ஜி. சிவக்குமார்

1962இல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம்.
ஒரு குடும்பத்தில் ஓரிருவர் நல்லவர்களாக இருப்பார்கள். குடும்பத்தின் அத்தனை பேரும் நல்லவர்களாக இருப்பது ஆச்சர்யம்தானே? அது போல், ஒரு திரைப்படத்தில் ஓரிரு பாடல்கள் அற்புதமாக இருக்கும். அத்துணைப் பாடல்களும் அற்புதமாக இருப்பது பேரதிசயமல்லவா? நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தின் அத்துணைப் பாடல்களுமே அற்புதமானவை.
இன்னொரு ஆச்சர்யமும் உண்டு. இந்தப் படத்தின் வசனங்களை எழுதியவர் பாடல்களை எழுதினாரா? இல்லை, பாடல்களை எழுதியவர் வசனங்களை எழுதினாரா? என்று மயக்கம் வருமளவு பாடல் காட்சிகளும், பாடல் வரிகளும் அழகாக ஒத்திசைந்திருக்கும்.
டாக்டர் முரளியின் வாழ்வில் காதலியென்று ஒரு பெண் சில காலம் இருந்தாள். அவள் வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டு போன பிறகு, முரளிக்கு மீந்தது கொஞ்சம் இனிய நினைவுகளும். அவளுடன் இருக்கும் ஒரு புகைப்படமும்தான்.
பெரும்பாலும் மரணம் ஜெயிக்கிற வியாதியான புற்று நோய்க்கு சிகிச்சையளித்தபடி அமைதியாகத், தனியாக வாழ்ந்து கொண்டிருந்த முரளியின் வாழ்வில் இரண்டாம் முறையாக அந்தப் பெண் வருகிறாள். இம்முறை தனியாக அல்ல. மரணம் கிட்டத்தட்ட விழுங்கிய நோயுற்ற அவளது கணவனுடன்.
வாழ்நாள் முழுவதும் உடனிருக்கப் போவதாகச் சொன்னவள், விலகிச் சென்று, எங்கோ கண் காணாமல் இருக்காமல், இனி வாழ்வில் ஒரு போதும் இணைய முடியாத நிலையில், தன் கண்ணெதிரே, இரத்தமும் சதையுமாக, சிறிதும் தொடர்பில்லாதவளாக நடமாடுவதைச் சகித்துக் கொண்டு அவளது கணவனுக்கு சிகிச்சை அளிக்கிறார் முரளி.
ஒரு கட்டத்தில், இவர்கள் இருவருக்குமிடையேயான நேசத்தை அறிந்து முதலில் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தாலும், பின், தன் மரணத்திற்குப் பின் இருவரும் இணைய வேண்டுமென்ற வாக்குறுதியைக் கேட்கிறான் கணவன்.
இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு தன் கணவனின் உயிரைப் பறித்து விட வேண்டாம் என்ற கொடுமையான வார்த்தைகளை தன் முன்னாள் காதலியின் வாயிலிருந்து கேட்ட முரளி, “என் உயிரைக் கொடுத்தாவது உன் கணவன் உயிரைக் காப்பாற்றுவேன்” என்று சொல்கிறான், சொன்னபடியே செய்தும் காட்டுகிறான்.
இதுதான் திரைக்கதை.
இனி பாடல்களுக்கு வருவோம்.
ஒரு காலத்தில் நெருக்கமாகப் பழகி, ஏதேதோ காரணங்கள் சொல்லிப் பிரிந்து போய் வேறொருவனுடன் சந்தோஷமாக வாழும் பெண்ணைப் பார்த்து, “இது நியாயமா? நீ நல்லா இருப்பியா?” என்று சபிப்பவர்கள் நிறைந்த இந்த உலகில், “எங்கிருந்தாலும் வாழ்க” என்று வாழ்த்திப் பாடுகிற மனநிலை எத்தனை பேருக்கு வரும்? முரளிக்கு அந்த நல்ல மனம் இருக்கிறது. அதனால்தான், தன்னை விட்டுப் போனவள், மரணம் நெருங்கும் நோயாளியான கணவனுடன் வருவதைப் பார்த்து, “உனக்கு நல்லா வேணும்” என்று குரூரமான சந்தோஷமடையாமல்,
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
என்று பாடுகிறான்.
இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினைத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க
என்று தன் ஆழ்மனதின் துயரைக் கொட்டினாலும்,
வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க! வாழ்க! வாழ்க!
என்று மனதார வாழ்த்தவும் செய்கிறான்.
ஆனால், நாஸ்தென்கா, நீ அவனுடன் மண மேடைக்குச் செல்கையில், மனம் கசந்து வார்த்தைகளைக் கூறி, உன் கூந்தலில் சூடியிருக்கும் இன்னரும் மலர்களில் ஒன்றையேனும் கசக்கி விழச் செய்ய மாட்டேன் என்று தஸ்தாவேஸ்கியிள் வெண்ணிற இரவுகளில் சொல்லும் அற்புதமான மனிதனை நீங்களும் அறிந்திருப்பீர்கள். அவனும், முரளியும் ஓரினம்தான். அதனால்தான் இத்தனை பழகி, இத்தனை பேசி, அத்தனை எளிதாகப் பிரிந்து சென்றவளைப் பார்த்து, “உன் இதயம் அமைதியில் வாழ்க” என்று முரளியால் வாழ்த்த முடிகிறது.
மரணத்தின் வெம்மையான பெருமூச்சொலி நிறைந்த அந்தப் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையில் தென்றலாய்த் தவழ்கிறதொரு குழந்தை. அந்தக் குழந்தையும் நோயாளிதான் என்றாலும், அங்கிருக்கும் அனைவருக்கும் அதுதான் பெரிய ஆறுதல். அந்தக் குழந்தையின் பிறந்தநாளில், நாயகி பாடுவதாக அமைந்த இந்தப் பாடலில் குழந்தைக்கு எத்தனை எத்தனை அழகான உவமைகள் மலர்களாய்ச் சொரிகின்றன பாருங்கள்.
முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ
கடவுள் தந்த பொருளல்லவோ
சின்னஞ்சிறு சிறகு கொண்ட
சிங்காரச் சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து
சிரித்து வரும் சிரிப்பல்லவோ
மாவடுக் கண்ணல்லவோ
மைனாவின் மொழியல்லவோ
பூவின் மணமல்லவோ
பொன்போன்ற முகமல்லவோ
தாழங்குடை அல்லவோ
தள்ளாடும் நடையல்லவோ
மாலைப் பொழுதல்லவோ
வண்டாடும் செண்டல்லவோ
கண்ணதாசன் மிகக் குறைந்த கால அளவில் எழுதிய பாடல் இது. வீட்டிலிருந்து புறப்பட்டு, ரிகார்டிங் சென்டர் போவதற்குள் காரிலேயே எழுதிக் கொடுத்து விட்டார் என்று படித்த நினைவு. இதில் ஆச்சர்யமென்ன இருக்கிறது. அவர் கண்ணதாசனல்லவா.
தன் மரணத்திற்குப் பின் வேறு திருமணம் செய்த கொள்ள வேண்டும் என்று மரணப் பிடியில் இருக்கும் கணவன் கேட்கையில், அவனை உயிரை விட இனிமையானவனாக நேசிக்கும் மனைவியின் மன நிலை எப்படியிருக்கும்? இதை விட வேறு யாரால், வேறு எந்த வரிகளால் அவள் வேதனைத் துடிப்பைச் சொல்லி விட முடியும்?
சொன்னது நீ தானா?
சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா?
ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஏன் ஏன் ஏன் என் உயிரே
இன்னொரு கைகளிலே
யார் யார் யார் நானா?
எனை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே?
மங்கள மாலை குங்குமம யாவும்
தந்ததெல்லாம் நீ தானே
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீ தானே
என் மனதில் உன் மனதை
இணைத்ததும் நீ தானே
இறுதி வரை துணை இருப்பேன்
என்றதும் நீ தானே
இந்தப் பாடலின் உச்சம் என இந்த வரிகளைக் கூறலாம்.
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா?
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா?
ஒரு கொடியில் ஒரு முறை தான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான்
வளரும் உறவல்லவா.
இந்தப் பாடலில் ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மிகப் பெரிய ஆச்சர்யங்களை நிகழ்த்தியிருப்பார்.
ஏன்
ஏன்
ஏன் என்னுயிரே என்ற வரிகளுக்கு, ஒவ்வொரு வரிக்கும், தேவிகாவுக்கும், முத்துராமனுக்கும் ஒவ்வொரு ப்ரேம்கள்
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே? என்று தேவிகா பாடும் போது சிறிய சுவர்க் கண்ணாடியில், முத்துராமனின் உருவம் தெரியும்.
முத்துராமன் கட்டிலில் அமர்ந்திருப்பார். பாடிக் கொண்டிருக்கும் தேவிகா கீழே அமர்ந்திருப்பார். கேமரா, மேலிருந்து இறங்கி கட்டிலின் கீழே ஊர்ந்து செல்லும். இந்தக் காட்சியை பலமுறை பார்த்து வியந்திருக்கிறேன். நண்பர், கௌதம் சங்கர் ஒரு பேட்டியில் கேட்டதாகச் சொன்னதும்தான் பாடலை மறுபடி பார்த்தேன். கட்டிலை மேலே தூக்குகிறார்கள்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை பாடலை தத்துவப் பாடலென்று என்னைப் போல நீங்களும் நினைத்திருந்தீர்கள்தானே? இல்லை. அது, தன் மனைவி இன்னொருவனின் முன்னாள் காதலி என்று அறிந்த அதிர்வில் கணவன் பாடுவது.
ஆயிரம் வாசல் இதயம் – அதில்
ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதும் இல்லை
ஒன்று இருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதி இல்லை
ஒன்று இருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதி இல்லை
என்ற வரிகளைப் பாடும் காட்சியில் முத்துராமன் மீண்டும் சுவரில் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடிக்குள் இருப்பார். தேவிகா, குற்றவுணர்வில் குமைந்து கொண்டிருப்பார்.
பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்து விடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்
என்ன அற்புதமான வாழ்வியல் வரிகள்.
வாழ்வுக்கும் சாவுக்குமிடையே ஊசலாடும் கணவன், திருமணக் கோலத்தில் பார்த்தது போல் அதே புடவை அணிந்து, நகைகள் அணிந்து வரச் சொல்கிறான். இந்த மனநிலையில் எப்படி என மயங்கும் மனைவியிடம், இது கடைசி ஆசையாகக் கூட இருக்கலாம் என்று அதிர வைக்க, அப்படியே வரும் மனைவி, கணவனைப் பார்த்துப் பாடுகிறாள்.
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?
ஏன் இந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ?
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ?
முகத்தை பார்த்துக்கொள்ள, துடித்தாயோ?
இந்த வரிகளைப் பாருங்கள்.
வாழ்க்கைக் கனவுகளைக் கலைத்தாயோ?
ஒரு வாசல் திறந்ததென்று நினைத்தாயோ?
மாயப் பறவை ஒன்று
வானில் பறந்து வந்து
வாவென அழைத்ததைக் கேட்டாயோ?
என்ன அழகான படிமம் பாருங்கள். கவிதைகளில் படிமங்கள் பயன்படுத்தப்படுவதைப் போல் கண்ணதாசன், இந்தப் பாடலில் மரணத்தை ஒரு பறவையாகச் சொல்கிறார். அதுவும் மாயப் பறவை. வானில் பறந்து வந்து வாவென அழைக்கிறது. அடடா
பற்றியிருக்கும் தாலிக் கயிற்றின் கடைசி இழையும் அறுந்து விடுமோ என அஞ்சித் தவிக்கும் ஒரு மனைவியின் இந்த ஈர வார்த்தைகளைக் கேளுங்கள்.
பறவை பறந்து செல்ல விடுவேனா? அந்தப்
பரம்பொருள் வந்தாலும் தருவேனா?
உன்னை அழைத்துச் செல்ல
எண்ணும் தலைவனிடம்
என்னையே நான் தர மறுப்பேனா?
மொத்தப் பாடலும் கேள்விகளாகவே அமைந்திருப்பதைக் கவனித்தீர்களா?
மீண்டும் வின்சென்ட்டின் அற்புதங்கள்.
பாடலின் துவக்கத்தில், அவர்களது திருமணம், முதலிரவு முதலான இனிமையான நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
ஒரு வாசல் திறந்ததென்று நினைத்தாயோ? என்ற வரிகளின் திறக்கும் கதவுகளின் வழி முத்துராமன் நடந்து போய்க் கொண்டேயிருக்கிறார். முத்துராமன் கட்டிலில் படுத்தால், கேமராவும் கீழிருந்து தேவிகாவைப் பார்க்கிறது.
பறவை பறந்து செல்ல விடுவேனா? அந்தப்
பரம்பொருள் வந்தாலும் தருவேன்ன்னா?
ஆபரேஷன் வெற்றியடைந்து கணவன் உயிர் பிழைக்க, எதிர்பாராத் திருப்பமாக, டாக்டர் முரளி இறக்கும் காட்சியில் ஒலிக்கத் தொடங்குகிறது
ஒன்றையே நினைத்திருந்து
ஊருக்கே வாழ்ந்திருந்து
உயிர் கொடுத்து உயிர் காக்கும்
உத்தமர்க்கோர் ஆலயம். . . ஆலயம்
ஒருவர் வாழும் ஆலயம்
உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம்
நெஞ்சில் ஓர் ஆலயம்
ஆம். ஒன்றையே நினைத்திருந்து ஊருக்கே வாழ்ந்திருந்து, உயிர் கொடுத்து உயிர் காத்த உத்தமன்தானே முரளி.
கருணை தெய்வம் கைகள் நீட்டி அணைக்க தாவும் ஆலயம்
காலமெல்லாம் திறந்து காணும் கதவில்லாத ஆலயம்
பாசமென்னும் மலர்களாலே பூஜை செய்யும் ஆலயம்
தியாகம் என்னும் ஒளியினாலே தீபம் ஏற்றும் ஆலயம்
நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படமும் நம் மனதில் என்றென்றும் நிலைத்து வாழும் ஆலயம்தான்.

Leave a comment