கு. சுந்தரமூர்த்தி கவிதைகள்

  1. வாசிக்கப்படாதவன்

நிலவின் பெருவெளியில்
பனி அழிந்து
பெருகியோடும் நதிவழியில்
நட்சத்திரங்கள் மிதந்து செல்லும்.

அன்றாடங்களின் ஆசைகள்
பெருந்துயராய்த் தொடர
திருப்திப்படுத்திக் கொள்கிற
கனவுகள்
கண்ணாடிக் கதவுகளுக்குள்
வைக்கப்பட்டிருக்கும் தாவரங்களின்
வாசமற்ற பூவைப்போல்
பூத்திருக்கும்.

காலை விடியல்களில்
தத்தளித்து
மரங்களின்
உறவெல்லாம் இழந்திருந்த
தார்ச்சாலைகள்
பக்கமெல்லாம்
பூக்களின் உதிரல்களின்றி
வசந்த்காலம் அறிவிக்க இயலா
துக்கத்தில்
விதவைக்கோலம் பூண்டிருக்கும்.

கனவின் லிபியை
யாரிடத்தும்
சட்டெனப் பேச அஞ்சுகிறேன்.
கண்களின்
அடியாழத்திலிருந்து
ஒடிவரும் உணர்வுகளை
ஓவியப்பிரதியாய் நின்று
அசைவின்றி காட்டமுயல்கிறேன்.
காண்போர் கண்களெல்லாம்
வாசித்துச் செல்கின்றன
அவரவர் விருப்பங்களை.
இன்னும் வாசிக்கப்படாமலேயே நான்

****

இறந்துபோன ஞாபகங்களில்
புனரமைத்துக் கொள்கிற
காட்டைப்போல
நிகழ்காலத்துள் இருப்பை
அதீதமாய்ப் பிறழ்ந்து பிறழ்ந்து
வாழமுயல்கிறது
ஒரு குழந்தையைப்போல
எதிர்வந்து உதிர்கின்ற காலம்.

அந்த நிலவொளியின் முன்
நான்
அவ்வளவு பெரிய துயரில்லை.

வெயில் என்ன செய்கிறது
காலை அழகு திடுக்கிட
அந்தந்த கிழமைகளின்
துயரங்களைப் பரப்பிச் செல்கிறது.

வருத்தமும் வேதனையும்
உச்சத்தை அடைய
மகிழ்ச்சியைத் தராத
தர்க்கத் தத்துவங்களுக்கு அப்பால்
வண்ணமிழந்த
தீற்றல்களுக்கு நடுவே
பறக்க எத்தனிக்கும்
பறவையின் கண்களில்
வானம் வழிகிறது.

Leave a comment

Trending