ஓட்டம்

க. அம்சப்ரியா

டிக்கொண்டிருந்தான். மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க  ஓடிக் கொண்டிருந்தான்.

  யாராவது தன்னைத் துரத்துகிறார்களா என்று திரும்பிப் பார்த்தான். அப்படி எதுவும் இல்லை என்பது போலவும் இருந்தது. கும்பலாக துரத்துவதாகவும் உணர்வு.. இதுவொரு பிரம்மையோ என்று கூட தோன்றியது. காலடிச் சத்தம் தன்னை நெருங்கி வருவது போலிருந்தது. இனி யோசிப்பதில் எந்தப் பலனும் இல்லை. மறுபடியும் ஓடத் துவங்கினான்.

   முதல் முதலாக எப்போது ஓடத் துவங்கினோம்?  யோசிக்கலாமா? வேண்டாமா ? என்று  சஞ்சலமாக இருந்தது. 

   ஓடும் கருவி தனக்குத் தானே சிந்திக்கத் துவங்கியது.

   முத்துவையும் தன்னையும் ஒரே நாள்தான் பள்ளியில் சேர்த்தினார்கள். ஒரு வேளை அன்றுதான் ஓட்டம் துவங்கியிருக்குமோ? 

  எப்போதும் தான்தான் முதல் மதிப்பெண் என்றாலும் எப்போது வேண்டுமானாலும் தன்னை எட்டிப் பிடித்துவிடுவானோ என்ற அச்சம். உண்ணும் போதும், உறங்கும் போதும் அதே ஓட்டம்தான். முத்து தன்னை ஒரு நாளும் துரத்தவே இல்லை. ஆனால் அம்மாவின் துரத்தல் இருந்தது. அப்பாவின் துரத்தல் இருந்தது. ஒரு கட்ட எல்லையில் முத்து தன் இயல்பில் இருந்த போதும், அவனை நெருங்கவிடக் கூடாதென்கிற முரட்டுப் பிடிவாதம். மூச்சிறைக்க ஓட வைத்தது.

   ஒரு வருடமா? இரண்டு வருடமா? படிப்பு முடிக்கும் வரை  நிற்காத ஓட்டம்தான்.

    வழியில் வண்ணத்துப் பூச்சி பூங்காவில் விதவிதமான வண்ணத்துப் பூச்சிகள் வண்ணங்களால் பறந்தபடி இருக்கும். அந்தப் பூங்காவிற்குள் ஒரு முறையாவது  சென்று வரவேண்டும் போலிருந்தது. 

    வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் மிகவும் முக்கியம். அதை வீணாக்குபவனுக்கு பயிற்சிப் பள்ளியில் இடமில்லை என்று கூறிவிட்டார்

     உண்மையில்  அப்படியான ஒரு ஓட்டத்திற்கான தேவையிருந்ததா?  சற்றே திரும்பிப் பார்க்கையில்  அவன் என்னவானான் என்றே தெரியவில்லை.  யார் துரத்துவதாக நினைத்தோமோ அது போலியானது என்று நிரூபனமான போது ஓடியதன் வலி அதிகமாக இருந்தது.

   இப்போது அதையேன் நினைத்துப் பார்க்க வேண்டும்? அப்படி நினைத்துப் பார்க்கிற போது  வேறு யாராவது ஒருவர் அருகில் இணைந்துவிடுகிறார்கள்.

  இப்போது  எதற்கான ஓட்டம்? தன்னை துரத்துகிற பிம்பம் உண்மைதானா? 

    பாதையில் பல்லியோடும், பாம்போடும் ஏன் ஓட வேண்டும்? அதனதன் பாதையில் அதனது ஓட்டம் இயல்பானதாக அமைவதுதானே சரி.

    கூடவே கூட்டமாக இணைந்து கொள்கிறார்கள்.  உரத்த குரலில் ஓடு…ஓடு…என்று கைதட்டுகிறார்கள். இது மிகப் பெரிய சாதனையென்று  மாலை போடுகிறார்கள். கை குலுக்குகிறார்கள்.

    தன்னோடு பலரும் ஓடுவதாகவும், அதனை உற்று அறிந்து ஓட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தள்ளிவிட்டு, ஓட வாய்ப்புண்டு என்றும் மிதிக்கக் கூட வாய்ப்புண்டு எனவும் எச்சரித்தார்கள்.

   இப்படி எச்சரித்து ஓட வைக்கிறவர்களை நட்பாக, உறவாக வாய்க்கப் பெற்றவர்கள்   கொடுப்பினை வரம் பெற்றவர்கள் என்றும்  அதனாலேயே அவர்கள் சிகரம் தொட வாய்க்கப் பெற்றார்கள் எனவும் யாரோ ஒருவராவது கை குலுக்கி இதைப் போதிக்கிறார்கள். 

   ஏன் ஓட வேண்டும் என்றோ, ஓடக்கூடாது என்றோ விளக்கம் கேட்டால் எந்தப் பதிலும் இல்லை. 

    வேறு வழியில் நடந்து பார்க்க வேண்டும் போலிருந்தது. சற்றே பாதை மாறி திசையையும் மாற்றினான்.

     தன்னை உணர்தல் என்றும், தன்னை அறிதலென்றும் யாரோ கை கோர்ந்தார்கள்.  இடைவிடாத போதனை. மனதின் ஆழத்திற்குள் புதைந்து காணாதன காணும் பயணமெனக் கூறினார்கள்.

  தன் மனதை தூர் வாறத் துவங்கும் போதுதான் புரிந்தது. இது காலாதி கால குப்பைகளால் நிறைந்த குப்பைக் கிடங்கு என்று அறிந்த போது தன்னைத் தானே முகர்ந்து பார்த்து பெரும் துர்நாற்றத்தில் மூர்ச்சையானான். 

   எப்படியும் தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பினாலும், இடையிடையே இது குப்பையெனில் இதைக் குவித்தது நானல்ல…வேறு யார் யாரோ…! அவர்கள் அதை அலட்சியப்படுத்தும் போது நான் ஏன் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்? இப்படியான ஒரு வினாவை எழுப்பிய போதுதான் அங்கிருந்தும் துரத்தத் துவங்கினார்கள்.

    ஓடத் துவங்கி, ஓடிக் கொண்டே இருந்தவன் வந்து சேர்ந்த இடம் பழைய பாதையாக இருந்தது.

    தனியே ஏன் ஓட வேண்டும்? துணையோடு ஓடலாமென வழிப்போக்கன் ஒருவன் தடுத்து நிறுத்தினான். அவன் கையில் வண்ணத்துப் பூச்சிகள். 

    அங்கொரு வண்ண உலகம் அறிமுகமானது. ஓடைகள், ஆறுகள், குளங்கள் எதுவுமில்லாமல் தாகத்தோடு ஓடிக்கொண்டிருந்தவனின் பாதையில் மழை பயணமெங்கும்.

  மழை மென் மழையாக, சாரலாக, அடர்ந்த தன்மையாகவென வேறு வேறு உணர்வுகளைக் கொடுத்தபடி இருந்தது.

   தான் அப்போது ஓடிக்கொண்டிருந்தோமா? நடந்து கொண்டிருந்தோமா? பழைய படி சிந்தனை வெடித்துக் கொண்டு வந்தது.

    தன்னோடு அறிமுகமான எதுவொன்றும் தன்னொடு நிலைக்கவில்லை என்பதை ஓட்டத்தின் சீராக காலத்தில்தான் உணர வாய்த்தது.

  முதலில் அப்பாதானே விரல்களைப் பற்றியிருந்தார். ஆனால் சில மைல்தூரத்திலேயே அவர் காணாமல் போயிருந்தார்.

   யாரோ தன்னை சாட்டையால் அடிப்பது போலிருந்தது.

  ” முதுமையூர் நெருங்குகிறது… எதற்கு பழைய காலத்தைத் தடவிக் கொண்டிருக்கிறாய்? இப்போதும், எப்போதும் ஓடத்தான் விதித்திருக்கிறது. ஓடு…ஓடு…”

  மாறி மாறி சாட்டையால் அடித்துக் கொண்டிருந்த கரங்களை உற்றுப் பார்த்தான் . அது, தான் பிறந்ததிலிருந்து ஓடு…ஓடு என்று துரத்திய அடையாளம்தான்.

     ஓடிக் கொண்டிருந்த காலத்தின் வசந்தமென  வாய்த்த பொற்காலமொன்று நினைவின் இடுக்கிலிருந்து எட்டிப் பார்த்தது. அது வசந்த காலம். உன்னைத் தவிர யாரும் எனக்கில்லை என்று சரண்யா கூறிய காலம். அப்போது எப்படியும் சரண்யாவை வாழ்நாள் துணையாக அமைத்துக் கொள்ள வேண்டும் எனில் தான் ஓடுவதை விட, தன்னை விட வேகமாக ஓடும் குதிரையின் மீது பயணிப்பதே சரியென்று முடிவாகி, குதிரையும் தானும்தான் வாழ்வென்று கரைந்த காலம்.

   யாருக்காக ஒரு செயலில் ஈடுபடுகிறோமோ, அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது புரிந்து கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் அதிகாரத்தைக் கடிவாளமாக்கி, பிறர்மீது பயணிக்கத் துவங்கும் போது, பாதகமாகவே முடியும்.

    சரண்யாவை வேறு இலக்குகள் துரத்தியிருக்க வேண்டும். அல்லது தன்னை யாரோ துரத்துவது போல சரண்யாவையும் துரத்தியிருக்க வேண்டும்.

   அது ஒரு பேரிடர் காலம். குதிரை தன்னைத் தள்ளிய பின் திரும்பிப் பார்க்காமல் ஓடி மறைந்து விட்டது. மலையடிவாரத்திலிருந்து தான் உருண்டு கொண்டிருப்பதையோ, இனி ஓட வேண்டிய அவசியமற்ற காலத்திற்குள் புதைந்து கொண்டிருப்பதையோ, குதிரை அறியவில்லை. யார் இனி தன் மேல் லாவகமாக அமர்கிறார்களோ, இடையில் தடங்கலற்று பயணிக்கிறார்களோ அவர்களைச் சுமந்து கொண்டே ஓடுவதுதான் குதிரையியல் என்று புரிந்த போது வேதனையும் மகிழ்ச்சியும் ஒரு சேரத் தழுவி மாறி மாறி முத்தமிட்டன. 

  இனி ஓட வேண்டியதில்லை என்பதை நினைக்கிற போது மகிழ்ச்சிதான் பொங்கிப் பிரவாகமெடுத்தது. மக்கி மண்ணாகிப் போனபின் இது போல் இந்தப் பாதையில் இன்னும் யாராவது ஓடிக் கொண்டிருப்பார்கள்.

    ஓட்டத்தில் தேங்கியவர்களை முந்துகிறவர்கள் அவமானப்படுத்தக் கூடும். இனி மெதுவாகக் ஓட இயலாதபடி குழிபறிக்கக் கூடும்.

    முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்த போது  இளமாறன்தான் அறிமுகமானான். மௌனவிரதக்கார்களின் பெருங்கோட்டை போலிருந்தது. விடிந்ததும், பத்து மணிக்குச் சுமக்கிற சுமைக்கு, குளிக்க வேண்டும் . நல்லதாக துணிகள் அணிய வேண்டும்.  சென்று வர ஆடம்பர வாகனம் வேண்டும் பல வேண்டும்களைச் சுமந்து கொண்டு அலுவலகத்திற்குச் சென்ற சில தினங்களிலேயே விரிக்கப் பட்டிருந்த வலை புரிந்தது

   இளமாறன் ஓட்டப்பந்தய வீரனுக்குரியவனைப் போல தயார் நிலையில் இருப்பதும், தன்னையும் அது போல நிறுத்தி, சுற்றிலும் இருப்பவர்கள், அவரவர் திறமையை அவரவர் நிரூபியுங்கள் என்று விசிலடித்துத் துவங்கி வைத்தார்கள்.

   இளமாறனை ஏன் முந்த வேண்டும் என்று தான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே தனக்குப் போட்டியாக ஒருவனா..? என்று இளமாறன் சீற்றமாகி, தன்னை விரோதமாக பாவித்து, போகிற பயணத்தில் வெடிகளை மறைத்து வைத்ததும், அங்கிருந்து தப்பி வந்ததும் மறக்க இயலாத துயர் காலம்.

  இப்போது உருண்டு விழுந்திருக்கும் போது அதையேன் நினைவில் கொள்கிறாய்? 

    உருண்டு தரை சேரும் முன் ஒரு கை எட்டிப் பிடித்து, தன்னை ஆசிர்வதித்து,இனி எப்போதும் இப்படி நிகழ வாய்ப்பில்லை என்று ஆருடம் கூறியது.

   இதற்கெல்லாம் காரணம் நேர்மறையான எண்ணங்கள் எதுவும் குருதியில் கலந்தோடவில்லை என்றும், இனி தான் சொல்வது போல இரவும் பகலும் கூற வேண்டும் என்றும் உபதேசித்தது. கொஞ்ச காலம் தான் கூறுவது போல நடைமுறைப்படுத்துமாறு கட்டாயப்படுத்துவதையே ஒரு பூப்பந்தை கையில் கொடுத்து சற்று நேரம் வைத்திரு என்பது போல நடந்து கொண்டது. சில எண்களைப் பரிந்துரைத்தது. நாள்தோறும் முறை வைத்து சில மணிநேர இடையில் குறிப்பிட்ட அளவு எழுதிக் கொண்டிருந்தால் நல்லதே நடக்குமென்றது.

   தன்னை ஓட ஓட விரட்டியவர்களைப் பழி வாங்க வேண்டுமெனில் இதுவே சரியான வழியென எண்களால் கோபுரம் எழுப்பினான். புறாக்கூட்டம் போல் தன்னை விரித்து, அங்கங்கு கூடு கட்டி, எப்போதும்  எண் கோபுரத்தில் வசிக்கத் துவங்கினான். 

   எண்களையே குடிநீராக்கிக் கொண்டான். எண்களையே சிற்றுணவாகவும், பேருணவாகவும் சமைத்துக் கொண்டான். எங்கு செல்ல வேண்டுமானாலும் எண்களையே ரதமாக்கினான்.

  எண்களின் தேவதையும், தன்னை ஓடுமாறு கட்டளையிட்டதில்தான் தான் எண்களுக்கு அடிமையானதை உணர்ந்தான்.

   எண் தேவைதையோடு ஏற்பட்ட கடும் விவாதம் இறுதியில் வாழ்வு முறிவானது.

  வாழ்வின் உயரத்திற்குச் செல்ல விருப்பம் இருந்தால் இணைந்து கொள்…இல்லாவிட்டால் என்னை விட்டு விலகு என்று சினத்தோடு கூறியது.

    குதிரை தள்ளிய வேகத்தை விட இது இன னும் பாதாளத்திற்கு உருட்டிக்  கொண்டிருந்தது.

    இப்போது ஓடுகிறோமா? இல்லையா? ஐயம் கிளர்ந்து நெருக்கியது.

    ஓடவில்லை என்று நம்பிய போது மேலும் துயரம் நஞ்சு பரவியது போலானது.  தன்னைச் சுற்றிலும் பரவியிருக்கிற காற்றில் தனக்கெதிரான சூழ்ச்சிகளை விதைத்திருப்கதாக மனம் நம்பத் துவங்கியது. அதுவே தன் மீது படர்ந்து, நெருக்கிப் பிழிவதாக உணர்வாயிற்று. மூச்சுத் திணறுவதாக அச்சமானது.

 தன் மனம் ஓட்டத்தை நிறுத்திக் கொள்ளவும் நினைக்கிறது. யாரேனும்  காப்பாற்றினால் இன்னும்  ஓடலாம் என்றும் இரட்டை வேடம் போடுவதை உணர்ந்த வேளையில் தன் மீதே தானே காறி உமிழ்ந்து கொண்டான் .

    ஓடுவதுதான் வாழ்வு. ஓடாமல் எதையாவது பற றிக் கொண்டிருக்காதே…! 

   தன் செவிகளுக்குள் யாரோ இறைச்சலாக கத்தினார்கள்.

   ஓடி ஓடி என்ன கண்டாய்? நிரந்தரமாக ஓய்வெடு….

   இன்னுமொரு இரைச்சலான குரல் செவிகளைத் தாக்கியது.

   பெரும் மலையிலிருந்து உருண்டு கொண்டிருந்தான்.

   பாலைவன மணலில் புதைந்து கொண்டிருந்தான் 

   கடலின் ஆழத்தில் மூழ்கிக் கொண்டிருந்தான்.

   எல்லாத் திசையிலிருந்தும் புதிய குரல்கள்  நம்பிக்கையோடு எழுந்தன.

    ஓடுதல் வாழ்க்கை… அதுதான் விதி….

என்னைப் பற்றிக் கொள்…என்னைப் பற்றிக் கொள்… வான் வெளியெங்கும் எழுந்த குரலில் மகிழ்ச்சி இசை வழிந்தோடிக் கொண்டிருந்தது

    குரல்கள், கரங்களாக அவதாரமெடுத்து  நீண்டு கொண்டிருந்தன.

     தடுமாறிப் பற்றிக் கொண்டான் .

  ஓடுவதற்கான பாதை தயாராக இருந்தது.

***

Leave a comment

Trending