ப. கல்பனா கவிதைகள்

1. வனைதல்

களிமண்ணை என் கையில் பரிசளித்தான்
தேர்ந்த குயவன்.

அவன் வனைந்த அற்புதமான பாண்டங்களை வியந்தவாறே
திகைத்து நின்றேன்.

சுடுமண் கிளியின் அலகினில் தொங்கிய
சுடுமண் சங்கிலியில் தொங்கிக் கொண்டிருந்தது
சுடுமண் கூண்டு.
அதற்குள் மற்றுமோர் கிளி.

சரி நாமும் வனையலாம்
ஏதேனும் ஒரு பொருள்
பேராசையுடன்
கைகளில் பிசைந்தேன்
களிமண்ணை.

திகிரி இல்லை
கருவி இல்லை

உருவாக்கத் தொடங்கினேன்
முதலில் ஓர் அகல்.

பரவாயில்லை
தேர்ச்சி

கூடுதலான வேலைப்பாடுகளின்மீது
கவனம் திரும்பியது.

களிமண்ணிலும் செதுக்கலாம்தானே.

கலை ஆர்வம் கொப்பளிக்க
இரவுபகலாகக் கண்விழித்தேன்.
முன்னர் சொன்ன கிளிகள் போன்றொரு
சுடுமண் சிற்பம் செய்ய.

கிளிகள் உயிர்பெற மறுத்தன.

மீண்டும் மீண்டும் குழைத்தல்

மீண்டும் மீண்டும் வனைதல்.
கனிந்து கனிந்து
உருண்டைகளாக மட்டுமே எஞ்சியது
களிமண்.

தடுமாறிய கணத்தில்
கையிலிருத்து நழுவித் தரையில்.

அப்போதைய மழையில்
பெருக்கெடுத்த மழை ஓடை
பழுப்பு நதியாக மாறத் தொடங்கிய
தருணத்தில் புரிந்தது.

களிமண்ணை
நதியாக உருப்பெறச்செய்யும்
மற்றொரு குயவனும் இருக்கிறான்.


2. உருமாறி உருமாறி

நான் உடலாக மாறத்தொடங்கியிருந்தேன்.
உடல்களாகவும்.

பாம்பு உடல் இப்போதெனக்கு.
பாம்புத்தலை.
நெரிசலுக்குள்ளே
நெரிசலின் மத்தியில்
இப்படித்தான் உருவெடுக்கமுடியும்.

  துல்லியமான நேரத்தில் 
  வருகைப்பதிவேட்டில் 
  கையெழுத்திட வேண்டுமல்லவா?

முள்ளம்பன்றி உடல் அடுத்தெனக்கு.
முள்ளம்பன்றித் தலை.
வேட்டை மிருகங்கள் துரத்தும்போது
பதினைந்தடி துரத்தில்
அவற்றைத் தடுத்து நிறுத்த
இப்படித்தான் உருவெடுக்கமுடியும்.

  கவனமாய் வளைக்குள் 
  திரும்பப் போய்ச் 
  சேர வேண்டுமல்லவா?

பருந்தின் உடல் இங்கு எனக்கு.
பருந்துத்தலையும்.
கூடவே கொஞ்சம் பருந்துப்பார்வையும்.
இரையைப் பாய்ந்து கவ்வ வேண்டும்.
தூரத்து எலி நடமாட்டங்களைக்
கூர்ந்து கவனிக்கவேண்டும்.

  உணவுகளை 
  உயரமான கூட்டில் 
  நிரப்பியாக வேண்டுமல்லவா?

மான் சிங்கம் ஒட்டகம் புறா ஆமை
எந்த விலங்காகவும் பறவையாகவும்
நான் மாறக்கூடும்.
மினிமைஸ் பொத்தானை அழுத்தினால்
பூச்சியாகவும் மாறுவேன்.
அந்தந்த நொடிகளில்
அந்தந்தத் தலைகள்
மாறிப் பொருந்தும் கனகச்சிதமாய்.

இந்தக் கவிதையின்
மீதி வரிகளை நீங்களும் எழுதலாம்.

எல்லாவிதச் சாத்தியங்களோடும்
உருவாவதன்றோ நம் கவிதை.

***

Leave a comment

Trending