நாட்டார் கதை
காடர் இனக் கதைகள் – 2
கைக்கு மொட்டாளி* (கழுகு முட்டை)
தொகுப்பும் ஓவியத்தூரிகையும் : ப. குணசுந்தரி & து. சரண்யா
ஒரு இளைஞனின் குடும்பம் தனியாகக் காட்டில் வாழ்ந்து வந்தது. அவனுடைய குடும்பத்தில் தாய், தந்தை, மனைவி, மகன் (கைக்குழந்தை), மனைவியின் சகோதரி என ஆறு பேர் வாழ்ந்தனர். இளைஞனுடைய மனைவியின் பெற்றோர் வேறொரு காட்டில் வாழ்க்கை நடத்தி வந்தனர்.
அந்த இளைஞன் தன் மனைவியுடன் தினமும் தெள்ளி* எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

அவர்கள் காட்டிற்குச் சென்ற நேரத்தில் எல்லாம் மனைவியின் சகோதரி அந்தக் கைக்குழந்கையைப் பார்த்துக் கொண்டாள். இளைஞனின் பெற்றோர் குழந்தைக்கும் சிறுமிக்கும் பாதுகாப்பாக வீட்டில் இருந்தனர்.
இளைஞன் தெள்ளியை ஒரு மூட்டையளவு சேகரித்ததும் விற்க உப்பாற்றிற்குச்* செல்லவேண்டும் என்று கூறுகிறான். அவ்வேளையில் இளைஞனின் மனைவிக்குச் சரியான காய்ச்சல் வருகின்றது. அதனால் அன்றிரவு அவள் உணவு உண்ணாமலேயே படுத்துவிட்டாள்.
மறுநாள் காலையில் அந்த இளைஞன் உப்பாற்றிற்குச் செல்லக் கிளம்பினான். அதற்கு முன் தன் தாயிடம் அவன் தன் மனைவிக்கு ஆற்றில்போய் நண்டோ அல்லது சேம்பையோ* எடுத்து வந்து சமைத்துக் கொடுக்குமாறு கூறிச் செல்கின்றான்.

அவன் சென்றதும் இளைஞனின் தாய் தன் கணவனுடன் ஆற்றிற்குச் செல்கிறாள். ஆனால் கிழவன் ஆற்றிற்குப் போய் சேம்பை எடுக்காமல் குன்றின்மேல் ஏறி அலைந்து திரிகின்றான்.

அப்பொழுது அங்குக் கிடைத்த கழுகின் முட்டைகளை எடுத்துத் தன் தோள் துண்டில் கட்டி எடுத்து வருகின்றான். அதைக்கண்ட கிழவி ஆற்றில்போய் நண்டுபிடிக்க வேண்டும் என்று தானே இங்கு வந்தோம் என்று கிழவனைக் கடிந்து கொள்கிறாள்.

ஆனால் கிழவன் அவளுடைய பேச்சை சற்றும் பொருட்படுத்தாமல் நடக்கத் துவங்கினான். கிழவனின் தோள் துண்டில் முட்டைகள் மூட்டை கட்டியிருப்பதைக் கண்ட கிழவி,
சான்றி மொட்டைக் காட்டு
சான்றி மொட்டைக்* காட்டு
என்று அம்முட்டைகளைக் காட்டும்படி கேட்கின்றாள். உடனே கிழவன் ஏன் நீ உடும்பு முட்டை, ஆமை முட்டை எல்லாம் பார்த்ததே கிடையாதா? என்று கிழவியை அமர்த்திவிடுகிறான். இருவரும் வீட்டை அடைந்தனர்.
வீட்டிற்குப் போனவுடன் மனைவியின் தங்கை, கிழவியை அழைத்து கைக்குழந்தையைக் குளிக்க வைக்க வேண்டுமென்று கூறுகிறாள். கிழவி குழந்தையைக் குளிக்க வைக்கப் போனவுடன் கிழவன் அந்தச் சிறுமியை அழைத்து ஒரு பாத்திரத்தைக் கொண்டு வருமாறு கூறுகின்றான். சிறுமி பாத்திரத்தை எடுத்து வரவும் பாத்திரத்தில் அந்த முட்டைகளை எல்லாம் உடைத்து ஊற்றிவிட்டு முட்டை ஓடுகளைக் கிழவி அறியாமல் இருக்க மண்ணைத் தோண்டிப் புதைத்து விடுகிறான்.
கிழவன் அந்த முட்டையைப் பொறித்து தன் அக்காவிற்கு மட்டும் கொடுக்க வேண்டுமென அந்தச் சிறுமியிடம் கூறுகிறான். சிறுமியும் அதற்கு ஒப்புக் கொள்கிறாள். முட்டையைப் பொறித்து தன் அக்காவிடம் கொடுக்கிறாள். இளைஞனின் மனைவி அதை முழுமையாக உண்டு முடிக்கிறாள்.
அன்று இரவு முழுவதும் இளைஞனின் மனைவி தூக்கமின்றி அவதிப்படுகின்றாள். அவள் தன் உடம்பில் ஏதோ ஊர்வதாக உணர்கின்றாள். அதனால் அவளுடைய தங்கையிடம் தன் மேனியைக் துடைத்துவிடுமாறு கூறுகின்றாள். தங்கையும் அன்று இரவு முழுவதும் தன் சகோதரியின் உடம்பைத் துடைத்துக் கொண்டே இருக்கின்றாள். சற்று நேரம் அவள் கண் அயர்ந்தாள். அப்பொழுது இளைஞனின் மனைவி கழுகாக மாறி பறக்கின்றாள். அதைக்கண்ட சிறுமி அலறுகிறாள்.

கைக்குழந்தையைக் காலால் தள்ளிவிட்டு தாய் பறந்தவுடன் குழந்தை அழத்தொடங்குகிறது. கழுகாக மாறிய தாய் கூரையின் மேல் அமரும்பொழுது மாயமாகக் குழந்தைக்குப் பால் கிடைக்கின்றது. பாலைப்பருகிய குழந்தை உறங்குகின்றது. அவ்வேளையில், தாய் பல நாடுகளையும் கடல்களையும் கண்டுவரப் பறந்து போகிறாள். அப்போது
குரங்கிருக்கும் குட்டாஞ்சேரி* பின்விட்டு நான் போடா
அரணகளிக்கும் ஆயினிப் பாடம்* பின்விட்டு நான் போடா*
கரையாத* கிட உண்ணி* கரையாத கிடாகே*
என்று பாடிக் கொண்டே பறந்து செல்கின்றாள். கழுகாக மாறிய அந்தப் பெண், தன்னுடைய தாய், தந்தையர் இருக்குமிடத்திற்குச் சென்று அங்கே இருந்த மரக்கிளையின் மேல் அமர்ந்து
பச்சரணையைக் கொத்தித் தின்று நான் போடா
பச்சோந்தியைக் கொத்தித் தின்று நான் போடா
கரையாத கிட உண்ணி கரையாத கிடாகே
என்று பாடுகிறாள். இதைக்கேட்ட அவர்கள் பறவை பாடுவதைக்கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். தான் போகும் வழியெல்லாம் குழந்தை அழக்கூடாது என்பதற்காக பாடிக் கொண்டே பறந்து செல்கின்றாள் இளைஞனின் மனைவி.
தென்கடல் கப்பலக் கண்டுவருவன் நான் போடா
வடகடல் கப்பலக் கண்டுவருவன் நான் போடா
என்று பாடிக் கொண்டே பறக்கின்றாள்.
உப்பாற்றிற்குச் சென்ற இளைஞன் தெள்ளியை விற்றுவிட்டு வீட்டிற்குத் தேவையான பொருட்கள் மற்றும் மனைவி, குழந்தை, தாய், தந்தை, மனைவியின் தங்கை என அனைவருக்கும் புத்தாடைகளையும் வாங்கி வீட்டை நோக்கி விரைகின்றான். வரும் வழியில் பசியெடுக்கிறது. பசி மிகுதியாகவே ஆற்றின் ஓரமாய்ப் போய் அடுப்பு வைத்து சோறு ஆக்குகின்றான். அந்தச் சோற்றில் காய் கறிகளையும் போட்டுச் சமைக்கின்றான். சமையல் முடிந்தது. அவன் அந்த உணவை உண்ணத் தயாரானான். அவ்வேளையில் அவனுடைய மனைவி பறந்து சென்று ஒரு மரக்கிளையில் அமர்ந்து,
நம் உண்ணி கரவுடா
நம் உண்ணி கரவுடா*
தெதேரப்* போய்க்கொள்ளு நங்கே.
என்று தன் கணவனை நோக்கிப் பாடுகின்றாள். அதைக் கேட்ட அவன் வீட்டில் ஏதோ ஓர் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இவ்வாறு அந்தப் பறவை என்னிடம் வந்து பாடுகிறது என்று எண்ணியவாறு வீட்டை நோக்கி விரைகின்றான். கழுகின் முட்டையை உண்டதனால் மருமகள் கழுகாக மாறி பறந்து விட்டாள். இதற்குக் காரணம் கிழவனும் கிழவியும்தான் என்று மகனுக்குத் தெரிந்தால் இருவரையம் வெட்டிக் கொன்றுவிடுவான் என்ற பயத்தினால் கிழவன் வீட்டைவிட்டுப் போய்விடலாம் என்று கிழவியிடம் கூறுகிறான். ஆனால், கிழவியோ அந்தப் பச்சிளம் குழந்தையையும் சிறுமியையும் தனியாகக் காட்டில்விட்டுவிட்டு வரமாட்டேன் என்கிறாள். இருப்பினும் கிழவன் கிழவியை அடித்து இழுத்துச் சென்றுவிடுகிறான். சிறுமி தனியே பச்சிளம் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு வாடுகின்றாள். இளைஞன் தன் வீட்டை அடைந்தான். அங்கே குழந்தையும் சிறுமியும் மட்டும் தனியே இருந்தனர். அவனைக் கண்ட அந்தச் சிறுமி நடந்தவற்றைக் கூறுகிறாள். அவன் உடனே தன் குழந்தையை அவனிடம் கொடுக்குமாறு கூற சிறுமியும் அதன்படியே செய்கிறாள். தன் குழந்தையுடன் அந்த இளைஞன் தான் வந்த வழியிலேயே படுத்து உறங்குகிறான். அவ்வேளையில் அவன் கனவில் முதியர்கள் தோன்றி கவலை கொள்ளாதே. உன் மனைவியைக் குணமாக்குவதற்கு நாங்கள் வழி சொல்கிறோம் என்கின்றனர். மேலும், அவர்கள் அவனிடம் மகனே நீ வந்த பாதையிலேயே திரும்பிச் செல் அவ்வழியின் கிழக்கே ஒரு ஓடையின் அருகே ஆண்மரம் பெண்மரம் என இரண்டு மரங்களும் எதிரெதிரே நின்று கொண்டிருக்கின்றன. அவற்றின் பட்டையை வெட்டி அரைத்து நீரில் கலக்கி உன் மனைவியின் மேல் தெளித்தால் போதும் அவள் குணமடைந்து விடுவாள் என்று கூறி மறைகின்றனர். இளைஞன் வெடுக்கென கண் விழித்தான்.
இளைஞன் சிறுமியை அழைத்து குழந்தையை அவளுடைய கையில் கொடுத்துட்டு வேகமாக தான் வந்த பாதையில் கையில் ஒரு கத்தியையும் எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்குகின்றான். இதைக்கண்ட அந்தச் சிறுமி மனைவி கழுகாக மாறிப்போன காரணத்தால் அவன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறான் போலும் எங்களைத் தனியே இந்தக்காட்டில் விட்டுச் சென்றுவிடுவானோ என்று எண்ணி அழுகின்றாள்.
அவளுக்கு ஆறுதல் உரைத்த பின்னர் இளைஞன் தான் அந்த இரு மரங்களையும் தேடிப் புறப்படுகின்றான். இளைஞன் அந்த இரண்டு மரங்களையும் கண்டுபிடித்து அவற்றின் பட்டைகளை எடுத்து அரைத்து, ஆண்மரத்தின் பட்டையை ஒரு கிண்ணத்திலும் பெண்மரத்தின் பட்டையை வேறொரு கிண்ணத்திலுமாக நீரில் கரைத்து வைக்கின்றான்.
இளைஞனின் மனைவி கழுகினுடைய உருவம் கொண்டு பறந்து வந்து வீட்டின் மேற்கூரையில் அமர்ந்தாள். அந்த வேளையில் இளைஞன் முதலில் ஆண்மரத்தின் பட்டையிலிருந்து எடுத்து அரைத்திருந்த அந்தச் சாரைக் கழுகின்மேல் தெளிக்கின்றான். உடனே கழுகு உருவில் இருந்த அவனுடைய மனைவி உடல் வலுவிழந்து பறக்கமுடியாமல் படபடவென அடித்துத் தரையில் விழுகின்றாள். அவள் தரையில் விழுந்தவுடன் பெண்மரத்தின் பட்டையிலிருந்து அரைத்தெடுத்த சாறை அவள்மீது தெளிக்கின்றான்.
அவள்மேல் இருந்த சிறகுகள் எல்லாம் உதிர்ந்து போய் பிறந்த மேனியாய்க் கிடக்கின்றாள். உடனே இளைஞன் சிறுமியை அழைத்து, அவளுக்கு ஒரு ஆடையை அணிவிக்குமாறு கூறுகிறான். சிறுமி வேகமாக ஆடைகளை எடுத்து வந்து அணிவிக்கிறாள். சிறிது நேரம் கடந்தவுடன் இளைஞனின் மனைவி வாந்தி எடுக்கின்றாள். கழுகின் உருவிலிருந்தபோது அவள் உண்ட பாம்பு, தேள், பூராண் போன்ற பூச்சிகளை எல்லாம் வாந்தியெடுத்தாள்.
வாந்தி மயக்கம் தெளிந்தவுடன் தான் அந்த வீட்டில் இருக்க விரும்பவில்லை என்று கணவனிடம் கூறுகின்றாள். முன்னிருந்த வீடு அசுத்தமானதால் இளைஞன் வேகமாக வேறொரு குடிலைக் கட்டுகின்றான். அங்குத் தன் மனைவியையும் குழந்தையையும் சிறுமியையும் குடி அமர்த்துகிறான். பின்னர், தன்னுடைய தாய் தந்தையரைத் தேடிச் செல்கின்றான்.
கிழவன் சென்ற பாதையில் ஒரு பெரிய மானைச் செந்நாய்கள் கொன்று கிடத்தியிருந்தது. அதைக் கண்ட கிழவன் மான் இறைச்சியை எடுத்து சுட்டுத் தின்று உயிர் வாழ்ந்தான். அவ்விறைச்சியைக் கிழவிக்கும் கொடுத்தான். ஆனால் கிழவி காட்டில் தனியாக விட்டுவந்த சிறுமியையும் குழந்தையையும் நினைத்து கவலையுடன் இருந்தமையால் உணவு, நீர் எதுவும் வேண்டாமென்று கூறி தன் கணவன்மீது கோபத்துடன் இருக்கின்றாள்.
ஒருவாறாக தன் தாய் தந்தையரை இளைஞன் கண்டுபிடித்துவிட்டான். இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். தன் மனைவியை இந்த நிலைக்கு ஆளாக்கியதற்காக அவர்கள் இருவர்மீதும் கடுங்கோபத்துடன் இருந்தான். அதனால் தன்னுடைய மனைவி தன் தாய் தந்தையுடன் இருப்பது அவளுக்குப் பாதுகாப்பாக இருக்காது எனக் கருதி அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைத்துவிடலாம் என்று எண்ணுகிறான்.
இறுதியாகத் தன் மனைவியைக் குணமடையச் செய்தவுடன் இளைஞன் அனைவரையும் தன் மனைவியின் பெற்றோரிடம் அழைத்துச் செல்கின்றான். அங்குச் சென்ற பின்னர் சிறுமி காட்டில் நடந்தவற்றை எல்லாம் தன் பெற்றோரிடம் கூறுகின்றாள். தன் சகோதரி கழுகாக மாறியதையும் அவளைக் குணமாக்கிய கதையையும் முழுவதுமாகக் கூறுகின்றாள். அதற்காகவே இளைஞன் தன் மனைவியைப் பெற்றோரிடம் விட்டுச் செல்லத்தான் வந்திருக்கிறான் என்று அனைவரும் உணர்கின்றனர்.
பின்னர் மனைவியின் பெற்றோர் இளைஞனிடம் வந்து, தங்கள் மனைவி கழுகாக மாறினாலும் அவளை மீண்டும் மனிதப் பெண்ணாகவே மாற்றி உயிருடன் அழைத்து வந்த உங்களிடம் எங்கள் மகள் இருப்பதை விடவும் வேறு பாதுகாப்பு அவளுக்கு இல்லை என்று கூறி இளைஞனுடனேயே அவன் மனைவியையும் குழந்தையையும் சந்தோஷமாகச் சேர்த்து வைத்தனர். மேலும் அனைவரும் கூட்டுக் குடும்பாகவே வாழ்வோம் நீங்கள் இருவரும் தனியே எங்கும் செல்லவேண்டாம் என்று கூற அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

மங்கம்மா பாட்டி, குணசுந்தரி, மங்கம்மா பாட்டியின் இளைய மகள்
படமெடுத்தவர் : து.சரண்யா
கதைசொல்லி : மங்கம்மா பாட்டி (72 வயது)
இடம் : நெடுங்குன்றுச்சேரி, வில்லோனி.
கதைத் தொகுப்பு : முனைவர் ப. குணசுந்தரி,
& செல்வி து. சரண்யா.
கதை பதிவுசெய்யப்பட்ட நாள் : 29.04.2018
அருஞ்சொற்பொருள்
கைக்கு மொட்டாளி : கழுகு முட்டை.
தெள்ளி : குங்கிலியம். நறுமணப்பொருள். இன்று நாம் சாம்பிராணியைப் பயன்படுத்துவது போல அன்று குங்கிலியத்தை நம் முன்னோர் பயன்படுத்தியதைப் பெரியபுராணம் பதிவுசெய்துள்ளது.
உப்பாறு : உப்பாறு என்பது, ஒரு இடம், அங்குக் கடைகள் மிகுதியாக இருக்கும். அதுமட்டுமல்ல. காடர்கள் அல்லாதவர்கள் வாழக்கூடிய பகுதி.
சேம்பையோ* : சேம்பங்கீரை.
காய்ச்சல் நேரத்தில் நண்டைச் சமைத்து உண்பது. இன்றும் அம்மக்களிடம் வழக்கமாக உள்ளது.
சான்றி : கிழவன், மொட்டை : முட்டை.
குரங்கிருக்கும் குட்டாஞ்சேரி : குரங்குகள் இருக்கும் வீடு அல்லது பொந்து,
அரணகளிக்கும் ஆயினிப்பாடம் : அரணை மகிழ்ந்திருக்கும் பொந்து
கரையாத : அழாதே
உண்ணி : குழந்தை
போடா : போய்க்கொண்டிருக்கிறேன்.
கிடாகே : இரு
கரவுடா : அழுதல்
தெதேர : விரைவாக
நங்கே : பெண்
முதியர் : வாழ்ந்து மறைந்த முன்னோர். இன்றளவும் காடர்கள் முதியரை வணங்கி அவர்களின் வழிநடத்துதல்படி வாழ்கின்றனர்.

Leave a comment