திற்காக இயற்கையைச் சுரண்டுவது கூடாது என்பது ஆகும்.
இதையே மார்க்ஸ், ‘மாண்ணிலிருந்து அந்நியமாதல்‘ என்ற கோட்பாட்டின் மூலம் விளக்குகிறார். “குடியேற்ற நாடுகளின் தொழிற்துறைக்கு தேவையான தொழிலாளர்களை மலிவான கூலிக்குப் பெற ஒரே வழி நிலத்தின் விலையை செயற்கையாக உயர்த்துவது. இல்லாவிட்டால் சுதந்திர தொழிலாளர்கள் சிறு நில உடைமையாளர்களாக மாறிவிடுவர். இந்த மண்ணிலிருந்து அந்நியமாக்கப்பட்ட மக்கள் சுதந்திர கூலிகளாக நிலத்திலிருந்து பிரிக்கப்படுவது, தான் பாலுண்டு வளர்த்த மார்பகத்திலிருந்து புவியின் குழந்தைகள் பிரிக்கப்படுவதற்குச் சமம்.” இதனை சுட்டிக்காட்டுவதன் மூலம் வேளாண் துறைக்கும், தொழிற்துறைக்குமான இடைவெளியை குறைத்து சீரான பரவலான வளர்ச்சியை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பதையும் சுட்டுகிறார் மார்க்ஸ். இது இலாபம் நோக்கிய உற்பத்தியல்லாத தேவை நோக்கிய உற்பத்தியை முன்வைப்பது ஆகும். இதனை இயற்கையுடனான மனிதத் தொடர்பை அதிகப்படுத்தும் முயற்சியாகவும் நாம் புரிந்து கொள்ள முடியும். இதனையே மார்க்ஸ், “இயற்கை மனிதனின் உயிர்மமற்ற உடலாகும். அதாவது இயற்கை மனித உடலல்ல. மனிதன் இயற்கையிலிருந்து வாழ்கிறான் அதாவது இயற்கை அவனது உடலாக உள்ளது. இறவாமல் இருக்க வேண்டுமானால் மனிதன் அதனுடன் தொடர்ந்த உரையாடலில் இருக்க வேண்டும். மனிதனின் உடல் சார்ந்த மற்றும் அறிவு சார்ந்த வாழ்வு இயற்கையுடன் இணைந்துள்ளது எனக் கூறுவதன் பொருள் இயக்கம் இயற்கையுடனேயே இணைத்துள்ளது என்பதுதான். ஏனென்றால் மனிதன் இயற்கையின் ஒரு பகுதி.” என்கிறார்.
முதலாளியம் இயற்கையை தன் இலாபத்திற்கான ஒன்றாக நினைக்கிற போது அதனை மறுத்து மார்க்ஸ் மனிதனும் இயற்கையும் வேறு வேறல்ல. அவனும் இயற்கையும் ஒன்று. அதனை தேவை கருதி மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் முதலாளியம் முன்வைக்கிற வளர்ச்சி என்பது வேறு மார்க்ஸ் முன் வைக்கிற வளர்ச்சி என்பது வேறு என்பதை உணர முடியும்.
காடோடி நாவலில் நக்கீரன் முதலாளிய சிந்தனை பற்றி கூறும்போது, “மரம் என்றால் அது இலைகள் அல்ல. பூக்கள் அல்ல. காய்கள் அல்ல. கனிகளும் அல்ல. ஏன் அது மரமே அல்ல. மரம் என்றால் அது வெறும் டாலர், டாலர், டாலர் மட்டுமே” என்கிறார்.
அவர் கூற விளைவது, முதலாளியத்தின் வளர்ச்சிவாதம் என்பது அனைத்தையும் முதலாகவும் அதிலிருந்து இலாபத்தை மேலும் இலாபத்தை மேலும் மேலும் இலாபத்தை பெறுவது எப்படி என்று மட்டுமே சிந்திக்கும். இயற்கையின் பேரழிவைப் பற்றி அது சிந்திக்காது என்பதே.
தொழில் புரட்சிக்கும் பின்பான முதலாளியம் தொழில் போட்டியை உருவாக்கியது. தொழிற் போட்டியைப் பற்றி சே குவரா கீழ்கண்டவாறு கூறுகிறார். “முதலாளியம் விலை, தரம் இவற்றுக்காகத் தன் போட்டி நிறுவனங்களுடன் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது“. இப்படி தொழில் போட்டியில் உருவான முதலாளியச் சிந்தனை மூலதனக் குவிப்பையும் இலாப வெறியையும் அதிகரித்தது. விளைவு மனித உழைப்புச் சுரண்டல் மற்றும் இயற்கைச் சுரண்டல். இந்த இரண்டும் தான் உபரி மதிப்பாக மாறி இலாபத்தை அதிகரிக்கச் செய்கிறது. எனவே இச்சுரண்டலை எதிர்க்கிற பொதுவுடைமைச் சித்தாந்தத்தை இயற்கையை மீட்டெடுக்கும் சித்தாந்தமாக முன்வைக்கலாம். பொதுவுடைமைச் சித்தாந்தம் வளர்ச்சிக்கு எதிரான சித்தாந்தம் இல்லை. அறிவியலை புறக்கணிக்கிற சித்தாந்தமில்லை. இவ்விரண்டையும் மனித சமூகம் ஆக்கத்துடன் பயன்படுத்துவது குறித்த கருத்துப் பெட்டகம். அந்தக் கருத்துப் பெட்டகத்தை உள்வாங்கிக் கொள்வதும், குறிப்பாக இந்தியா போன்ற பன்மைத்துவம் வாய்ந்த நாடுகளில் செயல்படுத்தத் திட்டங்கள் வகுப்பதுமே இன்றைய இயற்கை மீதான தாக்குதலுக்கு தீர்வாக அமையும்.
இந்தியாவின் இலக்குகள் :
சூழலியலியல் பிரச்சனைக்கான இந்திய இலக்குகளையுமே நாம் மார்க்சிடமிருந்து கண்டடைய முடியும். சூழலியலுக்கான அழிவு தொடங்குவது பொருளியலிலிருந்து. எனவே தீர்வையும் தொலைத்த இடத்திலிருந்து தேடுவது தான் சரியாக இருக்கும். அந்த அடிப்படையில் உலக பொருளியலுக்கான தீர்வையும் கோட்பாட்டையும் வழங்கிய மார்க்சிடமே சூழலியலுக்கான தீர்வையும் கண்டடையலாம்.
“உயர்வடிவ சமூகப் பொருளியல் அமைப்பு என்ற நிலையிலிருந்து நோக்கினால், சக மனிதனை ஒரு மனிதன் தனது உடைமையாக்குவது எவ்வளவு முட்டாள்தனமோ அது போல இப்புவியின் மீது ஒரு தனிமனிதன் உடைமை, உரிமை கோருவதும் முட்டாள்தனமானது என்று விளங்கும். ஒரு முழுச் சமூகமோ, அல்லது ஒரு தேசமோ, அல்லது ஒரு காலத்தில் நிலவும் சமூகங்கள் அனைத்தும் இணைந்தோ கூட, புவியின் உடைமையாளர்கள் என கூறிக்கொள்ள முடியாது. அவர்கள் இந்தப் பூமியின் துய்ப்பாளர்கள், பயனாளிகள் அவ்வளவுதான். அவர்கள் ஒரு நல்ல குடும்பத்தின் தலைவன் போல் நடந்து கொள்ள வேண்டும். இப்போது உள்ளதைவிட உயர்நிலையில் இந்த பூமியை அடுத்த தலைமுறையிடம் கையளித்த வேண்டும்.” என்கிறார் காரல் மார்க்ஸ்.(Capital 3rd vol.p-911) பொருளியல் கோட்பாட்டை வகுக்கிற ஒருவருக்கான சூழலியல் பிரஞ்ஞை இது.
இக்கூற்றினைத் தொடர்ந்து மார்க்ஸ் தனது கருத்தினை நிறுவும் முகத்தான் ‘வான் லீபிக்‘(van Leibig) ன் ‘வளர்ச்சிதைப் பிளவு’ (metabolic Rift ) என்ற ஆய்வை மேற்கோள் காட்டி எச்சரிக்கிறார்.
தொழில்த்துறை முதலாளியம் தலையெடுப்பிற்கு முன்னால் உற்பத்தி இடங்களைச் சுற்றியே நுகர்வோரும் இருந்தனர். வேளாண் உற்பத்தியானது அம்மண்ணின் நுண்ணுயிர்கள் உருவாக்கிய நுண்ணூட்டச்சத்தை உட்கொண்டே நடக்கிறது. இவ்வுணவுகளை உண்ணும் மனிதர்கள் உணவு எச்சத்தையும் மனிதக் கழிவையும் அம்மனிலேயே விட்டுவிடுகின்றனர். அது மண்ணால் உறிஞ்சப்பட்டு மறுஆக்க நுண்ணூட்டச் சத்தாக வெளிப்படும். ஆனால் முதலாளிய தொழிந்துறை தோன்றிய பின்னர் உற்பத்தி மையங்களும் நுகர்வோர் மையங்களும் வேறுவேறு இடங்களுக்கு வெகுதொலைவாகக் கொண்டு செல்லப்பட்டன. நுகர்வு மையமாக இருக்கும் நகரங்களின் கழிவுகள் ஆறுகளிலும், நீர் நிலைகளிலும் கலக்கப்பட்டு அவை மாசடைகின்றன. இப்போது மண்ணுக்கு மறுஆக்க நுண்ணூட்டச்சத்து கிடைப்பது இல்லை. எங்கோ விவசாய நிலத்தில் உறிஞ்சப்பட்ட நுண்ணூட்டங்களும் வேறு எங்கோ எடுத்துச் செல்லப்பட்டுவிடும். இப்படி உயிர்மச் சுழற்சியில் நிகழும் முறிவே, ‘வளர்ச்சிப் பிளவு’ (metabolic Rift) என கூறப்படுகிறது. இதனை மார்க்ஸ் மேற்கோள்கிறார். மார்க்சின் மேற்கோளினை ஒட்டி நோக்கும் போது, இந்தியா போன்ற வளரும் நாடுகளின் இயற்கை மீதான பங்களிப்பு என்பது,
I. தேவையானவற்றை உற்பத்தி செய்வது.
II. உற்பத்திக் கூடங்களுக்கான இடைவெளியைக் குறைப்பது.
III. மிகை உற்பத்திக்காகவும், யாரோ ஒரு சிலரின் இலாப நோக்கத்திற்கானதாக உற்பத்தி முறையை மாற்றாதிருப்பது.
IV. தனி மனித நுகர்வின் போக்கைக் குறைத்தல். அதற்கான கார்பன் சார்ந்த எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, வற்றாத இயற்கை மூலங்களைப் பயன்படுத்த வழி வகை காணுதல்.
V. உயர் பயன்பாட்டு பெருங்கட்டடங்களின் ஆற்றல் நுகர்வை 25 விழுக்காடு குறைத்தல்.
VI. காடுகள் அழிப்பினை தடுத்தல், புதிதாக மரம் நடுதல்.
VII. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கூட்டுறவுத்தன்மையுடன் கூடிய தொழிற்சாலைகளை ஏற்படுத்துதல்.
VIII. மக்கள் கூட்டமாக ஓரிடத்தில் குவிவதைத் தடுத்தல்.
IX. உற்பத்திசார் தொழில்களில் தொழிலாளர்களை அனைத்திற்குமான அங்கமாக மாற்றுதல் (உழைப்பை விற்பது மட்டும் தொழிலாளியின் வேலையில்லை. அனைத்தையும் கண்காணிப்பவராகவும் அவர் மாற வேண்டும்.)
X. சூழலியல் அழிவிற்கும், உடல் நலத்திற்கும் தீங்கானவற்றை உற்பத்திசெய்யும் மையங்களின் கண்காணிப்பாளர்களாக, அப்பகுதி மக்களும் அங்கம் வகிக்கும் வகையில் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும்.
XI. தனிச் சொத்துகளுக்கு மாறாக, அனைத்து இயற்கை வளங்களும் ஆலை மற்றும் அலுவலகம், கடைகள் மக்களால் கூட்டாகப் பொறுப்பேற்று நிர்வகிக்கப்படவேண்டும்.
XII. தவிர்க்க முடியாமல் செயல்படுகிற தனியார் நிறுவனங்களில் அரசு மற்றும் பகுதிசார் மக்களின் நேரடி கண்காணிப்பு இருக்க வேண்டும்.
இவையனைத்தும் இன்றைய அரசியல், மக்களாட்சி கட்டமைப்பில் முழுமையாக செயல்படுத்தப்படுதல் என்பது சிரமமானது. என்றாலும் இன்னும் சில பத்தாண்டுகளில் இந்த இலக்கை நோக்கிச் செல்லாவிட்டால் இயற்கை வழங்கப்போகிற தண்டனையை ஏற்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.
மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம் என்ற சிறிய நூலில் ஏங்கல்ஸ் கீழ்வருமாறு தெரிவிக்கிறார். “ இயற்கையை மனிதன் தாக்கினால் ஒரு கட்டத்தில் இயற்கை திருப்பித்தாக்கும்” என்று. இயற்கையின் தாக்குதலை எதிர் கொள்ளும் சக்தி மனிதனுக்கு இல்லை. மனிதன் பிரபஞ்சத்தின் ஒரு துளி. ‘இழப்பதற்கு ஒன்றுமில்லை அடைவதற்கு ஒரு பொன்னுலகம் இருக்கிறது.’ என்றார் காரல் மார்க்ஸ். இருக்கிற அந்த பொன்னுலகை அழிவுபடாமல் பொன்னுலகமாகவே அடுத்த தலைமுறையிடம் வழங்குவது நம் அனைவரின் கடமை.
–
துணை நூற்பட்டியல்:
1. மார்க்சும் சூழலியலும் – ஜான் பெல்லமி பாஸ்டர் (தமிழில்: மு.வசந்தக்குமார்)
2. பட்டினி புரட்சி – பரிதி
3. சூழலியல் அறிவியல் பொருளியல் – கி.வெங்கட்ராமன்
4. ஒப்புரவு என்னும் மாற்று – மைக்கேல் லெபோவிட்ச் (தமிழில்: பரிதி)
5. சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு – ராமச்சந்திர குஹா (தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்)
6. கார்ப்பரேட் கோடாரி – நக்கீரன்
7. சூடேறும் பூமி – பொ.ராஜமாணிக்கம்
8. காடோடி – நக்கீரன்
9. பாரதியார் கவிதைகள் – பாரதியார்.

Leave a comment