மாரியம்மனும் நம்பிக்கைக் கதைகளும்
இ. கலைக்கோவன்

தமிழகத்தில் பெண் தெய்வ வழிபாடு என்பது கொற்றவை வழிபாட்டிருந்து தொடங்குகிறது. அடிப்படையில் தமிழர்களின் வழிபடுமுறை ‘நடுகல்‘ வழிபாடாகவே இருந்தது. அவ்வழிபாட்டு முறையும் நிலங்களின் தன்மைக்கு ஏற்ப நாளடைவில் சிறுசிறு மாற்றங்களை அடையத் தொடங்கியது. இந்த நடுகல் வீரர்களுக்கு எல்லாம் மூத்தோள் பெண்ணாகவும், அவளையே அனைத்திற்கும் முதன்மையானவளாகவும் தமிழ்ச் சமூகம் கொண்டாடி மகிழ்ந்தது. அவள் கொற்றவையானாள். பின்னர் கண்ணகி வழிபாட்டின் வழி தமிழ்ச் சமூகத்தை அவள் அலங்கரித்தாள். நில எல்லைகள் தாண்டி கண்ணகி வழிபாடு தமிழகம் எங்கும் பரவலாக இருந்துள்ளது. கொற்றவை வழி வந்து கண்ணகி தொட்டு நிகழ்ந்த இந்த வழிபாட்டு மரபே தமிழகத்தின் பெண் தெய்வ வழிபாட்டிற்கு வழிவகுத்தது.
இப்படி பின்பற்றப்பட்ட பெண் தெய்வ வழிபாடு பின்னர் அந்தந்த பகுதி மக்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, பயம் என்று அவரவர் மனநிலைக்கு ஏற்ப மாற்று வடிவங்களைப் பெறத்தொடங்கியது. அந்த மாற்றம் என்பது பெண் தெய்வ வழிபடு முறையாகவும், அதற்கான சடங்கு மற்றும் நம்பிக்கைக் கதைகள் வேறு வேறாகவும் இருந்தன. கொற்றவையைத் தெய்வமாக வழிபடும்போது அனைவருக்கும் மூத்தோளாக அவள் உணரப்பட்டாள். வழிபாட்டுச் சடங்குகள் அதனடிப்படையில் நடந்தேறத் தொடங்கின. கண்ணகி, வழிபாட்டுக் கடவுளாக மாறிய போது வழிபடு சடங்குகள் மாற்றம் பெற்றன. அதனை இன்றும் கேரளாவில் பரவலாகக் கணலாம். குறிப்பாக கொடுங்கலூர் கோயில் வழிபாட்டுச் சடங்கை உற்றுநோக்கினால் கண்ணகி வழிபாட்டின் நீட்சியை நாம் உணர முடியும்.
இந்த அடிப்படையில் காலந்தோறும் மாறும் பெண் தெய்வ வழிபாடானது புதிய புதிய சடங்குகளை ஏற்றுக்கொண்டது. ஆனால் அத்தனைச் சடங்கு முறைக்கும் சமூகத்தின் உள்ளார்ந்த நிகழ்வு ஒன்று மையமாக இருந்தது. அந்தச் சடங்குகள் அச்சமூகத்தில் நிலவிய சம்பவங்களிலிருந்து தன்னை வெளிக்காட்டக்கூடியவையாக இருந்தன. சில நேரங்களில் அவை சமூகத்திற்குள் நிலவிய தேவைகள் குறித்தோ, வாழ்ந்த மனிதர்கள் குறித்தோ, மக்களின் பயத்தினை வெளிப்படுத்தியோ சாதியத்தின் பிடிமானத்தை உறுதிபடுத்தியோ, வர்க்க முரண்பாடுகளை முன்வைத்தோ அதிகாரத்தைத் தக்க வைக்கும் தன்மையிலோ, கூட்டு வாழ்வின் வெளிப்பாடாகவோ, உணவு, உடை, தேவைகள் குறித்தோ, பெண்களின் மீதான தாக்குதல் குறித்தே தவறுதலாக நடந்துவிட்ட பழிபாவங்கள் குறித்தோ, திட்டமிட்ட பழிவாங்கல்கள் குறித்தோ ஏதோ ஒன்றின் வெளிப்பாடாக இந்த வழிபாட்டுச் சடங்குகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இன்றைக்கும் நிகழ்த்தப்படுகின்றன. இது அந்தந்த மண்சார்ந்த மக்களின் வாழ்வியலோடு பிணைந்தவை. அவைதாம் சடங்குகளாக வெளிப்பட்டன. ஒரு போதும் அவை புனைகதைகளாக உருவாக்கப்படவில்லை. ஒருவேளை அச்சடங்குகளின் கதைகளுக்கு புனைவுத்தன்மை வந்திருப்பின் அவை அந்நிலத்திற்கான கதைகள் இல்லை என்பதை அறிக. பின்னர் அவை ஏன்? எப்படி? இந்தச் சடங்குகளின் கதைகளாக உலா வருகின்றன என்றால் அதற்கான பதில் ‘மேல்நிலையாக்கம்’ என்பதாகவே இருக்கும்.
‘சமஸ்கிருதமயமாக்கல்‘ என்பதற்கான மற்றொரு பொருளாக ‘மேல்நிலையாக்கம்‘ என்பதைக் கொள்ளலாம். பிரித்து வைக்கப்பட்டுள்ள பெருந்தெய்வ வழிபாடு(!) சிறுதெய்வ வழிபாடு(!) என்கிற அமைப்பில் சிறு தெய்வ வழிபாட்டுச் சடங்குகளை மாற்றியோ அல்லது அச்சடங்குகளுக்குப் புராணக் கதைகளை வலிந்து கூறியோ ஒற்றைத் தன்மையான வழிபாட்டு முறைக்குள் கொண்டு செல்வது, குறிப்பாக வேதமுறை வழிபாட்டுச் சடங்கு முறைக்குள் கொண்டு செல்வது மேல்நிலையாக்கம் என்று கொள்ளப்படுகிறது. இவ்வகை மேல்நிலையாக்கத்திற்கு உட்படுத்தப்படும் நாட்டார் தெய்வங்கள் முதலில் தங்கள் தனித்தன்மையை இழக்கின்றன. இவற்றிற்கான சடங்குகள் மாற்றப்படுகின்றன. நாட்டார் தெய்வங்களின் பூசை உரிமையை பெற்றிருக்கும் இடைச்சாதியினர் தங்களுக்கான வாய்ப்பினை இழக்கின்றனர். இறைச்சி படைக்கப்பட்ட கடவுளர்கள் மரக்கறி கடவுளர்களாக மாற்றப்படுகின்றனர். நாட்டார் கடவுளர்களின் பெயர்கள் சமஸ்கிருதமயப்படுத்தப்படுகின்றன. இவ்வகைக் கோயில்கள் வேத ஆகம விதிகளுக்கு உட்பட்டு புனரமைக்கப்படுகின்றன. நாளடைவில் முதன்மை தெய்வம் துணை தெய்வமாக மாற்றப்படும் நிலைகூட ஏற்படலாம். இம்மாற்றங்களால் கடவுளர்க்கும் தனக்குமான நெருக்கத்தை மக்கள் இழந்து, இடைத்தரகர்களின் கையசைவிற்கு காத்து நிற்க வேண்டிய சூழல் ஏற்படுவதோடு, கடவுளுக்கான படையல்கள் முதல், பூசைத் தன்மை வரை அந்தந்த மண்ணுக்கும் தன்மைக்கும் தொடர்பு இல்லாமல் மாற்றப்படும். காரணத்தால் உருவாக்கிய சடங்குகள் மறுத்து, புராணக் கதைகளுக்கான சடங்குகள் அக்கோயில்களில் நடைபெறத் தொடங்கும். தனக்கான வழிபாட்டு உரிமையை வேறொருவரிடம் விட்டுக் கொடுத்துவிட்டு அதிகாரமற்றவராக மண்ணின் மக்கள் நிற்பார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும், ஈரோடு பெரிய மாரிம்மன் கோயிலும் அப்படியான மேல்நிலையாக்கத்தை நோக்கி நகர்ந்த (முற்றிலும் இன்னும் மாறவில்லை என்பது ஆறுதல்) கோயில்களுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இந்த மாற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு, நாட்டார் தெய்வங்களுக்கு நிகழ்த்தப்படும் சடங்குகளையும் அச்சடங்குகள் ஒட்டி வழங்கப்படுகிற நம்பிக்கைக் கதைகளையும் நாம் அறிதல் அவசியமாகிறது. அக்கதைகளின் போக்கிலிருந்தே சடங்கு சார்ந்த நம்பகத்தன்மையை நாம் உற்றுணர முடியும். மேலும் அக்கதைகளை ஆவணப்படுத்துவதன் மூலம் நாட்டார் கோயில்கள் மேல்நிலையாக்கம் நோக்கி நகரும் தன்மையை உணரவும் முடியும். இன்றைக்கு கொங்கு மண்டலத்தில் மட்டும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாரியம்மன் கோயில்கள் உள்ளன. அவற்றில் சில மிகவும் புகழ் பெற்ற மாரியம்மன் கோயில்கள். பலி கொடுக்கிற வழக்கமுள்ள, வழக்கமிருந்த கோயில்கள். அப்படிப் பலி கொடுக்கிற வழக்கமிருந்த கோயில்களே மேல்நிலையாக்கத்தால் பலி வழக்கமிழந்த கோயில்களாக மாறி வருகின்றன. இது மக்களைக் கடவுளிடமிருந்த அன்னியப்படுத்துவதற்கான வழிகளைச் செய்கின்றன. இவ்வகைக் கோயில்கள் வருமானமும் மிகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே நாட்டார் கோயில்கள் மக்களைவிட்டு அன்னியப்படுதலை தடுக்க வேண்டுமாயின் அக்கோயில்களுக்கான நம்பிக்கைக் கதைகளையும் சடங்குகளையும் நாம் ஆவணப்படுத்துவது அவசியமாகிறது. அவ்வகையில் ஆவணப்படுத்தப்பட்ட சில கதைகளையும் அதே சமயம் மேல்நிலையாக்கத்திற்கு மாற்றுவதற்காகப் புனையப்பட்ட புராணக் கதைகளையும் தொடர்ந்து காண்போம்.
தமிழ்நாடு முழுவதும் இருக்கிற அம்மன் கோயில்கள் பற்றிய கதைகளைத் திரட்டுவது என்பது பெரிய சவாலான பணி என்பதாலும் அது பெரிய ஆய்விற்கான தளம் என்பதாலும் அக்கதைகளைத் தொகுத்து இக்கட்டுரையில் தருவது இயலாதது. எனவே கொங்கு மண்டலத்தில் வழிபடக்கூடிய மாரியம்மன் பற்றிய கதைகளில் சிலவற்றை மட்டும் இங்கே காண்போம். கொங்கு மண்டல மாரியம்மன் கோயில் பெரும்பாலானவற்றிற்கு சடங்குமுறைகள் ஒரே மாதிரியான தன்மை கொண்டதாகவே இருக்கும். ஒரு சில கோயில்கள் விதிவிலக்கானவை.
மாரியம்மன்களின் சடங்கு என்பது, செவ்வாய்க்கிழமை கம்பம் நடுவதில் தொடங்கி எட்டு நாட்கள் பூசையுடன் நிகழ்ந்து எட்டாம் நாள் கம்பம் பிடுங்குவது, பிடுங்கிய அன்று ஆடு பலி கொடுப்பது, பலி கொடுக்கப்பட்ட ஆட்டின் தலையை கம்பத்தின் குழிக்குள் போடுவது, போடும்போது அம்மனின் தாலி நீக்கப்பட்டு சுமங்கலி அலங்காரமின்றி மறுபூசை வரை அலங்காரமில்லாத கோலத்தில் விட்டுவிடுவது, மறுபூசைக்குப் பின் அம்மனை அலங்கரிப்பது, இந்த சடங்குகளையும் கோயில் பூசைகளையும் இடைச்சாதி பண்டாரர் மேற்கொள்வது, ஊர் மக்கள் அனைவரும் திருவிழாவில் கலந்து கொள்வது என்று நடைபெறுகிறது. இச்சடங்குக்கிடையே கோயில் இருக்கும் இடவசதிக்கேற்ப பூமிதிப்பது, தேர்த் திருவிழா போன்றவற்றை நடத்துவது என மொத்தத் திருவிழாவும் நடைபெறும். இச்சடங்குகளை ஒட்டி புனையப்பட்ட கதைகள்தான் வரலாறுகளை நிலைப்படுத்துகின்றன. அதே சமயம் சடங்குகளும் அச்சடங்குகளுக்கான கதைகளில் ஏற்படுத்தப்படும் நம்பகமற்ற புனைவுகளும் மேல்நிலையாக்கத்திற்கு அக்கோயில்களை அழைத்துச் செல்லும் வாய்ப்பாக மாறுகின்றன. எனவே அக்கதைகளை நாம் அறிந்திருப்பதும் ஆவணப்படுத்துவதும் அவசியமாகிறது.
நம்பிக்கைக் கதை 1 :
‘மாரி’ என்பதற்கு மழை என்றும் பொருள் உண்டு. ‘அம்மை’ என்ற சொல் தாய்த்தெய்வத்தையும் குறிக்கும். ‘அம்மை’ என்பதற்கு நோய் என்றும் பொருளுண்டு. அது வெம்மை நோய். அதைத் தணிப்பது குளிர். மழை என்பது குளிர். மழையை மாரி என்பாராதலால் மாரியம்மன் வெம்மை நோய் நீக்கும் தெய்வம் என்று ஒரு நம்பிக்கைக் கதையுண்டு.
நம்பிக்கைக் கதை 2 :
கண்ணகியின் கணவன் கோவலன், பாண்டிய மன்னனின் தவறுதலான தீர்ப்பால் அநியாயமாக கொல்லப்பட்டான். எனவே பாண்டியன் நெடுஞ்செழியனைப் பழிவாங்க நினைத்த கண்ணகி சாபம் இட்டு சேர நாடு ஏகினாள். கண்ணகி சாபத்தால் வெம்மை தோன்ற பாண்டிய நாடு கடும் வறட்சியும் பஞ்சமும் அடைந்தது. பின் கண்ணகிக்கும் கோயில் எடுத்து வணங்கி குளிர்விக்கப்பட்டதும், நாட்டில் மழை பொழிந்து வெம்மை நீங்கியது. எனவே மாரியை (மழையை) வழங்கிய கண்ணகியை மாரியம்மனாக மக்கள் வழிபட்டனர்.
நம்பிக்கைக் கதை 3 :
சிவபெருமான் ‘சமதக்கினி‘ முனிவராகவும் பார்வதி ‘ரேணுகா’ தேவியாகவும் பூவுலகில் பிறப்பெடுத்தனர். அவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள். பத்தினியான ரேணுகா தேவியின் கற்பில் ஐயுற்ற சமதக்கினி முனிவர் தன் நான்கு மகன்களையும் அழைத்துத் தாயின் தலையைத் துண்டிக்க உத்தரவிடுகிறார். முதல் மூன்று மகன்களும் மறுக்க நான்காவது மகன் ‘பரசுராமன்‘ உடன்பட்டு தாயின் தலையை வெட்டுகிறான்.

இதில் அகமகிழ்ந்த முனிவர் பரசுராமனிடம் ‘என்ன வரம் வேண்டும் கேள்’ என்கிறார். அதற்கு பரசுராமன், “என் தாயின் தலை பழையபடி உடலோடு பொருந்தி உயிர் பெற வேண்டும்“ என்கிறார். முனிவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்ற பின்னர் தலையை ஒட்ட வைக்க சென்ற போது, தாயின் தலை மட்டும் கிடைத்தது உடல் கிடைக்கவில்லை. பதிலாக புலைச்சி பெண் ஒருத்தியின் உடல் கிடைக்க அதனுடன் ஒட்ட வைக்கப்பட்டு ரேணுகா தேவி உயிர் பெற்றார். தலை ‘மாறி’ வந்த அம்மன் மருவி ‘மாரி‘ அம்மனாக ஆனதாகவும்(!) ஒரு கதையுண்டு.
நம்பிக்கைக் கதை 4 :
கணவர் சமதக்கினி முனிவர் ‘கார்த்த வீரியார்ச்சுனனால்’ இறக்கவே, மனைவி ரேணுகா தேவி தீப்புகுந்தாள். இதையறிந்த வருணன் மழை வரவழைத்தான். ரேணுகா தேவி முற்றிலும் எரியும் முன்னர் மழைநீர் பட்டு உடலெல்லாம் கொப்புளங்கள் தோன்றின. பின் தேவி வேப்பிலையை உடல் முழுவதும் சுற்றி புலையர்களிடம் சென்று பசியாற்றக் கேட்டாள். அவர்களும் தேவியை வேதியப் பெண் என்று எண்ணி, அவர்கள் உண்ணும் இறைச்சியை விடுத்து இளநீர், பானக்கம், வெல்லம், பச்சரிசி மாவு கொடுத்தனர். அப்போது சமதக்கினி முனிவர் அவர் முன்தோன்றி ‘இனி மக்களுக்கு ஏற்படும் இப்படிப்பட்ட வெப்பு நோயினை நீ நீக்கி அருள்புரியவேண்டும்’ என்று ஆணையிட்டார். அதன்படியே ரேணுகா தேவி ‘மாரியம்மன்‘ ஆனார்.
நம்பிக்கைக் கதை 5 :
மாரியம்மன் நெடுங்காலம் சிவனை வேண்டி தவம் இருந்ததால் அவன் மேல் புற்று பூத்தது. அதை மக்கள் வழிபட்டனர். அதில் வேப்பமரமும் முளைத்தது. பின் அதிலிருந்து வெளிப்பட்ட அம்மன் மக்களுக்கு ஆசி வழங்கினாள். புற்றும் வேப்பமரமும் அதனாலேயே மாரியம்மனுக்கு வழிபடு பொருளாகியது.
நம்பிக்கை கதை 6 :
பாதாள உலகில் நாகராசனுக்கும், நாக கன்னிக்கும் ஏழு பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களில் மூத்த பெண்ணான மாரியம்மன் ‘மயிடன்’ என்ற அரக்கனை அழித்தாள். அதற்கு வரமாக சிவனிடமிருந்து பெற்ற முத்துகளை சிவன் மீதே தூக்கி எறிந்தாள். சிவனின் உடலில் அம்மைக் கொப்புளங்கள் போல் முத்துகள் ஒட்டின. அதனால் வேதனையடைந்தார் சிவபெருமான். அவருடைய வேதனையைக் கண்ணனின் உதவியுடன் அம்மன் குணப்படுத்தினார். குணமாகிய சிவன் மக்களின் சூட்டுக் கொப்பளங்களைக் குணப்படுத்துமாறு அம்மனுக்கு ஆசிவழங்கினார்.
நம்பிக்கைக் கதை 7 :
‘பிருகு’ முனிவரின் மனைவி ‘நாகாவலி’. மிகுந்த அழகுடையவள். ஒரு நாள் முனிவர் ஆசிரமத்திலில்லாதபோது அவருடைய கற்புத்தன்மையை சோதிக்க மும்மூர்த்திகளும் ஆசிரமத்திற்கு வந்தனர். இதையறிந்த நாகாவலி அவர்களைக் குழந்தையாக்கினாள். அதில் சினம் கொண்ட மூவரும் நாகாவலியை அழகற்றவளாக மாற்றினர். பின் ஆசிரமம் வந்த முனிவர் அழகற்ற தன் மனைவியை ஆசிரமம் விட்டு துரத்தினார். நாகாவலி அழகு ‘மாறி’யதால் ‘மாரி’ அம்மனாக வணங்கப்பட்டாள்.
மேற்சொன்ன கதைகளில் கதை1, கதை2, மட்டும் மழை மற்றும் கண்ணகி வழிபாட்டுடன் மாரியம்மன் வழிபாடு கொண்டிருந்த தொடர்பைக் கூறும். மற்றக் கதைகளை ஆயுமிடத்து அவற்றில் எல்லாம் மாரியம்மன் வழிபாடு தாய்வழிபாடு என்ற போதிலும் ஆண் கடவுளின் ஆதிக்கமே மிகுத்து இருப்பதை நாம் கண்டுணர முடியும். மேலும் பல கதைகளில் பழிபாவம் சுமந்த பெண்ணான மாரியே தெய்வமானாள் என்றும் கூறப்படுவதைக் காண முடியும். இவை அடிப்படை ஆதாரமற்ற கதைகள் என்பதை நாம் கேட்ட மாத்திரத்தில் புரிந்து கொள்ளவும் முடியும். ஆனாலும் இது நம்பிக்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணம் மேல்நிலையாக்கம். இப்படிப் புனையப்படுகிற ஆண்மையக் கதைகள் தாய்த்தெய்வ வழிபாட்டை முற்றிலும் வழக்கொழிக்க உதவும்.
உதாரணமாக பெரும்பாலும் மாரியம்மன் கோயில்களில் அம்மன் சன்னதி அம்மன் சிலை தவிர மற்ற கடவுளருக்கு இடம் தரப்படாது. குறிப்பாக ஆண் கடவுளருக்கோ சடங்குகளின் அடிப்படையில் இடம் உறுதியாக கிடையாது. ஆனால் ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் உள் சந்நிதியில் பரசுராமருக்கு தனிச்சிலையுண்டு. அதற்கு வழிபாடும் நடத்தப்படுகிறது. அது எப்படி சாத்தியமாயிருக்கக் கூடும் என்றால், நாம் முன்னர் கண்ட ரேணுகா தேவி, பரசுராமன் கதை அதைச் சாத்தியப்படுத்தியிருக்கும் என உணரலாம். அதே கோயிலில் மிகச்சில வருடங்களுக்கு முன்புவரை பலி கொடுத்தல் நடந்துள்ளது. இன்று அச்சடங்கு நடைபெறுவதில்லை. சிறிது சிறிதாக சடங்கு மாற்றம் மற்றும் சந்நதி மாற்றத்தின் மூலம் நாட்டார் கோயிலான அக்கோயில் மேல்நிலையாக்கம் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை உணரலாம்.
மேற்சொன்ன கதைகளைத் தாண்டி மற்றொரு கதையும் ஒன்று உண்டு. “ஒரு பெண்ணை அவள் தவறிழைத்தாள் என்று கூறி தீயிலிட்டனர். தீயிலிருந்து தப்பிய அவர் ஆடைகளற்று துணிகளைத் தூய்மை செய்யும் வண்ணார் வீட்டுக்கு ஓடி வந்தாள். அவர்கள் தூய்மை செய்த வெண்மை நிற ஆடையைக் கொடுத்து குளிர்ச்சி பொருந்திய கூழ், கஞ்சி ஆகியவற்றைக் கொடுத்தனர். பின்னர் அவள் வணக்கத்திற்குரியவள் ஆனாள். அதனால் அவள் ‘கருமாரி’ என்றும், தன் துன்பத்திற்குக் காரணமானவர்களைப் பழிவாங்கிய காரணத்தால் ‘தண்டுமாரி‘ என்றும் பெயர் பெற்றார்.“
இந்தக் கதையில் அற்புத சாகசங்கள் எதுவுமில்லை. ஆதிக்க ஆண் கடவுளர்கள் இல்லை. மாறாக மாரியம்மன் வழிபடு சடங்குடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. இதுபோன்ற சாகசமற்ற, உண்மைக்கு நெருக்கமான கதைகளைத் தொகுப்பதன் மூலமும், அதனை ஆவணப்படுத்துவதன் மூலமும் நாட்டார் வழக்காற்று கடவுளரின் வழிபாடுகளில் மேல்நிலையாக்கத்தைத் தவிர்க்க முடியும். அவ்வாறு தடுப்பதன் மூலம் நாட்டார் கோயில்களின் உரிமை மண்ணின் மக்களிடமே இருக்கும். அதனால் என்ன பயன் உள்ளது? என்றால் அவற்றின் மூலம் நாட்டார் தெய்வங்களைத் தக்க வைக்க முடியும். தெய்வத்தைத் தக்க வைத்தல் என்பது உரிமையைத் தக்க வைத்தல் ஆகும். உரிமையைத் தக்க வைத்தல் என்பது அதிகாரத்தைத் தக்க வைத்தல் ஆகும். அதற்கு மாரியம்மன் (கதைகள்) அருள் புரியட்டும்.

Leave a comment