
மாயைகளைக் கடத்தல்
என்பது
துன்பத்தின்
துளியாகிறது

புரண்டு புரண்டு
படுக்கும் நடுநிசியில்
தோன்றி மறையும்
கனவுப் பொழுதுகளில்
தனித்த பனைமரத்தின்
கரகரத்த குரலில்
சேறும் சகதியுமான
குட்டையில்
தள்ளிவிடுகிறது
இதன் இடுகுறிப்
பெயர்தான் மாயை
சித்தாந்தக் கட்டுகளின் இடுக்குகளில்
நெடுஞ்சாலையில்
இருந்து பிரியும்
காலடித் தடத்தில்
கடைகளில் ஆவியாகும் தேனீரில்
ஏறி இறங்கும்
மின்சாரப் படிக்கட்டுகளில்
விடைகள்
இருக்கின்றன என்று
நவீனச் சித்தன்
விருத்தம் எழுதுகிறான்
காய்ந்து கிடக்கும்
வெற்றிடத்தில்
பாழ் வெளியில்
வெண்புகைப் படலம்
அச்சத்தை வலிந்து
புகட்டுகிறது
தோழமை சூழவும்
படைகுடிஆயுதங்களுடனும்
காட்சிப் பிழைகள் உடனும்
சுற்றி வளைத்துக்
கொள்கிறது
பொய்யும் வழுவும்
கலந்து மயங்கிய புதிய புதிய
புனைவுகள்
கடக்க இயலாதபடி
அங்கேயே
நின்று கொண்டுள்ளது
காலம்
இப்பொழுது
வழுக்குப் பாறையில்
வழிச்செலவின்
பொருட்டு
ஊன்றுகோலைத்
தேடிக்
கொண்டிருக்கிறேன்.

Leave a comment