நூறுபுராணங்களின் வாசல் குறுங்கதைகளில் மாய யதார்த்தவாதம்
ஷாஹின் லி.
ஆய்வியல் நிறைஞர்ப்பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
புதுக்கல்லூரி, சென்னை
நெறியாளர் : முனைவர் பி. உசேன் கான்

புனைகதை என்பது நாவல் சிறுகதை என்னும் இரு இலக்கிய வகைகளையும் குறிக்கும் ஒரு பொதுச்சொல்லாகும். பாரம்பரியவழி வரும் கதைகளில் இருந்து வேறுபட்டமைவது புனைகதை எனலாம்.
புனைகதை (Fiction) எனப்படும் இலக்கிய வகைமை மேலை நாடுகளில் நிலமானிய அமைப்பு (Feudalisum) சிதையத் தொடங்கிய காலத்துத் தோன்றிய இலக்கிய வகைமையாகும். கைத்தொழில் வளர்ச்சியும் நிலமானிய அமைப்பின் சிதைவுக்கு காரணமாக அமைந்தது. நிலமானிய அமைப்பு மாறத்தொடங்க, அம் முறையின் சிறப்பு அம்சமான கூட்டுவாழ்க்கை சிதையத் தொடங்கிற்று. குடும்பம், குலம் என்ற சமூக நிறுவனங்களின் முக்கியத்துவம் குன்றத்தொடங்கிற்று. தனிமனிதன் முக்கியமானவனானான். புதிதாகத் தோன்றிய பொருளாதார உறவுகள், புதிய சமூக உறவுகளை ஏற்படுத்தின. இப்புதிய சமூக உணர்வுகளை எடுத்துக்காட்டுவதற்கு வழக்கில் இருந்த இலக்கியங்கள் வலுவற்றவையாகவிருந்தன. இதற்காகவே பாரம்பரிய கதைகளின் வழியாக புதிய இலக்கிய வகை ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. அப்புதிய இலக்கிய வகையே புனைகதையாகும். [இக்கருத்து யாருடையது? நிச்சயம் கட்டுரையாளருடையதல்ல]
இப்புனைகதை பல்வேறு காலகட்டத்தில் பல வகைகளுக்குள்ளும், இசங்களுக்குள்ளும் உட்படுத்தி எழுதப்பட்டு வந்துள்ளது. உதாரணமாக: போஸ்ட்மாடர்னிசம், கியூபிசம், ரியலிஸம், நேச்சுரலிசம், எக்ஸ்பிரஷனிஸம், என்ற வகைகளுக்கு உட்படுத்தி கதைகள் படைக்கப்பட்டன. இவற்றுள் இன்று அதிக எழுத்தாளர்களால் எழுதப்பட்டு வரும் ஒர் வகை “மேஜிக்கல் ரீலிஸம்” அவ்வகையில் இன்று நாம் அறியும் தமிழ் பெண் எழுத்தாளர்களில் ஒருவர் முபீன் சாதிகா, அவர்கள் எழுதிய நூறு புராணங்களின் வாசலில் மேஜிக்கல் ரியலிசம் என்னும் இக்கட்டுரை குறித்து காணலாம்.
முபீன் சாதிகா:
ஆசிரியர் முபீன் சாதிகா அவர்கள் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களில் ஒருவர். இவரின் படைப்புகள் அனைத்தும் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் உள்ளது. இவர் நவீன இலக்கிய வடிவத்தின் மீது பெரும் ஆர்வம் கொண்டவர். இவரின் படைப்புகள் அனைத்தும் அவ்வாறே அமைந்துள்ளன.
முபீன் சாதிகாவின் படைப்புகள் :
● என் அடையாள மனிதனும் காலத்தில் கரைந்த உண்மையும்
● நூறு புராணங்களின் வாசல் – 1,2
● மருத்துவர் டி எஸ் கனகாவின் பயணம்
● உறையும் மாயக் கனவு
நூறு புராணங்களின் வாசல் :
முபீன் சாதிகா அவர்கள் எழுதிய நூறு புராணங்களின் வாசல் என்னும் நூல் டிசம்பர் மாதம் 2021ஆம் ஆண்டு நன்னூல் பதிப்பகத்தில் வெளியானது. இந்நூல் இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது. இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாகத்திலும் 100 குறுந்கதைகள் எனத் தொகுப்பாக 200 குறுங்கதைகள் உள்ளன. முபீன் சாதிகா பல உத்திகளைக் கொண்டு கதைகளை அமைத்துள்ளார்.
நூறு புராணங்களின் வாசல் நூலில் மொழிநடை :
முபீன் சாதிகா அவர்களின் மொழிநடை ஓர் அதிசயம், அவை நம்மை பல புதிய உலகிற்கு பயணிக்க வைக்கும் அவரின் கதைகளிலேயே பல உதாரணங்களை கூறலாம், ஆசிரியரின் கதைகளில் மட்டுமே குதிரைகள் பாலைவனத்தில் பறக்கும், வேற்று கிரகவாசிகளுக்கு கோபம், வன்மம், பொறாமை போன்ற எண்ணங்கள் உண்டாகும். கடவுள் என்பது இன்றுவரை புனிதமாக பார்க்கப்பட்டு வந்த காலத்தில் முபினின் கதைகளில் அவை கட்டுடைக்கப்படும் முருகன் கனவில் வருவார் நம்மிடம் பேசுவார் நம்மை அவர் உலகிற்கு இட்டுச் செல்வார். இவ்வாறு இந்த கதைகள் அழகிய சித்திரங்கள் நம்மை ஓர் அதிசய உலகுக்கு நிஜமும் அதிசயமும் உள்ள உலகுக்கு அழைத்துச் செல்லும்
கதையின் மொழி நடை கதை மாந்தர்கள் மற்றும் நாவலாசிரியர்களால் வெளிப்படுகிறது இத்தகைய மொழிநடையை
- ஆசிரியர் கூற்று
- மாந்தர்களின் உரையாடல்
என்று இரு வகையில் பகுக்கலாம். இவ்விரு நிலையில்தான் ஒரு புனைகதையின் மொழி நடை இன்ன வகை என்று அறிய முடிகிறது.
ஆசிரியர் கூற்று :
ஒரு படைப்பில் படைப்பை எழுதும் ஆசிரியனே கூறி செல்வதாக அமைதல். மற்ற பாத்திரமாகவும் ஆசிரியரே மாறிவிடும் நிலையும் உண்டு.
மாந்தர்களின் உரையாடல் :
படைப்பை ஆசிரியர் கூறி சென்றாலும் மாந்தர்களின் உரையாடல் இயல்பானதாகவும் அமையும் அந்நிலையில் மாந்தர்களின் உரையாடல் மூலமும் படைப்பை அமைக்கலாம். இந்நூலில் உள்ள நூறு கதைகளும் பாத்திரங்கள் பேசுவதாகவே அமைக்கப்பட்டுள்ளன.
நூறு புராணங்களின் வாசல் நூலில் பாத்திரப்படைப்பு :
கதை மாந்தர் என்பது புனைகதையின் இன்றியமையாத கூறுகளில் ஒன்று. இதுவே கதையின் வெற்றிக்கு காரணமாக அமையும். ஆசிரியரின் படைப்பு திறனுக்குச் சான்றாக அமைவதும் கதை மாந்தர்களே.
“ஒரு படைப்பின் வெற்றிக்கு பாத்திரப்படைப்பு காரணமாக இருப்பதால் படைத்தவனை விட படைக்கப்படுபவர்கள் வாசகர்களின் நினைவில் ஆழமாக பதிந்து விடுகின்றன”
(மா. இராமலிங்கம், நோக்கு நிலை, ப. 115)
இவை குறுங்கதைகள் என்பதால் ஒவ்வொரு கதையிலும் இரண்டு முதல் நான்கு பாத்திரங்கள் வரை வருகின்றனர் அவற்றில் இரண்டு பாத்திரங்கள் உயர்திணையாகவும் மற்றவை அஃறிணை உயிரினங்களாகவும் உள்ளன, இவர்களுக்கு உள்ளாகவே கதை நகர்ந்து செல்கிறது.
இஸங்களின் உலகம் :
இலக்கியத்தின் உருவமும் உள்ளடக்கமும் காலம் காலமாய் மாறிக்கொண்டே இருக்கின்றன. இலக்கியப் போக்கு இவ்விதம் மாறுதல்களை ஏற்காவிடில் ஒரு தேக்கம் ஏற்படும். தேங்கிய நீர் பயன்படுத்த இயலாதவாறு நாறும். கிருமிகளின் புகலிடமாக மாறும். எனவே இசங்களை பரிமாண வளர்ச்சியின் விளைவுகளாக பார்ப்பதே விஞ்ஞான பார்வையாகும்.
இஸங்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உயிர்த்தன. சில வளர்ந்தன. சில தேய்ந்தன. ஆனாலும், அவற்றின் தாக்கம் இன்னமும் கலை இலக்கியப் பெருவெளியில் வெவ்வேறு வடிவங்களில் தங்களை வெளிப்படுத்தியபடியே இருக்கின்றன.
இஸம் என்னும் சொல்லுக்குக் கிட்டத்தட்ட நேரான தமிழ்ச்சொல் இயம் எனலாம். மார்க்ஸிஸம்- மார்க்சியம், எக்ஸிஸ்டென்ஷியலிஸம்- இருத்தலியம், ஸ்ட்ரக்சுரலிசம்- அமைப்பியம் என்ற ரீதியில் இதை நாம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
கடந்து போயிருக்கும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் கலை, இலக்கிய, தத்துவ வெளியில் ஏராளமான பிரதிகள் குவிந்திருக்கின்றன. இவற்றை ஆய்வு செய்யும் வாசகன் அல்லது விமர்சகன் அவற்றைக் கோட்பாட்டுச் சட்டங்களில் போட்டு திணித்து அடக்க முயலும் யத்தனம்தான் இஸம், என்று ஒரு பொதுப்புத்தி சொல்கிறது. உன்னதமான கலை, இலக்கியப் படைப்பு என்பது இந்த கோட்பாட்டுச் சட்டங்களை மீறி நிற்பது என்று இன்னொரு பொதுப்புத்தி காலங்காலமாக கட்டமைக்கப்பட்டும் விநியோகிக்கப்பட்டும் வருகிறது.
மேஜிகல் ரியலிசம் (மாய யதார்த்தவாதம்) :
மேஜிக் ரியலிசம் என்னும் சொல் முதலில் ஓவியத்திற்கு பயன்படுத்தப்பட்டது. ஃபிரான்ஸ் ரோவின் 1925ஆம் ஆண்டு கட்டுரையான மேஜிக் ரியலிசம் பிந்தைய எக்ஸ்பிரஷனிசம், இருப்பினும் இந்த கட்டுரை இன்று நாம் புரிந்து கொள்ளும் வடிவத்தில் மாயாஜால எதார்த்தத்தை விவரிக்கிறது என்று பரவலாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
“இந்த அற்புதமான கனவு காட்சி முற்றிலுமாக மறைந்து விட்டதாகவும் ஒரு புதிய நாளின் தெளிவில் குளித்தபடி நமது நிஜ உலகம் நம் கண்களுக்கு முன்பாக மீண்டும் வெளி வருவதாகவும் நமக்குத் தோன்றுகிறது. நாம் இந்த உலகத்தை அடையாளம் காண்கிறோம் ஆனால் இப்போது நாம் கனவிலிருந்து வெளிப்பட்டதால் மட்டுமல்ல நாங்கள் அதை புதிய கண்களால் பார்க்கிறோம்.”
(Magical – Realism excerpt – essay) [இக்குறிப்பு எடுக்கப்பட்ட நூலின் பக்கம் யாது? நூல்குறிப்பு யாது?]
ஓவியம் பற்றி ரோஹ் இதை எழுதிய போது அது வேறொரு கண்டத்தில் உள்ள இலக்கியத்திற்கு பயன்படுத்தப்படும் என்று அவர் எதிர்பார்த்து இருக்க முடியாது. லத்தின் அமெரிக்க விமர்சகரும் வரலாற்று ஆசிரியருமான ஏஞ்சல் புளோரஸ் இந்த வார்த்தையை லத்தின் அமெரிக்க இலக்கியத்திற்கு முதல் முதலில் பயன்படுத்திய பெருமைக்குரியவர் என்றாலும் மிகுவல் ஏஞ்சல் அஸ்டூரியாஸ் இந்த வார்த்தையை தனது சொந்த புனை கதைகளில் குறிப்பாக மென் ஆப் மக்காச்சோளத்தில் பயன்படுத்திய போது பிரபலப்படுத்தியதாக கூறப்படுகிறது.
நூறு புராணங்களின் வாசலில்- மேஜிக்கல் ரியலிசம் :
எழுத்தாளர் முபீன் சாதிகா அவர்கள் எழுதிய 100 புராணங்களின் வாசல் தொகுதி- ஒன்றில் உள்ள பல கதைகள் மேஜிக்கல் ரியலிசம் சார்ந்து அமைந்துள்ளன.
உதாரணமாக :
● பறத்தல் பற்றிய நினைவு
● பாதரசக்குதிரை
● பொம்மை
● வண்டு
போன்ற பல கதைகள் மேஜிக்கல் ரியலிசம் அமைப்பில் நம்மை புதிய உலகிற்கு இட்டுச் செல்கின்றன.
பறத்தல் பற்றிய நினைவு :
இக்கதையில் ஆண் பெண் என இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளன, இவர்கள் இருவருக்கும் ஒரு சக்தி கிடைக்கின்றது. அவர்கள் இருவரும் நினைக்கும் நேரத்தில் வெவ்வேறு கண்டங்களுக்கு பறந்து செல்ல முடியும், இருவரும் ஒவ்வொரு இடமாகச் சென்று சுற்றி வருகின்றனர் ஒவ்வொரு இடத்திலும் ஒர் அதிசயம் நிகழ்கிறது. அதில் அவர்களுக்கு பிடிக்கும் இடங்களில் மட்டும் சில காலம் தங்குகின்றனர். மீண்டும் சில நாட்கள் சென்ற பின்பு அவர்கள் தங்கள் இடங்களை மாற்றிக் கொள்கின்றனர்.
“இம்முறை போனது தலைகீழ் பூமி நீர் இருந்தது தொட்டால் மறைந்தது மரம் செடி கொடிகளும் அப்படியே இது அவனை பெரும் அலைச்சலுக்கு ஆட்படுத்தியது ஏதாவது சிறிதாக வேண்டுமென்றால் மீண்டும் புதிய இடம் நடுவில் பொய்கை சுற்றி நிலம் அந்த இடம் ஓரளவு பிடித்திருந்தது அந்த நீரைப் பருகியவுடன் பறக்கும் நினைவு காணாமல் போனது.”
(நூறு புராணங்களின் வாசலில் – பக்கம் 13)
இக்கதை நம்முடைய பால்யப் பருவத்தில் நிகழ்வது போல் உள்ளது. நமக்கு தூங்கி எழுந்தவுடன் இறக்கை முளைத்து நாம் வானில் பறவைகளைப் போல் பறந்து வெவ்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி வருவது மற்றும் பறந்து சென்று வானத்தை தொடுவது போல் நினைத்துக் கொள்வோம் அல்லவா? அவ்வாறு இக்கதை அமைந்துள்ளது.
பாதரசக் குதிரை :
பாலைவனத்தில் குதிரை ஒன்று சுற்றி வருகின்றது. சற்று தொலைவில் குதிரைக்கு தண்ணீர் தென்படுகிறது அக்குதிரை தண்ணீரைப் பருகிய பின்பு தண்ணீரின் நிறத்தில் மாறி விடுகிறது. சற்று நேரத்தில் குதிரை வானில் மிதக்க ஆரம்பிக்கிறது, அவ்வாறே இருக்க குதிரை தண்ணீரை வெளியேற்றியவுடன் பழைய நிலைமைக்கு மீண்டும் குதிரை திரும்பி விடுவது போல் கதை அமைந்துள்ளது.
“பெரும் தண்ணீர் பாகத்துடன் நடந்து கொண்டிருந்த குதிரை அந்த நீல நீல திரவத்தை கண்டதும் வேகமாக ஓடி வந்தது. அந்த திரவத்தை பரவியது அதன் அடர்த்தியையும் நீரை குதிரையால் அதை பருக முடிந்தது முழு திரவத்தையும் பரப்பிவிட்டது கொஞ்சம் தடுமாறியது சிறிது நேரத்தில் வெள்ளை குதிரையின் நிறம் நீளமாக தொடங்கியது அந்த திரவத்தின் நிறம் அதன் உடலில் வந்திருந்தது அதுபோன்றே பளபளப்புடன் குதிரை இப்போது நிலை தொடங்கியது காற்றின் திசை கேட்ப அதன் அசைவுகள் இருந்தன நீளமானது சுருங்கியது உயரம் குறைந்தது கூடியது. குதிரை அந்த திரவத்தின் அடர்த்தியைப் பெற்றது. பாலைவனம் மணலில் நீலக்குதிரை நடந்தது.”
(நூறு புராணங்களின் வாசல் – பக்கம் 14)
இக்கதையில் கூறப்பட்டுள்ள குதிரை பாலைவனத்தில் நடந்து செல்லுதல் போன்ற நிகழ்வுகள் நவீனத்துவத்தின் உச்சமாக முடிகிறது.
முடிவுரை :
முபீன் சாதிகா ஓர் அபூர்வமான எழுத்தாளர். அபூர்வம் என்பதற்கு காரணம் ஒரே சமயத்தில் பிரமிப்பூட்டும், திகைப்பூட்டும், புரிதலுக்கு அடங்காத வெளியில் இருந்து ஒலிக்கும் எழுத்து. இதில் உள்ள நூறு கதைகளும் எந்த காலத்திலும் வகைப்படுத்த முடியாதவை மீகற்பனை(fantasy) கதைகள். அறிவியல் புனைவுக்கதைகள். ஆசிரியரின் மனதில் ஓவியங்களாக தோன்றி எண்ணச்சிதறல்களாக கதைகள் வெளிப்படுகின்றன. இக்கதைகளின் மூலம் மாயாஜால எதார்த்தத்தை தெரிந்து கொள்ளலாம், வேற்று கிரகங்களுக்கு சுலபமாக பயணிக்கலாம் வேற்று கிரகவாசிகள் நம்மில் இருந்து வித்தியாசமானவர்கள் இல்லை. கோபதாபம், பொறாமை, வன்மம், எல்லாம் அவர்களுக்கும் உண்டு பாம்புகள், மயில்கள், மைனாக்கள், எல்லாம் நம்முடன் உரையாடும். கனவில் முருகன் வருவார். நம் வேண்டுவதை கொடுப்பார், மனிதர்கள் மிருகங்களாக, பறவைகளாக மாறுவார்கள் காஃப்காவின் மெட்டாமார்ஃபஸிஸ்(உருமாற்றம்) போல. உலகம் அமானுஷ்யமானதாக நம் திட்டங்கள் எல்லாம் நம் வசத்தில் இல்லாமல் நம் மனம் நினைப்பதை செய்ய முடியாமல் நாம் எப்பொழுதும் நம்மை மீறின ஒரு சக்தியை எதிர்க்கும் போக்கும் எதிர்க்க முடியாமல் வழுவூட்சத்தை பல கதைகள் எழுப்புகின்றன.
துணைநூற்பட்டியல் :
- நூறு புராணங்களின் வாசல் – முபீன் சாதிகா
- இஸங்கள் ஆயிரம் – எம்.ஜி.சுரேஷ்
- Magical – Realism excerpt – essay
- பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் – மயிலை சீனி வேங்கடசாமி.

Leave a comment