பதில்களின் நாயகர்கள்
ஜி. சிவக்குமார்


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனிடம், அவன் தோள்களில் தொங்கிக் கொண்டிருந்த வேதாளம் அடுத்த புதிர்க் கதையைச் சொல்ல ஆரம்பித்தது.
ஒரு காட்டு வழியில் இரு பெண்களின் அழகிய காலடிச் சுவடுகளைக் கண்ட மன்னனும், இளவரசனும் அவற்றில் சிறிய காலடியுடைய பெண்ணை மகனும், பெரிய காலடி உடைய பெண்ணை தந்ததையும் மணம் புரிந்து கொள்வதாக நிச்சயிக்கிறார்கள். அந்தக் பெண்களைக் கண்ட அவர்கள் அதிர்கிறார்கள். காரணம், சிறிய காலடிச் சுவடு அம்மாவுடையது. பெரிய காலடிச்சுவடு மகளுடையது. இருப்பினும் முன்பு தங்களுக்குள் தீர்மானித்தபடியே திருமணம் செய்து கொள்கிறார்கள். சிறிது காலத்தில் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இளவரசனுடைய அப்பாவுக்கும் அந்த மகளுக்கும் பிறந்த குழந்தை, இளவரசனுக்கு என்ன உறவு முறை? சொல் என்கிறது. இதுவரை அத்தனை கேள்விகளுக்கும் அலட்சியமாகப் பதிலளித்த விக்கிரமாதித்தன் திகைக்கிறான். சிரித்த வேதாளம் தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறது.
சிறந்த கறுப்பு வெள்ளை ஒளிப்பதிவு (பி.எஸ்.லோக்நாத்), சிறந்த திரைப்படப் பெண் பாடகர் (வாணி ஜெயராம்), சிறந்த தமிழ்மொழித் திரைப்படம் என 1975ஆம் ஆண்டுக்குரிய மூன்று தேசிய திரைப்பட விருதுகளையும், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் (கே.பாலச்சந்தர்), சிறந்த நடிகர் (கமல்ஹாசன்), சிறந்த நடிகை சிறப்பு விருது (ஶ்ரீவித்யா) என நான்கு பிலிம்பேர் விருதுகளையும் வென்ற, 1976இல் தெலுங்கிலும் 1984இல் இந்தியிலும் எனப் பல மொழிகளில் திரும்ப எடுக்கப்பட்ட, ரஜினிகாந்த் அறிமுகமான, 1975 ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழில் வெளியான அபூர்வராகங்கள் படத்தின் அஸ்திவாரம் இதுதான். இதன் மேல்தான் திரைப்படம் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டிருக்கிறது.
அப்பாவான மகேந்திரனை வெறுக்கும் புரட்சிக்கார பிரசன்னாவுக்கு, கர்நாடக இசைப் பாடகியான பைரவி அடைக்கலம் தருகிறாள். தன்னை விட வயதில் பெரியவளான அவளது அன்பை, காதலாக்க முயல்கிறான் பிரசன்னா. ஒரு கட்டத்தில் பைரவியும் அதற்கு உடன்படுகிறாள்.
தான் ஒரு தத்துப்பிள்ளை என்று நம்பி அம்மாவை வெறுத்துப் பிரிந்த பைரவியின் மகள் ரஞ்சனி, பிரசன்னாவின் தந்தையான மகேந்திரனைச் சந்திக்கிறாள். மனைவியையும் இழந்து, மகனையும் பிரிந்திருந்த அவர் மேல் அவளுக்கு ஏற்பட்ட இரக்கம் காதலாக மாறுகிறது.
இதற்கிடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பைரவியின் கணவன் பாண்டியன் திரும்ப பைரவியின் வாழ்வில் பிரவேசிக்கிறான்.
இறுகின இத்தனை முடிச்சுக்களும் எப்படி அவிழ்கின்றன என்பதைச் சொல்கின்ற திரைப்படம்தான் அபூர்வ ராகங்கள். இந்தத் திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் அற்புதமானவை.
‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி’
பாடலில்,
‘எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் நீ
எனக்காக உணவு உண்ணல் எப்படி நடக்கும்?
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று’
என்ற அழகிய வரிகள் எத்துணைப் பெரிய உண்மையைப் பேசுகின்றன.
‘அதிசய ராகம் ஆனந்த ராகம்’ பாடலில்
‘ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி’
என்று பிரசன்னா தனது காதலைச் சொல்கையில் அதிர்ந்து, அவன் கன்னத்தில் அறைகிறாள் பைரவி.
முறை தவறிய திருமணங்களால் விளையும் உளவியல் சிக்கல்களையும், அந்த உறவின் வழிப் பிறந்த குழந்தைகளின் உறவுச் சிக்கல்களையும் பாடுகிறது இந்தப் பாடல்.
‘கைகொட்டி சிரிப்பார்கள்
ஊரார் சிரிப்பார்கள்
விளையாட்டு கல்யாணமே தரும்
விபரீத உறவாகுமே
தலைமாறி கால் மாறுமே – அங்கு
சொந்தங்கள் தடுமாறுமே’
நகர்ந்து நகர்ந்து நகர்ந்து மேலே உச்சிக்கு ஏறுகிற திரைப்படத்தில், முழுக்க முழுக்க கேள்விகளாலேயே அமைந்த இறுதிப் பாடல் காட்சிகளும், பாடல் வரிகளும், இசையும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நம்மைச் சுழற்றி எறிகின்றன.
‘கேள்வியின் நாயகனே – இந்தக்
கேள்விக்கு பதில் ஏதய்யா?
இல்லாத மேடை ஒன்றில்
எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் – நாமே
எல்லோரும் பார்க்கின்றோம்’
மனித வாழ்வினைக் குறித்த எத்தனை ஆழமான, எளிய பார்வை,
பைரவி, பிரசன்னாவிடம்தான் பாடல் வழி பேசுகிறாள். பிரிந்திருந்த தன் மகள் தன்னிடம் வந்து சேரும் போதுதானா ‘இப்படி ஒரு நிறைவேற வாய்ப்பில்லாத கனவுடன் நீயும் வர வேண்டும்?’ என்பதை எப்படிக் கேட்கிறாள் பாருங்கள்.
‘பசுவிடம் கன்று வந்து பாலருந்தும் – கன்று
பாலருந்தும்போதா காளை வரும்?’
ஏற்கனவே மணமான தன்னுடன் பிரசன்னா வாழ நினைப்பதன் அபத்தத்தை இப்படிச் சொல்கிறாள் பைரவி. இந்த வரிகள் ரஞ்சனிக்கானதும்தானே?
‘சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் – கொஞ்சம்
சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம்.
தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா?
வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா?’
கச்சேரியில் பாடிக் கொண்டிருக்கும் பைரவியிடம் ஒரு சிறு பெண் துண்டுச் சீட்டொன்றைத் தருகிறாள். வழக்கமான விருப்பப் பாடல் என்று நினைத்து, அதைப் பிரிக்கிற பைரவி மிகப் பெரிய ஆனந்த அதிர்ச்சியடைகிறாள்.
உடன் வாழ்ந்து, ஒரு குழந்தையையும் தந்து அவள் வாழ்விலிருந்து மறைந்து விட்ட அவளது கணவன், திரும்ப வந்து அவளிடம் தன் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிற கடிதம் அது. அவனைத் தேடி அலைபாயும் கண்களுடன் பாடுகிறாள்.
‘தலைவன் திருச்சானூர் வந்து விட்டான் -மங்கை
தர்மதரிசனத்தை தேடுகின்றான், தேடுகின்றான்
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ – மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?’
உணர்ச்சிப் பெருக்கில் பாடலைத் தொடர முடியாமல், மேடையில் கலங்கித் தடுமாறும் பைரவிக்குத் துணையாகப் பாடலைத் தொடர்ந்து பாடியபடி, மகள் தாயின் அருகில் வந்து அமர்கிறாள். பிரிவுக்குப் பின் சந்திக்கும் அம்மாவுக்கும் பெண்ணுக்குமான உரையாடலாகத் தொடரும் பாடலில் உணர்ச்சி அலைகள் பொங்கிப் பிரவகிக்கின்றன.
‘ஒரு கண்ணும் மறு கண்ணும்
பார்த்துக் கொண்டால். . .
பார்த்துக் கொண்டால். . . .
அவை
ஒன்றோடு ஒன்று சொல்லும்
சேதி என்ன?
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்து விட்டால்.
அவை
இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன?
பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே நமது
வேதம்தனை மறந்து நடக்கும் முன்னே
கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன
உன்னை காண பிழைத்திருந்தேன் வேறு என்ன
உடல் எப்படி?
முன்பு இருந்தபடி
மனம் எப்படி?
நீ விரும்பும்படி’
தாயும் மகளும் திரும்பவும் ஒன்று சேர்ந்து விட்டனர். அந்த மகிழ்வில், தன் தந்தையுடன் சேரும்படி பிரசன்னாவை வேண்டுகிறாள் பைரவி.
‘பழனி மலையில் உள்ள வேல்முருகா – சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா. .
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா -கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்திரு முருகா’
மனம் வருந்தும் பிரசன்னா தன் தந்தையுடன் இணைகிறான்.
என்ன ஒரு பிரமிக்க வைக்கும் பாடல் வரிகளின் கோர்ப்பு.
இனி இந்தப் பாடலைப் படமாக்கிய கே. பாலச்சந்தரின் நுட்பங்களைப் பார்ப்போம்.
பைரவி பாடும் ‘கேள்வியின் நாயகனே’ என்ற வரிகள், இறுகிய முகத்துடன் மிருதங்கம் வாசிக்கும் பிரசன்னாவிடம் குவிகின்றன.
‘தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா?
வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா?
கதை எப்படி? கதையின் முடிவெப்படி?’
என்று பைரவி கேட்கையில் பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் பிரசன்னா வாசிப்பதை நிறுத்தி விட்டு எழுந்து சென்று விடுகிறான்.
கணவனின் வருகையை அறிந்து, அதிரும் மிருதங்கத்துக்கு இசைந்து, அசைந்து அவனைக் கூட்டத்தில் தேடித் திரியும் பைரவியின் விழிகள், இந்த வரிகளைத் தட்டச்சு செய்யும் போது கூட என் நினைவிலேயே இருக்கின்றன.
‘பதிலேதம்மா?’ என்ற வரிகளுடன் மகள் வந்து பைரவியின் அருகில் அமர்ந்து உடன் பாடுகிற கண்ணீரும், சிரிப்பும் நிறைந்த அந்த 94 வினாடிகள், அடடா, அடடா.
‘பிடிவாதம்தன்னை விடு திருமுருகா கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்திரு முருகா’
என்ற வரிகளைக் கேட்டு தனது அருகில் அமர்கிற பிரசன்னாவின் கையை அழுந்தப் பற்றிக் கொள்கிறார் பிரசன்னாவின் தந்தை. இதே போல் மகளின் கையையும் பைரவியும் பற்றிக் கொள்கிறார். கைகளைப் பற்றிக் கொள்கிற ஒரு சாதாரண செயல் இந்தப் பாடலில் எத்துணை முக்கியத்துவம் பெறுகிறது.
அறிமுக ரஜினி, கமல், ஸ்ரீவித்யா, ஜெயசுதா, மேஜர் ஏன் ஒரே ஒரு டைட் குளோஸ் அப் வைக்கப்பட்டுள்ள பக்கவாத்தியப் பெண், வாணி ஜெயராம் மற்றும் பி. எஸ். சசி ரேஹா என அத்தனை பேரும் எத்தனை அழகு.
மிருதங்கம், வயலின் உள்ளிட்ட அத்தனை இசைக்கருவிகளும் எவ்வளவு அழகாக பாடலோடு, காட்சியோடு ஒத்திசைகின்றன.
பாலச்சந்தரை, கண்ணதாசனை, எம்.எஸ்.வி.-யை, ‘பதில்களின் நாயகர்கள்’ என்று நான் சொன்னால் நீங்கள் என்ன மறுக்கவா போகிறீர்கள்?

Leave a comment