முப்பரிமாணம்: நூல்வழிப்பயணம் 1

அன்பாதவன்

புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள், வேர்களின் பிடியில் கால்கள்,
அம்மாவின் இசைக்குறிப்பு

படைப்பாளிகள் ஒவ்வொருவரும் தம் புலன் சார்ந்த படைப்பு வெளியை, படைப்போவியம் தீட்டுவதற்கான கித்தானை, படைப்பின் ஊற்றுக்கண்களைத் தம் வாழ்வின் அனுபவங்களில், இருந்தே கண்டடைகிறார்கள். வாழ்க்கையெனும் நாபிக்கமலத்திலிருந்து பிரசவிக்கும் உன்னதக் கவிதைகளே இலக்கிய வானில் வாசகர், மற்றும் விமர்சகர்களுக்கு மத்தியில் புதிய இசையைப் பொழிகின்றன. அப்படியோர் புதுச்சுவை தந்த மூன்று நூல்களின் பறவைப்பார்வையே இந்த முப்பரிமாணம்.

  1. வேர்களின் பிடியில் கால்கள் : கவிதைகள்/புன்னகை பூ ஜெயக்குமார

“இருப்பைப் புறக்கணித்து விட்ட எதைப் பற்றியும் பேசிவிட முடியாது.
அது பொருள் உள்ள பேச்சாகவும் இருக்காது”

என்பார் கவிஞர் பழமலய்.
பொருள் பொதிந்த கவிதைகளைக் கொண்டு ஒரு தொகுப்பை வாசகன் கரங்களில் வழங்கியிருக்கிறார் புன்னகை பூ ஜெயக்குமார். ‘வேர்களின் பிடியில் கால்கள்’ – எனும் புதிய தொகுப்பின் கவிதைகள் சூழலியல் அக்கறையோடும், சக மனிதன் மீது அக்கறையும் கரிசனமும் கொண்டு நெய்யப்பட்டவை.

சூழலியல் என்பது என்ன? என யோசித்தோமானால் நாம் வாழ இடமளித்த பூமி, நாம் காற்று வாங்கும் கடல், தினசரி நுகரும் நீர், மழை, பனியென ஈரம் கசியும் வானம், சுடும் தீ, நொடிகளில் நம்மை உயிர்ப்பிக்கும் காற்று! நல்லது! நம்மைச் சூழ்ந்திருந்து ஓயாமல் நமக்கு உதவும் இந்த அய்ம்பூத தோழமைகளுக்கு நாம் செய்த கைமாறு என்ன?

எவ்வளவுக் கெவ்வெளவு சுற்றுச்சூழலை மாசுபடுத்த முடியுமோ அவ்வளவும் செய்தோம்; செய்கிறோம்! அணுக்கழிவுகளை வேதிக் கழிவுகளை கடலில் கொட்டி சீரழித்தோம்; தொழிலகக் கழிவுகளை நதிகளில் கலக்கும் நல்லவரன்றோ நாம்! நீர் நிலைகளை, விளைநிலைங்களை வீட்டு மனைகளாக்கி விட்டு அரிசிக்காக அயல் தேசங்களில் கையேந்தும் அவலம் யாரால் நிகழ்ந்தது. நாம் செய்கிற காரியங்கள் சூழலியல் பாதிப்பை உண்டாக்கி மனிதர்களாகிய நமக்கும் பிற உயிரினங்களுக்கும் இன்னலைக் கொடுக்குமெனத் தெரிந்திருந்தும் இது மாதிரியான சூழல் கேட்டினை தொடர்கிறோம்.
இத்தகைய சூழலில்தான் இயற்கையோடு இயைந்த வாழ்வைத் தொடரும் பொள்ளாச்சியிலிருந்து புன்னகை பூ ஜெயக்குமார் ஒளிர்கிறார்.

‘தூர்வாரும் நீர்நிலைகளில் மிதந்து கொண்டிருக்கலாம் சாபங்கள்’
(பக் 38)

யாரின் சாபங்கள்? யாருக்காக. . . . யாரின் மீது வினாச் சீவல்களை விசிறித் தள்ளுகின்றன இந்த குறுவரிகள்.
சரி! இப்படியே சாபங்கள் தொடருமாயின் எதிர்காலம் என்னவாகும் ஜெயக்குமார் பயக்குமாராய் எச்சரிக்கிறார்.

‘பறவைகள்/ வலசை போய்விட்டன/ அகாலத்தில் மரம் (பக். 37)

அகாலத்தில் மரணம் என்று எழுதியிருந்தாலும் கூட மிகப் பொருத்தமாத்தான் இருந்திருக்கும்.

பருவ காலச் சூழல் மாற்றங்கள் பெருகி இயற்கையின் வட்டம் மாறுகையில் அகால மழை, அகாலப் பனி, அகால அழிவு காலத்தை அகாலமாக்கும் மந்தை மனிதர் வாழும் சூழல் மாறுவதென்றோ? ஏனிந்த கேள்வியெனில் பதிலாக ஜெயக்குமாரின் ஒரு கவிதை.

வலி
மரங்களைச் சூறையாடி/ அமர்ந்த வீட்டில்/ நுழைவாயிலில்/ கண்திருஷ்டி கணபதி படம்!/ வரவேற்பறையில்/ வாஸ்து மீன் தொட்டி!/ காட்சிப் பெட்டிக்குள் வேறுவழி அறியாக்/ குரங்கு பொம்மை/ கண்கள் மூடிய கை விரல்களில்/வடிகிறது மூதாதையின் கண்ணீர்

(பக். 39)

காட்சியொன்றின் வழியாக சொல்லாதன சொல்லும் கவிதை
வாசகனுக்குள் இறங்கினால் பொல்லாதன விலகும்; புதியவை பூக்கும்.

சூழலியல் கவனத்தோடு மட்டுமன்றி சமூகப் பொறுப்புணர்வோடும் ஜெயக்குமாரின் கவிதை பேசுகிறது.
மத நல்லிணக்கம் பரப்புமிந்த கவிதை :

‘அம்மன் கோவில் திருவிழா
கடைகளில் ஊஞ்சலாடுகின்றன
அல்லா இயேசு படங்கள்’
(பக் 56)

‘அல்லா’ படம் எங்கே விற்கிறது கவிஞரே. . . . ?

வார்த்தைகளை ஒடித்து எட்டு வரிகளைத் தீட்டிக் கவிதையென அடம் பிடிக்கும் மூடநம்பிக்கையிலிருந்து வெளியில் வர வேண்டும்.

தொகுப்பின் உன்னதமாய் உள் நுழைந்து இடம் பிடித்து அமர்ந்து கொள்கிறது இக்கவிதை :

‘வெறிச்சோடிய தார்ச் சாலையில்/காற்றில் புரண்டு புரண்டு
தேடுகிறது இறகு இழந்த வானத்தை’

(ப. 60)

“ஒரு அறிவு நாணயமற்ற சமூகத்திற்கு எதிராக இக்கவிதைகள் பேசும் மொழி, அங்கலாய்ப்புகள் நிறைந்த, எதிர்காலக் குழந்தைகள் மீதான அக்கறைகளுடன் மனிதனாகப் பிறந்து பிறர்க்கும் ஏதேனும் செய்ய இயலுமாறு வாழ்வை அமைத்துக் கொள்வதுதான் அறிவுடைமை என நினைக்கும் ஒருவரின் கவிதைகளைத்தான் நாம் இத்தொகுப்பில் வாசித்துக் கொண்டிருக்கிறோம்”

எனும் யவனிகா ஸ்ரீராமின் அணிந்துரை ஜெயக்குமாருக்கு சாலப் பொருந்தும்.

@@@@

2. அம்மாவின் இசைக்குறிப்பு: கவிதைகள்/ஆண்டன் பெனி


‘இந்தப் பொழுதும் அப்படித்தானிருக்கிறது.
இக்கணத்தை என் மனதுக்குப் பிடித்த எல்லாப் பெயர்களையும் கொண்டு அழைக்க வேண்டும் போலிருக்கிறது’ –

என கணங்களுக்காய் ஏங்கும் கவிமனம் ஆண்டன் பெனியுடையது.

தமிழ்க் கவிதையின் பாடுபொருளாக, வானத்திற்கு கீழுள்ள எதையும் கொண்டு வர நவீனத் தமிழ்க் கவிதை அனுமதியும் சுதந்திரமும் தந்ததெனில், அக் கவிதாவெளியில் உறவுகளூடான தன்னிருப்பை, தன்னுடனான உறவுகளின் உணர்வுச் சங்கிலியை எளிய மொழி கொண்டு வலுவான கவிதைகளாய் நெய்து வாசகன் கரங்களில் வழங்கியிருக்கும் ஆண்டன் பெனியின் புதிய தொகுப்பாக ‘அம்மாவின் இசைக்குறிப்பு’.


“ஒரு பொய்யினைத் தன் சிரிப்பால் பொய்யென்று சொல்லிவிடுகிற குழந்தையிடம் இன்னும் எத்தனை பொய்கள் இருந்தாலென்ன”-
பக் 23 –

எனக் குழந்தைமை உலகின் பொய்களைச் சிலாகிக்கும் கவிமனம் கொண்ட பெனி, நவீன தமிழ்க் கவிதைகளின் கல்யாணக் குணங்களாக கண்டறியப்பட்ட, படிமம், குறியீடு, இருண்மை எனும் பளபளப்பு ஜரிகைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, கவித்துவ உரைநடை வழியாக தனது கவிமொழியைத் தேர்ந்தெடுத்து, வெற்றியும் கண்டிருக்கிறார்.
மகளுக்காக, அவளின் தோழமைகளான நாய்க்குட்டி, பூனைக்குட்டி யாவும் உறவாகின்றன கவிஞருக்கு.

‘மனைவி ஆரஞ்ச் கலர்க் குச்சியுடனும்
அம்மா கத்தரிப்பூ கலர்க்குச்சிகளுடனும்
அப்பா பழுப்பு நிறக் குச்சியுடனும் நிற்க

நிறமற்ற நான்
மகளுக்காக நிறங்களை வைத்துக்கொள்ளும்

வெள்ளை நிறமாகிறேன்’
(பக். 38).

நிறங்களின் வழியாக உறவுகளின் ஊடாக உறவு நூல் கொண்டு இணைக்கும் கவிஞர்க்கு, மகள், எந்த உறவையும் விட சற்றே உயர் ஸ்தானம் பிடிப்பது, தந்தையர் மனநிலை, உளவியலில் எலெக்ட்ரா காம்ளக்ஸ்.

தொடக்கத்தில் மகளின் பொய்யை நம்பியவருக்கு மறுபடி ஒரு வாய்ப்பு அம்மா வழியாக.

‘அம்மா விடம்
இரண்டு பொய்கள் இருந்தன
தன் வயிற்றுக்கும் கேட்கும்படியாக
‘பசிக்கவில்லை’ என்றொரு பொய்
தன் மனதுக்கும் கேட்டு விடாதபடி
‘நல்லாத்தான் இருக்கேன்’
என மற்றுமொரு பொய்’

(பக் 39)

இந்த ‘அம்மா’ ஞானக் கூத்தனின் ‘அம்மா’விடமிருந்து வேறுபடும் இடம்தான் வாசகனுக்கு கவிதை.

“ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்’ கவிதையில் மகளுக்கு நல்ல விசயங்களாக சிலவற்றைத் தாய் சொல்கிறாள். ஆனால் அதற்காகச் சொல்லும் காரணங்கள் பொய்களாகப் புலப்படுகின்றன”
(நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக்கூறுகள். பக் 251)

எனக் குறிப்பிடுவார் முனைவர் தமிழ் மணவாளன்.


‘முதல் முத்தத்தில் நெல்லிக் கூச்சம்
அடுத்த முத்தத்தில் மாக் கூச்சம்
அதற்கடுத்த முத்ததில் அன்னாசிச் சிலிர்ப்பு
இன்னும் எத்தனை தூரத்தில்

என் பலாச் சுளை நிறுத்தம்
– (பக் 77)-

எனும் கேள்வியின் மூலம் ஆண்டன் பெளி கவிஞர் நிலையிலிருந்து கவிஞராக உருவெடுப்பது வாசக சுகம். ‘சட்’ டென அதிர்வேற்படுத்தும் வரிகளுமுண்டு.

“எல்லா வகையிலும்
நம்பிக்கை இழந்த பின்பு
இறுதியாகவே ஒரு பூவினை
நான் முத்தமிடுகிறேன்”

(பக். 97)


“தாம் சந்தித்த மனிதர்களை கவிதைகள் வழியாக அறிமுகம் செய்து வைக்கும் கவிஞர், அத்தனை மனித உறவுகளையும் எழுத்தால் அணுகாமல் மனத்தால் அணுகி பின்பு எழுத்தாக்குகிறார்” என அணிந்துரைக்கும் வெள்ளூர் ராஜாவின் சொற்களில் 100% உண்மை.

‘கடிகாரம் பார்த்த படிக் கிடக்கும் என்னை
இழுத்து செல்ல முடியாதபடித் திணறுகிறது இக் காலம்”

(பக். 115)

இந்த வரிகளில் ‘இக் காலம்’ எனும் சொல்லாட்சி,

“சற்றைக்கு முன்
ஜன்னல் சட்டமிட்ட வானில்
பறந்துகொண்டிருந்த
பறவை எங்கே?

அது சற்றைக்கு முன்
பறந்து கொண்டிருக்கிறது” –

எனும் ஆனந்த்தின் கவிதைக்கு ஒப்பானது. கவிதையின் வெளியில் காலத்தின் இருப்பு மிக முக்கியமானது.


“வாழ்க்கை அனுபவம் ஒவ்வொரு கணமும் முழுமையாக நிகழ்கிறதேயன்றி புறம்- அகம் என்று தனித்தனியாக நிகழ்வதில்லை. நடந்து முடிந்த வாழ்வின் மனப்பதிவுகளை நாம் நம் நடைமுறை வசதிகளுக்காக அவ்வாறு பிரிவுகளற்று முழுமையாகத்தான் இயக்கம் கொள்கிறது. அது போலவே கவிதையும்” (கவிதை எனும் வாள்வீச்சு. பக் 126)

எனும் ஆனந்த்தின் வரிகள் ஆண்டன் பெணி-யின் கவிதைகளுக்காகவே எழுதப் பட்டிருப்பதாய் உணர்கிறேன்.

உணர்வுகள் பொங்கும் கவிதைகளில் சொற்சிக்கனத்தையும் கவிஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். கவிஞர், சொற்களின் கருமியாகட்டுமென சபிக்கிறேன்.

3. புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் : ஹைகூ தொகுப்பு /பூ. தனிக்‌ஷா பாரதி

“தமிழக்குப் புதுவரவான ஹைக்கூவை தமிழ் இலக்கிய உலகம் ஒன்றும் உடனே ஆரத் தழுவி வரவேற்கவில்லை. ஏகப்பட்ட விமர்சனக்கணைகள், கூடவே ‘குள்ளக்கவிதை’ என்று நையாண்டியும் செய்தனர்”

என அங்கலாய்க்கும் கவிஞர் மு.முருகேஷ் வார்த்தைகளில் உண்மையில்லாமல் இல்லை. ‘தாளம் படுமோ தறி படுமோ’ – என்கிற கதியில்தான் 1980இல் தொடங்கி தமிழில் ஹைகூ – படைப்பு என்பது ஒர் இயக்கமாய் ஆனது.

ஹைகூவின் ஜனநாயகத் தன்மைதான் கு.அ. தமிழ்மொழி, அ.க. இளவேனில் – போன்ற பள்ளிச் சிறுமிகளை ஹைகூ பக்கம் ஈர்த்தது. . . அந்த வரிசையில் இன்று, பூ. தனிக்‌ஷா பாரதி என்னும் பொள்ளாச்சியில் பூத்த பூபால ராகம்!


“ஹைகூ என்பது பானைக்குள் யானையை அடக்கும் முயற்சி”

என்பார் கவிஞர் பழமலய்.


முயற்சிகள் இருந்தால்/ தொடர்ந்தால் தானே வெற்றியோ தோல்வியோ தெரிய வரும்.


தனிக்‌ஷா பாரதி, தன் முயற்சியில் முதல் வெற்றியை அடைந்துள்ளார் என்றே கணிக்கலாம். காரணம், தன் வயது/ அனுபவத்துக்கு ஏற்ப உள்ளடக்க தேர்வு, கையாளும் மொழி, கிடைத்த அனுபவங்களை கவிதையாக்கும் எளிமை/ வலிமை.
ஏனெனில், எழுதும் போதே தனிக்‌ஷாவுக்கு வினாக்கள் எழுகின்றன.

சரியாக செய்கிறேனா?
சந்தேகிக்கும் பொழுதெல்லாம்
தலையாட்டுகின்றன பொம்மைகள்

பொம்மைகள் ‘உம்’ சொல்லியிருக்குமா? ‘ஊம்ஹூம்’ சொல்லியிருக்குமா. . . ? வாசகன் யோசிக்கலாம். . . . . பதிலாய் கரங்களில் ஒரு தொகுப்பு நூல்!


நூலில், என்னை ஈர்த்த ஹைகூக்களில் இரண்டைக் குறிப்பிடலாம்.

மின் விசிறியில் பட்டு
துண்டான பட்டாம்பூச்சியின் சிறகு
இப்போது சிறு நடுக்கம்

இக் கவிதையில், உயிர்ப்போடு நிகழ்காலத்தை சொல்லும் ‘இப்போது’ என்ற சொல்லில்தான் ஹைகூவின் காட்சி கவிதையாய் உரு மாற்றம் கொள்கிறது.
ஹைகூவின் பலம், அனுபவச் செறிவும், சொற்களின் அடர்த்தியும் எனில், இந்தக் கவிதை காட்சியில் இருந்து கவிதையாகும் மாயவித்தை :

சுவரில் மாட்டப்பட்டிருக்கும்
நீலவண்ணனின் புல்லாங்குழல்
இசையால் நிறையும் அறை

ஒரு காலண்டர் அல்லது போட்டோ பிரேம் – எனும் ஸ்தூலத்தை இசையால் நிறையும் அறை’ எனும் சொற்களால் உயிர்ப்பித்து விடும் தனிக்‌ஷாவுக்கு தமிழிலக்கிய உலகில் நல்லதொரு இருக்கை காத்திருக்கிறது.

பூச்சிக் கொல்லி தெளித்த பூக்களில்
தெளித்து விடுங்கள்
கொஞ்சம் வாசனைத் திரவியங்களையும்

நீ யார் பக்கம் நின்று எழுத வந்துள்ளாய் என்பதை உணர்த்தும் ஹைகூ. . . ஓய்வாக இருக்கும் போது உங்கள் பொள்ளாச்சியின் பெருமிதம் ‘சிற்பி’ தாத்தா விடம் செல்! ‘என்டோ சல்பான்’ எனும் பூச்சி மருந்து குறித்த மொழிபெயர்ப்பு புதினத்தை வாங்கி வாசி! உலகம் விரியும்; புரியும்!

மகளே! இப்போதே உன்னைக் கொண்டாட மாட்டேன்; வாழ்த்துவேன்! நீ வாசிக்க வேண்டும் நிறையவே. . . . மனிதரை. . நூலை. . . இயற்கையை, உலகை வாசிக்க வாசிக்க வசப்படும் வானம்!

@@@@

Leave a comment

Trending