முனைவர் ச. இரா.செம்மலர்
உதவிப்பேராசிரியர்
நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
மேடவாக்கம், சென்னை

முன்னுரை
சங்ககால மக்கள் மிக உயரிய ஒழுக்க நெறிகளுடன் கூடிய வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தனர். இவ்வாழ்க்கை முறையோடு உடன்படாதோர் “பால் வேறுபாடு கருதாது கள்ளுண்டும் பரத்தையர் பிரிவையும் தேவையற்ற புனைந்துரைகளையும் முரண்களாகச் சுட்டுவர்” இவ்வாறு உரைக்கப்பட்ட முரண்களில் பரத்தையர் பிரிவே பெரிதும் விவாதத்திற்கு உரியது.
“கொண்டாள் மனையகத்திருக்க ஊனுடல் இன்பம் பேணல் வேண்டி மானென நோக்குடைய பல பெண்களோடு கூடி இன்புறும் கூடா ஒழுக்கமே பரத்தமை” ஆகும்.
பரத்தையர், சமூகத்தில் ஒரு தனிப்பிரிவாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இலக்கியங்களில் இயல்பாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆரம்பக்காலத்தில் காமக்கிழத்தியர், கணிகை, கொண்டி மகளீர், பொதுமகள், பொருட்பெண்டீர், வரைவின் மகளிர் என்ற சொற்களால் அழைக்கப்பட்ட இவர்கள் பின்னாளில் விலைமகள், சலதி, வேசி, தேவரடியாள் எனப் பல்வேறு இழிசொற்களால் சுட்டப்படுகின்றனர்.
பரத்தையரின் வாழ்வியல் சிக்கல்கள், ஆளுமை நிலைப்பாடு, அவர்களது உணர்வுகள், மனவெழுச்சிகள் ஆகியவற்றை சங்க இலக்கியங்கள் வழி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
பரத்தையரின் வாழ்வியல் சிக்கலில் உள்ள ஆளுமை நிலைப்பாட்டையும் அவர்களது உணர்வுகள், மனவெழுச்சிகள் ஆகியவையின் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் வழி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

சங்கப்பனுவல்கள் பகரும் பரத்தையர்
செவ்விலக்கியங்கள் பரத்தையரை, இற்பரத்தை, காதற்பரத்தை, சேரிப்பரத்தை எனப் பலவகையாக வகைப்படுத்துகின்றன. பெண் ஒடுக்குமுறையின் ஒருபகுதி என்று இதைக்குறிப்பிடும் அதேவேளையில் இதற்குள்ளும் தனக்கான ஒரு வெளியைப் பரத்தை உருவாக்கிக் கொள்கிறாள் என்பதற்கும் செவ்வியல் இலக்கியங்களான சங்க இலக்கியங்களே சான்று பகர்கின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களில் மருத நிலமே பரத்தையர்களை உருவாக்கிய களமாக அமைகிறது. குறிஞ்சி, முல்லை திணைச் சமூகத்தில் மலையிலும் காட்டிலும் திரிந்த மனிதனுக்குள் ஆண், பெண் ஆகிய பால் பேதம் பெரிதாய் இருந்திருக்கவோ அது சார்ந்த ஏற்றத்தாழ்வுகளுக்கோ வழியில்லை. எனவே மருத நிலம் சார்ந்த பாடல்களிலேயே பரத்தையர் சார்ந்த பாடல்களை மிகுதியாகக் காண முடிகிறது.

ஆணாதிக்க பார்வையைத் தகர்க்கும் பரத்தை
அகஇலக்கிய மரபில் பேசப்படும் பெண்களான நற்றாய், செவிலி, தோழி, தலைவி ஆகியோருள் சற்று அதிகம் பேசுபவள் தோழி மட்டுமே. அவளும் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கிடையிலேயே பேசுகிறாள். இவர்களிடமெல்லாம் இருந்து வேறுபட்டு ஒலிக்கும் ஒற்றைக் குரலாய்ப் பரத்தையின் குரல் ஒலிக்கிறது. ஆணாதிக்க சிந்தனையில் நாணம் பெண்ணுக்கு வரையறுக்கப்பட்ட விதிகளுள் முதன்மையானது. எனவேதான் உயிரைவிட நாணத்தை வலியுறுத்திய பாடல்கள் இயற்றப்பட்டன. ஆனால் பரத்தை,
“சாஅய் ஒதுங்குந் துறைகேழ் ஊரனொடு
ஆவதாக இனிநாண் உண்டோ” (செயபால், 2007)
என்று நாணத்தைத் துச்சமாக எண்ணிப் பேசுகிறாள். இங்கு நாணத்தை உயிர்நிலையாய்க் கருதும் தலைவிக்கு எதிர்நிலையில் வைக்கப்படும் பரத்தையின் வாழ்வில் நாணம் பொருளற்றதாக மாற்றம் பெறுவது நோக்கத்தக்கது.

பரத்தையர் தோற்றப்பொலிவு
பெண்ணுடல் எப்போதும் கண்காணிக்கப்படுவதாகவும். அது எண்ணற்ற ஆணாதிக்க கருத்துக்களால் கட்டுண்டுக் கிடப்பதகவும் உள்ளது. குடும்பப் பெண் தன் கணவனுக்காகவே தன்னை அழகுபடுத்திக் கொள்ளக் வேண்டிய நிலையில் உள்ளாள். கணவனைப் பிரிந்து இருக்கும்போது ஒப்பணையின்றி இருக்க வலியுறுத்தப்படுகிறாள். கணவனைப் பிரிந்து இருக்கும்போது தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் பெண்ணை வேசி என்றும் நாடகக்காரி என்றும் தூற்றும் வழக்கம் இன்று வரையிலும் நடைமுறையில் உள்ளது.
தன்னை அழகுபடுத்திக் கொண்டு நறுமணம் கமழத் தெருவில் உலாவும் பரத்தையை,

“நீர் திரண்டன்ன கோதை பிறக்கிட்டு
ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்
போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ” (நாகராசன், 2007)
என்று மதுரைக் காஞ்சி காட்டுகிறது. தலைவனின் இன்பத்திற்காகவே தானும் அழகுபடுத்திக் கொள்கிறோம் என்பதை அறியாத, அதனை உணராத பரத்தை, அவ்வாறு தன்னை அழகுபடுத்திக் கொள்வதைத் தனக்குச் சமுதாயம் வழங்கிய சுதந்திரமென்று கருதிக் கொண்டு, மலர்களால் தன்னை அணிசெய்தவளாய் வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசியபடி தெருவில் நடப்பதை இப்பாடல் வரிகள் தெளிவுறுத்துகின்றன.

பரத்தையர்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள்
குடும்பத் தலைவிக்கு மறுக்கப்பட்டனவெல்லாம் பரத்தைக்கான விதிகளாக மாற்றப்பட்டன. பரத்தையர்களுக்குப் பழங்காலத்தில், தங்களை அழகுபடுத்திக் கொள்ளுதல், உரக்கப் பேசுதல், சிரித்தல், ஆடுதல், பாடுதல் ஆகியவற்றிற்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பிறரைக் கவர்தலே பரத்தையர்க்கான பணியாகக் கருதப்பட்டது. ஆணை முதன்மைப்படுத்தும் சமூகத்தால் உருவாக்கப்பட்ட பரத்தையரைச் சுதந்திரம் பெற்றவர், ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டவர் என்று பார்ப்பது பொருத்தமாக அமையாது. ஆனாலும் தனக்கான குறுகிய வெளியின் இடையில் பரத்தை தன் உணர்வுகளை வெளிப்படுத்திச் சினந்து தனது உள்ளுணர்வுகளை வெளிக்காட்டுகிறாள் என்பதும் நோக்கத்தக்கது.

பரத்தையின் சூளுரை
பரத்தை ஒருத்தி தன்னை ஏமாற்றிய தலைவனுக்கு ஏதேனும் ஒருவகையில் கட்டுப்பட்டவளாய் இருந்தும் அவள் அவனை எதிர்த்துப் பேசுகின்றாள்.
“தெறலருங் கடவுள் முன்னர்த் தேற்றி
மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந்து
ஆர்வ நெஞ்சந் தலைத்தலை சிறப்பநின்
மார்புதரு கல்லாய்ப் பிறனாயினையே
இனியான் விடுக்குவென் அல்லேன்” (செயபால், 2007)
என்று சூளுரைக்கிறாள். ‘இனியான் விடுக்குவென் அல்லேன்’ என்று தனது கோபத்தைக் காட்டிச் சூளுரை செய்கிறாள். இங்ஙனம் சூளுரைப்பது தலைவிக்கு முற்றிலும் மறுக்கப்பட்ட ஒன்று. ஆனால் குடும்ப அமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட பரத்தை, தலைவனை நோக்கிக் குரலுயர்த்திப் பேசுவதோடு மட்டுமின்றி தலைவனைக் கேள்வி கேட்பவளாகவும் விளங்குகின்றாள்.

உண்மை உரைக்கும் பரத்தை
தலைவியிடம் வாதிடும்போது, தலைவனே உடனுறை பகை என்று தலைவிக்கு உண்மையுரைப்பவளாகவும் பரத்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை,
“யாந்தம் பகையேம் அல்லேம் சேர்ந்தோர்
திருநுதல் பசப்ப நீங்கும்
கொழுநனுஞ் சாலுந்தன் உடனுறை பகையே” (செயபால், 2007)
என்று அகநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கின்றது.
தலைவன் மீதான சினத்தையும் பரத்தை மீது ஏற்றி, அவளிடம் தன் பகையைக் காட்டும் தலைவியிடம், பரத்தை, ‘‘தலைவியே நான் உன்னுடைய பகை அல்ல. உனக்கும் எனக்கும் இடையில் நின்று நம் இருவரையும் ஒடுக்கும் தலைவனே உனக்கு உடனுறை பகையாவான்’ என்று பேசுகிறாள். இதில் பரத்தையின் பேச்சு ஆணாதிக்கத்திற்கு எதிரான கலகச் குரலாக இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது ஆகும். அறிவுநுட்பத்துடன் சிந்தித்து ஆணின் வல்லாதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்பவளாக பரத்தை இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பரத்தையிடம் சென்ற தலைவன் முற்றிலும் மகிழ்ச்சியாகவே இருந்தான் என்று கூறமுடியாது. காரணம் அவளும் ஒரு தலைவியே ஆவாள். தலைவியைப் பிரிந்து சென்ற தலைவனுக்கும் பரத்தைக்கும் இடையே ஊடலும் சினத்தலும் இகழ்ச்சிச் சொற்களும் ஏற்பட்டுள்ளது. இதனை,
“இகழ்ந்த சொல்லும் சொல்லி சிவந்த
ஆய்இதழ் மழைக்கண் நோய்உற நோக்கி
தண்நறுங் கமழ்தார் பரீஇயினள் நும்மொடு
ஊடினாள்…..”- (செயபால், 2007)
என்ற பாடலடிகள் வழி அறியமுடிகிறது. இதிலிருந்து பரத்தைத் தலைவனுடன் கொண்ட ஊடல் புலனாகின்றது. இதில் பரத்தை தலைவனைச் சினந்து நோக்குகின்றாள். அவனது மாலையினைப் பிய்த்து எறிகின்றாள். இது சங்கத் தலைவியர் எவரும் செய்யாத செயலாக அமைகின்றதும் ஈண்டு நோக்கத்தக்கது ஆகும்.

ஆலங்குடி வங்கனார், பரத்தையைத் தலைவன் பிரிகின்றான். அப்பொழுது பரத்தை “உன்னை அன்றி எனக்கு வேறு என்ன நலன் இருக்கின்றது? எனவே நீ சென்றாலும் என்னை மறவாது மீண்டும் அருள்வாயாக” என்று புகழ் கூறி அனுப்பி வைக்கின்றாள் என்கிறார். இதனை
“இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர!
நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று,
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் கெட அறியாதாங்கு, சிறந்த
கேண்மையொடு அளைஇ, நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே” (பாலசுப்பிரமணியன், 2007)
என்னும் பாடலடிகள் சுட்டுகின்றன. ஒரு வேளை தலைவனின் பொருள் ஒன்றே பரத்தையின் நோக்காக இருந்தால் மீண்டு வரும்பொழுது நிறைய பொருள் கொணர்க என்றிறுப்பாள். ஆனால் அவளோ தன்னை மறவாத மனம் வேண்டும் என்று வேண்டுவதும் இங்கு குறிப்பிடத்தகுந்ததாகும்.

ஒரு தலைவி “தலைவனே நீ பரத்தை மகளிரை எம் மனை அழைத்து வந்து அவரோடு கூடி வாழ்ந்தாலும் அவர் உனக்குப் புத்திர பாக்கியம் தந்து கற்புடையவராய் எம்முடன் இருந்திடல் அரிதினும் அரிதாகும்” என்கிறாள். இதனை, ஆலங்குடி வங்கனார்,
“யாணர் ஊர நின் மாணிழை மகளிரை
எம்மனைத் தந்துநீ தழீஇயினும் அவர்தம்
புன்மனத்து உண்மையோ அரிதே அவரும்
பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்த
நன்றி சான்ற கற்போடு
எம்பா டாதல் அதனினும் அரிதே”- (பாலசுப்பிரமணியன், 2007)
என்கிறார். இதிலிருந்து பரத்தைக்குக் குழந்தை பெற்றெடுக்கும் உரிமை இல்லை என்பது புலனாகின்றது. அதனால் தான் தலைவியின் புதல்வனைத் தனது புதல்வனாகக் கருதுகிறாள். அவனுக்கு அணிகலன்கள் அணிவித்து மகிழ்கிறார். அவள் காமத்திற்காக மட்டுமே தலைவனுடன் தொடர்பு வைத்திருந்தால் இவ்வாறு செய்ய வேண்டியதில்லை. பணத்திற்காக இருந்தால் என்றாலும் இவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை. “பொருளுக்காகத் தன் உடலை விற்கின்றனர் என்ற கருத்து அகப்பாடல்களில் யாண்டும் காணப்பெறவில்லை. மாறாக அவர்கள் ஆணுடன் சேர்ந்து வாழவே விரும்புகின்றனர் என்பதையே உணர்த்துகின்றன.
இவ்வாறு மருதத்தில் வரும் பரத்தை என்பவள் தலைவிக்கு நிகராகவே சித்திரிக்கப்பெற்றுள்ளார். தலைவன் தலைவியைப் பிரியும் போது தலைவி வருந்துவதைப் போல் பரத்தையும் வருந்துகின்றாள். தலைவனின் மீது தலைவியைப் போல் அன்பும் அதிகம் கொண்டவளாகவே வருகின்றாள். தலைவனைக் கடிவதில் தலைவிக்கு ஒருபடி மேலேயே இருக்கின்றாள். ஆனால் தலைவிக்கும் பரத்தைக்கும் இடையே உள்ள வேறுபாடு புதல்வரைப் பெறுதலே ஆகும். எனவே பரத்தை என்பவள் தலைவனின் மனைவியாகவே கருதப்பெற வேண்டியவள் ஆவாள்.
அக்கால சமூகப் பின்புலத்தினால் பரத்தைமை என்பது சமூகத் தேவையாகவே இருந்துள்ளது. அதனால் தான் சங்கப் பனுவல் இதனைப் “பரத்தைமை ஒழுக்கம்” என்கிறது. “தொல்காப்பியமும் மருதச் செய்யுட்களும் கூறும் பரத்தை எத்தகையவள்? வீதிவீதியாய்த் திரியும் கீழ்மகள் அல்லள்; பரத்தைக் குலத்தவளேனும் இல்லறத்தின் பகைத்தியல்லள். சிலப்பதிகாரத்தின் மாதவி போன்று ஆடலும் பாடலும் அறிந்தவள். கலை பயின்றவள் பெரும்பாலான குடும்பப் பண்பு உடையவள் என்பதே இலக்கியங்கள் காட்டும் பரத்தமை.

முடிவுரை
சங்க சமூகத்தில் பரத்தையர் எனப்படுபவர் இன்று கருதப்படுவது போல இழிவாகக் கருதப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்களை ஒரு சிலர் வெறுத்தபோதிலும் தனித்த அடையாளத்துடன் இருந்திருக்கின்றனர். செவ்விலக்கியங்கள் பரத்தையரை, இற்பரத்தை, காதற்பரத்தை, சேரிப்பரத்தை எனப் பலவகையாக வகைப்படுத்துகின்றன. அக இலக்கிய பெண் மாந்தர்களிலிருந்து வேறுபட்டு ஆணுக்கு எதிராய் ஒலிக்கும் ஒற்றைக் குரலாய்ப் பரத்தையின் குரல் ஒலிக்கிறது. அறிவுநுட்பத்துடன் சிந்தித்து ஆணின் வல்லாதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்பவளாக பரத்தை இருக்கிறாள்.
தலைவனின் பொருள் ஒன்றே பரத்தையின் நோக்காக இல்லை என்பதை அறியமுடிகிறது. தலைவன் அன்புக்காக ஏங்குபவளாகவும் அறியப்படுகிறாள். தலைவன் குழந்தையைத் தன் குழந்தைபோல் பாராட்டும் பண்புடையவளாகவும் விளங்குகின்றாள். இவர்கள் தற்காலத்தில் இருக்கும் விலைமகளிர் நிலைக்கு வேறானவர்களாய் இருந்திருக்கிறார்கள்.

மேற்கோள்கள்
செயபால், இரா. (2007) அகநானூறு (மூன்றாம் பதிப்பு)
(பாடல் எண் 186, 276, 306, 396)
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை – 600 098.

நாகராசன், வி. (2007) மதுரைக்காஞ்சி (மூன்றாம் பதிப்பு)
(பாடல் எண் 562-565 வரிகள்)
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை – 600 098.

பாலசுப்பிரமணியன், கு.வெ. (2007) நற்றிணை (மூன்றாம் பதிப்பு)
(பாடல் எண் 330, 400)
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை – 600 098.

Leave a comment

Trending