க. அம்சப்ரியா

இப்போது இந்த நேரத்தில் யாரிடமாவது பேசவேண்டும் போலிருந்தது. நேரத்தைப் பார்த்தான். பதினோரு மணி என்றது. இன்று அமாவாசை என்பதால் வெளியே இருள் மௌனம் போர்த்தியிருந்தது. படுக்கையிலிருந்து எழுந்தவன் தொலைக் காட்சியை இயக்கவிட்டான். இரைச்சலாகச் செவிகளில் பாய்ந்தது.  கூட்டமாக நின்று ஆளுக்கு ஆள் பேசுவார்களே, அது போலிருந்தது. உடனே இணைப்பைத் துண்டித்தான். அது தன் இரைச்சலைத் துறந்து அமைதியாகிவிட்டது.  

 அருணுக்கு அலைபேசியில் அழைக்கலாமா? எண்ணம் உடனே செயலாக்கத்திற்கு வந்தது. 

.

   அருணுக்கு அழைத்ததில் முதல் முறை நீண்ட பாடல் ஓசை கேட்டது. பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஏமாற்றமாக இருந்தது. 

   ஒரு வேளை குளியலறை வேலைகள் இருந்திருக்கலாம்.  எதற்கும் இன்னொரு முறை அழைத்துப் பார்க்கலாம்.

   மறுபடியும்  அழைப்பைத் தொடர்ந்தான். முதல் ஓசையிலேயே இணைப்பு கிடைத்துவிட்டது.

  ” ஹலோ……..என்னடா இந்த நேரத்தில? ஏதாவது பிரச்சனையா…? ஒடம்புக்கு ஒண்ணும் இல்லியே….” குரலில் பதற்றம்.

  ” அதெல்லாம் ஒண்ணும் இல்லேடா…” பேசணும்னு தோணுச்சு….கொஞ்ச நேரம் பேசலாம்தானே…” 

   ” ஏண்டா…இந்த நேரத்தில ஊரே தூங்குது…இப்ப சும்மா பேசறதுக்கா கூப்பிட்டே…அறிவு கெட்டவன்…வைடா போனை….”

   ஏமாற்றமும் அவமானமும் ஒன்றாய்ச் சூழ்ந்து கொண்டது.  இவனெல்லாம் ஒரு நண்பன்! நாமென்ன காசு பணமா கேட்கிறோம்? மனசுக்குப் புடிச்சா மாதிரி நாலு வார்த்த…இதுக்கெல்லாமா கசக்குது…?  பெரும்பாலானவர்கள் ஏதாவதொரு காரியத்திற்காகவே பேசுகிறார்கள். எதுவுமே இல்லை…பேசத்தான் அழைத்தேன் என்றால் அதிர்ந்துவிடுகிறார்கள். அப்படியொரு உலகத்திற்கு காதலர்களைத் தவிர யாரும் இல்லையென தோன்றியது.

     இனி யாரிடம் பேசுவது?  நம்பிக்கையாகப் பேசுவான் என  நினைத்தவன் இப்படி அவமானப்படுத்துவான் என்று நினைக்கவில்லை.

       திடீரென்று  மனம் பசிக்கத் துவங்கியது. வயிற்றுக்கு எதுவும் தேவையில்லை.  மனம்தான் யாரிடமாவது நாலு வார்த்தை பிச்சையாகக் கிடைத்தால் நல்லது என்று கெஞ்சியது. அலுவலத்தில் இவனோடு பேசுவதற்கு எல்லோருக்கும் ஏன் தயக்கம் என்று புரியவில்லை. நாலு வார்த்தை பேசி முடிப்பதற்குள் ” அப்புறம்….சரி…பிறகு பேசலாம்…” என்று பின் வாங்கிவிடுகிறார்கள்

 அவர்கள் மீதும் தவறொன்றும் இல்லை.  அலுவலகத்தில் வேலை மிகவும் அதிகம். யாரோடும் யாரும் கூடுதலாக ரெண்டு வார்த்தை பேச முடியாத அளவு வேலை.

   ” ம்…என்கிட்டே சம்பளத்த வாங்கீட்டு இங்க பேசவா வந்தீங்க….? 

   இதுதான் முதலாளியின் வேதவாக்கு. முகமும்  அப்படியொரு விகாரமாக மாறியிருக்கும்.

   இவ்வளவையும் கடந்து பேசவும் செய்வார்கள்.

   ராணிக்குப் பெயரே வானொலிதான். எப்போதும் எதையாவது மெதுவாகப் பேசிக் கொண்டே இருப்பாள்.  இவளைக் கல்யாணம் செய்துகொண்டால், காலமெல்லாம் பேசிக் கொண்டே இருக்கலாம். 

  இப்படி நினைத்த அடுத்தடுத்த நாட்களில் ராணி அதிகம் ராகவனோடுதான் பேசத் துவங்கியிருந்தாள். வெளியே தேநீர் குடிக்க, மதியம் சாப்பிட சேர்ந்தே போவார்கள். இருவரும் அப்படி என்னதான் பேசுவார்களோ என்று பக்கத்து இருக்கை மோகனுக்கு அவ்வளவு பொறாமை. 

   ராணி தனக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்பது இரண்டே வாரத்தில் தெரிந்துவிட்டது. ராகவனும், ராணியும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறினார்கள்.

  நேற்றுதான் பேருந்தில் ஒரு இளம்பெண்ணைப் பார்த்தான். ஏறக்குறைய ஒரு மணி நேரமாவது யாருடனோ, அலைபேசியில் பேசிக்கொண்டே வந்தாள். எதிர்முனையில் இப்படிப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பவரை நேரில் சந்தித்து ஓரு மாலை போட்டு வாழ்த்தத் தோன்றியது.

இவனும் தன்னோடு பேருந்தில் பயணம் செய்கிறவர்களோடு பேச்சுக் கொடுத்துப்பார்ப்பான். அவர்கள் தங்கள் அலைபேசியில்தான் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். யாரும் யாரோடும் பேசுவதற்கில்லை என்பது போலத் தனித்தனி தீவுகளில் இருப்பவர்களைப் போல தங்கள் நிறுத்தம் வந்தால் இறங்கிப் போய்விடுகிறார்கள்

 பேச்சொரு அமிர்தம். பேச்சொரு வழித்துணை. பேச்சொரு சொர்க்கப் பாதை என்றெல்லாம் தெரிந்து கொள்ளாதவர்களால் உலகம் பிதுங்கிக் கொண்டிருப்பதாக தனக்குத் தானே கூறிக்கொண்டான்.

     இன்னும் விடிவதற்கு நேரம் இருக்கிறது.  விடியற்காலையில் வேணு தேநீரகம் திறக்கப்பட்டுவிடும். வேணு கொஞ்சம் வயதானவர். யாரிடமும் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டார். 

” என்ன வேணும்….?

” சரியான சில்லறை  இருக்கா….? 

” டீயா….காப்பியா?

   இப்படிச் சில வார்த்தைகளோடு முடித்துக்கொள்வார். அதிகம் சிரித்துப் பேசினால் கடன் கேட்பார்கள். கடனாக எல்லாவற்றையும் வாங்கிய பிறகு கடைப்பக்கமே வர மாட்டார்கள். எதற்கு தேவையில்லாமல் தொல்லை? 

  இதுதான் அவர் பக்க நியாயம்.

   காலையில் ஐந்து மணிக்குத்தான் கடை திறப்பார்.

  தான் நீண்டகாலமாகச் செல்வதால்,கடைக்குள் நுழைந்தவுடன் ஒரு புன்னகை. 

பிறகு எலுமிச்சைத் தேநீரை தன்னிடம் நீட்டும்போது இவனும் ஒரு புன்னகையைக் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்வான். மற்றவர்களுக்குச் சில்லறை இல்லாவிட்டால் திட்டு கிடைக்கும் . இவனை அப்படியெல்லாம் திட்டுவதில்லை.

 ” சில்லறை இல்லியா…? என்றோ, ” ஒரு டீக்கு நூறு ரூபாயையா நீட்டுவது என்றோ கூட  வசை கூறுவதில்லை.

    எப்படியும் மீதித் தொகையைக் கொடுத்துவிடுவார். இப்போது காலையில் எழுந்து போனாலும் இதே நிலைதான்.

    எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் யாராவது தன்னிடம் பேச வேண்டும் என்று நினைப்பது பேராசை போல விரிந்தது.

   அலுவலகத்திற்குப் பேருந்தில்தான் சென்று வருகிறான்.

   பேருந்து நடத்துனரும், தன்னைப் பார்த்ததும், எதுவும் கூறாமல் தனக்கான பயணச்சீட்டைக் கிழித்துக் கொடுத்துவிடுவார். பேசுவதற்கே வாய்ப்பில்லை.

     “எந்த விதமான எதிர்பார்ப்பும் அற்று பேச்சை பேச்சாகவே பேச ஆட்கள் தேவை” என்று பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தால் தன்னோடு பேசுவதற்குப் பொருத்தமான ஆட்கள் கிடைக்கலாம் என்று தோன்றியது. ஆனால் இது கொஞ்சம் அபத்தமாகவும் தோன்றியது.

    பணம் கேட்கலாம். சம்பளமாக எதிர்பார்க்கலாம். பேசுவதற்கு சம்பளத்திற்கு ஆள் வைப்பதை நினைத்தாலே வேடிக்கையாக இருந்தது.

    அம்மாவும், அப்பாவும் எதிர்பாராதவிதமாக அடுத்தடுத்து காலமான பின் இந்த நகரத்திற்கு வேலைக்கென வந்திருந்தான். வசதியான அறை. நிறைவான வருமானம். விருப்பப் பட்டதை வாங்கிச் சாப்பிடலாம். எதையும்  அனுபவிக்கலாம்.

   

ஆனால் தன்னுடைய சமையலை, தானே சமைத்து, தானே சாப்பிட்டு, இரவானால் பாத்திரங்களைத் தானே கழுவி, எல்லாம்…தானே…தானே என்கிற போதுதான் எரிச்சல். எந்த வேலையையும் எப்படியும் செய்து கொள்ளலாம்.இந்தப் பேச்சுத்துணைக்குத்தான் ஆள் தேவைப்படுகிறது.

     பள்ளியில் படிக்கும் போது இவன்தான் ரொம்பவும் வாயாடி. யாரோடாவது பேசிக்கொண்டிருப்பான். பென்சில் வேண்டுமென்று, பேனா வேண்டுமென்று, அழிரப்பர் வேண்டுமென்று …பேச ஒரு காரணம் அவ்வளவுதான்.

  வகுப்பில் ஆசிரியர் இல்லையென்றால் மனம் பூரிப்பால் பொங்கிவிடும். பேசுவதற்கான நல்வாய்ப்பு. ஆனால் வகுப்பிற்கே ஒரே ஒரு சர்வாதிகாரியாக வகுப்புத் தலைவர்கள் அமைந்துவிடுவார்கள்.

   அவர்களை மீறி யாரிடமும் பேச முடியாது.  எத்தனையோ முறை வகுப்புத் தலைவன், அடங்கவில்லை…மிக அடங்கவில்லை… மிக மிக அடங்கவில்லை என்றெல்லாம் கரும்பலகையில் எழுதிவிடுவான். எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி இனிமேல் இப்படி நடக்காதென ஒவ்வொரு முறையும் மன்னிப்புக் கேட்டபிறகு பெயரை அழித்துவிடுவான். அதற்கான கட்டணமாக வெளியே வந்து தின்பண்டம் எது கேட்கிறானோ அதை வாங்கித் தந்துவிட வேண்டும். 

   இப்போது வரை இது தொடர்வதுதான் தான் உயிரோடு இருப்பதற்கான அடையாளம் என்று நினைத்துக் கொள்வான். 

    அலுவலகத்தில் தன்னோடு பிரியமாக எப்போதாவது பேசுவது மித்ரா என்பது நினைவிற்கு வந்தது. நேரில் போக முடியாது.

 அலைபேசலாம் என்றால்,அருணிடம் அவமானப்பட்டது நினைவிற்கு வந்தது. 

    அருண் நண்பன் மாதிரி….அவனே சண்டைக்கு வருகிறான். மித்ராவைப் போன்றவர்களோடு இந்த நேரத்தில் பேசுவது  , அவர்களுக்கு ஏதாவது சிக்கலை உருவாக்கும்.

    மித்ராவிற்கு அழைக்கிற எண்ணத்தை அப்படியே எட்டி உதைத்தான். அது திருகிக் கொண்டு போய் வீதியில் விழுந்தது.

    சுதாவைத் திருமணம் செய்த போது பேச ஒரு ஆள் கிடைத்ததே என்றுதான் நினைத்தான். கல்யாணமாகி ஆறுமாதம் வரை பேச்சு இரண்டு பக்கமும் இனிப்பாறாக ஓடியது. திகட்டத் திகட்டச் சுவை.

      பிறகு அம்மாவோடு ஏற்பட்ட சண்டை. சின்னச் சின்ன செயல்களுக்கும் எதிர்வினை.   மன வேறுபாடு. பத்து நாட்களுக்கொரு முறை தன் பிறந்த வீட்டிற்குச் சென்றுவிடுவதும்,  சமாதானம் கூறி திரும்ப அழைத்து வருவதும் தொடர் கதையாகிவிட்டது. ஒரு கட்டத்தில் சுதாவிற்கு இந்த வாழ்வு சலிப்பூட்டிவிட நிரந்தரமாகப் பிரிந்துவிட்டாள்.

  எந்தவொன்று இரு மனங்களை வாழ்நாளெல்லாம் பிணைத்து வைத்திருக்கிறதென யோசிப்பு வந்தது. பிரிந்து விட ஆயிரம் காரணங்கள். சேர்ந்து பழக, சேர்ந்து வாழ ஒரே ஒரு காரணம்தான். அந்தச் சூட்சமத்தைக் கண்டறிந்தால் வாழ்வு சுகப்படும்தான்.

   பகல் நேரங்களில் அலுவலகத்தில் ஏற்படுகிற வெற்றிடத்தை மாலை நேரத்தில் போக்க வேறு வழிகள் ஏதுமில்லை என்பது எல்லாக் கதவுகளும் பூட்டப்பட்ட அறைக்குள் விளக்குகள் கூட எதுவுமில்லாமல் இருப்பது போலவேதான் இருண்மையாக உருக்கொள்கிறது.

  இடையில் அலுவலகத்திற்கு  புதிதாக  துரை  வேலைக்கு  வந்த போது ஓரிரு நாட்களுக்குப் பிறகு தனக்கொரு வீடு வாடகைக்குப் பிடித்துத் தர முடியுமா? என்று அறிமுகமானான்.

   வீடு தேட இருவரும் அலைந்ததில்  மனம் நெருங்கியிருந்தார்கள். இருவரும் பேசிக்கொள்ள நிறைய இருப்பது போலிருந்தது. தன் அறைக்கே வந்து விடுகிற ஆர்வலனாக துரை மாறிப் போனான். தனக்கு நிகராக தன்னோடு பேசுகிற அவனைப் பிடித்திருந்தது.

   ஆசைப்படுகிற எதுவும் காலமெல்லாம் தனக்கு நிலைப்பதில்லை. 

  தான் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போன சமயத்தில் என்னவோ நடந்திருந்தது. இடைவேளை நேரங்களில் வெளியே சென்றுவர ரகுவும் துரையும் ஒன்றாக இணைந்திருந்தார்கள். மாலை இருவரும் வெளியே கிளம்புவார்கள்.  ஒரு கட்டத்தில் தன்னை விட்டு தூரமாகப் போய் விட்டான் என்பதை உணர்ந்த போது மனம் வெதும்பிவிட்டது. ரகுவோடு மகிழுந்தில் செல்வது துரைக்குப்  பல வகைகளில் வசதி. வேறு காரணங்களும் இருக்கலாம். தன்னிடம் மிக்க மரியாதையோடு வணக்கமென்பான். பிறகு ரகுவோடு ஒட்டிக்கொள்வான். 

   தன் பெற்றோரிடம் பேச வைத்திருந்திருந்த சொற்கள், தன் மனைவியிடம் பேச வைத்திருந்த சொற்கள், தன் நண்பர்களிடம் பேச வைத்திருந்த சொற்கள் யாவும் ஒன்றையொன்று முறைத்துக் கொண்டன. ஒவ்வொன்றோடும் பேசப் பேச சுவை கூடிக்கொண்டே இருந்தது. கசப்பின் எல்லையை அடைந்து, புளித்த சுவையாக மாறியது.

      நேரத்தைப் பார்த்தான். இன்னும் விடிவதற்கு நேரம் இருந்தது.

  ” பொழுதுக்கும் ஆளே இல்லாம எப்படித்தான் தனியா இருக்கீங்களோ….இனி இதோ நான் இருக்கிறேனே…என்னோட பேசுங்க….நானும் பேசறேன்….”

 முதல் முறையாக தன் அறையில் சுவர்களோடு பேசத் துவங்கினான்.

***

Leave a comment

Trending