புலமை மரபின் விடுதலை வேட்கை:மொழி விடுதலையும் தனித்தமிழ் இயக்கத் தோற்றமும்

இரா.மோகனவசந்தன்,
முனைவர்ப் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
மாநிலக்கல்லூரி.

மொழி என்பது சமூகக் கூட்டுவாழ்க்கையின் விளைபொருளே என்கிற பாடத்தைச் சமூக அறிவியல் (Social Science) வழங்குகிறது. இது ஒரு தொடக்கநிலைப் பாடமே. இந்தப் பாடமும் கருத்துப் பகிர்வு நிலையில் ஒலி வடிவாகத் திகழும் பேச்சுமொழியைத் தரவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வரையறையே. ஆனால் அது எழுத்தாக வரி வடிவில் மாறுகிற போதே அதன் பண்புகளும் ஆற்றல்களும் பழைய வரையறைக்குள் மட்டும் அடங்கிவிடாத, சிக்கல் மிகுந்த கூறுகளை நமக்கு அறிமுகம் செய்கின்றன. மொழியின் எழுத்து வழக்கே நிகழ்வு, இறப்பு, எதிர்வு என்கிற முக்காலத்தையும் தொட்டுக்கொண்டு நிற்கிறது. ஒரு மொழி பேசும் கூட்டத்தின் மரபுகளைத் திரிபடையாமல் கொண்டு செலுத்தும் எழுத்துப் பரிமாணத்தையே தொல்காப்பியம் ‘மயங்கா மரபு’ என்கிறது.
இத்தகைய மயங்கா மரபுக்கு உறுதியளிப்பதாக நம்பப்பட்ட எழுத்து வழக்கிலேயே ஒரு முந்நூறு ஆண்டுகள் வடமொழியின் தாக்கம் ஏற்படுத்தப்பட்டு மரபு மயங்க வைக்கப்படுமானால் அம்மொழிக்கூட்டத்தைச் சேர்ந்த புலமைக்குழு அத்திட்டமிட்ட திரிபை எப்படிப் பார்க்கிறது? அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது? அந்த எதிர்வினைக்கு எத்தகைய முறையியல்களைக் கையாளுகிறது? என்பதெல்லாம் சமூகவியல் ஆய்வுக்குட்பட்ட புதுப் பகுதிகளாகும். இந்தப் பின்னணியிலேயே தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றத்தையும் அதன் இயங்கியல் அல்லது இயங்காவியல் போக்கையும் காண வேண்டும்.
இவற்றுள் தனித்தமிழ் என்பதன் சமூகப் பகுப்பாய்வு, தற்சார்பை மொழிக்களத்திலிருந்து தொடங்கிய மறைமலையடிகளார் (இனி வரும் இடங்களில் அடிகளார் என்றே குறிப்பிடப்படும்), அவர் மீதான முற்போக்குச் சமூகத்தின் பொதுப்புத்தி, அடிகளார் x ஆறுமுக நாவலர், அடிகளார் x உ.வே.சா அடிகளார் – பாவாணர், தனித்தமிழ் இயக்கவாத தன்மையின் இயங்காவியல் போக்கு என்பதாக அடிகளாரின் இயக்கவாதச் செயல்பாடுகள் குறித்து இக்கட்டுரை ஆராய முனைகிறது.
குறுக்கல்வாதமும் மெய்மையும்
எழுத்து வழக்கில் ஏற்படுத்தப்பட்ட திரிபு என்றவுடன் எழுத்தளவில் (கிரந்தம் கலந்து) சொல்லளவில் (சமசுகிருதச் சொல் கலந்து) நடையளவில் (வைதீகப் பிரதிகளின் மேற்கோள் காட்டி) என்று பலரும் இவ்வரலாற்று நேர்வைக் குறுக்கிப் புரிந்துகொள்வதைக் காண முடிகிறது. மெய்மையில் இக்கலப்பிற்குக் காரணமாக அமைந்து வந்திருப்பது புராணிக, இதிகாச, பிரபந்த வகை இலக்கிய ஆக்கங்களே என்பது தமிழியலில் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை. இந்தப் புராணிக இலக்கிய உள்ளடக்கங்களின் விளைவாகப் பாதிக்குப் பாதிச் சமசுக்கிருதமும் தமிழும் என்கிற முறையில் உருவானது மணிப்பிரவாள மொழி என்பதும் எந்த ஆய்விலும் உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு உருவாக்கிக் கொள்ளப்பட்ட பிற்கால மணிப்பிரவாள மொழியைக் கொண்டு, தொன்மைக்காலத் தமிழ்ச் செவ்விலக்கியங்களுக்குப் புராணீக, இதிகாசச் சார்புள்ள உரைகளை எழுதுவதன் வாயிலாக மொத்த தமிழிலக்கியத் தொகுதியுமே மணிப்பிரவாள மொழிக்குட்பட்டது என்கிற தோற்றம் உருவாக்கித் தரப்படுகிறது. இதை வைத்தே தமிழைச் ‘சமசுகிருதம் போட்ட குட்டி’ என்பது போன்ற கதைகளை எல்லீசு, கால்டுவெல் ஆகியோர் வரும்வரை உருட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்குச் சமூகத்தளத்தில் இந்து ஒருமையாக்கமும் படைப்புத்தளத்தில் வட வைதீகத்தை நகல் செய்யும் தமிழ்ப் பக்தி இலக்கியமும், உள்ளும் புறமுமாக அசைக்க முடியாத ஆப்புக் குச்சிகளாகத் தொழிற்பட்டன. இக்கலப்பு மொழி வெறும் மொழியைப் பற்றிய தனித்த சிக்கலாக நிற்கவில்லை.
கீழைத்தேயவியலின் இருமுனைகள்
18, 19ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மதச்சார்பின்மையின் எழுச்சி காரணமாக மனிதச் சமூகங்களை மொழி, இன அடையாளங்களின் அடிப்படையில் வரையறை செய்யத் தொடங்கியிருந்த காலனியவாதிகளுக்கு, இங்கிருந்த மொழிக்கலப்பு சார்ந்த சமூகக் குழப்பநிலை, இந்தியத் துணைக்கண்டத்தை நிலவழித் தேசியமாகவும், வைதீகப் பண்பாட்டுத் தேசியமாகவும், பிரிட்டீஷ் அரசாங்கச் சட்டத்திற்கு மூலாதாரமான நெறிப்படுத்தும் தொன்மைப் பிரதிகளை வழங்கிய அடிப்படையிலான பெருந்தேசியமாகவும் வரையறுத்துக்கொள்ளும் தொடக்கக் காலப் பிறழ்வுக்கு ஆட்படுத்தியது. கீழைத்தேயக் காலனிய அறிவாளர்களில் ஆரிய மேட்டிமைவாதத்திற்குத் தொடக்கத்தில் சாய்வாகச் செயல்பட்ட மாக்ஸ்முல்லர், வில்லியம் ஜோன்ஸ் ஆகியோரின் அணுகுமுறை இதற்கு ஒருமுனைக் காரணமாக அமைந்தது.
மறுமுனையில் இந்தியாவின் அனைத்து மொழிகளுமே இடைக்காலம் முழுவதும் சமசுகிருத ஆரியப் பண்பாட்டால் அடையாளக் கலப்புக்கு ஆட்படுத்தப்பட்ட சீரழிந்த யதார்த்த நிலையும் ஒரு காரணமாகும். இந்தச் சூழலில் எதிர்பாராத ஒரு நல்வாய்ப்பாக எல்லீஸ், கால்டுவெல், ஜி.யு.போப் போன்றோரின் தமிழ்நிலைப்பட்ட ஆய்வியல் பங்களிப்புகள் வெளிப்பட்டு, அடுத்தடுத்து வந்து, காலங்களில் சமூக அறிவியல்படி, இங்குள்ள மக்களை மொழி, இனத் தேசியமாக வரையறுப்பதற்குரிய ஊற்றுக்கண்களைத் திறந்துவிட்டன. இந்தப் பின்னணியில்தான், கால்டுவெல் கண்டுரைத்த (Findings) ‘இந்தோ ஆரிய மொழிக்குடும்பம் வேறு. திராவிட மொழிக்குடும்பம் வேறு. சமஸ்கிருதத்தின் துணையே இல்லாமல் தமிழ்த் தனித்து இயங்கும் ஆற்றலுடையது, செழித்தோங்க வல்லது’ என்பன போன்ற ஆய்வு முடிபுகள் அடுத்துவந்த தலைமுறையினரிடம் ‘தனித்து இயங்கும் ஆற்றலுடையது தமிழ்’ எனும் பொருள்படும்படியான தனித்தமிழ் இயக்கத்தைத் தமிழ்நாட்டில் தோற்றுவிக்கிறது.
தனித்தமிழ் இயக்கம் எனும் அமைப்பு வடிவம்
இதற்கு வைதீகப் பிரதிநிதிகளும் இந்திய தேசியப் பற்றாளர்களுமான பாரதி, சுப்பிரமணிய சிவா, வ.வே.சு ஐயர் ஆகியோர் ஆற்றிய எதிர்வினை என்பது மிக நுட்பமானது. தூய தமிழ்ச் சொற்களாலேயே ஒரு படைப்பை உருவாக்கச் சொல்கிற வாசகர்களுக்கான போட்டி போல அது இதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. அவர்களின் கருத்து ஆரிய வைதீகக் கருத்தியலுக்கும் தமிழில் ஏற்பட்டிருக்கிற மொழிக்கலப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது போலவும் ‘பத்திரிகை’ என்கிற புதிய துறையின் வருகையே மொழிக்கலப்பிற்குக் காரணம் என்பது போலவும் அழுத்தம் தந்து சாதித்தது. ஆரியக் கருத்தியல் ஆதிக்கத்தை எதிர்த்ததற்கு / வைதீகத்தின் எதிர்வினையாக வெற்றுத்திட்டமாகத் திடீரெனத் ‘தூய தமிழ்’ என அது முன்பின் தொடர்ச்சி இல்லாமல் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. புதிதாகத் தோன்றிய பத்திரிகைத் துறையே மொழிக்கலப்பிற்குக் காரணம் என்றும் ஆங்கிலத்தைக் கலக்காமல் எழுதுவது தமிழுக்கு ஆக்கம் தரும் என்றும் சமசுக்கிருதத்தைக் கடிந்துகொள்ளாமல் ஒருவகையாகத் தமிழைத் தட்டிக்கொடுத்துத் தேற்றியது. மாறாகத் தனித்தியங்கும் ஆற்றலைப் பிரதிநிதித்துவப்படுத்திய ‘தனி’ எனும் சொல் தனித்தமிழ் இயக்கத்திற்கு ஒரு சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வரலாற்று எதிர்வினை அடையாளத்தை வழங்கியது எனலாம்.
இவ்வளவு பெரிய வரலாற்றுரீதியான ‘மயங்காமரபும்’ அதில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சிதைவுநோக்கம் கொண்ட இலக்கியங்களும், அதனைத் துல்லியமாக ஆய்வு முறையியல்களின் துணையோடு ஆராய்ந்து வெளிப்படுத்திய பிரிட்டிஷ் அறிவுக்குழுமத்தின் பங்களிப்பும் என அனைத்தையும் உள்வாங்க வேண்டுமென்றால், நிச்சயமாகப் புலமையாளர் மரபிலிருந்துதான் ஒருவர் வந்தாக முடியும். வழக்காற்று (Folk Tradition) மரபிலிருந்து வரமுடியாது. அந்தவிதமே இந்தத் தனித்தமிழ் இயக்கம் என்பது மறைமலையடிகள் என்கிற தமிழறிஞர் வழியாக 1916-இல் அமைப்பு வடிவில் வெளிப்பட்டது.
வெள்ளாளியத்திலிருந்து வெளியேறியவர்: (ஆறுமுகநாவலர் x அடிகளார்)
‘மறைமலையடிகள்’ என்ற பெயரைக் கேட்டதும் தமிழ்நாட்டில் பெரியாருக்கும் மார்க்சியர்களுக்கும் பிறகு உருவாகியிருக்கிற முற்போக்குச் சமூகத்தின் பொதுப்புத்தி எளிதாக அவரை ஒரு ‘சைவ அடிப்படைவாதி’ என்பது போல ஒற்றை நோக்கில் அடைத்து வைத்துவிடுகிறது. உண்மையில் அவரின் சைவப்பற்று, தமிழ்ப்பற்று, பார்ப்பனிய எதிர்ப்பு, சமூகச் சீர்திருத்த வேட்கை, சாதியொழிப்பு முனைப்பு, ஆங்கிலேயர்களையும் கிறித்தவத்தையும் தமிழ், தமிழரை விடுவிக்க வந்த வரலாற்று வாய்ப்பாக அவர் பார்த்தமை எனப் பல்வேறு பரிமாணங்களைச் செறிவாக உள்ளடக்கியவர் அடிகளார் எனலாம். (இந்தோ–ஆரிய மொழிக்கூட்டத்தின் அத்தனைக் கூறுகளையும் அகற்றிக்கொண்டே போனால், மொழி, கலை, இலக்கியம், மெய்யியல், மருத்துவம் என ஒவ்வொரு துறைகளிலும் ஒவ்வொரு விடை கிடைப்பது போலச் சமயம் என்கிற துறையில் தமிழுக்குக் கிடைப்பது சைவம் என்கிற சமயத்தின் தாதுப் பொருளாக இருக்கும் என்பது அவரின் ஆய்வு முன்வைப்பு)
இது ‘ஆறுமுகநாவலர்’ போன்ற, ‘சைவ வெள்ளாளிய’ சக்திகள் வெளிப்படுத்தியது போன்ற, ‘தோன்றியது முதலே சைவம் இன்றுள்ளது போலவே அன்றும், தனித்தும் முழுமைபெற்றும் இருந்தது’ என்கிற இயங்காவியல் நிலைப்பாடு அல்ல. மாறாகச் சைவம் அதன் வரலாற்றுப் போக்கில் முரண்பட்டு மோதி வளர்ந்தது என்பதே அவர் பார்வை. அதுமட்டுமின்றித் தமிழ் வாழ்வில் சைவத்துக்கு மட்டுமே பிரதிநிதித்துவம், புறச்சமய வெறுப்பு, சன்மார்க்க வெறுப்பு, கிறித்தவ வெறுப்பு, நவீனத்துவத்தைச் சாடுதல், அச்சுச் சாதனங்களை ஐயத்தோடு பார்த்தல், நவீன இயக்க (Movement) வடிவங்களைப் பொருட்படுத்தாமல், மடத்தின் மேல்நிலை ஆதிக்கத்திலிருந்து எதிர்முகாம் கருத்துகளை எதிர்கொள்ளல் என அனைத்து வகைகளிலும் வெள்ளாளியப் பண்புகளைக் கொண்டிருந்தவர்கள் ஆறுமுகநாவலர் போன்றோரே ஒழிய, அடிகளார் அல்லர்.
அடிகளாரின் வாழ்வு இயக்கவாதத் தன்மையாலும் புலமைத்துவப் பண்புகளாலும் ஆனது என்றே வரையறுக்க முடியும். குறைந்தபட்சம் தன் தமிழ் அறிவைக்கூட அவர் வெவ்வேறு சாதியினரிடமும் கிறித்தவப் பாதிரிமார் ஆய்வாளர்களிடமும் பழகிக் கலந்து பயின்றுகொண்டார். சைவமும் சித்தாந்தமும் கூடப் பலரிடமும் பழகிக் கலந்து பயின்றதுவே. ‘வெள்ளாளியம்’ போலத் திட்டவட்டமாக ‘மடம் – மடத்தின் புனிதப் பனுவல்கள் – ஓதும் நியமங்கள்’ என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதல்ல. குறைந்தபட்சம் சித்தர்கள், வள்ளலார் (சன்மார்க்கம்) போன்றோரைக் கூடப் படிக்காமல் புறந்தள்ளுவது என்பதல்ல அடிகளாரின் பண்பு; அவரது ஆளுமை உருவாக்கத்தை இந்த ஆய்வுக் கண்ணோட்டத்தில் சொல்வதென்றால், வடமொழித் தவிர்ப்பும் சனாதன, வர்ணாசிரம, வைதீகக் கருத்தியல் எதிர்ப்பும், பார்ப்பனீய எதிர்ப்பும் என்கிற முனைகளில் அடிகளிடம் காணப்பட்ட கறார்த் தன்மை அவரை வெள்ளாளியத்திலிருந்து வெளியேறிய ஒருவராகவே அடையாளப்படுத்துகிறது.
புலமையாளரின் அரும்பணிகள்
பல முற்போக்காளர்கள் பாரதிக்கு மட்டும் ‘பிராமணியத்திலிருந்து’ வெளியேறிய ஒருவன் என்ற தாராளவாதத்தை அளிக்கின்றனர்; அடிகளாருக்கு மறுக்கின்றனர். குறிப்பாகச் சுயமரியாதை இயக்கத்தாரோடு இணைந்து 1937-இல் இந்தி எதிர்ப்புப் போரில் அவர் ஈடுபட்டுச் சிறைசென்றதும், 1932-இல் அரசின் கலைச்சொல் உருவாக்கக் குழுவோடு மோதி, அரசோடு முரண்பட்டு நெருக்கடிகளைச் சந்தித்ததும், வடமொழி சார்ந்த கலைச் சொற்களைத் தவிர்த்து, இயன்றவரை தனித்தமிழில் கலைச்சொற்களை உருவாக்கிச் சில ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தியதும், இயக்கவாத மரபைச் சேர்ந்த புலமையாளன் செய்யக்கூடிய அரும்பணிகளே எனலாம்.
அ.சிதம்பரநாத செட்டியார் தொகுத்தளித்த ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியத்தைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. இது அகராதியியல் சார்ந்து தனித்தமிழ் இயக்கம் பங்களித்த மிகச்சிறந்த ஆக்கம் ஆகும்.
மடங்களும் மதத் தலைமைகளும் (உ.வே.சா x அடிகளார்)
அடிகளார் காலத்துத் தனித்தமிழ் இயக்கம் அன்றைய சென்னை மாகாண அரசின் கலைச்சொல்லாக்கக் குழுவோடு கருத்துநிலையில் நேரடியாக மோதியது. அரசு முன்வைத்த கலைச்சொல் திரட்டை, அது வெளிவந்த சமகாலத்திலேயே மதிப்பிழக்கச் செய்யும் ஒரு புலமைக்குழுவின் எதிர்வினையைத் தனித்தமிழ் இயக்கம் உடனடியாகவும் நேரடியாகவும் செய்தது. வெள்ளாளியத்தின் நிறுவன வடிவமாகத் திகழ்ந்த, திகழ்கின்ற மடங்கள் எதுவும் இத்தகைய சூழல்களில் வாய் திறந்ததே கிடையாது. குன்றக்குடி அடிகளார் வரும்வரை இதுவே நிலைமையாக இருந்தது. மற்ற சாதாரணச் சூழல்களில் இவர்கள் ‘சைவமும் தமிழும் இரு கண்கள்’ என்பர். மட்டுமின்றித் தாம் சேகரித்து வைத்திருக்கிற அத்தனை அறிவுத் தொகுதிகளையும் இலக்கியத் திரட்டுகளையும் அதன் அறிஞர்களுக்கோ, தமிழின் உழைக்கும் மக்கள் திரளுக்கோ, தீண்டப்படாத குடிகளுக்கோ இம்மடங்கள் திறந்துவிட்டதே இல்லை.
தமிழறிஞர் உ.வே.சா பற்றிக் கூறும்போது, யாருமே பல ஆண்டுகளாகச் செய்யாமல் கிடந்த தமிழ்ப் பணியைத் தனியொருவராகப் பெருமுயற்சியோடு செய்து முடித்ததாகத் ‘தமிழ் இந்துத்துவர்கள்’ பல நேரங்களில் மிகையாகக் கதையாடுவதைக் கவனிக்க முடிகிறது. இதில், ஒவ்வொரு மடத்திற்குள்ளும் இயல்பாகவும் உரிமையோடும் உள்நுழைந்து பழஞ்சுவடிகளைத் திரட்டும் ‘பண்பாட்டு நுழைவுச்சீட்டு’ அவர் கையில் இருந்தது ஏனோ பேசப்படுவதில்லை. அது தமிழின் பிற உழைக்கும் குடிகளுக்கோ, தீண்டப்படாத குடிகளுக்கோ, அதிலிருந்து வரும் புலவனுக்கோ கிடையாது. உ.வே.சா-வும், தான் பெற்றுக்கொண்டு பயன்படுத்திய எந்தப் பிரதிகளையும் தன் சமகால ஆய்வாளர்கள், அறிஞர்கள் யாரிடமும் அடுத்தடுத்து பகிர்ந்து கொள்ளவுமில்லை; விவாதிக்கவுமில்லை. (இது வையாபுரிப்பிள்ளையின் குறிப்பு) ஆனால் தனித்தமிழ் இயக்கத் தலைமையேற்ற அடிகளார் தன் சம காலத்திலேயே பல உழைக்கும் குடிகளிலிருந்து வந்த அறிஞர்கள் (இளையவர்கள்) பலரோடு, பல மணி நேரம் உரையாடலை மேற்கொண்டார்.
ஒரு குலத்துக்கு ஒரு நீதி?
தன் அறிவை, கண்ணோட்டத்தை உருவாக்கிக்கொள்ளப் பல சாதிகளைச் சேர்ந்த அறிஞர்களை எப்படி அவர்த் தேடிச் சென்றாரோ, அதுபோலவே, தம் அறிவைப் பலதரப்பட்ட குடிப் பின்னணி கொண்டோரிடமும் பகிர்ந்துகொண்டார். சான்றாக, கி.ஆ.பெ.விசுவநாதம், திரு.வி.க., சி.இலக்குவனார், பா.வே.மாணிக்க நாயகர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், சோமசுந்தர பாரதியார், அ.சிதம்பரநாத செட்டியார், இளவழகனார், மா.இராசமாணிக்கனார் போன்றோரைச் சுட்டலாம். அதேபோலத் தீண்டப்படாத குடியிலிருந்து, பேராற்றலோடு தேவநேயப் பாவாணர் அவரிடம் வந்து சேர்ந்தார். அடிகள் ஏந்திய ஆய்வுச் சுடரும், தனித்தமிழ் இயக்கச் சமூகச் செயல்பாடும் பாவாணர் ஆளுமையின் மூலமே புத்தாற்றல் கொண்டன. இந்தக் கட்டத்திலேயே தனித்தமிழ் அரசியல் தமிழகத்தைப் விரவிப்பரவி அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தது.
பாரதியார், கனகலிங்கத்துக்கு வெறும் பூணூல் அணிவித்து ‘சமூகத் தட்டில் நீயும் உயர்ந்துவிட்டாய்’ என்று ஆவேசமாகச் சமத்துவம் பேசியது, பல நூறு முறை, பாரதியின் பெருமையாகப் பட்டிமண்பங்களிலும் அறிஞர்க் குழுமங்களிலும், ஏன் முற்போக்கு அரங்குகளிலுமே கூட முழங்கப்பட்டாகிவிட்டது. ஆனால், அடிகளிடம் பாவாணர்ச் சென்னைப் பல்கலையின் ஒரு பணிக்கான பரிந்துரைக் கடிதம் கேட்ட போது அடிகள், ‘அது போதாது, உன்னைப் பற்றி நான் சிறப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும் என்று நேரம் எடுத்துக்கொண்டு ஆங்கிலத்தில் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வுத்திறன் பற்றிய நீண்ட விளக்கங்களோடு கூடிய கடிதம் எழுதி அவரை அவையத்து முந்தியிருக்கச்’ செய்ததாகப் பல ஆண்டுகள் கழித்துப் பாவாணர்க் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டிருந்தார். ஒடுக்கப்பட்ட ஒருவரைச் சமத்துவப்படுத்துவதிலும் ஆற்றலளிப்பதிலும் பாரதிக்கு இருந்த பத்தாம்பசலித்தனம் புகழப்பட்ட அளவுக்கு அறிவுத்திறம் சார்ந்து, தகுந்ததை முன் நிறுத்துவதில் சமரசமில்லாத அடிகளின் அணுகுமுறை மேற்கோள் காட்டப்பட்டதே இல்லை.
இயங்கியல் x இயங்காவியல்
உண்மையில் அடிகளாரின் காலத்தில் தனித்தமிழ் இயக்கத்தின் முதன்மையான குறைகள் எவை என்பது காய்தல் உவத்தலின்றி அடுத்தடுத்து வந்த ஆய்வுலகால் சுட்டிக்காட்டப்படவே இல்லை. சான்றாக, தனித்தமிழ் இயக்கத்தின் தலைமை என்பது கிட்டத்தட்ட சர்வாதிகாரத் தலைமையாக அனைத்து உறுப்பினர்களின் சம்மதத்தோடு உருக்கொண்டிருந்தது. தமிழ் என்கிற ஒரு மிக முக்கியமான அரசியல் பொருண்மை, தமிழக வரலாற்றில் பெரிய தாக்கங்களைக் கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் ஏற்படுத்தக்கூடிய பொருண்மை. ‘தன்னார்வத் தன்மையில்’ ஜனநாயக அமைப்பு வடிவங்கொள்ளாமல், அதன் இயக்கநிலை ஆற்றல்களை உருவாக்கிக் கொள்ளாமல், மனமொத்த ஒரே தலைமையே, கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்காமல் தீவிரமாகச் செயலபட உதவும் என்கிற இயங்காவியல் தன்மையில் தமிழ் அரசியலைக் கையிலெடுத்திருக்கிறது. அப்படி இல்லாமல் ஒருவேளை ஜனநாயக அமைப்பு ரீதியான இயக்க வடிவம் கொண்டிருந்திருக்குமானால், புலமை அரசியலுக்கும் மக்கள் திரளுக்கும் இடையிலான நடுப்புள்ளி எது என்றும் அது தன் காலத்திலேயே கண்டுபிடித்திருக்கலாம். அதைக் கண்டுபிடித்திருந்தால் பிற அமைப்புகளைச் (சுயமரியாதை, தி.க, தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்) சேர்ந்த செயற்பாட்டாளர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி அதன் வழியாகப் பெருந்திரளான மக்களைச் சென்றடைவது என்கிற பழைய உத்தியை இவ்வியக்கம் எளிதாகக் கடந்து வந்திருக்கலாம்.
தனித்தமிழ் இயக்கம் என்பது அடிகளார், தான் தொடங்கிய ஓர் அமைப்புக்கு வைத்துக்கொண்ட பெயர்தானே ஒழிய, அவரை அடுத்துவந்த பாவாணர்க் கட்டம், அதனையடுத்து வந்த பெருஞ்சித்திரனார்க் கட்டம் என்கிற அனைத்தையும் வகுத்துத் தொகுத்து ஆய்வாளர்கள் வைத்துக்கொண்ட ஓர் இயக்கப் போக்கின் பெயரல்ல. (சான்று: திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் போல) இன்று இது பற்றிய குழப்பம் நிலவுகிறது. இவ்வடிப்படையான விவரம் தனித்தமிழ் என்கிற செயற்பாட்டுப் போக்கில் இயங்கிய பல்வேறு கட்சி வடிவங்களின் பண்புகளையும் பற்றாக்குறைகளையும் புரிந்துகொள்ள உதவும். ஏனெனில் அடிகளார் கண்ட தனித்தமிழ் இயக்கம் என்கிற அமைப்பு, அவரது மறைவையொட்டி (1951) அமைதியில் அடங்கிவிடுகிறது.

தொகுப்புரை
ஆரியரின் இனப் பண்பாட்டு ஆதிக்கம் என்பது தமிழ் நிலத்தில் ஆட்சியியல், சமயவியல் அதிகாரத்தின் வாயிலாக முதலில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது. காலனிய ஆட்சியின் வரலாற்றுக் குறுக்கீட்டால் பழைய முடியாட்சிக் காலத்தைப் போன்று தீவிரமாக இவ்வாதிக்கத்தைச் செயல்படுத்த முடியவில்லை. இந்த ஆதிக்கத்தன்மையானது மதமாற்றம், பகுத்தறிவு, நாத்திகத்தின் பரவலாக்கம் ஆகியவற்றின் காரணமாகச் சமயவியலில் சற்றே தடுமாற்றம் கண்டது. ஆனால் மொழித்தளத்தில் எந்தக் குறுக்கீடும் இல்லாமல், இலக்கியத்தின் உள்ளடக்கம், ஆரிய புராண இதிகாசத்தின் நீட்சியாகவே இருந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் தான் தளர்வு ஏற்படாத அந்தக் கண்ணியை அடித்து நொறுக்கும் விதமாக மொழித்தளத்தில், புலமைசார்ந்த பின்னணியோடு அடிகளாரின் வருகை நேர்ந்தது.
ஆரியப் பார்ப்பனர்களின் முதன்மையான ஆக்கிரமிப்புச் சமயத்தளத்தில் இருப்பதால், தன் பிறப்பு சார்ந்த சைவ அடையாளத்தைத் தற்காத்துக்கொள்ளும் முனைப்பு அடிகளாரிடம் வெளிப்பட்டது. ஆனால் சம கால அரசியல் போக்கு அவரை முதன்மையாக மொழித்தளத்தில் பணி செய்யும்படி நெட்டித் தள்ளியது. அளவு, பண்பு என்கிற வகையிலும் சைவத்தை விடத் தமிழுக்கான அவரின் பணிகளும், பங்களிப்புகளுமே மிகுதி எனலாம். மேலும், மொழி என்ற தளத்தில் வெளிப்பட்ட அவருடைய உழைப்புக்கே, அடுத்துவந்த காலத்தில் வழித்தோன்றல்களும் வாய்ந்து அந்தத் தொடரோட்டம் எதிர்காலத்தை நோக்கி நகரத் தொடங்கியது.

Leave a comment

Trending