இருவேறு கரைகள்
ஜி. ஏ. கௌதம்

இண்டர்நேஷ்னல் கால்கள் குறித்த ஒப்பந்தம் கிடைத்த மகிழ்ச்சியில் ‘ஏர் வாய்ஸ்’ அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் அடுத்த நாள் லண்டன் செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். டபடபவென்ற மடிக்கணிணியின் பின்னணி ஓசையுடன், தெளிவான இந்திய ஆங்கிலத்தில் புழங்கிக்கொண்டிருக்கும் சஞ்சய் சிங்கானியாவும் அவரது நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் ஒப்பந்தம் குறித்தும் அது தொடர்பான சட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். நேரம் கடந்து கிட்டத்தட்ட ஒரு மணியை நெருங்குகிறது. எல்லோரும் கிளம்பத் தயாராகிறார்கள். அந்த சமயத்தில் சஞ்சய்க்கு ஒரு போன் கால் வருகிறது. யார் என்று பார்த்தால் கல்பனா. எதற்கு இந்த நேரத்தில் அழைக்கிறாள் என்று போனை எடுத்துப் பேசுகிறான். உடனே பார்க்க வேண்டும் என்று வரச் சொல்கிறாள். இந்த நேரத்திலா எனக் கேட்க, ஆம் இப்பொழுதே என்கிறாள்.
நள்ளிரவின் யாருமற்ற சாலையோரத்திற்கு ஆட்டோவில் வந்து சேர்கிறான் சஞ்சய். அங்கே தனது ஸ்கூட்டியில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கிறாள் கல்பனா. ”இந்த நேரத்தில் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்” என உரிமை கலந்த அதட்டலில் கேட்கிறான். ”ஒன்றுமில்லை. சும்மா தான்” என்கிறாள். ’ஒன்றுமில்லாமல் இப்படி அர்த்த ராத்திரியில் வரசொல்ல மாட்டாயே. ஏதோ இருக்கிறது’ என்று உணர்ந்தவன், ”நீ சும்மால்லாம் சொல்ல மாட்ட. என்ன விஷயம்” என்று கேட்கிறான். இப்போது கல்பனா தனது பையில் இருந்து காகிதங்களால் சுழற்றப்பட்ட ஒரு கத்தையை சஞ்சயிடம் கொடுக்கிறாள். அதன் கணம் மற்றும் உருவம் குறித்து இன்னும் உணராதவன், என்ன இது என்று கேட்கிறான். ”இதில் இரண்டு லட்சம் இருக்கிறது. உன் அம்மாவுடைய மருத்துவ செலவுக்காக வைத்துக்கொள். ஊரில் உள்ள நிலத்தை விற்க வேண்டாம்” என்று சொல்கிறாள். ”இவ்வளவு பணம் எப்படி உனக்குக் கிடைத்தது” என்று வியப்புடன் கேட்கிறான்.
கண்களில் சிறிதும் வருத்தமின்றி புன்னகையுடன் தனது காரை விற்றுவிட்டதாக சொல்கிறாள். அதிர்ந்து போகும் சஞ்சய், “கார் வாங்குவது உன்னுடைய லட்சியமாயிற்றே ஏன் இப்படி செய்தாய்” என்று கேட்கிறான். ”ஊரில் இருப்பது உங்களுடைய பூர்வீக நிலமாக இருக்கும். ரொம்ப ஆண்டு காலமாக வைத்திருப்பீர்கள். அதை ஏன் விற்க வேண்டும். கஷ்டமாக இருக்கும் தானே. அதனால் விற்க வேண்டாம். கார்தானே பிறகு வாங்கிக் கொள்வோம்” என்று சமாளிக்கிறாள் கல்பனா. தன் ஆசையை ஒதுக்கி வைத்திருக்கும் வருத்தம் கண்களில் புன்னகையாய் மிளிர்கிறது. நமக்கு மிகப்பிடித்தவர்களை வழியனுப்பும் போது அடிமனது அத்தனை கனமாக இருந்தாலும், கண்களில் பொய்யாகச் சிரித்தபடியே வழியனுப்புவோமே! அது போல. அவனுக்கு என்னடா இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தம். அவள் அந்த காரை வாஞ்சையுடன் அணைத்திருந்ததை நினைவுகூர்ந்தவன், ”மிகுந்த ஆசையில் வாங்கினாயே…” என்கிறான் தளர்ந்த குரலில்.
அவனைச் சங்கடப்படுத்தி விட்டோமோ என உணர்ந்தவள் சட்டென்று ”அதை விடு. உன் அம்மாவிடம் என்னை பற்றி சொல். fairever விளம்பரத்தில் நான் நன்றாக இருப்பேன். அந்த விளம்பரத்தைக் காண்பி” என்று பேச்சை மாற்றுகிறாள். ”நீ என்னை சமாளிக்கத்தான் இப்படியெல்லாம் பேச்சை மாற்றுகிறாய் என்று கூட எனக்குத்தெரியாதா என்ன” என்பதைப் புன்சிரிப்பில் தெரிவிக்கிறான். நேரமாகிவிட்டதால் உடனே கிளம்பச் சொல்கிறாள். அவளுக்கு அவனை அனுப்ப மனமே இல்லை. கண்களில் அத்தனை ஏக்கம். அவனுக்கும் வேறு வழியில்லை. நாளை மும்பை செல்லக் கூடிய சூழலில் அவனையும் பத்து நாட்கள் அனுப்புகிறோமே என்ற ஏக்கம் அவளுக்கு இன்னும் வேதனையை கூட்டுகிறது. அதனால் தான் ”பத்து நாள் என்றால் பத்து நாள் முழுவதும் இருக்க வேண்டாம். வேலை ஏழு நாளில் முடிந்து விட்டால் ஏழாவது நாளே வந்து விடு” என்று அவன் மீதான ஏக்கத்தை கண்களில் கொட்டியபடியே சொல்கிறாள். கண்களில் மிளிரும் அதே புன்னகையுடன் அவனை வழியனுப்புகிறாள்.
கோடிகளில் புரளும் சஞ்சய் ராமசாமிக்கு, இன்னமும் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் ஒரு எளிய பெண்ணிடமிருந்து கிடைக்கும் இரண்டு லட்சம் தொகையும், அதைக் கொடுக்கும் அவள் கண்ணில் தெரியும் அந்த ஏக்கமும், அவனது மனதின் பாரத்தையும் அவன் கைகளில் இருக்கும் தொகையின் கனத்தையும் கூட்டுகிறது.
இதே காட்சியை ஹிந்திலும் மிகச் சிறப்பாக இயக்கியிருப்பார் இயக்குநர் முருகதாஸ். ஆனால் அதில் ஒரு சிறு திருத்தமாக காட்சியின் இறுதியில் ஒரு பாடலையும் இணைத்திருப்பார். ஆங்கிலப்படம் ஒன்றின் மூலம் கவரப்பட்டு அதன் கருப்பொருளை மட்டும் வைத்துக்கொண்டு நம் நிலத்திற்கு பொருந்தும் வகையில் தரமான கமர்ஷியல் ஸ்டைலில் ஒரு படத்தை இயக்கிய உங்களால் அதே படத்தை மீண்டும் வேறு ஒரு மொழியில் எடுக்க முடிந்தால், அதை இன்னும் மெருகேற்றி இன்னும் தரமாக வடிவமைக்க அதற்கான களமும், அமீர்கான் போன்ற ஒரு நாயகனும் கிடைத்தால் சும்மா விடுவீர்களா என்ன!
இப்படியாகத் தமிழில் தெரிந்தோ தெரியாமலோ நேர்ந்த குறைகளை எல்லாம் ஹிந்தியில் ஓரளவு சமன் செய்து விட்டார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். படத்தின் இறுதிக்காட்சியில் முருகதாஸ் இந்தியில் சில மாற்றங்களைச் செய்திருந்தது உண்மையில் மிகச்சரியாக இருந்தது.
அந்த வகையில், ஒருவேளை தமிழில் கூட அதே இடத்தில் ஒரு பாடல் இருந்திருக்கலாம். வேறு சில காரணங்களால் அந்தப் பாடலை நீக்க வேண்டிய சூழல் கூட இருந்திருக்கலாம். அல்லது திரையிடலுக்கு பின் யாரேனும் இதைச் சொல்லியிருக்கலாம். ஆனால் ஒரு வகையில் பாடல் இல்லாத தமிழும், பாடலைக் கொண்ட ஹிந்தியும் அதனதன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டன என்பது தான் உண்மை. ஹிந்தியில் இருக்கும் பாடலுக்கு நிகராக தமிழில் அந்த ஒரே காட்சியை பின்னணி இசையில் சமன் செய்திருப்பார் ஹாரிஸ் ஜெயராஜ். குறிப்பாக சஞ்சய்யை கிளம்பச் சொல்லுவதிலிருந்து, அவள் கண்களிலிருந்து அவன் மறையும் வரை ஒவ்வொரு நகர்வையும் கண் கொட்டாமல் கல்பனா பார்க்கும் காட்சியில் அவள் ஏக்கங்களுடன் பயணிக்கிறது பின்னணி இசை.
இப்படி நமக்காக தனது அவளது லட்சியத்தை விட்டு விட்டாளே என்று ஒரு பக்கம். நம்மீது அவள் வைத்திருக்கும் காதலின் ஆழம் கண்டு கண்ணீர் விழாமல் அழும் மனம் கொண்ட ஆனந்தம் இன்னொரு பக்கம். உண்மையைச் சொல்லி இருந்தால் அவள் காரை விற்றிருக்க இருக்க மாட்டாளே. இப்படி ஒரு சங்கடமான நிலையை அவளுக்கு உருவாக்கி விட்டோமே என்ற வருத்தமும் இரு நாயகர்களுக்கும் மிகச் சிறப்பாகவே பொருந்தியது.

கஜினியின் கதாபாத்திரத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
- ஒன்று – பணக்காரன், மென்மையான தொழிலதிபர்.
- இரண்டு – நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்ட பழிவாங்கும் வெறி கொண்ட மனிதன்.
தொழிலதிபர் வேடத்தில் சூர்யா அமீரை விட மிகச்சிறப்பாகப் பொருந்தியிருந்தார் என்று நினைக்கிறேன். சூர்யா அந்த கதாபாத்திரத்தில் அத்துணைக் கச்சிதமாக இருந்தார். சத்யனிடம் எப்படி நிற்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்படி பேச்சைத் துவங்க வேண்டும் என ஒரு மேல் தட்டு மனிதனின் நடை உடை பாவனையை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். மேலும் அசினுடன் மிகச்சிறப்பாகப் பொருந்திப்போயிருப்பார்.
அதே நேரத்தில் அமீர்கான், சூர்யாவின் இளமையின் சாயலின்றி சற்றே வயதானவராகத் தெரிந்தார். சூர்யாவிடமிருந்த துள்ளலும் வசீகரமும் அங்கில்லை. கல்பனாவை முதன்முதலில் சந்தித்துவிட்டு திரும்பி வரும் சஞ்சய், தனது காதலை விவரிக்கும்போது அவளைப் பார்த்து புன்னகைக்கும் காட்சியில் சூர்யாவின் சிரிப்பு கச்சிதமாக இருந்தது. அதே நேரத்தில் அமீர்கானின் அமைதியான முதிர்ந்த புன்னகை அதைச் சமன் செய்யவில்லை. இது போன்ற சின்னச் சின்ன தொடுதல்கள்தாம் சூர்யாவை சஞ்சய் கதாபாத்திரத்திற்குச் பொருத்தமான சிறப்பான ஒருவராக மாற்றியது.

மறதி நோயால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பொறுத்தவரை, சூர்யாவிடம் இருப்பது கோபம். ஆனால் அமீர்கானிடம் இருப்பது வெறி. அந்த இடத்தில் அமீர்கான் அதைச் சரியாகக் கையாண்டிருக்கிறார். அனைத்தும் மறந்த சஞ்சய் காலையில் எழுந்ததும் உடலில் எழுதியிருக்கும் எழுத்துக்களைப் பார்த்த பின் கல்பனா கொல்லப்பட்டது நினைவுக்கு வர, வெறியில் மூர்க்கமாகும் காட்சி அமீர்கானின் ட்ரேட்மார்க்.
ஒரு பக்கம் “நீ காரியமில்லாமல் இப்படியெல்லாம் வரச்சொல்ல மாட்டாயே என்ன விஷயம்” என்று சூர்யா நேரடியாக கேட்க, அமீர்கான் அதை அமைதியான பார்வையில் கேட்டுவிட்டு நேரடியாக “எதற்கு அழைத்தாய்” என்று முடிக்கிறார். அதே போல, பணத்தைப் பெற்றுக்கொண்ட அமீர்கான் அதிர்ந்துபோய் ஒரு சிலையைப் போல கல்பனாவை பார்த்துக் கொண்டே இருப்பார். காட்டையே தனது உணவாக்கும் இந்த யானை, தனக்குத் தான் சாப்பிடும் உணவில் ஒரு பெரும்பகுதியைத் தரும் எறும்பின் அன்பைக் கண்டு மலைத்துப் போகத்தானே செய்யும்.
கோடிகளை நிமிடங்களில் சம்பாதிக்கும் சஞ்சய்க்கு இப்படிக் கிடைக்கும் சிறு தொகை மிகப்பெரிய தொகையாகத் தெரிகிறது. அவன் வாழ்க்கையில் இப்படி ஒரு தொகையை, அன்பின் பரிசை, எந்த எதிர்பார்ப்புமற்ற ஒரு உதவியை அவன் இதுவரை யாரிடத்திலும் கண்டதில்லை. எதிர்பார்த்ததும் இல்லை. அவனுக்கே பணம் கொடுத்து அவனை விட பெரிய பணக்காரியாகி விட்டாள் கல்பனா என்பதே உண்மை. அதே மலைப்போடு அந்தத் தொகையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான் சஞ்சய். தமிழில் இந்த உணர்வு பின்னணி இசையோடு அடுத்த காட்சிக்கு நகர்ந்துவிடும். ஆனால் அதே உணர்வு இந்தியில் ஒரு பாடலாக கோர்க்கப்பட்டிருக்கும்.
எப்படி உன்னைக் கண்டடைந்தேன்
என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை
நதியில் மெதுவாகக் கரையும் ஒரு நிலவைப்போல
மெதுவாகவும் மிருதுவாகவும் என்னுள் இறங்குகிறாய்
சூரியனின் அதிகாலை வெளிச்சத்தைப்போல
ஒரு இனிமையான முறையில்
உன் தொடுதலின் பின் எனைக் கடந்து சென்றாய்
திரும்பிப் பார்க்கவா? உன் குரல் மட்டும் கேட்கவா?
என் நிம்மதியும் நீ, என் எதிர்காலமும் நீ
ஏன் இத்துணைக் காலம் வராது போனாய்.
இக்காலத்தில் கடவுளுக்கு ஏது நேரம்
என நினைத்திருந்தேன்
ஆனால் உனைப் படைத்ததன் மூலம்
இப்போது என் கண்களில் கூடியது அவர் மீதான மதிப்பு
பிரம்மாண்டமாகத் தெரிகிறார் இப்போது என் முன்னே.
(பெண்)
சாலைகள், அருவிகள், ஆறுகள் மாறிவிட்டன
மெழுகுவர்த்தியின் சுடரொளி மாறிவிட்டது
வாழ்க்கை ஒரு புதிய பாடலை இசைக்கிறது
மழையின் தூறல் கூட மாறிவிட்டது
பருவங்கள் தங்கள் காலங்களை மாற்றும்
ஆனால், நானிருப்பேன் என்றும் உன்னுடன்
உன் கரங்களின் இருப்பைப் போலவே
ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நொடியும்
வாழ்க்கை ஒரு சித்தாரைப் போலாகிவிட்டது
அதில் விழும் மழைத்துளிகள் இசையாகும்
என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை
எப்படி உன்னைக் கண்டடைந்தேன்….
தன் அதிர்ஷ்டத்தை நம்ப முடியாமல் திணறும் வண்ணம் இப்படியொரு பெண்ணிடம் காலம் நம்மை இணைத்துவிட்ட நாயகனின் மகிழ்ச்சியை எழுத்தில் விவரிக்கும் ’ப்ரசூன் ஜோஷி’ அவர்களின் “கைசே முஜே” என துவங்கும் பாடல் வரிகளுக்கு, இசையில் உயிர் கொடுத்திருப்பார் ஏ.ஆர். ரகுமான். பாலில் கரையும் தேனின் சுவையாக ஷ்ரேயாகோஷலும், நாயகனின் பரிதவிப்பை தனக்கே உரிய குரலில் பென்னி தயாலும் பாடியிருப்பார்கள். அந்த வரிகளினூடே பின்வரும் காட்சி தொடரும்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட சஞ்சய் மீண்டும் ஆட்டோவில் தனது ஏர் வாய்ஸ் நிறுவனத்திற்கு செல்கிறான். அங்கே அவனுக்காக கார்களில் அலுவலக பணியாட்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் வந்தவுடன் அவனுக்கே உரிய கோட் சூட்களை கொடுக்கிறார்கள். அவற்றை அணிந்து கொண்டு மீண்டும் அதே பணத்தை எடுத்துக்கொண்டு நேராக விமான நிலையம் கிளம்புகிறான். செல்லும் வழியில் காரில் அவளது நினைவில் இருந்து அகல முடியாது தவிக்கிறான்.

ரூபாய் நோட்டை பார்த்தபடியே விமான நிலையம் சென்றடைகிறான். விமான நிலையத்தின் பரிசோதனையில் இன்னமும் அதே தொகையை அவன் கரங்களில் இறுகப்பற்றிக் கொண்டிருக்கிறான். அதையும் சேர்த்து நடக்கிறது பரிசோதனை. பின்னால் வரும் அவனது நிறுவன ஆட்கள் அவனது உடமைகள் மற்றும் ஆவணங்களை சுமந்துகொண்டு வர, சஞ்சய் தனது உடமையாக அந்த தொகையை மட்டும் கைகளில் ஏந்தியபடியே நடந்து செல்கிறான்.

அவர்களுக்கென தனி விமானம் (சாட்டர்ட் பிளைட்) தன் கதவைக் கீழிறக்கியபடி கம்பளம் விரிக்கிறது. உள்ளே அமரும் சஞ்சய் தன் மார்பில் பணத்தை ஏந்தியபடி அவளின் நினைவுகளுடன் கிளம்புகிறான்.
அவன் செல்லும் விமானத்திலிருந்து நகரும் கேமரா தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் கல்பனாவிடம் வந்து நின்றபடி அந்த காட்சி முடிகிறது. ஹிந்தி மொழியில் மறுஆக்கம் செய்யப்பட்டு 15ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கஜினி (2008) திரைப்படத்தில் இன்னமும் அக்காட்சியின் வடு நீங்காது மனதோரம் உறுத்திக்கொண்டே இருக்கிறது.
சினிமா என்பது ஒரு நொடிக்கு 24 பொய்களை தன்னகத்தே கொண்டது என்று சொல்கிறது அறிவியல். சினிமாவில் இறந்துபோகும் ஒருவர் நிஜத்திலும் இறந்து போகிறாரா என்ன? கட் சொன்னவுடன் சிரித்துக்கொண்டே எழுவதில்லையா. ஆனால் சிரித்துக்கொண்டே சென்றவர் எத்தனை நாட்கள் நம் மனதில் அழவைக்கும் காட்சியைக் கடத்திவிட்டு செல்கிறார். ஆனால், நாம் கூறும் புனைவான கதைகளையே யதார்த்தமான காட்சிகளின் மூலம் நமக்கே நிஜத்தில் நிகழ்ந்தது போன்ற ஒரு நெருக்கத்தை மனதளவில் உணர முடியும்.
எல்லாப் பிரச்சனைகளையும் தாண்டி இனி வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் முளைத்தெடுக்கும் சமயத்தில் விதார்த்தும், அமலாபாலும் இறந்து போகும் ‘மைனா’ படத்தின் இறுதிக்காட்சியும், ’சேது’ படத்தில் மனநல மருத்துவமனையிலிருந்து தப்பித்து மனநோயாளியாக மீண்டும் அதே மருத்துவமனைக்கு விக்ரம் செல்லும் இறுதிக்காட்சியிலும், இமைதாண்டிய கண்ணீரை உங்கள் விரல்கள் துடைத்தெடுக்குமெனில், தான் காதலிப்பதே சஞ்சய் ராமசாமியைத்தான் என்பதை கடைசிவரை தெரியாமலே இறந்துபோகும் வெள்ளந்தியான கல்பனாவையும் கனத்த மனதுடன் உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளத்தான் செய்யும். எந்த வித சுயநலமும், நிர்பந்தமும், பிரதிபலனுமின்றி நமக்காக தனது சக்திக்கு மீறியும் உதவும் சில உறவுகள் அமைந்தால் அதைவிட மண்ணில் சொர்க்கம் ஏது என்பதையும், அப்படி ஒருவரை இழந்தால் நமது வாழ்க்கை எப்படியெல்லாம் நரகமாகிப்போகும் என்பதையும் உணர்த்துகிறது திரைக்குள் விரியும் அவர்களது வாழ்க்கை. நாணயத்தின் உபய (இரண்டு) பக்கங்களைப்போல இருவேறு வாழ்க்கையிலிருந்து சந்திக்கும் இரண்டு பேர், பூவைக்காணாத தலையைப்போல இறுதிவரையிலும் சேராமல் பார்த்துக்கொள்கிறது, நாணயத்தின் இருபுறத்திற்கும் நடுவில் இருக்கும் விளிம்பெனும் விதி.
ஒரு கட்டுரையை எங்கிருந்தும் துவங்கலாம். பூஜ்ஜியத்தை வரைவது போல. ஆனால் இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், தமிழைத்தாண்டி மும்பை வரை எதிரொலித்த தமிழ்ப் படத்தின் தாக்கம், அமீர்கானுக்கு மட்டுமின்றி ஹிந்தி திரையுலகிலேயே முதல் 100 கோடி வணிகத்தை ஒரு தமிழன் துவக்கி வைத்த வரலாறு, உடலெங்கும் எழுதிக்கொண்டு படம் முழுக்க தொடரும் ஒப்பனை, வலுகொண்ட நாயகனுக்கான உடல்கட்டுக்காக அமீர்கானின் இடைவிடாத உழைப்பு என இத்திரைப்படம் எனும் நூலிலிருந்து எடுத்துப்படிக்க பல அத்தியாயங்கள் இருந்தும், இக்கட்டுரையை இப்படியொரு பார்வையிலிருந்து துவங்க வைத்ததற்கு காரணம், உலகமே வணிக நோக்கத்தோடு, போட்டியும் போறாமையுடன் பின்னால் விழுபவனைக்கூட திரும்பிப் பார்க்காமல் ஓடும் இக்காலகட்டத்தில், கல்பனாவைப்போன்று கீழே விழுபவர்களையும் எழுப்பி விடும் அரிதான மனிதர்களைக் கண்டடையும் அக்காட்சி. எத்தனை மோசமான அனுபவங்களுடன் மனிதர்கள் மீதான பிடிமானமே தளர்ந்துவிடும் போதெல்லாம், இப்படி ஒரு நிகழ்வோ, புதிய ஒருவரின் சந்திப்போ அப்பிடிமானத்தை மீண்டும் இறுகப்பற்றிக்கொள்ள மீண்டும் ஒருமுறை கரம் நீட்டுகின்றது. அதன் வழியே எங்கோ இருந்து வரும் யாரோ ஒருவர் எப்படியோ நம் வாழ்வில் இப்படியாக மறக்க முடியாத ஒன்றை நிகழ்த்திவிட்டுப் போய்விடுகிறார்கள். மும்பை நகரின் விதியை ஒரு கள்ளக்குறிச்சிக்காரன் திருத்தி எழுதியதைப்போல.
சினிமாவின் யதார்த்தங்களும், நிஜவாழ்வின் சுவாரஸ்யங்களும் இணையும் அதே புள்ளியில் துவங்குகிறது இன்னொரு கதை.
கோழிக்கோட்டிலிருந்து மஞ்ஞேரிக்குத் தனது புதிய காரில் சென்று கொண்டிருந்தார் அந்த மலையாள நடிகர். அப்போது ஒரு முதியவர் சாலையோரம் கைகளை நீட்டியபடி உதவி கேட்கிறார். வண்டியை நிறுத்துகிறார் அந்த நடிகர். இவர் யார் என்பதையே அறியாத அந்த முதியவர் தனது பேத்தி பிரசவ வலியில் துடிப்பதாகவும் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கும்படியும் கேட்கிறார். இன்னமும் தான் யார் என்பதை அறியாத அந்த முதியவரிடம் இருந்து அகலாத அதிர்ச்சியோடு அவரை பார்த்துக் கொண்டிருக்கிறார் அந்த நடிகர். விரைந்து சென்று அழைத்து வரும் மருமகளையும், அந்த முதியவரையும் காரில் ஏற்றிச்செல்கிறார்.
மஞ்ஞேரி அரசு மருத்துவமனையை அடைகிறார்கள். கார் வந்த வேகத்தில் இருந்த தீவிரத்தை உணர்ந்த மருத்துவமனையின் பணியாளர்கள் ஓடிவந்து அந்த பெண்ணை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். இந்தப் பதட்டமான சூழலிலும் இருளிலும் மருத்துவமனையின் பணியாளர்கள் எவரும் அவரை யார் என்றே கவனிக்கவில்லை. பின்னால் செல்லும் பெரியவர் கிளம்பத் தயாராக இருந்த நடிகரிடம், ”ரொம்ப பெரிய உதவி பண்ணிருக்கீங்க. கடவுள் தான் உங்களை எங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்காரு. உங்க பேரு என்ன” என கேட்கிறார். இப்போது அந்த நடிகர் தன் பெயரைச் சொல்கிறார். ஆனால் அப்போதும் அந்த முதியவருக்கு நடிகரை யாரென்றே தெரியவில்லை. முதியவர் தன் வேட்டியின் மடிப்பிலிருந்து ஒரு கசங்கிய தாளை எடுத்துத்தருகிறார். “என் மனத்திருப்திக்காகன்னு நெனச்சுக்க… வரேன்…” என்று சொன்னவர் வேகவேகமாக மருத்துவமனைக்குள் சென்று மறைகிறார்.

எடுத்துப்பார்க்கிறார். அது ஒரு இரண்டு ரூபாய் நோட்டு. தன் வாழ்நாளின் மிகப்பெரிய சம்பாத்தியத்தில் அந்த கசங்கிப்போன இரண்டு ரூபாய் நோட்டும் ஒன்று என நெகிழ்ந்து போய் தனது ’மூன்றாம் பிறை’ புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அந்த நடிகர், மம்முட்டி.
இப்படியாக எளிய மனிதர்களிடமிருந்து கிடைக்கும் எதிர்பாராத அன்பின் பரிசு எந்த வகையிலும் திருப்பித் தர முடியாத பெருந்தொகையாகவே மாறி விடுகிறது.

Leave a comment