நாட்டார் பாடல் 01 : குலவைப்பாட்டு

முதுவர் இனக் குலவைப்பாடல்
தொகுப்பு – முனைவர் ப.குணசுந்தரி. 2007

வால்பாறையில் வாழ்ந்துவரும் பல்வேறு பழங்குடியினருள் ஒரு குடியினர் முதுவன் குடிகள். இன்றளவும் அடர்ந்த வனங்களுக்குள்ளாகவே வாழ்ந்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க வரும்நிலையில் அவர்களை நாம் காண இயலும். மற்ற நாட்களில் காணுதல் அரிது.

மஞ்சள் அரைக்கும் கல்லு
மலவாழத் தோப்புக் கல்லு

ஒரமீனரைக்கும் கல்லு
வீணாச பட்டபாரு     (குலவை குலு குலு குலு குலு….)

ஆத்துக்கு அக்கரையில
என்னென்ன தீவெளிச்சம்
மாம மக சமைஞ்சிதின்னு
மத்தாப்பு தீவெளிச்சம்         (குலவை)

செம்பீளி சிறையெழுதி
செவத்த பொன்னு பேரழகி
ஒர வம்பீளி தாலிகட்டி
வாழறது நிச்சயமோ?         (குலவை)

சுத்தி சுத்தி கொண்ட கட்டி
செக்ரமுண்டும் தேரழகி
சுத்திகட்டும் கொண்டையிலே
சுத்துது பார் கார்மேகம்               (குலவை)

பட்ட மரத்திலே பார்
பாம்பிருக்கும் தேளிருக்கும்
அர தப்பமணி கொண்டையிலே
தவறாம பூவிருக்கும்          (குலவை)

அந்தி வள்ளி சந்தி வள்ளி
ஆகாச வானவெள்ளி
ஒரமொறப்பொறத்துன்னூட்டுக்கு
முறுக்கு வள்ளி பூக்களியோ(குலவை)

அரிசி கடன்வாங்கி
அஞ்சுகட்டு மீன்வாங்கி
போயி சமைக்கலியோ
பொல்லாத நீலனுக்கு         (குலவை)

வரிக்கி வெச்ச வெங்காயம்
செங்கோட்ட மச்சானுக்கு
பொன்னு கேக்க வந்தாயோ
ஒரு மாலை கட்டாதே
உருகி உருகி திருகாதே
தின்னீறு பூசாதே
திருவௌக்கு சாயாதே               (குலவை)

தேயில பாறையில
தேர்ந்தே நிக்கயில
மீன்பிடிக்கும் வேடன் வந்து
கை காட்டி கூப்பிட்டாரு       (குலவை)

வேலி பிரிஞ்சிதின்னு
வெறகுக்குப் போயிருந்தேன்
கன்னுகுட்டி தவறிச்சிதின்னு
கடலோரம் சுத்தி வந்தேன்    (குலவை)

எண்ணக் கடையோரம்
வியாபாரி வீட்டோரம்
சவுளிக் கடையோரம்
சாஞ்சி நிப்பான் என் புருஷன் (குலவை)

வெட்டினா வெஞ்சிக்காடு
வெட்டாட்டி வனதேசம்
கட்டுனா இந்தப் பொன்னு
கட்டாட்டி நீலகிரி              (குலவை)

திருப்பூட்டு தீயூதி
தீர்ந்த ஞாயம் திரும்பப் பேசி
பர மண்டியிட்டு ஞாயம்பேசி
மதிகெட்ட ராசாவே           (குலவை)

ஓடன ஓட்டத்திலே
ஒரமாடு தோக்கயிலே
பாடன வட்டியில
பள்ளமாடு தோக்கயிலே      (குலவை)

பிச்சிச்சி மலையேறி
உளியடிக்கும் ஆசாரி
அட சத்தம்போட்டு உளியடிச்சி
சாயரைப்போக்கும் நாம்பார   (குலவை)

ஏழு மலையேறி எடுத்து வந்தேன்
செவத்த பொண்ணு
அட வச்சிருக்கத் தெரியாம
வெரட்டியடிச்சம்பாரு          (குலவை)

கோட்டை ஊருல
ஒசந்தொசந்த பனை ஊருல
அட பித்தா சிறுபால
        பின்பாட்டம் பாடலியோ (குலவை)

பெட்டி பெட்டி
பொன்னான வாய்ப்பூட்டு
அரவல் அஞ்சரைப் பெட்டிக்கு
வௌமதிக்க நாளாச்சு                (குலவை)

குஞ்சி குஞ்சிப் புள்ள
புகாரிமுடி சிரிப்பழகி
அர நெஞ்சுக்கு அமைஞ்ச புள்ள
நினைவொன்றும் மாறலியோ (குலவை)

காளையெங்காள
கண்ணாடி மயில்காள
பாறயில மேயுதுபார் நம்காள (குலவை)

பாசிப்பருப்பே
மலையாளத்து செம்பருப்பே
அர தேசத்துப் பருப்பாலே
தெடிவந்தேன் உன்னிடமோ (குலவை)

வெத்தலை கை பிடிச்சி
வெறும்பாக்கு வாயிலிட்டு
அர சுண்ணாம்பு எழைக்கனும்ணு
சுத்தினமோ                    (குலவை)@


குறிப்பு: பொன்னி, ஆரியமாலா இருவரும் தங்கள் நினைவுகளிலிருந்து பாடிய பாடல் என்பதனால் இக்குலவைப்பாடலில் தொடர்ச்சி இருக்காது.

  

Leave a comment

Trending