தெலுங்குப் படைப்பு : பி. அஜய் பிரசாத்
தமிழாக்கம் : க. மாரியப்பன்

குளிர்காலப்பனி இன்னும் காற்றை விட்டுவிடவில்லை.

விடியற்காலையில் கரிய தார்ச்சாலையின்மேல் நடந்து கொண்டிருந்தேன். சாலையின் இருபுறமும் உயரமாக வளர்ந்த மரங்கள். இடுப்பு வரைக்கும் தாறுமாறாக வளர்ந்திருந்த பசும்புற்கள், காட்டுச் செடிகள். கிளைகளில் தொங்கும் பெயர் தெரியாத பூக்கள். இதே வழியில் ஒவ்வொரு நாளும் இருபத்தைந்து வயது இளைஞன் ஸ்போர்ட்ஸ் ஷூக்களை அணிந்து கொண்டு ஜாக்கிங் செய்து கொண்டு என்னைக் கடந்து செல்வான். வெள்ளை டீசர்ட் அணிந்திருக்கிற முதியவர் எனக்கு எதிரில் வந்தார். இன்னும் ஓரிருவர். எதிரில் வரும் இவர்கள் எவரிடமும் எனக்கு அறிமுகமில்லை. நேருக்கு நேராக எதிர்கொள்ளும்போது மரியாதைக்குப் புன்னகைப்பது அவ்வளவுதான். இதெல்லாம் அன்றாடம் நடப்பதே.
ஆனால், அன்றாடம் கண்ணில்படுபவர்கள் ஏன் இன்றைக்கு ஏனோ தென்படவில்லை. அறிமுகமான முகங்கள் யாராவது தென்படுவார்களா என்றவாறு நடந்து கொண்டிருந்தேன். சாலையின்மேல் நான் அடியெடுத்து வைக்கிற சப்தம் எனக்கே கேட்டுக் கொண்டிருக்கிறது.
இருந்தாற்போல சாலையின் அருகில் மரங்களின் இடையில் ஒரு வெள்ளை உருவம் தெரிந்தது. பனியில் நனைந்திருக்கிற மனிதர், ஒரு நிமிடம் நின்றார். அவர் அப்படி ரோட்டின் அருகில் மரங்களின் இடையில் எதற்கு நின்றுகொண்டிருக்கிறார் என்று புரியவில்லை. உடம்பில் வெள்ளை பைஜாமா, பாதி வழுக்கை, அவர்… சுந்தரம்! நான் நினைவுபடுத்திக் கூப்பிடுவதற்குள் அவரே என்னை அழைத்தார்.
‘ஹலோ நிரஞ்சன்!’
‘சுந்தரம்….! நீங்களா! இத்தன வருசமா எங்கயிருந்தீங்க? என்ன ஆச்சு?’
அவர் பதில் எதுவும் சொல்லாமல், ‘அதே வீட்லதான் நீ இருக்கயா…வாய்ப்பிருந்தா சாய்ந்தரம் பாப்போம். இருப்பல்ல?’ என்றார்.
‘இருக்குறது அங்கதான். சாய்ந்தரம் ஏழு மணிக்குப் பெறவு ஆபிசுலயிருந்து வீட்டுக்கு வருவன்’.
அவர் கையில் மெல்லிய ஒற்றைப் புல்லொன்று இருந்தது. அதை அவர் உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. அருகில் இருந்து பார்த்தால் மனிதரிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. முகத்தின் மேல் கோடுகள். அவரை மறுபடியும் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. அந்த நாட்களில் அவரின் அடர்த்தியான முடி அலட்சியமாக இருக்கும். இப்பொழுது கன்னம் குழி விழுந்திருந்தது. கன்னங்கள் உப்பி, உடம்பு போட்டது போல் தெரிகிறார். முடி கொஞ்சம் பின்னே நகர்ந்து நரைத்து மெல்லிய முடிகளுடன் வழுக்கை தெரிந்தது. இப்பொழுது கிட்டத்தட்ட புதிய மனிதராக.
நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். உயரமான மண்மேட்டிலிருந்து இறங்கி அவர் வேகமாக நடந்துபோனார். அவரிடம் மாலதியைப் பற்றி கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
வீட்டுக்குச் சென்ற பிறகு நினைத்துப்பார்த்தால் எல்லாம் கனவு போல் தோன்றியது. சுந்தரம் அங்கே, செடிகளின் மத்தியில் எதற்காக நின்றுகொண்டிருந்தார்? நான் அங்கேயே நின்று அவரிடம் என்ன பேசினேன்?
சுந்தரத்தை நான் கடைசியாகப் பார்த்தது ஏழு வருடங்களுக்கு முன்பு. இருந்தாற்போல ஒரேயடியாக அவர் யாருக்கும் தென்படாமல் எல்லோரையும் விட்டுத் தூரமாகப் போய்விட்டார். இத்தனை ஆண்டுகளாக எங்கேயிருந்தாரோ தெரியாது. எல்லோரும் கிட்டத்தட்ட அவரை மறந்துவிட்டார்கள். உண்மையில் நான் பார்த்தது அன்றைய சுந்தரத்தைத் தானா? இல்லை பிரமையா?
என்னை மிகவும் ஈர்த்தது, இந்த ஏழாண்டுகளில் அவரிடம் வந்த மாற்றங்களே. அவரிடம் புதிதாக வந்த மாற்றத்தை அடையாளம் காணாமல் போனேன். பழைய மனிதராகக் கூட முழுமையாக நினைவுக்கு இல்லை. நினைவாற்றல் இல்லை என்பது அல்ல. காணாமல் போவது என்பது மங்கலாகி மறைந்து போவது.
சுந்தரம் கவிஞராக எனக்கு அறிமுகம். ஒருகாலத்தில் இயக்கத்தில் ஒன்றாகச் சுற்றித் திரிந்தோம். அவரின் கவித்துவம் எல்லாம் ரத்தத்தைக் கொதிக்க வைப்பவை; இயக்கம் சார்ந்தவை; ஆவேசம் நிறைந்தவை. அவரது மனைவி மாலதி சமூக சேவகி. அவரும்கூட இயக்கக் கவிஞரே. சுந்தரம் எதற்கோ இருந்தாற்போல எழுதுவதை நிறுத்திவிட்டார். எல்லோரையும் விட்டு ஒதுங்கிவிட்டார். படிப்படியாகக் காணாமல் போய்விட்டார். மேலும் அதற்குப் பிறகு அவரை எல்லோரும் மறந்துவிட்டனர். மாலதி மட்டும் எப்பொழுதாவது தினப்பத்திரிகையில் செய்தி வடிவத்திலோ கவிதை வடிவத்திலோ தென்படுவார். எங்கிருக்கிறார் என்பது மட்டும் யாருக்கும் தெரியாது.
மேலும் ஆபீசுக்குச் செல்லும் பரபரப்பில் அவரை மறந்துவிட்டேன். பகல் முழுக்க மேசை, சுற்றிலும் காகிதங்கள். இரும்புக் கை மனிதர்கள். இவற்றுக்கு மத்தியில் அவர் எனக்கு நினைவுக்கு வரவில்லை. சாய்ந்திரம் பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்து வீட்டுக்குச் செல்லும் பொழுது போன் அடித்தது. புது நம்பர். எடுத்தால், ‘நான்தான் சுந்தரம். வீட்டுக்குப் போயிட்டுயிருக்குறயா? உன் வீட்டுக்குப் போற வழியில தான் இருக்குறன்’ என்று அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதைச் சொன்னார்.
எனக்கு ஜனங்களைப் பார்த்துக்கொண்டு அமைதியாக நடப்பதே வழக்கம். சுந்தரத்திற்காக அவர் சொன்ன இடத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். சாலையெங்கும் மக்கள். ஈக்கள், கொசுக்கள், கறையான்கள் போல. சாலைக்கு அந்தப் பக்கம் தென்படுகிற ஒயின்ஷாப்பில் ஒரே நெரிசல். கையில் மண்வெட்டி, சாமான்களுடன் கவுண்டர் முன்பு முண்டியடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிற கூலிகள். இன்னொரு பக்கத்தில் சாலையின்மேல் காதைக் கிழித்துக்கொண்டு செல்கின்ற வாகனங்களின் இரைச்சல். இவைகளுக்கு நடுவில் சாலையைக் குறுக்காகக் கடந்து செல்கின்ற மனிதர்கள். கூட்டம் கூட்டமாக மனிதர்கள்.
சிறிதுநேரத்தில் ஜனங்களைத் தள்ளிக்கொண்டு ஒயின்ஷாப் முன்னிருந்து கையில் கறுப்புப் பையுடன் வெளியே வந்தார் சுந்தரம். அவரின் வெள்ளைச் சட்டை கசங்கி இருந்தது. சாலையைக் கடந்துகொண்டே, ‘லேட்டாயிட்டா… பார்த்துக்கிட்டே இருக்குறல… கடையில ஒரே கூட்டம்’
‘சுந்தரம் …. இப்ப இது எதுக்கு?’ என்றேன் அவரின் கையில் இருந்த கறுப்புப் பையைப் பார்த்து.
‘தப்பென்ன இருக்கு ப்ரதர். கொஞ்சநேரம் அப்படியே நிஜத்துல பயணிப்போம்’ என்று சிரித்துக்கொண்டே என் தோளைத் தட்டினார். இருவரும் நடக்கத் தொடங்கியதும், ‘அப்பம் நீ எல்லாத்தையும் விட்டுட்ட போல,’ ‘இல்ல அப்பப்ப’ என்றேன். வழியில் பெட்டிக்கடையில் சிகரெட்டை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்தோம். வழியில் சுந்தரம் எதுவும் பேசவில்லை. மாறிய அவரின் முகபாவனைகளையும் உடல் அசைவுகளையும் கடந்த காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து நடந்து கொண்டிருந்தேன்.
வீட்டை அடைந்ததும் சுந்தரம் கொஞ்சம் மதுவை க்ளாஸில் ஊற்றிக்கொண்டு என் புத்தகங்களைப் பார்ப்பதில் மூழ்கிவிட்டார். நான் கட்டிலின்மேல் பின்னால் சாய்ந்து பேப்பரை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது காலிங்பெல் அடித்தது.
கதவைத் திறந்து பார்த்தால் இருட்டில் நிற்கின்ற கருப்பு உருவம். வியர்வை நாற்றம். மங்கிப்போன சட்டையில் வெளியே மோகன் நின்றிருந்தார்.
மோகன் எனக்கு எப்பொழுதும் எதிர்பாராத விருந்தினர். பகல்முழுக்க வேலைசெய்து வந்ததுபோல் சட்டை அழுக்கடைந்து சோர்வாக இருந்தார். கையில் கறுப்பு கேரிபேக். அதில் என்ன இருக்குமென்று எனக்குத் தெரியும். மோகனை வாவென்று அழைக்கும் போது வரமாட்டார். எப்பொழுது வருவாரோ தெரியாது. வருவதற்கு முன் சொல்வதும் கிடையாது. அவருக்குத் தினசரி பணிக்கான திட்டம் என்று எதுவும் கிடையாது. அவரை ஒரு சஞ்சாரஜீவி எனலாம். பகல்முழுக்க எங்காவது கூலி வேலை செய்துகொண்டு இராத்திரியில் எங்காவது தூங்குவார். வேலைக்குச் செல்ல மனமில்லாத பொழுது பகல்முழுக்க ‘அப்ஜல்கஞ்ச் லைப்ரரி’யில் அமர்ந்து புத்தகங்களைப் புரட்டுவார். சுந்தரத்தைப் போன்றே மோகனும் ஒரு கவிஞர்.
சுந்தரத்தின் கவித்துவத்தில் முழுக்க இயக்கமும், ஆவேசமும், ஹிம்சையும், ரத்தக்களரியும் நிறைந்திருந்தால் மோகனின் கவித்துவம் இன்னொரு வகையாக இருக்கும். அது எப்படி இருக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. கண்ணுக்குத் தெரியாது. பாதி தெரியும். பாதி தெரியாது. புலி ஒன்று மயக்கத்தில் தரையில் உருளுவது போல் இருக்கும். இருக்கலாம். அவரின் கவித்துவத்தில் எனக்குத் தெரியாத மீதி ஏதோ சுந்தரத்திற்குத் தெரிந்திருக்கலாமோ என்னமோ, எனக்குக் கவித்துவம் குறித்துத் தெரியாது. ஆனால், விசித்திரமாக இருவரும் பரஸ்பரம் எதிரெதிர் மனிதர்களாகத் தெரிந்தாலும் சுந்தரத்திற்கு இருக்கிற இலட்சியங்கள் மோகனுக்குக் கூட இருக்கின்றன.
மோகன் உள்ளே வந்து காலணிகளைக் கழட்டிக்கொண்டே சுந்தரத்தைப் பார்த்து ‘அட நீயும் இருக்குறயா?’ என்றார். அவரின் குரலில் கோபம் தெரிந்தது. அவர் அப்படிச் சொல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. எனக்கு இருவருமே வேண்டியவர்கள். அவர்கள் இருவரும் இதற்கு முன்பே அறிமுகமானவர்கள் என்பது எனக்குத் தெரியாது. என் மனம் ஏதோ கெடுதல் நடக்கப்போகிறது என்று சந்தேகித்தது. இப்பொழுது அவர்கள் இருவரில் ஒருவர் மட்டும் இங்கிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பிறரைப் புண்படுத்துவது எனக்குப் பிடிக்காது.
சுந்தரம் சிகரெட் புகையைக் காற்றில் ஊதிக்கொண்டே, ‘ஒன்னப் பாத்து எத்தன நாளாச்சு?’ என்றார்.
மோகன் பதில் சொல்லாமல் அடுக்களையை நோக்கி நடந்து, ‘வெங்காயம் இருக்கா?’ என்று கேட்டார். வரும்பொழுதெல்லாம் அவர் மதுவோடுகூட கோழிக்கறியும் கொண்டு வருவார்.
மோகன் கோழிக்கறியைக் கழுவிக்கொண்டிருக்கும்பொழுது நானும் சுந்தரமும் நறுக்கத் தொடங்கினோம்.
கொஞ்சநேரம் கழித்து அடுக்களையில் இருந்த அடுப்பிலிருந்து புகை வர ஆரம்பித்தது. மூவரும் சமையல் செய்துகொண்டே ஹாலில் அங்கும் இங்குமாக திரிந்து க்ளாஸ்களைக் காலி செய்தோம்.
சமையல் முடிந்ததும் அவர்கள் இருவரும் எதிரெதிராக அமர்ந்தனர். எங்கள் முன் டீபாயில் கண்ணாடி க்ளாஸ்கள், சிக்கன் துண்டுகள்.
‘அது சரி… மனுசன் இருந்தாப்புல எப்படி மாறுறானோ சொல்லு’ என்றார் மோகன் பாதிக் கண்களை மூடிக்கொண்டு. அவரின் தோரணை சுந்தரத்தைப் பயமுறுத்துவது போலிருந்தது. இருவரும் சண்டை போட்டுக் கொள்வார்களோ என்று பயந்தேன். அவர்கள் இருவருக்கும் இடையிலான சண்டை என்ன என்று எனக்குத் தெரியாது.
‘அப்படினா மாறுறது பத்தியா?’
‘இருக்கட்டும் உன் பாஷையிலே – நிலைமை எப்படி மாறுகிறது… குறைந்தபட்சம் அதையாவது சொல்லு. எனக்கு ஞானோதயம் வர வை’
சுந்தரத்தின் முகம் சுருங்கியது. ‘எனக்குத் தெரியாது. அதப் பத்தி நா எப்பயும் யோசிச்சதில்ல’ என்றார் அவர். அவரிடம் தப்பித்துக்கொள்ளும் போக்கை நான் காணவில்லை.
அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் போதை ஏறிக் கொண்டிருந்தது. நான் அதிகம் அருந்தவில்லை. மோகன் கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக்கொண்டார், பக்கத்தில் இருப்பவரைப் பயமுறுத்தும்படியாக. இப்பொழுது அவரின் தோரணை சுந்தரத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. அவர் சுந்தரத்தைவிட இருபத்தைந்து வயது சின்னவர்.
‘தெரியாதுனு சொல்றது ரொம்பச் சுலபம். நீ இந்த ஒலகத்தைவிட்டு ஓடிப்போயி ரொம்ப நாளாச்சு. மனுஷங்கள விட்டு விலகி தூரமா வாழ்ந்துட்டு இருக்க. இதெல்லாம் எதுக்குன்னு எனக்குத் தெரியணும்?’
கடந்த ஏழு ஆண்டுகளாகச் சுந்தரம் என்னவானாரோ என்று எனக்குத் தெரிந்துகொள்ள வேண்டும் போலிருந்தது. அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கவனமாகக் கேட்டேன்.
சுந்தரம் ஒரு பெருமூச்சு விட்டு, ‘ஒருநாளு… எதிர்பாராதவிதமா ஒரு சம்பவம் நடந்துச்சு.. ‘அன்னைக்குச் சாய்ந்திரம்…’ என்று சொல்லத் தொடங்கினார்.
மோகன் சிகரெட்டைப் பற்றவைத்தார்.
‘ஏழு வருசத்துக்கு முன்னால… அது கோடை காலமா இருக்கணும், எனக்குத் தேதி ஞாபகத்துல இல்ல.. விஜயவாடா, கிருஷ்ணாநதி… பிரகாசம் பாலம்.. உங்களுக்குத் தெரியும்ல அந்தப் பாலத்துல சாதாரணமா ஆட்டோ, பாதசாரிகளுக்குத் தான் அனுமதி… உண்மையிலேயே அப்பம் அங்க நா எதுக்கு போனனோ தெரியாது. அன்னைக்கு எனக்குத் தெரியாம என் காலடிகள் அனாயாசமா அந்தப் பழங்கால பாலத்துமேல போயின. வெயில் குறையும்போது பாதசாரிகளும், துர்க்கை கோயிலுக்கு வரும் பக்தர்களும் பாலத்தின் கைப்பிடிச்சுவரைப் பிடிச்சிகிட்டு பாலத்துக்குக் கீழயிருக்குற தண்ணிய பார்த்துட்டு இருந்தாங்க. நடைபாதையின்மேல் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிற பிச்சைக்காரர்கள், மங்கிய காஷாயத் துணியில் பைராகிகள், வாடிக்கையாளர்களுடன் சிரித்துப் பேசுகிற விபச்சாரிகள், பிக்பாக்கெட் திருடர்கள் அன்றைக்கு முழுக்க அங்கேயே இருந்தனர். சிலர் பாலத்தை ஒட்டிய நடைபாதையில் அமர்ந்து ஆடுபுலியாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். டப்பாவோடு கூடிய பிச்சைக்காரர்களின் காட்டமான வாசனை. அப்போது வெண்மையும் நீலமுமாக இருக்கிற சாயங்கால ஆகாயம் மெல்லமெல்லக் கறுப்பாக மாறிக் கொண்டிருந்தது.
நடந்துசெல்லும் பாதசாரியைப்போல ஓரிடத்தில் நின்று பாலத்தின் கைப்பிடிச்சுவரைப் பிடித்துக்கொண்டு கீழே பார்த்தேன். முன்னால் ஓடுகிற நீரோடை பிரவாகம். பாறைகளில் மோதித் திரும்பி நுரைகளைக் கக்குகின்ற நீர். பாலத்தின் அடியில் இருந்து வேகமாக மேலே வருகிற குளிர்ந்த காற்று. சுற்றும் சுழலையும் முடிச்சுகளையும் தள்ளிக்கொண்டு தூரமாகப் போகின்ற அலைகள்.
அடியெடுத்து வைத்து மேலும் முன்னேறிச் சென்றேன். முன்னே நடந்து செல்லும்பொழுது தரிசனத்திற்கு வந்திருந்த யாத்ரீகர்கள், பக்தர்கள், பிக்குகள் எல்லோரும் மறைந்து பாலத்தின்மேல் குடியிருப்பவர்கள் கண்ணுக்குத் தெரிந்தனர். மனிதர்களை உற்றுநோக்குவது முதலில் இருந்தே எனக்கு வழக்கம். இந்த உற்றுநோக்குவது என்பது ஒரு குறிப்பிட்ட வேலை அல்ல. ஆனால், அது தானாகவே நடக்கும்.
தலை முழுக்கப் பூ வைத்திருக்கிற ஒரு வேசி வாடிக்கையாளருடன் பேசிக்கொண்டு நதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நடைபாதையில் படுத்திருக்கிற பைராகி ஒருவர் கால்மேல் கால்போட்டுக்கொண்டு தலைமேல் தன் கையை வைத்துக்கொண்டு தீவிரமான யோசனையில் இருந்தார். சில இளைஞர்கள் வெவ்வேறு வண்ண வண்ண உடைகளுடன் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் அனைவரும் அழுக்காக இருந்தனர். அவர்கள் எல்லோரும் அழுக்காக இருந்தனர் என்றாலும் அவர்கள் எல்லோரும் அந்த மாலைப்பொழுதில் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒரு கறுத்த இளைஞன் நடைபாதையின் ஓரத்தில் அமர்ந்து மொபைல் போனில் எப்.எம் ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தான். அவன் கையில் வண்ணக் கடிகாரமும் கழுத்தில் ஒளிவீசுகிற சங்கிலியும் இருந்தன.
அங்கேயிருந்தவர்கள் எல்லோரும் சந்தோசமாகவே இருந்தனர். வாடிக்கையாளர்களுடன் சந்தோசமாக நேரத்தைக் கடத்தும் வேசி. சிரித்துத் துள்ளிக்குதிக்கும் இளைஞர்கள். அவர்கள் அணிந்திருக்கிற ஆடைகள். அவற்றின் டிசைன்கள். இன்றைய நாகரிகம். வண்ண வண்ண ஆடைகள். நவநாகரிக ஆடைகள். அவை தரத்தில் தாழ்ந்தவையாக இருக்கலாம். ஆனால் தோற்றத்தில் நவீனமானவை. அந்த நிமிடத்தில் ‘யாராகயிருந்தாலும் சரி சிறிது காலத்திற்குப் பிறகு அதைத் தூக்கி எறிந்துவிடுவார்கள்’ என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது.
அந்த நொடிப்பொழுது, அந்தக் காட்சிகள், அந்த மனிதர்கள், அவர்களின் வேடங்கள் மனிதர்களின் மத்தியில் இருக்கிற எல்லைகள் அழிக்கப்பட்டுவிட்டன என்னுள். அதற்கு முன்னிருந்த என் எண்ணங்கள், இலட்சியங்கள் அர்த்தமற்றவையாகத் தோன்றின.
நான் பாலத்தின் இந்தப் பக்கத்தின் கடைசி வரை நடந்தேன். அப்பொழுது அந்தப் பக்கத்தில் சூரியன் அஸ்தமனத்தில் விழுந்துவிட்டான்.
அப்பொழுது எரிந்த தெருவிளக்கு வெளிச்சம் வேசி போட்டிருக்கிற பவுடர்போல மங்கலாக இருந்தது. பாலத்தின் கடைசியைச் சென்று அடைந்ததும், திரும்பிப் பின்னால் நடக்கத் தொடங்கினேன். அப்பொழுது ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. என் வாழ்க்கையை மாற்றிய மறக்க முடியாத சம்பவம். நான் அங்கிருந்து இங்கு வந்தபொழுது யார் வேலையாக இருந்தார்களோ நான் திரும்பி வந்தபொழுது என்னை நோக்கிப் பார்த்தார்கள். பிச்சைக்காரர்கள், பைராகிகள், பெண்கள், ஆடவர்கள், வேசிகளின் வாடிக்கையாளர்கள், வேசிகள் எல்லோரையும் தாண்டிக்கொண்டு நான் நடந்து முன்னே சென்றபொழுது என்னைப் பார்த்ததும் எழுந்து நின்றார்கள். நான் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடக்கத் தொடங்கினேன். இருந்தாற்போல எனக்கு ஒரு விசயம் புரிந்தது. என்னைப் பார்த்து எழுந்து என் பின்னால் நடந்து வருகிறார்களோ என்ற உணர்வு தோன்றியது. அப்படிப்பட்ட உணர்வு தோன்றிய உடனேயே இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினேன். என் சரீரம் நடுங்கத் தொடங்கியது. பின்னாலிருந்து யாரோ சிரிப்பது கேட்டது. இன்னும் பேச்சுகளும். எதிராக வீசும் காற்றுக்கு என் ஆடை, தலைமுடி மேலே எழுந்தன. மேலும் யாரோ ஒருவர் என்னோடு அருகில் நடக்கிறார் என்று என் ஓரப் பார்வைக்குத் தெரிந்தது. காற்றில் பெரிய பெரிய கொக்குகள் பறக்கின்றன. எவரோ என் பின்னால் முடிந்த அளவிற்கு அருகில் வந்து தோளைப் பிடித்துக்கொண்டதைப் போல இன்னும் முன்னோக்கி நின்று பெரிதாக அலறினேன். ஒரே ஒரு கொக்கு, ஒரே ஒரு சிறகடிப்பில் ஆற்றைக் கடந்த அனுபவம் அது. இது எப்படி நடந்ததோ எனக்குத் தெரியாது. அந்தக் கடைசியிலிருந்து இந்தக் கடைசி வரை’
‘அன்னைக்கு வீட்டுக்கு எப்படிப் போனேனோ தெரியாது’
சுந்தரம் ஒரு நொடி நின்று மேலும் சொல்லத் தொடங்கினார். டியூப்லைட்டு வெளிச்சத்திலே அவரின் முகம் வியர்வையில் பளபளத்தது.
‘அன்றைக்கு என்ன நடந்தது என்று தெரிந்துகொள்வதற்கு மறுநாள் அங்குச் சென்றேன். புதிதாக எதுவும் தோன்றவில்லை. எல்லாம் வழக்கம்போலவே இருந்தது. அவரவர் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு…’
இது நடந்த பிறகு பல நாட்களுக்கு நான் நோய்வாய்ப்பட்டேன். இதிலிருந்து மீண்டுவர பலநாட்கள் ஆகின. உடைந்த ஒரு கற்சிலை திரும்ப அசல் உருவத்திற்கு மாறுவதற்கு எவ்வளவு கஷ்டமாக இருக்குமோ அதைப்போல சுக்குநூறாகிய என் மனோபிரபஞ்சம் திரும்பப் பழையநிலையை அடைய அவ்வளவு கஷ்டமாகியது. உண்மையில் அது சாத்தியமில்லை. என்னை நான் மீண்டும் கொண்டுவருவதற்கு எதுவும் இல்லை. எந்த முட்டுக்கட்டையும் இல்லை. ஒன்றுமில்லாத புனர்ஜென்மம். என்னை நான் நினைவில் கொள்ளாத உயிர்த்தெழுதல். மீண்டும் நான் இந்தப் பிரபஞ்சத்தில் புதிதாக வாழத் தொடங்கினேன்.’
‘அப்புறம் எங்களை, குறைந்தபட்சம் உங்களவர்களை, குறைந்தபட்சம் மாலதியையாவது சந்திக்க முயற்சி செய்யவில்லையா?’ என்றேன் நான் மத்தியில் தயார்செய்துகொண்டு.
‘இல்லை’ என்றார் சுந்தரம் உடனே.
‘உண்மையில் அப்பொழுதிலிருந்தே என்னை நினைவில் வைத்திருப்பவர்களிடமிருந்தும், நான் நினைவில் வைத்துக்கொண்டிருந்தவர்களிடமிருந்தும் விலகிச் சுற்றத் தொடங்கினேன். கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் பெரிய வித்தியாசம் உள்ளது. நாம் நினைக்கும் உலகக் கண்ணோட்டத்திற்கு அப்பால் எப்பொழுதும் ஏதோ ஒன்று இருக்கிறதென்று, நாம் நம்புவது எல்லாம் அவநம்பிக்கையை மட்டுமே, நம்புவதற்கு யாரும் இல்லையென்று, உண்மையில் நாமே இல்லையென்று…’
‘தற்கொலை..’ என்றார் இருந்தாற்போல மோகன் பிரிக்கப்பட்ட புன்னைகையுடன்.
‘புனர்ஜென்மம்…’ என்றார் சுந்தரம் மோகன் சொன்னதைப் பொருட்படுத்தாமல்.
‘நடப்பவை எல்லாம் நம் அனுமதியைப் பெற்றுக்கொண்டு நடக்காது. அன்றைக்கு அந்தச் சம்பவத்திற்குப் பிறகு எனக்குள் உலகத்தைப் பற்றிய பார்வை மாறியது. இதெல்லாம் நடப்பதற்கு எனக்குள் எந்த மோதலும் உள்ளுக்குள் யுத்தமும் நடக்கவில்லை. நடந்தது கனவா நிஜமா தெரியாது. ஆனால், அன்றைக்கு நான் அங்கே இருந்தேன் என்பது மட்டும் தெரியும். என்னில் வந்த மாற்றம் என் ஈடுபாடு இல்லாமல் நடந்தது. அது ஒரு கண நேரத்தில் நடந்ததாக இருக்க வேண்டும். மோகன் சொன்னதுபோல அது தற்கொலையாகக் கூட இருக்கலாம். அதற்கு நான் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. என் இதயம் மேலும் பாறைபோல் ஆனதற்கு ஆனந்தப்படவேண்டும். இறந்தவர்களின் ஆத்மாக்கள் கணக்கில்லாதது என்று எனக்குத் தெரியும்’
‘சரி.. அது அப்படி நடந்துவிட்டது. நான் மாலதி எப்பொழுது திரும்பி வருவாள் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்’
பேசி முடிந்ததும் சுந்தரம் பின்னால் சாய்ந்தார். அவரின் க்ளாஸ் காலி ஆனது. வியர்வை காரணமாக அவரின் வழுக்கைத்தலை டியூப்லைட்டு வெளிச்சத்தில் பிரகாசித்தது.
நான் மோகன் பக்கம் பார்த்தேன்.
எனக்குப் புதிதாக மோகனின் கண்களுக்குக்கீழ் கறுப்புக்கோடுகள் இருப்பதைக் கவனித்தேன். அவர் தன் க்ளாஸில் கடைசியாக இருந்ததைத் தொண்டையில் ஊற்றிக்கொண்டு, ‘ஆனால், அவங்கல்லாம் பாக்குறதுக்குத் திருடங்கமாதிரி தெரியுறாங்க’ என்றார்.
‘திருடனோ இல்லையோ தெரியாது ஆனா அந்த நொடியில மனுஷங்கல்லாம் ஒரேமாதிரி… இல்லை இல்லை.. மனித எதிர்வினைகளும் ஒரேமாதிரியாகத் தெரிகிறது’
சுந்தரம் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் அங்கிருந்து எழுந்தேன். அவர்கள் இருவரும் ஒரே விசயம் குறித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர…. இருவரும் சொல்வது ஒன்றல்ல. மோகன் சொல்வது என்னவோ எனக்குத் தெரிந்ததுபோல் தோன்றியது. சுந்தரம் சொல்வது என்னவோ இன்னும் தெரியவேண்டும். ஆனால் நினைவாற்றல் ஏன் இப்படி மண்ணாக மாறுகிறது என்று அவரிடம் இன்னொருமுறை எப்பொழுதாவது கேட்கவேண்டும்.
மோகன் டேபிள் மீது சாய்ந்தார். அவரது வலது கை ஒவ்வொருமுறையும் சுருங்கிக்கொண்டு முஷ்டி இறுகியது.
‘சரி.. கடைசித் தடவ கேக்குறன். ஒனக்குத் தெரியுமா.. தெரியாதா… இல்லனா தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறயா, இல்லைனா உண்மை எதும் தெரியாம தெரிஞ்சமாதிரி நடிக்கிறயா..?’ மோகனின் வார்த்தைகள் தடைபட்டு தடைபட்டு வருகின்றன. கண்கள் செருகின.
‘இன்னும் என்ன சொல்லணும்னு சொல்லு. நீ நாடகம்னு நினைச்சா என்னால ஒன்னும் செய்ய முடியாது. எனக்கு இதுவர தான் தெரியும். தெரிந்து சொல்லமுடியாதது ஒன்னும் இல்ல. வேற எதையாவது மாத்தணுமா..’
அதன்பிறகு என்ன நடந்ததென்றால், நேற்று ஒரு விதமாக உணர்ந்ததெல்லாம் இன்று ஒரு விதமாக உணரமுடிகிறது. என்னை மூடிய எத்தனையோ ஆழமான விசயங்கள் இதயத்திலிருந்து எளிதாக வெளியே சென்றுவிட்டன. எல்லாம் புதிதாகத் தெரியத் தொடங்கியது. கடைசியில் மனிதர்கள் கூட. அப்பொழுதுவரை நான் எழுதிய கவிதைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பயம் வந்தது. அவற்றை எரித்தேன். நேற்றைய ஆழமான அனுபவங்களை இன்றைக்குப் பார்த்தால் அதென்னவோ வேறொரு உலகமாகத் தோன்றியது. தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று பலமுறை நினைத்தேன். அதிலிருந்து வெளியே வருவதற்கு நீண்ட காலம் பிடித்தது.
சுந்தரம் நீண்டநேரம் பேசிக்கொண்டு மௌனமாக அமர்ந்திருந்தார். அவருக்கு முன்பாக மோகன் டேபிள் முன் சாய்ந்திருந்தார். அவர்கள் இருவரில் யாராவது ஒருத்தர் பேசுவாரா என்று எதிர்பார்த்திருந்தேன்.
‘நீ துரோகி’ என்றார் கடைசியில் மோகன். அதுவே அவருடைய கடைசி வார்த்தை.
சுந்தரம் எழுந்து அடுக்களைக்குப் போய் மோகனுக்காகத் தட்டில், சோறு, கறியைக் கலந்துகொண்டுவந்து வைத்தார். அவர்களின் உரையாடல் இனி முடிந்துவிட்டதாகத் தோன்றியது.
சுந்தரம் தட்டை, டேபிள்மீது வைத்து மோகனை இரண்டு கைகளாலும் பிடித்தபடி சென்றார். மோகன் வேகமாக அவரின் கையை விடுவித்துக்கொண்டார். ஆனால், அவரின் சரீரம் அவரின் கட்டுப்பாட்டில் இல்லை. அவரைச் சுந்தரம் இரண்டு கைகளாலும் சோபாவில் இருந்து தூக்கி தோளின்மேல் ஏற்றிக்கொண்டார். அவரை நாங்கள் இருவரும் பெட் மீது படுக்க வைத்து போர்வையால் போர்த்தினோம்.
‘நீங்கன்னா மோகனுக்கு எதுக்குக் கோபம்?’ என்றேன் கட்டில்மேல் அமர்ந்து.
‘நான் என்னமோ காட்டிக்கொடுத்ததாகவோ, துரோகம் செய்ததாகவோ நினைக்கிறார். அனுபவப்பட்டால் ஒழிய சில விசயங்கள் எவ்வளவு விளக்கினாலும் புரிந்து கொள்ள முடியாது. அதற்கு மொழி கிடையாது’ என்றார் சுந்தரம்.
நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
மோகன் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார். போர்வையின் மடிப்புகளுக்கு மத்தியில் அவரின் சரீரம் தெரிந்தது. உடல் இல்லாத தலை, தலையணைமேல் தூங்குவது போல் உள்ளது. விழித்திருந்த சுந்தரம் கூட அமைதியாக இருந்தார்.
எனக்கு இரவு முழுவதும் நிம்மதி இல்லாத தூக்கம். எப்பொழுது தூங்கினேனோ தெரியாது. முழிப்பு வந்தபொழுது அவர்கள் இருவரும் இல்லை. வீடு முழுக்கச் சுத்தம் செய்து எப்பொழுதும் போலவே இருந்தது. டீபாய் மேல் மூன்று கண்ணாடி க்ளாஸ்கள் இருந்தன. வெளியே இன்னும் முழுமையாக விடியவில்லை.
எழுந்து ஆடையணிந்துகொண்டு வெளியே வந்தேன். கரிய தார்ச்சாலை. இன்னும் தெரிந்த புதிய முகங்கள் ஏதாவது தென்படுகிறதா என்று நடந்துகொண்டிருக்கிறேன்.

                       

Leave a comment

Trending