
கவிதை வழியாக
நான் முன்வைக்கும் மொழி அழகியலே
என் அரசியல்
(பொற்றாமரை 2055 மாசி இதழில் வெளியான குட்டி ரேவதியின் நேர்காணலின் தொடர்ச்சி)
கவிதாமணாளன்:
உங்களுடைய பார்வை என்பது எப்பொழுதும் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கமாகவே நிற்பதாய் உள்ளது. பெண்ணியம் பேசுவதாகட்டும், இசைக்குள் நீங்கள் போகும் போது, ஆபிரகாம் பண்டிதர் மீது கவனம் செலுத்துவதாகட்டும், நீங்கள் சிந்தித்து இப்படித்தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு போகிறீர்களா? இல்லை தன்னியல்பாகவே அந்தப் பக்கம்தான் உங்களால் போக முடிகிறதா?
குட்டி ரேவதி: நானே இதை இப்படி நினைத்து இருக்கிறேன். எப்படி இப்படி உருமாற்றம் பெற்றோம் என்று. வாழ்வின் நல்வாய்ப்புத்தான் அது. தொ.பரமசிவம் ஒரு தடவை, ஓர் உரையாடலின் போது சொல்கிறார், அவரைச் சந்தித்தபோது, அவருக்கு ஒரு கால் எடுத்திருந்தார்கள் ஒரு சிகிச்சைக்குப் பிறகு, அப்ப போனப்பச் சொன்னார், தமிழ் இசையும் சித்த மருத்துவமும் தமிழர்களின் இரு கண்கள் என்று சொல்கிறார்.
அதாவது வாழ்க்கை கொடுத்த கொடை என்றுதான் சொல்ல வேண்டும். நான் உண்மையிலேயே என் வாழ்வின்பாதையை நானே தீர்மானிக்கவே இல்லை.
‘நெஞ்சே எழு’ பாட்டை எழுதும்போது ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏதாவது அன்பளிப்பு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான் நான் தமிழிசை, கருணாமிருதசாகரம் போன்றவை தெரிந்திருந்த சமயம். அவருக்கு அந்த நூலை அன்பளிப்பாக கொடுத்தேன்.
அது ஒரு பெரிய நூல், ஒற்றை நூல் 1346 பக்கம் உள்ளது. கொடுத்தவுடனேயே புரட்டிப் பார்த்துவிட்டு, இந்த வட்டப்பாலை, ஆயப்பாலை எல்லாமே எனக்குத் தெரியுமே. நான் படிச்சிருக்கேன் என்கிறார். அவர் ஆப்ரகாம் பண்டிதரின் தோட்டத்தில் வேலை பார்த்த ஒருவரின் மகனிடம் படித்திருக்கிறார்.
ஆபிரகாம் பண்டிதர் எப்படி என்றால் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு எல்லாம் இசை சொல்லிக் கொடுப்பார். எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பார். அவர் பெரிய ஆளுமை, பெரிய பணக்காரர், தன் பொதுநல உழைப்பால் ஊரையே வளைத்துப் போட்ட சொத்துக்காரர். அவரைப்போல யாருமே கிடையாது. தோட்டத்தில் வேலை செய்பவர்கள், சமைப்பவர்கள், சமையல்காரர் பெண் என எல்லாரையும் கூப்பிட்டு வைத்து வீணை வாசிக்க கற்றுக் கொடுத்து விடுவார். அப்படிப் படித்தவர்தான் தன்ராஜ் மாஸ்டர். இந்த தன்ராஜ் மாஸ்டரிடம் இசை கற்றுக் கொண்டவர்கள்தாம் இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும்.
இந்த நூலைப் பார்த்துவிட்டு ரஹ்மான் ஒருநாள் கூப்பிட்டு இருந்தார். இதில் இருக்கும் எல்லாவற்றையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க நாம் என்ன பண்ணனும்னு பாருங்க என்றார். நம்மிடம் உள்ளது ஒன்றுதான் சினிமாதான். ஆவணப்படம் எடுக்கலாம் என்று, நாலு மணிநேரம் ஆவணப்படம் எடுத்திருக்கிறோம். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருதசாகரம் என்று நியூயார்க்கில் 2022 ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இன்னும் பரவலாக வரவில்லை.
ஆனால் நான் தனித்திரையிடல் செய்து வருகிறேன். கோயம்புத்தூரில் பண்ணாரி மாரியம்மன் கல்லூரியில் இருந்து நிறைய மாணவர்கள் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார்கள். அதாவது ஒரு நாள் முழுவதும் அந்தப் படத்தைப் பார்த்தார்கள். காலையில் ஆரம்பித்து இரவு வரை பார்த்தார்கள். நாலு மணி நேரப் படம்தான், ஆனால் அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து, படித்து, ஸ்னாக்ஸ் சாப்பிட்டு, உரையாடி, கேள்விகள் எழும்பி என்று பார்த்தார்கள். அதை, அந்த மாதிரி ஒரு பாடமாகத்தான் ஆக்கியும் உள்ளோம். அதை ஏ.ஆர். ரகுமான் ரிலீஸ் பண்ணினால் ஆன்லைனில் கிடைக்கும். இல்லை. அதுவரை நானே அதை ஒரு பிரச்சாரமையமாக்க் கொண்டு போகலாம் என்று பார்க்கிறேன்.
(கவிதா மணாளனைப் பார்த்து) நீங்கள் பாடுவீர்களா?
கவிதாமணாளன்: இல்லை
குட்டி ரேவதி: ஆனால் நம்முடையதுதான் அந்தப் பாட்டு எல்லாம். நான் சொன்ன மாதிரி மொழியில் எப்படி நாக்கு அறுபட்டு போச்சோ, அது மாதிரி இசையும் நம்மிடம் இல்லாமல் போய்விட்டது. அதை முழுமூச்சாக பண்ணியவர் பண்டிதர்தான். அவருக்கு அதைச் செய்யச் சொன்னவர் அந்தக் கருணானந்தர். அந்தப் பெயர்தான் கருணாமிர்த சாகரம் என்ற பெயருக்குக் காரணம். கருணானந்தர் என்ற பெயர் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மிகப் பிரபலமாக இருந்தது. கருணாநிதி கூட அதில் இருந்து வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். கருணானந்தர் என்பவர் ஒரு சித்தர். அவர் சுருளிமலையில் இருந்தவர். அவரைப்போய் இந்தப் பண்டிதர் பார்த்திருக்கிறார்.
நம்முடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நிகழும். அது அதிர்ஷ்டம் என்றெல்லாம் சொல்ல முடியாது. நான் சித்த மருத்துவம் படித்ததும் அப்படித்தான். நான் 12 ஆவது முடித்து இரண்டு வருடம் படிக்காமல் இருந்தேன். ஏதாவது உருப்படியாப் படிக்க வேண்டும் என்று. எங்கள் வீட்டில் வருத்தப்பட்டார்கள், கண்ணீர் விட்டார் என் அப்பாவெல்லாம். நல்லா மார்க்கு வாங்குற பொண்ணு மேல படிக்காமல் சும்மா இருக்கேன்னு. சித்த மருத்துவம்தான் படிப்பேன் என்று சொல்லி இரண்டு ஆண்டுகள் இடம் கிடைக்காமல் மூன்றாவது ஆண்டும் முயற்சி செய்துதான் சேர்ந்தேன். அப்பொழுது ஏதாவது ஒன்று நம்மை எங்கோ கொண்டு சேர்க்கிறது. அதாவது உள்ளுணர்வுதான்.
அதேபோல்தான் பண்டிதர் போய் சுருளி மலையில் கருணானந்தரைப் பார்த்திருக்கிறார். அப்பொழுது தென் மாவட்டங்களில் நிறைய பேர் பூச்சிக்கடி, பாம்புக் கடியில் இறந்திருக்கிறார்கள். அப்போது கருணானந்தர் சொல்லி இருக்கிறார் நம்மிடம் இதற்கெல்லாம் நல்ல வைத்தியம் உள்ளது. நீ அதை மக்களிடம் பரவலாக கொண்டு போ என்கிறார். ஆபிரகாம் பண்டிதரே ஒரு சித்த மருத்துவர் குடும்பத்திலிருந்து வந்தவர்தான். அவர் பள்ளித் தலைமையாசிரியராக இருந்திருக்கிறார். இவருக்கு சட்டென்று பொறிதட்டி இருக்கிறது.
கருணானந்தரிடம் நல்ல மருத்துவ முறைகள் இருந்திருக்கின்றன. அந்த முறைகளை இவர் கற்றுக்கொண்டு மருந்து செய்து மனைவியும் இவரும் பொட்டலங்கள் கட்டி கூடையில் வைத்து, கிராமம் கிராமமாகச் சென்று மருந்துகளைக் கொடுத்து இருக்கிறார்.
தெற்கு ஆசியா முழுக்க இவருடைய மருந்துகள் தபாலில் போயிருக்கின்றன. தஞ்சாவூரில் இவருக்கென்று ஒரு தனி தபால் நிலையம் இருந்திருக்கிறது, இவருக்குப் பணம் வருவதற்கு, கோரிக்கைகள் வருவதற்கு என்று.
சித்தமருத்துவராக அவர் பெரிய செல்வந்தர் ஆகியிருக்கிறார். அந்தச் செல்வங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கருணானந்தரிடம் போய், ‘இந்தப்பணம் எல்லாம் உங்களால்தான் எனக்கு வந்தது. இதை நான் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்க, ‘இதையெல்லாம் எடுத்துக்கொண்டு போய் தமிழிசையை வளர்த்திடு’ என்கிறார்.’நம் 2000 ஆண்டு சொத்து என்பது தமிழிசைதான். அது கொஞ்சம் கொஞ்சமாக செத்துப் போய்க் கொண்டு இருக்கிறது. அதன் உயிரை நீ காப்பாற்று’ என்று கூறியுள்ளார்.

ஆபிரகாம் பண்டிதர் ஒரு கிறித்துவர், தேவாலயங்களில் பாடுபவர், கொஞ்சம் அப்படியாகத் தமிழ் இசையின் அடிப்படை அறிந்தவர். எனவே தமிழிசையில் மூழ்கி விட்டார். தமிழிசை என்றால் என்னவென்று முதலில் தான் கற்றுக்கொண்ட பின்பே கருணாமிர்தசாகரம் என்ற இந்த நூலை எழுதுகிறார்.
தமிழிசை மாநாடுகள் ஏழு நடத்தினார். அந்த மாநாடுகள் நடத்த வேண்டும் என்றால் பெரிய செல்வந்தராக இருக்க வேண்டும். அதனினும் முக்கியமாக பெரிய இதயம் வேண்டும். நம் மூதாதையர்கள் மீதும் தமிழர்கள் மீதும் அளவில்லாத அன்பும் அக்கறையும் வேண்டும். தன்னுடைய வாழ்க்கை பற்றி பெரிய புரிதல் இருந்திருக்கிறது.
நான் சொன்னால் கேட்க மாட்டார்கள், போதாது என்று, தன்னுடைய மகள்கள் இரண்டு பேர் மூலமாக இசைக்கோட்பாடுகளை நிரூபிக்கிறார். தமிழர்களின் இசைக்கோடுபாடுகளாகக் குறிப்பாக பார்ப்பனர்களுக்கு எதிராக.
24 ஸ்ருதிகள், ஏழு ஸ்வரம் என்பதே நாம் உருவாக்கியதுதான். சரிகமபதநிச, குரல், துத்தம் கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் அந்தக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி அந்த வீணையில் அந்த ஒலி ஒலிக்கும் போது 24 சுருதிகளாக மாறுகிறது. இன்றைக்கும் 22 சுருதிகள்தான் என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்.
நண்பர்களே நீங்கள் எந்தப் பார்ப்பனக் கூட்டத்தில் வேண்டுமானாலும் ஆபிரகாம் பண்டிதர் பெயரைக் கூறிப்பாருங்கள், எல்லாரும் கொந்தளித்து எழுவார்கள். காரணம் அவர்களால் அந்தப் பெயரையே தாங்கிக்க முடியாது. முதலில் அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர், பின்னர் கிறித்துவர், தமிழிசை வல்லுநர். இந்தக் கலப்பு எல்லாம் அவர்கள் யாருக்கும் பிடிக்கவே பிடிக்காது.
தமிழிசை உண்மையிலேயே கருணாமிர்தசாகரம். கருணையினால் ஆன அமிர்தம் நிறைந்த ஒரு பெருங்கடல்தான் தமிழிசை. தமிழிசையை முறையாகப் பயிற்சி செய்தால் கண்டிப்பாக 150 ஆண்டுகள் ஒரு மனிதர் இந்தப் பூமியில் வாழ்வதற்கான ஆற்றல், நோக்கங்கள், பணிகள் எல்லாமே அதில் இருக்கு.
எப்படி இசை இசைத்தால் மழை பொழியும் என்று சொல்கிறார்களோ, அவ்வளவு விடயங்களும் அதில் இருக்கிறது. அப்படித்தான் அந்தக்கருணாமிருதசாகரமும்.
நாம் ஏன் ஒடுக்கப்பட்ட விஷயம் சார்ந்து செய்கிறோம் என்றால் இதே குட்டி ரேவதி முலைகள் என்ற தொகுப்பை ஓர் ஆதிக்கச் சாதியில் இருந்து, பார்ப்பனச் சாதியில் இருந்து எழுதியிருந்தால் இவ்வளவு பெரிய கிளர்ச்சிப் போராட்டம், சர்ச்சை எல்லாம் உருவாகி இருக்காது என்பது ஒன்று. உண்மையில் ஆதிக்கசாதியில் இருந்து அப்படியான தலைப்பில் பொருளில் எழுதவும் சமூகத்திற்கு அவசியமில்லைதானே.
இரண்டாவது இந்தியா முழுவதும் போய் வந்து அண்ணல் அம்பேத்கரின் பணிகள் பற்றி அவர் எப்படி எல்லாம் செய்தார் என்று பார்த்தேன். அவரின் BAMCEF பற்றி சீனிவாசன் அவர்கள் ஆவணப்படம் பண்ணினார். அந்தப் படப் பதிவிற்கு போகும்போதுதான் அதைப்பற்றி நிறையத் தெரிய வந்தது. இந்த மண் அவர்களுடையதுதான். அவர்களிடம் இருந்து பறிப்பதற்காக செய்யப்பட்ட சதிகள் நிறைய இருக்கிறது.
அப்புறம் இயல்பாகவே மொழிகளுக்குள் போகும்போது புத்தமும் அவர் தம்மமும் பற்றி அறிந்தேன். புத்தர் தன்னுடைய கொள்கைகளை முதலில் பாலி மொழியில்தான் எழுதினார். ஏனென்றால் பாலி மொழி ஒடுக்கப்பட்டவர்களின் மொழி. புத்தர் ஒரு அரசர். அவர் நினைத்திருந்தால் ஆதிக்கச் சமூகத்தினர் பேசும் மொழியில் எழுதி இருக்க முடியும். ஆனால் அவர் வேண்டுமென்றேதான் அதை எழுதுகிறார். ஏனென்றால் முதலில் அந்த மக்களுக்குத் தெரிய வேண்டும் என்று எண்ணினார்.
நான் கூண்டுக்குள் இருக்கிறேன் என்று தெரிந்தால்தானே நான் கூண்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று எனக்குத் தோன்றும். கூண்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியாத பட்சத்தில் எனக்கு விடுதலை தேவை என்று எனக்கு எப்படித் தெரியும்?
அதனால் அந்த மாதிரியான பயிற்சி இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்த விஷயங்களைப் பிடிவாதமாகச் செய்ய முடிகிறது என்று நினைக்கிறேன்.
கவிதா மணாளன்:
வீ.பா.கா. பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
குட்டி ரேவதி:
ஆமாம் அவருடைய பங்களிப்பு தமிழிசைக்குப் பெரிய பங்களிப்பு. இவர்கள் எல்லாருமே ஒரு தொடர்ச்சிதான். வீ.பா.காவின் ஒரு நூல் கூட போட வேண்டும் என்றும் நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் எல்லாம் மறைக்கப்படுகிறார்கள்.
நீங்கள் நம்ப மாட்டீர்கள் மணாளன், தமிழ்நாட்டில் மட்டும் அவ்வளவு பேராசிரியர்கள் நம்முடைய தமிழ் இசை குறித்து அவ்வளவு ஆய்வு செய்து புதிது புதிதாக நூல்களைக் கொண்டு வந்து எந்த ஒரு சமூக அங்கீகாரமும் இல்லாமல் இருக்கிறார்கள்.
அது எப்போது வெளியே வரும் என்றால் நாம் தமிழ் இசைக்குக் குரல் எழுப்பி பெரிய அளவில் ஒலிக்கும் போதும், நாமும் பண்டிதரைப் போல தமிழிசைக்காக மாநாடுகள் நடத்தும்போதும் வரும்.
நாங்கள் அப்படியான ஒரு கொண்டாட்டத்தைத் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆகஸ்ட் இரண்டாம் தேதி பண்டிதர் பிறந்தார். ஆகஸ்ட் 31ஆம் தேதி இறந்தார். எனவே ஆகஸ்ட் மாதத்தை தமிழிசை மாதமாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு முன்மாதிரியாக பண்ணாரி மாரியம்மன் கல்லூரியில் மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள். சிறிய அளவில் நடத்திப் பார்க்கலாமா என்று பார்க்கிறோம்.
கவிதா மணாளன்:
எங்கள் பல்கலைக்கழகங்களில் இப்போது பாடத்திட்டம் மாற்றுகிறார்கள். அப்படி மாற்றும்போது கூடுதல் தாள்களாக தமிழ் இசையை ஒரு தாளாகவும் தமிழ் மருத்துவம் ஒரு தாளாகவும் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். தமிழிசைக்கென்று ஏதாவது பாடத்திட்டத்தில் வைப்பதற்குண்டான ஒரு வழிகாட்டு நூல்கள், தமிழ் மருத்துவத்திற்கென்று வழிகாட்டு நூல்கள் இருந்தால் நீங்கள் பரிந்துரை செய்ய முடியுமா?
குட்டி ரேவதி: சிறப்பு, மிகச்சிறப்பு. அப்படி ஒரு பாடப்பகுதியை உருவாக்கவேண்டுமென்று நானும் தலைகீழாக நடக்கிறேன் அது சாத்தியமே படமாட்டேன் என்கிறது. எல்லாமே ஆதிக்கவாதப் பிரதியாகத்தான் இருக்கிறது. நாம் தமிழிசை தெரிந்தவர்கள் கிட்டயும் எழுதி வாங்குவது பெரிய போராட்டமாக உள்ளது. நான் எப்படியாவது உங்களுக்கு செய்து தருகிறேன்.
எது செய்தாலும் பெரிய அளவில் செய்யுங்கள். 10 பேர் வந்தாலே போதும், அந்தக் கூட்டத்தை நடத்திக் கொள்வோம் என்ற நம் சிந்தனையை மாற்றிக்கொள்ளவேண்டும். நல்லாத் திட்டமிட்டுப் பெரிய அளவில் ஒரு சமூகத்தின் பெரிய கூட்டத்திற்குப் போய் சேர்கிற அளவிற்கு செய்யுங்கள்.
உங்கள் கல்லூரியில் நீங்கள் இப்படி செய்கிறீர்கள் என்றால் பரந்த அளவில் எல்லோருக்கும் தெரிகிற மாதிரி நீங்களே அதை திரும்பத் திரும்பச்சொல்லுங்கள். எல்லா இடங்களிலும் சொல்லுங்கள். ஒரு 500, 5000 பேர், பின் 5 லட்சம் பேருக்கு என்று சொல்லுங்கள். டிவி மற்றும் சமூக ஊடகங்கள் என்று எல்லாவற்றிலும் சொல்லுங்கள். எதையுமே சிறிய அளவில் செய்யாதீர்கள். மார்க்கெட்டிங் கூச்சம் இல்லாமல் சொல்லுங்கள். எங்கே என்னைக் கேட்டாலும், என்னை உட்கார வைத்து பேசச் சொன்னால் தமிழிசையைப் பற்றித் தயக்கமில்லாமல், கூச்சமில்லாமல் பேசுவேன். ஏனென்றால் நான் அந்தப் பயிற்சியை எடுத்திருக்கிறேன்.
ஆபிரகாம் பண்டிதரைப் பற்றி எங்கே பேசச் சொன்னாலும் நான் ஒரு மூணு மணி நேரம் பேசுவேன். சித்தமருத்துவம் பற்றிப் பேசச் சொன்னால் மூணு மணி நேரம் பேசுவேன். ஏனென்றால் அதைத் தாண்டி வேறு எதுவும் நான் பேசமாட்டேன். நீங்கள் நன்றாகக் கவனித்தீர்கள் என்றால் தெரியும், அதைத் தாண்டி வேறு எழுத்தாளர்களையோ அல்லாத சொற்களையோ நான் பேசமாட்டேன். எனக்கு இவ்வளவு நேரம் இருக்கு இவ்வளவு நேரத்திற்குள் என்னால் எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவும் பேச வேண்டும். அது ரொம்ப முக்கியம். தமிழிசை நான் இன்னும் பயிற்சி பெற வேண்டும். சரியான நபரை வேண்டுமானால் நான் அறிமுகப்படுத்துகிறேன். நன்றாக விரிவுபடுத்துங்கள்.
ச. ப்ரியா:
நவீனம் பெருகி இயற்கை அழியும் சூழ்நிலை ஏற்படுகிறது.
சித்த மருத்துவராக நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள்?
குட்டி ரேவதி: சித்த மருத்துவராக இல்லை. ஒரு தமிழராக நாம் திணைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். நாம் திணைச் சமுதாயம் என்ற பண்பாட்டையே விட்டுவிட்டு வந்து விட்டோம். இந்தச் சுற்றுபுறச்சூழல் என்று சொல்வதெல்லாம் ஒரு பிளாஸ்டிக் வார்த்தை என்பேன். திணை எப்படி எல்லாமோ என்னவெல்லாமாகவோ இருக்கிறது. தமிழ்த்துறை, மொழித்துறை, இலக்கியத்துறை போன்றவர்களின் பணியாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. முன்பு தமிழ்த்துறை என்று தனியாக இருந்தது அப்புறம் மொழித்துறை என்று ஆக்கினார்கள். அதுவும் இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை.
நாம படிக்கும்போது, தமிழை நன்றாக எழுதுகிறோம் வாசிக்கிறோம் என்றால் தமிழ் ஆசிரியர்களுக்கு டிபன் பாக்ஸ் தூக்கிட்டு போவோம். அது அவர்களுக்கு நாம் அடிமையாக உள்ளது என்றல்ல, அவர்களிடம் இருந்து நாம் இன்னும் கூட கொஞ்சம் கற்றுக் கொள்வோம் என்றுதான். தமிழ் எல்லாம் முழுமதிப்பெண் என்றுதான் நானெல்லாம் இருந்தேன். அந்த ஆர்வத்தை ஊட்டக்கூடிய தமிழ் பேராசிரியர்கள்தான் நமக்கு இன்றும் தேவை. எழுத்தாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பயங்கர இடைவெளி. நாங்கள் நவீனம், அதிநவீனம் என்று போவோம். இவர்கள் சங்கம், தொல்காப்பியம் என்று போவார்கள். மிகவும் நன்று. சிறந்ததும் கூட. ஆனால் எங்காவது இரண்டும் இணைய வேண்டும், பிணைய வேண்டும், ஒன்று குழைய வேண்டும் ஆனால் அது நடக்கவில்லை. ஓர் எதிர்த்தன்மை வந்துவிட்டது. நீங்கள் நவீனம் பேசுகிறீர்கள் எங்களுக்கு ஆகாதவர், நீங்கள் சங்கம் என்று பேசுகிறீர்கள் எங்களுக்கு ஆகாதவர் என்றுள்ளது. ஆனால் இது இல்லாமல் அது இல்லை. அது இல்லாமல் இது இல்லை.
அப்படி ஒரு விடயம் நிகழாமல்தான் எல்லோரும் பார்த்துக் கொண்டார்கள். ஓர் ஒவ்வாமை வந்துவிட்டது, எல்லோர்க்குள்ளும் இன்று நான் தினமும் நூல் வைத்து அகநானூறு, புறநானூறு படிக்கிறேன். நாம் எல்லோரும் அதைப் படித்துள்ளோம். இருந்தாலும் மீண்டும் மீண்டும் வாசிப்பது என்றொரு பயிற்சி தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு செய்யுள் படித்தோம். சங்கத்தைப் படித்தோம் என்றால் அந்த நாளைக்கு உண்டான ஊக்கத்தை கொடுக்கிறது. அப்பொழுது இந்த இரண்டு பாதைகளும் இணைய வேண்டும்.
இலக்கியத்துடன் இந்தக் கல்விப் புலங்கள் சேரவே இல்லை. அது இல்லாத வெளியில்தான் இலக்கியம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
எனக்கு இந்த நேர்காணல் எல்லாம் பெரிய உற்சாகமான விடயம். ஏனென்றால் கல்லூரிகளுடன் சங்கமிப்பது. அதனால்தான் நான் எல்லாவற்றிற்கும் சரி என்று சொல்லிவிடுவேன். முன்பெல்லாம் ஒரு நிகழ்விற்கு வந்தால் ரூமில் படுத்துத் தூங்கி நிகழ்வை அட்டென்ட் பண்ணிட்டு போய் விடுவோம். இப்போது அப்படி இல்லை ஆபிரகாம் பண்டிதர் பேர் சொல்ல வேண்டி உள்ளது, கர்ணாமிருதசாகரம் சொல்ல வேண்டியுள்ளது, எல்லாவற்றையும் வார்த்தை வார்த்தையாகச் சொல்ல வேண்டியுள்ளது.
நீங்கள் நம்ப மாட்டீர்கள் அன்று தான் நாகர்கோவில் சென்று ஒரு படப்பதிவிற்காக இறங்கப்போகிறேன். திருநெல்வேலி தாண்டவில்லை. ஏ.ஆர். ரகுமானே, நீங்கள் உடனே கிளம்பி வாங்கன்னு சொன்னார். இங்கே விஜயின் சர்க்கார் படத்தின் ஆடியோ லான்ச். மேடையில் என்னை விட்டு நீங்க கர்ணாமிருதசாகரம் பற்றிப் பேசுங்கள் என்று சொல்கிறார்.

அப்போது நாம் எங்கெல்லாம் பேச வேண்டியுள்ளது. அந்த விடயத்தை அப்படிப் பார்க்கிறார் அவர். ஏ. ஆர். ரகுமான் என்ன ஒரு இலக்கியவாதியா? அவர் நம்முடன் வேலை செய்யும் ஆளா? ஆனால் அவருக்குத் தோன்றுகிறது . இதை எந்த இடத்தில் பேச வேண்டுமென்று. என்னை வணிகத்தளங்களின் மையவெளியில், சர்க்கார் மேடையில் போய்ப் பேசச் சொல்கிறார். அப்படியெல்லாம் வாய்ப்பே கிடையாது. அவருக்குத் தோன்றுகிறது. இதை எங்கே பேச வைத்தால் மக்களிடம் போய்ச்சேரும் என்று.
அதற்கு அப்புறம்தான் நான் இந்த “ஆபிரகாம்பண்டிதரின் கருணாமிர்தசாகரம்”, என்ற ஆவணப்படத்தைச் செய்ய முடிந்தது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு ஒருவர் என்னைத் தொடர்பு கொள்கிறார். ரகுமான் ஆஃபீஸ்க்குப் போன் பண்ணி நான் என்ன பண்ண வேண்டும் இதற்கு என்று கேட்கிறார்.
அதனால் நாம் விரிந்த அளவில் பேச வேண்டும். நான் இங்கே போய் இதைப் பேசமாட்டேன் என்று அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். நம் மூதாதையர்கள் 2000 வருடம் இருட்டில் இருந்தார்கள். கொத்தடிமைகளாகச் செத்துப் போனார்கள், சாப்பிடாமல் செத்துப் போனார்கள், நோயில் செத்துப் போனார்கள், எதுவுமே இல்லாமல் செத்துப் போனார்கள். நமக்கு இன்று எல்லாமே இருக்கிறது, நமக்கு சாப்பாடு இருக்கிறது, ஒரு சுய விழுமியம் இருக்கிறது, எனில் எவ்வளவு மொழிக்கு மருத்துவத்திற்கு இசைக்கு என்று கூறுவதைவிட, மொழியின் வழியாக, மருத்துவத்தின் வழியாக, இசையின் வழியாக நாம் எவ்வளவு செய்ய முடியுமோ ஒவ்வொருத்தரும் வெவ்வேறு வேலை செய்ய வேண்டியுள்ளது. அதனால் எல்லாரும் எல்லா மண்வெட்டியையும் எடுத்தால்தான் நாம் வேலை செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.
கவிதா மணாளன்:
அதோட இன்னொரு மண்வெட்டியையும் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அகநானூறு எல்லாம் படிக்கிறீர்கள் இல்லையா. உங்களுடைய பார்வையில் அதற்கு உரை எழுதும் முயற்சியை எடுத்துக் கொள்ளுங்கள். ஜோ டி குரூசிடம் இதைத்தான் கேட்டேன். அவருக்கு இருக்கும் நெய்தல் திணை அறிவு, அந்த அடிப்படையில் நெய்தல் திணைப் பாடல்களைப் பார்த்தால், அது முழு கண்ணோட்டத்தைத் தரும். அதற்கு உரை எழுதித் தரணும்னு அவர்கிட்ட சொன்னேன். அது மாதிரிதான் உங்களிடமும் தமிழிசை சார்ந்தும், மருத்துவம் சார்ந்தும், கவிதை சார்ந்தும் உங்களுக்கு இருக்கும் விரிந்த பார்வையோட சங்க இலக்கியங்களுக்கு உரை எழுத முயற்சி செய்தால் மிகச் சிறப்பாக இருக்கும், எழுதுங்கள்.
குட்டி ரேவதி: கண்டிப்பாக, எனக்கு திருக்குறளுக்கு எழுத வேண்டும் என்று ரொம்ப ஆசை. சங்க இலக்கியங்களுக்கும் எழுத வேண்டும். எல்லா வாழ்வியல் நெருக்கடிகளுக்கும் இடையில் இதையெல்லாம் செய்துவிட்டுத் தான் மறைந்து போகவேண்டும்.
கவிதா மணாளன் :
சித்த மருத்துவத்தில் இருக்கும் நீங்கள் தாவரங்களின் பெயர்களை நுட்பமாக அறிந்திருப்பீர்கள். சங்க இலக்கியத்தில் ஒவ்வொரு பெயர் வரும், அப்போது எனக்கு அதெல்லாம் ஏதோ ஒரு மரமாகவோ, ஏதோ ஒரு செடியாகவோதான் தெரிகிறது. அதோட அருமை தெரிவதில்லை. ஏன் இந்த பூ இங்கு சொல்லப்படுகிறது என்பதற்குக் கூட ஒரு காரணம் இருக்கும். அதை உணர்கிற தன்மை அப்பூவை அறிந்தவர்களுக்குத்தான் வாய்க்கும்.
குட்டி ரேவதி: கண்டிப்பாக. கண்டிப்பாக இந்த ஆலோசனையை நான் கருத்தில் ஏற்றுக்கொள்கிறேன். கண்டிப்பாக செய்யவேண்டும். நான் எவ்வளவு வேலை செய்ய வேண்டி உள்ளது.
ரமேஷ்:
இலக்கியத்துறை, விமர்சனத்துறை சார்ந்து தீவிர இலக்கியம், வெகுசின இலக்கியம் என்று கூறு போடுவது பற்றிய உங்கள் பார்வை என்ன? ஏனென்றால் வெகுசன இலக்கியம் என்பது வியாபார உத்திக்காக சும்மாச் சின்ன விஷயத்தை பேசிவிட்டுப் போய் விடுகிறார்கள்; கொண்டாடப்படுகிறது. நேரடியாகச் சொன்னால் வைரமுத்துவை எடுத்துக்கலாம். ஆனால் தீவிர இலக்கியத்திற்குள் எத்தனை ஆளுமைகள் பெயரறியப்படாத சூழல். இன்றும் பஞ்சத்தில், முழுநேர உணவில்லாமல் வாரக் கணக்கில் பட்டினி இருந்து செத்தவர்கள், செத்துக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் குறித்து வரலாறு நமக்கு சொல்கிறது. இந்த இரண்டையும் ஈடு செய்ய வேண்டிய வேலைகளாக எவற்றைப் பார்க்கிறீர்கள்? இல்லை என்றால் இதைப் பற்றிய உங்கள் கருத்து.
குட்டி ரேவதி: இன்னொரு மண்வெட்டியைப் பற்றி நான் இன்னும் பேசவில்லையே. பிரமிள் என்னும் மண்வெட்டி. கவிஞர் பிரமிள். இன்று காலையில் கூட என்னோட மன ஓட்டத்தில் இருந்தது. நான் தீவிர இலக்கியப் பிரிவைச் சேர்ந்தவள். ஏனென்றால் அப்படித்தான் நான் வளர்ந்தேன். அப்படித்தான் என்னோட எல்லாமே உருப்பெற்று இருக்கிறது. அப்படி ஒரு வளர்சிதை மாற்றம்தான் எனக்கு நிகழ்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் இப்ப சொன்னீங்க இல்ல ரமேஷ் நீங்கதான் இதைச் செய்ய வேண்டி இருக்கிறது. ஏனென்றால் சமூக அறிவியல் தெரியவில்லை என்றால் இது என்ன வகையான எழுத்து என்று நீங்கள் புரிஞ்சுக்கவே முடியாது.
ஆபிரகாம் பண்டிதரைக் கொன்று பாடையில் ஏற்றி இருக்கிறார்கள், புதுமைப்பித்தனையும் கொன்று பாடையில் ஏற்றினார்கள், பிரமிளையும் அப்படித்தான் கொன்று பாடையில் ஏற்றி இருக்கிறார்கள். பிரமிளைப் பற்றி, நான் அவருடைய கடைசிக்காலங்களில் அவருடன் நெருக்கமாக இருந்த காலசுப்பிரமணியத்துடன் பகல் இரவாகப் பேசி உள்ளேன்.
எனக்கு என்ன ஆர்வம் இருக்கும் என்றால், எதனால் இவ்வளவு பெரிய ஆளுமைகள் எல்லாம் சீக்கிரம் இறந்து போகிறார்கள். எது இவர்களை நசிக்கிறது என்று பார்த்தால், அவர்களுக்குள் ஒரு ஆளுமையாக இருக்கிறார்கள். அவர்களால் தங்களின் அறிவுஜீவிதத்தால் சந்திக்கமுடியாத சவாலாக இருந்திருப்பது எது? அவர்கள் வேறு ஒருவரிடம் போய் சாப்பாட்டிற்கு வழி இல்லை என்று கேட்க மாட்டார்கள். அப்படியான சூழ்நிலைகள் இவர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் வந்து போகும். ஆனால் ஒரு intellectual beingஆக அவர்கள் இருக்கும்போது அவர்களுடைய அறிவு எல்லாவற்றையும் சுரண்டி நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் வாழ்வியலில் என்ன ஆனார்கள் என்று நாம் பார்ப்பதே இல்லை.
நீங்கள் சொன்னதுதான் கடுமையான வறுமை, கடுமையான நோய் ஆனால் இன்றளவும் சினிமா குறித்தோ, ஈழம் குறித்தோ, தமிழ் நவீனக் கவிதைகளில் சாதி அல்லது பார்ப்பனிய விடயங்கள் குறித்தோ, அது சார்ந்த குறியீடுகள் குறித்தோ, பிரமிளின் அளவிற்கு இன்றளவும் யாருமே எழுதவில்லை. இன்று 2024 அவருக்குப் பிறகு எத்தனையோ பேர் எழுத வந்து விட்டார்கள். ஒரு பத்தியில் கூட ஒரு எழுத்தாளன் எதுவும் ஒரு பகுதியில் கூட நீங்கள் அவளது நுட்பமாக அதை பகிர்ந்து அறிந்து சொல்கிற அறிவு யாருக்குமே கிடையாது. நீங்கள் எந்த புகழ்பெற்ற எழுத்தாளரை வேண்டுமானாலும் சொல்லலாம்.
இன்றைக்கும் பிரமிளுடைய எழுத்து எதிர்காலம் குறித்த, நவீனம் குறித்த, நவீன காலம் குறித்த, ஒரு விடயம். அது மானுடப் பண்பாட்டின் மீது, மனிதர்கள் மேல் அவ்வளவு தீவிரமான அக்கறையுடன் எழுதப்பட்டது. அவர்களை எல்லாம் இவர்கள் அசிங்கமானவர்கள், கோபமானவர்கள், இவர்கள் இதைச் செய்தார்கள் என்று அப்படித்தான் நமக்கு பிம்பம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அப்போது இந்த பொறுப்பு, உங்களுக்குத்தான். நீங்கள்தான் பிரமிளைக் கொண்டு சேர்க்க வேண்டிய ஆள். நாம் நம்முடைய பொறுப்பை நாம் எங்கேயுமே உணர்வதில்லை என்று நினைக்கிறேன்., இவர் ஒரு பெரிய ஆள் என்றால் இவரைக் கொண்டாட வேண்டும், இவர் பின்னால் போக வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான் என்ன நினைக்கிறேன் என்றால் நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் நாம் எல்லோரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்தான். நம் எல்லோருக்கும் நிறைய வேலைகள் இருக்கும் என்பதை நாம் உணரவில்லை. நாம் நம்முடைய இன்றைய சமூக அரசியல் நிலையில் நம் சமூக வரலாறு தெரியாமல் ஓர் இலக்கியத்தைப் படைக்கவே முடியாது. அதில் இலக்கியம் இல்லை. அது இலக்கியமும் ஆக முடியாது. இலக்கியத்திற்கான மனிதத்திற்கான மாண்பு இல்லவே இல்லை. அதனால் ஓர் உபயோகமும் இல்லை. சவசவன்னு ஒரு நூறு பக்கம் வீணாப் போகும் அவ்வளவுதான்.
கவிதை வழியாக நான் முன்வைக்கும் மொழி அழகியலே என் அரசியல். இதற்கு கவிஞருக்கு ஆழமான சமூக அரசியல் அறிவு வேண்டும். இந்தச் சமூக அரசியல் அறிவின்றித் தமிழில் இலக்கியம் படைக்கவே முடியாது.
அதுதாண்டி நாம் இலக்கியத்தைப் பார்ப்பதற்கான விமர்சனப் பின்புலம் உருவாகாமல் போனதற்கு காரணம் எனக்குத் தெரிந்து கல்வியாளர்கள் (Academicians) இலக்கியத்தில் நுழையாததுதான் என்று நான் எப்போதுமே சொல்வேன். கல்வியாளர்கள் (Academicians) இந்த இலக்கியத்தில் எல்லாம் நீங்கள் எழுத வந்தீர்களா? என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று கேட்காதது? பின் என்ன எழுதி இருக்கிறீகள் என்று கேட்கும் அளவிற்கு அவர்களுக்கும் சமூக அரசியல் அறிவு இல்லாமல் இருந்ததுதான் காரணம்.
நான் பேராசிரியர்களைக் கடுமையாகக் குற்றம்சாட்டுவேன். விமர்சனப் பின்புலம் இலக்கியத்திலேயே இல்லாமல் போனதுதான் இவ்வளவு மலிவான எழுத்தாளர்கள் உருவாவதற்குக் காரணம். அதற்குக் காரணம் உங்களைப் போன்ற பேராசிரியர்கள்தான். நான் நேரடியாகத்தான் சொல்கிறேன் பின்னால் போய்ப் பேசினால் ‘அவங்க பார் பின்னாடி இப்படிப் பேசிட்டாங்க’ என்று சொல்லக்கூடாது இல்லையா. உங்கள் பக்கம் சாய்ந்துதான் நான் சொல்கிறேன்.
அப்படி இருந்திருந்தால் கண்டிப்பாக மலிவான இலக்கியங்கள் தமிழில் உருவாகி இருக்காது. அதில் உங்களுக்குப் பெரிய பங்கும் பொறுப்பும் இருக்கிறது. நீங்கள் யாரும் அதைக் குறுக்கு விசாரணை செய்தது கிடையாது. விமர்சனம் செய்தது கிடையாது. இது இலக்கியமா என்று ஏதோ ஒரு தரப்பில் இது மொழி ரீதியாகவோ, கருப்பொருள் ரீதியாகவோ, கருத்தியில் ரீதியாகவோ எதுவுமே கேட்டதே இல்லை யாரும்.
பலர் அந்த ஜோர்லதான் எழுதிட்டு இருக்கிறார்கள். யார் என்னைக் கேட்பது என்பது மாதிரிதான் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.
வீ,ரமேஷ்குமார் :
நீங்கள் சொன்னீர்கள், பிரமிள் அளவிற்கு குறியீடுகள் பயன்படுத்தவில்லை என்று. நான் வாசித்த அளவில் உங்களுடைய கவிதைகளில் அவ்வளவு குறியீடுகள் இருக்கின்றன. நிறைய பேர் உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்வதற்கு காரணம் அந்தக்குறியீடுகள் தெரியாமல் போவதுதான் என்று நினைக்கிறேன்.
குட்டி ரேவதி: என்னைப் புரிந்து கொள்ள முடியும். என்னுடைய கவிதையைத்தான் புரிந்து கொள்ள முடியாது. என்னுடைய மொழி சித்தர் இலக்கியம் படித்ததால் வந்தது. நம்மிடம் நம் எல்லோருக்குள்ளும் சித்தர் இலக்கிய மரபு இருக்கிறது. அந்தப் பின்புலத்தில் இருந்துதான் வருகிறோம். அப்படித்தான் எனக்கு அது வந்தது. அது, என்ன சொல்வது, நானாக உருவாக்கிக் கொண்டது, பயிற்சி என்றெல்லாம் கிடையாது. எழுதியதே அந்த நீரோட்டத்தில் தாம் எழுதினோம். அந்தப் புரிதலை ஓர் விவாதமாக வைக்க முடியுமா என்று இன்னும் சந்தேகமாகத்தான் உள்ளது. எதையும் புரிந்து கொள்கிற அறிவு இல்லை என்றால் அது அவர்களுடைய தரம், அவர்களுடைய அறிவு. அதை ஒரு மையப் பொருளாக வைக்க முடியுமா இல்லை விவாதத்திற்குரிய மையப் பொருளாக வைக்க முடியுமா என்று எனக்கு இன்றளவும் சந்தேகம் உள்ளது.
ப்ரியா:
மேடம், நான் எழுத வந்த காலத்தில் ரொம்ப….. முலைகள் தொகுப்பினால் ஏற்பட்ட சர்ச்சைகளை, ஒரு பெண்ணுடைய எல்லா சர்ச்சைகளையும் பார்க்கிறேன். அது சார்ந்து எல்லா நிகழ்வுகளையும் பார்க்கிறேன். அப்பொழுது நான் உடலை முன் வைப்பதற்கு இயலவில்லை. மிகவும் துணிவாகவும் எந்தத் தயக்கமும் இல்லாமல் உடலை முன் வைப்பதற்கு எனக்குப் பத்து வருடங்கள் தேவைப்பட்டு விட்டது. ஏனென்றால் நானும் அது போல் ஒரு வீடு என்ற வட்டத்திற்குள்தான் நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். ஆனால் நான் இப்போது ‘அனலிக்கா’ என்ற என்னுடைய தொகுப்பில் நான் உடலை முன் வைத்திருக்கிறேன் என்றால் அதற்கு முதல் காரணம் நீங்கள்தான். முலைகள் தொகுப்புதான் எனக்குத் துணிவினைத் தந்தது. அதற்கு உங்களுக்கு ரொம்ப நன்றியும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அன்றைக்கு தோன்றியதை நான் இன்று உங்களிடம் பதிவு செய்து கொள்கிறேன். நீங்கள் இல்லை என்றால் நான் இப்படி ஒரு சூழலை முன் வைத்திருக்க மாட்டேன். முதல் புள்ளி உங்களிடம் இருந்துதான் தொடங்கி இருக்கேன்.
குட்டி ரேவதி: ரொம்ப மகிழ்ச்சியான விடயம். நன்றி.
ரமேஷ்:
அடுத்த கேள்வி, பனிக்குடம். ஏனென்றால் தமிழ் இதழியல் வரலாற்றில் ஒரு பெரிய மைல்கல் பனிக்குடம். ஏனென்றால் இந்த இதழின் வடிவமைப்பு மற்றும் உள்ளில் வைத்த விடயங்கள் எல்லாமே நான் பார்த்து பிரமித்து இருக்கேன். இன்று உங்களைச் சந்திக்கப் போகிறோம் என்றதால் திரும்ப அந்த இதழ் கிடைக்குமோ என்று பிடிஎஃப் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. அதனுடைய படங்கள்தான் கிடைத்தன. பத்திரிக்கைத் துறையில் வந்த பெண்களை, கலைத்துறை, ஓவியம் என்று எல்லாவற்றிலும் பெண்களை மையப்படுத்தினீர்கள். அந்த இதழைத் திரும்பவும் கொண்டு வருவதற்கான இன்றைய சாத்தியப்பாடுகள் எப்படி இருக்கின்றன. ஏனென்றால் இன்றைய தகவல்கள் எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு பேட்டியில் ஓர் இணைய இதழாக கொண்டு வரலாம் என்று. அது எவ்வளவு விரைவாக?
குட்டி ரேவதி: நீங்கள் எல்லாரும் சேர்ந்து கொண்டு வரலாம். அது ஒரு பணி, தீவிரமான பணி. இப்பொழுது சமூக ஊடகங்கள் இருக்கின்றன. நினைத்தால் ஒன்றை எழுதி விட முடிகிறது. பேஸ்புக்கில் ஏதாவது ஒன்றில். அப்போ ரொம்பக் கடுமையாக இருந்தது. ரொம்ப கொடுமையாகவும் இருந்தது. எழுதுவதற்கு இடம் இல்லை, இல்லாமல் இருந்தது. எங்கேயோ எனக்குள் இருக்கும் கூக்குரலை நான் சேனலைஸ் பண்ணிக்க வேண்டுமென்று எனக்குள் ஒரு தீவிரமான முடிவு இருந்தது. இன்றைக்கு இருக்கும் எல்லாப் பெருங்கவிஞர்களும் அவர்களுடைய முதல் கொத்துக் கவிதைகளையும் அதில்தான் எழுதி இருப்பார்கள். நீங்கள் அதைப் பார்த்தால்தான் தெரியும்.
ஒன்று எனக்கு எழுத இடம் இல்லாமல் இருந்தது. அப்புறம் பெண்ணியக் கருத்தியலில் தீவிரம் எனக்குள் ரொம்ப மூர்க்கமாகவும் ஆவேசமாகவும் இருந்தது. மூன்றாவது விடயம், அழகியலை ஒரு அரசியலாக பார்த்தேன் நான்.
நீங்கள் ஒரு விடயத்தைச் செய்யும் போது தமிழர்களுக்கென்று ஒன்று, ரொம்ப நுண்மாநுழைபுலம் சேர்ந்த ஓர் அழகியல் இருக்கிறது. சங்கக் கவிதைகளில் அந்த அழகியலை ரொம்ப பிரில்லியண்டாக எழுதி இருக்கிறார்கள், நம்முடைய கவிஞர்கள். நிறைந்த மொழி அழகியல், அதில் உள்ள காட்சி அமைப்பு, சொல்ல வந்திருக்கிற விடயம். இவ்வளவு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்பு அதனுடன் நாம் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிற உணர்வுகள். அப்ப நம்முடைய இந்தக்காலத்தின் முதன்மையான குறைபாடு என்னவென்றால் அழகியல் என்பதை நாம் செய்கிற செயல்களில் நாம் முன்வைப்பதில்லை. ஏதோ ஏனோதானோ தாறுமாறாக ஒரே அலங்கோலமாக எல்லாவற்றையும் பண்ணுகிறோம் என்று நினைக்கிறேன்.
ஆபிரகாம் பண்டிதரின் சிறப்பு கூட என்னவென்றால் அந்த அழகியலின் உச்சம்தான். பிரமிளினுடைய விஷயமும் என்னவென்றால் அந்த அழகியலின் உச்சத்தை அவர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் வைத்திருந்ததுதான். அந்த அழகியலே அரசியல் ஆகிறது.
அழகியல் என்றால் என்ன? கவித்துவமாக ஒன்றை வெளிப்படுத்துவது என்றுதான் நினைக்கிறேன். அதில் இன்று தமிழர்கள் ரொம்ப சுழியமாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன். அதனால்தான் நான் சொல்கிறேன் நீங்கள் ஏதாவது ஒன்று செய்தீர்கள் என்றால் உங்கள் துறையில் தமிழிசை அல்லது தமிழ் மருத்துவம் கொண்டு வருகிறீர்கள் என்றால் அல்லது மாநாடு நடத்துகிறீர்கள் என்றால், அந்த அழகியலின் வெளிப்பாடு நமக்குத் தெரிய வேண்டும். அரசியலின் ஆழம் தெரியும்போதுதான் இதற்கு இவ்வளவு முக்கியமான அரசியல் முக்கியத்துவம் இருக்கும் என்று தெரியும்போதுதான் அதை அழகியல் சார்ந்து வெளிப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். அது ஒரு மனப்பயிற்சி, குழுப்பயிற்சி. சேர்ந்து செய்ய வேண்டும் என்று சொல்வார்கள், தமிழிசையில். எல்லாரும் சேர்ந்து பாடும் போது ஒரு லயம் உருவாகும். அது மாதிரியான விடயம் அது. பனிக்குடம் என்பது அது மாதிரியான விடயம் என்று நான் நினைக்கிறேன்.
சுதா:
கவிதை, சினிமாப்பாடல், ஆவணப்படம் என்று மூன்றில் உங்கள் பங்களிப்பு உள்ளது. இதில் மக்களிடம் கருத்துக்களைக் கொண்டு சேர்க்க எது சிறந்ததாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
குட்டி ரேவதி: ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று செய்யமுடிகிறது. நான் முன்பு இது உயர்ந்ததா? அது சிறந்ததா? அப்படி எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாவற்றிலும் அது அதற்கான முதன்மைத்துவம் இருக்கிறது. அதனால் அதைச் செய்ய முடிகிறது. சினிமா என்பது ஒரு சிறந்த விடயம் என்னவென்றால் இலக்கியம் மாதிரியான prejudice (முற்கோள்) இல்லை. ஒரு முன் அபிப்பிராயம் இல்லை. என்னைப் பற்றி நிறைய முன் அபிப்பிராயங்கள் உண்டு இங்கே. இலக்கியத்துறையில் எல்லாம் பரப்பப்பட்டிருக்கும். சினிமாவில் அப்படி இல்லை. திறமை மட்டும்தான். எழுதுவதற்குத் திறமை இருந்தால் எழுதலாம். எனக்கு சினிமாவில் இயங்குவது வெகு எளிதாக இருக்கிறது. திரைப்படம் பெரிய தளத்தில் போய் வேலை செய்வது. இலக்கியம் குறுகிய மனபிம்பங்களால் ஆனதாக உள்ளது. எனக்குத் தெரிந்து இன்றும் சாதிக் குழுமமாகத்தான் இருக்கிறது இலக்கியம் நான் நினைக்கிறேன். இன்னும் விரித்துப் பேசினால் இது பயங்கரச் சர்ச்சை ஆகும். இன்றைக்கும் இலக்கியம், நீங்கள் சொல்வீர்கள் கொங்கு இலக்கியம், கரிசல் இலக்கியம், என்றெல்லாம் அது சாதிய இலக்கியம் தவிர வேறு ஒன்றும் இல்லை. அதில் என்ன பெருமை இருக்கிறது. ஆனால் இன்றொன்று என்னவென்றால், என்ன பிரச்சனை என்றால், மணிவண்ணன், சாதியே கிடையாது தமிழர்களுக்கு. இவர்கள் புதிதாக ஒன்றைப் புகுத்தி அதை நம்மிடம் நிறுவி, அதன் வழியாக ஒரு படிநிலையைக் கொண்டு வரலாம் என்று நினைக்கிறார்கள். வாய்ப்பே கிடையாது. கடைசியில் நாம் இன்னும் ரொம்ப கீழான நிலைக்குத்தான் போவோம். மதம், சாதி என்பது நம்மிடம் கிடையவே கிடையாது. இவ்வளவு அகழ்வாராய்ச்சி பண்ணியிருக்கிறார்கள் அங்கேயும் நமக்கு குறியீடுகள் கிடைக்கவில்லை. மதம் இருந்ததற்கான குறியீடுகள் கிடைக்கவில்லை. இவ்வளவு இலக்கியங்கள் வாசிக்கிறோம் எங்கேயுமே சாதி இருந்ததற்கான எதுவுமே இல்லை. ஆனால் நாம் என்ன நினைக்கிறோம் என்றால் இதன் வழியாக நாம் ஒன்றைக் கொண்டு வந்து, என்னுடைய பிம்பத்தைக் கட்டமைத்துக் கொள்ள முடியுமா, என்னுடைய அதிகாரத்தைக் கட்டமைத்துக் கொள்ள முடியுமா, என்று. என்னென்னமோ தகிடுதத்தம் செய்கிறார்கள் இலக்கியம் என்ற பெயரில். என்னென்னமோ இலக்கியங்கள் கொண்டு வந்து விட்டார்கள். அந்த எல்லாக் குழுமமும் சாதியக் குழுமம் அன்றி வேறில்லை. இப்பொழுது நான் என்ன நினைக்கிறேன் என்றால் சினிமாவில் உங்களுடைய திறமை தேவைப்படும். ஆளுமை தேவைப்படும். கடுமையான உழைப்பு தேவைப்படும். அந்த உழைப்பு தேவைப்படும்போது நிறைய பேர் வெளியே போய் விடுவார்கள். ஏனென்றால் நம் மக்களுக்கு கொஞ்சம் சோம்பேறித்தனம் வந்துவிடும். திரைப்படத்துக்குத் தேவை கடுமையானதொரு அல்லும் பகலுமான உழைப்பு. சினிமாவில் 24 மணி நேரமும் உழைக்கவேண்டும். இயக்குநர் என்றால் நான் இவ்வளவு நேரத்திற்குத்தான் இயக்குநர் என்றெல்லாம் கிடையாது. 24 மணி நேரமும் இயக்குநர். அப்படி உழைத்தால் மட்டுமே நான் என்னுடைய ஒரு படத்தை வெளியில் கொண்டு வரமுடியும். அப்பொழுது எனக்கு அது ரொம்ப விடுதலையாக உள்ளது. அப்படி ஒவ்வொரு வெளிக்கும் ஏற்ற விடயங்களை நான் செய்து கொள்கிறேன்.
கருணாமிருதசாகரம் சார்ந்து நிறைய அறிவார்ந்த விடயங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதைவிட என்னவென்றால் நமது மூதாதையரின் செல்வம் இப்படிப்பட்டது என்று உங்களிடம் காண்பித்தால் போதும். நீங்கள் ஒரு பத்து வருடத்திற்கு சிறந்த பாடகி ஆகலாம், இல்லை உங்கள் மகள் பாடகி ஆகலாம். அந்தத் தமிழிசையை நாம் திரும்ப புனரமைக்கலாம். ஏதாவது ஒன்று நிகழ்ந்து விடாதா, ஒரு மேஜிக் நிகழ்ந்துவிடாதா என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
கவிதை, எனக்கு மிகவும் அந்தரங்கமான , நான் நான் ஊக்கமாக இருப்பதற்கு, என்னுடைய மனத் தெளிவிற்கு ஆதாரமாக உள்ளது.
கவிதா மணாளன்:
திரைப்படம் சாதி சாராமல் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? எனக்கு என்னமோ பெரிய பார்ப்பனியக் கூடாரமாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன்.
குட்டி ரேவதி: அப்படித்தான் இருந்தது, இருந்துகொண்டுமிருந்தது சினிமா. முதலில் ஆழ்வார்ப்பேட்டையில் இருந்தது சினிமா. கோடம்பாக்க்கத்திற்கு நகர்ந்தது, இப்பொழுது வடசென்னைக்குப் போய்விட்டது. அங்கே இப்பொழுது கோடம்பாக்கம் ஒன்றுமே இருக்காது ஒரு நிழலே கிடையாது. நான் சொல்கிறேன். காலம், நீங்கள் சொல்கிற கதைக்கூற்றின் வழியாகப் போய்க்கொண்டே இருக்கும். இது ஒரு நெரேஷன்(Narration). இப்ப நான் உட்கார்ந்து, நீங்க கேள்வி கேட்பது, ஒரு நெரேஷன் பாணியில் தான் போய்கொண்டு இருக்கிறது.
சினிமாவில் சாதி இருந்தது, ஒன்லி பிராமின் கதைக்கூற்றுமுறை இருந்தது, முதலியார் கதைக்கூற்றுமுறை இருந்தது, பிள்ளைவாள் கதைக்கூற்றுமுறை இருந்தது, ‘பிள்ளைவாள்’னே கூப்பிடுவார்கள் மையக் கேரக்டரையே. இன்று நாம் பார்க்கும் போதே நமக்கு தெரிகிறது, அது எப்படிப்பட்டது என்று. அப்படித்தான் இங்கேயும் பேசிப்பார்கள். ஆழ்வார்ப்பேட்டையில் இருந்தது சினிமா. அப்புறம் கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம் இன்று வடசென்னை.
சாதி இல்லாமல், – இது புகுத்தப்பட்டது தானே ஆனால் -, சினிமாவில் அந்தப் பெரும் சக்கரத்தை நகர்த்த முடிகிறது என்று சொல்லலாம். இலக்கியத்தில் அதைச்செய்ய முடியவில்லை. அதற்கு நாம் எல்லாம் ஒன்றாகச் சேர வேண்டும்.
அங்கு (திரைத்துறையில்) 24 டிபார்ட்மென்ட் சேர்ந்து வேலைசெய்யணும். நீங்கள் சாதிசார்ந்து எந்த டிபார்ட்மெண்டையும் கொண்டுவர முடியாது. ஒன்றுமே செய்ய முடியாது. சமைப்பவர், இவர் சமைப்பதை சாப்பிட முடியாது என்றால் சினிமா இயங்கவே முடியாது. நடக்கவே நடக்காது. அங்க 24 டிபார்ட்மெண்ட் வேலை செய்யணும் 24 டிபார்ட்மென்டிலும் தீவிரமாக இருந்தால்தான் ஒரு படம் வெளியே வரமுடியும். போட்ட காசை எடுக்க முடியும் என்று எல்லாம் விஷயமும் இருக்கு. இல்லையென்றால் வாய்ப்பே இல்லை. நீங்கள் இவன் சமைக்காத சாம்பார் வேண்டும், இவன் சமைக்காத வடை வேண்டும் என்ற வாய்ப்பே இல்லை. சினிமாவில் பயங்கர ஒழுங்குமுறை அவசியப்படும்.கடுமையான ஒழுக்கம், நேர ஒழுக்கம், கால ஒழுக்கம், திறமை சார்ந்த ஒழுக்கங்களைப் பார்க்கலாம். எனக்கு கொண்டாட்டமாய் இருக்கும் சார்.
ச.ப்ரியா: நீங்கள் பாடலாசிரியர் ஆனது, திடீர்னு உங்களைப் பாட்டெழுதுங்க என்று ரஹ்மான் சார் சொன்னார். . .
குட்டி ரேவதி: பாடலாசிரியர் என்பதை நான் கொஞ்சம் தாழ்வாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு கவிஞர் எப்படி பாடல் ஆசிரியராக முடியும் என்று. ஆனால் ஏ. ஆர். ரகுமான் சொன்னால் எழுதாமல் இருக்க முடியுமா?

(கவிதா மணாளன்: மணிவண்ணன் அவர்களும் ஒரு பாடல் ஆசிரியர். நேற்று திரையிடப்பட்ட ‘குரங்கு பெடல்’ என்ற படத்தில் அவருடைய பாடல் இடம் பெற்றுள்ளது.
குட்டி ரேவதி: வாழ்த்துகள், வாழ்த்துகள்.)
ஜோதிலட்சுமி :
இன்றைய நவீன இலக்கியத்தில் எல்லாக் கவிதைகளும் தலைப்புடன் வருவதில்லை. ஆனால் உங்களுடைய பெரும்பாலான கவிதைகளை இல்லை, எல்லாக் கவிதைகளையும் நீங்கள் தலைப்புடன் எழுதுகிறீர்கள். அதற்கான காரணம் ஏதாவது இருக்கிறதா?
குட்டி ரேவதி: அப்படித்தானே கவிதை எழுத வேண்டும். கவிதைக்கு என்றோர் ஒழுங்கு, ஒழுக்கம் இருக்கிறது. நான் ரொம்ப மரபார்ந்த கவிஞர். முழுமையும் நான் ஒரு கவிஞர். எப்படிச் சொல்வது? நான் வாசித்து, உலகளாவிய நாடுகள் எல்லாம் போய், கவிதை வாசித்தல் (Poetry Reading) எல்லாம் செய்திருக்கிறேன். ஒருவர் ஒரேயொரு கவிதை தன்னுடைய வாழ்க்கையில் எழுதி இருந்தாலும் அவர் ஒரு முக்கியமான கவிதை எழுதியிருந்தால் அதற்குத் தலைப்பு வேண்டும், தலை வேண்டும், அதற்கான எல்லாக் கவி நுணுக்கங்களும் வேண்டும்தானே. தனியாக ஒரு முகவரி இல்லாமல் இருக்க முடியாதில்லையா? நான் கவிதை ஒழுக்கங்கள் சார்ந்தவள். ஒரு கவிஞராக, கவிதைத்துறை சார்ந்தவராக நான் இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒழுங்குகளை எனக்குள்ளே வைத்துள்ளேன். ஒரு கவிஞர் எப்படி இருக்க வேண்டும் என்பதை, ஒரு கவிஞர் 24 மணி நேரமும் கவிஞராக இருக்க வேண்டும் என்பதைக் குறித்த விழிப்பை எனக்கு நானே வைத்திருக்கிறேன். அவர் செய்கின்ற எல்லாவற்றிலும் கவித்துவம் மிளிர வேண்டும். அவர் அந்தப் பண்போடு நடந்து கொண்டால்தான் கவிஞர். அப்படி இல்லாமல் வெறும் எழுத்தால் மட்டும் ஒரு கவிஞர் வந்திட முடியாதென்று நினைக்கிறேன். மாணவர்களிடம் நாம் கவிதை பேசலாம். அது ரொம்ப நல்லா இருக்கும். கவிதை பேசி அது என்ன, எப்படிக் கவிதை, எல்லாம் பேசணும்னு ரொம்ப ஆசை. ஆனால் நாம் கவிதைக்கும் நமக்கும் இடையே அதிக இடைவெளியை உருவாக்கி வைத்துள்ளோம். கல்விப் புலங்களிலும் சரி, சமுதாயத்திலும் சரி. எனக்கு அதில் எல்லாம் உடன்பாடு கிடையாது.
ஆனால் நான் ரொம்ப பெருமைகொள்கிறேன், கவிஞராக இருப்பதில். கவிஞராக இருப்பது என்பது பெருமை. நீங்கள் எல்லோரும் கவிதை எழுத வாருங்கள் என்று நான் சொல்கிறேன். அது ஓர் ஒளிமயமான உருவம். செத்துப் போனால்கூட ஒளிமயமாகச் செத்துப் போகனும். அதில் நமக்கு கவலையே இருக்காது. ஏனென்றால் மரணம் பற்றிய முன்னறிவு நமக்கெல்லோருக்கும் இருக்கிறது. அதில் கவிஞராக இருப்பதென்பது இந்தப் பேரண்டத்துடன் இரண்டறக் கலப்பதின் ஒரு சாயல்தான். அதை நீங்களே வளப்படுத்திக்கொள்ளத்தான் செய்ய வேண்டும். நான் ஒன்னும் அப்படி நடந்து முழுமை ஆயிட்டேன் என்றெல்லாம் இல்லை. எனக்கும் அந்தக் கோணல்கள் எல்லாம் உருவாகும். அதைச் செம்மைப்படுத்திக் கொள்கிற கத்தி கவிஞரிடமேதான் உள்ளது. கவிஞராக இருப்பதனால் நம்மிடமும் அந்தக் கத்தி உள்ளது.
வை. தர்மலிங்கம்:
நீங்கள் பேசுகிறபோது, புடைத்து, ஆக்கி, அடிச்சு, அவித்து என்று வார்த்தைகள் எல்லாமே பெண்களை மையப்படுத்தி, சமையல் ஆக்குவதை மையப்படுத்தி என்று பெண்கள் பயன்படுத்தக்கூடியதாகவே இருக்கிறது. உங்களுடைய மொழி ஒரு புதுமைப்பெண் போல் இல்லாமல், எடுத்துக்காட்டாய்ச் சொல்கிறபோது புடைத்து, பொறுக்கி, சலித்து என்று, இது எனக்குச் சலிப்பாக உள்ளது.
குட்டி ரேவதி: நீங்கள் நெல் அவிக்க மாட்டீர்களா? நெல் அவிப்பது ஆண்கள் செய்வதில்லையா? நெல்லை ஆண்கள் தொடவே மாட்டீர்களா? புடைப்பது அவிப்பது சமைப்பது ஆண்கள் செய்வதில்லையா? நெல்லை, அரிசியை ஆண்கள் சாப்பிடுவதே இல்லையா? இந்தக்கேள்வி பாலினம் பற்றிய உங்களுடைய முன்னபிப்ராயம், முன்தீர்மானங்கள், முன் தீர்ப்புகள் குறித்தானது.
நான் முழுமையும் எப்படியென்று சொல்கிறேன். கு.சிவராமன் தெரியுமா? மருத்துவர் சிவராமன், அவருடைய பெரிய மருந்துக் கம்பெனியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். 100 கிலோ லேகியம் செய்வேன். 100 லிட்டர் தைலம் செய்வேன். ரெண்டு கிலோ தங்க பற்பம் செய்வேன். ஒரு கிலோ வெள்ளிப் பற்பம் செய்வேன். நான் இந்தச் சமையல்காரி மட்டும் இல்லை, அந்தச் சமையல்காரியும்தான்.
வை.தர்மலிங்கம்:
அந்த மொழி, ஏன் அந்த வார்த்தை வருகிறது என்று இப்பொழுது எனக்குத் தெரிந்து விட்டது.
குட்டி ரேவதி: ஏனென்றால் உங்கள் மனதில் உள்ள முன்னபிப்பிராயம் சமையல் பற்றி. ஆனால் உண்மையிலேயே நான் சிறந்த முறையில் லேகியம் செய்பவள். குமரி லேகியம் என்று ஒன்று செய்வேன். பெண்களுக்கு இருக்கிற கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் எல்லாம் போய்விடும். தணிகாசலம்னு மருத்துவர் ஒருத்தர் இருந்தார். உங்களுக்குத் தெரியும் ஒரு சித்த மருத்துவர். ரொம்ப சர்ச்சைக்கு உள்ளானவர். அவர்கிட்டயும் வேலை பார்த்தேன் நான். அவரிடமும் நான் லேகியம் செய்தேன். தணிகாசலத்திடம் நான் தங்கப்பற்பம், வெள்ளிபற்பம் எல்லாம் செய்வேன். தங்கப்பற்பம், வெள்ளிபற்பம் எல்லாம் எளிதாக செய்யக்கூடிய ஒரு சித்தமருத்துவர். பாதரசம் கட்டுவேன்.
நான் முழுமையாக சித்தமருத்தவராக இருக்கிறதில் ரொம்பத் தீவிரமாக இருந்தேன். இடையில் ஒரு விபத்து நிகழ்ந்தது. விபத்து என்றால் அது ஒரு மன விபத்து. அதில் தான் நான் தீவிரமாக இந்தப் பக்கம், கவிதையின் பக்கம், மொழியின் பக்கம் வந்து விட்டேன். இப்பொழுது 25 வருடம் கழித்து எனக்குத் தோன்றுகிறது. இப்பொழுது சமீபத்தில் என்னுடைய மனதில் உழல்வது என்னவென்றால் நான் ஒரு தீவிர லட்சியவாதியாய் இருந்தேனே 25 வயதில். 50 வயதில் இப்படியாக என் இலட்சியத்தின் எதிர்த்திசையில் வந்து நிற்கிறேனே என்று தோன்றுகிறது. ஏனென்றால் உண்மையிலேயே என்னை மாதிரி மருந்து செய்ய முடியாது யாராலும் என்ற இறுமாப்புடன் ஒரு காலத்தில் மருந்து செய்துகொண்டிருந்தேன். அந்தப்பக்குவம் பார்த்து கையிலும் எடுத்து, அது ஒரு பெண்ணாக இருந்து அதனால செய்ய முடிந்ததா, இல்லை சித்தமருத்துவத்தின் மீது இருந்த ஒரு வேட்கை. வாய்ப்புகளைத் தேடிதேடித்தான் தங்கப்பற்பம், வெள்ளிப்பற்பம், பாதரசக்கட்டு எல்லாமே அருமையா செய்தேன். பாதரசம் கட்டுவது என்பது எல்லாம், நீங்கள் ஒரு கால வெளிக்குள் போகிற மாதிரிதான். மிக நீளப் பொறுமை வேணும், உங்களுக்குத் தெரியும் இவ்வளவு நாள் அரைக்கணும், பக்குவம் பார்க்கணும், விரல் வைத்தால் ரேகை தெரியணும், அந்த மாதிரி நிறைய செய்யணும். இதெல்லாம் நமது மூதாதையர், சித்தர்கள் செய்திருக்கிறார்கள். அதைத்தானே நானும் செய்கிறேன். அதில் ஒன்றுமே இல்லை. நீங்க நல்ல கேள்வி கேட்டீர்கள். அதனால் என்னால் இதெல்லாம் சொல்ல முடிந்தது.
ஆனால் நான் வீட்டில் சமைக்க மாட்டேன். ஆள் வைத்து தான் சமைக்கிறேன்.. எனக்கு இப்பொழுது ஓர் ஆண் சமையல்காரர் இருக்கிறார் என்னுடைய திரை அலுவலகத்தில். ஆனால் என்னை மாதிரி மட்டன் குழம்பு, பீப் குழம்பு யாராலும் வைக்க முடியாது. அப்புறம் சாம்பார், ரசம் எல்லாம் எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஆக வைப்பேன். அது எங்கிருந்து வந்ததுன்னா எனக்கு சமைக்கிறது மேலே எல்லாம் ஆசை கிடையாது. சித்த மருந்துகள் செய்முறை மீது உள்ள ஆர்வம். எனக்கு நோயாளிகளை உட்கார்ந்து பார்ப்பதைவிட லேகியம் போன்ற விஷயங்கள். மருத்துவ சாம்பார். அதாவது என்ன காய் சாப்பிடணும்னு எப்படி சாப்பிடணும் எந்த அளவு சாப்பிடணும் அதெல்லாம் சார்ந்து சமைப்பதற்கு எனக்கு நன்றாகத்தெரியும் கதென்று நம்புகிறேன்.
ச. ப்ரியா:
அதனாலதான் நீங்க இவ்வளவு இளமையாக இருக்கிறீர்களா?
குட்டி ரேவதி: ஓ அப்படியா பாருங்க. இப்ப என்ன சொல்றது, ஆண்கள் சமைக்கக் கூடாதா?
பீட்டர் பால்:
பெரும்பாலான கல்யாண வீடுகளில் ஆண்கள்தான் சமைக்கிறார்கள்
குட்டி ரேவதி: அவர்கள் என்ன செய்வார்கள் என்றால் காசு கொடுத்தால் ஹோட்டலில் சமைக்க தயாராக இருப்பார்கள். கல்யாண வீட்டிலும் சமைக்க ரெடியா இருப்பார்கள். ஆனால் வீட்டில் சமைக்க மாட்டார்கள். ஓசியிலே ஏன் சமைச்சுக்கொடுக்கனும்னு நினைப்பாங்க. ஏன்னா பெண்கள் சமைக்கிறது சும்மாதான்னு எல்லோரும் நினைச்சுட்டு இருக்காங்க.
ச. ப்ரியா:
ஒரு சித்த மருத்துவர், ஒரு பாடலாசிரியர், அந்த இரண்டுக்கும் மேலாக ஒரு இயக்குநர். ஒரு சித்த மருத்துவராவது.. ஓர் எல்லை என்றால் ஒரு நவீன பெண் கவிஞர் என்பது வேறொரு எல்லை. ஆகப்பெரிய ஒரு கடல் முன்னாடி நிற்கிற மாதிரி பிரமிப்பாய் இருக்கிறது.
குட்டி ரேவதி : அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இவ்வளவு ஆழமான ஓர் உரையாடல் நிகழும் என்று நான் நினைக்கவில்லை. ஜோதி ரொம்பத் தீவிரமாக என்னைப் பின்தொடர்ந்து இந்த உரையாடலுக்கான நேரத்தைக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். பொதுவாக கல்லூரி மாணவர்களுடன் பேராசிரியர்களுடனான உரையாடலை நான் எப்பொழுதுமே வேண்டும் என்று நினைப்பேன். ஏனென்றால் அவர்களால்தான் இவ்வளவு ஆழமான உரையாடலை நிகழ்த்த முடியும். இல்லையென்றால் மேம்போக்கான உரையாடல் நிகழும். அதனால் ஒரு பயனும் இருக்காது. ஒரு பரவலான உரையாடலை உங்களிடம் செய்ய முடிந்தது.
கவிதா மணாளன், மணிவண்ணன், ரமேஷ் குமார், ச. பிரியா, சுதா, பீட்டர், ஜானகி பிரியா, கன்னல் இளம்பரிதி, சோலைமாயவன், தர்மலிங்கம் எல்லோர்க்கும் நன்றி.
நான் மனதில் நினைத்து வைத்திருந்த ஆழமான விடயங்களை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் நேரடியாக உங்களிடம் பேச முடிந்தது. ஒரு பாம்பு தன் சட்டையை உரித்துப் போட்டது போல் உள்ளது. நல்லதொரு புதிய பரிணாமத்திற்கு வந்தது போல் உள்ளது. இந்தக் காலத்திற்கும் இந்த வாய்ப்பிற்கும் மனமார்ந்த நன்றி.

. . . நிறைவுற்றது

Leave a comment