சமீபமாக இந்திய சாகித்ய அகாதமி அமைப்பு 2023 ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருதுகளைப் பெறும் விருதாளர் பட்டியலை அறிவித்தது.அதன்படி,தமிழில் 2023 ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருதை தேவிபாரதியின் “நீர்வழிப் படூஉம் “ எனும் நாவல் பெற்றுள்ளது.உளவியல் பின்னணியில், சமூக தொடர்புகளை பற்றி எழுதி வரும் இவர் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறார் மேலும் ஆங்கிலம், மலையாளம், இந்தி உட்பட இன்னும் சில இந்திய மொழிகளில் இவருடைய ஆக்கங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.இனி மலையாளம்,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்கள் குறித்த செய்திகளைக் காணலாம்.

இ.வி.ராமகிருஷ்ணன் கேரளத்தில் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருபவர்.இலக்கியத் திறனாய்விற்காக கேரள சாகித்ய அகாதெமி விருது,ஓடக்குழல் வருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் 2023 ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருதினை தனது “மலையாள நாவலின்டே தேஷகாலங்கள்”என்ற ஆக்கத்திற்காக பெற்றுள்ளார்.கவிஞராகவும் இலக்கிய விமர்சகராகவும் அடையாளம் காணப்பெறுகிற இ.வி.ராமகிருஷ்ணன் 1900-2000 காலக்கட்டத்திய சிறுகதைகளை இந்திய சிறுகதைகள் (1900-2000) என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டுள்ளார்.இந்நூல் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.இந்திய மற்றும் கேரள இலக்கியங்களில் தொடர்ந்துத் திறனாய்வுக் கொள்கைகளை ஆராய்ந்து வரும் இ.வி.ராமகிருஷ்ணன் நான்கு கவிதைத் தொகுப்புகள்,பத்திற்கும் மேற்பட்டத் திறனாய்வு நூல்களை படைத்துள்ளார்.

2023 ம் ஆண்டிற்கான தெலுங்கு மொழி சாகித்ய அகாதெமி விருதினை தள்ளவஜ்ஜுலு பதஞ்சலி சாஸ்திரி தனது “ராமேஸ்வரம் காக்குலு மரிகொன்னி கதலு” என்ற படைப்பிற்காக பெற்றுள்ளார்.சூழலியலாளராகவும்,கவிஞராகவும்,தொல்லியல் ஆய்வறிஞராகவும் அடையாளப்படுத்தப்படும் இவர் சிறந்த முற்போக்குவாதியும் ஆவார்.பலவேறான பிரிவுகளைச் சார்ந்த மக்களின் உரிமைகளுக்காகப் போராடியுள்ளார்.இடம்பெயரும் வலசைப் பறவைகளுக்கான ஏரியாக விளங்கும் ராஜமகேந்திரவரம் கொல்லேறு ஏரியைப் பாதுகாக்க பெருமுயற்சி மேற்கொண்டு வெற்றியும் கண்டுள்ளார்.நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் ,நான்கு நாவல்கள் மற்றும் பல முற்போக்கு கவிதைகளை எழுதியுள்ளார்.”வாசகர்களைக் சிந்திக்க வைக்கும் புதிய ,தனித்தன்மை வாய்ந்த களங்களை தெரிவு செய்து கதைகளைப் படைக்கிறார்.இவரது நாவல்கள் ‘வீர நாயகுடு’ மற்றும் ‘தேவரா கோட்டேசு’ ஆகியவை சிறந்த கதைக்களங்களைக் கொண்டுள்ளன’ என்று தள்ளவஜ்ஜுலு பதஞ்சலி சாஸ்திரி குறித்து எழுத்தாளர் வத்ரேவு வீர லக்ஷ்மி தேவி குறிப்பிடுவது நோக்கத்தக்கதாகும்.

2023 ம் ஆண்டிற்கான கன்னட மொழி சாகித்ய அகாதெமி விருதினை மகாபாரதம் பற்றியக் கட்டுரைத் தொகுப்பான “மகாபாரத அனுசந்தான பாரத யாத்ரே” என்னும் நூல் பெற்றுள்ளது.இந்நூலின் ஆசிரியர் லக்ஷ்மிஷா தொல்வாடி ஆவார்.இந்தக் கட்டுரைகள் 2017 ல் ‘ப்ரஜாவாணி’ என்ற கன்னட இதழில் ‘முக்த சந்தா’ என்னும் தலைப்பில் தொடராக வெளிவந்தது.ஒரு கன்னட ஆய்வாளரின் பார்வையில் வியாசரின் உலகநோக்கை தத்துவார்த்தமாக விளக்குபவையாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.மஹாயுக்தயா முன்னா,சம்பிகே பாகவதா,பெட்டா மஹமதனா பலிகே பரதித்தரே,பாவதல்லனா உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.இதில் பெட்டா மஹமதனா பலிகே பரதித்தரே என்ற நூல் தனது குருவுடனான இவரது சுய அனுபவங்களை விவரிப்பதாக அமைந்துள்ளது.மேலும் 2020 ம் ஆண்டிற்கான வி கே கோகக் விருதினையும் இவர் பெற்றுள்ளார்.

போலவே, தென்னிந்திய மொழிகளில் 2023 ம் ஆண்டுக்கான யுவபுரஷ்கார் மற்றும் பாலபுரஷ்கார் விருதுகள் யார் யாருக்குத் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பார்க்கலாம். தமிழில் யுவபுரஷ்கார் விருதினை எழுத்தாளர் ராம் தங்கம் ‘திருக்காத்தியல்’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக பெற்றுள்ளார்.மலையாளத்தில் எழுத்தாளர் கணேஷ் புத்தூர் ‘அச்சன்டே ஆலமரா’ என்ற தனது கவிதை நூலிற்காக யுவபுரஷ்கார் விருதினைப் பெற்றுள்ளார். தெலுங்கிலும் ,கன்னடத்திலும் முறையே தக்கெடசிலா ஜானி தனது ‘விவேச்சணி’ என்னும் திறனாய்வு நூலிற்காகவும் மஞ்சுநாயக் செல்லேரு ‘பூ மத்தே இதரே கதகளு’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காகவும் யுவபுரஷ்கார் விருதினைப் பெற்றுள்ளார்கள்.

பாலபுரஷ்கார் விருதினைத் தமிழில் எழுத்தாளர் உதயசங்கர் தனது ‘ஆதாமின் பொம்மை’ என்ற நாவலிற்காக பெற்றுள்ளார்.ஏ.எஸ்.பிரியா தனது ‘பெருமழையத்தே குஞ்ஞிதழுகள்’ என்னும் நாவலிற்காக மலையாள மொழிக்கான யுவபுரஷ்கார் விருதினைப் பெற்றுள்ளார்.தெலுங்கில் ‘வஜ்ரால வானா’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக டி.கே.சதுவுல பாபு பாலபுரஷ்கார் விருதினைப் பெற்றுள்ளார்.போலவே,கன்னட மொழியில் விஜயஶ்ரீ ஹாலாடி தனது ‘சூரக்கி கேட்’ என்னும் நாவலிற்காக பாலபுரஷ்கார் விருதினைப் பெற்றுள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் இலக்கியப் போக்கு எவ்வாறு உள்ளன என்று பொது நிலையில் அறிமுகப்படுத்திக் கொள்ளவும் சாகித்ய அகாதெமி விருதுகள் பெற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் இலக்கிய விவாதங்கள் குறித்த அறிமுகத்தைப் பெறவும் இந்தப் பதிவு உதவக்கூடும்.

சான்றுகள்
https://en.m.wikipedia.org/wiki/E._V._Ramakrishnan

https://www.deccanchronicle.com/amp/lifestyle/books-and-art/211223/writers-poets-hail-patanjali-sastri-for-kendra-sahitya-akademi-award.html

https://www.thehindu.com/books/lakshmisha-tolpadi-bags-akademi-award-for-collection-of-essays/article67658510.ece/amp

https://sahitya-akademi.gov.in/awards/akademi_awards.jsp

Leave a comment

Trending