கடவுளரின் புலனக்குழு

சோலை. சீனிவாசன்

“காட்ஸ் கிரேட்” வாட்ஸப் குரூப்பில்
என்னையும் யாரோ சேர்த்துவிட்டிருந்தார்கள்.

வாழைக்குருத்துப் பச்சைகலர் சேலைகளை
உடுத்தியிருந்த அம்மன்கள்
கும்மியடித்துக்கொண்டிருக்கும் போட்டோவை
அப்லோடியிருந்தனர்.

அய்யனாரும் நானும் லைக் பண்ணியிருந்தோம்.

சுடலைமாடன்
‘வேறலெவல்’ என்றவார்த்தையை
அரிவாள்களால் வடிவமைத்திருந்தார்
.
சோலைசேரி முருகன்கோவில்
கொள்ளையடிக்கப்பட்ட செய்தியொன்றை ஷேர்செய்திருந்த
முருகப்பெருமான்
தன் வல்லமையால் உண்டியலில்
பணம் இல்லாமல் செய்த விவகாரத்தை மதர்மேரியிடம் சொல்லி புளகாங்கிதமடைந்துகொண்டிருந்தார்.

முதல் ஆக்ஸிடென்ட் பண்ணி பைக்குடன் செல்பி எடுத்த பையனின் போட்டோவைப் பகிர்ந்திருந்த முகம்மது
அவனைக் காப்பாற்றிய விதத்தை
சுருக்கமாக சுவராஸ்யமாகப் பதிந்திருந்தார்.

தரைப்பாலத்தின்மீது
காட்டுவெள்ளத்திலிழுத்துச்செல்லப்பட்ட
விசுவாசியை
ஏன் காப்பாற்றவில்லை என்பது குறித்த
இயேசுவின் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

ஆடம்பர புத்த விஹாரொன்றை
புறம்போக்கு நிலத்தில்
கட்டியவரை நினைத்து ஆழ்ந்த தியானத்திலிருந்தார் புத்தர்.

சிவனின்
கங்கா குறித்த கவிதைக்குப்பின்
குரூப்பிலிருந்து லெஃப்ட் ஆகியிருந்தாள் சக்தி.

தினமுமொருவர் ஸ்டேட்டஸ்
வைக்கவேண்டுமென்ற கொள்கையின்படி
இன்று
பெரியாரின் கொள்கைகள் குறித்து
ஸ்டேட்டஸ் வைத்திருந்தேன்

முதன்முறையாக
நூற்றியிருபத்தைந்து தெய்வங்களும்
ஒன்றிணைந்து
கோலகலமாய்க்
கொண்டாடத்தொடங்கினர்.

Leave a comment

Trending