ஜி.சிவக்குமார்

கொடைக்கானலுக்கு கொச்சினிலிருந்து இன்பச் சுற்றுலா செல்லும் நண்பர்கள், சுற்றுலாவின் ஒரு பகுதியாக, பின்னாட்களில் கமலஹாசனின் கைங்கரியத்தால் குணா குகையென திருநாமம் பெற்ற சாத்தானின் சமையலறைக்கு, தடையை மீறிச் செல்கின்றனர்.

அவர்களில் ஒருவனான சுபாஷ், எதிர்பாராமல், குகையின் துவாரமொன்றில் விழுந்து விடுகிறான். அங்கு விழுந்த எவரும் இதுவரை உயிர் பிழைத்ததில்லை என்ற எதார்த்தத்தைச் சொல்லி, சில மனிதர்கள் கை விடுகின்றனர், சிலர் கை கொடுக்கின்றனர்.

சிறு வயது முதல் இணைந்தே வளர்ந்த அவர்களது முன் அனுபவங்களின் துணை கொண்டு நண்பனை மீட்க அவர்கள் எடுத்த முயற்சி வென்றதா? என்பதைச் சொல்கிறது படம்.

மரணாபத்தில் ஒருவர் மாட்டிக் கொள்வதையும் அவரைக் காப்பாற்றுவதையும் பேசிய அறம் போன்ற எத்தனையோ படங்கள் வந்துள்ளன. இந்தப் படம் இவ்வளவு பெரிய அளவில் பேசப்பட்டதற்கு கண்மணி அன்போடு பாடலும் முக்கியக் காரணம்.

“லூஸ் அடிக்கடா” திரைப்படத்தில் எவ்வளவு முக்கியமான வரி.

“அதையும் தாண்டிப் புனிதமானது புனிதமானது” என்ற வரிகளின் போது நின்று கொண்டு நம்பிக்கையில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரும் தங்களை மறந்து ஓடி வந்து சுபாஷின் நண்பர்களோடு சேர்ந்து கயிறை இழுக்கிறார்கள். பார்த்துக் கொண்டிருக்கும் நாமும்தான்.

“அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா?” என்ற வரிகளின் போது, கமலஹாசன், நாயகியைத் தூக்கிக் கொள்வது போலவே, காயம்பட்ட சுபாஷை அவனது நண்பன் தூக்கிக் கொள்கிறான்.
அந்த இடத்தில் இதுநாள் வரை தெய்வீகக் காதலைப் பேசிக் கொண்டிருந்த பாடல் சட்டென்று நட்பின் உன்னதத்தைப் பேசுகிற பாடலாக மாறுகின்ற ஒரு ரசவாதம் நிகழ்கிறது.

இளையராஜாவும், திரைப்படத்தின் இயக்குநரும் பிரித்தறிய முடியாதபடி ஒன்றாகக் கலக்கிற அழகிய தருணமிது.

இந்தப் பாடல் இல்லாமல் வெறுமனே சுபாஷ் காப்பாற்றப்படுகிற காட்சியை நினைத்துப் பாருங்கள். இதை உணர்வீர்கள்.

வெளி வந்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு மொழித் திரைப்படத்தில் இந்தப் பாடல் எந்த வித உறுத்தலுமின்றிப் பொருந்துகிற அழகை, ஆச்சர்யத்தை என்னென்பது.

கதையல்ல, நிஜம் என்கிறார்கள், படக் குழுவினர். படத்தின் இறுதியில் உண்மையான மஞ்சும்மெல் பாய்ஸ்-இன் புகைப்படங்களும் காட்டப்படுகின்றன.

“ஏன்டா அங்க போனீங்க? அதான் உள்ள எறங்கக் கூடாதுன்னு போர்டெல்லாம் வச்சிருக்கில்ல” ன்னு காவல்துறை ஊழியர் கேட்கிற கேள்வி, குணா குகைக்குள் இறங்கி மாயமானவர்களுக்கு மட்டுமல்ல, அத்தனை எச்சரிக்கைகளையும் புறக்கணித்து, யார் சொல்லியும் கேட்காமல் அலைகளில் நடுவில் பலர் மறைந்து போகிற கடற்கரைகளிலும் கேட்கலாம்.
என்ன செய்ய, நம் தேசத்தில் உயிர்கள் அத்தனை மலிவானவை. சாகசங்கள் அத்தனை முக்கியமானவை.

ஒரு குறுகிய கால கட்டத்தில், இந்தப் படத்தைப் பற்றிப் பேசாதவர்கள் பாவம் செய்தவர்கள் என்கிற மாதிரியான ஒரு வீச்சை இந்தப் படம் அடைந்திருக்கிறது.

நண்பர்கள் உல்லாசப் பயணம் செல்லுமிடத்தில் விதிகளை மீறி ஆபத்தில் சிக்குவதும், பின் மீட்கப்படுவதுமான எளிய கதை, சொல்லப்பட்ட விதத்தில் வெற்றியடைந்திருக்கிறது. மக்கள் மொழி வித்தியாசமின்றி கொண்டாடுகிறார்கள்.

Leave a comment

Trending