இன்குலாபின் ‘தடி’ நாடகம்:
உடைமை அதிகாரத்துக்கு எதிரான குரல்
முனைவர் கு. சுந்தரமூர்த்தி
உதவிப் பேராசிரியர்,
தமிழ் முதுகலை & ஆய்வுத்துறை,
புதுக்கல்லூரி, சென்னை – 14
996 251 4140
sundaramurthy@thenewcollege.edu.in

ஐந்து அங்கங்களைக் கொண்ட நாடகமாக இன்குலாபின் ‘தடி’ நாடகம் அமைந்துள்ளது. ‘பல்கலை அரங்கம்’ நாடகக் குழுவினரோடும் அ. மங்கையோடும் நடத்திய செய்திப் பகிர்வின் அடிப்படையிலும் கூட்டு முயற்சியிலும் உருவாக்கப்பட்ட இந்நாடகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. தலித்திய விடுதலையை முன்வைக்கும் இந்நாடகத்திற்கு அடிப்படையாய் அமைந்தன, கன்னட எழுத்தாளர் எச்.எஸ்.சிவப்பிரகாஷின் ‘ஒரு கிழவன் வாயிலுக்கு வந்த இளவரசன்’ என்ற பிரதியும் இடுகாடு, சுடுகாடுகளில் பிணம் புதைக்கும்/ எரிக்கும் தொழிலாளியான வெட்டியான்(ர்) கூறும் நாட்டார் வழக்காறுகள் ஆகியனவாகும். நாடகத்தில் ‘தடி’ என்பது அதிகாரத்தைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாடலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நாடகம் ’கட்டியம்’ என்னும் சிற்றிதழின் இரண்டாவது இதழில் 2002ஆம் ஆண்டில் வெளிவந்தது.
தடி நாடகம் – கட்டமைப்பு
பெரியார் கைத்தடி, அம்பேத்கர் கைத்தடி, அரசர்களின் கைத்தடி எனப் பலவகைத் தடிகளைப் பற்றியும் அவற்றின் அதிகாரத்தைப் பற்றியும் கட்டியங் காரன் உரக்கச் சொல்வதுபோல் கதை தொடங்குகிறது. அவன் தடி பற்றிக் கூறிக் கொண்டிருக்கும் போது இளவரசன் ஒருவன் பொய்க்கால் குதிரையில் வருகிறான். அவனது வீரர்களும் குதிரைகளில் பின் தொடர்ந்து வருகின்றனர். காட்டினுள் வீரர்கள் காணாமல் போகின்றனர். இளவரசன் தனியாளாய் நிற்கிறான். சமூகத்தில் இராஜாக்கள் ஒழிக்கப்பட்ட பிறகும் ஆணவத்தில் இராஜாக்களாகவே தங்களை நினைத்துத் திரியும் அதிகார வர்க்கத்தையும் அவர்கள் செயலையும் கட்டியங்காரன் பேசுகிறான்.
வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் காட்டுக்குள் தனக்கு அடிமை செய்ய யார் வருவார்கள் எனப் பார்க்கிறான் இளவரசன். அங்குக் காட்டுக்குள் ஒரு கிழவி இருப்பதை, காலந்தோறும் எளிய மக்களுக்கு நடந்த அவலத்திற்கு அவள் சாட்சியாய் இருப்பதனைக் கூறுகிறான் கட்டியங்காரன். கிழவியின் இடத்திற்குச் செல்லும் இளவரசன் கிழவியைப் பார்த்து, “தனியாளாய் என்ன செய்கிறாய்?” என அதிகாரமாய்க் கேட்க அவளும் அதிகாரத்தோடு பேசுகிறாள். தங்களின் அதிகாரமே பெரியது என இருவரும் கூறுகிறார்கள். அதனை வெளிக்காட்டிப் போட்டிபோடும் விதமாய் இளவரசனும் கிழவியும் தங்களின் கைத்தடிகளை வேகமாய்ப் பூமியில் தட்டி சத்தம் எழுப்புகின்றனர். இதன்பிறகு கிழவி, ஒடுக்கப்பட்டவரின் அதிகாரம் வெளிப்பட்ட ஒரு சூழலைக் கதையாய்க் கூறுகிறாள்.
காட்சி மாறுகிறது. அரசனைப் போன்று அதிகாரம் உடையவராகத் தன்னைக் கருதும் நாட்டாமை ஊர்மக்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார். மக்கள் எல்லாம் கூடியிருக்க அக்கூட்டத்திற்கு வெட்டியான் சின்னாண்டியுடன் வருகிறார். கூட்டத்தில் பிற ஊர்களில் நடக்கும் சாதிச் சண்டைகள், கலவரங்கள் நம் ஊரில் நடக்கக் கூடாது எனப் பேசுகிறார். பிறருடன் சமமாகச் சின்னாண்டியையும் அமர வைக்கிறார். சின்னாண்டி மகிழ்ந்து போகிறான். கூட்டம் கலைந்த பிறகு கட்டியங்காரன் சின்னாண்டியுடன் பேசுகிறான். ஊரில் அவன் நிலைமை, அவன் சமூகத்தின் மீதான நிலைமை மாறவில்லை என உணர்த்த முயல்கிறான். அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் தன் வீட்டுப் பெண்ணுக்கு நடக்க இருக்கும் திருமணச் சடங்கில் கலந்து கொள்ள நாட்டாமையை அழைக்கச் சொல்கிறான்.
சின்னாண்டியும் நாட்டாமையை அழைக்கிறான். அழைப்பை ஏற்க விரும்பாத நாட்டாமை தனக்கு வேலை இருப்பதாகக் கூறுகிறார். தனக்குப் பதிலாகத் தன் தடியை எடுத்துச் செல்லுமாறும் தான் வந்தால் கிடைக்கும் கௌரவம் தன் தடியாலும் கிடைக்கும் என்கிறார். இக்காட்சியில் குறுக்கிடும் இளவரசன் கிழவியைப் பார்த்து, “தடியின் அதிகாரம் எப்படிப்பட்டது பார்த்தாயா?” என்கிறான். அதற்குக் கிழவி, “அந்நிகழ்ச்சிக்குப் பிறகு தக்க சமயத்தில் சின்னாண்டி செய்தது என்ன தெரியுமா?” என்று கேட்டு மீண்டும் கதையைத் தொடர்கிறாள்.
“மனிதன் இறந்து போனவுடன் அவனில் பாவம் செய்தவனும் புண்ணியம் செய்தவனும் எங்கு போவான், என்ன ஆவான்” என சின்னாண்டி கூறி, உரக்கப் பாடிக் கொண்டிருக்கிறான். அப்பொழுது நாட்டாமையின் அடியாள் ஒருவன் வந்து நாட்டாமையின் மனைவி இறந்து போனதைக் கூறிச் சடங்குகள் செய்ய அழைக்கிறான். அதைக் கேட்ட சின்னாண்டி பறை கொட்டி ஆடுகிறான். பின்னர் சுவரில் சாய்த்து வைத்திருக்கும் தன் தடியைக் காட்டி எடுத்துப்போகச் சொல்கிறான். அது, தான் செய்யும் எல்லா சடங்குகளையும் செய்யும் என்கிறான். சின்னாண்டியின் இத்தகைய எதிர்வினையின் மூலம், ‘அதிகாரத்தில் உள்ளவர் செய்யும் கொடுமைகளை யாரும் கேட்க மாட்டார்கள். அதிகாரம் செய்பவனுக்கு உதவினால் அதனைச் சேவகமாகவே நினைப்பார்கள். மனிதனுக்கு மனிதன் செய்யும் உதவியாய் நினைக்க மாட்டார்கள். உங்கள் அதிகாரத்தை எங்கள் அதிகாரம் எதிர்க்கும்’ எனக் காட்டுவது போல் ‘தடி’ நாடகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
தடி – கதைப்பின்னல்
அரச அதிகாரமும் அரசியல் அதிகாரமும் என்றென்றைக்கும் எளிய மக்களை நசுக்கும்படிதான் உள்ளன. இது காலந்தோறும் தொடர்ந்தாலும் அதற்கான எதிர்ப்புகளும் போராட்டங்களும் சில இடங்களில் வெளிப்படச் செய்கின்றன. அதற்கு உதாரணம் காட்டும் வகையிலே ‘தடி’ நாடகம் புனையப்பட்டுள்ளது. இதற்கேற்ற வகையில் நாடகத்தின் கதைப்போக்கு நெகிழ்வுப் பின்னலாக அமைந்துள்ளது. “நெகிழ்ச்சிக் கதைக் கோப்பில் சிக்கல் ஏற்படுத்துவதற்கோ, தீர்வு காண்பதற்கோ ஒவ்வொரு பாத்திரமும் நிகழ்ச்சியும் ஈடுபடுவதாக இருக்காது. அதில் பாத்திரம் மனநிலை, சூழ்நிலை ஆகியவற்றுக்கே முதன்மை தரப்படும்” (தா.ஏ.ஞானமூர்த்தி,1987; ப. 35) என்பர்.
கதைக்குள் படைக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் உருவமான இளவரசன், நாட்டாமை, கிழவி, சின்னாண்டி முதலிய பாத்திரங்கள் அவரவர்களின் மனநிலை, சூழ்நிலைக்கேற்பச் செயல்படுவதனை, உரையாடுவதனை நாடகத்துள் காணமுடிகிறது.
காட்டுக்குள் வேட்டைக்கு வீரர்களுடன் வரும் இளவரசன் தனித்து விடப்படுகிறான்.
“ஆளில்லாத வெறும் பாழிடமா? என் ஆணைகள் கேட்டிட யார் வருவார்? மூங்கில் தெரியும் புதர்களிலே பாம்பு மூச்சு விடும் ஒலி கேட்கிறதே! உச்சியிலே வெயில் மூள்கிறதே, நாக்கு உள் வறண்டே உயிர் போகிறதே!”(ப. 57, 58)
என அச்சத்துடன் தனக்குள் நினைத்துத் தவிக்கிறான். அப்பொழுது அங்கு வரும் கட்டியங்காரன் அக்காட்டில் தனியாளாய், கடந்த காலத்தின் சாட்சியாய் வாழும் கிழவியைச் சுட்டிக் காட்டுக்கிறான். அங்கு செல்லும் இளவரசன் கிழவியை அதிகாரம் செய்ய நினைக்கிறான். அவனின் அதிகாரத்திற்கு உடன்படாத கிழவி,
“உன் அதிகாரத்தின் நிழல்கூட அண்ட முடியாத என் இடத்துலே நின்னுகிட்ட உனக்கு இத்தனை ஆணவமா? உன் செருப்பிலிருந்து தலைப்பாகை வரை எதுக்கும் இங்கே மரியாதை கிடையாது. ஏன்னா இது என் இராச்சியம்”(ப. 65) எனக் கூறுகிறாள். இதன்பின் உடைமை அதிகாரத்திற்கு எதிரான தன் எதிர்ப்புணர்வை, மனநிலையை மேலும் தெளிவாக இளவரசனுக்குக் காட்டும் வகையில் நாட்டாமை, சின்னாண்டி கதையைக் கூறுகிறாள்.
சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளைப் பார்க்காதவர்போல் காட்டிக் கொண்டு நடிப்பவர்களின் மனதுக்குள் வலிமையாய் வேரோடிக் கிடக்கின்றது சாதியம். சமூகத்தில், ஊரில் எல்லார் எதிரேயும் சாதியைப் பார்க்காதவர் போல் காட்டிக் கொள்ளும் நாட்டாமையை வெட்டியான் சின்னாண்டி தன் மகளின் திருமணத்திற்கு அழைக்கும் போது அதனை ஏற்றுத் திருமணத்திற்கு வர மறுத்து விடுகிறார். தனக்குப் பதில் தன் தடியை எடுத்துச் செல் என்கிறார். அதனால் தனக்கு ஏற்பட்ட மரியாதைக் குறைவைத் தாங்கமாட்டாது சின்னாண்டி நாட்டாமையைப் பழிதீர்க்க காலம் பார்க்கிறான். அதற்குரிய காலமும் நேரமும் வருகிறது. நாட்டாமையின் மனைவி இறந்து போகிறாள். சடங்குகள் செய்ய நாட்டாமை சின்னாண்டியை அழைத்து வருமாறு கூறுகின்றார். சின்னாண்டி வர மறுத்துத் தன் தடியை எடுத்துச் செல்லுமாறு கூறுகிறான். அது, தான் வந்து சடங்கு செய்வதற்குச் சமம் என்று கூறிப் பழி தீர்த்துக் கொள்கிறான்.
இப்படிப் பாத்திரங்களின் மனநிலை, சூழ்நிலை ஆகியன மாறி மாறி இடம் பெற்று நாடகக் கதைப் போக்கு நெகிழ்வுப் பின்னலாய்ச் சென்றாலும் அதில், காலந்தோறும் உடைமை அதிகாரத்திற்கு எதிராக வெளிப்படும் குரல்கள், எதிர்வினைகள், நிகழ்வுகள் என அழகாய்ப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்குக் கதைப்பின்னலின் கூறுகளான தொடக்கம், சிக்கல், முடிவு ஆகியன உறுதுணையாய் உள்ளன.
நாடகத்தின் தொடக்கம் அதிகாரத்தின் குறியீடான ‘தடி’யைப் பற்றிக் கட்டியங்காரன் பாடுவதுபோல் அமைகிறது.
“ஊராரே கேளுங்க இது
ஊன்ற வந்த தடியில்லே
தள்ளாடும் காலத்தில் – இது
தாங்க வந்த தடியுமில்லே.
அறியாமை நொறுக்க வந்த – ஈரோட்டு
ஐயாவின் தடியில்லே!
தீண்டாமை தீர்க்க வந்த – அண்ணல்
அம்பேத்கர் தடியில்லே” (ப. 55)
எனத் தடி பற்றிப் பாடத் தொடங்கும் கட்டியங்காரன் அந்தத் தடி யாருடைய தடி என்பதனை வெளிக்காட்டும் வகையில்,
“ஆதியிலே வன்முறைக்கு
அடையாளமான தடி!
தண்டல் செய்யப் புகுந்த
தடியர்கள் புடிச்ச தடி…
பற்றற்ற துறவிக்கு
வழித்துணையும் கைத்தடிதான்
கொற்றவனும் துறவியைப்போல்
பற்றற்றுக் கோலோச்ச…” (ப. 56)
என்று பாடுகிறான். தடியைப் பற்றியவன் துறவியைப்போல் பற்றற்றுப் பிறர்க்கு நன்மை செய்து வாழாது அதிகாரத்தை எளியவர்க்கு எதிராகப் பயன்படுத்தியதை இப்பாடல் காட்டுகிறது. மேலும் கொற்றவனும்கூட அவ்வாறே இருந்த வரலாற்றை இப்பாடல் எடுத்துரைக்கிறது.
கேள்விகள் கேட்க முடியாத அளவுக்குக் குவிந்து கிடக்கும் உடைமை அதிகாரம் எப்பொழுதும் சமூகத்திற்கு எதிரானது. மேட்டிலிருக்கும் நீர் பள்ளத்தை நோக்கிப் பாய்வதுபோல அதிகாரமும் விளிம்புநிலை மக்களை ஒடுக்கிக் கொண்டேதான் இருக்கிறது. மேலும் அம்மக்களின் போராட்ட மனநிலையை அது சிதைக்கவும் முயலுகிறது. காட்டில் தன்னந்தனியாய் வாழும் கிழவிமீது வழி தவறி வரும் இளவசரன் அதிகாரம் செலுத்துகிறான். அவள் அதிகாரத்திற்குக் கட்டுப்பட மறுக்கிறாள். அதற்கு இளவரசன்,
“கொஞ்சம் கூட அஞ்சிடாமலே – ஆளும்
கொற்றவனை நீ எதிர்க்கிறாய்
கூன் விழுந்து தள்ளாடியும் வாய்க்
கொழுப்பு மட்டும் குறையவில்லையா” (ப. 60)
எனக் கேட்கிறான். கையிலுள்ள தடியைக் காட்டி அதிகாரம் தன்னிடம் குவிந்திருப்பதனைச் சொல்கிறான். அதற்குக் கிழவியும்,
“மோத எனக்கும் கைத்தடி உண்டு – இதுக்கும்
மோதிப் பார்த்த சரித்திரம் உண்டு” (ப. 61)
என்பதாகப் பதிலளிக்கிறாள். நாட்டாமை, சின்னாண்டி ஆகியோரின் எதிர்வினைகளையும் கூறுகிறாள். இப்படி வளர்ந்து செல்லும் நாடகக் கதையில் இளவரசனைப் பார்த்துக் கிழவி பேசும் ஒரு காட்சி முக்கியமானது.
“தவிச்சி வந்திருக்கே…
பசிச்சு வந்திருக்கே
ஒரு மனுசனாச்சேன்னு
ஒரு மொடக்குத் தண்ணி தரலாம்
பசிக்குப் பாதிக் களி உருண்டை தரலாம்
இதை மனுஷனுக்கு மனுசி செய்யுற
உதவின்னு நெனைக்க மாட்டே.
ஒரு ராசவுக்கு
அடிமை செய்யுற சேவகம்னு நெனைப்பே.
ஒன் அரண்மனை புத்தி அப்படி
கோலையா நீட்டுறே
உன் கோலை எங்கள் தடி எதிர்க்கும்” (ப. 70)
கிழவியியின் இந்த எதிர்வினை, இன்குலாபின் எதிர்ப்புணர்வை; அதிகாரத்திற்கு எதிராக ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்டோர் அவர்களாகவே போராட வேண்டும், எதிர்வினை ஆற்றவேண்டும் என்கிற கோட்பாட்டினை வெளிப்படுத்துவதாக உள்ளது. இவ்வகையில் இயல்பான முடிவை நோக்கி நாடகம் செலுத்தப்படுவது அவ்வப்போது அதிகாரத்தை நோக்கி நீளும் எதிர்ப்பைப் பதிவு செய்வதாய், எதிர்ப்புணர்வைத் தூண்டுவதாய் அமைகிறது.
எதிர்ப்பின் குரல்
“கலையை மனிதன் படைக்கிறான்; கலையில் சமூக மனிதன் படைக்கப்படுகிறான்” (கோ. கேசவன், 1984, ப. 44) இன்குலாபின் படைப்பில் அந்தச் சமூக மனிதன் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறான். அவனிடம் காணப்படும் சமூகத்துக்கு எதிரான கருத்துகளை வெளிக்காட்டுவதோடு சமூக நீதிக்கான கருத்துகளைத் தான் படைக்கும் பாத்திரங்கள் மூலம் முன்வைக்கிறார். மேலும் கலகம் செய்கிறார். போராடத் தூண்டுகிறார். நாடகத்தை அதற்கு ஏற்ற கூர்மையான கருவியாய்ப் பயன்படுத்துகிறார்.
நாடகப் பாத்திரங்கள் படைப்பினைப் பற்றிப் பார்க்கும்போது லியோ டால்ஸ்டாயின் கூற்று இங்கு நோக்கத்தக்கது. செகாவினுடைய சிறுகதைகளைக் கொண்டாடிய டால்ஸ்டாய்க்கு அவரது நாடகங்கள் பிடிக்கவில்லை. இதைச் செகாவிடமே வெளிப்படையாகச் சொன்னார் டால்ஸ்டாய். “எனக்கு சேக்ஸ்பியரின் நாடகங்கள் பிடிக்காது. நீ ஷேக்ஸ்பியரை விடவும் மோசமாக எழுதுகிறாய். நாடகத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் பார்வையாளர்களைத் தன்னோடு அழைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும். உன் கதாப்பாத்திரங்கள் தங்கள் அகவுலகுக்குள் வாழ்கிறார்கள். அவர்கள் பார்வையாளர்களைப் பொருட்டாகக் கருதுவதேயில்லை. யாரோடு உனது கதாப்பாத்திரங்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன எனக் கேட்டார் டால்ஸ்டாய்” (எஸ். இராமகிருஷ்ணன், 2015, ப. 44)
டால்ஸ்டாயின் பாத்திரப் படைப்புப் பற்றிய இக்கோட்பாட்டோடு ஒப்பு நோக்கத்தக்கவை இன்குலாபின் பாத்திரப்படைப்புகள் ஆகும். இவரின் பாத்திரங்கள் அகவுணர்வுக்குள் பயணப்படுவது கிடையாது. நொந்து கொள்வதும் கிடையாது. அதற்குமாறாக வாசிப்பவனோடும் பார்வையாளனோடும் தொடர்பு கொள்பவர்கள். தங்களைத் தனித்துக் காட்ட முயலாதவர்கள் ஆவர்.
உடைமை அதிகாரம் எப்போதும் ஒடுக்குமுறையையே செயல்பாடாகக் கொண்டுள்ளது. வரலாறு அதற்கு சாட்சி. இந்த அதிகாரத்தைக் குறியீடாகக் காட்டும் வகையிலேயே நாடகத்தில் ‘தடி’ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நாடகத்தில் கட்டியங்காரன், இளவரசன், கிழவி, நாட்டாமை, வெட்டியான் சின்னாண்டி, படைவீரர்கள் ஆகியோர் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். இதில் ‘கிழவி’ பாத்திரம் தலைமைப் பாத்திரமாக வெளிப்பட்டுள்ளது.
நாடகத்தில் தலைமைப் பாத்திரமான ‘கிழவி’ கட்டியங்காரன் மூலம், “இவள் காட்டுக் கிழவி… கடந்த காலத்துலே நடந்ததுக்குத் தான்தான் சாட்சிங்கிறாள். படையெடுப்புகள் நடந்தபோது இவளுடைய குடியிருப்பையும் அந்தத் தேர்ச்சக்கரங்கள் துலைச்சிப் போட்டன. பஞ்சம் பொழைக்க ஊரைவிட்டு ஓடினவங்களோடு இவளும் ஓடினாள். சாதி வெறியர்கள் வெச்ச நெருப்பு இவள் கூந்தலையும் எரிச்சது. மத வெறியர்களோட பல் பதிஞ்சு இவள் மார்பும் புண்ணாச்சு. சுரங்கம் வெட்டுவதற்காகப் பிய்ச்செறியப்பட்ட குடிசைக்குள்ளே இவள் குடிசையும் ஒன்று. அணைக்கட்டுக் கட்டுறதுக்காக பிடுங்கி எறியப்பட்ட வேர்கள்ல இவளுடைய வாழ்க்கையும் ஒன்னு. மகாராணியம்மா அரண்மனையை வேற இடத்துல கட்டணும்னு சொன்னபோது முதல்லே கிழிபட்டது இவளுடைய குடிசை சுவருதான். இவள் தனியேதான் இருந்தாள்… ஆனால் எல்லோரோடவும் இவள் இருந்தாள். எல்லாக் காலத்திலேயும் இவள் இருந்தாள்” (ப. 58) என்பதாக அறிமுகப்படுத்தப்படுவது உடைமை அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முகமாக, சாட்சியாக, குறியீடாக வெளிப்படுகிறது. மேலும்,
“நரிகளின் ஊளையில் கண்ணசைந்தேன்… பாம்பு
ஊந்துடும் பாதையில் நடந்து வந்தேன்
துரத்துற எதைக் கண்டும் பயமுமில்லை… ஆ…
தொலைக்க இனி ஒரு வாழ்வுமில்லே!
நடந்த எல்லா சங்கதிக்கும் – ஒரு
ஞாபகமா நான் இருந்தேன்.” (ப. 59)
என்று கிழவியே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதாக இன்குலாப் அமைக்கிறார். இதன்வழி, கிழவி பாத்திரத்தைச் சமூகத்தின் கூட்டு முகமாக, மனமாக, எதிர்ப்பின் குரலாக வெளிப்படுத்த முனைகிறார் இன்குலாப். இதில், ‘தொலைக்க இனி ஒரு வாழ்வுமில்லே’ என்கிற வரியைக் கிழவி கூறுவதனைப்போல் காட்டுவதன் மூலம் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அல்லது அதிகாரமற்ற மக்கள் வாழ்வில் அடைந்த வேதனைகளை வெளிக்காட்டி அபத்தம் மிக்க அவர்களின் வாழ்வினை உணர்த்துகிறார்.
உடைமை அதிகாரம் முதலில் அரசனின் கையிலும் பின்னர் உயர் சாதிக்காரர் கையிலும் இருந்தது. அதன்பின் காலமாற்றத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டது. குடியாட்சி வந்தது. குடியாட்சி வந்தாலும் உயர்சாதிக்காரர்கள் தங்களை மன்னர்களைப் போலவே கருதிக் கொண்டனர். இதற்கு அவர்களின் அரசியல் அதிகாரம் துணை நின்றது. அதற்கேற்ப நாடகத்தைக் கட்டியங்காரன்மூலம் நகர்த்தி காட்சிப்படுத்துகிறார். அதில் உடைமை அதிகாரத்திற்கு எதிராகக் காலந்தோறும் எழுந்த கலகத்தை, எதிர்ப்பைக் கிழவி பாத்திரத்தின் மூலம் பதிவு செய்ய முயல்கிறார்.
காட்டில் தன் சேனைகளைத் தவறவிட்டுவிடும் இளவரசன் ஒருவன் கிழவி வாழும் இடத்திற்கு வருகிறான். யாருமற்றவனாக, தனியனாக அவன் இருந்தபோதும் ஆணவமும் அதிகாரத் திமிரும் அவனை விட்டு அகலவில்லை. கிழவியைப் பார்த்து அதிகாரம் செய்ய முனைகிறான். தனக்கு அடிமை செய்து மரியாதையை வெளிக்காட்டச் சொல்கிறான். அதற்குக் கிழவி,
“வேட்டையில் விட்டாயா? உன் படைகளைச்
சூதாடித் தொலைத்தாயோ?
காட்டுக்கு நான் ராணி உனக்கென்ன
மரியாதை காட்ட வேணும்?
பயந்து வாழ அடிமை இல்லடா – பலரைப்
பார்த்து விட்டேன் நீ யாரடா?” (பக் – 60,61)
எனக் கூறி உன் அதிகாரம் இங்கு செல்லாது என்கிறாள். அதற்கு இளவரசன் தன் கையிலுள்ள தடியைக் காட்டித் தன் அதிகாரத்தைக் கிழவிக்கு உணர்த்த முயல்கிறான். கிழவியும் உன் அதிகாரத்தை எதிர்க்க என்னிடமும் கைத்தடி உண்டு. மோதிப் பார்த்த வரலாறும் உண்டு எனக் கூறி வெட்டியான் சின்னாண்டி, ஊருக்குள் தலித்துகளை மதிப்பதுபோல் காட்டிக் கொண்டாலும் மனதினுள் சாதி வெறுப்பை வைத்திருந்த நாட்டாமையை எதிர்த்த வரலாற்றைக் கூறுகிறாள். பின்னர், இறுதியாய், “உன் அதிகாரம் காட்டை அழித்தது. என் முகத்திலே விழுந்த சுருக்கம் ஒவ்வொண்ணும் அதற்கு சாட்சி என்கிறாள்”. தொடர்ந்து, “உன் கோலை எங்கள் தடி எதிர்க்கும்” என்று இளவரசனை நோக்கி உடைமை அதிகாரத்திற்கான தன் எதிர்ப்புக் குரலை அதிகாரத்துடனே கூறுகிறாள். இவ்வகையில் அறமற்ற அதிகாரத்தை அறமுள்ள அதிகார உணர்வுடன் எதிர்வினை புரிந்து மனத்துக்குள்ளாக அறச்சிந்தனையை ஏற்படுத்த இன்குலாபின் உரையாடல்கள், எழுத்துகள் தூண்டுவதாக உள்ளன.
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் உயர்சாதியினருக்கும் ஒடுக்கப் பட்டவர்கள், தலித்துகள் என்ன உதவி செய்தாலும் அதனை அச்சமூகத்தினர் தங்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமையாகவே கருதுகின்றனர். நன்றிக்குரிய ஒன்றாக, ஒரு பொருட்டாக அவ்வுதவியை அவர்கள் கருதுவதில்லை என்பதனை இன்குலாபின் இக்கிழவி பாத்திரம் உணர்த்துகிறது. மேலும் ஒடுக்கப்பட்டவர்களை, தலித்துகளைச் சக மனிதர்களாக, ஓர் உயிராகக்கூட மதிக்கும் பழக்கம் ஆளும் வர்க்கத்திற்கும் உயர் சாதியினருக்கும் எப்போதுமே இருந்ததில்லை என்பதனையும் உடைமை அதிகாரம் செலுத்தப்படுவதற்கு அவர்கள் உரியவர்கள்தான் என்கிற அறச் சிந்தனையற்ற அவர்களின் இழிவான பார்வையையும் காட்டி நிற்கிறது. இதனோடு அக்காழ்ப்புணர்ச்சியை எதிர்த்து வரலாற்றில் அவ்வப்போது எதிர்வினைகள், குரல்கள் எழும்பியதையும் இந்நாடகம் நினைவுபடுத்துகிறது.
துணைநின்ற நூல்கள்
- இன்குலாப், குரல்கள் (குரல்கள், தடி, மீட்சி) நாடகத் தொகுப்பு நூல், வெளிச்சம் வெளியீடு, திருவல்லிக்கேணி, சென்னை – 26, திசம்பர் – 2003
- தா.ஏ. ஞானமூர்த்தி, நாடகத்திறன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், ஆகஸ்டு – 1987
- கோ. கேசவன், இலக்கிய விமர்சனம்: ஒரு மார்க்சியப் பார்வை, அன்னம் வெளியீடு, சிவகங்கை, 1984
- எஸ். இராமகிருஷ்ணன், டால்ஸ்டாயும் செகாவும்(கட்), உயிர்மை மாத இதழ், செப்டம்பர் – 2015

Leave a comment