

அஸ்வகோஷ் எனும் இராசேந்திரச் சோழன்
(17.12.1945 – 01.03.2024)
அரசியல் களத்திலும் எழுத்துப் புலத்திலும் தொடர்ந்து
காத்திரமாக இயங்கிய படைப்பாளி
அஸ்வகோஷ் எனும் இராசேந்திர சோழனுக்குப்
புகழ் வணக்கம்.
தமிழ்த் தேசியச் சிந்தனையாளரும் மண்மொழி இதழின் ஆசிரியருமான தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளுமை அஸ்வகோஷ் என்கிற இராசேந்திர சோழன்(79) 2024 மார்ச் முதல் தேதி அன்று இயற்கை எய்தினார். உளுந்தூர்பேட்டையில் பிறந்தவர் என்றாலும் 1968இல் ஆசிரியராக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் உள்ள மயிலத்தில் பணியில் சேர்ந்ததிலிருந்து அந்தப் பகுதியைத் தன்னுடைய தாய்நிலமாகப் பாவித்துக்கொண்டு களப்பணியாற்றியவர். தொடர்ந்து 20 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு விருப்ப ஓய்வு பெற்றவர்.
தான் பணியாற்றிய காலத்திலேயே இடதுசாரி இயக்கம் சார்ந்து காத்திரமாக இயங்கத் தொடங்கினார். புனைவு இலக்கியத்திற்கும் முற்போக்குக் கருத்து உலகிற்கும் 1970 முதல் தன்னுடைய எழுத்துக்களால் இயக்கம்சார் சிந்தனைகளால் மிகச் சிறந்த படைப்புகளைத் தமிழில் படைத்தார். அரசுப்பணி தன்னுடைய எழுத்துக்குத் தடையாக இருக்கும் என்பதால் ’அஸ்வகோஷ்’ எனப் புனைபெயரை உருவாக்கிக் கொண்டார். அப்பெயரிலேயே தொடர்ந்து இயங்கினார். டால்ஸ்டாய், கார்க்கி, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் ஆகியோரின் எழுத்துகள் இவரைக் கவர்ந்த எழுத்துகளாகும்.
1971இல் ஆனந்த விகடன் நடத்திய தென்னார்க்காடு மாவட்டத்துக்கான சிறுகதைப் போட்டியில் ’எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரம்’ என்ற சிறுகதை மூலம் படைப்புலகில் அறிமுகமானார். இவரின் முதல் சிறுகதைத் தொகுதி ’பறிமுதல்’ என்பதாகும். பிறகு ’எட்டுக் கதைகள்’ என்னும் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது இவை இரண்டுமே மிகப் புகழ்பெற்றனவாகும். இதற்குப் பிறகு, 21வது அம்சம், பரிதாப எழுத்தாளர் பண்டித புராணம், கோணல் வடிவங்கள், புற்றில் உறையும் பாம்புகள் முதலிய கதைகளைப் படைத்தார். இவரின் இப்புனைகதைகளும் பலரின் கவனத்தை ஈர்த்தன.
சிறுகதைகளை எழுதுவதற்கு இவர் தனிப் பாணியைக் கையாண்டார். வட தமிழகத்தில் வாழும் அடித்தள மக்களின் வாழ்க்கையை அச்சு அசலாக அவர் பதிவு செய்தார். அதில் பொதுவுடமைத் தத்துவங்களைப் பேசினார். தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள் ஆகியவற்றில்கூடத் தன் பொதுவுடமை பார்வையை செலுத்தி மறுவுருவாக்கம் செய்தார்
இடதுசாரி இயக்கம் சார்ந்து இயங்கி வந்த சூழலில் தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டது. இந்தச் சங்கத்தை நிறுவிய முன்னோடிகளில் இவரும் ஒருவர் ஆவார். இயக்கத்தின் இதழான தீக்கதிர், செம்மலர் ஆகிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார்.
1982 சோவியத் ரஷ்யா உடைவுக்கு பிறகு தேசியம் குறித்த சொல்லாடல்களும் கருத்தாடல்களும் கூர்மை பெறத் தொடங்கின. இந்தியப் பண்பாட்டுத் தேசியம், தமிழ்ப் பண்பாட்டுத் தேசியம் ஆகிய உருவகங்கள் பேசுபொருள் ஆகின. இந்து தேசியம் என்பது மதம் சார்ந்ததும் சாதி சார்ந்ததும் மனுதர்மத்திற்கும் வர்ணாசிரமத்திற்கும் உட்பட்டு இறுக்கமான சாதியச் செயல்பாட்டை உள்ளடக்கியதாகும். இங்கு மதத்தின் கட்டுப்பாடான தன்மை சாதியை வார்த்தெடுத்தது. இடதுசாரி மார்க்சிய இயக்கங்களைப் பொருத்தவரை பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தி உழைப்பாளர் வர்க்கத்துக்கான மேம்பாட்டுக்கான செயல்பாட்டை நிகழ்த்தியது. அவர்களுக்கு இந்தியத் தேசியம் குறித்து ஒரு பிடிப்பு இருந்தது. அதேநேரத்தில் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசுவது அவர்களுக்கு உவப்பானதாக இல்லை. ஆனால் அஸ்வகோஷ்க்கு இதில் மாறுபட்ட கருத்து இருந்தது.
தேசிய இன விடுதலைக்கான தேடலையும் உள்ளடக்கியதுதான் மார்க்சியம். மார்க்சியம் வேறு; தேசியம் வேறு என்ற மனநிலை பொதுவாக உள்ளது. ஆனால் அப்படி இல்லை என்பது அவரது நிலைப்பாடு. ஆகவேதான் தமிழ்த் தேசியத்தின் மீது அரசியல் மீது பலமான நம்பிக்கை கொண்ட அவரைத் தமிழ் தேசியத்தை ஏற்று மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்கிற நோக்கில் தோன்றிய இயக்கங்கள் இயல்பாகவே ஈர்த்தன.
இடதுசாரி இயக்கத்தைவிட்டு அவர் விலகியதற்கு அஸ்வகோஷ் அவரின் படைப்புகளில் கையாண்ட, பேசிய கருத்துகளுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளும் ஒரு காரணமாகும். அவரின் படைப்புகள் கொஞ்சம் வித்தியாசமாக அமைந்தவையாகும். அதனுள் காணப்படும் கருத்தாடல்கள் இடதுசாரிகளுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தின அவரின், ’சிறகு முளைத்தது’ என்னும் குறு நாவல் இடதுசாரிகளுக்கும் அவருக்கும் விலக்கத்தை ஏற்படுத்தியது. அக்கதையில் குடிசைப் பகுதி இளைஞன் ஒருவன் வயதடைந்த பிறகு அரசியல் உணர்வு பெற்றவனாய் மாறுகிறான். அவனுடைய செயல்கள் குறித்த சித்திரிப்பும் தொழிலாளர்கள், பெண்கள் ஒழுக்கமற்றவர்களாக சித்திரித்ததும் இடதுசாரி வட்டாரத்தில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது இந்த எதிர்ப்போடு இறை நம்பிக்கையும் மதவெறியும் ஒன்று அல்ல என்னும் அவருடைய கருத்தும் பாலியல் சார்ந்தும் உளவியல் சார்ந்தும் அமைந்த அவர் எழுத்தும் கடும் விமர்சனங்களைப்பெற இயக்கத்தை விட்டு அவர் வெளியேறக் காரணமாயின.
சென்னை வந்த அவர் தோழர்களுடன் இணைந்து பிரச்சனை, உதயம் ஆகிய இதழ்களை நடத்தினார். பின்னர், தமிழ்த் தேசியம் மற்றும் தமிழ்ச் சமூகத்தின் சமூக மேம்பாட்டுக்காக, உரிமை மீட்டெடுப்புக்காக, ஈழத்தமிழர்கள் பாதுகாப்புக்காக ’மண்மொழி’ என்ற இதழை நடத்தினார். அந்த இதழில் ’நாலுவார்த்தை’ என்ற பெயரில் அவர் எழுதிய தலையங்கங்கள் சிறப்பு வாய்ந்தன.
அஸ்வகோஷ் தமிழின் மிகச்சிறந்த நவீன நாடக ஆசிரியராகவும் விளங்கியவர் ஆவார். இவர் நாடகம்மீது கொண்ட ஆர்வத்தால் ஊதியம் இல்லா விடுப்பு எடுத்துக் கொண்டு திண்டுக்கல்லில் நடந்த பாதல் சர்காரின் நாடகப் பயிற்சி பட்டறையில் இணைந்து பயிற்சி பெற்றார். அதன்பிறகு பல நாடகங்களை இயக்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விழாக்களில், மாநாடுகளில் நாடகங்கள் நிகழ்த்தினார். இந்த வகையில் நாடகம் இயக்குவதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடியாகவும் இவர் விளங்கினார். அதில் அவசர நிலைக்கு எதிரான அவரின் ’விசாரணை’ என்னும் நாடகம் முக்கியமானது. இந்நாடகம் பல ஊர்களில் நிகழ்த்தப்பட்டது அதன் பிறகு புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து அவர் எழுதிய ’நாளை வரும் வெள்ளம்’ என்கிற நாடகமும் சமகால அரசியலை, வாழ்வியலை விமர்சனத்திற்கு உள்ளாக்கும் ’வட்டங்கள்’ என்னும் நாடகமும் மிக முக்கியமானவையாகும்.
நாடகம் குறித்து மிகத் தெளிவாக கோட்பாடுகள் அவரிடம் இருந்தன. தமிழில் எதுவும் இல்லை என்கிற எதிர்மறைச் சிந்தனைப் போக்கையும் தமிழில் இல்லாதன இல்லை என்கிற மரபான சிந்தனைப் போக்கையும் அவர் கேள்விக்குள்ளாக்கினார். அவ்வக்காலச் சமூக அரசியல் பொருளாதாரக் கட்டுக்கோப்புகளின் பின்னணியில் புரிந்துகொண்டு, அதற்கிசைந்த வகையில் மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ்க் கலைகளை வளர்ப்பதும், அதை நவீனப்படுத்துவதுமான ஒரு பார்வையே தமிழுக்கு எப்போதும் தேவைப்படுவது. தமிழ் நாடகத் துறையில் இதுவே முதல் தேவை என்றார்.
ஒருமுறை நாடகச் செயல்பாட்டாளர் முத்து சண்முகம் அவர்கள், அதுவரை இருந்த கூத்து வடிவம் சங்கரதாஸ் சுவாமிகளால் மாற்றப்பட்டுப் புதுவடிவம் கொடுக்கப்பட்டது என்கின்ற கருத்தை நவீன நாடகம் குறித்த கருத்தரங்கின் கலந்துரையாடலில் முன்வைக்க, அக்கருத்தை மறுத்த அவர் அவ்வாறு சங்கரதாஸ் சுவாமிகள் புதுவடிவம் தெருக்கூத்துக்குத் தந்திருந்தால் கூத்துக்கலை அழிந்திருக்கும் என்று தன் கருத்தை முன்வைத்தார். மேலும் தெருக்கூத்து என்பது நாட்டிய சாஸ்திரத்தின் கூறுகளை உள்ளடக்கியது. பக்தி சார்ந்த கருத்துகளைச் சொல்வதற்கு சமஸ்கிருத நாடகத்தினுடைய உத்திகளையும் வடிவத்தையும் கொண்டுதான் தெருக்கூத்து வளர்ந்து இருக்க முடியும் என்கின்ற கருத்தைக் கொண்டவராக அவர் இருந்தார். அதேநேரத்தில் சமஸ்கிருதத்திலிருந்து கூத்து உண்டானது என்ற கருத்திலிருந்து அவர் மாறுபட்டார்
நவீனம் குறித்து கூறும் போது, ஒவ்வொரு காலத்திலும் அவ்வக்கால மக்களின் விழிப்புக்கும் மேம்பாட்டுக்கும் எது உதவுவதாக இருக்கிறதோ அதுவே அவ்வக் காலத்திலும் எத்துறையிலும் நவீனமாக இருக்கிறது. மாறிவரும் வாழ்க்கையைக் கலை இலக்கியங்களும் பிரதிபலிக்க வேண்டியுள்ளதால் கலை இலக்கியங்களும் அவ்வப்போது மாற்றங்களுக்கு உள்ளாகிறது. புதிய உருவங்களுக்காகத் தேடல்கொள்கிறது. இத்தேடல்களில் இருந்து நவீனம் பிறக்கிறது என்று நவீன இலக்கியம் சார்ந்த சிந்தனையும் அவருள் இருந்தது.
காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அஸ்வகோஷ், அவ்வக்காலப் படைப்பாளர்களின் ஈடுபாடும் திறமையும் உழைப்பும் மதித்து போற்றுதற்குரியவை என்றாலும் அவர்கள் இல்லாவிட்டால் அப்படைப்புகளே ஏற்பட்டிருக்காது என்கின்ற ஆபத்தான அறிவார்ந்த சிந்தனைக்குப் போக முடியாது. கொஞ்ச காலம் கடந்தாலும் ஒருவர் இல்லாவிட்டால் மற்றொருவரைக் கொண்டு காலம் அப்படைப்பை நிகழ்த்தியே தீரும் என்பது பொதுவான விதி என்கிறார். வரலாற்றின் பேரேட்டில் அவருக்கென்று ஒரு பக்கத்தைக் காலம் ஒதுக்கிவைத்துள்ளது. ஏனெனில், அஸ்வகோஷ் காலம் கண்டெடுத்த ஆளுமை.
முனைவர் கு. சுந்தரமூர்த்தி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
புதுக்கல்லூரி, சென்னை – 14
sundaramurthy@thenewcollege.edu.in
9962514140

Leave a comment