
ஆதி என்று நெருக்கமானவர்களால் சுருக்கமாக அழைக்கப்படும் ஆதிமூலம் அந்த பிரம்மாண்ட திருமண மண்டபத்திற்குள் தாமதமான குற்ற உணர்ச்சியுடன் நுழைந்த போது நேரம் காலை பத்தரையைத் தாண்டியிருந்தது.
எழுந்ததிலிருந்தே பிரச்சனைதான். டை அடிக்கையில் முழு திருப்தி கிடைக்க வில்லை. மனைவி தந்த காபியில் பால் கெட்டுப் போயிருந்தது. வீட்டை விட்டு கிளம்பின பிறகும் தாமதம். பதினைந்து வருடப் பழமையான ஸ்கூட்டர் இதய வலியோடு பாதி வழியில் நின்றுவிட.. ஆட்டோ பிடித்து பஸ் ஸ்டாண்டு வந்தார். இவர் வந்த நேரம் ட்ரைவரும், கண்டக்டரும் ஜோடியாக டிஃபன் சாப்பிடப் போய் விட்டார்கள். அவர்கள் வந்து பஸ் எடுத்து நகரம் தாண்டியதும், சாலையில் மரம் விழுந்து விட்டது எனச் சொல்லி ஏழெட்டு கிலோமீட்டர் சுற்ற வைத்தார்கள். இரண்டேகால் மணி நேர பயணம் இரண்டேமுக்கால் மணிநேரம் ஆகியிருந்தது.
இத்தனை தொடர் தடைகள் வருகிறதே அமைதியாக வீட்டுக்குத் திரும்பி விடலாம் என்று அப்போது கூட தோன்றவில்லை அவருக்கு. ஒரு பிடிவாதத்தில், கிளம்பினால் கிளம்பியதுதான் என்கிற மாதிரி இருந்தார்.
திருமண வீட்டிற்குப் போய் விருந்து சாப்பாடு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் வீட்டில் வழக்கமான ஓட்ஸ் மட்டும் சாப்பிட்டு வந்தவருக்கு பாதிப் பயணத்திலேயே பசி வேறு எடுக்க ஆரம்பித்திருந்தது.
பஸ் ஸ்டாண்டு இறங்கினதும் எதிரிலிருந்த கெளரிகிருஷ்ணா உயர்தர சைவ உணவகம் கண்ணில்பட ரெண்டு இட்லி மட்டும் சாப்பிடுவோம். கண்டிப்பாக மண்டபத்தில் இந் நேரத்தில் உப்புமாதான் கிடைக்கும் எனத் தோனினதில் வேகமாகச் சாப்பிட்டு விட்டு ஆட்டோ ஸ்டாண்டு வந்தார்.
பதினான்கு நிமிட ஆட்டோ பயணத்தில் மண்டபம் இறங்கி உள்ளே நுழைகையில் மேக்கப் கலைத்த சராசரிப் பெண் போல இருந்தது மண்டபம்.!
முகூர்த்தப் பரபரப்புகள் யாவும் தீர்ந்து தாம்பூல வெத்தலைகளை மென்று கொண்டிருந்தது கூட்டம். யாரும் இவரைக் கவனிப்பாரில்லை. குழந்தைகள் மேடையில் பலூன் விளையாடிக் கொண்டிருந்தனர். நெருக்கமான உறவு ஜனங்கள் சேர்களை வட்டமாகப் போட்டுக் கொண்டு அங்கே இல்லாதவர்களைப் பற்றி புறணி பேசிக் கொண்டிருந்தனர். ஓரத்தில் வைத்திருந்த ஹோம குண்டம் வறண்டு போயிருந்தது. போட்டோக்ராபர் லேசான குறட்டையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
ஆதிக்கு அத்தனை உற்சாகமும் வடிந்துவிட்டது. தன் உழைப்பெல்லாம் வீணாகி விட்டது போல உணர்ந்தார். யாருமில்லாத மண்டபத்தை வெறிக்க வெறிக்கப் பார்த்தார். ஏன் வந்தோமோ எனத் தோன்றியது.
சரி, அதற்காக மன வெறுப்பில் திரும்பிப் போகவா முடியும்.?
மணமகள், மணமகன் எங்கே..? ஒரு வேளை பால், பழம் சாப்பிட வீடு கிளம்பிவிட்டார்களோ. இவன், பழனிச்சாமியை வேறு காணோமே. கூடப் போய் விட்டானோ. அறிமுக முகம் ஒன்றுகூடத் தென்படவில்லை. எல்லோரும் வந்துவிட்டுப் போய்விட்டார்கள். நான் தான், மந்தையில் பிரிந்த ஆடு மாதிரி இப்படித் தனியாக வந்து மாட்டிக் கொண்டு..
அவசரமாக யோசித்தார். அவர்கள் மண்டபம் வரும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வேலை எதுவும் இல்லை என்கிற சூழலில்.. பேசாமல் சாப்பிட்டு விடுவோமா.? அதுதான் சரி. யாரும் தெரியாத, யாரையும் தெரியாத இடத்தில் உட்கார்ந்து பேந்த பேந்த முழித்துக் கொண்டிருப்பதை விட அது எவ்வளவோ தேவலாம்!
டைனிங் ஹால் பாதாளத்தில் இருந்தது. கீழிறங்கிப் போய் நாசூக்காக வேடிக்கை பார்த்தார். மண்டப வாட்ச் மேன், எலக்ட்ரீசியன் என வேலையாட்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உட்கார வெட்கமாகவும், தயக்கமாகவும் இருந்தது. “வாங்க சார், சாப்பிடறீங்களா..?” என்றார் பரிமாறுபவர் கருணையுடன் கவனித்து.
சமாளிப்பான புன்னகையுடன் உட்கார்ந்தார். இதய வடிவ இட்லியும், தக்காளி சேவையும், சம்பா ரவை உப்புமாவும் கிடைத்தது. கண்ணை மூடிக் கொண்டு சாம்பாருடன் அடித்து வயிற்றுக்குள் தள்ளினார்.
கை கழுவப் போன இடத்தில் நல்ல காபி கிடைத்தது. கொஞ்சம் குடித்துப் பார்த்து திருப்தியாகி முழு டம்ளரில் தளும்ப தளும்ப வாங்கிக் கொண்டு மன நிறைவுடன் கூடம் வந்தார். ஃபேன் காற்று படும் இடமாகத் தேர்ந்தெடுத்து அக்கடாவென அமர்ந்தார். பெரிய கடமை முடித்த திருப்தி உண்டானது.
இந்த பழனிச்சாமியைக் கடைசியாகப் பார்த்தது அவரது ஓய்வு நாளின் போதுதான். டெலிபோன் துறையில் முப்பது வருடங்களாகக் குப்பை கொட்டியிருந்தனர் இருவரும். நெருங்கிய நண்பன் என்று சொல்ல முடியாவிட்டாலும் உடன் இருந்த பழக்கத்தில் உண்டான நட்பு. ஒய்வு பெற்று ஆறேழு வருடங்கள் ஆன போதும், வேறு ஊருக்குக் குடிபெயர்ந்த போதும் இரண்டாம் மகனின் திருமணம் என போன் செய்து, தபாலில் பத்திரிக்கை அனுப்பி, போனில் வந்தே ஆக வேண்டும் என அடம்பிடித்து, அவனது அன்பை மதிக்கும் பொருட்டு கிளம்பி வந்திருந்தார்.
அவன் அப்போதே தொப்பையும், வழுக்கைத் தலையுமாக இருப்பான். இந்த ஆறேழு வருட இடைவெளியில் உருவம் எப்படி மாறியிருக்கிறானோ.
பழனிச்சாமிக்கு போன் போட்டு தான் வந்திருப்பதை அறிவிக்கலாமா என யோசித்தார். வேண்டாம் வரட்டும், எங்கே போய்விடப் போகிறான் மண்டபம் வரத் தானே வேண்டும், வந்து, நேரில் பார்த்தால் ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி கிடைக்குமே, அதைக் கெடுக்க வேண்டாமே.
யாரோ சத்தமாகச் சிரித்தார்கள். திரும்பிப் பார்த்தார். அந்த உறவுக் கூட்டம் சந்தோசம் தந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னால் நடத்திவைத்த மகளின் திருமணம் ஏனோ நினைவுக்கு வந்தது.
ஃபேன் காற்று சில்லென உடலைத் தழுவினதில், அந்த சூழலில் அற்புதமாக தூக்கம் வந்தது ஆதிக்கு. நீண்ட தூர பயண அலுப்பு வேறா. கண்கள் சொக்கியது. இரண்டு தடவை கழுத்து தொப்தொப்பென கீழே சரிய சமாளித்துக் கொண்டு நேரம் பார்த்தார்.
என்ன, இத்தனை நேரமா வீடு போய் வர. இனியும் காத்திருப்பது சரிதானா.?
தயங்காமல் போன் எடுத்து பழனிச்சாமியை அழைத்தார். “ஹலோ பழனி..”
“சொல்லுடா எங்கே இருக்கே.. கல்யாணத்துக்கு வராம..?”
“கேப்பியே நல்லா. நான் மண்டபத்துக்கு வந்து ஒரு மணி நேரம் ஆகப் போகுது. உன்னைத்தான் ஆளைக் காணோம். உனக்காகத்தான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டிருக்கேன்..”
“என்ன உளர்றே. வாங்கம்மா.. அய்யா வரலையா? சரி, சாப்பிடப் போங்கம்மா.! டேய் இரு மாப்பிள்ளை ரூமுல தான் இருக்கேன். நானே வெளியே வர்றேன்.!”
“வா.. வா. வந்து நீயே பாரு.” ஸ்டைலாக உட்கார்ந்து கொண்டார்.
“எங்கேடா இருக்கே.? காணோமே. மேடையில தான் இருக்கேன். கூட்டத்துல தெரியலை, கையைத் தூக்கு..”
“மேடையிலயா.?” ஆதி தலை திருப்பி மேடையைப் பார்க்க அங்கே யாருமே இல்லை. “ப்ச், விளையாடாதே பழனி, உன்னைக் காணோமே. என்னடா அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஆள் மாறிட்டியா.?”
“இரு இரு ஏதோ குழப்பம்ன்னு நினைக்கிறேன். டேய் பரத்து, ஓரமாப் போய் விளையாடு…”
ஆதி, பழனிச்சாமியின் பேச்சின் பின்னணியில் ஒலித்த பாட்டு சத்தத்தையும், தன்னிடத்தில் அது இல்லாததையும் உடனே கவனித்து “இரு மாப்பிள்ளை, பெண் பேரு வந்து.. அஜய்குமார், வனிதா தானே.?”
“நாசமாப் போச்சு. வேற மண்டபம் மாறிப் போயிட்டே ஆதி.! அந்தப் பேரெல்லாம் இல்லை. எங்கேடா இருக்கே..?”
“என்ன சொல்றே பழனி. ஆட்டோவுலதான் வந்தேன். ராகவேந்திரா மண்டபம்தானே. அதான் கேட்டேன். இங்கேதான் கொண்டு வந்து விட்டாங்க.” பதறினார்.
”அட, குருராகவேந்திரா மண்டபம்னு முழுசா தெளிவாச் சொன்னியா அவன்கிட்டே.?’
“என்னடா சொல்றே. அப்படித்தான் சொல்லணுமா. இதுல இப்படி ஒன்னு வேற இருக்கோ..?” திகைத்தார் ஆதி.
“ஆமாடா..” சலித்துக் கொண்டார் பழனிச்சாமி. “இந்த ஊருல இதொரு அக்கப் போரு. வெறும் ராகவேந்திரா மண்டபம்னு ஒண்ணு. குருராகவேந்திரா மண்டபம்னு இன்னொன்னு. பேரை மாத்துங்கடான்னு சொன்னா நீ மாத்து, நீ மாத்துன்னு ஒருத்தரை யொருத்தர் சொல்லிக்கிட்டு யாரும் மாத்தாம பெரிய தலைவலி. அந்த மண்டப ஆட்கள் இங்கே வந்து.. இங்கே வரவேண்டியவங்க அங்கே போயி பெரிய ரோதனை!”
“அய்யோ பழனி.. நான் இப்போ என்ன பண்றது?” என்றார் பரிதாபமான குரலில்.
“என்ன பண்றதுன்னா.? கிளம்பி வாடா இங்கே. இவ்வளவு தூரம் வந்துட்டு.. வெளியே வா, ஆட்டோ பிடி, தெளிவாச் சொல்லு, நீ இருக்கிற இடத்துல இருந்து நாலு கிலோ மீட்டர் தான். கர்மவீரர் காமராஜர் நகர்ன்னு சொல்லு. நாங்களும் கிளம்பறதுக்கு ஆச்சு. எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு இருக்கோம். உனக்காக வெயிட் பண்றேன். கொஞ்சம் சீக்கிரம் வா பார்ப்போம். ஏம்ப்பா அவங்க எல்லோரையும் வீடியோ எடுத்தியா..”
ஆதி போனை கட் செய்து விட்டு கொஞ்ச நேரம் அதையே வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். உடல் முழுக்க ஒரு அலுப்பு பரவத் தொடங்கியிருந்தது.
ப்ச். ப்ச்.
மணி பார்க்கப் பணிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
“அய்யா.. தக்காளி சூப் எடுத்துக்குங்க..”
தட்டில் கொண்டு வந்து ஒரு பெண் கொடுத்தாள். அட ஏம்மா நீ வேற, சரி கொடு.
வெப்ப திரவத்தை உள்ளே கொட்டிக் கொண்டே தன் அடுத்த திட்டம் குறித்து யோசித்தார். என்ன பண்ணலாம்.? ஊருக்கே திரும்பிப் போய் விடுவோமா. இப்போது கிளம்பினால் கூட மூன்று மணி நேரம் ஆகும் வீடு போய்ச் சேர.
என்ன பைத்தியக்காரத்தனம் இது. இதற்காகவா இங்கே கிளம்பி வந்தோம்.? பழனிச்சாமியைப் பார்க்காமல், அவனது மகனுக்கு திருமண வாழ்த்துச் சொல்லாமல், குழந்தைளை ஆசீர்வதிக்காமல்.. பழைய நண்பர்கள் கூட அங்கே வந்திருக்கலாம். அவர்களையும் சந்திக்கலாமே.
ஆதி எழுந்தார். முதலில் இந்த இடத்திலிருந்து நகர வேண்டும், விலக வேண்டும், இதுவரை சரி, யாராவது ஏதாவது வில்லங்கமாகக் கேட்டு, நாம் விழிப்பதற்குள் வெளியேறி விடுவதுதான் நல்லது. எத்தனை அசிங்கம், வெளியூரில், ஆள் தெரியாத மண்டபத்தில் பந்தாவாக நுழைந்து விருந்துச் சாப்பாடு வேறு சாப்பிட்டு விட்டு.. இந்த அழகில் தக்காளி சூப் வேறு.
ஆதி எழுந்து யாரையும் பார்க்க விரும்பாது தீவிரமான யோசனையில் இருப்பது போல் நடித்து மெல்ல நகர்ந்து..
“சார்.. சார்..” யாரோ அழைத்தார்கள். “தாம்பூலம் வாங்காமப் போறீங்களே.. இந்தாங்க..”
அந்த குண்டான பெண்மணி சிரித்தபடியே கையில் திணித்தாள். ஆதி மறுக்கத் தெரியாமல், போட்ட வேசத்தை இன்னும் முடிக்க முடியாது திணறி வாங்கிக் கொண்டார்.
பக்கத்தில் ஒரு இளம் வயது வாலிபன் மொய்க் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென சட்டைப் பைக்குள் கைவிட்டு இருநூறு ரூபாய்த் தாள் எடுத்து நீட்டினார். “இந்தாப்பா பெண் வீட்டு சார்பா மொய் எழுதிக்கோ..”
“சார்.. என்ன பேரு..?”
“காந்தின்னு போட்டுக்கோ. உள்ளூரு தான்..”
படிகள் இறங்கி, சாலை வர, சொல்லி வைத்த மாதிரி ஒரு காலி ஆட்டோ வந்தது. கை காட்ட நின்றது. உள்ளே ஏறினார். குசன் சீட்டில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு “பஸ் ஸ்டாண்டு விடுப்பா..” என்றார்.

Leave a comment